Language Selection

மாணிக்கம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மனிதர் தங்களின் எண்ணத்தை சொல்வதற்கு மொழி என்பதுதான் அடிப்படை. இது மனித வரலாற்றில் தேடப்பட்ட அறிவியல். இதனை சொல் – ஊடகம் எனச் சொல்லுவர். இந்தச் சொல்லியத்தால், நாம் ஒரு கருத்தை மற்றவருக்குச் சொல்லும்போது, அது பலருக்கு விளங்காமல் போவதுண்டு. இதில் சில சொல்லுக்கு பற்பல அர்த்தங்களும் இருக்கின்றது. இதனால் நாம் எமது கருத்துகளை சந்தர்ப்பத்துக்கு ஏற்றமாதிரி, அந்த மொழியினை எப்படியெல்லாம் வளைக்க முடியுமோ..! அப்படியெல்லாம் வளைத்துப் போடுகின்றோம். அத்துடன் நாம் விரும்பும் கருத்துகளை மற்றவரில் புகுத்தவும், திணிக்கவும் துணிகின்றோம்.

 

 

இதைப் போலவே ‘மதம் – கல்வி – இலக்கியம் – அரசியல்’ ஆகிய போதனைகள், புகுத்துவது – திணிப்பது என  மொழி என்ற ஊடகத்தால் எம்மீது பாய்ச்சப்படுகின்றது. இதில் மக்கள் நலன் நின்று உண்மை பேசுகின்ற அரசியல் – இலக்கியம் என்பன இதிலிருந்து வேறுபட்டு மக்களுக்கான தீர்வை முன்வைக்கிறது. சமூக வளர்ச்சிக்காக மக்களை உழைக்கச் சொல்கிறது. அடக்குமுறை செய்வோரால் சிதைக்கப்படும் சமூகத்தின் அடிப்படைப் பிரச்சினையை, தெளிவாக எடுத்துச் சொல்கிறது. அதற்காக அனைவரையும் இணைந்து போராடுவதுடன், போராட்டத்தினை சரியான வழியில் நடாத்திச் செல்கிறது. அதேபோல மொழி சார்ந்த இனங்களின் பண்பியல் மாற்றத்தினைத் தேடுகின்றது. இது மக்களுக்கான அறிவியலை வளர்க்கும் செயல்களில் முக்கியமானதாகும்.

இதில் செழுமை – தொன்மை என்ற மொழிக் கூறுகளில், தமிழ் மொழியும் ஒன்று. இந்தத் தமிழ் மொழி தன்மீது மதம் என்ற போதையை பல ஆண்டுகளாகப் போர்த்தி நிற்கிறது. ஆண்டான் அடிமைக் காலம் முதல், மன்னராட்சியும் மதவெறியும் இணைந்து, அறிவுடன் பொருள் தேடும் உற்பத்தி முறையினை ஒதுக்கிவிட்டு, அதற்குப் பதிலாக கோயில் – கோபுரம் – மடங்கள்., என ஊரெங்கும் அமைத்து, சனங்களுக்கு பூசை அவித்துக் கொடுத்து, அவர்களை தொழில் அடிப்படையில் சாதிகளாகப் பிரித்து, அவர்களுக்கு அறிவாற்றலை வளர்க்காமல், அதிகாரத்தை கையில் வைத்திருந்த சிலர் வன்முறையால் தமது விருப்பங்களை நிறைவேற்றினர். அதற்காக கற்பனை இலக்கியம், கலை போன்றவற்றை எமது மக்கள்மீது திணித்தனர். அதனால் எமது தமிழ் மொழிக்குள் இருக்கும் அறிவாற்றல் என்பது, கடவுள் – மதம் சார்ந்த ஓர் கற்பனை (கலை – இலக்கிய) கோட்டையாக மட்டுமே உருவாக்கம் பெற்றது. இதற்குள் விஞ்ஞான அறிவியல் என்பது சிறு துணிக்கை மட்டுமே ஆகும்.

இப்போதும் இந்த அறிவியல் என்பது, அரசியல் ரீதியாக அனைத்து மக்களுக்கும் பரந்து பொதுமைப் படுத்தப்படாமல், சொத்தாதிக்க மனிதர்களிடம் மட்டுமே ஒதுங்கியுள்ளது. இவை இந்திய தமிழ் நாட்டை மத்தியாக வைத்து நடக்கின்ற விடையம். அதனால் அதன் கலாச்சாரப் பிம்பங்களை பின்பற்றும் அண்டை நாட்டு மக்களுக்கும் இதே கதிதான் நடக்கின்றது.

அறிவாற்றல் பெருகிய இக்கால உலகில், எத்தனையோ அமைப்புகள் தமக்கென சில திட்டங்களைப் போட்டு, இனம் – மதம் – போர் – அமைதி – அபிவிருத்தி.., என்ற போர்வைக்குள் தங்களை மறைந்தவாறு, தம்மைப் பற்றி மக்களுக்குச் சொல்லாமல், காசு தாருங்கோ, அபிவிருத்தி செய்கிறோம், பசி – பட்டினி போக்குகிறோம், கலை – ஊடகம் நடாத்துகிறோம் .., என மக்களை ஏய்ப்பது தொடர்கின்றது.

இதற்குள்ளே தான், புலம் பெயர்ந்து வாழ்கின்ற எமது மக்களைக் குறிவைத்து, ‘தமிழ் வானொளி – வானொலி’ நிறுவனங்கள் தமது கருத்தினை – திட்டத்தினை மக்களுக்கு தெழிவாக வெளிப்படுத்தாமல், அதனை எப்படியெல்லாமோ திருகி முறுக்கி செய்தியாக – கலையாக – நேர்காணலாக – விளம்பரமாக .., மக்கள்மீது திணிக்கின்றனர். எமது மக்களின் நலனுக்காக அறிவோடும், ஆற்றலோடும் சரியான திசையில் தாம் நின்றவாறு மக்களுக்கும் அதனை குறியிட்டுக் காட்ட வேண்டிய இவர்கள், ஊடகத் தருமம் – சட்ட விதிகளுக்கு முரணாக தொடர்ந்து செயற்படுகின்றனர்.

 

இவர்கள் தமக்கு ஏதாவது வழியால் பணம் வந்து கொட்டவேண்டும், பெயரும் புகழும் பரவவேண்டும், தாங்கள் டாம்பீக வாழ்வில் புரளவேண்டும் என்பதே இந்த ஊடகத்தாரின் முக்கிய குறிக்கோள். இவர்களுக்கு மக்கள் நலன் என்றால் அது மண்ணாங்கட்டி. (ஒருசில மக்கள் நலன் சார்ந்த கலைஞர்கள் – கருத்தாளர்கள் சந்தர்ப்ப சூழ்நிலையால் இந்தக் கும்பலுடன் இணைந்து செயற்படலாம், அவர்களை இதில் பிரித்துப் பார்க்கவில்லை)

கடந்த காலத்தில் இலங்கையின் இனரீதியான தமிழ் அமைப்புகள் மக்களுக்குச் செய்த வரலாற்றுத் தவறுகளை, இந்த ஊடகங்கள் தெரிந்தும் தெரியாத மாதிரி, தமக்குப் பிடித்த அமைப்புகளில் யாரெல்லாம் ஆதிக்கத்தில் இருந்தனரோ, அவர்களின் அடிவருடியாக – ஊதுகுழலாக இருந்தவாறு, அந்தக் குறுந்தேசிய இனவெறியை ஏற்று, அதனை தமிழ் மக்களின் அரசியல் பாதையாக நிகழ்ச்சிகள் – செய்திகள் வெளியிட்டு, வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் எமது மக்களில் மெதுமெதுவாக திணித்து, மக்களை சுயமாகச் சிந்திக்க தடையாக இருந்தனர்.

இந்த ஊடகத்தினர், புலிகளின் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் அவர்களின் அதிகாரப் பக்கம் சாராது, மக்கள் நலன்நின்று, எமது இன முரணுக்கான தமிழ்த் தரப்புகளின் வரலாற்றுத் தவறுகளை, ஊடக நேர்மையோடு விமர்சித்திருந்தால்..! எமது மக்களிடம் பரந்த அரசியற் தெளிவும், உண்மையான மக்கள் போராட்ட விழிப்புணர்வும் ஏற்பட்டிருக்கும். அந்த ஆயுதப் போராட்டப் பாதையில் பாரிய மாற்றம் ஏற்பட்டிருக்கும். மே.2009-இல் வன்னிக்குள் அகப்பட்டு உயிரிழந்தோரை..! இன்று உயிரோடு காணவும் முடியும்.

இந்த ஊடகங்கள்,

தமிழ்க் குறுந்தேசிய வெறிக்கு பெரிதாக வித்திட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீது, புலம் பெயர்ந்த இழையோரைத் தீண்டிவிட்டு எடுக்கப்பட்ட மீள் வாக்கெடுப்பினை விமர்சித்திருக்கலாம்..!


புலம் பெயர்ந்தோரின் நாடு கடந்த அரசாங்கத்தின் பின்னணிகளை உடைத்து வைத்திருக்கலாம்..!!


தமிழ் மக்களின் நலனுக்காக, அனைத்துத் தமிழ் ஊடக அறிவாளிகளும் ஒன்றாக இணைந்து – விவாதித்து, எமது இன முரணுக்கான ‘நம்பவைத்துக் கழுத்தறுக்கும்’ சர்வதேசப் பின்னணிகளையாவது முன் வைத்திருக்கலாம்.!?

ஆனால் நடப்பவைதான் என்ன..?

சிறிலங்காவிலிருந்து டான் ஒளியும், இந்தியாவிலிருந்து சண் – ஜெயா – விஜே – கே.ரிவியுடன், நாம் புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்து தீபம் – ஜீ.ரி.வி – ஐங்கரன் போன்ற ஊடகங்கள் செயற்கைக் கோளுடாக ஒளிபரப்புச் செய்கின்றன. இவற்றில் விஜேரிவி ‘கதையல்ல நிஜம்’, ‘நடந்தவை என்ன’ போன்ற ஆதிச் சமூக மூடத்தனங்களின் நம்பிக்கைப் பின்னணிகளையும், புதிய மாற்றம் தேவை என்பதற்கான அறிவியல் விவாதங்களுடன் கலை நிகழ்வுகளையும், கே.ரிவி திரைப் படங்களுடனும் நகர்கின்றன.

ஏனையவை மக்கள் நலன் சாராது, மக்களின் மூளை கழுவும் அரசியல் நிதானமற்ற, தங்கள் நலன் சார்ந்த விளம்பரங்கள் – நிகழ்வுகள் – கருத்துகளையே வெளியிடுகின்றன.

கடந்த நூற்றாண்டின் ஆரம்ப காலம் முதல் எத்தனையோ தமிழ்க் குறுந்தேசியப் பித்தலாட்டங்கள் எமக்கு முன்னால் நடந்தேறிவிட்டன. அவற்றைப் புடம்போட்டுப் பார்க்கும் நிலை எமது மக்களிடம் மிகமிக அரிது. இதற்குள் தான் நாட்டுப் பிரச்சினை – புலம் பெயர்வு – பிற கலாச்சாரம் – போர் – மனிதப் படுகொலை என அனைத்தும் ஒன்று சேர்ந்து, எமது மக்கள் மீது சுமத்திய யுத்த வடுக்களின் அழல் – குடும்பப் பிரச்சினை – நோய் நொடிகள் என எத்தனையோ பேர் மன உளைச்சல் வருத்தத்தால் தினமும் வாடுகின்றார்கள். இவர்களில் படித்தவர் – பாமரர் – பணக்கார் என பலதரப்பட்டோரும் உள்ளடங்குவர். இந்நிலையில் இவர்களில் பலருக்கு, ஓரளவாவது மன ஆறுதல் கொடுப்பவை இந்த ஊடகங்களே ஆகும்.

‘எப்பதான் இந்தத் தொல்லைகள் துன்பங்கள் தீரும்’ எனத் தினந்தினமாய் அல்லற்படும் தமிழ் வானொளி நேயர்கள், இந்த ரி.வி-க்களை பார்க்கின்றார்கள். தமது கவலைகளை சற்று மறக்கின்றார்கள். அப்போது இந்த வானொளிகள் காண்பிக்கின்ற விளம்பரங்கள்..!? ‘நோய் கொண்டார் பேய் கொண்டார்’ என்ற நிலையில் இருக்கும் இவர்களை..! இவர்களையும் அறியாமலேயே..!! அந்த விளம்பரத்துக்குரிய நபர்களிடம் அழைத்துச் செல்கின்றது.

அதாவது அனைத்து உயிர்களிலும் உளவியல் என்ற உணர்வுப் பகுதி இருக்கின்றது. எமது சிந்தனை – செயல் அனைத்துக்கும் உளவியல்தான் அடிப்படைத் தூண்டியாக உள்ளது. எமது சமூகக் காரணியின் புறத் தாக்கத்தினால் பலசாலி – அறிவாளி அவர் எவராயினும், இந்த உளவியல் தனது சமாந்தரத்தை அவர்களில் இழக்கும்போது, அவர்கள் மெதுமெதுவாக வேறோர் சூழலுக்குள் மறைகின்றனர். சிலர் ஏதாவது தீர்வைத்தேடி அலைகின்றனர்.; திடமாக, சுயமாகச் சிந்திக்க முடியாத குழப்ப நிலைக்கு உள்ளாகின்றனர். இந்நிலையில் சம்பந்தப்பட்ட சிலர் மட்டும் நேரடியாக அல்லது இரகசியமாக உளவியல் – மருத்துவச் சிகிச்சைகளை நாடுகின்றனர் அல்லது பூசாரி – சாமி – பேயோட்டி – குருஜி என நாடுகின்றனர்.

இதற்குள் தான், சமூகச் சீரழிவுக்கான அடிப்படைப் பிரச்சினையே ஆரம்பிக்கின்றது. ‘நீரில் மூழ்குபவன் அதன் நுரையைக் கூடப் பற்றிக்கொள்வானாம்’ தமிழ்ச் சமூகத்தை, அறிவியலால் கட்டி வளர்க்கவேண்டிய ஊடகங்கள், மீண்டும் மீண்டும் எம்மீது வரலாற்றுத் தவறுகளை – பாரிய சமூகச் சீரழிவுக்கான உத்திகளை, விளம்பரங்கள் ஊடாகவும் சுமத்துகின்றன. இந்த தமிழ் ஊடகத்தினரிடம் புதிய அறிவுக்கான பக்குவம் என்பவையைக் காணவில்லை. இவர்களிடம் சமூகப் பொறுப்பற்ற தன்மை முழுமையாக விரவிக் கிடப்பதை இதிலிருந்தும் நாம் அறியலாம்.

இதில் ஜீ.ரீ.வி என்ற தமிழருக்கான இலவச ஊடகம், கருத்தியல் ரீதியாகவும் – விளம்பரங்களினாலும் சமூகப் பித்தலாட்டங்களை தொடர்ந்து செய்கின்றது. இதற்குச் சளைக்காமல் தீபம் – ஐங்கரன் ரி.வியும் விளம்பரங்களை வெளியிடுகின்றன. இதற்கான ஆதாரங்களை இந்த ஊடகங்களின் நேயராகிய நீங்களே அறிவீர்கள். மற்றும் ஜீ.ரீ.வியின் தொடர்பாளர்களில் ஒருவரான திரு.கருணைலிங்கம் அவர்களுடனும், தொலைபேசி மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் நாம் தொடர்பு கொண்டு, இந்தச் சமூகச் சீர்கேடுகள் பற்றி விளக்கினோம், குறிப்பிட்ட விளம்பரங்களை நீக்குமாறு கோரினோம். அதற்கு அவர்களின் பதில் ‘நாங்கள் நீக்கமாட்டோம்’ என்பதாகும். (ஆதாரம் 1 -கட்டுரையின் இறுதிப் பகுதியில் பார்க்கவும்)

எத்தனையோ ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் பாலியற் தொழில் என்பது அந்தந்த நாடுகளின் சட்டத்தை மீறி மறைமுகமாக நடக்கின்றது. மேற்கத்தைய நாடுகளில் அதனைச் சட்ட வரையறைக்கு உட்பட்ட தொழிலாக நடாத்துகின்றார்கள். இவர்கள் தங்களுக்கான ஊடக விளம்பரங்களை தனித்து நடாத்துகின்றார்கள். மக்களுக்கானது எனப்படும் ஊடகங்களில் இந்தவகை விளம்பரங்களை ஏற்பதில்லை – வெளியிடுவதில்லை. இது ஊடக நேர்மையும், சட்டத்தை மதிக்கும் தன்மை திறமையுமாகும். இதில் பாலியல் தொழில் செய்வோருக்கு ‘கொண்டம’| வழங்குவதை விட்டிட்டு, அவர்களுக்கு கல்விப் போதனை அளியுங்கள், நல்ல வாழ்வளியுங்கள் என்று கேரளாவைச் சேர்ந்த முன்னாள் பாலியல் தொழிலாளியும், தற்போதைய எழுத்தாளருமான நளினி ஜமீலா கோரிக்கை விடுத்துள்ளார். இது அனுபவத்தின் அறிவியல். மக்கள் மீதான நலன்.

இவை இப்படியிருக்க, தம்மை தமிழ் மக்களின் ஊடகமென புலிகளின் ஆட்சிக் காலத்திலிருந்து மறைமுகமாவும், நேரடியாகவும் சொல்பவர்கள் இவர்கள். தற்போது நாடு கடந்த அரசாங்கத்தை தூக்கிப்பிடித்தவாறு, பேய் பிசாசு பில்லி சூனியம் வைத்தல் – எடுத்தல், கைரேகை வாஸ்த்து வசிய சாஸ்த்திர – சோதிடம், ஆதிவாசிகள் வைத்தியம் – சாமியார் குருஜி பாபா தரிசனம்.., இப்படிப் பலவற்றை அடிக்கொருக்கால் காண்பிக்கின்றனர்..!?

இதனால் பெற்ற பணத்தை வைத்துத்தான் தமது ஒளிபரப்பை மக்களுக்காக நடாத்துகின்றோம் என, சமூகப் பொறுப்பற்ற பதிலைச் சொல்லி, இவர்கள் எமது தமிழ்ச் சமூகத்தை சீரழிக்கின்றார்கள். பித்தலாட்டச் சாமியார் – குருஜிக்கள் இந்த ஊடகங்களை தமது சீர்கெட்ட பிழைப்புக்கான ஊடகமாகப் பாவிக்கின்றார்கள். இந்த ஊடக விளம்பரங்கள் மூலமாக, இந்தச் சாமி குருஜீக்கள் கோடிக் கணக்காக பணம் சேர்க்கின்றார்கள். அதற்கான திட்டமிடலை (Schedule) மிக நேர்த்தியாகவே அவர்கள் செய்துள்ளார்கள்.

இந்த ஊடகங்களின் வழிகாட்டலினால் இந்தக் கயவரிடம் செல்கின்ற மனப் பலமிழந்த எமது மக்களிடமிருந்து பணத்தினையும் சொத்துகளையும் அபகரிப்பது மட்டுமல்லாது, அவர்களை ஆண் பெண்ணெனப் பிரித்து பாலியலிலும் ஈடுபடுகின்றது இந்தச் சாமி – குருஜிக் கும்பல். (ஆதாரம்)இதனால் சில குடும்பங்கள் இன்று பிரிந்திருக்கின்றன. இன்னும் சில குடும்பங்கள் இந்தக் கள்ளரிடம் சொத்துகளை பறிகொடுத்த நிலையில், எதிர்காலமே முழுமையாக இடிந்து, சிறிதாக இருந்த பலமும்போய் எல்லாமே கேள்விக் குறியாகி, தமது வாழ்வை அழித்த இந்த சமூகச் சீரழிவாளர்களை எதிர்க்கவும் முடியாமல், இதனை யாருக்கு எப்படி எடுத்துச் சொல்வதென்ற துலக்கமான ஆதாரங்களும் இல்லாமல்..! தாம் புலம் பெயர்ந்த பணக்கார நாடுகளில் ‘புரையோடிய புண்ணுக்குள் சீழ் கிடந்து குடைவதுபோல்’ இந்த ஊடகங்கள் – சாமி குருஜிக்களால் அழிக்கப்பட்ட, தமது வாழ்வை மீழப்பெற ஏதுமின்றி, இவர்கள் போதைகளுக்கு அடிமையாகி, பிச்சைக் காரரைப்போல..!! தெருத் தெருவாக அனாதரவாக அலைவதாக, நம்பிக்கையான செய்திகள் கிடைத்துள்ளது.

நீங்கள் உங்களின் ஊடகத்தை நடாத்துவதற்கு பணம் தேவை என்பது உங்களின் வாதமாக இருக்கலாம். அதற்காக விளம்பரங்களை வெளியிட விளம்பர தாரரிடமிருந்து நீங்கள் பணம் பெறுகிறீர்கள். அந்த விளம்பரத்தை வெளியிடுகிறீர்கள். இதனால் இந்தச் சாமிகளுக்கும், உங்களுக்கும் பணம் வந்து கிடைக்கின்றது. இதற்கு அப்பால்..! தங்களின் விளம்பரம் காரணமாக..!! தங்களால் பாதிக்கப்பட்ட எமது மக்களின் நிலைதான் என்ன..!?

தமிழ் ஊடகங்களே..! நீங்கள்தான் இந்தச் சமூகச் சீரழிவுக்குள் எமது மக்களை மாட்டிவிட்ட மாமாக்கள்.


அடுத்ததாக ஏதாவது பாலியற் தொழில் நிறுவனத்திடமிருந்து நிறையப் பணம் கிடைத்தால்..! அதற்கான மாமாக்களும் நீங்களே..!?

இந்த விடையத்தில் மதமும் அபினும் சமம் என்ற கருத்துக்கு அமைய, இந்து மதப் பின்னணி கொண்ட சில தந்திரவாதிகளும், வல்லரசுகளின் மூளைச் சலவைத் திட்டமான புத்தகங்களுடன் ஜகோவாவின் சாட்சிகள் – யேசு ஜீவிக்கிறார் போன்றவை, தற்போது எமது மக்களிடம் வந்து அலைகின்றனர். இவர்களின் ஆண்நிலை வாதம், இவர்கள் சொல்லும் பெரிய கடவுளையே ஆட்டிப் படைக்கும் மகா பெரிதான சாத்தான், பேய் – பிசாசு என்ற இவர்களின் எதிர்வினைக் கருத்தை, நோயாளிகள் மத்தியிலும் – மரண வீட்டிலும் – மனச் சோர்வானோரிடமும், ஆதரவு குறைந்த முதியோரிடமும் கடவுளைப் பற்றிச் சொல்வதான போதனைத் திணிப்புகள் யாவும், இவர்களின் மனச் சலவை மூலமான மத மாற்றத்துக்கும், மறுபுறத்தில் சாத்தானை எதிர்ப்பதாக அதனை ஏற்கவைத்துப் பயமுறுத்தி, சீர்கேடான அரச – சமூக இயந்திரங்களை எதிர்த்துப் போராடாத பொம்மை நிலைக்கு எமது மக்களை ஆளாக்குகின்றனர். அத்துடன் அவர்களது குடும்பத்திலிருந்தும், சமூகத்திலிருந்தும் ஓரங்கட்டவைத்து, தமக்கான தனிக் குழும வாழ்வுக்கு கொண்டு செல்கின்றனர்.

இதில் தமது கருத்துக்குள் வீழ்ந்த மக்களை, தமக்கான வட்டத்துக்குள் அடைத்து வைப்பதில் ‘ஜகோவாவின் சாட்சிகள’| சிறந்து விளங்குகின்றனர். பிசாசைக் கலைப்பதிலும், பில்லி சூனியம் எடுப்பதிலும், ஆவிகளோடு அலைவதிலும், கிடைக்காதவைகளை – இழந்த அனைத்தையும் மீண்டும் பெற்றுக் கொடுப்பதாகப் போதனை செய்வதில்  இவர்கள் இந்துச் சாமிகளை விடவும் திறமைசாலிகள். இவர்களில் பலருக்கு குழந்தை இல்லாதபோதும், குழந்தை இல்லாதோருக்கு அதனை ஆண்டவரிடத்திலிருந்து பெற்றுத் தருவதாகவும் இந்த ‘யேசு ஜீவிக்கிறார்’ என்ற குழுநிலைவாதிகள் கை கோர்த்துள்ளனர்.

அத்துடன் இப்படியான பித்தலாட்டக்காரர்கள், குறிப்பாக லண்டன் மாநகரையே குறிவைத்து வருகின்றனர். கலை – மதம் (கோயில்) போன்ற பின்னணிக்கான போலி ஆதாரங்களை காண்பித்து, மிக இலகுவாக லண்டனுக்கு வந்துவிடுகிறார்கள். இதற்கெல்லாம் ஆதரவாக இருப்போர்களில் பலர் இங்கிலாந்தில் வாழ்கின்ற முன்னை நாள் குற்றவாளிகளாவர். இவர்களில் வைத்தியர் – சட்டவல்லுனர் – கணக்காளர் (Doctors – Lawyers – Accountants) என்போரின் கூட்டு இது. இவர்கள் ‘இந்து சரவணபாபா சேவா சங்கம்’ போன்ற அமைப்புகளை உருவாக்கி, இவை மூலமாக இந்தக் கோட்டான்களுக்கு பிரயாண அனுமதியைப் பெறுகின்றனர். அத்துடன் பக்த அடியார்கள் அதிகமாகக் கூடுகின்ற இந்துக் கோயில்களை தமக்கான பிரச்சாரக் கூடமாக மாற்றி, அமைதி தேடிப் போகும் மக்களுக்கு பொன் சிரிப்புடன் வசீகரமான கதைகளைச் சொல்லி, அவர்களை தமது பொறிக்குள் மிகமிகச் சுலபமாக வீழ்த்தி, தோலிருக்க சுழை திருடுகின்றது இந்தக் கொள்ளைக் கூட்டம். இக்கொள்ளைக் கூட்டத்துக்கு ஆலயங்களும் அவற்றின் நிர்வாக சபைகளும் நேரடியாகவும், மறைமுகமாகவும் துணைபோகின்றன.

மற்றும் இந்த இந்துமத சுருவங்களை வைத்து பித்தலாட்டம் செய்யும், கைரேகை வாஸ்த்து வசிய சாஸ்த்திர சோதிடம் சொல்வோர், மனிதரின் மடமைகளை நன்றாகவே புரிந்துகொண்ட தந்திரசாலிகள். இவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்தால் இவர்களும் சாமியார் குருஜி பாபாக்கள் ஆகுவர். இவை போலத் தான் சில இந்துக் கோயில்களில், உங்களின் கணவனுக்கு ஆபத்து..! அதற்கு நீ உனது தாலியை களற்றி இந்த உண்டியலில் போடு..? உனக்கு தாலி பாய்க்கியம் கிடைக்கும் என, எத்தனையோ தாலிகளை பூசாரிகள் அபகரித்ததற்கான ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.

அலோபதி – ஹோமியோபதி – ஆயுர்வேதம் – அக்குபஞ்சர் – சித்த வைத்தியம் என்பன இதுவரை கண்டறியாத நோய்களுக்கான மருத்துவத்தினை, ஆதிவாசிகள் வைத்தியம் செய்கின்றதாம்..!? இவர்களின் வைத்தியத்தால் ஏற்படும் பின் விளைவுகளுக்கு அலோபதி வைத்தியம் பதில் சொல்லவேண்டி இருக்கின்றது. இதில் அலோபதி வைத்தியத்தை சிறந்ததென்று நாமிங்கு விவாதிக்கவில்லை. ஆனாலும் அதன் பின் விளைவுகளுக்கு ஏதோ காப்புறுதியாவது இருக்கின்றது. அது சட்டரீதியாக பதிவு செய்யப்பட்டது. சட்டரீதியாக பதிவு செய்யப்படாத இந்த ஆதிவாசிகள் வைத்தியத்தின் பின் விளைவுகளுக்கு, இந்த ஊடகங்களே பொறுப்பேற்க வேண்டும். இந்த ஆதிவாசிகள், தங்களின் நோய் பிணி துன்பங்களை – தமது சமூகச் சீரழிவுகளை தீர்க்கும், மாற்று அரசியலற்ற இவர்களை வைத்து, மறைமுகமாக வேறு யார்யாரோ உழைக்கின்றார்கள். அதற்காக எங்களுக்கென்ற தமிழ் ஊடகங்கள் விளம்பரம் காட்டுகின்றார்கள்.

மக்களே..!

எமது சொந்த மண்ணில் மனிதனுக்கு உரிய மதிப்புகள் அற்ற நிலையில், தமிழ் நாட்டிலும் – வெளி நாட்டிலும் அப்படி என்ன மதிப்பு மரியாதை..! அதற்கான காரணங்களை எண்ணிப் பார்க்க ஏன்தானோ நீங்கள் மறுக்கின்றீர்கள்..!! வாழ்க்கையில் எதிர் நீச்சலடிக்கத் தெரியாதோர், கடல் போன்ற ஆழமான பிரச்சினைகளை எதிர்த்து நீச்சலடிக்கும் அறிவை வளர்க்காமல், கல்லளைக்குள் அகப்படும் நண்டுகளைப்போல இந்தப் பொய்யர்களிடம் அகப்படுகிறீர்களே..!? அதுதான் எதற்காக..!!?

காரணம் உங்களால் – உங்கள் மனத்தின் சக்தியால் தீர்க்க முடியாத பிரச்சினைகளை இந்த மனிதர்கள் தீர்ப்பார்களென நீங்கள் முழுமையாக நம்புகின்றீர்கள். யாராலும் தீர்க்க முடியாத பிரச்சினைகளுக்கு தீர்வுகள் தேவைதான். அவற்றை எப்படித் தீர்க்கலாம் என்றபோது, மூழிநாயும்வர உறியும் அறுந்து விழுந்தமாதிரி..! இந்தக்  கோட்டான்கள் மூலம் உங்களுக்கு கிடைத்த வழி இவைதான். இதில் உங்களின் பணம் – சொத்து – குடும்பமென அனைத்தையும் நீங்கள் மிகமிக இரகசியமாக இழந்துபோகிறீர்கள். அவற்றை வெளியே சொல்ல முடியாது தவிக்கின்றீர்கள். உங்களின் தவறினை மறந்து உங்களின் குடும்ப உறவுகளை குற்றம் செய்தவர்களாகப் பார்க்கின்றீர்கள். உங்களைப் போன்ற பலர் இப்படித்தான் வாய்மூடி மௌனிகளாக, அத்தனை சொத்துகளையும் இழந்து தெருத் தெருவாய் அலைகின்றார்கள். ஆனால் இந்தப் பித்தலாட்டக்காரர் மட்டும் ஒரு அடிப்படைத் தொழிலும் செய்யத் தெரியாத நிலையில், உங்களிடமிருந்து அபகரித்த அத்தனை சொத்துகளையும் வைத்து அனுபவிக்கின்றனர்.

இவர்கள் மக்களை ஏய்க்கும் செயற்பாடுகள் காலனித்துவ நாடுகளை விடவும், உலக வங்கி வறிய நாடுகளில் சுருட்டி அள்ளுவதை விடவும் நுட்பமானது. இந்தப் பொய்யர்களுக்கு பணவரவும் கடவுளென்ற மரியாதையும் பாலியலும் உங்களால் கிடைக்கின்றது. இந்தக் கள்ளருக்கு வேறு எந்தச் செலவுகளுமே இல்லை.

இந்த சுவாமி..! குருஜிக்கள் மற்றும் கபடத்தனம் செய்கின்ற எவருமே, மக்களுக்காக இதுவரை எதனைப் பெற்றுத் தந்திருக்கின்றார்கள்..!? கடந்த சில மாதங்களுக்குமுன் செத்துப்போன ‘சத்தியசாயிபாபா’ என்ற பித்தலாட்டக்காரனால் இதுவரை உலக மனிதருக்கு என்னதான் நிகழ்ந்திருக்கிறது..? மிகச் சாதாரண மக்களையும் ஏமாற்றி அவன் திரட்டிய சொத்துகளுக்கு தற்போது பங்கம் வந்திருக்கிறது. அதேபோலத்தான் நித்தியானந்தாவும். இந்த மனிதர்களும் மலத்தைத்தான் கழிகின்றார்கள். வருத்தம் வந்ததும் வைத்தியரை அழைக்கின்றார்கள். இவர்களெல்லாம் ‘சிவாஜி – கமல் …, – சாவித்திரி – சிறிதேவியை …விடவும் மகச் சிறந்த நடிகர்கள்’ இவர்களின் நடிப்பில் காதல்கொண்டு, உங்களுங்கள் குடும்பத்தைச் சீரழிக்கும் – சீரழிக்கப்போகும் நீங்களே, அந்தச் சீரழிவிலிருந்து வெளியேறி, உந்தப் பித்தலாட்டக் கள்ளரை எதிர்த்துப் போராடவேண்டும். இவர்கள் செய்வதெல்லாம் ‘திருட்டுத்தம்பனம்’ என்ற மயக்கு வித்தை – சுத்துமாத்து. தம்மை நம்பும் மக்களை அடிமுட்டாளாக்கும் இந்தச் ‘சாமி’, ‘குருஜி’ என்ற ‘மொள்ளைமாரி – முடிச்சுமாறிகள்’ கதை மூலம் மக்களை நம்பவைக்கும் கலையைக் கற்றவர்கள். அதனால் உங்கள் குடும்பத்தை சீரழித்து பொருள் முதல் பாலியல் வரை சூறையாடுகின்றார்கள் என்பதே உண்மையானது.

கடவுள் நம்பிக்கை என்பது பயத்தின் மீதுதான் கட்டப்பட்டிருக்கின்றது. அதனை வணங்குவதும், விலக்குவதும் மனிதனுக்கான உரிமைகளில் ஒன்று. அதில் உங்களின் ஆயாச நம்பிக்கைகளை இப்படியானோர் துஸ்பிரயோகம் செய்கின்றார்கள். அதற்கு இந்த அடிப்படை அறிவியலற்ற ஊடகங்களும் இன்னும் சில சூத்திரதாரிகளும் உங்களை ஏமாற்றுகின்றார்கள் என்பதே உண்மை. இப்படியான உந்தச் சாமிகளை உங்கள் மனங்களிலிருந்து தூக்கி எறியுங்கள். உங்களுக்கான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அறிவியலோடு சிந்தியுங்கள்.

ஏமாளிகள் பெருகிய சமூகத்தில் ஏமாத்துவோரின் இராட்சியம் சிறப்பாகவே நடைபெறும்.

இதன் தொடர்ச்சியாக எத்தனையோ பல உண்மைச் சாட்சியங்கள், இந்தக் கள்ளச் சாமிகளால் ஏற்பட்ட தமது  அனுபவங்களை மக்களுக்கு வெளியிட வருகின்றார்கள்.

மாணிக்கம்

25/06/2011


 

 

 

 

 

ஆதாரம் 1

To. இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.,


ஜிரிவியின் விளம்பரத்திலிருந்து கள்ளச் சாமிக்கான விளம்பரத்தைநீக்கு..!

வணக்கம்,
தங்களின் விளம்பரப் பகுதியின் பொறுப்பாளர் என அறியப்படும் திரு.கருணைலிங்கம் அவர்களிடம், கேரளாவிலிருந்து இலண்டனுக்கு வந்து, ஆன்மீகம் என்ற போர்வையில் எமது மக்களுக்குள் சமூகச் சீரழிவைச் செய்கின்ற, தனது நாட்டில் ஜிலேபி விற்றுத் திரிந்த ஆசாமியாகிய சரவணபாபா என்ற கள்ளச் சாமிக்கான விளம்பரத்தையும், அதுபோன்ற பொய்யர்களுக்கான விளம்பரங்களையும், ஜிரிவியின் விளம்பரத்திலிருந்து நீக்குமாறு, நாம் தொலைபேசி மூலமாக திரு. கருணைலிங்கத்துடன்  கதைத்திருந்தோம். அந்த விளம்பரங்களை நீக்கமுடியாது முடியாது என அன்று மறுத்துப் பதிலளித்தார்.

இருந்தும் கடந்த சில தினங்களாக தங்களுடன் இது பற்றி விபரமாகக் கதைப்பதற்கு ஜிரிவியின் அனைத்து தொலைபேசிகள் மூலமாத் தொடர்புகொண்டோம். தங்கள் எவருடனும் கதைக்க முடியவில்லை. அதனால் இந்த மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொள்கின்றோம்.

ஊடகத் துறையினராகிய நீங்கள், உங்களின் நலனில் நின்றவாறுதான் இந்தச் சமூகச் சீரழிவுக்கான விளம்பரங்களை வெளியிடுகின்றீர்கள். அதனால் ஏற்படும் சமூகச் சீரழிவுகள்..!? தங்களுக்கு செய்தியாகவும்இ சுளையான பணமாவும் வந்து கிடைக்கின்றது. ஆனால் பாதிக்கப்படுவது மனநலம் சிதைக்கப்பட்ட மக்கள்.

இந்தக் கள்ளச் சாமி – குருஜிகளுக்கு கோடிக் கணக்கான பணமும், பாலியலும் திட்டமிட்ட கொள்ளையாகின்றது. நீங்கள் மக்கள் நலன் நிற்காது..! அந்தச் சமூகச் சீரழிவாளருக்கு துணைபோகின்றீர்கள் என்பதனை தங்களால் உணர முடியவில்லையா..!?

தயவு செய்து இப்படியான அனைத்து விளம்பரங்களையும் உடனடியாக மக்களுக்குக் காண்பிக்காது நீக்குங்கள். அத்துடன் இதற்கான தங்களின் பதிலை எமது மின்னஞ்சலுக்கு இரு தினங்களுக்குள் தாருங்கள்.

மக்கள் நலனில்
தமிழர் ஐரோப்பிய மையம்

————————————————————————————————————