அண்மையில் இரு சிறுமிகளுக்கு நடந்த கொடுமைகளுக்கு பின்னால் மத அடிப்படைவாதிகள் செயல்பட்டதை அம்பலப்படுத்தியதை அடுத்து இஸ்லாமிய மதம் சார்ந்து பலர் தர்க்கம் செய்தனர். பகுத்தறிவு கொண்டோ, மனிதத் தன்மை கொண்டோ அணுக முடியாத மதம் சார்ந்த குறுகிய வட்டத்தில் நின்று மதக் கற்பனையில் நின்று, எதிராக இதை அணுகினர். மதம் சார்ந்த சமூகமாக காத்தான்குடி சமூகத்தைக் குறுக்கி தங்கள் மதம் சார்ந்த கற்பனையால் தாக்கினர். மனித உழைப்புடன் சம்மந்தப்படாத மதக் கற்பனை மூலம் இதை திரிக்க முற்பட்ட நிலையில் மதக் கற்பனைகளை அம்பலப்படுத்திய செங்கொடியின் தொடர் கட்டுரையை அறிவுபூர்வமாக மதத்தை பகுத்தறிய விரும்பும் அனைவர் முன்னும் தொகுத்து வைக்கின்றோம். இஸ்லாம் மதம் மட்டுமல்ல இந்து, யூத, புத்த, கிறிஸ்தவம் என அனைத்தம் கற்பனைக் கோட்டையால் ஆனது.
தமிழ் அரங்கம்.
நுழைவாயில்
பொதுவாக மதம் என்பது மக்களிடையே சக்திவாய்ந்த நம்பிக்கையாக இருக்கிறது. மக்கள் தங்களின் உயிர்ப்பிற்கும், மரணத்திற்கும்; சுக துக்கங்களுக்கும்; இன்னும் அனைத்திற்கும் அதுதான் காரணமாக இருக்கிறது என நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையே உலகை சீர்பட நடத்திவருவதாக ஏற்கிறார்கள், தற்போதைய சீர்கேடுகளுக்கு அந்த நம்பிக்கை குறைந்ததே காரணம் என கருதுகிறார்கள். வேறு எந்த நம்பிக்கையை காட்டிலும் மத நம்பிக்கையே, கடவுள் நம்பிக்கையே வீரியம் மிக்கதாய் இருக்கிறது. சிலபோதுகளில் அந்த நம்பிக்கையில் கீரல் விழுந்தாலும் மறு கணமே மனதிலிருந்து ஒரு உந்துதல் கிளம்பி அந்த கீரல் சரிசெய்யப்பட்டுவிடுகிறது. இது மனதில் நம்பிக்கை என்ற அளவில், ஆனால் நடப்பிலோ அவர்களின் வாழ்க்கையும் அதன் வலிகளும் அவர்களை கோபம் கொள்ளச்செய்கிறது. தங்களின் பிரச்சனைகளுக்கு காரணமாகத் தெரிபவர்களை பழிவாங்க முயல்கிறார்கள். மீண்டும் அதேபோல் நேராவண்ணம் தற்காத்துக்கொள்ள எச்சரிக்கையாக இருக்கிறார்கள் அல்லது அவ்வாறு இருக்க முயல்கிறார்கள். ஆனாலும் கடவுள் தங்களுக்கு விதித்ததை தவிர வேறெதுவும் நேராது என உறுதியாக நம்புகிறார்கள். மேலும் பிரச்சனைகள், மேலும் மேலும் பிரச்சனைகள் அவர்களை அழுத்த அழுத்த நாட்கள் கடந்து கடந்து ……ஒரு நாள் மரணித்தும் விடுகிறார்கள். தங்களின் பிரச்சனைகள் இந்த உலகிலிருந்தே எழுந்து வருபவைகள். சிலர் கொழுக்க நினைப்பதாலேயே தமக்கு பிரச்சனைகள் வருகின்றன என்பதும், தம்முடைய உழைப்பு முழுவதும் தமக்கு கிடைப்பதில்லை என்பதும் அவர்களுக்கு தெரியாமலேயே போய்விடுகிறது. அப்படி தெரியவிடாமல் செய்வதில் கடவுள் நம்பிக்கை பெரும்பங்கு வகிக்கிறது என்பதையும் அவர்கள் உணர்வதில்லை. இப்படி கடவுள் நம்பிக்கை என்பது இவ்வளவு வீரியமாக இருப்பதற்குக்கு காரணம் என்ன?
மனிதன் பிறந்தது முதலே ஏதாவது ஒரு மத நம்பிக்கையின் நிழலிலேயே வாழ நேரிடுகிறது. வளர்ந்த பிறகு அந்த நம்பிக்கையின் சடங்குகளுக்குள் சிக்கிக்கொள்கிறான். அவனுக்கு போதிக்கப்படும் அத்தனையும் ஏதாவது ஒரு ரீதியில் கடவுளின் இருப்பை பத்திரப்படுத்துகின்றன. அவன் சிந்திக்கும் பருவத்தை அடையும் போது வேதங்களும் அதன் விளக்கங்களும், விரிவுரைகளும் பொழிப்புரைகளும் அவனுள் நுழைந்து அவனின் சிந்தனைக்கான வழியை கைப்பற்றிக்கொள்கின்றன. எதைப்பற்றி சிந்தித்தாலும் இந்த வழியை மீறிவிடாதவாறு சொந்தங்களும் சமூகமும் பார்த்துக்கொள்கின்றன. கூடவே இன்றைய வாழ்முறைகளும் பொழுதுபோக்கு கட்டமைப்புகளும் ஒரு செக்கு மாட்டுத்தனத்தை ஏற்படுத்திவிட, பொருப்புகள் அதை சுமந்தே ஆகவேண்டிய கடமைகள் அவைகளுக்காக பொருளீட்டும் தேவை, அந்த தேவைகளுக்காக வரித்துக்கொண்டேயாகவேண்டிய தகுதிகள்……. மூச்சுவிடத்திணரும் அவதியில் ஏன் எனும் அந்தக்கேள்வி எழும்பும் வலுவற்றே போய்விடுகிறது.
இவைகள் போதாதென்று தற்போது தொலைக்காட்சிகளிலும், இணையத்திலும் மத பரப்புரைகள் விஞ்ஞான விளக்கங்களோடு, அறிவியல் ஆதாரங்களோடு நிஜம் போலவே வலம் வருகின்றன. அதெப்படி பொய்களுக்கு அறிவியல் விளக்கங்கள் தரமுடியும்? தருகிறார்கள். மதம் பேசுபவர்கள் இப்போது அறிவியலையும் குழைத்தே பேசுகிறார்கள்.
பேரண்டம் என்றாலும் அணுப்பிளவு என்றாலும் வேத வசனங்களை பொருள் பிரித்து அடுக்குகிறார்கள். நீட்டி முழக்குகிறார்கள், அறைகூவல் விடுகிறார்கள். வாழ்க்கையின் பற்சக்கரங்களிடையே திமிறிக்கொண்டு வரும் வெகுசில நேரங்களில் மக்களுக்கு ஏற்படும் கேள்விகளை இது போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வியக்கவைத்தே பலங்குன்றச் செய்துவிடுகின்றன. மதப்பிரச்சாரக்கூட்டங்களுக்கு மக்கள் தேடிப்போய் கேட்பது குறைவு, மதவிளக்க நூல்களை படிப்பது அதனிலும் குறைவு ஆனால் திரைப்பட நிகழ்ச்சியின் அல்லது விளையாட்டின் விளம்பர இடைவேளையில் தெரியாமல் இதுபோன்ற நிகழச்சிகள் பார்வைக்கு வந்துவிட்டால் கூட இதன் தாக்கம் மக்களின் மனதில் இருக்கை போட்டு அமர்ந்துவிடுகிறது. இந்து மதத்தில் அதன் ஆன்மீக சாரங்களை யாரும் வாழ்க்கை நெறியாக கொள்வதில்லை. கிருஸ்துவத்திலும் கூட ஆன்மீகத்தையும் சமூகத்தையும் பிரித்துப்பார்க்கும் போக்கு வெளிப்படுகிறது, ஆனால் இஸ்லாத்திலோ அதை பின்பற்றுபவர்களின் மனதில் ஆழமாக பதிந்திருக்கிறது. ஏனையோர்களைவிட இஸ்லாமியர்களிடம் மதப்பிடிப்பும், இது தான் சரியான மதம் எனும் உறுதியும், அதை நடைமுறைப்படுத்தும் ஆர்வமும் அதிகம்.
இந்தியாவில் இந்துப்பாசிச வெறிக்கு அதிகம் பலியாவது இஸ்லாமியர்கள் தாம். அரசு பயங்கரவாதத்தினால் பாதிக்கப்படும்போதும் அவர்களின் மத அடையாளமே முன்னிருத்தப்படுகிறது. இதனாலும் அவர்கள் மதத்தின் தழுவலில் கட்டுண்டு கிடக்க ஏதுவாகிறது. இதனடிப்படையில் அரசியல் விழிப்புணர்வு என்ற பெயரில் மதரீதியில் ஆன்மீக இயக்கங்களின் பின்னால் அணிதிரள்வது அதிகரிக்கிறது. ஒரு வகையில் இது இந்துபாசிசங்களுக்கும் தேவையாகவும் உதவியாகவும் இருக்கிறது. அந்த வகையில் இந்துபாசிசங்களுக்கு உதவும் இஸ்லாமிய ஒருங்கிணைவை தடுத்து வர்க்க அடிப்படையில் சமூக போராட்டங்களில் அவர்களையும் இணைத்து முன்செல்லவேண்டிய அவசியமிருக்கிறது. அதற்கு அவர்களின் மத நம்பிக்கையை மதப்பிடிப்பை கேள்விக்குள்ளாக்குவது முன்நிபந்தனையாகிறது.
இந்தத்தொடர் இஸ்லாமியர்களின் மதச்சடங்குகளை, சட்டங்களை, வேத வசனங்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டு அதற்கு அவர்கள் தரும் விஞ்ஞான விளக்கங்கள் எப்படி போலியாக இருக்கின்றன என்பனவற்றை யும், இஸ்லாம் தோன்றிய அன்றைய அராபியாவின் அரசியல், சமூக, பொருளாதார, இறையியல் சூழல்களையும் பேசுவதன் மூலம் இஸ்லாம் என்ற மதத்தின் புனித சட்டகங்களை நீக்கி அதன் மெய்யான இருப்பை, உள்ளடக்கத்தை அடையாளப்படுத்தும் ஒரு முயற்சிதானேயன்றி வேறில்லை. அதோடு இன்றைய சூழலில், எந்தஒரு மதத்திலும் அதில் பிடிப்பும் பற்றார்வமும் கொண்டிருப்பவர்கள் தவிர்க்கவே முடியாமல் ஏகாதிபத்தியங்களுக்கு துணைபோவதையே வழியாக கொண்டிருக்கிறார்கள்.
அரபு தேசியவாதம், அரபு மார்க்ஸியம் என்று இஸ்லாமிய இறையியலை விட்டுக்கொடுக்காமல் தத்துவம் பேசியவர்களெல்லாம் இன்றைய நிதிமூலதனத்தின் முன் முனை மழுங்கிய வாளாக செயலற்றிருக்கிறார்கள். புரட்சிகர மார்க்ஸியமே இன்றைய சமூகத்தேவையாக இருக்கிறது என்பதை உணர்த்துவதற்கும் இத்தொடர் பயன்படுமென நம்புகிறேன்.
ஒரு வேண்டுகோள்: இஸ்லாமும் அதன் சட்டதிட்டங்களும் மட்டுமே சரியானது ஏனைய அனைத்தும் ஏதோ ஒருவகையில் தவறானவை என்பனபோன்ற முன்முடிவுகளை தவிர்த்துவிட்டு ஆக்கபூர்வமான வகையில் வினையாற்ற வாருங்கள் என அனைவரையும் அழைக்கிறேன்.
தோழமையுடன் செங்கொடி
இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளிய அறிமுகம்
கிபி ஆறாம் நூற்றாண்டில் அரேபிய தீபகற்பத்தின் மக்கா என்னும் நகரில் முகம்மது என்ற பெயர் கொண்ட உயர்குல வணிகரால் தொடங்கப்பட்ட மதம் இஸ்லாம். ஆனால் அவரைப்பின்பற்றும் இஸ்லாமியர்கள் அல்லது முஸ்லீம்கள் இதை இப்படி ஏற்றுக்கொள்வதில்லை. அனைத்து ஆற்றல்களையும் தன்னகத்தே அடக்கிக்கொண்டுள்ள தங்களின் ஏக இறைவனான அல்லா களிமண்ணிலிருந்து முதல் மனிதனை படைத்தபோது, அந்த முதன் மனிதனிலிருந்து தொடர்ச்சியாக மனித குலத்தை உருவாக்க நினைத்தபோது, அப்படியான மனித குலத்திற்காக இறைவன் உண்டாக்கித்தந்ததுதான் இஸ்லாம் எனும் மதம் என்பது முஸ்லீம்களின் நம்பிக்கை.
மனித குலத்திற்கான அந்த இஸ்லாம் எனும் ஒரே மதம் உருவான சில கணங்களிலேயே சைத்தான் எனும் அல்லாவின் எதிரியால் சிதைவுக்கு உள்ளாக்கப்படுகிறது. பின்னர் தொடர்ந்து சைத்தானால் சிதைக்கப்பட்டு, சிதைக்கப்பட்டு அதனால் மனிதர்கள் மனம்போன போக்கில் பின்பற்றக்கூடிய நிலையானது. உருவாக்கித்தந்த ஆண்டவனே தான் உருவாக்கிய மதம் இப்படித்தான் அப்படி இல்லை என்று போதிப்பதற்காக இறைத்தூதர்களை அனுப்பவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்ப்பட்டது. ஆனால் அவைகளும் சைத்தானின் வினையாக்கலுக்கு ஆட்பட்டு தனித்தனி மதங்களாக உருமாறி இறைத்தூதர்களையே கடவுளாக கொண்டாடும் நிலையாகி நிற்கிறது. இப்படி அனுப்பப்பட்ட அனேகம் அனேகம் தூதர்களில் முகம்மது தான் கடைசியாக வந்த தூதர் அதாவது நபி. இனி உலகம் உள்ளளவும் மனித குலம் வாழும் வரையிலும் அந்த முகம்மது நபி தான் இறுதித்தூதர், அவர் சொன்னதும் செய்ததும் தான் இஸ்லாமின் வேதமும் வழிகாட்டுதலும். இதுவும் முஸ்லீம்களின் நம்பிக்கை. முஸ்லீம்களின் இந்த நம்பிக்கை வேதம் படித்த, மத ஆச்சாரங்களின்படி ஒழுகும் சில மேல்மட்ட முஸ்லீம்களிடம் மட்டும் இருப்பது, ஏனைய சாதாரணமானவர்களுக்கு இதெல்லாம் தெரியாது என்று யாரும் கருதிக்கொள்ளலாகாது. அடிமுதல் முடி வரை, ஏழையானாலும் பணக்காரனானாலும், நல்லவன் கெட்டவன் எனும் பேதமின்றி முஸ்லீம்கள் அனைவரிடமும் இந்த நம்பிக்கை நிலை கொண்டிருக்கும். இஸ்லாத்தில் சொல்லப்பட்டிருக்கும் சமூகவியல் ஒழுங்குகளை முஸ்லீம்கள் எல்லோரும் கடைப்பிடிப்பார்கள் என்று சொல்லமுடியாது. இஸ்லாம் கூறும் மதச்சடங்குகளை எல்லோரும் ஒழுங்காக செய்து கொண்டிருக்கிறார்கள் என்றும் சொல்லிவிட முடியாது. ஆனால் முஸ்லீமாக இருப்பவர்கள் அனைவரும் மேற்கண்ட நம்பிக்கையை தவறாமல் கொண்டிருப்பார்கள் என அறுதியிட்டு சொல்லிவிடலாம். ஏனென்றால் இது தான் அந்த மதத்தின் அடிப்படை.
பிற மதங்களில் வேறொன்றிலிருந்து தங்களின் மதத்திற்கு மாறுபவர்களை அடையாளப்படுத்த சில சடங்குகளை செயல் வடிவங்களை கொண்டிருக்கிறார்கள். ஆனால் இஸ்லாத்தைப் பொருத்தவரை மேற்கண்ட நம்பிக்கைதான் வழிமுறை. அதை கண்டிப்பாக நம்பி ஏற்றுக்கொள்ளவேண்டும், அப்படி ஏற்றுக்கொள்ளாதவரை ஒருவனை முஸ்லீமாக கருத மாட்டார்கள். “அல்லாவை தவிர வேறு ஆண்டவன் யாருமில்லை. முகம்மது நபி அல்லாவின் தூதர் தான்” இப்படி ஒருவன் நம்பிவிட்டால் போதும் அவன் முஸ்லீமாக ஆகிவிடுவான். இதனைத்தொடர்ந்து இன்னும் சில நம்பிக்கைகள் வருகின்றன. சொல்லப்போனால் தொடர்ந்து வரும் இந்த நம்பிக்கைகளின் அடிப்படையில் தான் மேற்கண்ட சூத்திரமே வடிவமைக்கப்பட்டுள்ளது.
௧) இதில் முதலில் வருவது ஆண்டவனின் சக்தி அல்லது அதிகாரம். ஆண்டவன் யாராலும் பெறப்படவில்லை, சுயம்பு என்பது எல்லோருக்கும் தெரியும், சுற்றிவழைத்து எல்லா மதங்களும் சொல்வது தான். ஆனால் இஸ்லாத்தின் விளக்கம் வேறானது, ஆண்டவனான அல்லாவைத்தவிர வேறு யாருக்கும் எதற்கும் எந்த சக்தியும் இல்லை என்பதுதான். ஒரு பொருளுக்கு ஒரு குறிப்பிட்ட ஆற்றல் இருக்கிறது என்றால் அது அல்லாவைத்தவிர வேறு எவற்றினாலும் வழங்கப்பட்டிருக்க முடியாது. அல்லாவின் உத்திரவை மீறி அது செயல்படவும் முடியாது. பிரபஞ்சம் முழுக்க நாம் காணும், காணாத; அறிந்த , அறியாத அனைத்தும் அல்லாவின் கட்டளையை ஏற்று செயல்படுத்தும் விதத்திலேயே வடிவமைக்கப்பட்டுள்ளன.
௨) மறைவானவற்றின் ஞானம். அதாவது இந்த உலகத்திலோ அல்லது பிரபஞ்சத்திலோ ஏதோ ஒன்று அல்லது அதைப்பற்றிய ஞானம் மனிதனுக்கு தெரியவில்லை என்றால் அது இல்லை என்று கூற முற்படுவதோ, ஆதாரம் உண்டா எனக்கேள்வி கேட்பதோ அல்லாவின் சமஸ்தானத்தில் மிக மிகக்கடுமையான தண்டனைக்குறிய குற்றமாகும். உதாரணமாக எதிர்காலத்தில் பூமியிலிருந்து ஒரு மிருகம் வெளிப்பட்டு மக்களுடன் பேசும் என்றால் அதை கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படி ஒரு மிருகம் வருமா? பரிணாமத்தில் அதற்கு வாய்ப்பிருக்கிறதா? பேசும் மிருகம் என்றால் அது சமூக வயப்பட்டிருக்கவேண்டுமே என்பன போன்ற சிந்தனைகள் உங்களுக்கு வந்தால் நீங்கள் அல்லாவைப்பற்றிய பயமற்ற காபீராக இருக்கவேண்டும். ஏனென்றால் அனைத்து ஞானங்களும் அறிந்தவன் அல்லா ஒருவனே. அல்லா இப்படிக்கூறியிருக்கிறான் என்று யாரேனும் கூறினால் அல்லா அப்படி கூறியிருக்கிறானா? என்று குரானின் பக்கங்களை நீங்கள் புறட்டிப்பார்க்கலாமே தவிர அதற்கு சாத்தியமிருக்கிறதா என்று நீங்கள் சிந்திக்கக்கூடாது. மொத்தத்தில் அல்லாவின் இருப்பையோ, ஆற்றலையோ நீங்கள் சந்தேகிக்கவே கூடாது.
௩) குரான். இது ஆண்டவனால் முகம்மதுக்கு வழங்கப்பட்ட வேதம். இதை நீங்கள் ஏற்றுக்கொண்டேயாகவேண்டும். இதில் எந்த ஒரு முரண்பாட்டையும் நீங்கள் காணமுடியாது. இன்னும் எத்தனை கோடி ஆண்டுகள் மனிதன் வாழ்ந்தாலும் தங்களின் ஐயங்களை இதிலிருக்கும் ஆறாயிரத்துச் சொச்ச வாக்கியங்களுக்குள்ளிருந்துதான் தீர்த்துக்கொள்ளவேண்டும். இதற்கு வெளியே மனிதனுக்கு எந்த ஒரு தீர்வும் இல்லை. இதிலிருக்கும் எதிர்காலக் கணிப்புகள் அப்படியே புள்ளி மாறாமல் நிகழும். இதில் கூறப்பட்டிருக்கும் வரலாறுகள் அத்தனையும் அப்படியே நடந்தவை. எந்த மாறுதலோ திருத்தமோ தேவையில்லாத, அல்லா கூறியது போன்றே அப்படியே பாதுகாக்கப்படும் அதி அற்புத வேதம் திருக் குரான்.
மேலே கூறப்பட்ட நம்பிக்கைகள் அனைத்தும் ஒரு முஸ்லீமுக்கு கட்டாய அவசியமாகும். இதனால் தான் முஸ்லீம்கள் ஏனைய மதங்களை பின்பற்றுபவர்களை விட அதிகமான பற்றும் பிடிப்பும் நம்பிக்கையையும் தங்கள் மதத்தின் மீது கொண்டிருக்கிறார்கள். இந்த நம்பிக்கைகள் அவர்களுக்குள் ஆழமாக வேரோடியிருப்பதால் தான் இஸ்லாம் கூறும் ஒரு செய்திக்கு மாறாக ஒன்றை எவ்வளவு ஆதாரங்களுடன் நிரூபணமாக விளக்கினாலும் ஏற்றுக்கொள்ள பிடிவாதமாக மறுக்கிறார்கள். காரணம் அவர்கள் மனதில் சரியாக இருக்குமோ என்று சிறிய ஐயம் வந்தாலும் செத்த பிறகு ஆண்டாண்டு காலத்திற்கும் எண்ணெய்க்கொப்பரையில் வறுபட வேண்டியதிருக்கும். மறுபரிசீலனை என்ற வார்த்தையே இஸ்லாத்தின் அகராதியில் கிடையாது.
ஆனால், எந்த நம்பிக்கைகள் அவர்களின் மதத்தின் மீது ஆழ்ந்த பிடிப்பை ஏற்படுத்துகிறதோ அந்த நம்பிக்கைகள் முரண்பாடுகளின் தொடக்கமாகவும் இருக்கின்றன என்பது அவர்களுக்கு விளங்குவதில்லை. காரணம் எந்த முஸ்லீமும் அந்த நம்பிக்கைகளை உரசிப்பார்த்ததில்லை. அந்த நம்பிக்கைகளை கேள்விக்கு உட்படுத்தியதில்லை. எல்லாவற்றையும் சிந்திப்பது இஸ்லாத்தில் கடமையாக்கப்பட்டுள்ளது என்பவர்கள் கூட தங்கள் சிந்தனையை உள்வசமாய் இஸ்லாத்தை நோக்கி திருப்புவதில்லை. திருப்பினால் அவன் முஸ்லீமல்ல என இஸ்லாமியர்களால் தீர்ப்பளிக்கப்படுவது மட்டுமல்ல, ஊர்விலக்கம், சமூகப்புறக்கணிப்பு, பொருளாதாரத் தனிமைப்படுத்துதல் என்பவை தொடங்கி கொலை மிரட்டல் வரை எதிர்கொள்ள நேரிடும். சிலர் கொலை செய்யப்பட்டதும் உண்டு. அமெரிக்காவின் ஆமினா வதூத், கனடாவின் இர்ஷாத் மஞ்சி, எகிப்தின் நவ்வல் சதாவி, லெபனானில் சாதிக் ஜலால் அல் அஸ்ம், மஹ்தி அமில், பாகிஸ்தானின் தாரிக் அலி, சோமாலியாவின் ஹிர்ஸ் அலி இவர்களெல்லாம் இஸ்லாம் பற்றிய தங்களின் மாற்றுக்கருத்துகளால் கடுந்துன்பங்களுக்கு ஆளானவர்களில் சிலர். இவர்கலெல்லாம் இஸ்லாத்தை விட்டு விலகியவர்கலல்ல. இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டே அதன் கொள்கைகளைப்பற்றிய தங்கள் ஐயங்களை வெளியிட்டவர்கள். தமிழகத்தில் தக்கலையில் கவிஞர் ரசூல் கடந்த சில ஆண்டுகளாக ஊர் விலக்கம் செய்யப்பட்டு சொந்தக்காரரின் மரணத்தில் கூட கலந்து கொள்ள இயலாமல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இவைகளெல்லாம் இஸ்லாமியர்கள் தங்கள் மதத்தை பரிசீலிப்பதில்லை என்பதோடு மட்டுமல்லாது அப்படி பரிசீலிப்பவர்களையும் ஏற்றுக்கொள்வதில்லை என்பதற்கான எடுத்துக்காட்டுகள். ஆனாலும் மாற்றுக்கருத்துகளை இஸ்லாமியர்கள் ஏற்றுக்கொள்வதில்லை என்பதாலேயே அவர்கள் சரியான இடத்தில் இருப்பதாகப் பொருளாகாது. சரியானதிலேயே தாங்கள் இருப்பதாக நம்பிக்கொண்டிருக்கும் முஸ்லீம்களை நோக்கி கேள்விகள் தொடரும்….
அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள்.
அல்லாவின் ஆற்றல்களாக ஆண்டவனின் சக்தியாக குரான் குறிப்பிடுபவற்றை எல்லாம் குரானிலிருந்து நீக்கிவிட்டால் குரான் பாதியாக குறைந்துவிடும். அந்த அளவுக்கு ஆண்டவனின் பெருமைகளை மிக விரிவாக விளக்குகிறது. அவற்றிலிருந்து சிலவற்றை தருகிறேன், சோர்வடையவேண்டாம்.
அவனைத்தவிர வேறு இறைவனில்லை, அவனுக்குத் தூக்கமில்லை, சோர்வில்லை, மரணமில்லை, அவன் உண்பதில்லை, மறப்பதில்லை, யாரும், எதுவும் அல்லாவுக்கு நிகரில்லை, அவனுக்கு உதவியாளன் யாரும் தேவையில்லை, வீண் விளையாட்டுகளில் ஈடுபடுவதில்லை, பெற்றோர், பிள்ளைகள், உறவினர்கள் இல்லை, எங்கும் இருப்பவன், இறைவன் அமர்ந்திருக்கும் இருக்கை வானம் பூமியைவிட பெரியது, மன்னிப்பவன், கருணையுள்ளவன், யாவரையும் மிகைத்தவன், அனைவரும் அனைத்தும் அடிமை அவன் ஒருவனே ஆண்டை, அவனே அறிவை வழங்குகிறான், அவனே அறிவீனத்தையும் வழங்குகிறான், குழந்தையை தருவதும் அதை இல்லாததாக்குவதும் அவனே, செல்வத்தை வழங்குவதும், ஏழ்மையை தருவதும் அவனே, நோயும் அதன் நிவாரணமும் அவன் புறத்திலிருந்தே, அவன் எதையும் படைக்க நாடி ஆகுக என்றால் உடனே அது ஆகிவிடுகிறது, அவன் ஒருவனே படைத்தவன் ஏனைய அனைத்தும் படைக்கப்பட்டவை. இன்னும் ஏராளம் ஏராளம். இப்படி அனைத்து சக்திகளையும் ஒருங்கே வைத்திருப்பதால் தான் பூமியில் மனிதரை படைப்பதற்காக மொத்த பிரபஞ்சத்தையும் படைத்து அதில் வசதிகளுடன் பூமியை அமைத்து மனிதனை வாழச்செய்ய முடிந்திருக்கிறது. இப்படி ஆண்டவன் அனைத்தையும் படைத்து பரிபாலிப்பதன் நோக்கம் என்ன? மனிதர்கள் அவனை வணங்கவேண்டும் என்பதே. ஆக முழு பிரபஞ்சமும் அதிலுள்ள அனைத்தும் மனிதனுக்காக, மனிதன் தன்னை படைத்தவனை வணங்குவதற்க்காக.
குரானில் அனேக இடங்களில் தன் சக்தியையும் பெருமைகளையும் கூறிவிட்டு அவர்கள் (அதாவது மனிதர்கள்) சிந்திக்க வேண்டாமா? எனக் கேள்வி எழுப்புகிறது. இந்த இடத்தில் நாமும் ஒரு கேள்வியை எழுப்புவோம். மனிதர்களை சிந்திக்கச்சொல்லும் குரான் அதாவது அல்லா, மனிதனுக்கு சுயமான சிந்தனை இருப்பதாக ஏற்கிறதா?
அல்லாவிடத்தினில் ஒரு ஏடு இருக்கிறது, அதில் குறிப்பிடப்படாத விசயமே இல்லை. நடந்த, நடக்கின்ற, இனி நடக்கவிருக்கும் அத்தனையும் அதில் இடம்பெற்றிருக்கும். அந்த ஏட்டில் இருக்கும்படியே உலகமும், பிரபஞ்சமும் இயங்கிவருகிறது. முதல் மனிதனிலிருந்து இன்னும் எத்தனை கோடி ஆண்டுகள் மனிதகுலம் வாழ்ந்தாலும் பிறக்கும் மனிதர்கள் அனைவரும் அந்த ஏட்டில் இருப்பதன் படியே நடந்து கொள்கின்றனர். அதில் எந்த மாற்றமும் இல்லை. இன்னும் விளக்கமாக சொல்வதென்றால், எடுத்துக்காட்டாக இருவர் சந்தித்துக்கொள்வதாக கொள்வோம். அவர்கள் இருவரும் புன்னகையுடன் கைகுலுக்கிக்கொள்ளலாம் அல்லது கோபத்தில் ஒருவரை ஒருவர் அறைந்து கொள்ளலாம். இந்த இரண்டு செயல்களில் எது நடந்தாலும் அது அல்லாவிடம் இருக்கும் அந்த ஏட்டில் உள்ளபடிதான் நடக்கும். அல்லா அறைந்து கொள்வார்கள் என எழுதிவைத்திருந்தால் ஒருக்காலும் அவர்களால் கைகுலுக்கிக்கொள்ளமுடியாது. இப்படி இருக்கும் நிலையில் எதை மனிதன் சிந்தித்து செய்வது? அதாவது ஒரு மனிதன் சிந்தித்து செயல் படுகிறான் என்றால் அந்த ஏட்டில் இருக்கும்படியே செயல் படுகிறான் என்பதை மறுக்கவேண்டும், அல்லது ஏட்டில் இருக்கும் படியே எல்லாம் நடக்கிறது என்றால் மனிதன் சிந்தித்து செயல்படுகிறான் என்பதை மறுக்கவேண்டும். ஏனென்றால் இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரிடையானவை. சிந்தனை என்பது அந்தக்கணத்தில் நிகழ்வது அது ஏற்கனவே எழுதி வைத்ததோடு இணங்கிச்செல்வது என்பது எப்போதும் நடைபெற முடியாது. எனவே முஸ்லீம்களே (இதையே தலைவிதியாக பார்ப்பனீய மதமும், தேவனின் தீர்க்கதரிசனமாக கிருஸ்துவ மதமும் இன்னும் ஏதேதோ வகைகளில் அனைத்து மதங்களும் சொல்கின்றன எனவே ஏனைய மத நம்பிக்கையுள்ளவர்களையும் கூட) உங்களிடம் பகுத்து உணரும் அறிவு இருப்பதாக, சிந்திக்கும் திறனிருப்பதாக, வளர்ச்சியடையும் மூளை வாய்க்கப்பட்ட பிறப்பாக நீங்கள் இருப்பதாக ஏற்கிறீர்களா? ஆம் என்றால் எழுதிவைக்கப்பட்ட அந்த ஏட்டில் இருக்கும் படியே அனைத்தும் நடைபெறும் என்பதற்கான உங்கள் விளக்கம் என்ன?
முக்கியமான கேள்விக்கு திரும்புவோம். மனிதர்களை நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா? என்று குரானில் அல்லா கேள்வி எழுப்புகிறான் என்றால் அதன் பொருள் மனிதனுக்கு சிந்திக்கும் திறனை அல்லா வழங்கியிருக்கிறான் என்பது தான். அதாவது தனக்கிருக்கும் மொத்த ஆற்றலிலிருந்து மனிதனுக்கு சுயமான சிந்தனையை வழங்கியிருப்பதாக கூறும் அல்லா, தன்னிடமிருக்கும் ஏட்டில் உள்ளபடியே எல்லாம் நடக்கும் என முரண்படுவதேன்? ஆனால் மனிதர்களுக்கு (அவர்கள் எந்த மதத்தவர்களாக இருந்தாலும்) சிந்திக்கும் திறன் இருப்பதை நாம் சந்தேகிக்க முடியாது ஏனென்றால் நேரடியாக நாம் அதை பார்க்கிறோம் உணர்கிறோம். என்றால் அந்த ஏட்டில் இருப்பதை மீறி எதுவும் நடக்கமுடியாது என்பது சாத்தியமில்லையல்லவா? எனவே பதிவுசெய்யப்பட்ட அந்த ஏட்டில் உடைப்பு இருப்பது உறுதியாகிறது, அதுவும் முதல் மனிதனை அல்லா உண்டாக்கியது முதலே. இது ஆண்டவனின் முழுமையான ஆற்றலின் முதல் இடர்பாடு. அடுத்ததொரு இடர்பாடும் இருக்கிறது, அது என்ன?
அல்லாவைத்தவிர ஏனைய அனைத்தும் படைக்கப்பட்டவை என குரானில் அனேக இடங்களில் அல்லா குறிப்பிடுகிறான். அப்படி என்றால் எதுவும் படைக்கப்படாத காலம் என்று ஒன்று இருந்திருக்கும் அல்லவா. அந்த காலத்தில் அதாவது அல்லாவைத்தவிர வேறு எதுவுமே இல்லாத காலத்தில் அல்லா இருந்தது எங்கு? தற்போது அர்ஷ் என்னும் சிம்மாசனத்தில் ஆண்டவன் இருக்கிறான், ஆனால் இந்த பிரபஞ்சத்தை படைப்பதற்கு முன் என்கிருந்து படைத்தான் என்பதே நம் கேள்வி. ஒரு பொருளைப் படைப்பதற்கான முக்கியமான நிபந்தனையே படைப்பவன் படைக்கப்படும் பொருளுக்கு வெளியில் இருந்தாக வேண்டும் என்பது. இங்கு அல்லாவின் படைப்புத்திறனில் கேள்விகள் எழுப்பப்படவில்லை, வாதத்திற்காக பிரபஞ்சத்தை படைக்கும் திறன் அல்லாவுக்கு இருந்ததாகவே கொள்வோம். கேள்வியெல்லாம் எங்கிருந்து படைத்தான் என்பது தான். இங்கு அல்லா இருக்கும் இடத்தின் முழுமையான முகவரியை தாருங்கள் எனக்கேட்கவில்லை என்பதை புரிந்து கொள்ளவேண்டும். அர்ஷ் எங்கே இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது, ஆனால் பிரபஞ்சத்தில் ஏதோ ஒரு இடத்தில் இருப்பதாக ஒரு கருதல். அதேபோல் பிரபஞ்சத்தை படைக்குமுன் எங்கு இருந்திருக்க முடியும் என்பதுதான் கேள்வியின் மையம். மாறாக நம்பர் 24 படைத்தோன் வீதி, நியூரோபிக்டஸ், ஆண்ரோமீடா. என முகவரி கேட்பதாக நினைத்துக்கொள்ளவேண்டாம். அல்லா மட்டும் தான் சுயம்பு, அல்லா இருக்கும் இடமும் சுயம்புவல்லவே. அல்லா எப்போதும் இருக்கிறான் என்றால் அவனிருக்கும் இடமும் என்றுதான் கொள்ள முடியும். இடமில்லாத பொருள் இருக்கமுடியாது. ஆக தன்னைத்தவிர ஏனைய அனைத்தும் படைக்கப்பட்டவை எனும் அல்லாவின் கூற்றில் உடைப்பு இருப்பது தவிர்க்க முடியாததாகிறது. அல்லாவின் ஆற்றலிலுள்ள முக்கியமான இடர்பாடாகும் இது.
இந்த இரண்டு இடர்பாடுகளும் இல்லாமல் அல்லாவின் ஆற்றல் செயல்படமுடியாது. அல்லாவின் ஐயத்திற்கிடமற்ற ஆற்றலில் நம்பிக்கை கொண்டவர்களே, உங்களின் நம்பிக்கைக்குள்ளிருந்து இவைகளுக்கொரு பதில் கூறுமாறு உங்களை அழைக்கிறேன். தொடர்ந்து நாம் இந்த கற்பனைக்கோட்டையை சுற்றிவருவோம்.
குரானின் சவாலுக்கு பதில்
“நான் கொண்டுவந்த அற்புதம் இந்த குரான் தான்” உங்களால் ஏன் எந்த அற்புதத்தையும் செய்து காட்ட முடியவில்லை என்று கேட்கப்பட்ட கேள்விக்கு முகம்மது அளித்த பதில்தான் இது. ஏசு தொழு நோயாளிகளை சீராக்கியிருக்கிறார், மோஸஸ் யூதர்களை செங்கடலை பிளந்து அழைத்துச் சென்றிருக்கிறார், அதற்கு ஈடாக முகம்மதுவின் அற்புதம் குரான். அது எப்படி அறிவுரைகளையும் வழிகாட்டுதலையும் கொண்டிருக்கும் வேதமாக நம்பப்படும் ஒரு நூல் எப்படி அற்புதமாக முடியும்? அற்புதம் தான். ஏனென்றால் இதில் யாரும் எப்பொழுதும் ஒரு முரண்பாட்டையேனும் கண்டுபிடிக்க முடியாது என்பது தான் முஸ்லீம்களின் நிலைப்பாடு. மிகைக்க முடியாத சக்தியாகிய அல்லா இதைப்பற்றி குரானில் இப்படி கூறியிருக்கிறான்,
“அவர்கள் இந்தக் குர் ஆனை சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் அதில் ஏராளமான முரண்பாடுகளை கண்டிருப்பார்கள்” 4:82.
“இதன் முன்னும் பின்னும் இதில் தவறு வராது. புகழுக்குறிய ஞானமிக்கோனிடமிருந்து அருளப்பட்டது” 41:42. தன்னால் முகம்மதுக்கு வழங்கப்பட்டது தான் குரான், தன்னையன்றி வேறு யாராலும் குரானை வழங்கியிருக்க முடியாது அதில் முரண்பாடோ, தவறுகளோ இல்லாதிருப்பதே அதற்கு சாட்சி என்பது தான் அல்லாவின் கூற்று. இஸ்லாத்தின் மொத்த நம்பிக்கைகளின் இருத்தலுக்கு குரான் மீதான அசைக்கமுடியாத நம்பிக்கை மிக இன்றியமையாதது. குரானின் மீது கொஞ்சம் ஐயம் வந்துவிட்டாலும் அது இஸ்லாத்தையே இற்றுப்போகச்செய்துவிடும் அதனால் தான் குரான் தன்னால் வழங்கப்பட்டது தான் என்பதை உறுதிப்படுத்துவது அல்லாவுக்கு அவ்வளவு முக்கியமானதாக இருக்கிறது. இதில் முரண்பாடு இல்லை என அறிவிப்பதோடு மட்டுமல்ல மனிதர்களுக்கு எதிராக ஒரு சவாலும் விடுகிறது. இதைப்போல் ஒரு அத்தியாயத்தையேனும் உங்களால் கொண்டுவர முடியுமா? என்பதுதான் அது. ஆனால் இதைப்போல் என்பதற்கு எந்த வரையரையும் அல்லா கூறவில்லை. குரானின் உள்ளடக்கத்தைபோலா? அது கூறும் பொருள் போலவா? அதன் ஓசை நயம் போலவா? அதன் வடிவமைப்பைப் போலவா? அல்லது இவை அனைத்தையும் போலவா? ஒரே ஒரு வசனத்தை மட்டுமே கொண்ட அத்தியாயமும் இருப்பதால் ஒரு வசனமாவது என்றும் எடுத்துக்கொள்ளலாம். இப்படி ஒரு அத்தியாயத்தையோ வசனத்தையோ கொண்டுவர முடியுமா என்று சவால்விடும் அல்லாதான், அப்படி யாரும் கொண்டுவந்துவிடக்கூடாது என்பதற்காக பயங்காட்டி எச்சரிக்கவும் செய்கிறான்.
“நம்முடைய வசனங்களை வெல்ல முயற்சிப்போரே நரகவாசிகள்” 22:51
ஆக குரான் நான் அனுப்பியது தான் என்று நிரூபிப்பதற்கு ஆண்டவன் நேரடியாக மனிதர்களிடம் முன்வைக்கும் சான்றுகள் இவை இரண்டுதான் (மறைமுகமாக நிறைய இருப்பதாக இஸ்லாமிய மதவாதிகள் கூறுகிறார்கள் அவைகளை பின்னர் காண்போம்). இதில் முரண்பாட்டை காண முடியுமா? என்பதும் இதுபோல் ஒன்றை கொண்டுவர முடியுமா? என்பதும். மெய்யாகவே குரான் இந்த இரண்டுக்கும் அப்பாற்பட்டுதான் இருக்கிறதா?
சாதாரணமாக, வேத வசனங்களுக்கு பொருள் கூறுவோர், முரண்பாடோ, பிழையோ அமைந்துவிடாவண்ணமே மொழிபெயர்ப்பர். அடைப்புக்குறிக்குள் விளக்கங்கள் எழுதிவைத்து அது சுலபமாக புரிந்து கொள்வதற்கான ஏற்பாடு என்று சொல்லிக்கொள்வர். ஆனால், குறிப்பிட்ட ஒரு வசனத்தை வாசிக்கும் ஒருவர் எப்படி அந்த வசனத்தை புரிந்து கொள்ளவேண்டுமோ அதற்கேற்ற வகையில் தான் அடைப்புக்குறிக்குள் இருக்கும் விளக்கங்கள் வழிகாட்டும். அதாவது குறிப்பிட்ட ஒரு வசனம் எப்படி புரிந்து கொண்டால் முரண்பாடோ, பிழையோ இல்லாதவண்ணம் தோற்றமளிக்குமோ அப்படி புரிந்துகொள்வதற்கு உதவியாகத்தான் அந்த அடைப்புக்குறிக்குள் இருக்கும் விளக்கங்கள் இருக்கும். எடுத்துக்காட்டாக, கொலை செய்துவிட்டால் அதற்க்கு பகரமாக பழிவங்குவது குறித்த ஒரு வசனம் 2:178 இப்படி இருக்கிறது,
“நம்பிக்கை கொண்டோரே! சுதந்திரமானவனுக்காக சுதந்திரமானவன் அடிமைக்காக அடிமை……”
இந்த வசனத்தை மொழிபெயர்ப்புகளில் பார்த்தால் அடைப்புக்குறியோடு சேர்த்து இப்படி இருக்கும், “நம்பிக்கை கொண்டோரே! சுதந்திரமானவனுக்காக (கொலை செய்த) சுதந்திரமானவன் அடிமைக்காக (கொலை செய்த) அடிமை……”
அடைப்புகுறி இல்லாதபோது உள்ள வசனத்தின் பொருளும், அடைப்புக்குறியோடு உள்ள வசனத்தின் பொருளும் எப்படி ஒன்றுக்கொன்று முரண்பட்டு நிற்கின்றன என்று பாருங்கள். குரானிலுள்ள பெரும்பாலான வசனங்களின் பொருள் இப்படி அடைப்புக்குறிக்குள் அடைபட்டுக்கிடப்பதுதான். எடுத்துக்காட்டை விட்டு குரானின் முரண்பாட்டை காட்ட முடியுமா எனும் நேரடியான வாதத்துக்கு வருவோம்.
குரான் 2:29 “அவனே பூமியிலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான். பின்னர் வானத்தை (படைக்க) நாடி அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்கு படுத்தினான். அவன் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்”
இந்த வசனத்திலிருந்து நாம் தெரிந்துகொள்வதென்ன? அல்லா முதலில் பூமியை படைத்து அதன்பின்னர் பூமியிலுள்ள அனைத்தையும் படைத்து அதற்கும்பின்னர் வானத்தை படைத்தான். இதே பொருளில் அதாவது முதலில் பூமி பின்னர் வானம் எனும் பொருளில் இதைவிட இன்னும் தெளிவாக குரான் அத்தியாயம் 41 வசனங்கள் 9லிருந்து 12வரை கூறப்பட்டிருக்கிறது. ஆனால் இதற்கு நேர் மாறாக முதலில் வானம் பின்னர் பூமி என்னும் பொருளில் குரான் அத்தியாயம் 79 வசனங்கள் 27 லிருந்து 31 வரை சொல்லப்பட்டிருக்கிறது,
“படைக்கப்படுவதில் நீங்கள் கடினமானவர்களா அல்லது வானமா? அதை அவன் நிருவினான். அதன் முகட்டை உயர்த்தி சீராக்கினான். அதன் இரவை மூடி பகலை வெளிப்படுத்தினான். இதன் பின்னர் பூமியை விரித்தான். அதிலிருந்து அதற்கான தண்ணீரையும் மேய்ச்சல் பயிர்களையும் வெளிப்படுத்தினான்”
முதலில் உள்ள வசனங்களில் பூமி முதலில் வானம் பின்னர் என்று கூறியதற்கும் பின்னர் உள்ள வசனங்களில் வானம் முதலில் பூமி பின்னர் என்று கூறுவதற்கும் இடையில் இருப்பது முரண்பாடில்லையா? எது முதலில் படைக்கப்பட்டது(!) பூமியா? வானமா? முகம்மதுவின் காலத்திய அரபிகள் இலக்கிய நயத்துடன் கவிதை புனைவதில் வல்லவர்கள். அவர்களின் கவிதைக்கு பதில் சொல்லும் முகமாக சில வசனங்களும் குரானில் இடம் பெற்றுள்ளன. அல்லாவின் வார்த்தைகள் வானவர்கள் (அல்லாவின் சிறப்பு பணியாளர்கள்) மூலம் முகம்மதுவுக்கு இறங்குகின்றன என பரவிய செய்தியை கேட்டு ‘எழுத்தறிவற்ற முகம்மதுவின் மூலமா அல்லா தன் வசனங்களை இறக்குகிறான், அவர் பொய் சொல்கிறார். தானே சொல்லிக்கொண்டு அல்லாவிடமிருந்து என்று கதையளக்கிறார்’ என்று கூறினார்கள். அவர்களைப் பார்த்து தான் குரான் கேட்கிறது ‘நாம் அனுப்பாமல் முகம்மது தானே இட்டுக்கட்டிக்கொண்டார் என்பதில் நீங்கள் உறுதியுடனிருந்தால் இதேபோல் ஒன்றை உருவாக்கிக்காட்டுங்கள்’ என்று (2:23; 10:38; 17:88; 28:49; 52:34; 11:13). புனை செய்யுளில் கரை கண்டிருந்த அன்றைய குரைஷி குல அரபிகள் இதை எதிர்கொள்ளாமல் விட்டுவிட்டார்கள் என்பது ஐயத்திற்கிடமானதாகவே இருக்கிறது. குரானுக்கு பகரமாக யாரேனும் கவிதை புனைந்தார்களா? இதை எதிர்கொண்டவிதம் குறித்து பதிவு செய்தார்களா? என்பது குறித்த தகவல் எதுவும் அறியக்கிடைக்கவில்லை. (இது குறித்த தகவல் யரிடமாவது இருந்தால் பகிர்ந்து கொள்ளலாம்) ஆனால் இன்றுவரை (கடந்த பதினான்கு நூற்றாண்டுகளாக) எதிர்கொள்ளப்படாத சவால் இது என்று மதவாதிகள் முழங்கிவருகிறார்கள்.
நோய்நாடி நோய் முதல்நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்.
இது குறள். சற்றேறக்குறைய குரானுக்கு ஆறு நூற்றாண்டுகள் முந்தியது. இந்தக்குறளை குரானின் ஒரு வசனத்திற்கு மாற்றாக கூறினால், குரானின் மூலத்தில் அணுக்கமான நம்பிக்கை கொண்டவர்களே இதை எப்படி மறுப்பீர்கள்? எந்த விதத்தில் மறுப்பீர்கள்? இலக்கிய நயத்துடன் கட்டமைப்பும் கொண்ட மாற்று இது. மருத்துவம் குறித்த வழிகாட்டுதல், நோய் பற்றிய முன்னறிவிப்பு, மக்கள் நலம் என அனைத்தும் கொண்ட ஒரு வசனமாக கூறினால் யாரை நடுவராக கொண்டு இதை தள்ளமுடியும்?
கடவுள் என்ற ஒன்று, குரான் கூறும் தகுதிகளோடு இருக்கமுடியும் என்பதை அறிவியல் மறுக்கிறது. நம்பிக்கையாக மட்டுமே இருக்க முடிந்த கருத்து. கருத்து என்பதற்கும் இயங்கியலில் வரையரைகள் உண்டு. அனால் அது மெய்யாக இருப்பதாக, பிரபஞ்சத்தை ஆக்கி ஆள்வதாக எல்லாவற்றையும் விட அதிகமான ஏற்பை வழங்கி, அதன்படி முடிந்தவரை ஒழுகிக்கொண்டிருக்கும் நம்பிக்கையாளர்களே மேலே கூறப்பட்ட முரண்பாட்டுக்கும், மாற்று வசனத்திற்கும் அறிவு நேர்மையுடன் பதிலை சிந்திப்பீர். இதில் முரண்பாடு இல்லை என்பது அனைத்தும் அறிந்த அல்லாவின் கூற்றுதான் என்றால் இந்த முரண்பாடு எப்படி வந்தது? அல்லது இதை ஏற்றுக்கொண்டால் அல்லாதான் குரானை இறக்கினான் என்பது எப்படி சரியாகும்? மேலே கூறப்பட்ட குறள் குரானின் வசனத்திற்கு மாற்றாக முடியாது என உங்களால் விளக்க முடியாமல் போனால் குரானைப்போல மனிதர்களால் உருவாக்க முடியும் என்றாகும். அப்படியானால் அல்லா இதைப்போல் ஒன்றை உருவாக்க முடியுமா என்று சவால் விடுவது ஏன்? எப்படி? நீங்கள் விளங்கவேண்டும் அல்லது விளக்கவேண்டும். உங்களுக்குள் இதற்கு நீங்கள் பதில் தேடியாக வேண்டும். பதிலையும் தேடமாட்டேன் அதே நேரம் இவைகளை ஏற்றுக்கொள்ளவும் மாட்டேன் என்று நீங்கள் கூறத்துணிந்தால் உங்களிடம் இருப்பது மூட நம்பிக்கை என்றாகும் அல்லது அசைக்கமுடியாத உங்கள் நம்பிக்கை அசையத்தொடங்கியிருக்கிறது என்றாகும். இரண்டில் எது சரி?
மெய்யாகவே குரான் பாதுகாக்கப்பட்டது தானா?
டாப்கபி அருங்காட்சியகத்தில் உள்ள குரான்
இதில் முரண்பாட்டை காணமுடியுமா? இதைப்போல் ஒன்றை உருவாக்கிக்காட்டமுடியுமா? எனும் இரண்டு கேள்விகளை அடுத்து, குரான் இறைவனால் இறக்கப்பட்டதுதான் என்பதற்கு எடுத்துவைக்கப்படும் இன்றியமையாத இன்னொன்று அன்றிலிருந்து இன்றுவரை அதாவது ஆயிரத்து நானூறு ஆண்டுகளாக எந்த மாற்றத்திற்கும் உள்ளாகாத ஒரே வேதம் இது தான் என்பது. அதற்கு சான்றாக இரண்டு குரான் படிகள் இன்றும் அருங்காட்சியகங்களில் பாதுகாக்கப்பட்டுவருகின்றன. ரஷ்யாவின் தாஷ்கண்ட் நகரின் அருங்காட்சியகத்தில் ஒரு படியும், துருக்கியின் இஸ்தான்புல் நகரின் டாப்கபி அருங்காட்சியகத்தில் ஒருபடியும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதைப்பற்றி இன்னும் விரிவாக அறிந்துகொள்ள குரான் எப்படி தொகுக்கப்பட்டது என்பதை தெரிந்துகொள்வது தேவையானதாகும்.
சற்றேறக்குறைய கிபி 610 ல் முகம்மதுவின் 40ஆவது வயதில் தொடங்கி 633ல் அவர் இறக்கும் வரை 23 ஆண்டுகளில் ‘வஹி’யாக வெளிப்பட்டதுதான் குரான். ஆண்டவனின் சிறப்பு பணியாளரான ஜிப்ரீல் என்பவர் முகம்மதுவுக்கு கற்றுக்கொடுக்கொடுக்கும் நிகழ்வு தான் ‘வஹி’ என்பது. அந்தந்த காலகட்ட பிரச்சனைகள் தேவைகளுக்கு ஏற்ப சிலச்சில வசனங்களாக அவ்வப்போது இறங்கியது(!) முகம்மது தனித்திருக்கும்போதும், மக்களுடனிருக்கும் போதும் வசனங்கள் இறங்கியிருக்கின்றன. ஆனால் ‘வானவரை’ பார்த்தவர்களோ அல்லது அவர் வந்து சென்றதுக்கான தடையமோ கிடையாது. இதன் காரணமாக ஆண்டவனே நேரடியாக முகம்மதின் மனதில் சில வசனங்களை போட்டதாகவும் கூறுவர். இப்படி முகம்மதுவுக்கு வெளிப்படும் குரான் வசனங்களை மனனம் செய்து தன் தோழர்களிடம் கூறுவார், அவர்கள் அதை தோல்களிலும் மரப்பட்டைகளிலும் எழுதிவைத்துக்கொள்வர். குரானை எழுதிவைத்துக்கொள்வதற்காக ஒரு குழுவையும் முகம்மது நியமித்திருந்தார். அவர்களில் முகம்மதுவுக்குப்பின் ஆட்சிப்பொறுப்பேற்ற அபூபக்கர், உமர், உஸ்மான், அலி, முஆவியா ஆகியோர் குறிப்பிடத்தகுந்தோர். இப்படி தொகுக்கப்பட்ட குரான் இன்றைய குரானிலிருந்து வேறுபட்டது, இன்றுள்ளதைப்போல் வரிசைப்படுத்தப்படாமல் வசனங்களின் மொத்தமான தொகுப்பாக இருந்தது. யாருக்கு எந்தப்பகுதி வேண்டுமோ அதை எடுத்து படித்துக்கொள்ளலாம். முஸ்லீம்களின் வணக்கமுறையான ஐவேளை தொழுகையின் போதும் குரானின் பகுதிகள் ஓதப்படும் இது முஸ்லீம்கள் குரானை மறந்துவிடாமலிருக்க முகம்மது செய்த ஏற்பாடு.
முகம்மதின் மரணத்திற்குப்பின் அவரவர்கள் மனப்பாடம் செய்துவைத்திருந்ததற்கு ஏற்றார்ப்போல் இது தான் மெய்யான குரான் என்று பலவடிவங்களில் குரான் உலவத்தொடங்கியது. இதனால் ஆட்சிப்பொறுப்பேற்றிருந்த அபூபக்கர் தனக்கு அடுத்த நிலையிலிருந்த உமரின் ஆலோசனையுடன் குரானை தொகுக்கும் ஏற்பாடு தொடங்கப்பட்டது. ஸைத் பின் ஸாபித் என்பவர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு முகம்மது தொகுத்திருந்த குரான் , மனப்பாடாம் செய்து வைத்திருந்தவர்களின் உதவியுடன் ஒரு குரான் தயாரிக்கப்பட்டு அதுவே அதிகாரபூர்வமானதாக அறிவிக்கப்பட்டது. ஐயம் ஏற்படும் வேளைகளில் இந்த குரானின் அடிப்படையிலேயே தீர்வுகள் பெறப்பட்டன. இந்த குரான் அபூபக்கருக்கு பிறகு வந்த உமரின் ஆட்சியிலும் அதிகாரபூர்வமானதாக இருந்தது. உமருக்குப்பின் அவரின் மகளும் முகம்மதின் மனைவியுமான ஹப்ஸா என்பவரிடத்திலும் இருந்தது. உமருக்குப்பின் ஆட்சிக்கு வந்த உஸ்மான் மீண்டும் ஒரு குரானை தொகுக்க முற்படுகிறார். உஸ்மான் தானே தொகுக்கும் பணியில் ஈடுபட்டு வசனங்களை அத்தியாயமாக ஒழுங்குபடுத்தி இன்றிருக்கும் வரிசைப்படி ஒரு குரான் தயாரிக்கப்பட்டு, அது பல படிகள் எடுக்கப்பட்டு விரிவடைந்திருந்த பல ஆட்சிப்பகுதிகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது. அப்படி அனுப்பிவைக்கப்பட்ட குரான் படிகளில் இரண்டு தான் ரஷ்யாவிலும் துருக்கியிலும் இருக்கிறது, அதாவது முகம்மதின் மரணத்திற்குப்பின் கால் நூற்றண்டு கழிந்து. இதில் இன்னொரு செய்தி என்னவென்றால் உஸ்மான் தனது ஆட்சியில் தயாரிக்கப்பட்ட குரானைத்தவிர ஏனைய அனைத்து குரானையும் எரித்துவிடுமாறு உத்தரவிடுகிறார். அதன் படி அனைத்தும் எரிக்கப்படுகின்றன, முகம்மது தயாரித்திருந்தது, அபூபக்கர் காலத்தில் தயாரிக்கப்பட்டு ஹப்ஸாவிடம் இருந்தது என அனைத்தும் எரிக்கப்படுகின்றன. ஏனைய குரான்களை அழிப்பதற்கு உடன்பட மறுத்து சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பின்னர் அவர்களும் வற்புறுத்தப்பட்டு அனைத்தும் அழிக்கப்படுகிறது. இன்று நடைமுறையில் இருக்கும் அனைத்து குரானும் உஸ்மான் காலத்தில் தயாரிக்கப்பட்டதின் அடிப்படையிலேயே அச்சிடப்படுகின்றன.
இந்த இடத்தில் அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு கேள்விகள் எழுகின்றன. முதல் கேள்வி, உலகம் உள்ளவரை தோன்றும் அனைத்து மனிதர்களுக்கும் அழகிய முன்மாதிரி முகம்மது தான் என்பதில் எந்த முஸ்லீமுக்கும் ஐயம் எழும் வாய்ப்பே இல்லை. அவர் அடக்கம் செய்யப்பட்ட இடம் இன்று மிகப்பெரிய மசூதிகளில் ஒன்றாக பாதுகாக்கப்படுகிறது. அவர் பயன்படுத்திய பொருட்கள் செருப்பு, வாள் வைத்திருந்த தோலுறை கூட பத்திரப்படுத்தப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் முகம்மது எதன் அடிப்படையில் சமூகத்தை திரட்டினாரோ, உலகம் உள்ளவரை எந்த இறைவனுக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்று கூறினாரோ அந்த இறைவனால் முகம்மதுவுக்கு வழங்கப்பட்டு அவரின் மேற்பார்வையில் தொகுக்கப்பட்ட குரான் இன்று இல்லை அழிக்கப்பட்டுவிட்டது. இது ஏன்?
இதற்கு பதில் கூறுமுகமாக, முகம்மது தொகுத்ததற்கும் இப்போது இருப்பதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அது முறையாக தொகுக்கப்படாமல் தனித்தனி வசனத்தொகுதிகளாக இருந்தது. அதன் அடைப்படையில்தான் இது தொகுக்கப்பட்டிருக்கிறது எனவே வித்தியாசமில்லை, முகம்மது இருக்கும் போது மனனம் செய்திருந்தவர்கள் தான் தொகுத்தார்கள், எந்த எதிர்ப்பும் எழவில்லை என்றெல்லாம் காரணங்களாக அடுக்குகிறார்கள். ஆனால் முக்கியமான விசயம் என்னவென்றால் ஐயம் என்று வந்துவிட்டால் ஒப்பிட்டு பார்ப்பதற்கு முகம்மது தொகுத்த குரான் இன்று இல்லை, உஸ்மான் காலத்தில் தொகுத்தது தான் இருக்கிறது. வரிசை மாறியிருக்கும் என்பது தானே அதை அழித்ததற்கு கூறும் காரணம், வரிசை மாறினால் என்ன வசனம் அதே வசனம் தானே அழிக்கும் தேவை ஏன் எழுந்தது? வரிசையை வசன எண்களை ஒப்பிட்டு பார்க்கவேண்டிய அவசியமில்லை எப்படியும் இருக்கலாம். இன்று இருக்கும் குரான்களில் கூட வசன எண்களில் வித்தியாசம் இருக்கிறது. ஆனால் வசனத்தை ஒப்பிடுவதற்கு திடனான ஆதாரம் ஒன்றுமில்லை. உஸ்மானுக்கு பிறகு குரானில் மாற்றமில்லை என்றால் அதற்கு ஆதாரம் இருக்கிறது. ஆனால் முகம்மதின் மரணத்திற்குப்பிறகான 15 ஆண்டுகளில் குரான் மாறவில்லை என்பதற்கு அப்போது இருந்தவர்கள் நேர்மையானவர்கள் இறை பக்தியுள்ளவர்கள் எனவே தவறு செய்திருக்க மாட்டார்கள் என்று ‘நம்பு’வதை தவிர வேறு ஆதாரம் இருக்கிறதா? முஸ்லீம்கள் நேர்மையாக சிந்தித்துப்பார்க்கும் நேரமிது.
முதன் முதலில் முகம்மதுவுக்கு வஹீ வந்த ஹீரா குகை
இரண்டாவது கேள்வி, அபூபக்கர் காலத்தில் தொகுக்கப்பட்ட குரான் அவரின் ஆட்சிக்காலத்திற்கு பிறகு உமரிடம் வருகிறது. உமரின் ஆட்சிக்காலத்திற்குப்பின் அது உஸ்மானின் பொறுப்பில் வந்திருக்கவேண்டும். ஏனென்றால் அது வெறும் நூலல்ல, வாழ்வின் அனைத்து துறைகளுக்கும் வழிகாட்டக்கூடிய ஆவணம். உமருக்குப்பின் அந்த ஆவணம் உஸ்மானின் பொறுப்பில் வராமல் உமரின் மகளான ஹப்ஸாவின் பொறுப்பில் போகிறது. இது ஏன்? இதனால் தான் உஸ்மானால் குரான் மீண்டும் தொகுக்கப்பட்டதா? இதன் காரணமாகத்தான் உஸ்மான் தான் தொகுத்ததை தவிர மற்றவற்றை எரித்து விட உத்தரவிட்டாரா?
இந்த இரண்டு கேள்விகளுக்கும் நேர்மையான பதில் கிடைக்காதவரை குரான் பாதுகாக்கப்பட்டது என்பது நம்பிக்கையாகத்தான் இருக்கமுடியும்.
குரானின் பாதுகாப்பில் விழுந்த கேள்விக்குறிகள்.
முகம்மது முன்னின்று தொகுத்த குரான் இன்று இல்லை, அழிக்கப்பட்டுவிட்டது என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் நண்பர்கள், அதன்படியே தான் குரான் தொகுக்கப்பட்டிருக்கிறது என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். குரானை மனப்பாடமாக தெரிந்திருந்தவர்களின் மனதில் குரான் பாதுகாக்கப்பட்டது தான் முதன்மையானது. எழுத்து வடிவில் பாதுகாப்பது என்பது இரண்டாம் பட்சம்தான். எனவே குரானின் பாதுகாப்பில் பிரச்சனை ஒன்றுமில்லை என நிலைப்படுகிறார்கள். ஆனால் முகம்மது அப்படி நினைத்திருக்க முடியாது. அப்படி நினைத்திருந்தால் எழுத்துவடிவில் அன்றிருந்த வசதிகளின் படி மரப்பட்டைகளிலும், தோல்களிலும் எழுதி பாதுகாத்துவைக்குமாறு ஒரு குழுவை நியமித்து பணித்திருக்கத்தேவையில்லை, ஏனென்றால் அல்லாவே குரானை பாதுகாப்பது தன்னுடைய பொறுப்பு என்று அந்த குரானிலேயே அறிவித்துக்கொண்டுள்ளான். அப்படி இருக்கும்போது தொழுகையின்போது ஓதுவதை கட்டாயமாக்கி மனப்பாடமாகவும், எழுதிவைத்து திட ஆதாரமாகவும் பாதுகாக்கும் தேவை முகம்மதுக்கு இல்லை. ஆகவே முதன்மையானது இரண்டாம்பட்சமானது எனும் பேதமின்றி குரானை பாதுகாக்கும் தெரிவுதான் முகம்மதுவிடம் இருந்திருக்கும். ஆனால் அவரின் மரணத்திற்கு இருபத்தைந்து ஆண்டுகளுக்குள்ளாகவே வரிசைப்படி இல்லை எனக்கூறி அது அழிக்கப்பட்டதன் உண்மையான நோக்கம் என்ன? என்பது தான் மையமான கேள்வி. அதுவும் உலகில் இன்னும் எத்தனை கோடி ஆண்டுகளுக்கு மனிதன் பிறந்தாலும் அவர்கள் அனைவருக்கும் முகம்மது தான் அழகிய முன்மாதிரி என்று அறிவிக்கப்பட்டு, அவர் பயன்படுத்திய பொருட்களையெல்லாம் இன்றுவரை பாதுகாத்துவைத்திருக்கும் நிலையில் குரான் அழிக்கப்பட்டிருக்கிறது என்பதை இணைத்துப்பார்க்கவேண்டும்.
அபூபக்கர் காலத்தில் உருவாக்கப்பட்ட குரான் உமரின் காலத்திற்குப்பின் உஸ்மானிடம் வரவில்லை என்றால் அதற்க்கு, அபூபக்கர் தனக்குப்பின் உமரைத்தேர்ந்தெடுத்ததுபோல் உமர் யாரையும் தேர்ந்தெடுக்கவில்லை எனவே தான் அந்த குரான் உஸ்மானிடம் கொடுக்கப்படவில்லை என்று எண்ணுகிறார்கள். உமர் தனக்குப்பின் ஆட்சிசெலுத்த யாரையும் தேர்ந்தெடுக்கவில்லை என்பது மெய்தான். அவர் ஒரு குழுவை அமைத்து யாரை நியமிப்பது என்பதை அந்தக்குழு முடிவு செய்யும் என விட்டுவிட்டார், அந்தக்குழுவில் தன் மகனை உறுப்பினராக்குவதற்கும் கூட மறுத்துவிட்டார். ஆனால் குரானை அந்தக்குழுவிடம் ஒப்படைத்து அடுத்துவருபவரிடம் ஒப்படைக்குமாறு பணித்திருக்க முடியும் அவ்வாறன்றி தன் மகளிடம் கொடுக்கும் அவசியமென்ன? இதை அவர் தன்னிடம் வைத்திருந்த குரானை தன் மகளிடம் கொடுத்தார் என புரிந்துகொள்ளமுடியாது. ஏனென்றால் அன்றிருந்த நிலையில் அரசியல் முதல் சமூகம் வரையான அனைத்திற்கும் வழிகாட்டியான குரான் அதுமட்டும்தான் மற்றப்படி மனப்பாடமாய் தெரிந்து வைத்திருந்தவர்கள்தான். அவர்களும் தொடர்ச்சியான போர்களினால் குறைந்துபோய் சிலரே எஞ்சியிருந்த நிலையில், ஒரே ஆவணமான குரானை முகம்மதின் மனைவி என்றாலும்கூட தன்மகளிடம் கொடுக்கும் தேவை என்ன? என்பதுதான் கேள்வி.
இப்படி குரானை உஸ்மானுக்கு முன் உஸ்மானுக்கு பின் என்று பிரித்து குரானின் பாதுகாப்பில் கேள்வி எழுப்புவதன் காரணம் என்ன? குரான் வசனம் 31:27
“பூமியில் உள்ள மரங்கள் யாவும் எழுதுகோல்களாக இருந்து, கடலுடன் மேலும் ஏழு கடல்கள் (மையாக) துணை சேர்ந்தாலும் அல்லாஹ்வின் கட்டளைகள் எழுதிமுடியாது. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்”
என்கிறது. இதே பொருளில் இன்னொரு வசனமும் 18:109 இருக்கிறது. இந்த வசனங்களின் மூலம் நாம் தெரிந்து கொள்வதென்ன? எழுதுவதற்கு தாள் பயன்படுகிறது அது மரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது அதில் திரவமான மை கொண்டு எழுதப்படுகிறது என்பதை அறிந்துகொள்ளலாம். ஆனால் முகம்மதின் காலத்தில் எழுதுவதற்கு தாளும் மையும் பயன்படுத்தப்படவில்லை. முகம்மது குரானை எழுதிவைப்பதற்கு அமைத்த குழு பேரீத்த மரப்பட்டைகளிலும், தோல்களிலும் தான் எழுதியதாக தகவல்கள் கிடைக்கின்றன. ஆனால் அதே காலத்தில் வந்த வசனமோ மரங்களை எழுதுகோல்களாகவும் கடல்களை மையாகவும் பயன்படுத்தச்சொல்கிறது. இது முகம்மது சொன்ன வசனமா? இல்லை அவர் காலத்திற்குப்பின்னர் வந்தவர்களால் சேர்க்கப்பட்ட வசனமா? இந்த ஐயத்தை எப்படிபோக்கிக்கொள்வது? அல்லா அனைத்தும் அறிந்தவன் முக்காலமும் உணர்ந்தவன், எல்லாம் தெரிந்த அவனுக்கு பின்னர் தாளும் மையும் வரவிருப்பது தெரியாமலா போயிருக்கும் என சிலர் நினைக்கலாம். ஆனால் தாளும் மையும் தேவையில்லாமலேயே கணிணியில் எவ்வளவு அளவிலும் எழுதிவிட முடியும் எனும் இன்றைய நிலை அந்த எல்லாம் அறிந்த அல்லாவுக்கு தெரியவில்லையல்லவா? இன்றைய முன்னேற்றங்கள் தெரியவில்லை அதனால் அதை குறிப்பிடவில்லை ஆனால் அன்றைய காலத்திற்கு சற்றைக்கு பின்னான முன்னேற்றங்கள் தெரியும் அதனால் அதை குறிப்பிட்டுள்ளான் என்பது முரணில்லையா? இஸ்லாமியர்கள் இதை எப்படி எடுத்துக்கொள்வார்கள்? ஒன்று அல்லாவுக்கு எதிர்காலம் முழுமையாக தெரியவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள நேரிடும் அல்லது குறிப்பிட்ட அந்த வசனம் முகம்மதின் காலத்திற்குப்பின் குரானில் சேர்க்கப்பட்டிருக்கவேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள நேரிடும். இந்த இரண்டில் எதை ஏற்பார்கள்? எதை மறுப்பார்கள்?
முஸ்லீம்கள் தங்கள் வேதமான குரானுக்கு அடுத்தபடியாக மதிப்பது ஹதீஸ் நூல்களைத்தான். ஹதீஸ் என்பது முகம்மதுவின் வாழ்வில் அவர் செய்ததும் சொல்லியதுமான தொகுப்பு. இந்த ஹதீஸ் நூல்களில் முதலிரண்டு இடங்களில் இருப்பது ஸஹீஹுல் புகாரி என்பதும், ஸஹீஹ் முஸ்லீம் என்பதும். இதில் ஸஹீஹ் முஸ்லீமில் 3421ஆவது ஹதீஸ்
“ஆயிஷா அவர்கள் கூறியதாவது: பத்துமுறை பால் கொடுத்துவிட்டால் திருமணம் நிச்சயமற்றதாகிவிடும் என்று குரானில் இருந்தது பின்னர் இது ரத்து செய்யப்பட்டு ஐந்து தடவையாக குறைக்கப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் மரிக்கும் காலத்திற்கு முன்புவரையிலும் இந்த வசனம் குரானில் இருந்தது மற்றும் முஸ்லீம்களால் ஓதப்பட்டும் வந்தது”
என்று இருக்கிறது. அதாவது கணவன் மனைவிக்கிடையான உறவில் மனைவியிடமிருந்து கணவன் குறிப்பிட்ட முறைகளுக்கும் அதிகமாக பாலருந்திவிட்டால் மனைவியானவள் கணவனின் தாயைப்போன்றவளாகிவிடுவாள் எனும் பொருள்படும்வசனம் முகம்மது இறக்கும் வரையிலும் குரானில் இடம் பெற்றிருந்தது என்று முகம்மதின் மனைவியரில் ஒருவரான ஆயிஷா கூறுவதாக பதிவு செய்யப்பட்ட ஹதீஸ். இது இட்டுக்கட்டிய ஹதீஸ் என்றோ, பொய்யானது என்றோ ஏற்றுக்கொள்ளப்படாதது என்றோ கூறிவிட முடியாது. ஏனென்றால் இது இடம்பெற்றிருப்பது ஸஹீஹ் முஸ்லீமில். (ஹதீஸில் ஏற்றுக்கொள்ளப்பட்டது ஏற்றுக்கொள்ளப்பட்டாதது என்று இரண்டு வகை உண்டு. இவை பற்றி பின்னர் பார்க்கலாம்) முகம்மதுவுக்கு மிகவும் விருப்பமான மனைவியாகிய ஆயிஷா அவர்களால் சுட்டப்படும் இந்த வசனம் தற்போதைய குரானில் எந்த அத்தியாயத்தில் இருக்கிறது என்று கூறவேண்டிய கடமை முஸ்லீம்களுக்கு இருக்கிறது. இல்லை தற்போதைய குரானில் இந்த வசனம் இடம்பெற்றிருக்கவில்லை. அது எப்போது காணாமல் போனது? எப்படி இல்லாமல் போனது? நீக்கியது யார்? எந்த அடிப்படையில் நீக்கப்பட்டது? எல்லாம் அறிந்த அல்லாவால் அருளப்பட்டு கடைசி மனிதன் வரை நிலைத்திருக்கக்கூடிய குரானின் வசனங்களை நீக்கும் அதிகாரம் யாருக்கு இருந்தது?
குரானை எழுதுவதற்கென்றே முகம்மது ஏற்படுத்திய குழு எழுதிய குரானை அப்படியே வைத்திருக்க வேண்டுமென்பதில்லை, அந்த எழுத்து முக்கியமானதல்ல அதில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பதுதான் முக்கியமானது. அந்த குரானுக்கும் தற்போதைய குரானுக்கும் எந்தவித்தியாசமும் இல்லை என்று கருதிக்கொண்டிருக்கும் முஸ்லீம்கள், ஆய்ஷாவின் அந்த வரிகளை கவனித்துப்பார்க்கவேண்டும். “அல்லாஹ்வின் தூதர் மரிக்கும் காலத்திற்கு முன்புவரையிலும் இந்த வசனம் குரானில் இருந்தது மற்றும் முஸ்லீம்களால் ஓதப்பட்டும் வந்தது” முகம்மது இறந்தபிறகு குரான் மாற்றப்பட்டிருக்கிறது என்று கூற முன்வந்த முகம்மதின் மனைவி யாரால் எப்போது மாற்றப்பட்டது என கூற முன்வரவில்லை. அதன் காரணம் என்னவாக இருந்தாலும் குரான் மாற்றப்பட்டிருக்கிறது என்பது தான் முக்கியமானது
ஹதீஸ்களும் அதன் பிரச்சனைகளும்.
முஸ்லீம்களின் ஒரே வேதம் குரான் என்பது அனைவரும் அறிந்தது தான். ஆனால் அது மட்டுமே போதுமானதல்ல. குரான் ஒரு முஸ்லீமுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் உள்ளடக்கியதல்ல. அது மட்டுமன்றி குரான் கூறியிருக்கும் செய்திகளிலேயே விளங்குவதற்கு சிரமமான, இறைவனை தவிர வேறு யாராலும் முழுமையாக பொருள் விளங்கிக்கொள்ள முடியாத வசனங்களும் இருக்கின்றன. ‘நீங்கள் அறிந்து கொள்வதற்க்காக இதனை இலகுவாக்கியிருக்கிறோம்’ எனும் பொருளில் குரானில் சில வசனங்கள் இருந்தாலும் குரானை மட்டுமே வைத்துக்கொண்டு அதனை முழுமையாக புறிந்துகொள்ள முடியாது. எடுத்துக்காட்டாக குரான் குறிப்பிடும் வணக்கங்களான தொழுகை, நோன்பு, ஹஜ் போன்றவைகளை ஒவ்வொரு முஸ்லீமும் நிறைவேற்ற வேண்டும் என குரான் வலியுறுத்துகிறது, ஆனால் அந்த வணக்கங்களை எப்படி நிறைவேற்றுவது என்றால் அதற்கு குரானில் விளக்கம் கிடைக்காது. விபச்சாரம் செய்தால் கல்லெறிந்து கொல்லும் தண்டனை குறித்து அநேகம் பேர் அறிந்திருக்கக்கூடும் ஆனால் இந்த தண்டனை பற்றிய விபரங்களை குரானில் தேடினால் இருக்காது. இப்படி விடுபட்ட, விளங்கிகொள்ள முடியாதவைகளுக்கு விளக்கமாக வருபவைகள் தாம் ஹதீஸ்கள் எனப்படுபவை.
ஹதீஸ் எனும் சொல்லிற்கு செய்தி அல்லது புதிய விசயம் என்பது பொருள். முகம்மது இறப்பதற்கு முன் ஆற்றிய கடைசிப் பேருரையில், “நான் உங்களிடம் இரண்டை விட்டுச்செல்கிறேன். ஒன்று இறைவனின் வேதம். மற்றது என்னுடைய வழிகாட்டுதல். இந்த இரண்டையும் பற்றிப்பிடித்துக்கொண்டிருக்கும் வரை நீங்கள் வழிதவறமாட்டீர்கள்” என்று கூறினார். இதில் என்னுடைய வழி காட்டுதல் என்று அவர் குறிப்பிடுவது தான் ஹதீஸ் எனப்படுகிறது. அதாவது முகம்மது கூறிய, செய்த அல்லது செய்வதற்கு அனுமதியளித்தவைகள் தொகுக்கப்பட்டு நூலாக்கப்பட்டு ஹதீஸ் என்ற பெயரில் வழங்கப்படுகிறது.
முகம்மதிற்கு இறைச்செய்தி (வஹி) வரும்போது அவர் கேட்டுச்சொல்வதை உடனிருந்தவர்கள் எழுதிவைத்துக்கொள்வார்கள் அது குரான். அந்த குரானின் வாசகங்களில் ஐயம் ஏற்பட்டால் அல்லது செயல் முறையில் நடைமுறையில் ஏதாவது சந்தேகம் வந்தால், இன்னும் நடப்பு வாழ்வில் ஏற்படும் குழப்பங்கள், அறியாமைகள் ஏற்பட்டால் அவைகளை முகம்மதுவிடம் விளக்கம் கேட்பார்கள். அவர் அவைகளுக்கு வேண்டிய விளக்கங்களை அளிப்பார், இது தான் ஹதீஸ். ஆனால் அவ்வப்போது அவர் அளிக்கும் விளக்கங்களும் குறிப்புகளும் எழுதிவைக்கப்படவில்லை. முகம்மதின் சம காலத்தவர்கள், சற்றே பிந்தியவர்கள் போன்றவர்களுக்கு அது ஆவணமாக வேண்டிய தேவை ஏற்படவில்லை. ஆனால் பின்னர் வந்தவர்களுக்கு அவைகளின் தேவை தோன்றியது. அதனால் உமர் இப்னு அஜீஸ் (அபூபக்கருக்கு பின்னர் ஆட்சிசெய்த உமர் அல்ல இவர் இரண்டாம் உமர்) என்பவர்தான் முதன் முதலில் ஹதீஸ்களை தொகுக்கவேண்டியதன் தேவையறிந்து ஆபூபக்கர் இப்னு ஹஸம், இப்னு இஸ்ஹாக், ஸூஃப்யானுத் தவ்ரீ, அவ்ஸாயீ, ஹம்மாத், அஸ்ஸூஹ்ரீ, இப்னு ஜூரைஜ், அப்துல்லாஹ் இப்னு முபாரக் போன்றோர்களைக்கொண்டு நூல்களாகத்தொகுத்தார். எப்போது? முகம்மது இறந்து சற்றேறக்குறைய நூற்றைம்பது ஆண்டுகள் கழித்து. இதனைத்தொடர்ந்து இமாம்கள் என இஸ்லாமியர்களால் மதிக்கப்படும் ஷாபி, ஹன்பலி, மல்லிக் ஆகியோர்களால் தனித்தனியே முஸ்னத் ஷாபி, முஸ்னத் அஹ்மது, முவத்தா போன்ற ஹதீஸ் நூலகள் தொகுக்கப்பட்டன. இவைகளில் முஸ்னத் அஹ்மது மட்டும் இன்னும் இருப்பதாக தெரிகிறது. மற்றவைகள் பற்றி தகவல் இல்லை.
இந்த இடத்தில் ஒரு கேள்வி எழலாம். முகம்மது இறந்து நூற்றைம்பது முதல் இருநூறு ஆண்டுகள் கழித்து இவைகளை எப்படி தொகுத்திருப்பார்கள் என்பது தான். செவி வழிச்செய்திகள் தான். இன்னாரிடமிருந்து இன்னார் கேட்டார், அவரிடமிருந்து இவர் செவியுற்றர் என்று தொகுத்தவர்களை அடைந்தவைகள் தான் தொகுக்கப்பட்டன. இவைகளில் முகம்மது சொல்லி செய்தவைகள் மட்டுமன்றி அவர் சொல்லாததும் செய்யாததும் அவரின் பெயரில் கலந்துவிடுவது இயல்பானது தான். இதனால் இவர்களுக்கு பிறகு வந்த அறுவர் கிடைத்த ஹதீஸ்களை எல்லாம் தொகுத்து பல முறைகளில் சரிபார்க்கப்பட்டு தவறானவைகள் என அறியப்பட்டவைகளை எல்லாம் நீக்கி ஆறு தொகுப்புகள் வந்தன
1) முகம்மது இஸ்மாயீல் புஹாரி என்பவர் சுமார் ஆறு லட்சம் ஹதீஸ்களை சேகரித்து அவற்றிலிருந்து 7500 ஹதீஸ்களை சரியானவை எனக்கண்டு அவற்றை ஸஹீஹுல் புஹாரி என்ற பெயரில் நூலாக்கினார்.
2) முஸ்லிம் இப்னு ஹஜ்ஜாஜ் என்பவர் சுமார் மூன்று லட்சம் ஹதீஸ்களை சேகரித்து அவற்றிலிருந்து 7500 ஹதீஸ்களை சரியானவை எனக்கண்டு அவற்றை ஸ்ஹீஹ் முஸ்லிம் என்ற பெயரில் நூலாக்கினார்.
3) அபூதாவூது சுலைமான் அல் சஜஸ்தானி என்பவர் சுமார் ஐந்து லட்சம் ஹதீஸ்களை சேகரித்து அவற்றிலிருந்து 5200 ஹதீஸ்களை சரியானவை எனக்கண்டு அவற்றை சுனது அபீதாவூது என்ற பெயரில் நூலாக்கினார்.
4) அபூஈஸா முஹம்மது இப்னு ஈஸா திர்மிதீ என்பவர் 4000 ஹதீஸ்களை ஜாமிஉத் திர்மிதி என்ற பெயரில் நூலாக்கினார்.
5) அபூ அப்துர்ரஹ்மான் அந்நஸாயீ என்பவர் 5700 ஹதீஸ்களை ஸூனனுந் நஸாயீ என்ற பெயரில் நூலாக்கினார்.
6) அபூ அப்துல்லாஹ் முஹம்மது இப்னு யாசீர் என்பவர் 4300 ஹதீஸ்களை ஸீனனு இப்னுமாஜா என்ற பெயரில் நூலாக்கினார்.
இவர்கள் அனைவரும் கிபி 800 ம் ஆண்டிலிருந்து கிபி900 ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர்கள். அதாவது முகம்மது இறந்து இருநூறு ஆண்டுகளுக்கு பிறகு வாழ்ந்தவர்கள். மேற்குறிப்பிட்ட ஆறு நூல்களும் அங்கீகரிக்கப்பட்ட ஹதீஸ் தொகுப்புகளாக இருந்தாலும் முதல் இரண்டு நூல்களான ஸஹீஹுல் புஹாரி, ஸ்ஹீஹ் முஸ்லிம் என்பவை தான் குரானுக்கு அடுத்தபடியான இடத்தில் உண்மையான, கலப்பில்லாத ஹதீஸ் தொகுப்புகளாக ஏற்கப்பட்டுள்ளன. இவர்கள் இது சரியான ஹதீஸ் இது இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ் என்பதை எப்படி கண்டுபிடித்தார்கள்? பொதுவாக ஹதீஸ் எனப்படுவது இரண்டு பகுதிகளை கொண்டிருக்கும். முதலாவது சொல்லப்படும் செய்தி அடுத்தது அறிவிப்பாளர்கள் அதாவது தொகுத்த ஆசிரியருக்கு அந்த ஹதீஸ் யார் யார் மூலமாக வந்து சேர்ந்தது என்பது. ஒவ்வொரு ஹதீஸுக்கு பின்னாலும் குறைந்தது எட்டு பேராவது இடம்பெற்றிருக்கும். இந்த அறிவிப்பாளர்களின் வரிசை சரியாக இருக்கிறதா என்று பார்ப்பார்கள், அதன் படி ஆசிரியருக்கு குறிப்பிட்ட ஹதீஸை சொன்னவரிலிருந்து பின்னோக்கி முகம்மதுவிடமிருந்து நேரடியாக கேட்டவர்வரை செல்லவேண்டும். அடுத்து அறிவிப்பாளர்களின் குணநலன்களில் ஏதாவது குறையிருக்கிறதா? அவர் பொய் சொல்லக்கூடியவரா? மறந்து விடக்கூடியவரா? என்று பார்ப்பார்கள். அறிவிப்பாளர்கள் அடையாளம் காணப்பட்டவரா? என்று பார்ப்பார்கள் இப்படி சில விதிமுறைகளை வைத்துக்கொண்டு இவற்றில் சிக்கியவைகளை தள்ளிவிட்டு ஏனையவற்றையே தொகுத்தார்கள். இதன்படி அறிவிப்பவர்களில் ஆண்களில் முகம்மதின் நண்பர்களில் ஒருவரானஅபூ ஹுரைரா என்பவர் அதிகமான ஹதீஸ்களை அறிவித்த முதல் அறிவிப்பாளராவார், இவர் 5300 ஹதீஸ்களை அறிவித்திருக்கிறார். பெண்களில் அதிகமான ஹதீஸ்களை அறிவித்த முதல் அறிவிப்பாளர் முகம்மதின் மனைவியான ஆயிஷா, இவர் 2200 ஹதீஸ்களை அறிவித்திருக்கிறார். ஹதீஸ்களை திரட்டிய ஆசிரியர்களின் உழைப்பு மிகமிகக் கடினமானது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமே இல்லை. ஆனால் ஹதீஸ்களின் நம்பகத்தன்மை என்பது தோராயமானது தான். ஹதீஸ் ஆசிரியர்களின் தேடல் எப்படி இருந்தது என்பதற்கு நிறைய கதைகள் உலவுகின்றன. ஹதீஸ் சேகரிக்கச்செல்லும் போது ஒருவர் ஆட்டிலிருந்து பால் கறந்து கொண்டிருந்தார், அவர் ஆட்டை ஏமாற்ற ஆட்டின் குட்டியைப்போன்ற ஒன்றை ஆட்டின் கண்முன் நிருத்தியிருந்தாராம். பாலுக்காக ஆட்டை ஏமாற்றுபவர் கூறும் ஹதீஸை ஏற்பதற்கில்லை என அவரின் ஹதீஸை கேட்காமலேயே திரும்பிவிட்டாராம். ஒருவேளை அவர் கறந்து முடித்து ஆட்டை ஓட்டிவிட்டு பாலை குடித்துக்கொண்டிருந்த போது சென்றிருந்தால் ஹதீஸ் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும் அல்லவா? அல்லது ஹதீஸை கேட்டுச்சென்ற பின் இதுபோல் நிகழ்ந்திருந்தால்? இன்னொருவர் தம் பொருட்களை திருட்டு கொடுத்துவிட்டு சோகத்தில் அமர்ந்திருந்தாராம். களவு போன பொருட்களின் பாதிப்பு ஹதீஸிலும் வந்துவிட்டால் என்றெண்ணி அவரிடம் ஹதீஸை கேட்காமலேயே திரும்பினாராம். ஏற்கப்பட்டிருக்கும் ஹதீஸ்களில் ஆசிரியருக்கு தெரியாமல் இதுபோன்ற விசயங்கள் பாதிக்கப்பட்டிருந்தால்? இது தேவையில்லாத யூகம் என இவற்றை ஒதுக்கித்தள்ளலாம். ஆனால் இதனால் இந்த ஹதீஸை நிராகரிக்கவேண்டும், இதனால் இந்த ஹதீஸை சேர்க்கவேண்டும் என்றெல்லாம் கூறவரவில்லை. இங்கு சுட்டிக்காட்டப்பட விரும்புவதெல்லாம், அதன் தோராயமான தன்மையைத்தான். இவைகளும் கூட முகம்மது இறந்து நூறு ஆண்டுகளிலிருந்து இருநூறு ஆண்டுகள் வரையில் தான். முகம்மது இறந்த பிறகான முதல் நூறு ஆண்டுகளில் உள்ள அறிவிப்பாளர்களின் தன்மை எப்படி அறியப்பட்டது? ஏனென்றால் ஹதீஸ்களை திரட்டும் பணி நூறு ஆண்டுகளுக்குப்பிறகுதான் தொடங்குகிறது. அதன் பிறகு தான் ஹதீஸ் ஆசிரியர்கள் அறிவிப்பாளர்களின் குண நலன்களைப்பற்றிய குறிப்புகளை திரட்டியிருக்கிறார்கள்.
ஒரு ஹதீஸ் உண்மையானதா இட்டுக்கட்டப்பட்டதா என்பதை தெரிவதற்கு அறிவிப்பாளர் வரிசை, தன்மை, அடையாளம் காணப்பட்டவரா என்பனவற்றையெல்லாம் விட அதன் உள்ளடக்கம் முக்கிய பங்காற்றியிருக்கிறது. எடுத்துக்காட்டாக கீழ்காணும் இரண்டு ஹதீஸ்களை கொள்வோம்.
ஹதீஸ் 1.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மனசாட்சி அடிப்படையில் நடந்து மரணத்திற்குப் பிறகுள்ள வாழ்க்கைக்காக நற்காரியங்களை செய்கிறவன் அறிவாளியாவான். தன் உள்ளத்தை மனோ இச்சையில் விட்டுவிட்டு அல்லாஹ்விடத்தில் ஆசைப்படுகிறவன் வீணனாவான்.
ஹதீஸ் 2.
உங்களுக்கு முன் வாழ்ந்த மக்களில் ஒருவன் இருந்தான். அவன் 99 கொலை செய்திருந்தான். தவறை உணர்ந்த அவன் இவ்வூரில் சிறந்த அறிஞர் யார் என்று விசாரித்தான். பனூ இஸ்ராயீல் கூட்டத்தில் ஓரு ராஹிப் இருக்கிறார் என்று அவனிடம் கூறப்பட்டது. அவன் அவரிடம் வந்து, தான் 99 கொலை செய்ததாகவும், தனக்கு மன்னிப்பு உண்டா? என்றும் கேட்டான். “இல்லை!” என்று அந்த ராஹிப் பதில் கூறினார். உடனே அவரையும் கொன்றான். இதுவரை நூறு பேர்களைக் கொன்று விட்டான். பின்னர், இந்த ஊரில் சிறந்த அறிஞர் யார் என்று விசாரித்தான். அறிஞர் ஒருவர் பற்றி அவனிடம் கூறப்பட்டது. அவரிடம் வந்தான். ‘தான் 100 நபர்களைக் கொலை செய்ததாகவும், தனக்கு பாவமன்னிப்பு உண்டா?’ என்றும் கேட்டான். “உண்டு, உனக்கும், நீ பூமியில் இன்ன இன்ன இடங்களுக்குச் செல். அங்கே சில மனிதர்கள் இருப்பார்கள். அல்லாஹ்வை வணங்குவார்கள். அவர்களுடன் சேர்ந்து அல்லாஹ்வை நீ வணங்குவாயாக! உன் ஊர் பக்கம் திரும்பிச் செல்லாதே! அது கெட்ட பூமியாகும்” என்று கூறினார். அவன் நடக்க ஆரம்பித்தான். பாதி தூரத்தைக் கடந்திருப்பான். அதற்குள் அவனுக்கு மரணம் வந்துவிட்டது. அவன் விஷயமாக அருள் தரும் வானவர்களும், வேதனைதரும் வானவர்களும் (உயிரைக் கைப்பற்றுவதில்) போட்டியிட்டனர். அருள் தரும் வானவர்கள், ‘தவ்பா செய்தவனாக தூய உள்ளத்துடன் அல்லாஹ்வின் பக்கம் முன்னோக்கி வந்தான்’ என்று கூறினார்கள். வேதனை தரும் வானவர்களோ, ‘அவன் நன்மையை அறவே செய்ததில்லை’ என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம் மனித தோற்றத்தில் ஒரு வானவர் வந்தார். அவரை தீர்ப்புக் கூறுபவராக தங்களிடையே ஏற்படுத்தினார்கள். அவர் கூறினார்; ‘அவன் (பயணித்த தூரத்தை) அளந்து, எந்த ஊர் அவனுக்கு நெருக்கமாக உள்ளது என்று பாருங்கள்!’ என்று கூறினார். அவர்கள் அளந்தார்கள். அவன் சென்று கொண்டிருந்த பாதை அவனுக்கு நெருக்கமாக இருந்ததைக் கண்டார்கள். ஆகவே, அருள் தரும் வானவர்கள் அவன் உயிரைக் கைப்பற்றினார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். மேற்கண்ட இரண்டு ஹதீஸ்களும் அதிகாரபூர்வமான தொகுப்புகளில் உள்ளது. முதலாவது திர்மிதியிலும் இரண்டாவது புஹாரியிலும் இடம் பெற்றுள்ளது. இவற்றில் ஒன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது, மற்றொன்று ஏற்றுக்கொள்ளப்படாதது. திர்மிதி, நவவி ஆகிய இரண்டு ஆசிரியர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியது என்று குறிப்பிட்டிருந்தாலும் முதல் ஹதீஸ் ஏற்றுக்கொள்ளப்படாதது. ஆனால் இரண்டாவது ஏற்றுக்கொள்ளப்பட்டது. இரண்டாவது ஹதீஸில் நூறு கொலைகள் என்று வந்தாலும் அல்லாவின் மன்னிக்கும் தயாள குணத்திற்கு மெருகூட்டுவதாய் அமைந்துள்ளது. ஆனால் முதல் ஹதீஸில் “மனசாட்சி அடிப்படையில் நடந்து” என்பது அல்லாவின் எல்லைக்கு அப்பாற்பட்டு போகும்கூறு இருக்கிறது. ஆக இந்த இரண்டு ஹதீஸ்களின் ஏற்பிலும் உள்ளடக்கம் தீர்மானகரமான பங்காற்றியிருக்கிறது.
இன்னொரு சமகால எடுத்துக்காட்டு ஒன்றை பார்ப்போம். புஹாரியில் முறையான அறிவிப்பாளர் வரிசையுடன் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் ஒன்று “முகம்மதுவுக்கு சூனியம் வைக்கப்பட்டு செய்யாததையெல்லாம் செய்ததாக கூறும் அளவிற்கு பாதிக்கப்பட்டிருந்தார்” என்று கூறுகிறது. ஒரு குழுவினர் ‘முகம்மதுவிற்கு சூனியம் வைக்கப்பட்டிருந்தது என்றால் மொத்த குரான் மீதே சந்தேகம் வந்துவிடும் எனவே அதிகாரபூர்வமான ஹதீஸாக இருந்தாலும் குரானோடு முரண்படுவதால் இதை ஏற்றுக்கொள்ளக்கூடாது’ என்றும் மற்றொரு குழுவினரோ ‘ஆதாரபூர்வமான ஹதீஸை மறுக்கக்கூடாது இதில் முரண்பாடு ஒன்றுமில்லை. அல்லாவே குரானின் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் அளிப்பதால் குரானில் பாதுகாப்பில் சந்தேகம் ஒன்றுமில்லை. அதேநேரம் ஆதாரபூர்வமான ஹதீஸ் முகம்மதுவுக்கு சூனியம் வைக்கப்பட்டதாக கூறுவதால்; முகம்மதுவுக்கு சூனியம் வைக்கப்பட்டு அவர் பாதிக்கப்பட்டார் ஆனால் அது குரானை பாதிக்கும் அளவில் இல்லை என்று எடுத்துக்கொள்ளவேண்டும்’ என்றும் வாதிட்டுக்கொண்டிருக்கின்றனர். இங்கு ஹதீஸ் ஆசிரியர்கள் வகுத்த விதிமுறைகள் எதுவும் விவாதிக்கப்படவில்லை. ஆனால் அந்த ஹதீஸின் உள்ளடக்கமான கருத்து விவாதத்திற்கு உள்ளாக்கப்பட்டு ஏற்பதா? மறுப்பதா? என விவாதிக்கப்படுகிறது.
இவைகளின் மூலம் விளங்குவதென்ன? ஒரு ஹதீஸ் என்ன கூறுகிறது என்பது தான் மையப்படுத்தப்பட்டு ஏற்பதும் மறுப்பதும் தீர்மானிக்கப்படுகிறது, அவற்றை மறைப்பதற்குத்தான் அறிவிப்பாளர் வரிசை போன்ற விதிமுறைகளெல்லாம் என்பது தெளிவு. முதலிடத்தில் இருக்கும் குரானிலேயே மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன எனும் நிலையில் இரண்டாம் இடத்திலிருக்கும் ஹதீஸ்களின் கற்பை தொட்டுப்பார்ப்பது மாற்றுக்குறைவானதாகவே இருக்கும். ஹதீஸ்களை பற்றி குறிப்பிடும் போது சொலவடையாக ஒன்றை கூறுவார்கள் “முகம்மதின் தலையில் எத்தனை நரைமுடி இருந்தது என்று எண்ணிச்சொல்லும் அளவுக்கு ஹதீஸ்கள் அவரின் வாழ்க்கையை படம்பிடித்துக்காட்டுகின்றன” என்று. பல்லாயிரம் ஹதீஸ்கள் இருந்தாலும் அவைகள் அவ்வளவு தெளிவாக முகம்மதின் வாழ்வைச்சொல்லுகின்றன என்றெல்லாம் எடுத்துக்கொள்ள முடியாது. எப்படியென்றால் குரானின் மொத்த வசனங்களில் சில மக்காவில் அருளப்பட்டவை, சில மதீனாவில் அருளப்பட்டவை; இன்னும் சில வசனங்கள் மக்காவில் அருளப்பட்டதா? மதீனாவிலா என்று முடிவுசெய்ய இயலாதவை. குரான் வசனங்களிலேயே மக்காவிலா மதீனாவிலா எங்கு அருளப்பட்டது என்பதை ஹதீஸ்களின் துணையோடு தீர்க்கமுடியவில்லை எனும்போது நரை முடி என்பதெல்லாம் உயர்வு நவிற்சி தான்.
ஆனாலும் ஹதீஸ் தொகுப்புகளின் காலத்திற்கு முன்பே முகம்மதின் வரலாறு தபரி, இபின் இஷாக், இபுன் ஸைத் போன்றவர்களால் எழுதப்பட்டிருக்கிறது.
பிரபஞ்சமும் அதனை கட்டுப்பட அழைத்த குரானும்.
நாம் வாழும் இந்த பிரபஞ்சம் பெருவெடிப்பு எனும் நிகழ்விலிருந்து துவங்கியதாக அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். விண்மீன்கள், கோள்கள், துணைக்கோள்கள், விண்கற்கள், எரிமீன்கள், கருந்துளைகள், நெபுலாக்கள், பால்வீதிகள் என்று எண்ணிலடங்கா பொருட்கள் எண்ணிலடங்கா எண்ணிக்கையில் நிறைந்துள்ள இந்த பிரபஞ்சத்தின் மொத்த அளவு தற்போதைய அளவுகோல்களின் படி 2500 கோடி ஒளியாண்டுகள். ஒரு ஒளியாண்டு என்பது ஒளியானது தொடர்ந்து ஒரு ஆண்டு பயணம் செய்தால் எவ்வளவு தூரம் பயணப்பட்டிருக்குமோ அவ்வளவு. ஒளியின் வேகம் ஒரு வினாடிக்கு மூன்று லட்சம் கிமீ. இவ்வளவு வேகம் கொண்ட ஒளி ஒருமுனையிலிருந்து மறுமுனையை அடைய 2500 கோடி ஆண்டுகள் ஆகும் என்றால் நம் பிரபஞ்சத்தின் அளவுகளை நீங்கள் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். இந்த அளவு இப்படியே இருக்குமா? அல்ல இன்னும் விரிந்து கொண்டிருக்கிறது. இந்த பிரபஞ்சம் ஒன்றுமில்லாத ஒரு ஒருமையிலிருந்து வெடித்துப்பரவியதில் தொடங்கியது, அதைத்தான் பெருவெடிப்பு கொள்கை என்கிறார்கள். இந்த பெரு வெடிப்புக்கொள்கை குரானில் கூறப்பட்டிருக்கிறது என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை. இன்றைக்கு ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன் உருவான குரானில் இன்றைய அறிவியல் எப்படி இடம்பெற்றிருக்க முடியும்? எனவே குரான் இறைவனால் அருளப்பட்டது என்பது அவர்களின் வாதம்.
பிரபஞ்சம் குறித்து குரான் கூறுவதென்ன?
வானங்களும் பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும் ……….. அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா? வசனம் 21:30
பின்னர் வானம் புகையாக இருந்த போது அதை நாடினான் விரும்பியோ விரும்பாமலோ நீங்கள் கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்று அதற்கும் பூமிக்கும் கூறினான். விரும்பியே கட்டுப்பட்டோம் என்று அவை கூறின. வசனம் 41:11
இந்த இரண்டு வசனங்களும் தான் பெருவெடிப்புக்கொள்கையை விளக்குவதாக இஸ்லாமிய பிரச்சாரகர்கள் கூறுகிறார்கள். முதல் வசனத்தில் வானங்களும் பூமியும் இணைந்திருந்ததாகவும் பின்னர் அவைகள் பிரிக்கப்பட்டதாகவும் கூறுகிறது. இரண்டாவது வசனமோ வானத்திற்கு முந்தைய நிலை புகை என்றும் அதை பின்னர் வானமாகவும் பூமியாகவும் மாற்றியதாக குறிப்பிடுகிறது. இந்த இரண்டின் பொருளும் எப்படி பெரு வெடிப்புக் கொள்கையை பேசுவதாக அறியப்படுகிறது? விண்மீன்கள் (நட்சத்திரங்கள்) தோன்றுவதற்கு முன் அதாவது ஆரம்பகால பிரபஞ்சத்தில் 72 விழுக்காடு கரும்பிண்டமாக இருந்தது எனவும் இக்கரும்பிண்டங்களின் திணிவிலிருந்து விண்மீன்கள் தோன்றின என அறிவியலாளர்கள் கருதுகிறார்கள். கரும்பிண்டங்கள் என்பது எந்த ஒரு பொருளுமாக இல்லாமல் ஆற்றலாக இருந்தன. இந்த இடத்தில் இதை பொருலாக இல்லாமல் ஆற்றலாக என்பதை புகை என்பதாக உருவகப்படுத்தி, அந்தப்புகையிலிருந்து நட்சத்திரங்களும் ஏனைய பொருட்களும் தோன்றின என்பதாக பொருள் எடுத்துக்கொண்டு மேற்கண்ட வசனங்கள் பெருவெடிப்புக்கொள்கையை கூறுவதாக பிரச்சாரம் செய்கிறார்கள்.
முதலில் வானம் என்பது என்ன? உயரத்தில் நீலமாக தெரிவதா? பிரபஞ்சம் முழுக்க நிறைந்திருக்கும் வெளிதான் வானம் எனப்படுகிறது. நட்சத்திரங்கள், கோள்கள் உள்ளிட்ட அனைத்துபொருட்களையும் உள்ளடக்கிய பெரு வெளியை பிரபஞ்சம் என்றால் பருப்பொருட்களை நீக்கியபின் இருக்கும் வெளி வானம் எனலாம். ஆனால் குரான் கூறுகிறது வானம் புகையாக இருந்தபோது அதை நாடினான் என்று. விண்மீன்கள் கோள்கள் முதலான பொருட்களை புகையாக இருந்தபோது நாடினான் என்றிருந்தாலும் கூட கொஞ்சம் அறிவியல் வாசம் அடித்திருக்கும். தொடர்ந்து அவர்கள் வானம் என்பதை பூமியை தவிர்த்த அனைத்தும் என்பதாக பொருள் கொள்ளச்சொல்கிறார்கள். ஏனென்றால் குரானின் படி அப்படி பொருள்கொண்டால் தான் அந்த வசனங்களுக்கு அறிவியல் சாயம் பூச முடியும். வானங்களும் பூமியும் இணைந்திருந்த போது என்றும், அதற்கும் பூமிக்கும் கூறினான் என்றும் குரான் வானத்தையும் பூமியையும் மட்டுமே குறிப்பிடுகிறது. எனவே பூமியை தவிர்த்த அனைத்தும் வானம் என்று எடுத்துக்கொண்டு சுலபமாக பொருள் பண்ணிக்கொண்டார்கள். ஆனால் குரானில் மற்றொரு வசனம் வானமும் அதன் பொருட்களும் வேறு வேறு என்று தெளிவாக அறிவிக்கிறது. வசனம் 41:12 …………. கீழ் வானத்தை விளக்குகளால் அலங்கரித்தோம்………….. இந்த வசனத்தில் இருக்கும் விளக்குகளால் எனும் சொல் விண்மீன்கள் கோள்களை குறிக்கிறது. எனவே வானம் என்பதற்கு பூமியை தவிர ஏனைய அனைத்தும் என்று பொருள் கொள்வது குரானின் படியே முரணானது.
வானத்தை கண்களுக்கு புலனாகும் ஒரு பொருளாக கருதுவதும், அது புகையிலிருந்து உருவானதாக நினைப்பதும் மனிதன் மேகத்தை பார்த்ததன் திரிபாக கொள்ளலாம். வசனம் 50:6 ……………. அதில் எந்த ஓட்டைகளும் இல்லை என்று கூறியிருப்பதன் மூலம் நிறமாலையின் நீல நிறத்தை பிரதிபலிக்கும் நீலப்பின்னணியை அதன் சீறான தன்மையையே குரான் வானம் என குறிப்பிடுகிறது என்பது தெளிவாகிறது. மீண்டும் இரண்டாவது வசனத்தை கவனியுங்கள் புகையாக இருந்த வானத்தை நாடிய போதே பூமியும் சேர்த்து கூறப்படுகிறது அதற்கும் பூமிக்கும் கூறினான் என்று. ஆக குரானின் இந்த வசனங்களில் இஸ்லாமிய பிரச்சாரகர்கள் கூறுவது போல் எந்த அறிவியல் கூறுகளும் இல்லை. மரபுவழி புராணங்களின் துணையுடன் சாதாரண மனிதன் கூறிவிட முடிகிற இந்த வசனங்களை அறிவியலுடன் முடிச்சுப்போடுவது இவர்களின் வெற்று பிதற்றல்கள் தானேயன்றி வேறில்லை.
ஒரு சிங்குலாரிடியிலிருந்து வெடித்து விரிவடைந்து கொண்டிருக்கும் பிரபஞ்சத்தின் பெருவெடிப்புக்கொள்கையின் எந்த சாயலும் இல்லாத மேற்கண்ட இரண்டு வசனங்களும் இன்னொன்றையும் தெளிவாக்குகிறது. வானமும் பூமியும் முன்னர் இணந்திருந்தது இப்போது பிரிந்திருக்கிறது என்பதை மேற்கண்ட வசனங்களின் மூலம் அறியலாம். ஆனால் வானம் என்பது மேலே தெரியும் நீல நிற பின்னணி மட்டுமல்ல எந்தக்கோளின் எல்லையிலிருந்தும் வானம் தொடங்கிவிடுகிறது. இன்னும் தெளிவாகச்சொன்னால் சூழ இருக்கும் வானத்தில் கோள்கள் குறை மூழ்கலில் கிடக்கின்றன. அதாவது நீர் நிரப்பிய பாத்திரத்தில் ஒரு பந்து முழுவதும் மூழ்கி தரை தட்டிவிடாமலும் நீரின் மேற்பரப்பில் மிதக்காமலும் நடுவில் இருப்பதைப்போல் கோள்களின் பூமியின் அனைத்து திசைகளிலும் வானம் சூழ்ந்திருக்கிறது. இந்த அறிவியலை அறியாத குரான், பூமியையும் வானத்தையும் பிரித்துவிட்டதாய் விளம்புகிறது. பூமியின் அருகிலிருக்கும் வானத்தை விளக்குகளால் அலங்கரித்ததாய் கதைக்கிறது.
மதவாதிகள் தேடுவதெல்லாம் அறிவியலோடு ஐக்கியமாகிப்போகின்ற வசனங்கள், அதைவைத்துக்கொண்டு அதற்குள் அறிவியலை வளைத்து நுழைத்துவிடுகிறார்கள். பின்னர் அவர்களே ஆச்சரியப்பட்டு ஆஹா குரான் இன்றைய அறிவியலை மெய்ப்பித்துவிட்டது என்று ஆர்ப்பரிக்கிறார்கள். இவர்கள் ஒருபோதும் உணர்வதில்லை இறைவன் எனும் ஒன்றை இவர்கள் குறிப்பிடும் தகுதிகளோடு கூடிய ஒரு ஆற்றலை அறிவியல் திடமாக மறுக்கிறது என்பதை.
பூமி உருண்டை என யார் சொன்னது: அல்லாவா? மனிதனா?
குரான் அறிவியல் என்ற சொற்களை நாம் கேட்டவுடன் பூமி உருண்டையா? தட்டையா? எனும் வாதம் தான் நம்முள் எழும். அந்த அளவுக்கு இஸ்லாமிய அறிஞர்கள் இதற்கு விளக்கம் விளக்கமாக தந்துகொண்டிருக்கிறார்கள். பூமி உருண்டை என்பது அண்மைக்கண்டுபிடிப்பு அதற்கு முன்னர் பூமி தட்டையானது என எண்ணிக்கொண்டிருந்தனர். ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்பே குரான் பூமி உருண்டை எனக்கூறியிருப்பது இன்றும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. 1400 ஆண்டுகளுக்கு முன்னுள்ள ஒரு மனிதனால் இப்படி கூறியிருக்க முடியுமா? எனவே முகம்மது கூறியது இறைவனின் வாக்கைத்தான் என்பது நிரூபணமாகிறது என்பது இஸ்லாமியர்களின் வாதம். மெய்யாகவே பூமி உருண்டை வடிவம் என்பதை மனிதன் கண்டுபிடிக்கும் முன்னரே கடவுள் சொல்லிவிட்டாரா?
பூமி உருண்டை என்பதை குறிக்கும் குரானின் வசனங்கள் என்று இஸ்லாமிய அறிஞர்கள் கூறுவதை பார்ப்போம். வசனம் 3:27 நீதான் இரவை பகலில் புகுத்துகின்றாய், நீதான் பகலை இரவிலும் புகுத்துகின்றாய்…………… (22:61;31:29;35:13;57:6) இந்த வசனத்தில் பூமியின் வடிவம் குறித்து ஏதாவது சொல்லப்பட்டிருக்கின்றதா? ஒன்றுமில்லை. ஆனாலும் இதை பூமியை உருண்டை எனக்கூறுவதற்கு பயன் படுத்துகிறார்கள் எப்படி? இரவையும் பகலையும் ஒன்றின் மீது மற்றொன்றை புகுத்தும் செயல் எப்படி நிகழமுடியும்? புகுத்துதல் என்றால் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் நடைபெற முடியும் முதலில் தலை பின் உடல் பிறகு கால் இப்படி ஒவ்வொரு பகுதியாகத்தான் புகுத்தமுடியும். இந்த புகுத்துதல் எனும் சொல்லை மிகச்சரியாக கையாண்டு தான் இறைவன் இரவை பகலிலும் பகலை இரவிலும் புகுத்துவதாக கூறுகிறான். இரவிலிருந்து பகலோ, பகலிலிருந்து இரவோ திடும் என நிகழ்ந்துவிடுவதில்லை. படிப்படியாக மெதுவாக நிகழ்கிறது. ஏன் அப்படி நிகழ்கிறது என்றால் பூமி கோள வடிவத்தில் உருண்டையாக இருப்பதால். பூமி சதுர வடிவில் இருந்தால் பகலும் இரவும் மாறுவது திடுமென்று ஒரு நொடிப்பொழுதுடையதாக இருக்கும், இதிலிருந்து பூமி உருண்டை என்பதை தான் குரான் புகுத்துதல் எனும் பதத்தின் மூலம் தெளிவு படுத்துகிறது என்று கூறுகிறார்கள். 1400 ஆண்டுகளுக்கு முன்னுள்ள மனிதன் மட்டுமல்ல 2800 ஆண்டுகளுக்கு முன்னுள்ள மனிதனும் கூட இப்படி கூறியிருக்க முடியும். ஏனென்றால் மனிதன் தோன்றிய காலம் முதல் இன்று வரை இரவு பகல் மாற்றம் மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாகத்தான் நிகழ்கிறது. அறிவியலின் வாசம் கூட இல்லாத இந்த ஒன்றுமற்ற வசனத்தை தான் மாபெரும் அறிவியல் கொண்டதாக புழுகுகிறார்கள். இரவையும் பகலையும் புகுத்துவதாக மட்டும் தான் குரான் கூறியிருக்கிறதா? வசனம் 7:54 பகலை இரவால் மூடுகிறான் என்றும் இரவு பகலை பிந்தொடர்கிறது என்றும் வருகிறது. வசனம் 24:44 இரவும் பகலும் மாறி மாறி வருகின்றன. வசனம் 25:62 இரவும் பகலும் அடுத்தடுத்து வருகின்றன.வசனம் 39:5 இரவின் மீது பகல் சுற்றுகிறது பகலின் மீது இரவு சுற்றுகிறது, என்றெல்லாம் இரவு பகல் மாறி மாறி வந்துகொண்டே இருப்பதை பல்வேறு வார்த்தைகளில் குரான் குறிப்பிடுகிறது. இந்த வசனங்களிலெல்லாம் அறிவியல் இருக்கிறதா? உலகில் வாழ்ந்து இரவு பகல் மாறுவதை கண்ட எவராலும் சொல்லிவிட முடிகிற இவைகளை மாபெரும் அறிவியல் உண்மை என எப்படி இவர்களால் கதைவிட முடிகிறது? வசனம் 79:30 இதன் பின்னர் அவனே பூமியை விரித்தான். என்றொரு வசனம், இதில் விரித்தான் என்னும் சொல் இருக்கும் இடத்தில் அரபியில் தஹாஹா என்னும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த தஹாஹா எனும் சொல்லுக்கு நெருப்புக்கோழியின் முட்டை என்ற பொருளும் உண்டு. பூமியை குறிப்பதற்கு இந்தச்சொல்லை பயன்படுத்தியிருப்பதன் மூலம் பூமி உருண்டை வடிவமானது என்று குரான் தெளிவுபடுத்திவிட்டது என்றும் கூறுகிறார்கள். ஆனால் எந்த ஒரு குரான் மொழிபெயர்ப்பிலும் குறிப்பிட்ட இந்த வசனத்தை யாரும் நெருப்புக்கோழியின் முட்டை என மொழிபெயர்க்கவில்லை. விரித்தான் என்று சிலரும், பிரித்தான் என்று சிலரும் தான் மொழிபெயர்த்துள்ளனர். அப்படியிருக்க நெருப்புக்கோழியின் முட்டை என்னும் பொருள் எங்கிருந்து வந்தது? உலகில் பரவலாக உள்ள எந்த மொழியிலும் ஒரு உயிரினத்தின் முட்டையை குறிப்பிடுவதற்கு தனிச்சொல் இருப்பதாக தெரியவில்லை (குட்டியை குறிப்பதற்கு தனிச்சொற்கள் உள்ளன) பெயரோடு சேர்த்துத்தான் குறிப்பார்கள், கோழி முட்டை, குயில் முட்டை என்று. அரபிலும் அதே போல் தான் முட்டை என்பதற்கு பேத் எனும் பொதுச்சொல்லும் நெருப்புக்கோழியை குறிப்பதற்கு நஆம் எனும் தனிச்சொல்லும் இருக்கின்றன. இவர்களுக்கு எங்கிருந்து தஹாஹா எனும் வார்த்தைக்கு நெருப்புக்கோழியின் முட்டை என்று பொருள் கிடைத்தது?
பூமி உருண்டை என்பதற்கு குரானில் இன்னொரு ஆதாரம் இருப்பதாக கூறுகிறார்கள். குரானில் 18 ஆவது அத்தியாயம் வசனங்கள் 84 லிருந்து 98 வரை துல்கர்னைன் என்ற ஒரு மன்னனின் பயணத்தைப்பற்றி விவரிக்கிறது. அதாவது அந்த மன்னன் ஒரு வழியில் பயணிக்கிறான், வழியில் ஒரு சமுதாய மக்களை காண்கிறான் அங்கு சூரியன் சேறு நிறைந்த நீரில் மூழ்குகிறது, தொடர்ந்து செல்கிறார் மீண்டும் சூரியன் உதிப்பதை காண்கிறார். இது தான் அந்த பதினைந்து வசனங்களின் சாரம். பூமியில் நேர்கோட்டில் பயணம் செய்தால் ஒரே திசையில் சூரியன் உதிப்பதையும் மறைவதையும் காண்கிறாரென்றால் பூமி உருண்டையாய் இருந்தால் மட்டுமே சாத்தியம் எனவே இந்த வசனங்கள் பூமி உருண்டை என்பதை உணர்த்தி நிற்கிறது என்கிறார்கள். பூமி உருண்டையாக இருந்தாலும் நேர் கோட்டில் பயணம் செய்யும் ஒருவரால் ஒரே திசையில் சூரியன் உதிப்பதையும் மறைவதையும் காணமுடியாது என்பது ஒருபுறமிருந்தாலும், அந்த மன்னர் நேர் கோட்டில் தொடர்ந்து சென்றதால் பூமி உருண்டையாயிருக்கும் பட்சத்தில் அவ்வாறு காணமுடிந்தது என்று சாதிக்கிறார்கள். ஆனால் குரானில் அவர் ஒரே திசையில் சென்றார் என கூறவில்லை என்பதே உண்மை. 18:85 ம் வசனம் அவர் ஒரு வழியில் சென்றார் என்றும் 18:89 ம் வசனம் பின்னர் ஒரு வழியில் சென்றார் எனவும் இருக்கிறது.
பூமி உருண்டை என்று குரான் கூறியிருக்கிறது என்று நிரூபிப்பதற்காக தோதுப்பட்ட வசனங்களிலெல்லாம் வலிந்து அறிவியலை ஏற்றியிருக்கிறார்கள். பூமியின் வடிவத்தைப்பற்றி நேரடியாக எதுவுமே கூறாத வசனங்களை, சாதாரண காட்சிகளை விவரிக்கும் வசனங்களை பூமி உருண்டை என ஐயந்திரிபற நிரூபிக்கப்பட்டபின்னான் காலத்தில் நின்றுகொண்டு பூமி உருண்டையாக இருந்தால் தான் இப்படி இருக்கமுடியும் எனவே இவ்வசனங்கள் பூமி உருண்டை என கூறுவதாக டம்பமடிக்கும் இவர்கள்; பூமியின் வடிவம் பற்றி கூறும் குரான் வசனங்களுக்கு வேறு விதமாக விளக்கமளிக்கிறார்கள். ஒன்றல்ல இரண்டல்ல அனேக இடங்களில் பூமியின் வடிவத்தை ஒரே மாதிரியாக வர்ணிக்கிறது குரான். 2:22; 13:3; 15:19; 20:53; 43:10; 50:7; 51:48; 55:10; 71:19; 78:6; 79:30; 84:3; 88:20; 91:6 குரானில் வரும் இந்த வசனங்களெல்லாம் ஒரே மாதிரியாக பூமியை தட்டை என பொருள் கொள்ளும்படி பூமியை விரித்திருப்பதாக கூறுகிறது. இவைகளையும் பூமி உருண்டை எனக்கூறுவதாக திரிக்கிறார்கள். விரிப்பு என்பதன் பொருளை பூமிக்கு எப்படி பொருத்துகின்றனர்? விரிப்பு என்றால் அவை சமதளத்தில் மட்டுமல்ல கோளத்தின் மீதும் பரப்பலாம் எனவே விரிப்பு என்ற உவமையின் மூலம் பூமி தட்டை என்பதை அல்ல உருண்டை என்பதையே மறைமுகமாக உணர்த்துகிறது என்று ஜல்லியடிக்கின்றனர். பூமி அதன் புவியியல் அமைப்பில் மூன்று அடுக்குகளை கொண்டிருக்கிறது அ) இன்னர் கோர் எனப்படும் உட்கரு ஆ) அவுட்டர் கோர் எனப்படும் வெளிக்கரு இ) மேண்டில் எனப்படும் மேலோடு. இதில் உட்கரு திடப்பொருளாகவும், வெளிக்கரு எரிமலைக்குளம்பாக திரவப்பொருளாகவும் இருக்கிறது. மேலோடு நாம் காணும் கடல், மலை, நிலம் என்று மேற்பரப்பாகவும் இருக்கிறது. இந்த மேலோட்டைதான் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற விரிப்பாக ஆக்கியிருப்பதாக பொருள் சொல்கிறார்கள். பூமியின் மேலோட்டை குரான் விரிப்பாக குறிப்பிடுவதாகவே கொள்வோம். எந்த வடிவத்தில் அந்த விரிப்பு விரிக்கப்பட்டிருக்கிறது? சமதளத்திலா? அல்லது உருண்டை வடிவத்திலா? என்ற கேள்விக்கு குரானில் விடை இருக்கிறதா? பூமி உருண்டையாக இருப்பதனால் அதன் மேலும் விரிப்பை பரப்ப முடியும் என்ற முடிவுக்கு வரமுடிகிறது. பூமி உருண்டையா தட்டையா என்று தெரியாது எனக்கொண்டால் குரானிய வசனங்களின் படி உருண்டை தான் என எப்படி உறுதிப்படுத்துவது?
மேற்கூறிய விவரங்களெல்லாம் குரான் இறங்கிய வேளையில் மக்களுக்கு பூமி உருண்டை எனும் அறிவியல் தெரியாமல் இருந்ததாகவே எடுத்துக்கொண்டு விளக்கப்பட்டவை. ஆனால் பூமி உருண்டை எனும் அறிவு பன்னெடுங்காலத்திற்கு முன்பே மக்களிடம் இருந்தது என்பது தான் மெய். கிரேக்கர்கள் சீனர்கள் இந்தியர்கள், அராபியர்கள் கடலாடிய செய்திகள் பண்டைய இலக்கியங்களில் விரவிக்கிடக்கின்றன. கடலில் செல்லும் கப்பலும், கரைக்கு திரும்பும் கப்பலும் கரையிலிருந்து பார்க்கையில் கடலுக்குள் கீழ் வளைந்து செல்வதுபோலவும், கீழ் வளைவாக மேலேறி வருவதையும் கண்டு பூமியின் வடிவம் உருண்டை என்பதை பட்டறிவாகவே விளங்கி வைத்திருந்தனர். மட்டுமன்றி அறிவியல் ரீதியாக பூமி உருண்டை என முதலில் கூறியவர் பைலோலாஸ் எனும் கிரேக்கர் ஆண்டு கிமு 450. கிமு இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த எரோட்டஸ்தனிஸ் எனும் கிரேக்கர் பூமியின் சுற்றளவை தோராயமாக கணக்கிட்டு 25000 மைல் என்று கூறினார். இன்றைய துல்லியமான கணக்கீடு 24902.4 மைல். அதே கிமு இரண்டாம் நூற்றாண்டில் ஹிப்பார்க்கஸ் என்பவர் பூமியை அட்சரேகை கடகரேகை எனும் கற்பனைக்கோடுகளால் பூமியை பிரித்தார். கிபி இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த தாலமி எனும் எகிப்திய மாலுமி பூமியை வரைபடமாக வரைந்தார். இதன் பிறகு கிபி ஆறாம் நூற்றாண்டில்தான் அரேபியாவில் முகம்மது பிறக்கிறார். ஆனால் இஸ்லாமிய அறிஞர்களோ முகம்மதுவின் காலத்தில் பூமி உருண்டை எனும் அறிவு மக்களுக்கு இல்லை என்று இன்றும் வெட்கமில்லாமல் கூறித்திரிகிறார்கள். அறிவியலை மதவாதிகள் பயன்படுத்துவது கேட்கும் பாமரர்களை வியப்படையச்செய்வதன் மூலம் மதம் மாற்றுவதற்காகவும் ஏற்கனவே இருப்பவர்களை இன்னும் இறுக்கப்படுத்துவதற்குத்தானேயன்றி தேடலுக்காகவல்ல. தொடர்ந்து அவர்களின் அறிவியல் வாதங்களூடே பயணிப்போம்.
கடல்கள் பற்றிய அல்லாவின் புனைகதைகள்
நாம் வசிக்கும் பூமியில் முக்கால் பகுதி கடலாகவும் கால்பகுதி மட்டுமே நிலமாகவும் இருக்கிறது. முக்கால் பாகமுள்ள கடலை நம்முடைய வசதிக்காக கடல்களாகவும், பெருங்கடல்களாகவும் பிரித்திருக்கிறோம். சில கடல்கள் நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்டு எல்லைகளுடைய தனிக்கடலாக இருக்கும் மத்திய தரைக்கடலைப்போல. இன்னும் சில கடல்கள் மூன்றுபுறமும் நிலங்களாலும் ஒருபுறம் மற்றொரு கடலாலும் சூழப்பட்டிருக்கும் வங்காள விரிகுடா போல. பொதுவாக கடல்களின் எல்லை என்றால் நிலப்பரப்பு தான். நிலப்பரப்பு அல்லாமல் கடல்களுக்கு எல்லை என்று ஒன்றில்லை. பசுபிக் பெருங்கடலும், அட்லாண்டிக் பெருங்கடலும் தனித்தனி பெயர்களால் குறிக்கப்பட்டாலும் இவற்றிற்கிடையே எல்லை என்று ஒன்றில்லை, அந்தந்த பகுதியைக்கொண்டு அட்லாண்டிக் பெருங்கடல் என்றும் பசுபிக் பெருங்கடல் என்றும் அழைக்கிறோம். இரண்டு நாடுகளுக்கிடையே எல்லைக்கோடு இருப்பதைப்போல் இரண்டு கடல்களுக்கிடையே எல்லைக்கோடு இருப்பதில்லை. ஆனால் குரானின் இந்த வசனங்களை கேளுங்கள், “அவனே இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச்செய்தான்” “அவற்றிற்கிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது அதை அவை மீற்மாட்டா” குரான் 55:19; 55:20. இந்த வசனங்கள் இரண்டு கடல்களுக்கிடையே ஒரு தடுப்பு இருப்பதாக கூறுகிறது. ஆனாலும் அவை என்ன வகையினாலான தடுப்பு? என்ன பண்புகளினாலான தடுப்பு? அவற்றின் செயல்பாடு? எதுவும் விளக்கப்படவில்லை.
இதுபற்றி மதங்கற்ற அறிவியலாளர்கள் கூறுவதைக்கேட்கலாமா? ஆரம்பத்தில் மனிதனுக்கு கடல்கள் எல்லாம் ஒன்று தான் அவற்றினிடையே வித்தியாசம் ஒன்றுமில்லை என்று தான் நினைத்துக்கொண்டிருந்தான். பின்னர்தான் விஞ்ஞானிகள் ஒரு கடலுக்கும் இன்னொரு கடலுக்கும் இடையே வித்தியாசம் இருப்பதை கண்டுபிடித்துச் சொன்னார்கள். எல்லாக்கடல் நீரும் உப்பாக இருந்தாலும் அவற்றின் அளவுகள் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஆனால் பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த மாபெரும் அறிவியல் உண்மை 1400 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த முகம்மது நபிக்கு எப்படி தெரிந்தது? அதிலும் அவர் படிக்காதவர். இதிலிருந்து நமக்கு தெரிவதென்ன? அனைத்தும் அறிந்த அல்லாஹ்தான் முகம்மது நபியின் வழியாக குர் ஆனை இறக்கியிருக்கிறான் என்பது உறுதியாகிறதல்லவா? இப்படிப்போகிறது மதம் படித்த விஞ்ஞானிகளின் விஞ்ஞானம்.
பண்டைய கடலாடிகளுக்கு இது தெரிந்தே இருந்திருக்கிறது. பலநாடுகளுக்கு கடல்கடந்து வணிகம் செய்த வணிகர்களுக்கும் மாலுமிகளுக்கும் கடல் நீரின் தன்மை எல்லா இடத்திலும் ஒரே மாதிரி இருக்காது என்பது நன்றாகவே தெரிந்திருந்தது. அவர்கள் கண்களாலும் நாவினாலும் அறிந்து வைத்திருந்த அதை அறிவியலும் உறுதி செய்தது. எல்லா இடத்திலும் கடல் நீரின் உவர்ப்புத்தன்மை ஒரே திறத்தில் இருப்பதில்லை. அந்தந்த இடத்திற்கு ஏற்ப வளரும் கடற்றாவரங்கள் வசிக்கும் கடல் உயிரிகள் மண்ணின் தன்மை நீரோட்டங்களின் விளைவு, கலக்கும் ஆற்றுநீரின் அளவு இவைகளின் அடிப்படையில் அந்த கடலின் உப்பு தாதுக்கள் மட்டுமல்லாது நீரின் தெளிவுத்தன்மை உட்பட பல மாறுதல்கள் இருக்கும். இவை வேறு வேறு கடல்களுக்கு என்று மட்டுமில்லை ஒரே கடலிலும் கூட பலப்பல மாறுதல்கள் இருக்கின்றன. வங்காள விரிகுடாவில் தான் சென்னையும், போர்ட் பிளேரும் (அந்தமான் நிகோபர் தீவுகள்) இருக்கின்றன, ஆனால் சென்னை மெரினாவிலும் போர்ட் பிளேர் கடற்கரையிலும் நீரின் தெளிவுத்தன்மை உட்பட எவ்வளவு வித்தியாசங்கள்? ஒரே கடலில் உள்ள வேறுபட்ட தன்மைகளையோ அல்லது வேறு கடல்களின் மாறுபட்ட தன்மைகளையோ தான் குரானின் வசனங்கள் தடுப்பு என குறிப்பிடுகிறதா? குரானின் வசனங்கள் தெளிவாகவே கடல்களின் எல்லை குறித்தே பேசுகின்றன. வசனம் 25:53 இன்னும் தெளிவாகவே இதனை குறிப்பிடுகிறது, “அவன் தான் இரண்டு கடல்களையும் ஒன்று சேர்த்தான். ஒன்று மிக்க இனிமையும் சுவையுமுள்ளது, மற்றொன்று உப்பும் கசப்புமானது. இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான்” கடல் நீரின் சுவை குறித்து கூறினாலும் இரண்டு கடல்களுக்கும் ஒரு வரம்பு இருக்கிறதென்றும், இரண்டினிடையே இருக்கும் தடைய அவைகளால் மீறமுடியாதென்றும் ஐயத்திற்கிடமின்றியே அறிவிக்கிறது. கடலுக்குள் யாரும் எல்லைக்கோடு பிரித்து வைக்கவில்லை என்பது ஒருபுறமிருக்கட்டும், கடலுக்குள் நீரோட்டங்கள் இருக்கின்றன, இந் நீரோட்டங்கள் நிலத்தில் ஓடும் ஆறுகளைப்போல் கடலுக்குள் ஓடுகின்றன. ஒருகடலிலிருந்து மற்றொரு கடலுக்கு, ஒரு கண்டத்திலிருந்து மற்றொரு கண்டத்திற்கு பாயும் பல கடலடி நீரோட்டங்களை கண்டுபிடித்திருக்கிறார்கள். இரண்டு கடல்களுக்கிடையே மீற முடியாத தடுப்பு இருக்கிறதென்றால் நீரோட்டங்கள் எப்படி நகர்கின்றன? இனப்பெருக்கத்திற்காகவும், பருவ மாற்றங்களுக்காகவும் சிலவகை மீன்கள் இடம்பெயர்கின்றன, ஒரு கடலிலிருந்து மற்றொரு கடலுக்கு சர்வ சாதாரணமாக வந்து போகின்றன? கடல்களுக்கு இடையே இருக்கும் தடையை மீன்களால் எப்படி தகர்க்க முடிந்தது? ஒன்று தெளிவாகிறது கடலாடி அனுபவமில்லாத முகம்மது, கடலாடிகளிடமிருந்து கடல்நீரின் சுவை வேறுபாடுகளைப்பற்றி அரைகுறையாக செவியுற்று அதையே தன்னுடைய குரானில் தடையாக அரங்கேற்றிவிட்டார். அதையே இவர்கள் மாபெரும் அறிவியல் உண்மையாக அளந்துவிடுகிறார்கள்.
கடலைப்பற்றிய இன்னொரு மாபெரும் அறிவியல் உண்மையும் குரானில் காணக்கிடைக்கிறது. வசனம் 24:40 “அல்லது ஆழ்கடலில் பல இருள்களைப் போன்றதாகும் அதனை ஓர் அலை மூடுகிறது. அதற்கு மேல் மற்றோர் அலை. அதற்கும் மேல் மேகம். பல இருள்கள். சில சிலவற்றிற்கு மேல் இருக்கின்றன. அவன் தன் கையை வெளியே நீட்டினால் அவனால் அதை பார்க்க முடியாது. எவனுக்கு அல்லாஹ் ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியுமில்லை”
இஸ்லாத்தை ஏற்காதவர்களின் நிலையை விவரிக்கும் இந்த வசனம். ஒருவனை அல்லா நேர் வழியில் செலுத்தவில்லை என்றால் அவனுக்கு எந்த நேர்வழியும் இல்லை என எச்சரிக்கிறது. இந்த வசனத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஆழ்கடலில் பல இருள்களைப் போன்றதாகும் எனும் வாக்கியம் தான் அந்த மாபெரும் அறிவியல் உண்மை.
கடலில் ஆழத்தில் செல்லச்செல்ல வெளிச்சம் குறைந்து உள்ளங்கைகளை கூட பார்க்கமுடியாத அளவுக்கு இருட்டாகிவிடும். இது ஒன்றும் யாருக்கும் தெரியாத சங்கதி அல்ல. கடலோடு மனிதனுக்கு தோடர்பு ஏற்பட்ட பிறகு எளிதாக இதை மனிதன் கண்டிருக்கமுடியும். ஆனால் இதையும் பிற்கால அறிவியல் கண்டுபிடிப்பான கடல் நீரில் ஒளியின் நிறமாலை நிறங்கள் ஊடுருவும் ஆழம் பற்றிய தகவல்களை ஒன்றிணைத்து பிற்கால அறிவியல் கண்டுபிடிப்பை குரான் 1400 ஆண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டது என்கிறார்கள்
இதில் இன்னொரு வேடிக்கையும் இருக்கிறது. அமெரிக்காவின் கடலாய்வு அறிவியலாளரான பேராசிரியர் வில்லியம் ஹை என்பவர் 1980 களின் தொடக்கத்தில் தாம் ஜித்தா பல்கலைக்கழகத்தில் அறிக்கை சமர்ப்பிக்க அழைக்கப்பட்ட கதையை விளக்குகையில், தாம் குரானில் கூறப்பட்டிருக்கும் ஆழ்கடல் இருளை அறிவியல் ஆதாரங்களுடன் மெய்பிக்கும் தகவல்களுடன் கூடிய அறிக்கையை சமர்ப்பிக்குமாறு தன்னிடம் கோரப்பட்டதை விவரிக்கிறார். ஆனால் தான் அவ்வாறான அறிக்கையை அளிக்காமல் குரானில் கூறப்பட்டிருப்பதும் நிறங்களின் ஊடுறுவும் ஆழமும் தொடர்பில்லாதது என சொற்பொழிவாற்றியதாகவும், பின்னர் தன்னுடைய கட்டுரை மலரில் சேர்க்கப்படவில்லை என்றும் அதற்குப்பதிலாக அதே தலைப்பில் பேராசிரியர் துர்க்கா ராவ் என்பரின் கட்டுரை இடம்பெற்றிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இன்னொரு விசயத்தையும் நீங்கள் கவனிக்கலாம், அறிவியல் உண்மை என மதவாதிகள் ஆராதிக்கும் விசயங்களையெல்லாம் அராய்ந்தால் அவைகளெல்லாம் சௌதி அரேபியாவில் பெறப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளாக மட்டுமே இருப்பதைக்காணலாம். ஆக அனைத்து ஆற்றல்களையும் கொண்ட அவர்களின் அல்லாவைவிட அறிவியல் நிரூபணம் இஸ்லாத்தின் பரவலுக்கு அவசியம் என்பதை அவர்களும் உணர்ந்தே இருக்கிறார்கள்.
குரானின் மலையியல் மயக்கங்கள்.
மலைகள் பற்றி குரான் குறிப்பிடும் சில செய்திகள் விந்தையானவை. மதவாதிகள் வழக்கம் போலவே இதற்குள்ளும் அறிவியலை திரித்து இறக்கியிருக்கிறார்கள்.
பூமியை தொட்டிலாகவும் மலைகளை முளைகளாகவும் நாம் ஆக்கவில்லையா? குரான் 78:7 இதில் மலைகளை முளைகளாக ஆக்கியிருப்பதாக குரான் கூறுகிறது. இந்த வசனத்தில் மட்டுமல்லாது இன்னும் பல வசனங்களில் (15:19; 16:15; 21:31; 27:61; 31:10; 41:10; 79:32; 77:27) மலைகளை முளைகள் என குரான் குறிப்பிடுகிறது. ஒரு வேடிக்கை என்னவென்றால் குறிப்பிடப்பட்டிருக்கும் இந்த எல்லா வசனங்களிலும் மலைகளை முளைகளாகவே பிஜே அவர்கள் மொழிபெயர்த்த குரானில் குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் பிஜேவுக்கு முன்னரே மொழிபெயர்ப்பை வெளியிட்ட ஜான் டிரஸ்ட் வெளியீட்டில் 78:7 ஐ தவிர ஏனைய அனைத்து இடங்களிலும் முளைகளாக அல்ல மலைகளாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. மலைகளை முளைகளாக குறிப்பிடுவதில் உள்ள அறிவியல் என்ன?
நாம் வாழும் பூமி பலவித அடுக்குகளாக உள்ளது. ஒவ்வொரு அடுக்கும் வெவ்வேறு கனத்தில் அமைந்திருக்கிறது. வெவ்வேறு கனத்தில் பல்வேறு அடுக்குகளாக அமைந்துள்ள பூமி சுற்றிக்கொண்டேயிருக்கிறது. ஒரு சீரான வேகத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் பூமியில் எப்படி பல்வேறு அடுக்குகளும் அதே சீர்வேகத்தில் சுழல முடியும்? ஒவ்வொரு அடுக்கும் ஒவ்வொரு வேகத்தில் சுழலும் சாத்தியமுண்டல்லவா? ஆனால் அப்படி வெவ்வேறு வேகத்தில் சுழன்றால் பூமி பூமியாக இருக்குமா? உயிரினங்கள் நிலைத்து வாழ முடியுமா? இருப்பினும் அப்படி வெவேறு வேகத்தில் சுழலாமல் ஒரே வேகத்தில் எப்படி சுழல்கிறது என்றால், மலைகள் பூமியில் முளைகளாக நடப்பட்டு பல்வேறு அடுக்குகளையும் ஒன்றாக இறுக்கிப்பிடித்து வைத்திருப்பதனால் தான் பூமி ஒரே சீரான வேகத்தில் சுழல்கிறது. அதனால் தான் நாமெல்லாம் வாழ முடிகிறது. இவ்வளவு அற்புதமான இந்த அறிவியல் உண்மை, அண்மைக்காலங்களில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த விஞ்ஞானம் 1400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒருவருக்கு தெரிந்திருக்க முடியுமா? ஆனால் குரான் எவ்வளவு தெளிவாக இதை குறிப்பிடுகிறது. எல்லாவற்றையும் அறிந்த ஒரே இறைவனான அல்லாவைத்தவிர வேறு யாரால் இப்படி 1400 ஆண்டுகளுக்கு முன் கூறியிருக்க முடியும்? நாம் வாழும் இந்த பூமி பல அடுக்குகளாகத்தான் இருக்கிறது. ஆனால் மலைகள் முளைகளாக இறுக்கிப் பிடித்துவைத்திருப்பதால் தான் பூமியால் சீராக சுழலமுடிகிறது என்பது மதவாதிகளின் அசட்டுத் துணிச்சல். முதலில் பூமியின் அடுக்குகளைப்பார்ப்போம். பூமியை குறுக்குவெட்டுத் தோற்றத்தில் அதன் திணிவை மூன்றாக பிரிக்கலாம், ௧) இன்னர் கோர் ௨) அவுட்டர் கோர் ௩) மேண்டில். இதில் இன்னர் கோர் திடப்பொருளாகவும், அவுட்டர் கோர் பாறைக்குளம்பாக திரவப்பொருளாகவும், மேண்டில் கனிம வளங்களை உள்ளடக்கிய திடப்பொருளாகவும் இருக்கிறது. மேண்டிலை மட்டும் அணுக்கமாகப் பார்த்தால் ஏதினோஸ்பியர், லிதோஸ்பியர், க்ரஸ்ட் என்று சில அடுக்குகளாகப்பிரிக்கலாம். இவற்றில் க்ரஸ்ட் என்பதில் தான் நாம் காணும் கடல், மலை, நிலம் என்று அணைத்தும் உள்ளன. இந்த க்ரஸ்டின் கனம் அதிகபட்சம் நூறு கிமீ வரை இருக்கிறது. அதாவது எல்லா இடங்களிலும் நூறு கிமீ அளவுக்கு இல்லை சமமற்ற முறையில் ஏற்ற இறக்கங்களோடு அமைந்திருக்கிறது. சில இடங்களில் பத்து கிமீ இருக்கலாம், சில இடங்களில் 20, 30 என அதிகபட்சம் 100 கிமீவரை. இந்த அதிகபட்ச ஆழமானது மலைப்பகுதிகளில் இருக்கிறது. இதை வைத்துத்தான் இவர்கள் மலைகளை முளைகள் என்கிறார்கள். கவனிக்கவும் (படம்) மலைகளின் வேர்கள் எந்த அடுக்கையும் ஊடுறுவிச்செல்லவில்லை. மற்ற இடங்களை விட அதிக ஆழமாக இருக்கிறது அவ்வளவு தான். இதை முளை என்றும் எல்லா அடுக்குகளையும் இறுக்கிப்பிடித்திருக்கிறது என்றும் கூறுவதற்கு அசட்டுத்துணிச்சல் தேவைதான்.
குரான் வசனம் 16:15,16 பூமி உங்களை அசைத்துவிடாதிருக்க அதில் முளைகளையும், …………அமைத்தான்………. இந்த வசனத்தில் மலைகள் அதாவது முளைகள் இருப்பதால் தான் பூமி உங்களை அசைத்துவிடாதிருக்கிறது என்று கூறுகிறது குரான். மலைகள் என்று கொண்டாலும் முளைகள் என்று கொண்டாலும் இதில் பொருள் மயக்கம் வருவதில்லை ஆனால் சொற்றொடரின் பொருளோ மயக்கம் வரவைக்கும் அளவிற்கு இருக்கிறது. பூமி நம்மை அசைப்பதே இல்லையா? அவ்வப்போது அது நம்மை அசைத்து பல உயிர்களை கொள்ளையிட்டுக்கொண்டிருக்கிறது நிலநடுக்கம் எனும் பெயரில். தூரப்பகுதிகளை விட்டுவிடுவோம், மலைப்பகுதிகளிலாவது நிலநடுக்கம் வராமலிக்கிறதா? சில மாதங்களுக்கு முன் இத்தாலிய மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 300 பேர் வரை மரணமடைந்தனர். ஆனால் குரான் சொல்கிறது பூமி உங்களை அசைத்துவிடாதிருக்க மலைகளை அமைத்ததாக.
பூமியின் மேற்பரப்பு கண்டத்தட்டுகளாக அமைந்திருக்கிறது. நிலப்பகுதியிலும் கடல்களுக்கு அடியிலுமாக பூமி ஆபிரிக்க, அண்டார்ட்டிக்,ஆஸ்திரேலிய, யூரேசிய, வட அமெரிக்க, தென் அமெரிக்க, பசிபிக், கோகோஸ், நாஸ்கா, இந்தியா என்று பத்து பெரிய தட்டுகளாகவும்; இன்னும் சில சிறிய தட்டுகளாகவும் அமைந்துள்ளன. இந்த கண்டத்தட்டுகள் நகர்ந்துகொண்டிருக்கிறன. ஆண்டுக்கு ஒரு செமீ முதல் 13 செமீ வரை நகர்கின்றன. சில ஒன்றை ஒன்று விலகி நகர்கின்றன. சில ஒன்றுடன் ஒன்று மோதுகின்றன. இந்த நகர்வுகளை அல்லது அசைவுகளை மலைகள் கட்டுப்படுத்துகின்றனவா? மாறாக இந்தியத்தட்டு யுரேசியத்தட்டுடன் மோதுவதால் தான் இமய மலை தோன்றியது இன்னும் ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்துகொண்டும் இருக்கிறது. புவியியல் அமைப்புகள் இப்படி இருக்க, மலைகள் எந்த அசைவைக்கட்டுப்படுத்துகின்றன? குரானில் இதற்கு விளக்கம் ஒன்றுமில்லை, அல்லாவோ பதில் கூறப்போவதில்லை. பின் யார் இதை விளக்குவது? வாய்மையுள்ளவர்கள் விளக்கவும்.
பூமிக்குள் மனிதனால் எவ்வளவு ஆழத்திற்கு செல்லமுடியும்? அதிக அளவாக மூன்று கிமீ வரை சுரங்கம் அமைத்திருக்கிறார்கள். பத்து கிமீ க்கு அதிகமான ஆழத்திற்கு குழாய்களை இறக்கியிருக்கிறார்கள். மூன்று கிமீ க்கு கீழே மனிதர்கள் இறங்கவோ, இன்னும் ஆழமாக குழாய்களை இறக்கவோ தேவை ஒன்றும் இப்போதைக்கு ஏற்படவில்லை என்றாலும் இன்னும் ஆழமாக கீழே செல்வது சாத்தியக்குறைவானது தான். ஆழம் செல்லச்செல்ல அதிகரிக்கும் வெப்பம், ஆக்ஸிஜன் பற்றாக்குறை, நச்சு வாயுக்கள் என பல பிரச்சனைகள். ஆனால் செல்லமுடியாது என குரான் கூறியிருக்கிறது எனவே தான் செல்லமுடியவில்லை என அடித்துக்கூறுகிறார்கள் மதவாதிகள். பூமியை பிளந்து மலையின் உச்சியளவுக்கு மனிதனால் செல்லமுடியாது என குரான் உறுதியாக குறிப்பிட்டிருப்பதாக கதைக்கிறார்கள். பூமியில் உயரமான மலை இமயமலை, எவெரெஸ்ட் சிகரம் உயரம் சற்றேறக்குறைய 9 கிமீ. பூமியின் உயரமான மலையளவான இந்த அளவிற்கு பூமிக்குள் மனிதனால் செல்லமுடியாது என குரான் 1400 ஆண்டுகளுக்கு முன்பே கூறியது, இன்றுவரை யாராலும் செல்லமுடியவில்லை. இது குரான் இறைவனின் வெளிப்பாடுதான் என்பதை நிரூபிக்கிறதா இல்லையா? என்று விவரிக்கிறார்கள். குரான் அப்படி கூறியிருக்கிறதா?
“பூமியில் கர்வத்துடன் நடக்காதே! நீ பூமியை பிளந்து மலைகளின் உயரத்தின் அளவை அடையவே மாட்டாய்” குரான் 17:37. பிஜே அவர்களின் மொழிபெயர்ப்பு இப்படிக்கூறுகிறது. ஆனால் இதே வசனம் ஜான் டிரஸ்ட் வெளியீட்டில் இப்படி இருக்கிறதா? “நீர் பூமியில் பெருமையாய் நடக்கவேண்டாம். நிச்சயமாக நீர் பூமியை பிளந்துவிட முடியாது. மலையின் உச்சிக்கு உயர்ந்து விடவும் முடியாது.” இரண்டுக்கும் இடையில் எவ்வளவு வித்தியாசம்? கர்வம் பிடித்தலையும் மனிதர்களுக்கு குரானின் அறிவுரை இது பூமியை பிளந்துவிட முடியுமா? மலையின் உச்சிக்கு சென்றுவிட முடியுமா? எனவே உன்னை பெரிதாய் நினைத்து கர்வத்துடன் நடக்காதே. இதுதான் குரான் வாயிலாக முகம்மது சொல்லவருவது. ஒரு ஒப்பீட்டுக்காக கூறுவது. பின்னர் மனிதர்கள் மலையின் உச்சியை அடைந்து விடுவார்கள், பூமியை பிளந்து விடுவார்கள் (பிளப்பது என்றால் இரண்டு துண்டுகளாகவா?) என்பதெல்லாம் முகம்மதுவிற்கு தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனால் இதை எப்படி திரித்துவிட்டார்கள். எங்கள் மதம் அறிவியலை எதிர்க்காதமதம், அறிவியலை முன்னறிவித்த மதம் என்று காட்டுவதற்காக எந்தவித செயலையும் செய்வதற்கு இவர்கள் ஆயத்தமாக இருக்கிறார்கள் என்பதற்கான சான்றுகள் தான் இவை.
இத்தொடரின் முந்தைய பகுதிகள்
செங்கொடியும் பசுங்கொடிகளும்.
அஸ்ஸலாமு அலைக்கும், தயவுசெய்து கீழேயுள்ள லிங்கை பார்வையிடுங்கள். அதில் இஸ்லாம் விஞ்ஞானத்திற்கு எதிரானது என்று சில தமாஷான கட்டுரைகளை வெளியுட்டுள்ளார். முக்கியமாக தங்களுடைய குரான் மொழியாக்கத்தையும் அறிவியல் ஒப்பீட்டையும் தான் அதிகளவில் விமர்சனத்திற்கு எடுத்துள்ளார். நாத்திகர்கள் எடுத்துவைத்த வாதங்கள் போன்றுரிந்தாலும் இதற்கு பதில் கொடுப்பது அவசியம் என்று கருதுகிறேன். http://senkodi.wordpress.com/ மேலும், செங்கொடியின் தளத்திலேயே சில சகோதரர்கள் விவாதத்திற்கு அழைத்தும் அவர் மறுத்துவிட்டார். நண்பர் செங்கொடி அவர்களுக்கு, உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக.. முஸ்லீமாக பிறந்து, முஸ்லீம் பெயர் கொண்ட தாங்கள் இஸ்லாத்தை விமர்சனம் செய்வதன் மூலம் பிறபலம் அடையலாம் என்று தாங்கள் இஸ்லாத்தைப்பற்றி தவறாக எழுதி வருகிறீர்கள். கீழ்க்கண்ட விவாதத்திற்கு தாங்கள் தயாரா? இன்ஷா அல்லாஹ் வரும் அக்டோபர் 11,12 ஆகிய தேதியில் சென்னையில் வைத்து TNTJ PJ..அவர்களுக்கும் பகுத்தறிவாளர்களுக்கும் விவாதம் நடைபெறவுள்ளது. எனவே தாங்களோ அல்லது தங்கள் இயக்கம் சார்பாகவோ அதில் கலந்து விவாதிக்க விரும்பினால் ஏற்பாடு செய்து தருவேன். தலைப்பு 1. இறைவன் இருக்கிறான். அவன்தான் இப்பிரபஞ்சத்தை படைத்தான். 2.குர் ஆன் இறைவேதம். அதில் மூடநம்பிக்கையோ மனிதனுக்கு கேடு விளைவிப்பவையோ இல்லை. 3.சொர்க்கம், நரகம், மறுமை வாழ்க்கை உண்டு. இந்த ஒப்பந்த விவரம் அறியhttp://www.onlinepj.com/vimarsanangal/pakiranga_vivatham/ என்ற தளத்திற்கு சென்று (விமர்சனங்கள் பகுத்தறிவாளர்களுடன் பகிரங்க விவாதம் ) பார்க்கவும். அப்துல் லத்தீப் செங்கொடி, மேல் செப்டம்பர் 30th, 2009 இல் 10:38 மாலை சொன்னார்: நண்பர் அப்துல் லத்தீப் அவர்களுக்கு, தேதி குறிப்பிட்டு ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு அழைப்பது தான் முறையா? நீங்கள் தந்திருக்கும் சுட்டியில் பார்த்தேன். சென்னையில் நடைபெறவிருக்கும் இதில் என்னால் கலந்து கொள்ள இயலாது, காரணம் உங்களுக்கு தெரிந்ததுதான். மேலும் திராவிடர் கழகம் போன்ற ஒரு அமைப்பினருடன் சேர்ந்து விவாதத்தில் பங்கெடுப்பதும், அமைப்பிலிருந்து யாரேனும் பங்கெடுக்கலாமா என்பதும் கலந்து பேசித்தான் சொல்லமுடியும். என்னைப்பொருத்தவரை எப்போதும் நான் எழுத்து வடிவ விவாதத்திற்கு தயார். ஒரே நிபந்தனை, உங்களிடம் முன்பே கூறிய்து தான் இஸ்லாம் மட்டும் தான் சரியானது எனும் முன்முடிவை தவிர்த்துவிட்டு உங்கள் கொள்கைகளை பரிசீலனைக்கு உட்படுத்த தயாரா என்பது தான். தயாரென்றால் யாருடனும் எப்பொழுதும். இனி பதில் உங்கள் புறமிருந்து. தோழமையுடன் செங்கொடி// தங்களின் மேலான மறுப்புறையை மிக்க ஆவலுடன் எதிர்பார்த்து, இனிமை. Admin Rpl ? va alaikumus salam ஏற்கனவே ஒப்பந்தம் செய்து விட்டு அழைப்பது சரியா என்ற அவரது கேள்வி நியாயமானது. ஆனால் எழுத்து வடிவிலான விவாதம் மட்டுமே செய்வேன் என்பது கோழைத்தனமானது. நேரடி விவாதத்தில் தான் உடனுக்குடன் கேள்வி கேட்க முடியும். ஒருவர் சொல்வது தவறா என்பதை உடனே கண்டு பிடிக்க முடியும். எனவே செங்கொடி என்பவரோ அவரைச் சேர்ந்தவர்களோ தங்கள் கொள்கையில் உறுதியாக இருந்தால் இதற்குப் பயப்பட வேண்டியதில்ல. அவர்களே மூட நம்பிக்கையின் ஒட்டு மொத்த வடிவமாக இருப்பதால் நேருக்கு நேராக சந்திக்க பயப்படுகிறார்கள். அவர்களுடன் புதிதாக ஒப்பந்தம் செய்து விவாதம் செய்ய நாம் தயார். அடுத்து அவர் விதித்திருக்கும் நிபந்தனை கூட அறியாமையாக உள்ளது. இஸ்லாம் மட்டுமே சரியானது என்ற நிலையை மாற்றிக் கொண்டால் தான் விவாதிப்பேன் என்பது அந்தக் கேலிக் கூத்தான நிபந்தனை. இஸ்லாம் மட்டுமே சரியானது என்று தக்க ஆதாரத்துடன் நாம் நம்புவதால் தான் விவாதத்துக்கே அழைக்கிறோம். பரிசீலனைக்கு உரியது என்ற கருத்து இருந்தால் அதில் விவாதத்துக்கு தேவையே இல்லையே. தனது விவாத்தின் மூலம் அதை அவர் நிரூபிக்க வேண்டுமே தவிர விவாதத்துக்கு முன்பே தோற்று விட்டதாக எழுதிக் கேட்பது மடத்தனமானது இப்படி கூறுவதில் இருந்து இவர்களுக்கு பகுத்தறிவு இல்லை என்பது உறுதியாகிறது. இதற்கு எதிர்க் கருத்தாக இஸ்லாம் பரிசீலனைக்கு உரியது அல்ல என்று செங்கொடி அறிவித்தால் தான் விவாதிப்பேன் என்று நான் சொன்னால் அதற்கு அவரது பதில் என்ன? வேண்டுமானால் இஸ்லாம் பரிசீலனைக்கு உரியதா? இவர்களின் கொள்கை பரிசீலனைக்கு உரியதா என்ற தலைப்பில் முதலில் விவாதிக்கலாம். இதற்கு அவர் சம்மதிக்கிறாரா என்று கேட்டு எழுதுங்கள். பகுத்தறிவு என்ற போர்வையில் இவர்கள் செய்யும் மடமையைத் தோலுரிக்க நாம் தாயார். ************************************************************************************************
சில நாட்களுக்கு முன்பு பிஜே ஆன்லைன் எனும் தளத்தில் இடம்பெற்ற செங்கொடி குறித்த கேள்விபதில் இது. பல நண்பர்கள் இதுபோல் நேரடி விவாதத்திற்கு செல்லுங்கள் என்று பின்னூட்டமாகவும் தனி அஞ்சலாகவும் கேட்டிருந்தனர். ஏற்கனவே இது குறித்து பதில் கூறியிருப்பதால் இப்போது அவசியமில்லை என எண்ணியிருந்தேன். ஆனால் கடந்த இரண்டு நாட்களாக வரும் பின்னூட்டங்கள் இதையே மையப்படுத்தி இருந்ததால் மீண்டும் கூறுவதில் பிழையொன்றுமில்லை எனும் எண்ணத்தில் இதை எழுதுகிறேன். ஏற்கனவே நான் எழுதியவற்றை (கொஞ்சம் விரிவாக) தொகுத்து தருகிறேனேயன்றி புதிதாக இதில் ஒன்றுமில்லை.
இஸ்லாம் கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே என்ற பெயரில் நான் எழுதிக்கொண்டிருக்கும் தொடர்கட்டுரையை நான் எழுதுவதன் நோக்கம் குறித்து நுழைவு வாயில் எனும் பகுதியில் தெளிவுபடுத்தியிருந்தேன். இவ்வுலகில் மக்களின் துன்பங்களுக்கும், கொடுமைகளுக்கும் யார் காரணமாக இருக்கின்றனர்? அதை எவ்வழியில் தீர்க்கமுடியும்? என்பதை அறிந்துகொள்வதற்கு, இறந்தபிறகு கிடைப்பதாக நம்பப்படும் சொர்க்க நரகம் பற்றிய நம்பிக்கை தடையாக இருப்பதால் அதை தகர்க்கமுனையும் என்னளவிலான முயற்சிதான் இக்கட்டுரைகள். இது தொடர்பாக எழுப்பப்படும் ஐயங்களுக்கும் (அதில் சாறமிருந்தால்) விடையளித்துவருகிறேன். இன்னும் எழுப்பப்படுபவைகளுக்கு விடையளிப்பேன், அது கட்டுரையை எழுதுபவன் எனும் முறையில் என்னுடைய கடமையாகும். மாறாக இப்படி எழுதுவதால் குறிப்பிட்ட ஒருவருடன் நேரடி விவாதத்திற்கு போய்த்தான் ஆகவேண்டும் என்றால்…………
நேரடி விவாதம் என்பதும் எழுத்து விவாதம் என்பதும் விவாத வகைகளே, இதில் ஒன்று வீரமானது மற்றது கோழைத்தனமானது என்றெல்லாம் ஒன்றுமில்லை. இரண்டுக்கும் தனிப்பட்ட இயல்புகள் இருக்கின்றன. நேரடி விவாதம் என்பது ஒரே தளத்தில் நின்று வாதாடுபவர்களுக்கு பொருத்தமானது. எழுத்துவடிவ விவாதம் என்பது வேறுபட்ட தளங்களைச் சார்ந்தவர்களும் வாதிடுவதற்கு பொருத்தமானது. எடுத்துக்காட்டாக குரான் ஹதீஸின் அடிப்படையில் இருவர் வாதிட்டால், இருவருமே குரானின் வசனங்களிலிருந்தோ, ஹதீஸ் தொகுப்புகளிலிருந்தோ தான் மேற்கோள்களை காட்டுவர். இருவருமே அவைகளில் புலமையானவர்களாக இருப்பதினால் ஒருவர் கூறியதை மற்றொருவர் சரிபார்க்கவேண்டிய அவசியமில்லை. எனவே நேரடி விவாதம் இந்த இடத்தில் பொருத்தமாக இருக்கும். இஸ்லாமியர் ஒருவரும் கம்யூனிஸ்ட் ஒருவரும் விவாதம் செய்தால், குரானில் இந்த வசனம் இப்படி கூறுகிறது என ஒருவர் குறிப்பிட்டால் மற்றவர் அப்படி கூறப்பட்டிருக்கிறதா? என சரிபார்க்கவேண்டும். மூலதனத்திலிருந்தோ ஏனைய மார்க்ஸிய நூல்களிலிருந்தோ ஒருவர் சில மேற்கோள்களை காட்டினால் மற்றவர் அப்படி இருக்கிறதா என உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும். இதற்கு நேரடி விவாதத்தில் வாய்ப்பு இல்லை. ஒருவர் கூறுவதை நம்பி பதிலளிக்கவேண்டிய கட்டாயம் ஏற்படும். ஒருவர் எடுத்துவைக்கும் கருத்துகளுக்கான ஆதாரங்களை சான்றுகளை அது உலகின் எந்த மூலையிலிருந்தாலும் இணையத்தின் வாயிலாக சிரமமின்றி எடுத்துவைக்கலாம். நேரடி விவாதத்தில் இதற்கு வாய்ப்பு மிகமிகக் குறைவு. ஒருவர் தொடுக்கும் கேள்விகளை சிந்தித்து விளங்கி பதில் கூறுவதற்கான கால அவகாசம் நேரடி விவாதத்தில் கிடையாது. அந்த நேரத்தில் தோன்றுவதைக்கொண்டே பதில் கூறும் நிலை ஏற்படும். இதுபோன்ற இன்னும் பலவற்றினால் நேரடி விவாதத்தைவிட எழுத்து விவாதமே பொருத்தமாக இருக்கும் என நான் கருதுகிறேன். ஆனால் இதில் சில எதிர்க்கூறுகளும் உள்ளன. நேரடி விவாதம் விரைந்து முடிந்துவிடும் எழுத்துவிவாதம் நீண்டு கொண்டிருக்கும்.
விவாதிப்பதன் பலன் என்ன? யார் அறிவாளி, யாருக்கு அதிக விவரங்கள் தெரியும் என காட்டிக்கொள்வதற்கா? நிச்சயம் இல்லை. சரியானவைகளை தேர்ந்தெடுத்துக்கொள்வதற்கும், நடப்பு நிலையை உரசிப்பார்ப்பதற்குமான உரைகல். தன்னுடைய நிலையை பரிசீலனைக்கு உட்படுத்தமாட்டேன் என்று கூறும் யாரும் விவாதத்தில் பதில் கூற முனைவாரே தவிர உண்மைகளை உணர்ந்து கொள்ள முன்வரமாட்டார்கள். என்னைப்பொருத்தவரை நான் பலருடன் விவாதத்தில் ஈடுபட்டுள்ளேன் (கவனிக்கவும் நேரடி விவாதத்தில்) முதலில் நான் எடுத்துவைப்பதே, கம்யூனிசம் தவறு என என்னை நீங்கள் உணரச்செய்துவிட்டால் உங்கள் ஓரிறைக்கொள்கையை ஏற்றுக்கொண்டு தொழ வருவதற்கு நான் தயார். அதே நேரம் இஸ்லாம் தவறு என உங்களை நான் உணரச்செய்துவிட்டால் இஸ்லாத்தை விட்டுவிடுவதற்கு நீங்கள் முன்வருவீர்களா? என்பது தான் என்னுடைய முதல் கேள்வியாக இருக்கும். இதுவரை யாரும் இதை ஏற்றுக்கொண்டவர்களும் இல்லை கம்யூனிசம் தவறு என நிரூபித்தவர்களும் இல்லை. இதே அடிப்படையில் தான் நண்பர் அப்துல் லத்திப் அவர்களின் பின்னூட்டத்திற்கு பதிலளிக்கையிலும் கூறியிருந்தேன். இஸ்லாம் பொய் என்று எழுதித்தந்தால் தான் விவாதிப்பேன் என நான் கூறவில்லை மாறாக விவாதத்தின் முடிவில் உங்களுடைய நிலையை நிரூபிக்கமுடியாமல் போனால் உங்கள் கொள்கைகளை பரிசீலனைக்கு உட்படுத்துவீர்களா? என்பது தான் கேள்வி. இங்கு தோல்வி என்று ஒன்றுமில்லை. பரிசீலனைக்கே முன்வரமாட்டோம் என்பவர்களோடு விவாதிப்பதில் பயன் என்ன? மூடநம்பிக்கையின் மொத்தவடிவமாக இருப்பதால்தான் பயப்படுகிறீர்கள் என்று பதிலும் பல பின்னூட்டங்களும் தங்களை மறைத்துக்கொள்கின்றன. நான் நேரடி விவாதத்திற்கு வரமாட்டேன் என சொன்னதில்லை. எழுத்துவடிவ விவாதம் சிறந்தது என்று தான் கூறுகிறேன். நேரடி விவாதத்திற்கும் நான் தயாரகவே உள்ளேன். ஆனால் இப்போது இயலாது, காரணம் நான் இந்தியாவில் இல்லை. வாய்ப்பு கிடைக்கும் போது நானே உங்களை தொடர்புகொள்கிறேன் என முன்பு நண்பர் ஷேக் தாவூது அவர்களின் தளத்திலேயே பின்னூட்டம் இட்டுள்ளேன். மாறாக எங்கள் இயக்கத்தவர்களுடன் பேசி ஏற்பாடு செய்யுங்கள் என்றால் அது என்னுடைய வேலை இல்லை. அவசரம், அவசியம் என்றால் தொலைபேசி இலக்கம் தருகிறேன், நேரடியாக பேசிக்கொள்ளலாம்.
என்னைப் பொருத்தவரை நேரடி விவாதமானாலும், எழுத்துவடிவ விவாதமானாலும் நான் ஆயத்தமாகவே உள்ளேன். எழுத்து வடிவ விதமென்றால் இந்த நொடியிலிருந்தே, நேரடி விவாதமென்றால் இப்போது நாள் குறிக்கமுடியாது. இது தான் என்நிலை. பிஜே அவர்கள் தளத்தில் நிறைய விவாதங்கள் இருக்கின்றன, நேரடியும் எழுத்தும் கலந்து. அப்படி இருக்கும் போது நேரடியாக வந்தால் மட்டுமே என்பது ஏன்? எழுத்து வடிவில் தொடங்கலாம்.
இவ்வாறு ஒரு இடுகையை இடுவதற்கு காரணமான நண்பர் இனிமை அவர்களுக்கும், ஏனைய நண்பர்களுக்கும் நன்றி.
விண்வெளி குறித்த அல்லாவின் பண்வெளிகள்
கீழ்காணும் குரானின் வசனங்களை கூர்மையாக படித்துப்பாருங்கள். (திரும்பத்திரும்ப) பொழியும் மழையை உடைய வானத்தின் மீது சத்தியமாக… குரான் 86:11
……..வானங்கள் பூமி ஆகியவற்றின் எல்லைகளை கடந்து செல்ல நீங்கள் சக்தி பெருவீர்களாயின் ஆனால் அதிகாரமும் இல்லாமல் நீங்கள் கடக்கமுடியாது குரான் 55:33
அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகின்றானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக விசாலமாக்குகிறான் யாரை அவன் வழிகெடுக்க நாடுகிறானோ அவருடைய நெஞ்சை வானத்தில் ஏறுபவரை போல இறுகிச்சுருங்கும் படி செய்கிறான். குரான் 6:125 இவைகளெல்லாம் விண்வெளி குறித்து குரானில் கூறப்படும் வசனங்களில் சில. மேற்கண்ட இந்த வசனங்களிலெல்லாம் மிகப்பெரிய அறிவியல் உண்மை சொல்லப்பட்டிருப்பதாக உங்களுக்கு தெரிகிறதா? ஆனால் இன்றைய அறிவியல் கண்டுபிடித்துள்ள அரிதான பல உண்மைகளை இந்த வசனங்கள் உள்ளடக்கிக் கொண்டிருப்பதாக மதவாதிகள் கூறுகிறார்கள்.
வசனம் 86:11 ஐ எடுத்துக்கொள்வோம் ‘பொழியும் மழையை உடைய’ என்பதில் ஒன்றுமில்லை. அதற்கு விளக்கமாக அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டிருக்கும் திரும்பத்திரும்ப என்பதில் தான் மதவாதிகள் கண்டுபிடித்த அறிவியல் ஒழிந்துகொண்டிருக்கிறது. மழை திரும்பத்திரும்ப வருகிறது, இதில் என்ன அறிவியல் இருக்கிறது? ஆனால் பிஜே அவர்களின் மொழிபெயர்ப்பில் இது திரும்பத்தரும் வானம் என்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. வானம் எதை திரும்பத்தருகிறது? மழையை திரும்பத்தருகிறது. ஆயிரத்து நாநூறு ஆண்டுகளுக்கு முன்னால் இது யாருக்காவது தெரியுமா? ஒருவருக்கும் தெரியாது. மழையை மட்டுமா திருப்பித்தருகிறது? தொலைபேசி தொலைகாட்சி அலைவரிசைகள் வானத்திற்கு அனுப்பப்பட்டு மீண்டு நமக்கு திரும்பக்கிடைக்கிறது. வானத்தை திருப்பித்தரும் தன்மையோடு படைத்திருப்பதால் தான் இவைகளெல்லாம் சாத்தியமாகின்றன. இந்த அறிவியல் உண்மையை குரான் அன்றே கூறிவிட்டது.
அனுப்பப்படும் அலைவரிசைகளை வானம் திருப்பி அனுப்புகிறதா அல்லது நிலைநிருத்தப்பட்டிருக்கும் செயற்கைக்கோள்கள் திருப்பி அனுப்புகின்றனவா என்பது எலோருக்கும் தெரிந்தது தான். ஆனால் வானம் திருப்பி அனுப்புவதாக கூறிக்கொண்டு அதையே மாபெரும் அறிவியல் உண்மையாக கூறுவதை என்னவென்பது. பூமியிலுள்ள நீர்நிலைகளின் நீர் தான் மேகமாகி மழையாகிறது என்பதை பத்துப்பாட்டில் வரும் முல்லைப்பாட்டின் பாடிமிழ் பனிகடல் பருகி எனத்தொடங்கும் பாட்டு தெரிவிக்கிறது. முல்லைப்பாட்டின் காலம் கிபி இரண்டாம் நுற்றாண்டு. ஒருவேளை அல்லா முகம்மதுவுக்கு கொடுக்கும் முன்பே நப்பூதனாருக்கு கொடுத்துவிட்டாரோ.
வசனம் 55:33 ல் ‘வானங்கள் பூமி ஆகியவற்றின் எல்லைகளை கடந்து செல்ல’ என்று வருவதை இன்று மனிதன் விண்வெளிக்கு சென்றுவருவதோடு பொருத்தி இதை 1400 ஆண்டுகளுக்கு முன்பே குரான் கூறிவிட்டது என்று இன்னொரு அறிவியலை அவிழ்த்து விடுகிறார்கள். இந்த வசனத்தில் அதிகாரம் என வரும் சொல்லை ‘வல்லமையும் என் அனுமதியும்’ என்று விளக்குகிறார்கள். அதாவது அல்லா அனுமதிக்கும் காலத்தில் ஒரு குறிப்பிட்ட வல்லமையை பெற்றபிறகு தான் செல்லமுடியும் என்று பொருளாம். இந்த வல்லமை தான் விடுபடு வேகம் என்று கூறுகிறார்கள். பூமியின் புவியிர்ப்பு விசையை மீறி நாம் விண்ணில் செல்லவேண்டுமென்றால் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் சென்றால் மட்டுமே புவியை தாண்டிச் செல்லமுடியும். அதற்கு குறைவான வேகத்தில் சென்றால் புவியின் காற்று மண்டல எல்லைக்குள்ளேயே சுற்றிக்கொண்டிருக்க வேண்டியது தான். இந்த விடுபடு வேகம் குறித்த அறிவியலைத்தான் அந்த வசனம் சொல்கிறது என்று சத்தியம் செய்கிறார்கள். இந்த வசனத்தில் வானங்கள் என்றும் வருகிறது. ஒருவேளை நம்முடைய பிரபஞ்சத்தைப்போல் இன்னும் பல பிரபஞ்சங்கள் இருந்து அவைகளுக்கும் மனிதன் போய்வருவான் என்று குரான் கூறுகிறதோ. நம்பமுடிந்தவர்கள் நம்பிக்கொள்ளலாம்.
அடுத்த வசனமான 6:125 ல் அல்லா ஐன்ஸ்டினுக்கு முன்பே சார்பியல் கோட்பாட்டை கற்றுத்தருகிறார். இந்த வசனம் ஒருவர் இஸ்லாத்தை ஏற்பதும் மறுப்பதும் என்னுடைய விருப்பமின்றி நடைபெற இயலாது என அல்லா கூறுவதாக வருகிறது. அல்லா ஒருவனின் இதயத்தை விரித்துவிட்டால் அவன் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வான். அவனின் இதயத்தை சுருக்கிவிட்டால் அவனால் இஸ்லாத்தை ஏற்கமுடியாது. இது தான் இந்த வசனம் கூறும் செய்தி. இதில் இதயத்தை சுருக்குவதற்கு ஒரு உவமை கூறப்படுகிறது, வானத்தில் ஏறிச் செல்பவனைப்போல என்று. இந்த உவமையில் தான் விஷயம் இருக்கிறது. ஐன்ஸ்டினின் பொது சார்பியல் கோட்பாட்டில் ஒரு விதி வருகிறது. ஒரு பொருளின் விரைவைப் பொருத்து அதன் உருவம் சுருங்கும் ஆற்றல் கூடும். உருவம் சுருங்குவதையும் ஆற்றல் கூடுவதையும் சாதாரண வேகத்தில் உணரமுடியாது. ஒளியின் வேகத்திற்கு (ஒளியின் வேகம் நொடிக்கு மூன்று லட்சம் கிமி) அருகில் விரையும்போது தான் அதை உணர முடியும். இதுதான் ஐன்ஸ்டினின் பொது சார்பியல் கோட்பாடு. இந்த அறிவியல் அந்த வசனத்தில் இருக்கிறதா? சாதாரணமாக உயரத்தில் ஏறி நின்று பார்த்தால் மனிதனுக்கு ஒரு அச்சம் வரும், இந்த அச்ச உணர்வைத்தான் இதயம் சுருங்குதல் நெஞ்சு சுருங்குவது என்று முகம்மது விவரித்திருக்கிறார். இதில் சுருங்குதல் என்ற வார்த்தையை மட்டும் எடுத்துக்கொண்டு அதை சார்பியல் கோட்பாடாக்கி விட்டார்கள். ஒரு கொள்கையை ஏற்பதற்கும் மறுப்பதற்கும் நெஞ்சு அல்லது இதயத்தின் பங்களிப்பு ஒன்றுமில்லை. இதயம் ரத்தத்தை உடலெங்கும் செலுத்துவதற்கு பயன்படும் ஒரு உறுப்பு எனும் அறிவியல் தெரியாமல் இறக்கப்பட்ட வசனமல்லவா இது? ஒரு பாதியை மட்டும் எடுத்துக்கொண்டு சார்பியல் கோட்பாடாக்கி விட்டார்களே, மறு பாதியையும் எடுத்துக்கொண்டால் இஸ்லாத்தை ஏற்காவிட்டால் ஆற்றல் கூடிவிடும் என்றாகிறதே. ஒருவேளை அல்லா அப்படித்தான் கூறியிருப்பாரோ.
புதிதாக வெளிவரும் குரானின் மொழிபெயர்ப்புகள் அறிவியல் கூறுகளை உள்ளடக்கிய வசனங்களாகவே வெளிவருகின்றன. பழைய மொழிபெயர்ப்புகளைக் காட்டிலும் புதிய மொழிபெயர்ப்புகளை செய்பவர்கள் அறிவியல் இல்லாமல் வெறும் ஆன்மீக குரானை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்யவியலாது என்பதை உணர்ந்திருக்கிறார்கள் என்பதே இதன் பொருள்.
கோள்களும் அதன் விசையும் குரானின் தேற்றங்கள்.
வானத்திலிருக்கும் பற்பல கோள்களிடையே தொழிற்படும் விசைகள் குறித்து நியூட்டன் விரிவாக விளக்கியிருக்கிறார். நியுட்டனின் தேற்றங்களைப் போல் அவர் அறிந்து வெளிப்படுத்துவதற்கு முன்பே யாருக்கும் அறியாமல் குரான் விளம்பியிருப்பது உங்களுக்கு தெரியுமா? ஆம் குரானின் தேற்றங்களை பாருங்கள்.
நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி வானங்களை அல்லாஹ்வே உயர்த்தினான்……….. குரான் 13:2; 31:10.
இந்த வசனத்தில் கூறப்பட்டிருக்கும் ‘பார்க்கின்ற தூண்களின்றி’ என்பதன் பொருள் தெரியுமா? அதன் பொருள் தான் ஈர்ப்புவிசை. புவி ஈர்ப்பு விசை என்றால் வானத்திற்கும் பூமிக்கும் இடையிலிருக்கும் கண்களால் பார்க்கமுடியாத தூண் என்று பொருள். மேல்நோக்கி எறியப்பட்ட பொருள் ஏன் மீண்டும் புவியை நோக்கி வரவேண்டும் என்று தேவையில்லாமல் சிந்தித்த நியூட்டன் அதற்குப்பதிலாக குரானைப் படித்திருந்தால் இன்னும் சுலபமாக தன்னுடைய விண் பொருட்களுக்கு இடையேயான ஆற்றல்கள் குறித்த அறிவியல் விதிகளை தந்திருக்கலாம். அறிவியல் வளராத காலங்களில் அனுபவம் அதிகம் பெற்ற முதியவர்களிடம் தங்கள் ஐயங்களை இளையவர்கள் கேட்ப்பார்கள். நீண்ட தூரம் போனால் என்னவாகும்? பூமி முடிந்து கீழே விழுந்து விடுவோம். காற்று எப்படி வீசுகிறது? பொழுது போகாத தேவதைகள் வானிலிருந்து காற்றை வாயால் ஊதுகிறார்கள். சூரியனும் சந்திரனும் எப்படி அந்தரத்தில் நிற்கின்றன? தூண்கள் தாங்கிக்கொண்டிருக்கின்றன. அப்படி தூண்கள் இருப்பதாக தெரியவில்லையே? என்று சிறுவர்கள் கேட்டால் தலையில் குட்டி வீட்டுக்கு அனுப்பினார்கள். ஆனால் முகம்மது பார்க்கமுடியாத தூண்கள் என்று வசனத்தை கட்டி அனுப்பிவிட்டார். இன்றோ அது ஈர்ப்புவிசை எனும் அறிவியல் ஆடை கட்டிக்கொண்டு வந்துநிற்கிறது. ஒரு கோளின் ஈர்ப்புவிசை என்றால் அது அந்தக்கோளின் எல்லா இடத்திலும் இருக்கும், வானமும் சூழ இருக்கிறது. சூழ இருக்கும் வானத்துடன் எல்லா இடங்களிலும் இணைக்கப்பட்டிருக்கும் ஒன்றை தூண்கள் என்று ஒப்பீடு செய்வது சரியாக இருக்குமா? தூண் என்றால் ஒரு இடத்தில் இருக்கும் இன்னொரு இடத்தில் இருக்காது. ஒன்றை ஒன்று தாங்கிப்பிடிப்பதற்கு எல்லா இடத்திலும் தூண்களாகவே இருக்கவேண்டும் என்பது அவசியமில்லை. பூமிக்கு புவியீர்ப்பு விசை இருக்கிறது இதைத்தான் குரான் பார்க்கமுடியாத தூண் எனக் குறிப்பிடுகிறது என்றால், இரண்டு தூண்களுக்கிடையே இடைவெளி போல் புவியில் ஈர்ப்புவிசை செயல்படாத இடமும் இருக்கிறதோ?
தாங்கிப்பிடிக்கிறது, விலகிவிடாமல் இருக்க உதவுகிறது என்பதற்கு தூண் எனும் குறியீடு ஓரளவு பொருந்துவதாகவே கொள்வோம். ஆனால் ஈர்ப்புவிசை என்றால் தன்வசம் பொருட்களை ஈர்க்க வேண்டுமே, மேலே எறிந்த பொருள் செலுத்து வேகம் தீர்ந்ததும் திரும்ப வரவேண்டுமே, இதை எப்படி தூண்களோடு ஒப்பிடுவது? இது ஒரு புறமிருக்கட்டும் இதே வசனம் வேறொரு குரானில் “அவன் வானங்களை தூணின்றியே உயர்த்தியுள்ளான் நீங்கள் அவற்றை பார்க்கிறீர்கள்.” என்று இருக்கிறது.
……..சூரியனையும் சந்திரனையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதை நீர் அறியவில்லையா? ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலக்கெடுவரை சென்று கொண்டிருக்கும்……..குரான் 31:29 முதலில் நியுட்டனின் ஈர்ப்புவிசை இப்போது கோப்பர்நிகஸின் கோள்களின் இயக்கம். குரானில் இருப்பதெல்லாம் அறிவியல் கூறுகள் தான் என்று நிரூபிக்கவேண்டுமென்றால், குரான் எழுதப்பட்டுக் கொண்டிருந்த காலம் அறியாமை இருளில் மூழ்கிக் கிடந்த காலமாக இருக்கவேண்டும். மதவாதிகள் அந்த அடிப்படையில்தான் எல்லாவற்றையும் தொடங்குவார்கள். இஸ்லாத்திற்கு முந்தைய அரேபியாவை குறிப்பதற்கு அறியாமைக்காலம் எனும் சொல்லைத்தான் பயன்படுத்துகிறார்கள். அதன்படி அந்தக்கால மக்கள் பூமி தட்டை என நினைத்துக்கொண்டிருந்தார்கள் என்று கூறுவார்கள், ஏனென்றால் குரான் உருண்டை எனக்கூறுவதாக விளக்கினால்தான் அறிவியல் என்று கூறமுடியும். அந்த வழியில்தான் விண்ணின் கோள்கள் எல்லாம் அப்படியே நிலையாக நின்றுகொண்டிருக்கிறது என்று எண்ணிக்கொண்டிருந்த காலத்தில் இப்படி ஒரு வசனத்தை இறக்கியவன் எல்லாம் அறிந்த இறைவனாகத்தானே இருக்கமுடியும்? என்று வியக்கிறார்கள். ஆனால் விண்ணின் கோள்கள் எல்லாம் சுழன்று சுற்றிக் கொண்டிருந்தன. ஒவ்வொரு கோள்களின் இடைப்பட்ட தூரங்கள் என்ன என்பதை எல்லாம் அரிஸ்டார்க்கஸ் (கிமு320-250) ஹிப்பார்க்கஸ் (கிமு 190-120) காலத்திலேயே உலகம் அறிந்திருந்தது. ஆனால் இவர்களோ குரான் தான் எல்லாவற்றையும் அறியாமைக்காலத்திலேயே சொல்லிவிட்டதாக கதையளந்து கொண்டிருக்கிறார்கள். மெய்யாகவே இதுபோன்ற வசனங்கள் அறிவியலை கொண்டிருக்கிறதா என்றால் இல்லை என்பது தான் உண்மை. எல்லாம் அல்லாவால் படைக்கப்பட்டவை என்பதுதான் அல்லா குறித்த வல்லமை, அதிகாரம், இஸ்லாத்தின் அடிப்படை. நியாயத்தீர்ப்பு நாளில் எல்லாவற்றையும் அழித்து மனிதர்களை உயிரோடு எழுப்புதல் எனும் மதக்கற்பனையைத்தான் ‘குறிப்பிட்ட காலக்கெடுவரை சென்று கொண்டிருக்கும்’ என்பனபோன்ற வாக்கியங்கள் சொல்கின்றனவேயன்றி, இங்கு அறிவியலுக்கு ஒரு இடமும் இல்லை.
“சூரியன் அதற்குரிய இடத்தை நோக்கிச்சென்று கொண்டிருக்கிறது” குரான் 36:38 என்றொரு வசனம். இந்த ஒற்றை வசனம் இரண்டு அறிவியல் பேருண்மைகளை உணர்த்துகிறது என்று விதந்தோதிக் கொண்டிருக்கிறார்கள். ஒன்று, பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டிருக்கிறது எனும் அண்மைகால அறிவியலை தான் இந்த வசனம் சூரியன் சென்றுகொண்டிருப்பதாக சொல்வதன் மூலம் உணர்த்துகிறது. இரண்டு, சூரியனின் ஆயுட்காலம் இன்னும் 300 கோடி ஆண்டுகள் தான் அதன்பின் செம்பூதமாகி, தன் ஆற்றலை படிப்படியாக இழந்துவிடும் இதைத்தான் அதற்குரிய இடத்தை நோக்கி எனும் வார்த்தைகள் மூலம் உணர்த்துகிறது. இப்படி இவர்கள் அந்த வசனம் சுமக்கமுடியாமல் தள்ளாடும் அளவிற்கு அதன் தலையில் அறிவியலை ஏற்றிவைக்க, குரானை எழுதிய முகம்மது இந்த வசனத்திற்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு பொருளைச்சொல்கிறார். புகாரி ஹதீஸ் எண் 3199 அபூ தர் எனும் முகம்மதின் தோழர் அறிவிக்கிறார்,” நபி(ஸல்) அவர்கள் சூரியன் மறையும் நேரத்தில் அது எங்கு செல்கிறது என்று தெரியுமா? என என்னிடம் கேட்டார்கள். அதற்கு நான் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் என்றேன். நபி அவர்கள், அது அர்ஷுக்கு கிழே சஜ்தா செய்வதற்காக செல்கிறது. அங்கு அது மீண்டும் கிழக்கில் உதயமாவதற்கு அனுமதி கேட்கிறது. உடனே அனுமதி அளிக்கப்படுகிறது. ஒரு நாள் அது சஜ்தா செய்ய அது ஏற்க்கப்படாமல் வந்த வழியே திரும்பிச்சென்றுவிடு என்று கூறப்படும். அதன்படி அது மேற்கிலிருந்து உதயமாகும். இதைத்தான் சூரியன் அதற்குரிய இடத்தை நோக்கிச்சென்று கொண்டிருக்கிறது. அது பேரறிவாளனான வல்லமை மிக்கவனின் நிர்ணயமாகும் எனும் 36:38ம் இறைவசனம் குறிக்கிறது என்றார்கள்.
குரானை எழுதிய இவர்களின் நம்பிக்கைப்படி அல்லாவிடமிருந்து மக்களுக்காக குரானை கொண்டுவந்த தூதரின் விளக்கம் இப்படி இருக்கிறது, ஆனால் இவர்களோ குருவி தலையில் பனங்காயை இல்லையில்லை யானையையே ஏற்றி வைக்கிறார்கள்.
பாலும் தேனும் அல்லாவின் வேதத்தின் பாடுகள்
பாலும் தேனும் உலகின் அனைத்து இலக்கியங்களிலும் பழமையான நூல்களிலும் சிறந்த உணவுப் பொருட்களாகவும் மருத்துவ குணம் கொண்டவைகளாகவும் சிறப்பிக்கப்பட்டுள்ளன. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மம்மி எகிப்தில் கண்டெடுக்கப்பட்டபோது அதனுடன் தேனும் இருந்ததாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த பாலும் தேனும் எப்படி உற்பத்தி செய்யப்படுகின்றன? அதாவது கால்நடைகள் அல்லது மாடு தன்னுடைய உடலிலிருந்து பாலை எப்படி பிரித்தெடுக்கிறது? தேனீக்கள் பூக்களில் சேகரிக்கும் திரவத்தை எப்படி தேனாக்குகிறது? என்பது குறித்து பழைய இலக்கிய நூல்களில் இருப்பதாக தெரியவில்லை.(தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லலாம்) செயற்கையாக பால் உற்பத்தி, தேன் உற்பத்தி என்று உணவுப்பண்டங்களை வர்த்தகப் பண்டமாக்கும் தேவை அப்போது இருந்திருக்கவில்லை.
தெரியாத விஷயங்களான இவைகளை அல்லா தன்னுடைய வேதத்தில் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே சொல்லியிருப்பதால், அதாவது அவற்றின் உற்பத்தி குறித்த அறிவியல் வளராத காலத்திலேயே சொல்லியிருப்பதால் இது இறைவனின் வேதம் தான் என்பதற்கு அத்தாட்சியாக உள்ளது. இது மதவாதிகளின் கோணம். பாலும் தேனும் பற்றி என்ன சொல்லியிருக்கிறது குரானில்?
……அவற்றின் வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்தத்திற்கும் இடையிலிருந்து கலப்பற்ற பாலை அருந்துபவர்களுக்கு இனிமையானதாக புகட்டுகிறோம். குரான் 16:66
……அதன் வயிற்றிலிருந்து பலவிதமான நிறங்களையுடைய ஒருவித பானம் வெளியாகிறது…….. குரான் 16:69
வயிற்றிலுள்ள சாணத்திற்கும் இரத்தத்திற்கும் இடையிலிருந்து என்பது பால் உற்பத்தியாகும் இடமாக குரான் குறிப்பிடுவது. பால் உற்பத்தியாவது மார்பகங்களிளிருந்து அதாவது மடுக்களிளிருந்து தானே என்பவர்கள் மதவாதிகள் எடுக்கும் அறிவியல் வகுப்புகளையும் கவனிக்கவேண்டும். முன் காலத்தில் இரத்தம் தான் பாலாக மாறுகிறது என்று மக்கள் நம்பி வந்தனர். உண்ணப்படும் உணவானது கூழாக அரைக்கப்பட்டு அதிலுள்ள சத்துக்கள் குடல்களினால் உறிஞ்சப்பட்டு அது தான் பாலாகவும் இரத்தமாகவும் இன்ன பிற பொருட்களாகவும் மாறுகிறது. அதாவது அரைக்கப்பட்ட உணவுக்கூழுக்கும், இரத்தமாக மாறுகின்ற நிலைக்கும் இடைப்பட்ட நிலையிலிருந்து தான் பால் உற்பத்தியாகிறது. இதுதான் சாணத்திற்கும், இரத்தத்திற்கும் இடையிலிருந்து எனும் குரான் வசனத்திற்கு மதவாதிகளின் விளக்கம். இவர்கள் சொல்லும் இந்த அறிவியல் ஓரளவுக்கு சரியானது தான். ஆனால் இது பாலுக்கு மட்டும் அல்ல, உடலின் அனைத்து ஆற்றலும் இந்த பரிமாற்றத்தின் மூலம் தான் கிடைக்கிறது. நடப்பதற்கான சக்தி எங்கிருந்து கிடைக்கிறது? சாணத்திற்கும் இரத்தத்திற்கும் இடையிலிருந்து கிடைக்கிறது. கறிக்கோழியின் இறைச்சி எப்படிக்கிடைக்கிறது? சாணத்திற்கும் இரத்தத்திற்கும் இடையிலிருந்து கிடைக்கிறது. சரிதான், உயிரினங்கள் அனைத்திற்கும் அது இயங்குவதற்கு தேவையான அனைத்து ஆற்றல்களையும் அது உண்ணும் உணவிலிருந்து தான் பெற்றுக்கொள்கின்றன. அந்த உணவு வயிற்றில் அரைத்து கூழாக்கப்பட்டு குடல்களினால் சத்துக்கள் உறிஞ்சப்பட்டு தேவைப்படும் ஆற்றல்களாக மாற்றப்படுகின்றன. எஞ்சிய சக்கைகள் கழிவுகளாக வெளித்தள்ளப்படுகின்றன. இது பொதுவான அறிவியல். ஆனால் பால் எப்படி உற்பத்தியாவதாக அறிவியல் கூறுகிறது?
பிரசவ நேரம் நெருங்கியதும் புரோலாக்டின் எனும் ஹார்மோன் சுரக்க ஆரம்பிக்கிறது, இந்த புரோலாக்டின் மடுக்களை அடைந்ததும், ஆரஞ்சு சுளைகளை பிரித்துப்பார்த்தால் அதில் நெருக்கமாக இருக்கும் மொட்டுக்களைப்போல் மடுக்களில் இருக்கும் அல்வியோல் எனும் சுரப்பிகள் ஒரு வித திரவத்தை சுரக்கின்றன. இது தான் காம்புகள் வழியாக வெளியேற்றப்பட்டு பால் என அழைக்கப்படுகிறது. சாணத்திற்கும் இரத்தத்திற்கும் இதில் நேரடியாக தொடர்பு ஒன்றுமில்லை. காம்புகளிளிருந்து கரக்கப்படுவது தான் பால் என்பது அனைவரும் அறிந்தது தான், முகம்மதுவும் கூட. அதை வித்தியாசமாக சொல்ல நினைத்த முகம்மது, உடலில் எங்கிருந்தோ உற்பத்தியாகி வருகிறது எனும் நினைப்பில் சாணத்திற்கும் இரத்தத்திற்கும் இடையிலிருந்து என்று பொதுவாக சொல்லி வைத்திருக்கலாம். அறிவியல் பூர்வமாக சொல்லவேண்டும் என்ற தேவை அன்று அவருக்கில்லை. ஆனால் இன்று இருக்கிறது.
தேனீயின் வயிற்றிலிருந்து தேன் வெளிப்படுகிறது. அந்தக்காலத்தில் தேனீ மலர்களிலுள்ள தேனை வாயினால் உறிஞ்சி கொண்டுவந்து அடைகளில் சேர்த்து வைக்கிறது என்று நம்பிக்கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் வந்த குரான் வசனமோ வயிற்றிலிருந்து எனும் சொல் மூலம் நீங்கள் நம்பிக்கொண்டிருப்பது உண்மையல்ல என்று அறிவியலை பேசுகிறது. இக்கால அறிவியலும் அதையே நிரூபித்திருக்கிறது என்கிறார்கள் மதவாதிகள். ஆனால் முகம்மதின் குரான் அறிவியலை பேசவும் இல்லை, குரான் சொல்வது போல அறிவியல் சொல்லவும் இல்லை என்பதே உண்மை.
குரான் தேனீயின் வயிற்றிலிருந்து தேன் வெளிப்படுவதாக கூறுகிறது. வயிற்றிலிருந்து வெளிப்படுவதாக இருந்தால் உணவாக உண்டது செரித்து கழிவாக வெளிப்படுவதாக இருக்கும். தேனீ ஏன் தேனை சேமிக்கவேண்டும் எனும் ஆதாரக் கேள்வியோடு இது முரண்படுகிறது. வெயிர்காலங்களில் சுறுசுறுப்பாக செயல்படும் தேனீக்கள், குளிர்காலங்களில் சேமித்த தேனையே உணவாகக் கொள்கிறது. கூட்டிலிருக்கும் ராணித்தேனீ, ஆண் தேனீக்களின் உணவும் தேன் தான், அதாவது வேலைக்காரத் தேனீக்கள் மட்டும்தான் தேனை சேகரிக்கின்றன. ஏனைய தேனீக்கள் அதை உண்கின்றன. என்றால் தேனீக்கள் தங்களின் கழிவுகளையே மீண்டும் உண்கின்றனவா? அவ்வாறல்ல, தேனீக்கள் உணவாக தேனை உண்ணும் போது வயிற்றுக்கும், சேகரிக்கும் போது வேறொரு பையிக்கும் அனுப்புகின்றன. வேலைக்காரத் தேனீயின் உடலில் தேனை செரிப்பதற்கான வயிறும் தேனை சேகரிப்பதற்கான பையும் தனித்தனியே அமைந்திருக்கின்றன. சேகரிப்பதற்கான பை ராணித்தேனீயின் உடலிலோ, ஆண் தேனீயின் உடலிலோ இல்லை. மலர்களிலிருந்து சேகரிக்கப்படும் அமுதம் (நெக்டர்) அந்தப்பையில் பல வேதியல் மாற்றங்களுக்கு உட்படுகிறது, இதையே அடைகளில் சேமிக்கிறது. இந்த திரவத்தில் அடைகளிலும் மாற்றம் ஏற்படுகிறது, இதன் பெருமளவு நீர்மம் குறைக்கப்பட்டு இறுகிய பின்பே தேனாகிறது. எனவே குரான் வயிற்றிலிருந்து எனக் குறிப்பிடுவது தவறான கூற்றாகும். இந்த வசனத்தை முழுமையாக கவனித்தால் வேறொரு உண்மையும் தெரியவரும். “பின் நீ எல்லாவிதமான கனிகளிருந்தும் உணவருந்தி உன் இறைவன் எளிதான வழிகளில் ஒடுங்கிச்செல். அதன் வயிற்றிலிருந்து பலவிதமான நிறங்களையுடைய ஒருவித பானம் வெளியாகிறது. அதில் மனிதர்களுக்கு சிகிச்சை உண்டு. நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது” இது தான் முழுமையான வசனம். இதில் கனிகளிருந்து உணவருந்தி என்று வருகிறது. எந்த தேனீ கனிகளை உணவாக உட்கொள்கிறது? அதிலும் எல்லாவிதமான கனிகளிருந்தும் என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் இடத்தில் அரபியில் தமர் எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. தமர் என்றால் பேரீத்தம் பழத்தை குறிக்கும் சொல்லாகும். ஆக முகம்மது சொல்வது தேனீ பேரீத்தம் பழத்தை உணவாக உட்கொள்கிறது என்று. குரான் இறை வேதம் என அடம் பிடிப்பவர்கள் பதில் சொல்லலாம்.
இந்த வசனத்தில் இருக்கும் இன்னொரு விஷயம் தேனீக்களின் நடனம். எளிதான வழிகளில் ஒடுங்கிச்செல் எனும் சொற்களை பிடித்துக்கொண்டு அதற்கு கொடுக்கும் அறிவியல் விளக்கம்தான் தேனீக்களின் நடனம். தேனீக்கள் தேன் கிடைக்குமிடம் பக்கத்தில் இருக்கிறதா தூரமாக இருக்கிறதா என்பதை பிற தேனீக்களுக்கு அறிவிக்க இரண்டு விதமாக பறந்து காண்பிக்கிறது. அருகில் என்றால் வட்டவடிவமாகவும் தூரமாக என்றால் வேறு வடிவிலும் பறக்கிறது. இதை தேனீக்களின் நடனம் என அறிவியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த நடனத்தை ஒடுங்கிச்செல் எனும் சொல்லில் ஒட்டவைத்து அறிவியலாக்கி களத்தில் இறக்கிவிட்டார்கள்.
இது இறை வசனம் என்றால், இறைவன் அனைத்தும் அறிந்தவன் என்றால் இப்படி தப்புத்தப்பாக அறிவியல் சொல்லித்தருவது ஏன்? இல்லை முகம்மது தனக்கு தெரிந்தவற்றை வைத்து இப்படி சொல்லிவிட்டு போய்விட்டார் என்றால் எப்போது திருத்தப்போகிறீர்கள் அல்லது திருந்தப் போகிறீர்கள்?
விந்து குறித்த குரானின் விந்தைகள்
விந்து வெளிப்படும் இடம் குறித்து அல்லது விந்து உருவாகும் இடம் குறித்து யாருக்கும் தற்காலத்தில் ஐயம் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட குரானில் இது சரியாக குரிப்பிடப்படாததில் பெரிய பிழை ஒன்றுமில்லை. தவறாக குறிப்பிடப்பட்டிருக்கும் அதை சரியானது தான் இன்றைய அறிவியல் தவறாக முடிவு செய்திருக்கிறது என்பவர்களை ஒதுக்கித்தள்ளலாம், ஏனென்றால் அவர்களுக்கு மதமும் தெரியாது அறிவியலும் தெரியாது. ஆனால் தவறான அதை சரியானது என்றும் இன்றைய அறிவியலும் அப்படித்தான் விளக்குகிறது என்பவர்களிடம் நாம் எச்சரிக்கையாய் இருக்கவேண்டும். ஏனென்றால் அவர்கள் நம்மிடம் திணிக்க விரும்புவது அவர்களின் சலவை செய்யப்பட்ட கருவை.
குரான் 86:7 “முதுகந்தண்டிற்கும் விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது” இது தான் அந்த மாபெரும் அறிவியல் உண்மையை தாங்கியுள்ள வசனம். முதுகந்தண்டிற்கும் விலா எலும்புகளுக்கும் இடைப்பட்ட அந்த இடம் எது? அது ஒரு உறுப்பா அல்லது உறுப்புகளின் கூட்டான ஒரு பகுதியா? என்பது பற்றியோ; தெளிவாக விளங்கிக்கொள்ள ஏதுவான பொருளோ அந்த வசனத்தின் சொற்களிடையே ஒன்றுமில்லை. இன்னும் துல்லியமாக கூறுவதென்றால், விரைகளின் பயன் என்ன? என்பதை விளங்கிக்கொள்ள இயலா காலத்தில் வாழ்ந்த ஒருவரின், இங்கிருந்து இருக்கக்கூடும் எனும் ஊகத்திலான கூற்று அது. முகம்மதின் காலத்திற்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்பே நிலவிவந்த கிரேக்க கண்டுபிடிப்பு(!) அது. அதைத்தவிர வேறெந்த முக்கியத்துவமும் அந்த வசனங்களுக்கு இல்லை. என்றாலும், இப்போது அது பாமரர்களை மயக்குவதற்காக அறிவியலை அணைத்துக்கொண்டிருக்கிறது.
இதை எப்படி அறிவியலோடு பொருத்துகிறார்கள்? விரைப்பையில் விந்து உற்பத்தியானாலும் அது நேரடியாக அங்கிருந்து வெளிப்பட்டு விடாமல் முதுகந்தண்டிற்கும் விலா எலும்புகளுக்கும் இடைப்பட்ட பகுதிக்கு சென்று அங்கிருந்து தான் வெளித்தள்ளப்படுகிறது. இதை இப்போதைய அறிவியல் கண்டுபிடித்திருக்கிறது. ஆனால் இதை ஆயிரத்துநானூறு ஆண்டுகளுக்கு முன்பு படிப்பறிவில்லாத ஒருவரால் சொல்லியிருக்க முடியுமா? எனவே தான் குரானை இறைவன் தான் இறக்கினான் என கூறுகிறோம் என்கிறார்கள். விந்து விரைப்பையில் உற்பத்தியானாலும் செமினல்வெசிக்கிள்ஸ் எனும் சுரப்பியில் சுரக்கும் திரவத்தையும், ப்ராஸ்டேட் எனும் சுரப்பியில் சுரக்கும் திரவத்தையும் சேர்த்துக்கொண்டு தான் வெளியேறுகிறது. ஆனால் அந்த இரண்டு சுரப்பிகளும் முதுகந்தண்டிற்கும் விலா எலும்புகளுக்கும் இடையில் இல்லை என்பது தான் கவனிக்கவேண்டியது.
இந்த வசனத்திற்கு வேறொரு விளக்கமும் கொடுக்கிறார்கள். விந்து வெளிப்படும் விரைப்பு நிலைக்கான தூண்டுதல் முதுகந்தண்டிலிருக்கும் தண்டுவடத்திலிருந்து தான் கிடைக்கிறது எனவே இந்த வசனத்தின் பொருள் அதற்கும் பொருந்துவதால் இதை இறைவனின் வசனம் தான் என அறிவிக்கிறார்கள். ஆனால் விரைப்பு என்பது அனிச்சைச்செயலல்ல என்பதால் அதைக் கட்டுப்படுத்துவது மூளைதான். கூடவே மனத்தூண்டுதலும் இதற்கு முக்கியமானது. கொஞ்சம் பழைய மொழிபெயர்ப்புகளில் தான் முதுகந்தண்டிற்கும் விலா எலும்புகளுக்கும் எனும் சொற்களை பயன்படுத்தியிருந்தனர். ஆனால் அது பொருத்தமான சொற்களாக இல்லை என்பதால் புதிய மொழிபெயர்ப்புகளில் முதுகந்தண்டிற்கும் முன்பகுதிக்கும் என்று மாற்றிவிட்டார்கள். இப்படி காலத்திற்கு பொருத்தமாக அறிவியல் வளர்ச்சிகளுக்கு பொருத்தமான சொற்களை பயன்படுத்தி பொருள் சொல்லி அதையே அறிவியல் முன்னறிவிப்பாக மேடைகளில் காட்டும் போக்கை அறியாமை என்று அறுதியிட்டுவிட முடியாது.
இந்த வசனத்திற்கான தொடர்விளக்கங்கள் மேலும் வந்துகொண்டே இருக்கின்றன. என்னதான் வேறு சில சுரப்பிகளையும் சேர்த்துக்கொன்டாலும் விந்து வெளிப்படுவது விரையிலிருந்து தானே. அதை முதுகந்தண்டிற்கும் முன்பகுதிக்கும் என்றும் கூட கூறமுடியாதே என்பதால், வெளிப்படும் விந்து திரவத்தில் விரைகளின் பங்கு ஐந்து விழுக்காடிற்கும் குறைவு தான் மீதி 95விழுக்காடிற்கு மேல் பங்களிப்பது செமினல்வெசிக்கிள்ஸ், ப்ராஸ்டேட் சுரப்பிகள் சுரக்கும் திரவம் தான் என்பதால் அந்த வசனம் குறிப்பிடுவது சரியானது தான் என நிறுவ முயல்கின்றனர். ஆனால் அதிலும் சிக்கல் இருக்கிறது. அந்த வசனம் மனிதனின் பிறப்பைப் பற்றியே பேசுகிறது என்பதால் மனிதனை உருவாக்கும் விந்து தான் மையப்படுத்தப்படுகிறது. வெளிப்படும் விந்துத்திரவத்தில் ஐந்து விழுக்காடிற்கும் குறைவான பங்களிப்பை செய்தாலும் விரைதான் முக்கியமான பங்களிப்பு என்பதை மறுக்க முடியாது. விரை உற்பத்தி செய்யும் உயிரணுக்கள் இல்லையென்றால் கரு உருவாவது சாத்தியமில்லை. இந்த உயிரணுக்களை பாதுகாப்பாக இலக்கில் கொண்டு சேர்க்கும் வேலையைத்தான் அந்த சுரப்பிகள் செய்கின்றனவேயன்றி, அந்த சுரப்பிகளால் கருவை உருவாக்க இயலாது. செமினல்வெசிக்கிள்ஸில் இருந்து சுரக்கும் திரவம் உயிரணுக்களின் நீண்ட பயணத்திற்கு தேவையான உந்துவிசையை தருகிறது. ப்ராஸ்டேட் சுரப்பியிலிருந்து சுரக்கும் திரவம் பாதையில் இருக்கும் அமிலத்தன்மையிலிருந்து உயிரணுக்களை பாதுகாப்பதற்கு தேவையான காரத்தன்மையை தருகிறது. என்றாலும், தப்பிப்பிழைக்கும் உயிரணுக்களில் ஏதாவது ஒன்றுதான் பெலோபியன் குழாயில் காத்திருக்கும் சினை முட்டையை துளைக்கிறது. சுலபமாக சொல்லவேண்டுமென்றால், குடும்பக் கட்டுப்பாட்டு அறுவைசிகிச்சையின் போது விரை உற்பத்திசெய்யும் உயிரணுக்களை கொண்டுவரும் குழாய் தான் துண்டிக்கப்படுகிறது. மற்ற இரண்டு சுரப்பிகளின் திரவம் வழக்கம்போல் வெளிப்பட்டுக்கொண்டுதான் இருக்கும். ஆனால் இந்த அறிவியலை எல்லாம் ஒதுக்கிவிட்டு அவர்களுக்கு உகந்ததை மட்டும் அறிவியலாக்குவது தான் மதவாதிகளின் மரபு.
விந்து குறித்த இன்னொரு விந்தையான தகவலும் குரானில் இருக்கிறது. வசனம் 76:2 கலப்பான இந்திரியத் துளியிலிருந்து நிச்சயமாக மனிதனை நாமே படைத்தோம்…… இந்த வசனத்தில் இருக்கும் கலப்பான இந்திரியத்துளி என்பதற்கு ஆணின் உயிரணுவும் பெண்ணின் சினை முட்டையும் என்று விளக்கமளிக்கின்றனர். ஆனால் அப்படி ஒரு பொருளைக் கொள்வதற்கு இந்த வசனத்தில் இடமில்லை. கலப்பான இந்திரியத்துளி என்று இரண்டையும் ஒரே நிலையில் வைத்து குறிப்பிடுகிறது குரான். அவ்வாறன்றி ஆணின் உயிரணுவும் பெண்ணின் சினை முட்டையும் வேறுவேறு தன்மையிலானவை. உயிரணு, சினை முட்டை என்று அறிவியல் வளர்ந்த பிறகு மதவாதிகள் குறிப்பிட்டாலும், அந்த வசனம் விந்துத் திரவத்தைத் தான் குறிப்பிடுகிறது. அதாவது ஆண்களுக்கு நீர்த்த நிலையில் வெளிப்படும் விந்துவைப் போலவே பெண்களுக்கும் நீர்த்த நிலையில் ஒரு திரவம் வெளிப்படுகிறது. ஆண்களுக்கு உயிரணுவை தாங்கி வரும் விந்துவைப் போல் பெண்களுக்கு வெளிப்படும் திரவம் சினை முட்டையை தாங்கி வருவதில்லை. அத்திரவத்தின் பயன் உயவு மட்டும் தான். ஆனால் இந்த அறிவியல் ஆயிரத்துநானூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த முகம்மதுவுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. பெண்களுக்கு வெளிப்படும் திரவத்தைப் பற்றி நன்கு அறிந்திருந்த முகம்மது அதுவும் ஆண்களிடமிருந்து வெளிப்படுவதைப் போல்தான் என்று எண்ணிக்கொண்டு கலப்பு இந்திரியத் துளி என்று தன குரானைப்படைக்க, இன்று அதை மதவாதிகள் உயிரனுக்கலாகவும் சினை முட்டையாகவும் மொழிபெயர்க்கிறார்கள்.
எவ்வளவு தான் முயற்சித்து அறிவியலையும் வேத வசங்களையும் இணைத்து கட்டுப்போடும் வேலையைச் செய்தாலும் அவை ஒட்டுவதில்லை. ஏனென்றால் இரண்டும் எதிரெதிரானவை. அறிவியல் எப்போதும் மாறும் தன்மையுடையது. தொடர்ந்த ஆய்வுகளால் தன்னை மறுபரிசீலனைக்கு உட்படுத்துவது. ஆனால் வேதமோ எப்போதும் மாறாத, மாறவே கூடாத ஒன்று. இரண்டும் எப்படி ஓட்டும்?
கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்
குரானின் அறிவியல் குறித்த உரையாடல்களில் கருவறை அறிவியலை தவிர்த்துவிட முடியாது. அவ்வளவு விரிவான அளவில் கருவறை குறித்து மதவாதிகள் விதந்தோதியிருக்கிறார்கள். இன்றைய நுண்ணோக்கிகள் நுழைந்து பார்க்கவியலா அறிவியல் கூறுகளை எல்லாம் குரானின் வசனங்கள் படம்பிடித்து காட்டுவதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். கருவரையையும் குழந்தை உருவாவதையும் பற்றி குரான் நிறைய வசனங்களில் குறிப்பிடுகிறது.
அலக் என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான். குரான் 96:2
சொட்டுச்சொட்டாக ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா?, பின்னர் அவன் அலக் என்ற நிலையில் இருந்தான், அப்பால் படைத்து செவ்வையாக்கினான். பின்னர் அதிலிருந்து ஆண், பெண் என்ற இரு ஜோடியை அவன் உண்டாக்கினான். குரான் 75:37-39
……….உங்கள் தாய்மார்களின் வயிறுகளில் ஒன்றன் பின் ஒன்றாக மூன்று இருள்களுக்குள் வைத்து உங்களை படைக்கிறான்……… குரான் 39:6
நிச்சயமாக நாம் மனிதரை களிமண்ணிலிருந்துள்ள சத்திலிருந்து படைத்தோம். பின்னர் நாம் அவனை ஒரு பாதுகாப்பான இடத்தில் இந்திரியத்துளியாக்கி வைத்தோம். பின்னர் அந்த இந்திரியத்துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம். பின்னர் அந்த அலக் கை ஒரு தசைப்பிண்டமாக ஆக்கினோம். பின்னர் அத்தசைப்பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம். பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம். பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாகச் செய்தோம்……… குரான் 23:12-14
……..இன்னும் அவன் உங்களுக்கு பார்வைப் புலன்களையும், செவிப் புலன்களையும், இருதயங்களையும் அமைத்தான்………. குரான் 32:9 ஒவ்வொரு பெண்ணும் சுமந்து கொண்டிருப்பதையும், கர்ப்பப்பைகள் சுருங்கிக் குறைவதையும், அவை விரிந்து அதிகரிப்பதையும் அல்லாஹ் நன்கு அறிவான். ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடம் அளவு இருக்கிறது. குரான் 13:8
இவ்வளவு வசனங்கள் கர்ப்பப்பை குறித்தும் கரு பற்றியும் குரானில் பேசப்படுகின்றன. இந்த வசனங்களில் இருக்கும் கருத்துகளை தொகுத்துப்பார்த்தால் கரு, கருத்தரிப்பது குறித்து சாதாரணமாக ஒரு மனிதனின் பார்வையை விடுத்து மேம்பட்ட அறிவியல் கருத்துகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. சொட்டுச்சொட்டாக ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா?, ஆண், பெண் என்ற இரு ஜோடி, தசைப்பிண்டமாக, எலும்புகளாக, மாமிசமாக ஆக்குவது, பார்வைப் புலன்களும், செவிப் புலன்களும், இருதயங்களும் இருப்பது என்பதெல்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன் எந்த மனிதனும் அறிந்திராதவைகளா? இந்த வசனங்களுக்குள் அப்படி என்ன அறிவியல் இருக்கிறது? மதவாதிகளின் பார்வையினூடாகவே பார்ப்போம்.
முதலில் அலக் எனும் வார்த்தையை எடுத்துக்கொள்வோம். அநேக மொழிபெயர்ப்புகளில் இந்த அலக் எனும் அரபு வார்த்தை மொழிபெயர்க்கப்படாமல் அப்படியே பயன்படுத்தப்படுகிறது. பிஜே அவர்களின் மொழிபெயர்ப்பில் கருவுற்ற சினைமுட்டை என்று மொழிபெயர்த்திருக்கிறார். பல்நாட்டு அறிஞர்களும் சரிபார்க்கும் வாய்ப்பை பெற்றதாக நண்பர்கள் கருதும் யூசுப் அலி என்பவரின் ஆங்கில மொழிபெயர்ப்பில் உறைந்த இரத்தக்கட்டி (clot of congealed blood) என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஜாகிர் நாயக் என்பவர் இந்தச்சொல்லுக்கு அட்டைப்பூச்சி, தொங்கும் பொருள் என்றெல்லாம் விளக்கங்கள் சொல்கிறார். ஆக அலக் எனும் இந்த அரபுச்சொல்லுக்கு எதுதான் சரியான பொருள்? பொதுவாக பழைய மொழிபெயர்ப்புகளில் இரத்தக்கட்டி என்றுதான் மொழிபெயர்த்திருக்கிறார்கள். கர்ப்பப்பையில் கருவானது இரத்தக்கட்டியாக இருக்கிறதா? எனும் அறிவியல் ரீதியான கேள்வி எழுந்ததும் அதன் பொருள் அட்டைப்பூச்சி, தொங்கும் பொருள் என்றெல்லாம் பயணப்பட்டு நவீன அறிவியலை உள்வாங்கிக்கொண்டு தற்போது கருவுற்ற சினைமுட்டையாக ஆகியிருக்கிறது. இது தான் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லப்பட்ட அறிவியலின் லட்சணம்.
குரான் 75:37-39 வசனங்களில் சொல்லப்படும் கருவின் வளர்ச்சி குறித்து தோராயமான பிம்பம் காட்டப்படுகிறது. இதுவே இன்னும் சற்று விரிவாக குரான் 23:12-14 வசனங்களில் சொல்லப்படுகிறது. பெண்ணின் உடலினுள் செலுத்தப்படும் விந்து தான் குழந்தையாக மாறுகிறது என்று அறிந்துகொண்டபின் அது எப்படி குழந்தையாக உருமாறுகிறது சிந்தித்த ஒரு மனிதனின் கற்பனைதான் இந்தக் காட்சிகள் இரத்தம் தான் விந்தாக உருமாறுகிறது எனும் நினைப்பில் மீண்டும் விந்து உறைந்து இரத்தக்கட்டியாக மாறுகிறது பின்னர் அது சதைக்கட்டியாக மாறுகிறது பின்னர் எலும்பும் அதன் பின்னர் மாமிசமாகவும் மாறி பின்பு குழந்தையாக வெளிவருகிறது. இப்படித்தான் சாதாரணமாக எந்த மனிதனின் கற்பனையும் 1400 ஆண்டுகளுக்கு முன் இருந்திருக்கும், இப்படித்தான் முகம்மதுவும் உருவகித்திருக்கிறார். ஆனால், இன்று உருப்பெருக்கிகள் மூலம் கர்ப்பப்பையின் உள்ளே நடக்கும் மாற்றங்களை பதிவு செய்த பின்பு, ஆகா பாருங்கள் இதை அன்றே முகம்மது சொல்லிவிட்டார், படிக்காதவரான அவரால் எப்படி சொல்லமுடிந்தது? எனவே இது எல்லாவற்றையும் மிகைத்த அந்த சக்தியின் கருணைதான் இது என்று எடுத்துவிடுகிறார்கள். இதில் அறிவியலோடு ஒப்பிடும் படிநிலைகள் என்று எதுவுமில்லை என்பது ஒரு புறமிருந்தாலும், பின்னர் அதிலிருந்து ஆண், பெண் என்ற இரு ஜோடியை அவன் உண்டாக்கினான் எனும் வசனமும், பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாகச் செய்தோம் எனும் வசனமும் ஒரு செய்தியை நமக்கு உணர்த்துகிறது. அது என்னவென்றால், கரு உருவாகி ஆரம்பக்கட்ட வளர்ச்சிகள் அடைந்தபின்பு குறிப்பிட்ட ஒரு கட்டத்தில் தான் அந்தக்கரு ஆணா? பெண்ணா? என்பது தீர்மானிக்கப்படுகிறது என்பது தான். ஆனால் அறிவியல் இதை திட்டமாக மறுக்கிறது. உடலுறவு முடிந்து ஆணின் உயிரனுவானது பெண்ணின் சினை முட்டையை எந்தக்கணத்தில் துளைத்து நுழைகிறதோ அந்தக்கணத்திலேயே கருவானது ஆணா? பெண்ணா? என்பது தீர்மானமாகிவிடுகிறது. அதுமட்டுமன்றி அனைத்து விசயங்களும் தோலின் நிறம், அங்கங்களின் அமைப்பு, உயரமா? குள்ளமா? என்பன போன்ற அனைத்து செய்திகளும் டிஎன்ஏ ஏணிகள் மூலம் கருவுக்கு கடத்தப்பட்டு இதன் அடிப்படையிலேயே கருவின் வளர்ச்சி நடைபெறுகிறது.
குரானின் கருவளர்ச்சி நிலைகளோடு அறிவியலை ஒப்பிட்டால் அதுவும் ஒப்பிடக்கூடிய அளவில் இல்லை. அதிலும் முதலில் தசைப்பிண்டம் என்றும் பின்னர் மாமிசம் என்றும் இரண்டு வகையாக குறிப்பிடுவதும் பொருத்தமாக இல்லை. அறிவியல் கருவளர்ச்சியை பின்வருமாறு வகைப்படுத்துகிறது. இரண்டாவது மாதத்தில் ஆண் பெண் இன உறுப்புகள், மூன்றாவது மாதம் ஜீரண உறுப்புகள் எலும்புகள், நான்காவது மாதம் தோல் சுமாரான வடிவம் கண்கள் விரல்கள், ஐந்தாம் மாதம் தலைமுடி நகம் பல்முளைகள் முதுகெலும்பு சீராதல், ஆறாவது மாதம் கண்களில் பார்வை நாவில் ருசி, ஏழாவது மாதம் மூளை சீரடைதல் நரம்புகள் என்று தொடர்ச்சியான வளர்ச்சியில் எட்டு ஒன்பதாவது மாதங்களில் எல்லா உறுப்புகளுமே சீரான இயக்கத்திற்கு வந்து இறுதியில் வெளியேறுகிறது.
அடுத்து குரான் 32:9 வசனத்தில் ஒரு வரிசை கூறப்படுகிறது. முதலில் பார்வை பின்னர் செவி அதன்பின்னர் இதயம் இந்த வரிசையில் உறுப்புகள் படைக்கப்படுவதாக அந்த வசனம் சுட்டுகிறது. இதில் முதல் இரண்டு புலன்களை மட்டும் எடுத்துக்கொண்டு பார்த்தீர்களா இன்றைய அறிவிலான முதலில் கண்ணும் பின்னர் காதும் உருவாகிறது என்பதை குரான் அன்றே சொல்லிவிட்டது என்கிறார்கள். ஆனால் இதில் மூன்றாவதாக வரும் இதயத்தை விட்டுவிட்டார்கள். ஏனென்றால் இதயமானது கண், காதுக்கு முன்னரே உருவாகிவிடுகிறது. ஆனால் குரானோ கண் காதுக்கு பின்னர் மூன்றாவதாக இதயத்தை குறிப்பிடுகிறது. இந்த வசனத்தில் இன்னொரு செய்தியும் இருக்கிறது. அவன் உங்களுக்கு பார்வைப் புலன்களையும், செவிப் புலன்களையும், இருதயங்களையும் அமைத்தான் என்கிறது அந்த வசனம். அதாவது பார்வைப் புலன்களையும் என்றால் கண்கள் இரண்டு, செவிப் புலன்களையும் என்றால் காதுகள் இரண்டு இந்த வரிசையில் அடுத்து இதயங்களையும் என்று குறிப்பிடுகிறது குரான். என்றால் இரண்டு இதயம் என்று குறிப்பிடுகிறதா குரான்? இந்த குழப்பங்களிலிருந்து விடுபடவேண்டும் என்று தான் அண்மைய மொழிபெயர்ப்புகளில் உள்ளங்கள் என்று மொழிபெயர்த்து விட்டார்கள்.
அடுத்து குரான் 13:8 வசனத்தில் ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடம் அளவு இருக்கிறது என்று ஒரு வரி வருகிறது. அதாவது மனிதனுக்கு கர்ப்ப காலம் பத்து மாதங்கள் என்றால் ஏனைய விலங்குகளுக்கும் இதே காலஅளவு இருப்பதில்லை வெவ்வேறு கால அளவுகளில் அவை பிரசவிக்கின்றன. இதைதான் அந்த வரியில் முகம்மது குறிப்பிடுகிறார். ஆனால் இன்று அந்த வரிகளுக்கு புதிய பொருளை கற்பிக்கிறார்கள். எப்படி என்றால் மனித உடல் அன்னியப் பொருட்களை உடலுக்குள் அனுமதிப்பதில்லை. கண்களில் ஒரு தூசு விழுந்துவிட்டால் கண்கள் ஒரு உருத்துதலை ஏற்படுத்தி கண்ணீரை சுரந்து அதை வெளியேற்றுவதற்கு முயற்சிக்கிறது. மூச்சுக் குழாயில் ஒரு துரும்பு சென்றுவிட்டால் தும்மலின் மூலம் அதை வெளியேற்ற முயற்சிக்கிறது. ஆனால் ஒரு அன்னியப்பொருளான கருவை பத்து மாதங்களாய் உடலுக்குள் தங்க அனுமதித்து அதன் பின்பே வெளியேற்ற முயற்சிக்கிறது. இன்றைய அறிவியலான இதைத்தான் அந்த வசனம் குறிப்பிடுகிறது என்கிறார்கள். இது முழு உண்மையல்ல. எப்படியென்றால் நமது உடல் எல்லா அன்னியப் பொருட்களையும் எதிர்ப்பதில்லை. உடலுக்கு தீங்கு விளைவிப்பதை மட்டும் தான் எதிர்க்கின்றன. நாம் உண்ணும் உணவு உடலுக்கு அன்னியப் பொருள் தான் ஆனால் அதிலுருந்து தான் தனக்கு தேவையான சக்தியை உடல் பெற்றுக்கொள்கிறது. காற்று உடலுக்கு அன்னியப் பொருள்தான் ஆனால் அதிலிருந்து தான் தனக்கு தேவையான ஆக்ஸிஜனை உடல் பெற்றுக்கொள்கிறது. உடல்நலம் பாதிக்கப்பட்டால் வெளியிலிருந்து அன்னியப்பொருட்களான மருந்துகள் உட்செலுத்தப்படுகின்றன, உடல் அவற்றை ஏற்றுக்கொள்கிறது. செயற்கை உறுப்புகள் பொருத்தப்படுகின்றன அவைகளையும் உடல் சில நிபந்தனைகளுக்குட்பட்டு ஏற்றுக்கொள்கிறது. ஒவ்வாமை என்றொரு நோய் உண்டு, உடலுக்கு தீங்கு செய்யாத பொருட்களைக் கூட தீங்கு செய்பவை என்று தவறாக கருதிக்கொண்டு உடல் எதிர்ப்பதற்குத்தான் ஒவ்வாமை என்று பெயர். ஆக உடல் தீங்கு செய்யும் அன்னியப் பொருட்களை மட்டுமே எதிர்க்கிறது. அந்த வகையில் கரு ஒரு அன்னியப் பொருளும் அல்ல. ஒரே மனித இனத்தின் எதிர்பாலின் உயிரணுவை தன்னுடைய அண்டத்துடன் இணைத்துக்கொள்வதை அன்னியப் பொருள் என்று எப்படி வகைப்படுத்த முடியும்?
அடுத்து குரான் 39:6 வசனத்தில் சொல்லப்படும் மூன்று இருள்கள் என்பது எதை குறித்து முகம்மது சொன்னார் என்பது தெரியவில்லை (தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் குறிப்பிடலாம்) ஆனால் அந்த மூன்று இருள் என்பது தாயின் அடிவயிறு, கர்ப்பப்பையின் சுவர், குழந்தையை சுற்றி இருக்கும் சவ்வுப்படலம் என்று அறிவியல் விளக்கம் அளிக்கிறார்கள். ஆனால் முகம்மது அந்த மூன்று இருள்கள் என்பதை இப்படி அறிவியல் பூர்வமாக கூறவில்லை என்பதை உறுதியாக கூறமுடியும். எப்படி என்றால் இதை அறிவியல் விளக்கமறிந்து கூறியவர் இதே வசனத்தில் அவன் உங்களுக்காக கால்நடைகளிலிருந்து எட்டு ஜோடி ஜோடியாக படைத்தான் எனும் பொருளற்ற வசனத்தை சொல்லியிருக்க முடியாது. கால்நடைகளில் எட்டு ஜோடிகள் தான் இருக்கின்றனவா? ஆக ஒரே வசனத்தின் மேல் வரி அர்த்தமற்றதாகவும், கீழ் வரி அறிவியல் பூர்வமாகவும் ஒருவர் கூறியிருக்க முடியாதல்லவா?
ஆக குரானின் வசனங்களில் அறிவியல் உண்மைகள் புதைந்து கிடப்பதாக கூறப்படுவதெல்லாம் வலிந்து ஏற்றப்படும் புனைபுரட்டுக்கள் என்பதை தவிர வேறொன்றுமில்லை.
பிர் அவ்னின் உடல் எனும் கட்டுக்கதை
இரண்டாம் ரமோஸஸின் உடல்
குரான் ஒரு இறை வேதம் தான் என்பதற்கு திட ஆதாரமாக மதவாதிகள் காட்டும் ஆதாரம் ஒன்றிருக்கிறது. இஸ்லாமிய இலக்கியங்களில் கரைகண்ட மதப்பரப்புரையாளர்கள் என்றில்லை வாசிப்புப் பழக்கம் ஏதுமற்ற ஒரு சாதாரண முஸ்லிமும் விதந்து போற்றும் ஒன்று பிர் அவ்னின் உடல். குரானில் கதை ஒன்று இடம்பெற்றிருக்கிறது.
“மேலும் இஸ்ராயீலின் சந்ததியினரை நாம் கடலைக் கடக்கவைத்தோம். அப்போது பிர் அவ்னும் அவனது படையினரும் கொடுமையும், பகைமையும் கொண்டு அவர்களை பின்தொடர்ந்தார்கள். அவன் மூழ்க ஆரம்பித்ததும் அவன் இஸ்ராயீலின் சந்ததியினர் எந்த நாயன் மீது நம்பிக்கை கொண்டுள்ளார்களோ அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று நானும் ஈமான் வைக்கிறேன். இன்னும் நான் அவனுக்கே முற்றும் வழிபடுபவனாக இருக்கிறேன் என்றும் கூறினான். இந்த நேரத்தில் தானா? சற்று முன்வரை திடனாக நீ மாறு செய்துகொண்டிருந்தாய். இன்னும் குழப்பம் செய்பவர்களில் ஒருவனாகவும் இருந்தாய். எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம். நிச்சயமாக மக்களில் பெரும்பாலானோர் நம் அத்தாட்சிகளைப் பற்றி அலட்சியமாக இருக்கின்றனர்” குரான் 10: 90,91,92
அதாவது, எகிப்தில் முன்னொரு காலத்தில் பிர் அவ்ன் என்றொரு மன்னன் இருந்தான். இந்த கதை நடக்கும் காலம் சற்றேறக்குறைய முகம்மதுவின் காலத்திற்கு 1900 ஆண்டுகளுக்கு முன்னர். அந்த மன்னனிடம் இறைவனின் நேரான மதத்தை எடுத்துச் சொல்வதற்காக மூஸா எனும் தூதர் வருகிறார். (கிருஸ்தவர்கள் இவரை மோசஸ் என்றும், யூதர்கள் மொசையா என்றும் அழைக்கின்றனர்) அவரின் போதனைகளுக்கு செவிகொடுக்காத அந்த மன்னன் அவரையும் அவரின் சீடர்களையும் துன்புறுத்தத்துகிறான். ஒரு கட்டத்தில் தன்னுடைய சீடர்களுடன் நாடுகடந்து செல்கிறார். இதையறிந்த மன்னன் தன் வீரர்களுடன் துரத்திச்செல்கிறான். செங்கடல் குறுக்கிடுகிறது. உடனே மூஸா தன் இறைவனின் கட்டளைப்படி தன் கைத்தடியால் கடலை அடிக்க இது இரண்டாக பிளந்து அவர்களுக்கு வழி விடுகிறது. அந்த வழியே அவர்கள் தப்பிக்க மன்னனும் அதே வழியில் துரத்துகிறான். மூஸா சீடர்களுடன் மறுகரையை பாதுகாப்பாக அடைந்ததும் கடல் பழையபடி மூடிக்கொள்ள மன்னனும் வீரர்களும் கடலில் மூழ்கி இறக்கின்றனர்.
இந்த கதை நடந்து 1900 ஆண்டுகளுக்கு பிறகு முகம்மது சொல்கிறார், பின்னுள்ளவர்களுக்கு அத்தாட்சியாக அந்த உடலை பாதுகாப்போம் என்று. அப்போது யாரும் எங்கே அந்த பாதுகாக்கப்பட்ட உடல்? என்று எதிர்க்கேள்வி எதுவும் கேட்கவில்லை. ஏனென்றால் இது அந்தப்பகுதியில் புராணரீதியாக வழிவழியாக வழங்கப்பட்டு வரும் கதைதான்.
இப்போது அன்மைக்காலங்களுக்கு வருவோம். எகிப்தின் நைல் ஆற்றங்கரை பள்ளத்தாக்கு ஒன்றில் ஒரு உடல் கண்டெடுக்கப்படுகிறது. ஆய்வுகளுக்குப் பின்னர் அது பண்டைய மன்னனான இரண்டாம் ரமோஸஸ் என்பவனின் உடல் தான் அது என கண்டறியப்பட்டு தற்போது கெய்ரோவிலுள்ள ராயல் மம்மி எனும் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. குரானில் குறிப்பிடப்படும் பிர் அவ்னின் உடல்தான் அது, இறைவன் தான் வாக்களித்தபடி பிர் அவ்னின் உடலை கெட்டுப்போகாமல் பாதுகாத்து, உடலை பாதுகாத்து வைக்கும் தொழில் நுட்பம் மனிதர்களுக்கு தெரிந்த காலத்தில் அதை வெளிப்படுத்தி குரான் இறைவனின் வார்த்தை தான் என்பதை ஐயம் திரிபற மெய்ப்பித்துவிட்டான். என்னே அவனின் கருணை என்கிறார்கள்.
இரண்டாம் உலகப்போரின் காலம், இஸ்ரேல் எனும் தேசத்தை பாலஸ்தீன அரேபியர்களின் பகுதிகளில் உருவாக்குவதற்கான திட்டம் தயாராக இருந்தது. அந்தப்பகுதி மெய்யாகவே தங்களின் தாயகம் தான் என யூதர்களை நம்பவைக்க சியோனிச தலைவர்கள் புராணக்கதைகளுக்கு வரலாற்று வடிவம் கொடுக்கும் வேலைகளில் இறங்கினர். தங்களின் கடவுளான மொசையா எகிப்தின் கொடுமைகளில் இருந்து மீட்டுவந்து வாக்களித்து வாழவைக்கப்பட்ட பகுதிதான் பாலஸ்தீனப் பகுதி என்பதற்கு ஆதாரமாக கடலில் மூழ்கி இறந்துபோன மன்னனைத்தேடி, தங்களின் புராணக்கதைக்கு ஆதாரம் தேடி பல மன்னர்களின் சடலங்களை குறிப்பிட்ட அந்த மன்னனாக அடையாளப்படுத்தும் வேலையை செய்தனர். அஹ்மோஸ், தட்மொஸ், அமேன்கொதப், சேத்தி, ரமோஸஸ், மேர்நெப்தா போன்ற மன்னர்களின் சடலங்களை அதுதான் அந்த மன்னனின் சடலம் என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு உடலை அடையாளமாக காட்டமுயன்று பின்னர் கைவிட்டனர். இதில் ஒரு உடலான ரமோஸஸ் உடலைத்தான் இஸ்லாமியர்கள் பிர் அவ்ன் உடலாக, ஆதாரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
முதலில் பிர் அவ்ன் அல்லது பாரோன் அல்லது பரோவா என்பது குறிப்பிட்ட ஒரு மன்னனின் பெயரல்ல, மாறாக அது அரச பரம்பரையின் பெயர். அடுத்து, ஆரம்பத்திலேயே அந்த சடலத்தை வெளிப்படுத்தியிருந்தால் மனிதர்களால் அதை பாதுகாத்து வைக்கமுடியாமல் போயிருக்கும் என்பதால் மனிதர்கள் அந்த தொழில்நுட்பம் தெரிந்ததும் இறைவன் வெளிப்படுத்தியிருக்கிறான் என்பது மோசடியானது. ஏனென்றால் செத்த உடல்களை மம்மிகளாக பதப்படுத்தி வைப்பதை மனிதர்கள் பல ஆயிரம் ஆண்டுகளாகவே செய்துவருகின்றனர். அவர்கள் பதப்படுத்திய உடலும் இன்றுவரை பாதுகாக்கப்பட்டிருக்கிறது.
எகிப்தின் அன்றைய காலகட்டத்தை மூன்றாக பிரிக்கலாம். கிமு 2950லிருந்து கிமு 2150வரையான முதல் காலம். இந்த காலத்தில்தான் மன்னர் குடும்பத்தினரின் உடலை மம்மியாக பதப்படுத்திவைக்கும் முறை தொடங்குகிறது. இந்த மன்னர்களின் மம்மிகள் புதையல் திருடர்களால் சிதைக்கப்பட்டுவிட்டன. கிமு 2150லிருந்து கிமு 1500 வரையான இரண்டாம் காலம். இந்தக்காலத்தில் முறையான அரசமைப்பு இன்றி குழப்பமான நிலை நிலவியது. கிமு 1500லிருந்து கிமு 1000வரையிலான மூன்றாவது காலகட்டத்தில் தான் மேற்கண்ட மன்னர்கள் எகிப்தை ஆண்டார்கள். இந்த மன்னர்களின் மம்மிகள் அனைத்தும் செயற்கையான முறையில் பாதுகாக்கப்பட்ட உடல்கள் தானேயன்றி இயற்கையான முறையில் பாதுகக்கப்பட்டவையல்ல. இவைகளில் அதிகம் சிதையாமல் கிடைத்திருப்பது இரண்டாம் ரமோஸஸ் மம்மிதான்.
மதவாதிகள் இரண்டாம் ரமோஸஸ் மம்மி 1898ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக கூறுகிறார்கள். இரண்டாம் ரமோஸஸ் மம்மி கெய்ரோ அருங்காட்சியகத்தில் இருக்கும் புகைப்படத்தைத்தான் தங்கள் பரப்புரைகளுக்கு பயன்படுத்துகின்றனர். ஆனால் 1898ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டவைகள் இரண்டு உடல்கள். அமேன்கொதப், மேர்நெப்தா ஆகிய இரண்டு மம்மிகள் அந்த ஆண்டில் கண்டெடுக்கப்பட்டன. இரண்டாம் ரமோஸஸ் கண்டெடுக்கப்பட்ட ஆண்டு 1881. இரண்டாம் ரமோஸஸ் கிமு 1279ல் ஆட்சியேறி 67 ஆண்டுகள் ஆட்சி புரிந்து கிமு 1213ல் தனது 90ஆவது வயதில் மூட்டு வலியால் அவதியுற்று மரணமடைந்ததாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
மாரிஸ் புகைல் என்றொரு பிரஞ்சு மருத்துவர், சவூதி அரசரின் தனி மருத்துவராக பணியாற்றியவர். குரானின் அறிவியல் பார்வை என்ற நூலை எழுதியவர். இவர் எகிப்து அரசின் அனுமதியுடன் மேர்நெப்தாவின் மம்மியை ஆராய்ந்தார். ஆராய்ந்து இது நீரில் மூழ்கி இறந்ததற்கான ஆதாரம் இருப்பதாக அறிக்கை தந்தார். அதற்கு அவர் கொடுத்த ஆதாரம் அந்த மம்மியில் உப்புத்தன்மை இருந்தது என்பது தான். ஆனால் உடலை மம்மியாக பதப்படுத்த நேட்ரான் எனும் உப்புதான் அந்தக்கால மக்களால் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதில் நகைக்கக்கூடிய இன்னொரு செய்தி என்னவென்றால், இவரின் வெற்றித்தூண் எனும் கல்வெட்டில் கிமு 1207ம் ஆண்டில் கானான் மீது படையெடுத்து அதை வென்றதாக பொறிக்கப்பட்டிருக்கிறது. அதாவது மேர்நெப்தாவின் ஆட்சியில் அவரால் துன்புறுத்தப்பட்டு மூஸாவால் தன்னை பின்பற்றியவர்களுடன் செங்கடலை பிளந்து மறுகரையில் குடியிருப்பு உருவாக்கப்பட்டதோ அதுதான் கானான் பிரதேசம் எனப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் கடலில் மூழ்கி இறந்துபோன மன்னன், தான் உயிருடன் இருக்கும்போது அந்தப்பகுதியை போரிட்டு வென்றதாக கல்வெட்டு நட்டிருக்கிறான். தன் கைத்தடியால் தட்டி கடலை பிளந்தது ஒருபுறம் இருக்கட்டும், இஸ்ரவேலர்கள் பெரும் தொகையில் நாடுகடந்து சென்றதாக வரலாறுகளில் எந்தக்குறிப்பும் இல்லை. கானான் பிரதேசம் அதாவது இன்றைய பாலஸ்தீனப் பகுதி தீவல்ல, தரை வழியாகவே செல்லமுடியும் போது கடலை பிளந்து போகவேண்டிய தேவை என்ன? அன்றைய எகிப்தில் கானான் பிரதேசம், இன்றைய சிரியா, நுபுன்கள் தேசம் எல்லாம் அடக்கம். நாடு கடந்து போகும் மூஸா அதே நாட்டின் இன்னொரு பகுதிக்கு தான் போகிறார்.
ஒட்சியின் உடல்
இன்றைக்கு நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னுள்ள உடல்களை மனிதன் மம்மிகளாக்கி செயற்கையாக பத்திரப்படுத்தியிருக்கிறான். இதே காலகட்டத்திலுள்ள ஒரு உடல் மனிதனால் பத்திரப்படுத்தாமல் இயற்கையாக பதப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை ரமோஸஸ் விசயத்தில் உண்மை என்றே ஒரு வாதத்திற்காக கொண்டாலும் இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. ஆஸ்திரிய இத்தாலிய எல்லையில் உள்ள ஆல்ப்ஸ் மலையில் ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டது. கார்பன் நிர்ணய முறையில் அவ்வுடல் கிமு3300க்கும் 3200க்கும் இடையில் வாழ்ந்த மனிதனுடையது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஓட்சி என்று பெயரளிக்கப்பட்டுள்ள அந்த உடல் ஆஸ்திரியாவிலுள்ள சவுத் டைரோல் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளது. நல்லவேளையாக இந்த ஓட்சிக்கு பின்னால் வேதமோ கதையோ இல்லை.
எல்லோருக்கும் ஓரளவு தெரிந்திருக்கும் அறிவியலையே தங்களுக்கு ஏற்ப வளைத்து தங்கள் வேதவிவகாரங்களை வண்ணம் பூசிக்கொள்ளும் மதவாதிகள், வரலாற்றை விலை பேசாமல் விட்டுவைப்பார்கள் என்று நம்பமுடியுமா?
நூஹின் கப்பல் நிறைய புராணப் புழுகுகள்
குரானை, அது இறை வேதம்தான் என மெய்ப்பிக்கும் மற்றொரு திட ஆதாரமாக இஸ்லாமியர்களும் மதவாதிகளும், பிர் அவ்னின் சடலத்தைப்போலவே ஆயுதமாக கையாளும் மற்றொன்றுதான் நூஹின் கப்பல். நூஹ் என்பவர் மக்களை திருத்துவதற்காக இறைவனால் நியமிக்கப்பட்ட தூதர்களில் ஒருவர். இவரின் போதனைகளை மக்கள் ஏற்க மறுக்கவே அவர்களை அளித்துவிடுமாறு இறைவனை வேண்டுகிறார், இறைவனும் கருணை உள்ளங்கொண்டு நூஹையும் அவரின் சீடர்களையும் ஒரு கப்பலைக்கட்டி அதில் உலகின் விலங்குவகைகளை சதை சதையாகவும் (ஜோடி ஜோடியாகவும்) நம்பிக்கை கொண்டவர்களையும் ஏற்றிக்கொள்ளுமாறு பணிக்க அதன் பின் வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் நீர் பெருக்கெடுக்க உலகம் மூழ்கியது. நூஹுவையும் அவரது இறைவனையும் நம்பியவர்கள் காப்பாற்றப்பட்டனர், ஏனைய அனைவரும் நீரில் அழிந்தனர். பின்னர் அந்தக்கப்பல் ஜூதி எனும் மலையின் மீது தங்குகிறது. பின்னர் அதிலிருந்து வெளிவந்து தான் மக்கள் உலகம் முழுவதும் பரவினர். இது தான் குரானில் சொல்லப்பட்டிருக்கும் நூஹின் கப்பல் குறித்த கதை. இந்த கதையில் வரும் நூஹின் கப்பல் துருக்கியின் கிழக்குப் பகுதியிலுள்ள அராராத் என்னும் மலையின் மீதி பரவியிருக்கும் பனிப்படிவங்களுக்கிடையே புதைந்து கிடப்பதாக அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டுபிடித்துச்சொல்ல குரான் இறைவேதம் தான் என்பது மற்றுமொருமுறை மெய்ப்பிக்கப்பட்டிருப்பதாக கூறிக்கொள்வதற்கு மதவாதிகளுக்கு ஏதுவாகியது.
இது குறித்த குரான் வசனங்கள் “நாம் அவரையும் கப்பலில் இருந்தோரையும் காப்பாற்றினோம், மேலும் அதை உலக மக்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கினோம்” குரான் 29:15. இதை இன்னும் விரிவாக 11:44; 54:10-17 வசனங்களும் குறிப்பிடுகின்றன. இங்கு உலக மக்களுக்கு அத்தாட்சியாகவும் ஆக்கினோம் எனும் சொற்களில் தான் இதன் முக்கியத்துவமே தங்கியிருக்கிறது. அதாவது 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த முகம்மதுவுக்கு பின்னர் இப்படி ஒரு கப்பல் கண்டுபிடிக்கப்படும் என்பது எப்படி தெரியும்? பின்னர் நடக்கப்போவதை முன்னமே அறிந்த இறைவனால் தானே பின்னர் வெளிப்படுத்தப்படும் என்பதை அறிந்து அத்தாட்சியாய் ஆக்கினோம் என பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கூறமுடியும் என வியக்கிறார்கள். ஆனால் இந்தக்கதை குரானில் மட்டும் இடம்பெற்ற ஒன்றல்ல. நூஹ் என்பவர் மூசாவிற்கும் காலத்தால் முற்பட்டவர் எனவே யூதர்களின் தோராவிலும், கிருஸ்தவர்களின் பைபிளிலும் கூறப்பட்டிருக்கும் கதைதான். அந்தக்கப்பல் பின்னர் கண்டுபிடிக்கப்படும் என்பது அந்த மக்களின் நம்பிக்கை அதைத்தான் முகம்மதுவும் தன்னுடைய குரானில் வசனமாக்கியிருக்கிறார்.
இது ஆபிரஹாமிய மதங்களான யூத, கிருஸ்தவ, இஸ்லாமிய மதங்களில் மட்டும் கூறப்படும் கதையல்ல. சுமேரிய மரபுப்படி சுயூசுத்ரா எனும் மன்னன் என்கி எனும் கடவுளால் இது போன்ற ஊழிப் பெருவெள்ளத்தில் இருந்து காப்பாற்றப்படுகிறான். பாபிலோனிய மரபுகளில் இது கில்காமோஸ் ஐ உட்னபிசிதம் எனும் கடவுள் இதுபோன்ற ஊழிப் பெருவெள்ளத்திலிருந்து காப்பாற்றுகிறார். இந்துப்புராணங்களில் மன்னன் மனுவை மச்சாவதாரம் பெருவெள்ளத்திலிருந்து காப்பாற்றுவதாக மச்சபுராணம் குறிப்பிடுகிறது. உலகம் முழுவதிலும் பண்டைய புராணங்கள் அனைத்திலும் இது போன்ற ஊழிப் பெருவெள்ளக் காட்சிகளும் கடவுளால் காப்பாற்றப்படுதலும் எதோ ஒரு வகையில் இருக்கின்றன. ஆனால் கடவுளோடும் மதங்களோடும் தொடர்புபடுத்தப்படாத ஊழிப்பெருவெள்ளக் காட்சிகள் தமிழ் இலக்கியங்களில் கிடைக்கின்றன. தமிழர்களின் தலை நிலம் அடுத்தடுத்த கடல்கோளால் அளிக்கப்பட்ட விதம் குறித்து தமிழ் இலக்கியங்கள் விரிவாகவே விளக்குகின்றன. கபாடபுரம், மதுரை, துவாரை என்று அழிந்து போன நகரங்களும் மக்களின் நகர்வும் தெளிவாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. இது மட்டுமன்றி கடவுளோடு தொடர்புகொண்ட காட்சிகளெல்லாம் காப்பாற்றப்பட்டவர்களின் கோணத்திலிருந்து சொல்லப்பட்டிருக்க, தமிழ் இலக்கியங்களில் அழிந்துபோன மக்களின் கோணத்திலிருந்து சொல்லப்பட்டிருக்கிறது.
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த குடி என்று தமிழில் ஒரு சொலவடை நீண்ட நெடுங்காலமாக வழக்கில் இருக்கிறது. இதற்கு புறப்பொருள் வெண்பாமாலையில் ஐயனாரிதனார் எனும் புலவர் அளிக்கும் விளக்கம், கடல்கோளிலிருந்து தப்பிப் பிழைக்க மக்கள் மலைகளில் ஏறுகின்றனர். மலை உச்சிக்கு சென்றவர்களைதவிர ஏனையவர்கள் அழிந்துவிட வெள்ளம் வடிந்தபின் தரை தெரியாமல் அதாவது மண் தெரியாமல் மலைகளின் பாறைகளில் தப்பிப் பிழைத்த மக்களிலிருந்து தோன்றியது தான் தமிழ்க்குடி என்பது. தமிழில் பெருங்கப்பல்களை குறிப்பிட நாவாய் என்ற சொல் ஆளப்படுகிறது. இந்த நாவாய் எனும் சொல்தான் கப்பலோடு தொடர்புடைய கதை நாயகனுக்கான பெயராய் நோவா என்று மருவியது. அதுவே பின்னர் நூஹ் என்று திரிந்திருக்க கூடுமோ
இந்த நூஹ் 950 ஆண்டுகள் பூமியில் வாழ்ந்திருந்ததாக குரான் குறிப்பிடுகிறது. இவ்வளவு காலம் வாழும் அளவுக்கு மனிதன் இருந்தானா? மனிதனின் செல் அமைப்புகள் எலும்புகளின் ஆர்கானிக் பொருட்கள் இவ்வளவு காலம் தாங்கி நிற்கும் அளவுக்கு திறனுடன் மனிதனிடம் இருந்ததா? மனிதனின் வாழ்நாள் இப்போது இருப்பது தான் அதிகம், தோராயமாக எழாயிரம் ஆண்டுகளுக்கு முன்வாழ்ந்த மக்கள் ஆயிரம் ஆண்டுகள் வாழும் அளவிற்கு வலுவுடன் இருந்தார்கள் என்பதை எந்த அடிப்படையில் புரிந்து கொள்வது, புராணக்குப்பைகள் என்பதல்லாது.
நூஹ்வின் கப்பலுக்கு திரும்புவோம், 1959ல் லிஹான் துரிப்பினார் எனும் ராணுவ அதிகாரி ராணுவ நில அளவை குறித்த பணியில் ஈடுபட்டிருந்த போது விண்ணிலிருந்து எடுக்கப்பட்ட நிலைப்படம் ஒன்றிலிருந்து அராராத் மலையின் ஒருபகுதியில் கப்பல் போன்ற வடிவமுள்ள ஒன்று தெரிவதை கண்டுபிடித்தார். அதிலிருந்து அந்த பகுதி மிகவும் புகழ்பெற்ற இடமாகியது. நோவாவின் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்தி பரவியது.(ஆம் நூஹ்வின் கப்பலாக அல்ல நோவாவின் கப்பலாகவே கண்டுபிடிக்கப்பட்டது) இன்றும் அந்தப்பகுதி துரிப்பினாரின் பெயராலேயே அழைக்கப்பட்டுவருகிறது. 1960ல் ஜார்ஜ் வன்டேமன், டான் லாவரிட்ஜ் எனும் இரு அறிவியலாளர்கள் ராணுவ அனுமதியுடன் அந்த இடத்தை ஆராய்ந்தனர். கப்பல் வடிவிலான அந்த இடத்தை தோண்டியும், டைனமேட்கள் கொண்டு வெடித்தும் பார்த்துவிட்டு, அந்த இடத்தின் வடிவம் கப்பல் போல இருக்கிறதேயன்றி கப்பல் ஒன்றுமில்லை என்று அறிவித்தனர். பின்னர் எண்பதுகளின் தொடக்கத்தில் ரான் யாட் என்பவரும் டேவிட் ஃபசோல்டு என்பவரும் இணைந்து துரிப்பினார் பகுதியில் பல சோதனைகளை மேற்கொண்டு நோவாவின் கப்பலை கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்ததோடு “இழந்த நோவாவின் கப்பல்” எனும் நூலையும் எழுதினர். இது தான் இறைவனின் அத்தாட்சியாக கூறப்படும் நூஹ்வின் அல்லது நோவாவின் கப்பல் கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு. ஆனால் கப்பலை கண்டு பிடித்தவர்களில் ஒருவரான டேவிட் ஃபசோல்டு பின்னர் அதில் தமக்கு ஐயமிருப்பதாக கூறி மிண்டும் ஆய்வுகளை தொடர்ந்தார். இறுதியில் அது நோவாவின் கப்பலல்ல என்று கூறி அதை நோவாவின் கப்பல் என்ற பெயரில் நூலாகவும் வெளியிட்டார்.
அந்த இடத்தில் நோவாவின் கப்பல் புதைந்து கிடக்கிறது என்பதற்கு காட்டபப்படும் ஆதாரங்கள் என்ன? கப்பல் வடிவமுள்ள அந்த இடத்தின் நீளம் பைபிளில் குறிப்பிடும் நீளத்தோடு ஒத்திருக்கிறது என்பதும், கப்பலில் பயன்படுத்தப்பட்ட நங்கூரம் போன்ற கல் கண்டெடுக்கப்பட்டதும் தான். இந்த இரண்டும் தவறு என்று நிரூபித்துவிட்டனர் இருந்தாலும் நோவாவின் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பரவிய வதந்தி மட்டும் இன்னும் உயிரோடு இருக்கிறது. அந்த கப்பல் வடிவின் அகலம் 138 அடியாக இருக்கிறது. கடல் மிதவை அளவீடுகளின் படி அந்தக்கப்பல் சீராக மிதந்திருக்கவேண்டுமென்றால் அதன் நீளத்துடன் ஒப்பிடும் போது 86 அடியாக இருந்திருக்கவேண்டும். அதாவது நீளத்தோடு ஒப்பிடும் போது அதன் அகலம் சற்றேறக்குறைய ஒருமடங்கு அதிகமாக இருக்கிறது. இந்த அளவீடுகளின் படி ஒரு கப்பல் பல நாட்கள் சீறாக மிதந்திருக்க முடியாது என்கிறார் ஜான் டி மோரிஸ். அராராத் மலை ஒரு எரிமலையாகும், கடைசியாக அது பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கடைசியாக வெடித்திருக்க வேண்டும் என்கிறார்கள், அப்படி வெடித்து வெளிவந்த லாவா குளம்பு ஒரு கப்பல் வடிவில் படிந்திருக்கிறது என்பதை தவிர அதில் ஒன்றுமில்லை.
அடுத்த ஆதாரமான நங்கூர கற்பலகை என்பதும் திட்டமிட்டு திணிக்கப்பட்டது தான். கப்பல் வடிவிலான அந்தப்பகுதியிலிருந்து 14 மைல் தூரத்தில் தான் நங்கூர கற்பலகை கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வலவு தூரம் கப்பலைவிட்டு நங்கூரம் நகர்ந்தது எப்படி என்பதற்கு ஒரு விளக்கமும் இல்லை. பழங்காலத்தில் அந்தப்பகுதியில் வாழ்ந்த மக்களால் நடப்பட்ட ஒரு நடுகல்தான் அது என்பதும் கயிறு கட்டும் ஓட்டை என்று குறிப்பிடப்பட்டது விளக்கு ஏற்றுவதற்கானது என்பதாகவும் இருக்கலாம். அதோடு ஒரு கப்பலின் நங்கூரம் என்றால் கப்பல் புறப்பட்ட இடத்தில் கிடைக்கும் கல்லாகத்தான் இருக்கவேண்டும் ஆனால் இந்தக் கல் கப்பல் தரை தட்டி நின்ற இடத்திலுள்ள கல்லாக இருக்கிறது. எப்படியென்றால் அராராத் மலை எரிமலைக் குளம்புகளால் ஆனது. அதில் பசால்ட் வகை கற்களே காணப்படுகிறது. நங்கூரமாக காட்டப்படும் கற்பலகையும் பசால்ட் வகை கல்லே. அதாவது ஒருகாலத்தில் அந்தப்பகுதியில் வாழ்ந்த மக்கள் அந்தப்ப்குதியில் கிடைத்த கல்லைக்கொண்டு நடுகல்லாக செய்துவைத்து வணங்கியிருக்கவேண்டும், அதைத்தான் நங்கூரமாக காட்டி நம் மனதில் அவர்களின் கருத்தை நங்கூரமாக இறக்க முயல்கிறார்கள்.
தொல்லியலாளர்கள் நிலத்தை அகளும் போது முக்கியமான காலங்காட்டியாக டோபா எரிமலை படிவுகளை கொள்கிறார்கள். அதாவது இன்றைக்கு 74,000 ஆண்டுகளுக்கு முன்னர் சுமத்திரா தீபகற்பத்திலுள்ள கோட்டா டம்பான் பகுதியில் இருக்கும் எரிமலை இரண்டு வாரங்களுக்கு குமுறி வெடித்தது. இதன் படிவுகள் ஆசியப்பகுதிகளைத்தாண்டி ஐரோப்பாவரை பரவியது. இந்தப்படிவுகள் ஒரு முக்கியமான காலங்காட்டியாக பயன்படுகிறது. இதேபோல் பண்டைய டெதிஸ் கடலின் படிவுகள் இயமமலையின் பாறைகளில் காணப்படுகின்றன. இப்படி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பான நிகழ்வுகளெல்லாம் காலங்காட்டியாக பதிந்திருக்கும் போது பத்தாயிரம் ஆண்டுகளுக்கு உட்பட்ட உலகம் முழுவதையும் சூழ்ந்த இந்த வெள்ளம் பற்றிய தயங்களோ பதிவுகளோ எதுவும் காணப்படவில்லையே ஏன்? ஆக அப்படி ஒரு பிரளயம் ஏற்படவே இல்லை என்பதுதான் உண்மை.
ஆதாரம் என்ற பெயரில் எதையாவது காட்டி என்னவாவது செய்து தங்கள் இறைவனின் இருப்பை தக்கவைப்பதற்கு கடும் முயற்சிகளைச் செய்யும் மதவாதிகளிடமிருந்து நாம் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும் என்பதைத்தான் இவைகளெல்லாம் நமக்கு உணர்த்துகின்றன.
சூரத்துல் கஹ்புக்கும் புத்தருக்கும் என்ன தொடர்பு?
குரானின் திட ஆதாரங்களில் அடுத்து வருவது மறைக்கப்பட்ட ஏடுகள் எனக் கருதப்படும் இஞ்சீல் வேதம். இஸ்லாமிய நம்பிக்கைகளை பொருத்தவரை அனேக இறைத்தூதர்கள் அனேக வேதங்கள் இருந்தாலும், குரான் பெயர் குறிப்பிடுவது நான்கைத்தான். தாவூது (தாவீது) எனும் இறைத்தூதருக்கு வழங்கப்பட்ட ஸபூர், மூஸா (மோசஸ்) எனும் இறைத்தூதருக்கு வழங்கப்பட்ட தவ்ராத், ஈசா அல்லது மஸீஹ் (ஏசு) எனும் இறைத்தூதருக்கு வழங்கப்பட்ட இஞ்சீல், முகம்மது எனும் இறைத்துதருக்கு வழங்கப்பட்ட குரான். இந்த நான்கில் எஞ்சியிருப்பது குரான் மட்டுமே, ஏனையவை அழிந்து விட்டன அல்லது அழிக்கப்பட்டுவிட்டன. இதில் ஈசாவுக்கு வழங்கப்பட்ட வேதமான இஞ்சீல் மனிதக்கரங்களால் திருத்தப்பட்டு உருமாறி அதன் தன்மையை இழந்து இருப்பதுதான் பைபிள் எனும் கிருஸ்தவர்களின் வேதம் என்பது இஸ்லாமியர்களின் கருத்து (இஸ்லாமின் கருத்தும் கூட).
கடந்த 1947 ஆம் ஆண்டு ஜோர்டான் நாட்டின் சாக்கடலை அடுத்துள்ள குவாரடானியா (கும்ரான்) எனும் மலையின் குகை ஒன்றிலிருந்து சில தோல் ஆவணங்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த ஆவணங்கள் மக்கள் பார்வைக்கோ, மொழிபெயர்த்து பரவலாக படிப்பதற்கோ அனுமதிக்கப்படவில்லை. இந்த ஆவனங்கள் தான் குரானை மெய்ப்படுத்தும் ஆதாரங்கள் என்கிறார்கள் மதவாதிகள். எப்படி? ஈசா மக்களிடம் பிரச்சாரம் செய்தது அவருக்கு அல்லாவால் கொடுக்கப்பட்ட வேதமான இஞ்சீலைத்தான். ஆனால் அதன் பின்னர் வந்தவர்களால் ஈசாவின் போதனைகள் திரிக்கப்பட்டு (பவுல் அல்லது பால்) புதிய மதமாகவும் புதிய வேதமாகவும் உருவாக்கப்பட்டன. அது தான் இன்றிருக்கும் பைபிளும், கிருஸ்தவமும். ஆனால் ஈசா பிரச்சாரம் செய்தது இஸ்லாத்தைத் தான். அதனால் புதிய திரிக்கப்பட்ட போதனைகளை ஏற்காதவர்கள். மெய்யான இஞ்சீல் வேதத்துடன் வெளியேறி மலைக்குகைகளில் மறைந்து வாழ்ந்தனர். அப்படி அவர்களால் மறைத்து வைக்கப்பட்ட அந்த ஏடுகள் தான் 1947ல் கண்டெடுக்கப்பட்ட ஆவணங்கள். அது இன்றிருக்கும் குரானையும் இஸ்லாத்தையும் மெய்ப்படுத்துவதால் தான் மக்கள் பார்வையிலிருந்து மறைத்து விட்டார்கள். இப்படி அந்த ஏடு வெளிப்படுத்தப்படும் என்று குரான் 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டதால் குரான் இறைவனின் வேதம் தான் என்பது மெய்ப்பிக்கப்படுகிறது.
இது குறித்து குரான் கூறும் கதை என்ன? குகை (கஹ்பு) என்னும் அத்தியாயத்தில் இந்தக்கதை வருகிறது. “அந்தக் குகையிலிருந்தோரும், சாசனத்தையுடையோரும் நம்முடைய ஆச்சரியமான அத்தாட்சிகளில் நின்றும் உள்ளவர்கள் என எண்ணுகிறீரோ?” குரான் 18:9 என்று தொடங்கும் வசனங்களிலிருந்து அந்த கதை தொடங்குகிறது. சிலர் ஒரு நாயுடன் அந்த குகையில் வந்து தங்குகிறார்கள், தங்களின் இறைவனிடம் தங்களை பாதுகாக்குமாறு வேண்டுகிறார்கள், இறைவனும் அவர்களது கோரிக்கையை ஏற்று அவர்களை தூங்கச்செய்கிறார். எவ்வளவு காலத்திற்கு? 309 ஆண்டுகள் அவர்கள் தூங்குகிறார்கள். தாங்கள் எவ்வளவு காலம் தூங்கினோம் என்று அவர்களுக்கு தெரியாது. அதை தெரிந்து கொள்ளும் பொருட்டு, தங்களுக்கு உணவு வாங்கிவர அவர்களில் ஒருவரை கவனத்துடன் நடந்து கொள்ளுமாறு எச்சரித்து ஊருக்குள் அனுப்புகின்றனர். 18:9 ல் தொடங்கி 26ம் வசனம் வரை குரான் கூறுவது இது தான். இதில் குரான் இரண்டு செய்திகளை அடிக்கோடிடுகிறது. அவர்கள் மொத்தம் எத்தனை பேர்? எவ்வளவு காலம் அவர்கள் உறங்கினர்? உனக்கு தெரியாத விசயங்களில் நீ தர்க்கிக்கவேண்டாம் என்றும் இதுபற்றி யாரிடமும் விளக்கம் கேட்கவும் வேண்டாம் என்று தன்னுடைய தூதருக்கு(!) அல்லா கட்டளையும் போடுகிறார். ஆனால் இந்தக்கதையில் முக்கியமான செய்தியாக இப்போது கருதப்படும் அந்த ஏடு குறித்து குரான் விளக்கவேயில்லை 18:9ல் வரும் ‘சாசனத்தையுடையோரும்’ எனும் ஒரு வார்த்தையை தவிர. முக்கியமான இந்த விசயத்தை விட்டுவிட்டு அவர்கள் எத்தனை பேர் என்பதற்கு அவர்கள் மூவர் நான்காவதாக அவர்களது நாய், அவர்கள் ஐவர் ஆறாவதாக அவர்களது நாய், அவர்கள் ஏழு பேர் எட்டாவதாக அவர்களது நாய் என்றெல்லாம் விரிக்கிறது கடைசியில் அவர்கள் எத்தனை பேர் என்று குரான் கூறவும் இல்லை. முன்னூறு ஆண்டுகள் உறங்கினார்கள் என்றும் பின் ஒன்பது ஆண்டுகள் அதிகமாக என்றும் கூறுகிறது. முன்னூறா? முன்னூற்று ஒன்பதா? தெரியாது. முக்கியமில்லாத இவைகளை பலவாக்கியங்களில் விவரிக்கும் குரான் முக்கியமான அந்த ஏட்டை ஒரு வார்த்தையோடு முடித்துக்கொண்டுவிட்டது. இந்த வசங்களை வைத்துத்தான் மேலுள்ள கதையும் உருவகிக்கப்படுகிறது.
எத்தனை பேர் என்பது ஒருபுறமிருக்கட்டும், மனிதர்களால் முன்னூறு ஆண்டுகள் அல்லது முன்னூற்று ஒன்பது ஆண்டுகள் தூங்க முடியுமா? மூன்று நூற்றாண்டுகளாய் தூங்கியவர்கள் தூங்கி எழும்போது எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தார்கள் என்றும் குரான் கூறுகிறது. அவர்கள் தங்களுக்குள் ஒரு நாள் அல்லது நாளின் சிறிய பாகம் தூங்கியதாய் பேசிக்கொண்டார்கள் குரான் 18:19
இந்தக்கதையில் குரான் எதை வலியுறுத்த விரும்புகிறது? அதன் மூலம் என்ன சொல்ல நினைக்கிறது? ஒற்றைச் சொல்லில் சொன்னது தான் முக்கியமானது என்றால் இந்தக்கதையை நீளமாக வளர்த்தது ஏன்? அந்த சாசனங்கள் கண்டெடுக்கப்படும் என்றோ, அது தான் அத்தாட்சி என்றோ அந்த வசங்களில் எந்தக் குறிப்புமில்லை. மாறாக அவர்கள் குகையில் தங்கியிருப்பது தான் நம் அத்தாட்சி என்றும் கூறுகிறது குரான் 18:17. கண்டெடுக்கப்பட்ட அந்த சாசனங்கள் எந்தக்காலத்தைச் சேர்ந்தவை? கண்டெடுக்கப்பட்ட அந்த சாசனங்கள் கிமு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை எஸ்ஸீனர்களுடையவை என்றும் கண்டறிந்திருக்கிறார்கள். அந்த சாசனங்கள் ஈசாவின் காலத்தைச் சார்ந்தவை அல்ல, அதற்கும் முன்னூறு ஆண்டுகளுக்கு முந்தயவை. ஆகவே அது ஈசாவுக்கு அருளப்பட்ட வேதமாக, இஞ்சீலாக இருக்கமுடியாது. அது ஈசாவுக்கு அருளப்பட்ட வேதம், அது குரானை ஒத்திருக்கிறது அதனால் தான் திருச்சபைகளும், கிருஸ்தவர்களும் அதை மறைக்கிறார்கள் என்று இஸ்லாமியவாதிகளின் பிரச்சாரத்தில் உண்மையில்லை.
அடுத்து ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது பின் ஏன் திருச்சபைகள் அதை மறைக்கவேண்டும்? இதில் தான் கண்டெடுக்கப்பட்ட அந்த சாசனங்களின் முக்கியத்துவமே அடங்கியிருக்கிறது. என்னதான் திருச்சபைகள் உலகத்தின் பார்வையிலிருந்து அதை மறைக்கப் பாடுபட்டாலும் அவை வெளியே கசிந்தே இருக்கின்றன. ஈசாவின் அதாவது ஏசுவின் வாழ்வில் நடந்ததாக கூறப்படும் அனேக நிகழ்ச்சிகளும், அவரின் உரையாடல்களும் அவர் கூறிய எடுத்துக்காட்டுகளும் அந்த சாசனங்களில் இடம் பெற்றிருக்கின்றன. அது எப்படி? முன்னூறு ஆண்டுகளுக்கு பிறகு பிறக்கப்போகும் ஒருவரின் செயல்களும் பேச்சுகளும் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னமே எப்படி எழுதி வைக்கப்பட்டிருக்க முடியும்? இங்கு தான் இதில் புத்தரின் பங்களிப்பு வருகிறது.
இங்கிலாந்து முதல் ஈராக் வரை நீண்டிருந்த பேரரசாகிய ரோமப் பேரரசின் பாலஸ்தீனப் பகுதியில் வாழ்ந்ததாக கருதப்படும் தெய்வத்திருமகனாக போற்றப்படும் ஏசு குறித்த வரலாற்றுத்தடங்கள் என்ன? அங்கு கிமு நான்கில் ஆட்சி புரிந்த ஜூலியஸ் சீசர், அவருக்குப்பின் அகஸ்டஸ் சீசர், கிமு மூன்றாம் நூற்றாண்டின் கிரேக்கத்தின் அலெக்ஸாண்டர் என்று பலர் வாழ்ந்ததற்கான வரலாற்றுச் சான்றுகள் இருக்கின்றன. இந்தியாவில் புத்தர் (கிமு 563- 483) சந்திரகுப்த மௌரியர் (கிமு நான்காம் நூற்றாண்டு) அசோகன் (கிமு மூன்றாம் நூற்றாண்டு) போன்ற மன்னர்களுக்கு கல்வெட்டு சான்றுகள் இருக்கின்றன. மன்னர்கள் மட்டுமல்ல. சாக்ரடீஸ் (கிமு 427- 347) அரிஸ்டாட்டில் (கிமு 384- 322) போன்ற தத்துவ அறிஞர்கள், ஈஸ்கிளீஸ் (கிமு 525 – 456) யூரிபிடஸ் (கிமு 480 – 406) ஆஸ்ரிடோபான்ஸ் (கிமு 445 – 385) போன்ற கிரேக எழுத்தாளர்கள் குறித்த விபரங்கள் கிடைத்திருக்கின்றன. ஆனால் இவர்களைவிட முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் ஒரு புரட்சி வீரரான ஏசு குறித்த எந்தவித ஆதாரங்களும் கிடைக்காமல் போனதெப்படி?
ஏசு எனும் ஒருவர் வரலாற்றில் வாழ்ந்திருந்தார் என்பதற்கு முன்வைக்கப்படும் ஆதாரங்களான ரோமர்கள் யூதர்கள் ஆகியோரின் நூல்களான பிலாவியஸ் ஜோசபஸ் எழுதிய தி ஆன்டிகுடீஸ் ஆப் தி ஜெவ்ஸ்(The Antiquities of the Jews), யூதர்களின் சிறப்பைக் கூறும் டால்முட்(Talmud), பிளீனிதியங்கர் ரோமப் பேரரசன் டார்ஜானுக்கு எழுதிய கடிதம், டாஸிடஸ் எழுதிய அன்னல்ஸ் (Annals) போன்ற அனைத்தும் ஐயத்திற்கிடமானவை என வரலாற்றாசிரியர்களால் தெளிவுபடுத்தப் பட்டிருக்கின்றன.. எனவே ஏசு என்பவர் வரலாற்று மனிதரல்ல, மாறாக கற்பனை மனிதராகவே இருந்திருக்கிறார். இதை இன்னும் தெளிவதற்கு நாம் புத்தரிலிருந்து தொடங்க வேண்டும்.
புத்தரின் வாழ்வை விவரிக்கும் நூலகளான திரிபீடகங்கள், லலிதவிஸ்தாரம், தம்மபதம் போன்ற நூல்களில் கூறப்படும் புத்தரின் வாழ்வில் நிகழ்ந்த அனேக நிகழ்வுகள் ஏசுவின் வாழ்விலும் நிகழ்ந்திருப்பதை காணலாம்,
1) சித்தார்த்தனின் அன்னையின் பெயர் மாயா தேவி, ஏசுவின் அன்னை மேரி. இருவருமே ஆண் துணையின்றி குழந்தையை ஈன்றனர்.
2) சித்தார்த்தன் பிறந்ததும் மன்னன் பிம்பிசாரன் அக்குழந்தையை கொல்ல முயற்சித்தான். ஏசுவை ஏரோது மன்னன் கொல்ல முயற்சித்தான்.
3) ஏசுவின் மக்களுக்கான பணியில் சாத்தான் குறுக்கிடுவதைப்போல் புத்தரின் பணியில் மாரன் குறுக்கிடுகிறான்.
4) புத்தரின் சீடரான ஆனந்தர் மாதங்கி எனும் தாழ்த்தப்பட்ட பெண்ணிடம் தாகத்திற்கு தண்ணீர் கேட்க அவளோ தாழ்த்தப்பட்ட இனத்தைச்சார்ந்த என்னிடம் உயர்ந்த குலத்தைச்சார்ந்த நீங்கள் தண்ணீர் அருந்தலாமா எனக்கேட்க ஆனந்தர் பதிலாக நான் தண்ணீர்தான் கேட்டேன் குலம் கேட்கவில்லை என்று அவளிடம் தண்ணீர் பெற்று அருந்துகிறார். ஏசு ஒருமுறை ஒரு சமாரிய பெண்ணிடம் தண்ணீர் கேட்க அவளோ நீரோ யூதர் நான் சமாரியப் பெண் என்னிடம் தண்ணிர் கேட்கலாமா எனக்கேட்க , ஏசு பதிலாக நீ தண்ணீருடன் இருக்கிறாய் நான் தாகத்துடன் இருக்கிறேன் என்று தண்ணீர் வாங்கி அருந்துகிறார்.
5) புத்தர் ஞானோபதேசம் செய்ய காசி நகருக்கு செல்கிறார், அங்கு அவரது சொற்பொழிவைக்கேட்ட அவரின் எதிரி உட்பட நால்வர் சீடராக மாறுகிறார்கள். இதே கதை ஏசு வாழ்விலும் உண்டு ஒரே வித்தியாசம் காசி நகருக்கு பதிலாக கபர்னகூம்.
6) ஏசு உபதேசிக்கிறார், தன்னைப்போலவே எதிரிகளிடமும் நட்புக்கொள்ளவேண்டும்; புத்தர் உபதேசிக்கிறார், நம்முடைய எல்லாச்செயலும் நட்பும் தயவும் நிறம்பியதாய் இருக்கவேண்டும்.
7) தன்னுடன் சேருபவர்கள் சொத்து சுகங்களை துறந்து எளிமையாக வாழவேண்டும் என்பது புத்தரின் கட்டளை. புனிதப்பயணம் தொடங்கும் போது ஊன்றுகோல் அன்றி வேறு எதையும் எடுத்துச்செல்லக்கூடாது, இரண்டு உடைகள் உடுத்தக்கூடாது இது ஏசுவின் கட்டளை.
8) சாத்தானின் சூழ்ச்சி வலையிலிருந்து மீண்ட ஏசு கபர்னகூம் செல்கிறார். மாரனின் சோதனையிலிருந்து மீண்ட புத்தர் காசி செல்கிறார் (காசி கபர்னகூம் ஒற்றுமை காண்க)
9) புத்தர் கூறுகிறார் வானம் பூமியின் மீது இடிந்து விழுந்து இந்த உலகம் அழிந்து போகலாம், வலிமை மிகுந்த கடல் வற்றிப்போகலாம் ஆனந்தா என்னுடைய வாக்குகள் நிலைத்திருக்கும். கிருஸ்து கூறுகிறார் வானமும் பூமியும் அழிந்து போகலாம் ஆனால் என்னுடைய வாக்கிற்கு அழிவு கிடையாது.
10) ஏசு இறந்தபின் மூன்றாம் நாள் மீண்டு வருகிறார். புத்தர் இறந்த மூன்றாம் நாள் அவரை அடக்கம் செய்த கல்லறையின் கதவு ஏதோஒரு சக்தியால் திடீரென திறக்கிறது.
புத்தரின் வாழ்வில் நிகழ்ந்தவையாக கூறப்படும் இந்தநிகழ்வுகள் புத்தர் இறந்து 130 ஆண்டுகளுக்கு பிறகு எழுதப்பட்ட நூல்களில் இடம்பெற்றிருக்கின்றன, அதேநேரம் ஏசு பிறப்பதற்கு 250 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டிருக்கின்றன என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
மாக்ஸ்முல்லர் இவை குறித்து இவ்வாறு குறிப்பிடுகிறார் “புத்தரும் அவருடைய சீடர்களும் சொல்லிய மொழி நடைக்கும், கிருஸ்துவும் அவருடைய சீடரும் சொல்லிய மொழி நடைக்கும் பெரும் ஒற்றுமை இருப்பதைக் காணலாம். புத்தமத நூல்களில் காணப்படுகின்ற சில உவமைகளும் கதைகளும் புதிய ஏற்பாட்டிலிருந்து எடுத்தது தானோ என்று ஐயம் தோன்றலாம், ஆனால் அவையெல்லாம் கிருஸ்து பிறப்பதற்கு முன்பே எழுதப்பட்டவை”
ஆக ஏசு என்பவர் வரலாற்றில் வாழ்ந்த ஒருவரல்ல என்பது உறுதியாகிறது. அடிமைகளின் எழுச்சியை அடக்குவதற்கு புத்த மதத்திலிருந்து உருவப்பட்ட கதைகளுடன் ஒரு கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் இதிலிருந்து விளங்குகிறது. இது திருச்சபைகளுக்கும் தெரிந்து தான் இருந்திருக்கவேண்டும். அதனால் தான் அதை அம்பலப்படுத்தும் விதத்தில் கண்டெடுக்கப்பட்ட சாக்கடல் சாசனச் சுருள்கள் என்றழைக்கப்படும் அந்த ஆவணங்களை மறைத்து விட்டனர். இதன்பின்னரும் இன்னொரு கேள்வி தொக்கி நிற்கிறது. இந்திய நேபாள எல்லையில் நிகழ்ந்த கதைகளும் நூல்களும் பாலஸ்தீனத்திற்கு எப்படி பரவியது? இதற்கும் வரலாற்றில் சான்றுகள் இருக்கின்றன.
கிமு 327ல் அலெக்ஸாண்டர் இந்தியாவின் மீது படையெடுத்து தான் வென்ற நாடுகளிலிருந்து தத்துவ கலை சாத்திர நூல்களை தன்னுடன் எடுத்துசென்றான் என்பது வரலாறு. எகிப்தில் தான் உருவாகிய அலெக்ஸாண்டிரியா நகருக்கு இந்தியாவிலிருந்து புத்த பிக்குகளை அழைத்துச்சென்றது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இது மட்டுமன்றி அசோகன் கலிங்கப்போரில் வென்று மனம் திரும்பி புத்த மதத்தில் ஈடுபாடு கொண்டு அன்றைய உலகின் எகிப்து, பார்சீகம், ரோம் உட்பட எல்லாப் பகுதிகளுக்கும் தூதுவர்களை அனுப்பிவைத்திருக்கிறான். இப்படி அனுப்பப்பட்ட புத்தமத தூதர்களின் கொள்கைகளால் கவரப்பட்ட குழுவினருக்குத்தான் எஸ்ஸீனர் என்று பெயர். இந்த எஸ்ஸீனர்களுக்கு இன்னொரு பெயரும் இருக்கிறது, நாசரேயர்கள் என்பதுதான் அது.
ஏசு நாசரேத் எனும் ஊரில் பிறந்தார் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் 2000 ஆண்டுகளுக்கு முன்பு பாலஸ்தீனத்தில் நாசரேத் எனும் ஊர் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. பழைய ஏற்பாடில் எந்த இடத்திலும் நாசரேத் எனும் ஊரைப்பற்றிய குறிப்பும் இல்லை. எனவே நாசரேயனாகிய கிருஸ்து எனும் பதம் நாசரேயர்கள் என்றழைக்கப்பட்ட புத்தக்கொள்கைகளால் கவரப்பட்ட குழுக்களையே குறிக்கும். எனவே பௌத்தக்கொள்கைகளைப் பற்றிய குறிப்பேடுகள் தான் கண்டெடுக்கப்பட்ட அந்த சாசனங்கள். ஏசு பொய் எனும் குட்டு உடைந்துவிடக்கூடதே என்று திருச்சபைகள் அதை மறைக்க; அதுவே குரானை உறுதிப்படுத்துவதாக இவர்கள் கதைக்கிறார்கள்.
இஸ்லாமியர்கள் வழக்கமாக கேட்கும் கேள்வி ஒன்றிருக்கிறது. எல்லம் சரி இது எப்படி 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த முகம்மதுவுக்கு தெரிந்தது? இதற்கான பதிலும் அந்த குரான் வசனங்களிலேயே இருக்கிறது. குரான் 18:22 “இன்னும் அவர்கள் குறித்து இவர்கள் எவர்களிடமும் நீர் தீர்ப்பு கேட்கவும் வேண்டாம்” முகம்மதின் காலத்தில் வாழ்ந்த மனிதர்களுக்கு இந்தக்கதை தெரிந்திருக்கிறது என்பதும், இது அவர்களிடம் இருந்துவரும் புராணக்கதை என்பதும் இந்த வசனத்திலிருந்தே விளங்குகிறது.
ஆக இவர்களின் அத்தாட்சிகளும் சான்றுகளும் எந்தவகைப் பட்டவை என்பது தெளிவாகிறதல்லவா. கேள்வரகில் எண்ணெய் வடிந்தால் என்று ஒரு பழமொழி சொல்வார்களே அது நினைவுக்கு வருகிறதா?
மக்காவின் பாதுகாப்பு: குரானின் அறிவிப்புகள் உண்மையா?
சவுதி அரேபியாவின் ஹிஜாஸ் மாநிலத்திலுள்ள மக்கா எனும் நகரம் இஸ்லாமியர்களுக்கு மிகப் புனிதமான ஒரு நகராகும். இந்த நகரில் தான் உலகெங்கிலுமுள்ள முஸ்லீம்கள் நோக்கித்தொழும் கா அபா என்னும் பள்ளிவாசல் இருக்கிறது. இறைவனை வணங்குவதற்கு மனிதர்கள் கட்டிய முதல் பள்ளிவாசல் இது என்பது முஸ்லீம்களின் நம்பிக்கை. இந்தப்பள்ளிவாசலை மையப்படுத்தித்தான் ஹஜ் எனும் கடமையும் முஸ்லீம்களிடம் விதிக்கப்பட்டிருக்கிறது. இது வெறுமனே புனிதமான பள்ளி மட்டுமல்ல, இது குரானை மெய்ப்பிக்கும் திட ஆதாரங்களில் ஒன்றாகும் என்றும் இஸ்லாமிய மதவாதிகள் கூறுகிறார்கள். எப்படி?
….அபயமளிக்கும் இந்த நகரத்தின் மீது சத்தியமாக. குரான் 95:3 வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும் பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்…… குரான் 2:125 ….என் இறைவனே இந்த ஊரை நீ அச்சந்தீர்ந்ததாய் ஆக்குவாயாக…….என்று இபுறாஹீம் கூறியதை. குரான் 14:35 அன்றியும் சூழ உள்ள மனிதர்கள் இறாஞ்சிச்செல்லப்படும் நிலையில் நாம் பாதுகாப்பான புனிதத்தலமாக ஆக்கியிருப்பதை அவர்கள் பார்க்கவில்லையா?…. குரான் 29:67 ……எவர் அதில் நுழைகிறாரோ அவர் பாதுகாப்பும் பெருகிறார்…… குரான் 3:97
இவை அந்நகர் குறித்தும் அந்தப் பள்ளி குறித்தும் குரான் கூறும் பாதுகாப்புகள். இதில் குறிப்பிடப்படும் பாதுகாப்பு எனும் சொல்லுக்கான பொருளில் தான் குரான் இறைவனின் வார்த்தை தான் என்பதற்கான சான்று இருப்பதாக மதவாதிகள் கூறுகிறார்கள். கா அபா அபய பூமி என்று அறிவிக்கப்பட்டு 14 நூற்றாண்டுகள் கடந்த பின்பும் எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் நடந்த பின்பும் அது இன்றளவும் அபய பூமியாகவே அமைந்துள்ளது. 14 நூற்றாண்டுகளாக எந்தத்தாக்குதலுக்கும் உள்ளாகாத வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆலயமாகவும் அது இருந்து வருகிறது. திருக்குர் ஆன் கூறியவாறு அது அபய பூமியாகவே நீடித்து வருவது திருக்குர் ஆன் இறைவனின் வார்த்தைகள் தாம் என்பதற்கு சான்றுகளாக அமைந்துள்ளது.
குரான் கொடுக்கப்பட்டு(!) 1400 ஆண்டுகள் ஆனாலும், குரான் குறிப்பிடும் அந்த பாதுகாப்பு குரானுக்கு பிறகான பாதுகாப்பை மட்டுமல்ல, வரலாற்றுக்கு முற்பட்டகாலம் தொட்டே அந்த இடம் பாதுகாக்கப்பட்டுவருவதாக குரான் குறிப்பிடுகிறது. அந்தப்பள்ளி யாரால் கட்டப்பட்டது என்பது தெரியாவிட்டாலும் அதை புதுப்பித்தது இபுறாஹீம். அதாவது முகம்மதுவுக்கு ஆயிரத்திற்கும் அதிகமான ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் இபுறாஹீம் (ஆப்ரஹாம்). எங்கிருக்கிறது என தெரியாமல் கிடந்த பள்ளியை அடையாளம் காட்டி இறைவன் இபுறாஹீம் மூலம் புதுப்பித்ததாக ஐதீகம். அன்றிலிருந்து அது பாதுகாப்பான இடமாக, புனிதத்தலமாக அறியப்பட்டு வந்திருக்கிறது. முகம்மது இஸ்லாம் எனும் புதிய மதத்தை அறிவிக்கும் முன்னரும் அம்மக்களால் அது புனிதமானதாகவும் பாதுகாப்பானதாகவும் கருதப்பட்டு வந்திருக்கிறது. பண்டைய வரலாறுகளில் மக்காரபா அல்லது மக்கோரபா என்று அறியப்படும் அந்த நகரம் தென் அரேபிய (யெமன்) மொழியில் மக்பர் என்ற சொல்லிருந்தோ, எத்தியோப்பிய மொழியில் மெக்வராப் என்ற சொல்லிலிருந்தோ வந்திருக்கும் என்கிறார்கள் வரலாற்றாய்வாளர்கள். அந்த இரண்டு சொற்களும் பாதுகாக்கப்பட்ட இடம் எனும் பொருளைக் கொண்டிருக்கின்றன (குரான் ஒரு சில இடங்களில் பக்கா என்று குறிப்பிடுகிறது). ஆக மிகப் பழமையான காலம் தொட்டே மக்களிடம் அந்த இடம் பாதுகாக்கப்பட்டது எனும் நம்பிக்கை நிலவி வந்திருக்கிறது.
ஆனால் ஏன் மதவாதிகள் குரானுக்குப் பின்னான 1400 ஆண்டுகளை மட்டும் குறிப்பிட வேண்டும்? ஏனென்றால் அந்த பாதுகாக்கப்பட்ட நகரத்தில் முகம்மது போர் நடத்தியிருக்கிறார். முகம்மது நடத்திய போரிலேயே அந்த நகரத்தின் பாதுகாப்பு கேள்விக்கு உட்படுத்தப்பட்டுவிட்டது. அபயமளிக்கும் அந்த நகரம் பற்றிய அல்லாவின் வாக்குறுதி முகம்மதாலேயே பொய்ப்பிக்கப்பட்டுவிட்டது. முகம்மதுவுக்கும் அது பாதுகாக்கப்பட்ட நகரம் என்பது தெரியும். அதனால் தான் முகம்மது அல்லா எனக்கு மட்டும் அனுமதி தந்திருக்கிறான் என்று சமாளிக்கிறார்.
………எச்சரிக்கை மக்காவில் யுத்தம் செய்வது எனக்கு முன்னர் எவருக்கும் அனுமதிக்கப்பட்டதில்லை, எனக்குப் பின்னர் எவருக்கும் அனுமதிக்கப்படப் போவதுமில்லை. எச்சரிக்கை……. புஹாரி ஹதீஸ் எண் 112.
ஆனால் முகம்மதுவுக்கு மட்டும் சிறப்பு அனுமதி வழங்கப்படுவதாக குரான் வசனமோ, ஹதீஸ்களோ இருப்பதாக தெரியவில்லை. அதனால் தான் முற்காலத்தை தள்ளிவிட்டு முகம்மதுவுக்கு பிறகான 1400 ஆண்டுகளாக அது தாக்குதலில்லாமல் பாதுகாக்கப்படுவதாக வழக்கம்போல புழகமடைகிறார்கள்.
மக்காவையும் அதன் பள்ளிவாசலையும் இறைவன் பாதுகாப்பான் என்பதற்கு சான்று கூறுமுகமாகவும் குரானில் ஒரு கதை இருக்கிறது. ஐந்து வசனங்களைக்கொண்ட யானை எனும் அத்தியாயத்தில் இது கூறப்பட்டிருக்கிறது. யெமன் நாட்டின் அபிஸீனிய ஆளுனராக இருந்த அப்ரஹா எனும் மன்னன் மக்கவையும் பள்ளியையும் இடிக்க யானைப்படையுடன்(அல்லது யானைக்காரன் படை) வந்தபோது, அல்லா அந்த படைக்கு எதிராக பறவைகளை அனுப்ப அவை அந்தப்படைகளின் மேல் சுடப்பட்ட கற்களைப் போட அவர்கள் அழிந்தனர் என்று மக்கா காக்கப்பட்ட கதையை குரான் பேசுகிறது. பாலைவன நாட்டில் யானைப்படை இருந்ததா? மதவாதிகள் கூறுவது போல் அல்லா பறவை வடிவில் விமானங்களை அனுப்பி குண்டு போடச்செய்தானா என்பதையெல்லாம் ஒதுக்கிவைத்து விடலாம். 30 ஆண்டுகளுக்கு முன்பு மக்கா பள்ளி முற்றுகையிடப்பட்டபோது அல்லா படையையும் அனுப்பவில்லை பறவையையும் அனுப்பவில்லை. சவுதி அரசு தான் பிரான்ஸிலிருந்து ரகசிய தக்குதல் படையையும் நரம்பை செயலிழக்கச்செய்யும் ரசாயண குண்டுகளையும் வரவழைத்தது என்பது தான் உண்மை.
1979 நவம்பர் 20 ஆம் தேதி, மத அடிப்படையில் மட்டுமன்றி அரசியல் அடிப்படையிலும் அனைவராலும் ஊன்றிக் கவனிக்கப்பட்ட ஒரு நிகழ்வுக்கான தினம். ஜுஹைமான் அல் ஒத்தைபி, முகம்மது அப்துல்லா எனும் இருவரால் அவர்களால் அமைக்கப்பட்ட குழுவால் மக்காவின் கா அபா பள்ளிவாசல் முற்றுகையிடப்பட்டது. சவுதியில் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டபிறகு வெளி நாடுகளிலிருந்து முஸ்லீமல்லாதவர்கள் இஸ்லாத்தின் புனித பூமியான சவுதியில் வந்திறங்குவதால் களங்கப்பட்டுப்போன புனிதத்தலத்தை சவுதி அரசிடமிருந்து மீட்கவேண்டும் எனும் அடிப்படையில் வஹ்ஹாபிய குழுவால் ரகசியமாக ஆயுதங்கள் எடுத்துச்செல்லப்பட்டு பள்ளிக்கு உள்ளிருந்து திடீரென பள்ளி தங்களின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இது வெளியுலகிற்கு பரவாமல் இருக்க கடும் முயற்சிகளை அரசு எடுத்தபோதிலும் நியூயார்க் டைம்ஸ் நாளேடு மக்கா பள்ளி ஈரானியர்களால் கைப்பற்றப்பட்டதாக செய்தி வெளியிட்டது. அமெரிக்க அரசு (ஜிம்மி கார்ட்டர்) சவுதியின் பாதுகாப்புக்கு ஒரு போர்க்கப்பலை அனுப்பிவைத்தது. ஒரு வார காலத்திற்கும் அதிகமாக நடைபெற்ற இந்த முற்றுகைப் போருக்கு எதிராக சவுதி ராணுவம் கவச வாகனங்களுடன் போராடியது. முற்றுகையை முறியடிக்க முடியாமல் நாட்கள் நீளவே பிரான்ஸிடம் உதவி கோரப்பட்டது. அவர்கள் நவீன ஆயுதங்கள் குண்டுகளுடன், தாயிப் நகரில் சவுதி ராணுவத்திற்கு பயிற்சியளித்து, பின்னர் சுவர்களைத்துளையிட்டு நரம்புகளை செயலிழக்கச்செய்யும் குண்டுகளை வீசி ஒருவழியாக போர் முடிவுக்கு வந்தபோது முகம்மது அப்துல்லா போரில் இறந்து விட்டிருக்க ஜுஹைமானும் எஞ்சிய சிலரும் உயிருடன் பிடிக்கப்பட்டனர்.
இதில் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், எனக்குப்பிறகு மக்காவில் போரிட யாருக்கும் அனுமதி வழங்கபடாது என்று அல்லாவின் பெயரால் முகம்மது கூறியிருக்க சவுதி அரசு எந்த அனுமதியின் பெயரில் போரிட்டது? அல்லாவின் அனுமதி இல்லாமல் போரிட முடியுமா? இதில் இரண்டு முடிவுகளுக்கு வரலாம். ஒன்று அல்லாவின் பெயரால் முகம்மது கூறியது பொய்யாக இருக்கவேண்டும், இரண்டு அல்லாவை மீறி சவுதி அரசு போரிட்டிருக்கவேண்டும். இரண்டில் ஒன்றுதான் உண்மையாக இருக்கமுடியும். எது உண்மை என்று முஸ்லீம்கள் சொல்வார்களா?
அப்ரஹா மன்னன் மக்காவின் மீது படையெடுத்த போது அதை அழித்த அல்லா இந்தப்போரில் இரண்டுமே இஸ்லாமியத்தரப்பாக இருந்ததால் எதை ஆதரிப்பது என்று தெரியாமல் நடுநிலை வகித்து விட்டதால் தான் பள்ளியை காக்க எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லையா? அல்லது குரானில் மக்காவின் பாதுகாப்பு குறித்து அறிவித்ததெல்லாம் வெறும் பகட்டுதானா?
மக்கா குறித்து இன்னொரு வேடிக்கயான செய்தியும் குரானில் இருக்கிறது.
…….ஒவ்வொரு வகை கனி வர்க்கமும் நம்மிடமிருந்துள்ள உணவாக கொண்டுவரப்படுகிறது……….. குரான் 28:57
அதாவது உலகிலுள்ள எல்லவகைப் பழங்களும் மக்காவிற்கு இறக்குமதி செய்து கொண்டுவரப்படுகின்றதாம். முன்னரே இப்படி நடக்கும் என்று அறிவித்திருப்பதால் இதுவும் குரான் இறைவனின் வேதம் என்பதற்கான சான்றாம். சவுதியின் பொருளாதாரத்தையே தலை கீழாக புரட்டிபோட்டு டாலர்களில் குளிக்கவைத்த எண்ணெய் வளம் குறித்து மூச்சு கூட விடாத குரான் பழங்களைப் பற்றி பேசுவது வேடிக்கையானது தானே.
ரசாயன காப்புக் கவசங்களுடன் சவுதி ராணுவம்
அன்றைய மக்கா பள்ளி
ஜுஹைமான் அல் ஒத்தைபி
முகம்மது அப்துல்லாஹ்
உயிருடன் பிடிபட்டவர்கள்
குரான் குறிப்பிடும் நட்சத்திரங்கள்: மனிதப் பார்வையா? இறைப் பார்வையா?
இதுவரை நாம், குரான் இறைவனின் வேதம் தான் என்பதற்கு மதவாதிகள் அறிவியல் உண்மைகள், அறிவியல் முன்னறிவிப்புகள் என விதந்தோதியவைகள் அறிவியலாக இல்லாமலிருக்கிறது என்பதையும், புரட்டுகளாக இருக்கின்றன என்பதையும் பார்த்தோம். இனி குரானில் மதவாதிகளால் வெளிச்சமிட்டுக் காட்டப்படாத, மேற்கோளாக அதிகம் பயன்படுத்தப்படாத பகுதிகள், வசனங்கள் எவ்வாறு அறிவியலோடு முரண்படுகின்றன என்பதை கவனிக்கலாம்.
விழுகின்ற நட்சத்திரத்தின் மீது சத்தியமாக குரான் 53:1 ……… இன்னும் அவற்றை ஷைத்தான்களை (வெருட்டும்) எரிகற்களாகவும் ஆக்கினோம்……… குரான் 67:5 சூரியன் சுருட்டப்படும் போது, நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது குரான் 81:1,2
இவைகள் நட்சத்திரங்கள் குறித்து குரான் குறிப்பிடும் வசங்களில் சில. இந்த வசனங்கள் நட்சத்திரங்கள் விழுவதாகவும், ஷைத்தானை விரட்டப் பயன்படும் கல்லாகவும், உதிர்ந்து விழுவதாகவும் சுட்டுகின்றன. வசனம் 53:1 ல் நட்சத்திரம் விழுவதாக குறிப்பிடுகிறது. ஒரு பொருள் விழுவது எனும் சொல் எதைக்குறிக்கும்? ஒரு பொருள் அதன் இடத்திலிருந்து புவியீர்ப்பு விசையால் கவரப்பட்டு இழுத்துக்கொள்ளப்படுவதையே குறிக்கும். இங்கு நட்சத்திரம் விழுவதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது, ஆனால் எதன் மீது அல்லது எதன் விசையால் கவரப்பட்டு விழுகிறது என்பது குறிப்பிடப்படவில்லை. பூமியிலிருந்து மனிதர்களை நோக்கி கூறப்படுவதால் பூமியில் விழுவதாக கொள்வதற்கே வாய்ப்பிருக்கிறது. ஒரு நட்சத்திரம் பூமியில் விழ முடியுமா? பூமியை விட மடங்குகளில் பெரிய அளவில் உள்ள நட்சத்திரங்கள் பூமியில் எப்படி விழமுடியும்? பூமிக்கும் நட்சத்திரங்களுக்கும் இடையிலுள்ள தூரம் மிக மிக அதிகம், புவியீர்ப்பு விசை எட்டமுடியாத தூரங்களில் அவை இருக்கின்றன. பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரமே 14 கோடியே 95 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. இவ்வளவு பக்கத்தில் இருக்கும் நட்சத்திரமான சூரியன் பூமியின் மீது விழ வேண்டாம், கொஞ்சம் நெருங்கி வந்தாலே போதும் பூமி காணாமல் போய்விடும். பூமியைவிட சூரியன் அளவில் 98 மடங்கு பெரியது, சூரியனை விட பல ஆயிரம் மடங்கு பெரிய நட்சத்திரங்களெல்லாம் விண்ணில் இருக்கின்றன. இவைகளில் எந்த நட்சத்திரம் பூமியின் மீது விழுவது. ஆக விழுகின்ற நட்சத்திரம் என குரான் குறிப்பிடுவதில் ஏதாவது அறிவியல் பார்வை இருக்கிறதா?
67:5 ல் நடத்திரத்தை ஷைத்தானை விரட்டப்பயன்படும் எரிகல்லாக குறிப்பிடுகிறது குரான். ஷைத்தான் என்பது அல்லாவின் உதவியாளனாய் இருந்து கட்சிமாறிய ஒரு இனம். முதல் மனிதனை (ஆதாம்) களிமண்ணால் படைத்து தன் உதவியாளர்கள் அனைவரையும் அழைத்து பணியுங்கள் என்று அல்லா கூற, அல்லாவின் ராஜ்ஜியத்தில் முதல் கலகக்குரல் ஒலிக்கிறது. நெருப்பால் படைக்கப்பட்ட நான் களிமண்ணால் படைக்கப்பட்ட மனிதனை பணிவதா என்று இப்லீஸ் எனும் உதவியாளன் மட்டும் மறுக்க, ராஜ்ஜியத்திலிருந்து விரட்டப்பட்டு ஷைத்தான் என்ற பெயரில் பல்கிப்பெருகி மனிதர்களை குரானின் வழியிலிருந்து கெடுத்துக்கொண்டிருக்கிறான். இது மனிதர்கள் அல்லாவை பின்பற்றாமலிருக்கும் மனிதர்களின் அடிப்படை குறித்த குரானின் காரியக் கற்பனை. இந்த ஷைத்தான்கள் வானத்திலிருக்கும் அல்லாவின் ராஜ்ஜியத்தில், அல்லாவும் மலக்குகளும் (அல்லாவின் உதவியாளர்கள், ஷைத்தானும் முன்னர் ஒரு மலக்கு தான்) பேசிக்கொள்வதை ஒட்டுக்கேட்கிறதாம். அப்படி ஒட்டுக்கேட்க முயற்சிக்கையில்தான் நட்சத்திரங்கள் எரிகற்களாக ஷைத்தான்களை விரட்டுகிறதாம். இதைத்தான் அந்த வசனம் குறிப்பிடுகிறது. இதில் எங்காவது அறிவியல் பார்வை தென்படுகிறதா? அப்படி நட்சத்திரங்கள் பூமியை நெருங்கமுடியுமா? இரவில் வானத்தைக் கவனித்தால் எரிகற்கள் விழுவதை பார்த்திருக்கலாம். இதை வைத்து அவை ஷைத்தானை விரட்டுவதாக முகம்மது சுவராசியமாக கதைகட்டியிருக்கிறார், அவ்வளவுதான்.
81 ம் அத்தியாயத்தின் முதல் இரண்டு வசனங்கள் நட்சத்திரங்கள் குறித்த அல்லாவின் பார்வை அறிவியலோடு எவ்வளவு தீவிரமாய் முரண்படுகிறது என்பதை இன்னும் விரிவாக அம்பலப்படுத்துகிறது. அந்த வசனங்களில் சூரியன் சுருட்டப்படுகிறது. நட்சத்திரங்கள் உதிர்ந்து விழுகின்றன. உலகத்தின் இறுதி நாளில் அதாவது நியாயத்தீர்ப்பு நாளில் உலகத்தின் அழிவு எப்படி இருக்கும் என்று இந்த அத்தியாயம் விவரிக்கிறது. அதில் தான் சூரியன் சுருட்டப்படுகிறது, நட்சத்திரங்கள் உதிர்ந்து விழுகின்றன. நட்சத்திரங்கள் உதிர்கின்றன என்றால், சூரியனும் உதிரத்தானே வேண்டும். ஏனென்றால் சூரியனும் ஒரு நட்சத்திரம் தானே. எனவே சூரியன் ஒரு நட்சத்திரம் என்பது அல்லாவுக்கு தெரியவில்லை. அவருடைய பார்வையில் புள்ளியைப்போல் மினுக்கிக் கொண்டிருப்பதுதான் நட்சத்திரம். அதனால் தான் அவை உதிரவைக்கப்படுகின்றன, சூரியன் பெரியதாய் இருக்கிறது எனவே அது சுருட்டப்படுகிறது. ஐ.ஆர்.எஸ் 5 போன்ற நட்சத்திரங்களெல்லாம் உதிரும் போது, அதை விட பத்தாயிரம் மடங்கு சிறிய சூரியன் சுருட்டப்படுகிறது என்றால், இது அறிவியல் பார்வையா?
நட்சத்திரங்களால் மனிதர்களுக்கு ஏற்படும் பயன் என்ன? அல்லது எதற்காக அல்லா நட்சத்திரங்களைப் படைத்திருக்கிறான்? இதற்கான விடை ஸஹீஹுல் புஹாரி ஹதீஸ் எண்கள் 3198, 3199 ஆகிய இரண்டுக்கும் இடையில் நட்சத்திரங்கள் எனும் தலைப்பில் இருக்கிறது.
௧) அவற்றை வானத்திற்கு அலங்காரமாக ஆக்கியுள்ளான்.
௨) ஷைத்தான்களை எறிந்து விரட்டுவதற்கான கருவியாக ஆக்கியுள்ளான்.
௩) அவற்றின் வாயிலாக வழியறிந்து கொள்வதற்கான அடையாளங்களாக அவற்றை ஆக்கியுள்ளான். இந்த மூன்றைத்தான் நட்சத்திரங்களை படைத்தததன் காரணங்களாக அந்த ஹதீஸ் கூறுகிறது. வெளியைக்கடந்து ஸூப்பர் நோவாக்களிலிருந்து பூமியை அடையும் காஸ்மிக் கதிர்களை ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிடுவோம். சூரியன் எனும் நட்சத்திரம் இல்லையென்றால் மனித இனம் ஏது? சூரியக்குடும்பத்தில் பூமியின் இருப்புக்கு சூரியன் ஆற்றும் பருண்மையான காரணங்களையெல்லாம் விட்டுவிட்டாலும் கூட, சூரியன் இல்லாமல் ஒரு புல்பூண்டுகூட பூமியில் இருக்கமுடியாதே. தாவரங்கள் சூரிய ஒளியைக் கொண்டே பச்சயம் தயாரிக்கின்றன. உயிரினங்கள் சூரிய ஒளியைக்கொண்டே வெப்பம் பெருகின்றன. ஆக பூமியில் அனைத்தும் உயிர்வாழத்தேவையான ஆதாரங்கள் சூரியன் எனும் நட்சத்திரத்தின் வழியாக பெற்றுக்கொண்டிருக்கும் போது, வழியைக் கண்டறிவதற்கான அடையாளமாக கூறுவது, ஆண்டவனின் அனைத்தும் அறிந்த பண்பையே கேள்விக்குறியாக்கவில்லையா? ஓதத்தெரியாத உம்மி நபிக்கு (முகம்மது) வேண்டுமானால் இவைகள் தெரியாமல் இருந்திருக்கலாம், அந்த இறைவனுக்கு………..?
இரவு வானத்தில் எரிகற்கள் விழுவதைப் பார்த்து, நட்சத்திரம்தான் விழுகிறது என்று எண்ணி தன்னுடைய குரானில் முகம்மது வசனங்களை கட்டியமைத்திருக்கிறார் என்பதற்கு இது ஒரு தெளிவான அத்தாட்சியில்லையா? மதவாதிகள் பதில் கூறலாம்.
குரானின் காலப்பிழைகள்
குரான் என்பது எல்லாவற்றின் மீதும் அனைத்துவித ஆற்றலையும் கொண்டிருக்கும் மீபெரும் சக்தியான அல்லா முகம்மதுவுக்கு வழங்கியது என்பது முஸ்லீம்களின் நம்பிக்கை. அதனால்தான் அதில் எந்தஒரு முரண்பாடும் இருக்கமுடியாது என்றும் அவர்கள் நம்புகிறார்கள். அந்த நம்பிக்கைப் பாத்திரமான குரானிலிருந்து சில வசனங்கள்,
………உங்கள் யாவரையும் சிலுவையில் அறைந்துவிடுவேன் என்று கூறினான். குரான் 7:124 …….. மற்றவரோ, சிலுவையில் அறையப்பட்டு அவர் தலையிலிருந்து பறவைகள் கொத்தித்திண்ணும் ……….. குரான் 12:41
நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ்தான் ஆறு நாட்களில் வானங்களையும் பூமியையும் படைத்து ……… குரான் 7:54 பூமியை இரண்டே நாட்களில் படைத்தவனை ……….. அதில் அவறின் உணவுகளை நான்கு நாட்களில் சீராக நிர்ணயித்தான்……. இரண்டு நாட்களில் அவறை ஏழு வானங்களாக ஏற்படுத்தினான்……… குரான் 41:9,10,12
இந்த வசனங்களில் ஒன்றுக்கு இன்னொன்று முரணான கால அளவீடுகள் இடம்பெற்றிருக்கின்றன. முரணான காலங்களை குறித்ததனால் இந்த வசனங்களைப் புனைந்தது, குரானை எழுதியது அனைத்தும் அறிந்த ஒருவராக இருக்கமுடியாது அதாவது அல்லா என்ற ஒரு சக்தி கிடையாது முகம்மது தன்னுடைய ஆக்கங்களை எற்புடையதாக ஆக்குவதற்காக பயன்படுத்திய கற்பனைதான் அல்லா என்பது வெளிப்படுகிறது.
இவற்றில் முதல் இரண்டு வசனங்களில் சிலுவை பற்றிய குறிப்பு இருக்கிறது. 7:124 வசனம் எகிப்தில் மன்னனாய் இருந்த ஃபிர் அவ்ன் கூறுவதாக வருகிறது. அந்த நேரத்து இறைவனின் தூதரான மூஸாவுடன் (மோசஸ்) போட்டியிட சில வித்தைக்காரர்களை வரவழைக்க, அவர்களோ மூஸாவின் வித்தையைப் பார்த்து நீயே பெரியவன் என்று மூஸாவை ஏற்றுக்கொள்ள அந்த ஆத்திரத்தில் அவர்களை எச்சரிக்கும் விதமாக அம்மன்னன் இப்படி கூறுகிறான். 12:41 வசனம் இன்னொரு இறைத்தூதரான யூசுப் (ஜோசப்) சிறையில் அடைபட்டிருக்க, அவருடன் சிறையிலிருந்தவர்கள் தங்கள் கண்ட கனவுக்கு விளக்கம் கேட்க, அவர்களின் கனவுக்கு யூசுப் கூறும் விளக்கமாக வருகிறது. இவர் மூஸாவைவிட காலத்தால் முந்தியவர்.
இந்த இரண்டு வசனங்களிலும் சிலுவை தண்டனையாக சொல்லப்பட்டிருக்கிறது. பண்டைய காலத்தில் சிலுவைத்தண்டனை என்பது மரண தண்டனையை நிறைவேற்ற பயன்படுத்தப்பட்ட ஒரு வழிமுறை. இந்த தண்டனையைப் பற்றி குரான் எந்தக் காலத்தில் குறிப்பிடுகிறது என்பதில் தான் பிழை இருக்கிறது. ஃபிர் அவ்ன் என்று மதவாதிகளால் அழைக்கப்படும் இரண்டாம் ரமோஸஸ் எனும் மன்னனின் காலம் கிமு 1279ல் இருந்து கிமு 1213 வரை. யூசுப் என்பவரின் காலம் குறித்து அறிந்து கொள்ள வழி எதுவும் இல்லை என்றாலும் இரண்டாம் ரமோஸஸ் காலத்திற்கு சற்றேறக்குறைய 300 ஆண்டுகள் முந்தியதாக இருக்கலாம். தோராயமாக கிமு 1600 க்கும் கிமு 1200 க்கும் இடைப்பட்ட காலத்தில் சிலுவையில் அறைந்து கொல்லும் தண்டனை முறை இருந்தது என்று குரான் கூறுகிறது. ஆனால் வரலாற்றில் அறியப்பட்ட முதல் சிலுவைத்தண்டனை பெர்சியர்களால் ஏற்படுத்தப்பட்டது. பெர்சிய (இன்றைய ஈரான்) மன்னனான முதலாம் டேரியஸ் எனும் மன்னனால் கிமு 519 ல் தரப்பட்டதுதான் வரலாற்றில் அறியப்பட்ட முதல் சிலுவைத்தண்டனை. ஆனால் குரான் இதற்கு சற்றேறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே சிலுவைத் தண்டனை இருந்ததாகக் குறிப்பிடுகிறது. அதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
ஏசு என்று ஒருவர் இருந்ததாகவும், அவர் மக்களினிமித்தம் சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டதாகவும் கதைப்பது கிருஸ்தவர்களின் நம்பிக்கை. இதைச் செவியுற்ற முகம்மது, தன்னுடைய குரானில் தகுந்த இடத்தில் பயன்படுத்திக்கொண்டார். காலம் குறித்த தெளிவு அவரிடம் இல்லாததால்தான் குரானில் காலக் குறிப்புகள் பெரும்பாலும் இடம்பெறவில்லை. அதே தெளிவின்மையால் பிற்காலத்தில் செவியுற்ற சிலுவைத் தண்டனை முறையை காலத்தால் முற்பட்ட சிலருக்கு பொருத்திவிட்டார்.
அடுத்த இரண்டு வசனங்களில் 7:54 ல் வானங்களையும் பூமியையும் படைக்க ஆறு நாட்களை எடுத்துக்கொண்டதாகவும், அடுத்து குறிப்பிடப்பட்டிருக்கும் வசனங்களில் தனித்தனியாக பூமியை படைக்க இரண்டு நாட்களும், அதில் உணவு வகைகளை படைக்க நான்கு நாட்களும் வானங்களைப் படைக்க இரண்டு நாட்களும் என்று மொத்தம் எட்டு நாட்களும் குறிப்பிடப்படுகிறது. அதாவது மொத்தமாக கூறுமிடத்தில் ஆறு நாட்கள் என்றும் தனித்தனியாக கூறுமிடத்தில் எட்டு நாட்கள் என்றும் இருக்கிறது.
வானங்கள் பூமி என்று மட்டும் இவ்வசனங்களில் கூறினாலும் வேறு சில வசனங்களில் வானங்களும் பூமியும் அதற்கு இடையிலுள்ளதும் என்றும் சேர்த்து குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பொருள் மொத்த பிரபஞ்சமும் ஆதிமுதல் ஆறு நாட்களில் படைத்து முடிக்கப்பட்டுவிட்டது என்பது. ஆனால் பிரபஞ்சத்தில் இன்னும் கூட புதுப்புது விண்மீன்களும், கோள்களும் தோன்றிக்கொண்டிருக்கின்றன; நெபுலாக்கள் சிதறிக்கொண்டிருக்கின்றன; கருந்துளைகள் பருப்பொருட்களை இல்லாமல் செய்துகொண்டிருக்கின்றன. ஆறு நாட்களிலோ, எட்டு நாட்களிலோ தொடக்கத்தில் படைத்து முடித்துவிடப்பட்டது என்றால் இப்போது உருவாகிக் கொண்டிருக்கும் கோள்களையும், பருப்பொருட்களையும் எந்த நாட்கணக்கில் சேர்ப்பது? அல்லது படைப்பது தொடர்கிறது என்றால் ஆறு நாள் எட்டு நாள் என்பது எந்தக்கணக்கில் கூறப்பட்டது?
முதல் இரண்டு நாட்களில் பூமி படைக்கப்பட்டது என்றால் எந்த அடிப்படையில் நாட்கள் கணக்கிடப்பட்டது? ஏனென்றால் பூமி படைக்கப்பட்டு அதில் உணவு வகைகளுக்காக நான்கு நாட்களைச் செலவு செய்து அதன்பிறகுதான் வானமும் ஏனையவையும் வருகின்றன. வானம் படைக்கப்படாமல் அதில் சூரியன் படைக்கப்படாமல் எந்த மையத்தில் பூமி சுழன்று நாட்கள் கணக்கிடப்பட்டது? (வானமா பூமியா எது முதலில் படைக்கப்பட்டது என்பது குறித்து ஏற்கனவே எழுதப்பட்டதையும் இதனுடன் சேர்த்து படித்துக்கொள்ளவும்) பூமி உருவாகி பல கோடி ஆண்டுகள் நெருப்புக்கோளமாக சுற்றிக்கொண்டிருந்ததை எந்தக்கணக்கில் சேர்ப்பது?
குரானில் பல இடங்களில் ஆறு நாட்களில் அனைத்தும் படைக்கப்பட்டது என்று முகம்மது கூறியிருந்தாலும், தனித்தனியாக கூறும் போது இரண்டு நாட்களை அதிகமாக கூறி முரண்பட்டிருக்கிறார், காரணம் குரானை அவர் சீராக ஒரே தடவையில் சொல்லி முடித்துவிடவில்லை. பல தடவைகளில் சற்றேறக்குறைய இருபத்து மூன்று ஆண்டுகளில் படிப்படியாக கூறியதுதான், அதிலும் அறிவியலோடு ஒரு தொடர்பும் இல்லாமல்.
ஆக எல்லாம் அறிந்த ஒரு சக்திதான் முகம்மதுவுக்கு குரானைக் கொடுத்தது என்பது கற்பனையானது. அவர் தன் கற்பனையை குரானாகத் தந்தார் என்பதே மெய்யானது.
கால வெளியில் சிக்கிக்கொண்ட அல்லா
பொதுவாக காலம், வெளி இரண்டும் தனித்தனியானது என அறியப்பட்டிருந்தாலும், இரண்டும் பிரிக்கவொண்ணாதபடி பிணைந்திருப்பவை. காலம் என்பதை வெளியில் இருக்கும் பருப்பொருளின்றி முற்றறிந்து கொள்ள முடியாது. அதன் படி ஒரு நாள் என்பதின் முழுமையான பொருள் பூமி தன்னைத்தானே ஒருமுறை சுற்றிக்கொள்ள எடுத்துக்கொள்ளும் காலம். ஒரு ஆண்டு என்பது சூரியனை சுற்றிவர எடுத்துக்கொள்ளும் காலம்.
இப்போது குரானின் சில வசனங்களைப் பார்க்கலாம்.
வேதனையை அவர்கள் அவசரமாகத் தேடுகிறார்கள். அல்லாஹ் தன் வாக்குறுதிக்கு மாறு செய்வதேயில்லை. மேலும் உம்முடைய இறைவனிடம் ஒரு நாள் என்பது நீங்கள் கணக்கிடுகிற ஆயிரம் ஆண்டுகளைப் போலாகும். குரான் 22:47
வானத்திலிருந்து பூமி வரையிலுமுள்ள காரியத்தை அவனே ஒழுங்குபடுத்துகிறான். ஒரு நாள் அவனிடமே மேலேறிச் செல்லும். அந்த அளவு நீங்கள் கணக்கிடக்கூடிய ஆயிரம் ஆண்டுகளாகும். குரான் 32:5
ஒருநாள் மலக்குகளும், அவ்வான்மாவும் அவனிடம் ஏறிச் செல்வார்கள். அதின் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகள் இருக்கும் குரான் 70:4
இந்த மூன்று வசனங்களும் பூமியின் ஒரு நாளின் அளவு தன்னிடத்தில் அல்லது தான் இருக்கும் கோளின் சூழலில் எத்தகைய அளவாக இருக்கும் என்பதை ஒப்பிட்டுக் காட்டும் விதமாக அல்லா கூறுவதாக அமைந்த வசனங்கள். முதல் பார்வையிலேயே இதன் கால வித்தியாசம் முரண்பாடு காட்டும், அதாவது முதலிரண்டு வசனங்களில் ஆயிரம் ஆண்டுகள் என்றும் மூன்றாவது வசனம் ஐம்பதாயிரம் ஆண்டுகள் என்றும் குறிப்பிடுகிறது.
ஆனால் இவைகள் காலம் காட்டும் வசனங்களல்ல வேகத்தைச் சுட்டும் வசனங்கள் என்கிறார்கள் மதவாதிகள். எப்படி?
முதலிரண்டு வசனங்களில் ஆண்டவனின் கட்டளை பூமிக்கு வந்தடையும் வேகத்தை குறிப்பதாக விளக்கம் கொடுக்கிறார்கள். உலகில் பிறந்த அனைத்து மனிதர்களும் நியாயத் தீர்ப்பு நாளில் ஒன்றாக எழுப்பப்பட்டு விசாரித்து செய்த தவறுகளுக்கு தண்டனை தரப்படும் என்பது இஸ்லாமிய நம்பிக்கைகளில் முக்கியமானது. அது எப்போது வரும்? இன்னும் வரவில்லையே என்று அக்கால மனிதர்கள் முகம்மதுவிடம் கேள்வி எழுப்புகிறார்கள். அதற்கு அல்லா பதில் கூறுவதாகத்தான் முகம்மது இந்த வசனத்தை அமைத்திருக்கிறார். அதாவது அவசரப்படாதீர்கள், அந்த நாள் நிச்சயம் வந்து சேரும் என்பது அந்த வசனத்தின் சுருக்கமான பொருள். இதில் ஒரு நாள் ஆயிரம் ஆண்டு என்று தேவையில்லாத ஒரு ஒப்பீடு ஏன்? அல்லா மிகப்பெரியவன் (அல்லாஹு அக்பர்) என்பது இஸ்லாத்தில் பிரபலமான ஒரு முழக்கம். இதை வலியுறுத்தும் விதமாகத்தான் முகம்மது அந்த ஒப்பீட்டை செய்திருக்கிறார். மனிதர்களது நாளின் நீளத்தைப் போல் அல்லாவின் நாளின் நீளத்தை சாதாரணமாக நினைத்துவிடாதே உன்னுடைய நாளைவிட அல்லாவின் நாள் ஆயிரம் ஆண்டு அளவுக்கு பெரியது என்று வியப்பாக எடுத்துக்காட்டுகிறார்.
ஆனால் இப்போது அந்த வசனத்தின் பொருளை நேரடியாக எடுத்துக்கொண்டால் ஒரு சிக்கல் வருகிறது. 22:47, 32:5 வசனங்களில் ஒரு நாளுக்கு இணையாக ஆயிரம் ஆண்டுகளைக் குறிப்பிடும் குரான் 70:4ம் வசனத்தில் ஒரு நாளுக்கு இணையாக ஐம்பதாயிரம் ஆண்டுகளைக் குறிப்பிடுகிறது. இதில் 22:47ம் வசனமும் 70:4ம் வசனமும் ஒரே கேள்விக்கு பதிலாக கூறப்படும் வசனங்கள், அதாவது யுகமுடிவு நாட்கள் எப்போது வரும் எனும் கேள்விக்கு பதிலாக கூறப்படும் வசனங்கள். எனவே இந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்காகத்தான் இரண்டு வசனங்களும் வேறு வேறு விசயத்தைக் கூறுவதாக பிரித்துப் பொருள் கொண்டு சமாளித்திருக்கிறார்கள். 22:47ம் வசனத்தில் அல்லாவின் கட்டளை பூமிக்கு வந்து சேரும் வேகத்தைக் குறிப்பதாகவும் அதாவது யுகம் முடியட்டும் என்று அல்லா கட்டளையிட்டுவிட்டால் அது மனிதர்களின் வேகத்தைவிட 365000 மடங்கு அதிக வேகத்தில் பூமியை வந்தடையும் என்று பொருள் கொள்ள வேண்டும் என்றும்; 70:4ம் வசனத்தில் வானவர்கள் (அல்லாவின் உதவியாளர்கள்) பூமிக்கு வந்து செல்லும் வேகத்தைக் குறிப்பதாகவும் அதாவது பல்வேறு வேலைகளுக்காக பூமிக்கு வந்து செல்லும் வானவர்கள் மனிதர்களின் வேகத்தை விட 18250000 மடங்கு அதிக வேகத்தில் பயணிக்கிறார்கள் என்று பொருள் கொள்ள வேண்டும் என்றும் அவ்வசனங்களுக்கு வியாக்கியானங்கள் அளிக்கிறார்கள்.
மதவாதிகளின் வியாக்கியானங்களின்படியே அவற்றை வேகங்களாக பொருள் கொண்டாலும் அந்த வேகங்களின் மனிதர்களின் வேகம் ஒப்பிடப்பட்டு மடங்குகளாகக் கூறப்படுகிறது. அன்றைய மனிதர்கள் பயணிக்கும் வேகம் என்றால் ஒட்டக வேகம் அல்லது குதிரை வேகம். இந்த வேகங்களோடு ஒப்பிட்டு ஆயிரம் ஆண்டு, ஐம்பதாயிரம் ஆண்டு என்று குரான் கூறியிருக்குமானால் இன்று மனிதர்களின் வேகம் 1400 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட பல மடங்கு அதிகரித்துவிட்டது. இன்றைய மனிதனின் விரைவுப்படி ஆயிரம் ஆண்டு, ஐம்பதாயிரம் ஆண்டு என்பதை குறைக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. மட்டுமல்லாது மனிதனின் வேகம் தொடர்ந்து அதிகரித்துச் செல்லும், அப்படி அதிகரித்துச் செல்லச் செல்ல இந்த குரான் வசனங்களை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். இது அவர்களின் மதக் கொள்கையோடு மிகப் பலமாக மோதக் கூடிய ஒரு விசயமல்லவா? எப்படிச் செய்வார்கள்? இஸ்லாமியர்கள் விளக்கம் கூறுவார்களா?
இந்த வசனங்களோடு ஐன்ஸ்டீனின் சிறப்பு சார்பியல் கோட்பாட்டையும் கட்டிவைத்திருக்கிறார்கள். ஒரு நாள் என்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு அல்லது ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு சமம் என்பது கடந்த நூற்றாண்டுவரை யாருக்கும் புரியாமல் இருந்தது சார்பியல் கோட்பாட்டை கண்டடைந்த பிறகுதான் அதன் பொருள் புரிந்தது என்று கூறிக்கொள்கிறார்கள். (அப்படியானால் குரானை புரிந்து கொள்வதற்காக சுலபமாக ஆக்கிவைத்திருக்கிறேன் என்று அல்லா கூறுவதன் பொருள் என்ன? என்று யாரும் கேட்டுவிடாதீர்கள்)
ஒளியின் வேகத்தை ஒட்டி ஒரு பொருள் பயணம் செய்யும் போது அதன் வாழ்நாள் அதிகரிக்கும் என்பது சார்பியல் கோட்பாட்டின் ஒரு பகுதி. இதைப் பயன்படுத்தித் தான் அந்த வசனங்களுக்கு வேகம் எனும் பொருளைக் கொண்டுவருகிறார்கள். அதாவது, அதிவிரைவாகச் செல்லும் போது வாழ்நாள் அதிகரிப்பதால்தான் ஒரு நாள் என்பது ஆயிரம் ஆண்டுகளுக்குச் சமமானதாக ஆகமுடிகிறது என்பது அவர்கள் முடிபு. ஆனால் இதிலும் சிக்கல் இருக்கிறது.
ஒளியின் வேகத்தை ஒட்டி விரைகையில் வாழ்நாள் அதிகரிக்கும் என்பது ஒரு பகுதிதான் மற்றொரு பகுதி உருவம் சுருங்கும் என்பது. எடுத்துக்காட்டாக ஒரு மீட்டர் நீளம் கொண்ட ஒரு பொருள் ஒளியின் வேகத்தில் பயணிக்கும்போது அதன் வாழ்நாள் இரண்டு மடங்காகும் என்றால் அதன் நீளம் அரை மீட்டராகும்.
இதன்படி, இந்த விரைவில் உயிரினங்கள் பயணிக்க முடியாது அல்லது பயணித்தால் உயிருடனிருக்கமுடியாது என்றாகிறது. ஏனென்றால் அளவு குறைந்தாக வேண்டும். இந்த சமன்பாடைக் கொண்டுதான் ஒருவிதத்தில் கணக்கிட்டு ஒளியின் வேகத்தை விட அதிக வேகம் பிரபஞ்சத்தில் இருக்கமுடியாது என்கிறார்கள். ஆனால் அல்லாவின் உதவியாளர்களான வானவர்களால் எப்படி ஒளியின் வேகத்தில் பயணித்துக் கொண்டு உயிருடன் இருக்கமுடிகிறது எனும் கேள்வி இங்கு தவிர்க்கவியலாமல் எழுகிறது. அடுத்து ஒளியை மிகைத்த வேகம் என்பது பிரபஞ்சத்தில் இல்லை. ஆனால் வானவர்கள் சர்வ சாதாரணமாக ஒளியைவிட மிகைத்த வேகத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறார்களே எப்படி? மேற்கூறிய அந்த மூன்று வசனங்களையும் வேகம் குறித்த வசனங்களாகப் புரிந்துகொள்வதற்கு ஒரு முகாந்திரமும் இல்லை. இறைவன் பெரியவன் என்பதைக் காட்டும் ஒரு சொல்லாடல்தான் அந்த வசனங்களில் இடம் பெற்றிருக்கிறது. இறைவனின் வார்த்தைகளை கடல்களை மையாக கொண்டாலும் எழுதிமுடிக்க முடியாது என்று குரானில் வேறொரு இடத்தில் குறிப்பிடப்படுவதையும் இதனுடன் இணைத்து புரிந்து கொள்ளலாம். வேகம் குறித்து கூறுவதாக அர்த்தப்படுத்திக்கொண்டால் மட்டுமே இங்கு முரண்பாடு எழுவதை தவிர்க்கமுடியும் என்பதால் அவ்வாறாக பொருள் படுத்தப்படுகிறது.
அதே நேரம் இது கால அவகாசம் வழங்குவதை குறித்த வசனம் தான் இதில் வேகம் குறித்த குறிப்பு ஒன்றுமில்லை என்பதை இதற்கு அடுத்து வரும் ஒரு வசனம் மிகத் துல்லியமாகவே விளக்கி விடுகிறது.
அநியாயங்கள் செய்துகொண்டிருந்த எத்தனையோ ஊர்களுக்கு நான் அவகாசம் கொடுத்தேன். பின்னர் அவறைப் பிடித்துக்கொண்டேன். மேலும் என்னிடமே மீண்டும் வரவேண்டும். குரான் 22:48
இப்படி பலவிதமாக வித்தைகள் செய்து முலாம்பூசி குரானை நிலைநிறுத்த முயல்வதிலிருந்தே நாம் புரிந்து கொள்ளலாம், குரானில் போர்த்தப்பட்டிருக்கும் புனிதப் போர்வை போலியானது என்பதை மதவாதிகளும் உணர்ந்தே இருக்கிறார்கள் என்பதை.
ஆதி மனிதன் மொழியறிந்தவனா? அல்லாவின் பதில் என்ன?
மொழியறிவு என்பது மனிதன் சமூகவயப்பட்டதன் அடையாளம். கூட்டு உழைப்பு மனிதனுக்கு இன்றியமையாததாய் ஆனபின் தன் எண்ணங்களை, அனுபவங்களை பிரிதொரு மனிதனுக்கு உணர்த்துவதற்கு, கடத்துவதற்கு கண்டுபிடித்த கருவி. ஆதி மனித இனம் தோன்றியபோதே மொழியறிவு அவனுக்கு எட்டியிருக்கவில்லை. அவனது பாதுகாப்பற்ற சூழல் இன்னொரு மனிதனிடம் தொடர்பு கொண்டே ஆகவேண்டும் எனும் நிர்பந்தத்தை ஏற்படுத்திய பிறகு அவன் கண்டு, கற்று, வளர்த்துக்கொண்டது தான் மொழி அதாவது பேச்சு. இப்போது குரானின் ஒரு வசனத்தைப் பார்க்கலாம்.
“ஆதமே அப்பொருட்களின் பெயர்களை அவர்களுக்கு விவரிப்பீராக” என்று சொன்னான். அவர் அப்பெயர்களை அவர்களுக்கு விவரித்தபோது… குரான் 2:33
ஆதம் என்பது அல்லா உருவாக்கிய முதல் மனிதன். தன் படைப்பின் பெருமையை தன் உதவியாளர்களுக்கு (வானவர்களுக்கு – மலக்குகளுக்கு) விளக்கும் வகையில் இந்தக்கதை குரானில் இடம்பெற்றிருக்கிறது. பூமியில் மனிதன் எனும் ஒரு குலத்தை வாழவைப்பதற்காக ஒரு மனிதனை களிமண் கொண்டு அல்லா படைக்கிறான். இதற்கு அவனது உதவியாளர்களில் சிலர் ஆட்சேபம் தெரிவிக்கின்றனர். இதை மறுத்து அல்லா நானே எல்லாம் அறிந்தவன் என்பதை உணர்த்தும் பொருட்டு சில பொருட்களைக் காட்டி இவற்றின் பெயர்களைக் கூறுங்கள் என தன் உதவியாளர்களைக் கேட்கிறான். அதற்கு அவர்கள் அல்லாவாகிய நீ எங்களுக்கு கற்றுத்தராத எதுவும் எங்களுக்கு தெரியாது என்கின்றனர். பின் முதல் மனிதனாகிய ஆதமிடம் இவைகளின் பெயர்களைக் கூறு எனப்பணிக்க அவர் அவைகளின் பெயர்களைக் கூறுகிறார்.
இங்கு கடவுளாகிய அல்லா நடத்தும் உரையாடலைப் புரிந்து அவன் கேட்கும் கேள்விகளுக்கு ஆதி மனிதனாகிய ஆதம் பதிலளிக்கிறார், அவரின் பதிலை அல்லாவின் உதவியாளர்கள் கேட்டுப் புரிந்து கொள்கிறார்கள். இஸ்லாமிய நம்பிக்கையின்படி உலகின் முதல் மனிதன் ஆதம். இவ்வுலகில் அவர் பல்கிப் பெருகி அவரின் வழித்தோன்றல்களே இன்று உலகிலிருக்கும் அனைவரும். அந்த முதல் மனிதனாகிய ஆதமுக்கு பேசும் திறன் இருந்திருக்கிறது. அதுவும் பொருட்களை பிரித்தறிந்து தனிப்பட்ட பெயர்களில் அழைக்கும் அளவுக்கு பேச்சு வளமடைந்திருக்கிறது. ஆனால் இது சரியா? வரலாறு இதை ஒப்புகிறதா? இல்லை.
வரலாற்றில் முதன் முதலில் பேசியவர்கள் எனும் பெருமையை பெற்றிருப்பவர்கள் நியாண்டர்தால் மனிதர்கள். இன்றைய மனிதனான குரோ மாக்னன் இனத்திற்கு முந்திய இனம் நியாண்டர்தால் இனம். தோராயமாக இன்றைக்கு மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்புவரை வாழ்ந்து அழிந்த மனித இனம். இவர்கள் தான் வரலாற்றில் முதன் முதலில் பேசிய இனம் என்பதை இரண்டு சான்றுகள் மூலம் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். முதலாவது, இஸ்ரேலில் கெபாரா எனும் இடத்திலுள்ள கார்மேல் மலைக் குகையில் யோயல் ராக் எனும் மானுடவியலாளரால் அகழ்ந்தெடுக்கப்பட்ட மண்டையோட்டில், தற்போதைய மனிதனுக்கு தொண்டையில் நாக்கின் சதையோடு இணைந்திருக்கும் ஹயாய்ட் எனும் சிற்றெலும்பும் காணப்பட்டது. தற்போதைய ஹயாய்ட் எலும்புக்கும் அதற்கும் உள்ள ஒற்றுமைகளை வைத்து, நியாண்டர்தால் மனிதர்கள் பேசியிருக்க வேண்டும் என்கின்றனர். இரண்டாவது, பிரான்ஸில் லாஹினா எனும் இடத்தில் நியாண்டர்தால் மனிதர்கள் வேட்டையாடிய விலங்குகளின் எலும்புகள் கிடைத்தன, அதில் மயிரடர்ந்த மிகப்பெரிய மாமதம் (உருவில் பெரிய யானை) போன்ற விலங்குகளின் எலும்புகளும் இருந்தன. இதுபோன்ற பெரிய விலங்குகளை திட்டமிட்டு வசிக்கும் இடத்திற்கு அருகில் விரட்டிவந்து வேட்டையாடியிருக்க வேண்டுமென்றால் எண்ணிக்கையில் அதிகமான மனிதர்கள் கூடியே செய்திருக்க முடியும். எனவே அந்த இனம் ஒருவகையில் பேசியிருக்க வேண்டும் என யூகிக்கிறார்கள். அவர்களும் கூட நம்மைப் போல் மொழி பேசியிருக்க முடியாது. ஆ, ஊ, ஈ போன்ற வல்லொலிகளையே இனம் பிரித்து மாற்றியோ சேர்த்தோ ஒருவிதமான ஒலிகளை எழுப்பி தமக்குள் எண்ணப் பரிமாற்றங்களை நடத்தியிருக்க வேண்டும்.
ஆதி மனித இனங்களான ஆஸ்டிரேலோபிதஸின், ஹெபிலைன், ஹோமோ எரக்டஸ் போன்ற இனங்களை அடுத்து தான் ஹோமோ செபியன் நியாண்டர்தாலிஸ் எனும் நியாண்டர்தால் மனிதர்கள் வருகிறார்கள், இதன் பிறகுதான் குரோ மாக்னன் எனும் தற்போதைய மனித இனமான ஹோமோ செபியன் செபியன்ஸ் வருகிறது. ஆக ஆதி மனித இனம் தோன்றி பல லட்சம் ஆண்டுகள் கடந்துதான் மனிதன் பேசவே தொடங்கியிருக்கிறான். ஆனால் குரான் கூறுகிறது படைக்கப்பட்ட முதல் மனிதனான ஆதம் பேசினார் என்று. குரானில் அந்த வசனத்திற்கு மேல் விளக்கமில்லை, அல்லா வந்து அறிவியல் கூறப்போவதில்லை. எனவே இஸ்லாமியர்கள் தான் இதற்கு விளக்கம் தரவேண்டியவர்கள்.
இப்போது குரானின் இன்னொரு வசனத்தைப் பார்க்கலாம்,
பின்னர் தன் சகோதரரின் பிரேதத்தை எவ்வாறு மறைக்கவேண்டும் என்பதை அவரக்கு அறிவிப்பதற்காக அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பினான். அது பூமியை தோண்டிற்று, அவர் “அந்தோ! இந்த காகத்தைப் போல் கூட நான் இல்லாதாகிவிட்டேனே! அப்படி இருந்திருந்தால் என் சகோதரனுடைய பிரேதத்தை நான் மறைத்திருப்பேனே” என்று கூறி கைசேதப்படக் கூடியவராகிவிட்டார். குரான் 5:31
பூமியில் நிகழ்ந்த முதல் மரணமே கொலைதான் என்று குரான் இந்த வசனத்தின் மூலம் பதிவு செய்திருக்கிறது. ஆதி மனிதனான ஆதமின் மகன்களில் இருவர் தொடர்பான வசனம் இது. இருவரும் அல்லாவுக்கு வணக்கம் செய்கின்றனர் (பலியிடல்?) அதில் ஒருவரின் வணக்கம் ஏற்றுக்கொள்ளப்படுகிறது, மற்றொருவரின் வணக்கம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதனால் ஆத்திரமுற்ற ஏற்றுக்கொள்ளப்படாதவர், ஏற்றுக்கொள்ளப்பட்டவரை அடித்துக்கொலை செய்து விடுகிறார். பிணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் அலைந்த போதுதான் அல்லா ஒரு காகத்தை அனுப்பி அதன் மூலம் பிணத்தை அடக்கம் செய்யும் முறையை கற்றுக்கொடுக்கிறார். இப்படிப் போகிறது அந்தக் கதை.
இந்த வசனத்தின் மூலம் நிறைய வியப்புகள் நமக்கு கிடைக்கின்றன. ஆதி மனிதர்கள் உயிர்பற்றி அறிந்திருக்கிறார்கள். ஒருவனை கொலை செய்துவிடமுடியும் அதாவது செயற்கையாக அவன் உயிரைப் போக்குவதன் மூலம் அவனை முடக்கிவிட முடியும் என்பது தெரிந்திருக்கிறது. தாக்கினால் அவன் உயிர் அவனைவிட்டு நீங்கிவிடும் என்பது தெரிந்திருக்கிறது. வெற்றி தோல்வி பற்றி தெரிந்திருக்கிறது. இவைகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு ஈமச்சடங்கை மட்டும் எடுத்துக்கொள்ளலாம். உலகின் முதல் மரணம் அல்லது முதல் கொலையின் பிறகு மனிதன் ஈமச்சடங்கைப் பற்றி தெரிந்து கொண்டிருக்கிறான். ஆனால் தொல்லியல் ஆய்வாளர்கள் இதை மறுக்கிறார்கள்.
ஈமச்சடங்கு என்பது இறந்த மனிதர்கள் மீண்டும் வருவார்கள் அல்லது உடலைவிட்டு ஆன்மா பிரிந்துவிட்டது, ஆன்மா திரும்பி வரும் போது உடல் பத்திரமாக இருக்க வேண்டும் எனும் நினைப்பில் உடலை பாதுகாக்கும் வழிமுறையில் வந்த சடங்குமுறை. இந்த முறையை மனித இனம் தோன்றி வெகு காலத்திற்கு பிந்திய மனிதர்களே கைக் கொண்டிருந்தனர். சீனாவில் சௌகௌடியன் பகுதியில் ஆய்வை மேற்கொண்டிருந்த டேவிட்சன் பிளேக் அவரைத்தொடர்ந்து ஃபிரான்ஸ் வெய்டன் ரேய்ஷ் ஆகியோர் மேற்கொண்ட ஆய்வில் அப்பகுதில் நான்கு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த (பீகிங் மனிதர்கள் என்று பெயரிடப்பட்ட) மனிதர்கள் குறித்து உலகிற்கு தெரிவித்தனர். இவர்கள் மனித மாமிசத்தை உண்டவர்கள் என்பதையும் தம் ஆய்வில் வெளிப்படுத்தியிருக்கின்றனர். அதாவது இவர்கள் இறந்த மனிதனுக்கு ஈமச்சடங்கு செய்யவில்லை மாறாக தின்றிருக்கிறார்கள்.
ஈமச்சடங்கு செய்வதையும் முதலில் நியாண்டர்தால் மனிதர்களே செய்திருக்கின்றனர். இஸ்ரேலின் டாபுன், ரஷ்யாவின் டெஷிக்டாஷ் போன்ற பகுதிகளில் நியாண்டர்தால்கள் ஈமச்சடங்கு செய்ததற்க்கான சான்றுகள் கிடைத்துள்ளன. ஆக வரலாற்றில் முதலில் ஈமச்சடங்கு செய்தவர்களும் நியாண்டர்தால்களே.
மேற்குறிப்பிடப்பட்டிருக்கும் இரண்டு குரான் வசனங்களும் அதன் உள்ளீட்டில் அறிவியலோடு முரண்படுகின்றன. ஆதிமுதல் மனிதனிலிருந்து மனிதர்களுக்கு மொழியறிவு இருந்தது என்பதும், ஆதில் முதல் மனிதர்களிலிருந்தே ஈமச்சடங்கு நடைமுறையிலிருந்தது என்பதும் தொல்லியல் ஆய்வுகளின் மூலம் பொய் என்று தெரியவருகிறது. இறைவன் என இஸ்லாமியர்கள் குறிப்பிடும் தகுதிகளோடு உள்ள ஒரு ஆற்றல்தான் முகம்மதுவுக்கு குரானை கொடுத்தது என்றால் இதுபோன்ற பிழையான தகவல்கள் குரானில் இடம்பெற்றிருக்கக் கூடாது. எனவே குரானை முகம்மது தன்னுடைய தேவை கருதி ஆக்கம் செய்துவிட்டு அதன் நம்பகத்தன்மைக்காக அந்நேரத்தில் மக்களால் வணங்கப்பட்டுவந்த அல்லா எனும் கடவுளை சீர்திருத்தி பயன்படுத்திக்கொண்டார் என்பது தெளிவாகிறது. அன்று முகம்மதுவுக்கு தொல்லியல் குறித்த அறிவு இல்லை என்பதில் தவறொன்றுமில்லை, ஆனால் இன்று…?
நிலவை உடைத்து ஒட்டிய அல்லா
இந்த வரைகலை படம் தான் 54:1 வசனத்திற்கு ஆதாரமாம்.
நிலா பூமியின் ஒரே துணைக்கோள். சராசரியாக 3,84,403 கிமீ தூரத்தில் நீள்வட்டப்பாதையில் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு பூமியையும் சுற்றிவருகிறது. புவியின் ஈர்ப்பு விசையில் ஆறில் ஒரு பங்கே கொண்டிருந்தாலும், நிலவின் தாக்கம் பூமியில் குறிப்பிடத்தகுந்த அளவு செயல்படுகிறது. வானவியல் ஆய்வுகளில் மனிதர்களின் முன்னேற்றம் பிரபஞ்சத்துடன் ஒப்பிடுகையில் குறைவு என்றாலும், மனித வரலாற்றுடன் ஒப்பிடுகையில் மீப்பெரும் சாதனைகள் வானவியலில் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. விண்கற்களின் மோதல்கள் தொடங்கி நெபுலாக்கள், புழுத்துளைகள் ஈறாக வானவியல் மாற்றங்களை நுணுக்கமாக கவனித்துக்கொண்டிருக்கிறான். ஒரு கோளோ, விண்மீனோ, விண்கற்களோ உடைந்துபோய் மீண்டும் ஒட்டிக்கொன்டு பழைய நிலையிலேயே செயல்படமுடியும் என்பதற்கான எந்தவித வாய்ப்பும் வானவியலில் இல்லை. ஆனால் குரானில் அப்படியான ஒரு நிகழ்ச்சி குறிப்பிடப்பட்டிருக்கிறது.
“நேரம் நெருங்கி விட்டது சந்திரனும் பிளந்துவிட்டது” “எனினும் அவர்கள் ஓர் அத்தாட்சியைப் பார்த்தால் புறக்கணித்துவிடுகிறார்கள். இது வழமையாக நடைபெறும் சூனியம்தான் என்றும் கூறுகிறார்கள்” குரான் 54:1,2. இந்த குரான் வசனத்தின் விளக்கமாக சில ஹதீஸ்களும் இருக்கின்றன. “நாங்கள் நபி அவர்களுடன் மினாவில் இருந்தபோது சந்திரன் பிளவுபட்டது உடனே நபி அவர்கள் நீங்கள் சாட்சியாக இருங்கள் என்று கூறினார்கள். இரண்டு துண்டுகளில் ஒன்று (ஹீரா) மலையின் திசையில் சென்றது” புஹாரி 3869.
அதாவது, அன்றைய அரபு மக்கள் முகம்மதுவிடம், நீர் இறைவனின் தூதர்தாம் என்பதற்கும், இறைவன் தான் உம்மிடம் வேதவசனங்களைத் தருகிறான் என்பதற்கும் என்ன அத்தாட்சி? என்று கேட்க அதற்கு முகம்மது, ஆம் நான் இறைவனின் தூதன் தாம் என்று நிலவைப்பிளந்து அதை அத்தாட்சியாக காண்பிக்கிறார். ஆனால் மனிதனால் செய்யமுடியாத மிகப்பெரிய அதிசய நிகழ்வான இதைக் கண்டு அன்றைய அரபு மக்களில் யாரும் இஸ்லாத்திற்கு மாறவில்லை என்பது ஆச்சரியம் தான். பிளந்த அந்த நிலவு என்ன ஆனது? எவ்வளவு நேரம் இரண்டு துண்டுகளாக இருந்தது? எப்போது மீண்டும் ஒன்றாக இணைந்தது என்பதுகுறித்து குரானிலோ, ஹதீஸ்களிலோ எந்த விளக்கமும் இல்லை. அதே நேரம் பூமிக்கு இரண்டு நிலவுகள் இருந்து ஒன்று அழிந்துபோய் இன்னொன்று மட்டும் மிச்சமிருப்பதாக யாரும் கூறிவிட முடியாது என்பதால், உடைந்த அந்த நிலவே ஒட்டிக்கொண்டு இப்போதும் தொடர்ந்து பூமியை சுற்றிக்கொண்டிருக்கிறது என்று நம்புவோமாக.
1400 ஆண்டுகளுக்கு முன்னுள்ள அந்த உலகில் குரான், ஹதீஸுக்கு வெளியே, இப்படி ஒரு நிகழ்வு நடந்ததற்கான எந்த ஒரு பதிவும் இல்லை. கிபி ஐந்து ஆறாம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்த எத்தனையோ நிகழ்வுகள் வரலாற்றில் இடம்பெற்றிருக்க, ஆக மிகப்பெரும் அதிசய நிகழ்வான இந்த நிலவு இரண்டான செய்தி உலகின் வேறெந்தப் பகுதியிலும் காணப்பட்டதாக தகவல் இல்லை. ஏன் அன்றைய அரேபியாவின் வேறு ஊர்களில் கூட இதை யாரும் கண்டதாக சாட்சியில்லை. இப்படியிருக்க நிலவு பிளந்ததை எந்த அடிப்படையில் ஏற்பது? இப்போது தந்திர விற்பன்னர்கள் தொடர்வண்டியை மறைப்பது, தாஜ்மஹாலை மறைப்பது என்று வித்தை செய்து காட்டுகிறார்களே அதுபோல முகம்மதுவும் தன்னிடம் கேள்விகேட்டு நச்சரித்துக் கொண்டிருந்தவர்களுக்கு மட்டும் வித்தை காட்டி விட்டாரா? அப்படியும் எடுத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால் அந்த குரான் வசனம் நேரடியாக மிகத் தெளிவாகவே இருக்கிறது “சந்திரனும் பிளந்துவிட்டது” என்று. தவிரவும் நிலவு உடைந்தது மறுமை நாளுக்கான அத்தாட்சி என்றும் சில ஹதீஸ்கள் கூறுகின்றன. மறுமை நாள் என்பது உலகில் மக்கள் வாழ்ந்தது போதும் என இறைவன் முடிவு செய்து உலகை அழிக்கும் நாள் என்பது ஐதீகம். அந்த மறுமை நாளுக்கான அத்தாட்சிகள் என்று சில நிகழ்வுகள் சொல்லப்பட்டிருக்கின்றன. அதில் இந்த நிலவு உடைந்ததும் ஒன்று. அந்த அத்தாட்சிகள் நிகழ நிகழ மறுமை நாள் நெருங்கி வந்துகொண்டிருக்கிறது என்பது பொருள். இதைத்தான் அந்த வசனம் குறிப்பிடுகிறது, “நேரம் நெருங்கிவிட்டது சந்திரனும் பிளந்து விட்டது” ஆக நிலவு உடைந்தது கட்டுக்கதையோ, கண்கட்டு வித்தையோ அல்ல உண்மையான நிகழ்வு இஸ்லாமியர்களைப் பொருத்தவரையில்.
நிலவு எப்படித் தோன்றியது என்பது குறித்து பல யூகங்கள் இருந்தாலும், 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாய் அளவுள்ள ஒரு கோள் பூமியை தாக்கியதால் சிதைந்து பிரிந்துபோனது தான் நிலவாக பூமியை சுற்றுகிறது எனும் சேய்க்கொள்கைதான் ஓரளவுக்கு ஏற்கப்பட்டிருக்கிறது. இப்படி பூமியை சிதைத்து நிலவைப் பிரித்த அந்த மோதல்தான், புவியில் உயிரினங்கள் ஏற்படுவதற்கான சாதகமான சூழலை தொடங்கிவைத்தது என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது. இன்றும் ஆண்டுக்கு தோராயமாக 3.8 செமீ தூரம் பூமியை விட்டு நிலவு விலகிக் கொண்டிருக்கிறது. அன்றிலிருந்து புவியை உயிரினங்கல் வாழ்வதற்க்குத் தோதாக நகர்த்திக்கொண்டு வருவதில் நிலவு குறிப்பிடத்தகுந்த பங்காற்றி வருகிறது. நிலவின் தாக்கங்கள் என்று முதன்மையானதாக இரண்டைக் குறிப்பிடலாம். ஒன்று, பூமியின் பருவ மாறுதலுக்கு காரணமான பூமி தன் அச்சில் 23 பாகையளவு சாய்ந்திருப்பதை நிலைப்படுத்துவது. இரண்டு, கடல் நீரின் ஏற்ற வற்றங்களை கட்டுப்படுத்துவதன் மூலம் உயிர்சுழற்சிக்கு உதவுவது.
முக்கியமான இந்த இரண்டு தாக்கங்களை பூமியில் நிகழ்த்திக்கொண்டிருக்கும் நிலவு, திடீரென ஒரு நாள் உடைந்துபோனது என்றால் அதன் தாக்கம் பூமியின் பருவகால நிலைகளில் தகுந்த மாறுதல்களை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அது போன்ற எந்த மாறுதல்களும் பூமியில் ஏற்படவில்லை என்பதே உண்மை. இந்த நிகழ்வை முகம்மது நிகழ்த்திக்காட்டியது மக்கா எனும் ஊரில் அதாவது செங்கடலுக்கு அருகிலுள்ள ஒரு ஊர். கடலின் ஏற்றவற்றங்களைக் கட்டுக்குள் வைத்துருக்கும் நிலவு உடைந்தபோது செங்கடலில் ஏதாவது மாற்றங்கள் நிகழ்ந்திருக்க வேண்டுமல்லவா? அந்த மாற்றங்கள் அருகிலிருந்த மக்கவும் எட்டியிருக்க வேண்டுமல்லவா? அது ஹதீஸ்களில் பதியப்பட்டிருக்க வேண்டுமல்லவா? (நிலவு உடைந்ததற்கான ஆதாரமாகவேனும்) அப்படி ஏதேனும் ஹதீஸ் இருக்கிறதா? என்றால் நிலவு உடைந்தது என்பதை எப்படி ஏற்பது?
நிலவின் ஈர்ப்பு விசை மிகமிகக் குறைவு. தனக்கான வளிமண்டலங்களைக்கூட ஈர்த்து தக்கவைத்துக்கொள்ள முடியாத அளவுக்கு நிலவின் ஈர்ப்புவிசை பலவீனமானது. அதனால்தான் அங்கு காற்று இல்லை. காற்றைக்கூட ஈர்த்துவைத்துக்கொள்ள முடியாத நிலவு உடைந்து அதன் இரண்டு துண்டுகளும் மலையின் இருபக்கம் தெரியும் அளவுக்கு பிரிந்துவிட்ட பிறகு தமக்குள் எப்படி ஒன்றை ஒன்று ஈர்த்துக்கொண்டன?
குரானில் அனேக இடங்களில் மனிதர்கள் குரானை சிந்தித்துப்பார்க்க வேண்டாமா? என்று கூவுகிறது. இஸ்லாமியர்கள் இந்த வசனத்தை சந்திரனை உடைத்ததை எப்படி சிந்திக்கிறார்கள்? எப்படி புரிந்து கொள்கிறார்கள்? ஒரு கதை கூறப்படுவதுண்டு, வானில் கடவுள் தெரிகிறார் என்று ஒருவன் கூற மற்றவர்கள் தெரியவில்லையே எனக்கேட்க, வாழ்நாளில் பொய்யே கூறாதவர்களுக்கு மட்டும்தான் கடவுள் காட்சி தருவார் என்று அவன் கூறவும், மற்ற எல்லோரும் ஆமாம் தெரிகிறார் என்று கன்னத்தில் போட்டுக்கொண்டார்களாம். அப்படித்தான் அந்த ஹதீஸ்களைக் கூறியவர்கள் நிலவு உடைந்ததைக் கண்டார்களோ. எது எப்படியோ! முகம்மது தன் சொந்தக் கற்பனைகளை மெய்ப்படுத்திக்கொள்ளத்தான் அல்லாவையும் வேதத்தையும் பயன்படுத்திக்கொண்டார் என்பதைத்தான் இது மெய்ப்பிக்கிறது.
குரானில் மிதக்கும் சின்னச் சின்னப் பிழைகள்
அறிவியல் மெய்ப்பிப்புகள், அண்டவிதிகள் போன்றவைகளெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும், சாதாரணமாய் மனிதனுக்கு தெரிந்திருக்கக்கூடிய எளிய பிழைகளும் குரானில் இருக்கின்றன. அவை என்ன?
“பின் எல்லாவிதமான கனிகளிலிருந்தும் உணவருந்தி…..” குரான் 16:69 “
….. இன்னும் அவன் வானத்தில் மலைகளிலிருந்து பனிக்கட்டியையும் இறக்கிவைக்கிறான்…….” குரான் 24:43
“அது சிறப்பான விருந்தா அல்லது ஜக்கூம் என்ற மரமா?…… நிச்சயமாக அவர்கள் அதிலிருந்தே புசிப்பார்கள்…..பின்னர் நிச்சயமாக அவர்களுக்கு குடிக்க கொதிக்கும் நீர் கொடுக்கப்படும்” குரான் 37:62,67
“சீழ் நீரைத்தவிர அவனுக்கு வேறு எந்த உணவுமில்லை” குரான் 69:36
“அவர்களுக்கு விஷச் செடிகளைத்தவிர வேறு உணவில்லை” குரான் 88:6
மதவாதிகள் குரானின் அறிவியல் என்றோ, வேதத்தின் அற்புதங்கள் என்றோ பேசத்தலைப்பட்டால் மற்றெல்லாவற்றையும் விட முதலில் எடுத்துக்கொள்ளும் ஒன்று தேனீ. ஆனால் அதே வசனத்திலிருக்கும் இந்த வாக்கியத்தை மட்டும் கவனமாகத் தவிர்த்துவிடுவார்கள். குரான் 16:69ல் அல்லா தேனீக்கள் கனிகளிலிருந்து உணவருந்துவதாகக் கூறுகிறார். கனிகள் என்று பொதுவாகக் கூறப்பட்டாலும், அந்த இடத்தில் ‘தமர்’ என்றே அரபியில் குறிக்கப்பட்டிருக்கிறது. தமர் என்பது பழங்களைக் குறிக்கும் பொதுச் சொல்லல்ல. அது பேரீத்தம் பழத்தைக் குறிக்கும் தனிப்பட்ட சொல். ஆக குரான் தேனீக்கள் பேரீத்தம் பழத்தை உண்கின்றன எனும் அறிவியல்(!) உண்மையைப் போட்டுடைத்திருக்கிறது. ஆனால் பிரச்சனை என்னவென்றால் தேனீக்கள் பேரீத்தம் பழத்தையோ அல்லது வேறு பழங்களையோ உண்பதில்லை, பூக்களிலிருந்து சேகரிக்கும் தேனையே அவை உண்கின்றன என்பது அல்லவா உண்மை. எல்லாவற்றையும்விட மிகைத்த ஞானமுடைய அல்லா ஏன் இப்படிக் கூறிவிட்டார், அதுவும் எக்காலத்திற்கும் பொருந்தும் குரானில்.
வசனம் 24:43 மழை பொழியும் விதம் குறித்து பேசுகிறது. அதன் முழு வசனம் இப்படி இருக்கிறது, “நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் மேகத்தை மெதுவாக இழுத்து அவற்றை ஒன்றாக இணையச் செய்து அதன் பின் அதை அடர்த்தியாக்குகிறான். அப்பால் அதன் நடுவேயிருந்து மழை வெளியாவதைப் பார்க்கிறீர். இன்னும் அவன் வானத்தில் மலைகளிலிருந்து பனிக்கட்டியையும் இறக்கிவைக்கிறான். அதைத் தான் நாடியவர் மீது விழும்படி செய்கிறான்……” என்று போகிறது. இது ஆலங்கட்டி மழை பற்றிய குரானின் புல்லரிக்கவைக்கும் விளக்கம். இந்த விளக்கம் தவறானது, பொருந்தாதது என்பது அவர்களுக்கும் தெரிந்துதான் இருக்கிறது. அதனால் தான் அடைப்புக்குறிக்குள் எழுதி சமன் செய்திருக்கிறார்கள். அடைப்புக்குறியுடன் சேர்த்து இப்படி “அவன் வானத்தில் மலைக(ளைப்போன்ற மேகக் கூட்டங்க)ளிலிருந்து பனிக்கட்டியையும் இறக்கிவைக்கிறான்” என்று சமாளித்திருக்கிறார்கள். மழைவிழுவது மேகத்திலிருந்து என்பது தெரிகிறது, ஆனால் சில நேரங்களில் பனிக்கட்டி மழையும் பொழிகிறதே எப்படி? சரிதான் வானத்தில் பனிக்கட்டி மலை ஒன்று இருக்கிறது போலும் எனும் வறண்ட சிந்தனையின் விளைவுதான் இந்த வசனம். நம்புங்கள் குரான் எல்லாம் வல்ல அல்லா இறக்கியருளியது தான்.
அடுத்திருக்கும் மூன்று வசனங்களும் நரகத்தாரின் உணவுகுறித்த குரானின் கூற்றுகள். அதாவது பூமியில் மனிதர்கள் வாழ்ந்தது போதும் என அல்லா நினைக்கும் ஒரு நாளில் பூமி அழிக்கப்பட்டு அதுவரை பூமியில் வாழ்ந்த மனிதர்கள் அனைவரும், ஆதி மனிதன் தொடங்கி கடைசி காலம் வரை (கோடானுகோடி ஆண்டுகள் ஆனாலும்) வாழ்ந்த மக்கள் அனைவரும் மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டு, குரானில் குறிப்பிடப்பட்டிருக்கும்படி வாழ்ந்தவர்கள் சொர்க்கத்திற்கும், அப்படி வாழாதவர்கள் நரகத்திற்கும் அனுப்பப்படுவார்கள். இதில் நரகத்திற்கு அனுப்பப்படும் மனிதர்களின் உணவு என்ன என்பதைத்தான் அந்த மூன்று வசனங்களும் தெரிவிக்கின்றன. இதில் பிரச்சனை என்னவென்றால் மூன்றும் வெவ்வேறு உணவுகளைக் கூறுகின்றன என்பதுதான். முதல் வசனத்தில் ஜக்கூம் என்ற மரமும் கொதிக்கும் நீரும் என அறிவிக்கப்படுகிறது. ஜக்கூம் என்பது ஒருவகையான கள்ளி வகை மரம் என பொருள் கூறுகிறார்கள். ஜக்கூம் என்ற மரமும் குடிப்பதற்கு கொதிக்கும் நீரும் முதல் வசனத்தின் படி நரகத்தாரின் உணவு. ஆனால் 69:36ன் படி சீழ் நீரைத்தவிர வேறு எந்த உணவுமில்லை என அடித்துக்கூறுகிறது. இதே தொனியில் 88:6 விஷச்செடிகள் மட்டும்தான் உணவு வேறில்லை என திட்டவட்டமாகக் கூறுகிறது. என்றால் எதுதான் நரகத்தின் உணவு? நரகம் என்று ஒன்றில்லை என்பவர்களுக்கு இது குறித்த தேவை ஒன்றுமிலை. ஆனால் இருக்கிறது என நம்புபவர்களுக்கு எது உணவு என தெரிந்திருப்பது அவசியமல்லவா?
சில மொழிபெயர்ப்புகளில் விஷச்செடி என்பதை முட்செடி என்பதாக மொழிபெயர்த்திருக்கிறார்கள். இதைக்கொண்டு கள்ளி என்பதும் முட்கள் நிறைந்தது தான், எனவே இரண்டு மூன்றாம் வசனங்களில் தனித்தனியாகவும், முதல் வசனத்தில் இரண்டையும் சேர்த்தும் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று பொழிப்புரை தருகிறார்கள். ஆனால் சீழ், விஷச்செடி வசனங்களில் தனித்தனியே இதைத்தவிர வேறு உணவில்லை என தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளது. முட்செடி என்பதும் கள்ளி என்பதும் ஒன்றுதான் எனக் கொண்டாலும் முதல் வசனத்தில் ஜக்கூம் மரம் என்று வருகிறது மூன்றாம் வசனத்திலோ விஷச்செடி, என்றால் அல்லா செடிக்கும் மரத்திற்கும் வித்தியாசம் தெரியாதவர் என்பதை ஒப்புக்கொள்வார்களா? இரண்டாம் வசனத்தில் சீழ் நீர் என்பது அருவருப்பான நீர் எனும் பொருளில் நீரின் தரத்தைக்குறிக்கிறது, அது குளிர்ந்திருக்குமா சூடாக இருக்குமா என்ற விபரமில்லை. முதல் வசனத்தில் கொதிக்கும் நீர் எனக்குறிப்பிடப்பட்டுள்ளதேயன்றி சுகாதாரமான குடிநீரா இல்லையா என்ற விபரமில்லை. எனவே இரண்டையும் ஒன்றெனெக் கொள்வதற்கு இடமில்லை.
குரான் மீது மதவாதிகள் ஏற்றிவைத்திருக்கும் புனிதக்கனம் தாளாமல் அது தள்ளாடிக்கொண்டிருக்கிறது. எல்லாம் அறிந்தவன் எக்காலமும் உணர்ந்தவன் என்றெல்லாம் தட்டப்பட்ட ஒளிவட்டங்களே இன்று அப்படி ஒன்றிலிருந்து வந்திருந்தால் இதுபோன்ற வசனங்கள் கிளைத்திருக்குமா எனும் ஐயங்களை நேரியவர்கள் நெஞ்சில் விதைத்துக்கொண்டிருக்கிறது. எந்த வசனங்களைக் கொண்டு அறிவியல் என்றும் முன்னறிவிப்பு என்றும் புருடா விட்டார்களோ அந்த குரானின் வசனங்களே அவர்களை சாயம் வெளுக்கச் செய்துகொண்டிருக்கிறது.
தடயமில்லாத அல்லாவின் அத்தாட்சிகள்
“மனிதர்கள் அறிந்துகொள்வதற்காக இதை நாம் அத்தாட்சியாக ஆக்கிவைத்திருக்கிறோம்” குரானில் சில இடங்களில் இப்படி ஒரு அறிவிப்பு இருக்கும். எடுத்துக்காட்டாக ஃபிர் அவ்னின் உடல் குறித்த வசனம், நூஹின் கப்பல் குறித்த வசனம். குரானில் 1400 ஆண்டுகளுக்கு முன்பே இப்படி அறிவிக்கப்பட்டிருந்தால் பின்னர் ஒரு நாளில் அந்த அத்தாட்சி வெளிப்படுத்தபட்டு குரான் இறைவனின் வார்த்தை தான் என்பதை மெய்ப்பித்து நிற்கும் என்பது மதவாதிகள் அடிக்கும் ஜல்லி. ஆனால் குரானில் அல்லா அத்தாட்சி என அறிவித்து இன்னும் வெளிப்படுத்தாமல் அல்லது வெளிப்படுத்தமுடியாமல் (வெளிப்படுத்தினால் அதை பாதுகாக்கும் அளவுக்கு மனிதர்களுக்கு அறிவு(!) வேண்டுமல்லவா?) காத்திருப்பு பட்டியலில் இருக்கும் அத்தாட்சிகளும் குரானில் இருக்கின்றன.
“……. இதோ பாரும் உம்முடைய உணவையும் உம்முடைய பானத்தையும். அவை எந்த விதத்திலும் மாறுதலடையவில்லை. ஆனால் உம்முடைய கழுதையைப் பாரும். உம்மை மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாக்குவதற்காக உயிர் பெறச் செய்கிறோம். ……” குரான் 2:259.
“இன்னும் நூஹின் சமூகத்தவர், அவர்கள் நம் தூதர்களைப் பொய்யாக்கியபோது, நாம் அவர்களை மூழ்கடித்தோம். அவர்களை மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கிவைத்தோம். ….” குரான் 25:37 இதில் முதல்வசனம் ஒரு கதை சொல்கிறது. அதில் ஒருவர் உணவும் குடிப்பதற்குப் பானமும் எடுத்துக்கொண்டு கழுதையில் பயணம் செய்கிறார். வழியில் ஒரு கிராமத்தைக் கடக்கும் போது அந்தக் கிராமத்தின் வீடுகள் இடிந்து கிடக்கின்றன. இதைக்காணும் அவர் மனதில் ‘இப்படி வீடுகள் இடிந்து விழுந்து கொல்லப்பட்டவர்களை அல்லா எப்படி தீர்ப்பு நாளில் மீண்டும் எழுப்ப முடியும்?’ எனும் ஐயம் எழுகிறது. உடனே அல்லா அவருக்கு புரியவைப்பதற்காக அவரை மரணமடையச் செய்கிறான். பின்னர் அவர் உயிர் கொடுத்து எழுப்பப்படுகிறார். எழுந்த அவர் சிறிது நேரம் உறங்கியதாக கருதுகிறார். அப்போது அசரீரியாக அல்லா பேசுகிறான், “எவ்வளவு காலம் இந்த நிலையில் இருந்தீர்?” “ஒரு நாள் அல்லது அதில் சிறிய பகுதி” “அவ்வாறல்ல, நூறாண்டுகள் மரணமடைந்து பூமியின்மேல் கிடந்தீர். உங்கள் உணவையும் பானத்தையும் பாருங்கள், அவை கெட்டுப்போகவில்லை. ஆனால் அந்தக் கழுதை” அப்போதுதான் அவர் பார்க்கிறார் செத்து மக்கிப் போய் கிடக்கிறது. “மக்கிப்போய் கிடக்கும் கழுதையைக் கவனியுங்கள் எப்படி அதன் எலும்புகளை ஒன்று சேர்த்து சதையைப் போர்த்துகிறோம் என்று பாரும். நீர் தெளிவடைவதற்கும், இனி வரும் மனிதர்களுக்கு அத்தாட்சியாகவும் அதனை உயிர்பெறச் செய்கிறோம்” பின் அவர் உணர்ந்து கொண்டு “அல்லா எல்லாப் பொருளின் மீதும் ஆற்றலுடையவன்” என்று கூறி தெளிவடைகிறார்.
இந்தக் கதையில் ஒரு மனிதன் தரையில் நூறு ஆண்டுகளுக்கு கிடக்கிறான். அவன் இறந்து கிடந்தாலும், உறங்கிக் கிடந்தாலும் உடலளவில் குறைந்தபட்ச சிறு மாற்றம் கூட ஏற்படவில்லை. ஏனென்றால் நூறு ஆண்டுகள் கழித்து, சில மணிநேரம் உறங்கியதாகத்தான் ஆண்டவனுக்கு பேட்டியளிக்கிறார். நம்பகத்தன்மைக்கே அத்தாட்சி தேவைப்படும் நிலையில் ஒரே இறைவனால் மனிதனுக்கு வழிகாட்ட தரப்பட்ட வேதத்தில் இருக்கும் இந்தக் கதைதான் மனிதன் மீண்டும் எழுப்பப்படுவான் என்பதற்கு அத்தாட்சியாம். விருப்பப்படுபவர்கள் நம்பிக்கொள்ளலாம். போகட்டும், இதில் அத்தாட்சி என்பது எது? கழுதையா? மனிதனா? எந்த விதத்தில் அது மீள் சாட்சியாகப் போகிறது?
இரண்டாம் வசனம் மனிதர்களுக்கு ஓர் எச்சரிக்கையை விடுக்கிறது. அதாவது, தன்னுடைய இருப்பை பல்வேறு அத்தாட்சிகள் மூலம் மெய்ப்பித்தும் மனிதர்கள் ஏற்க மறுக்கிறார்கள் என்பதால் தன்னால் அழிக்கப்பட்ட மக்களை பட்டியலிட்டுக்காட்டி மனிதர்களை எச்சரிக்கிறது. இதோ அந்தப் பட்டியல் ௧) ஃபிர் அவ்னின் கூட்டத்தினர், ௨) நூஹ் சமூகத்தினர், ௩) ஆது சமூகத்தினர், ௪) ஸமூது சமூகத்தினர், ௫) ரஸ்வாசிகள் இன்னும் இவர்களுக்கு இடைப்பட்ட அநேக தலைமுறையினர். இந்தப்பட்டியலில் நூஹ் சமூகத்தில் மூழ்கடிக்கப்பட்டவர்களை அத்தாட்சியாக்கியிருப்பதாக இந்த வசனம் குறிப்பிடுகிறது. இங்குதான் ஒரு குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. இஸ்லாமிய கதையாடலின்படி ஃபிர் அவ்னின் உடலும், நூஹின் கப்பலும் அத்தாட்சிகள் (இந்த அத்தட்சிகளின் பித்தலாட்டங்கள் குறித்து ஏற்கனவே இந்தத் தொடரில் எழுதப்பட்டிருக்கிறது) ஃபிர் அவ்னின் உடல் மூழ்கியவர்களுக்கான அத்தாட்சி, நூஹின் கப்பல் தப்பிப் பிழைத்தவர்களுக்கான அத்தாட்சி. ஆனால் இந்த இடத்தில் இவைகளை பட்டியலிடும் போது நூஹின் சமூகத்தினரை மூழ்கியவர்களுக்கான அத்தாட்சியாக குறிப்பிடப்படுகிறது. ஆனால் கப்பல் என்பது பிழைத்தவர்களுக்கான அத்தாட்சி. இதை நீண்ட காலமாக (23 ஆண்டுகள்) குரானை தருவதற்கு எடுத்துக்கொண்டதால் ஏற்பட்ட பிழை என்று கொள்வதா? அல்லது நூஹ் சமூகத்தினரின் மூழ்கடிக்கப்பட்ட அத்தாட்சி இனிமேல்தான் வெளிப்படுத்தப்படவிருக்கிறது என எடுத்துக்கொள்வதா?
ஆம். இந்த இரண்டு அத்தாட்சிகளும் இனிமேல் தான் வெளிப்படுத்தப்படவிருக்கின்றன, அல்லது தகுந்த காலம் வந்ததும் அல்லா அவைகளை வெளிப்படுத்துவான் என இஸ்லாமியர்கள் தமக்குத்தானே ஆறுதல் கூறிக்கொள்ள விரும்புவார்களாயின், அதற்கு எதிராகவும் குரானில் ஒரு அத்தாட்சி இருக்கிறது. மேற்கண்டவைகளைப் போல அத்தாட்சியாக வைத்திருக்கிறோம் என்று பொதுவாகக் குறிப்பிடாமல் இன்னும் தெளிவாகவே அது குறிப்பிடப்பட்டிருக்கிறது.
“இது என் இறைவனிடமிருந்துள்ள கிருபையே ஆகும். ஆனால் என் இறைவனின் வாக்குறுதி நிறைவேறும் போது அவன் இதனையும் தூள் தூளாக்கி விடுவான். மேலும் என் இறைவனின் வாக்குறுதி உண்மையானதே என்றும் கூறினார்” குரான் 18:98
இந்த வசனத்தில் கிருபை(கருணை) என்று கூறப்படுவது அத்தாட்சியையும் இறைவனின் வாக்குறுதி என்பது மறுமை நாள் அதாவது இறைவன் உலகை அழிக்கும் நாளையும் குறிக்கும். அந்த அத்தாட்சியானது வெளிப்படுத்திக்காட்டவேண்டிய அவசியமின்றி உலக அழிவு நாள் வரை இருந்து இறைவனால் அழிக்கப்படும் என்றும் அந்த வசனம் கூறுகிறது. என்ன அந்த அத்தாட்சி?
துல்கர்னைன் எனும் ஒரு மன்னன் வலசை போகிறான். அப்போது ஒரு பகுதியைச் சார்ந்தவர்கள் யஃஜூஜும், மஃஜூஜும் கூட்டத்தார்கள் தம்மை தொல்லை செய்வதாகவும் அவர்களிடமிருந்து தம்மை காக்க வேண்டும் என்றும் வேண்டுகிறார்கள். மன்னனும் அதற்கு இசைவு தெரிவித்து, அவர்கள் வராமலிருக்கும் பொருட்டு இரண்டு மலைகளுக்கு இடைப்பட்ட பகுதியை இரும்புப் பாளங்களால் அடுக்கி செம்பை உருக்கி ஊற்றி நிறைத்து விடுகிறார். இதன்பிறகு அவர்கள் இதில் ஏறிவரவோ ஓட்டையிட்டு துளைத்து வரவோ சக்தியற்றவர்கள் என்று விளக்கமும் அளிக்கிறார். இரண்டு மலைகளுக்கு இடைப்பட்ட தூரத்தை இரும்புப் பாளங்களால் இட்டு நிரப்பி செம்பை உருக்கி ஊற்றி அடைத்ததைத்தான் மறுமை நாளில் இறைவன் தூளாக்குவது வரை இருக்கும் என்கிறார். எங்கே இருக்கிறது இந்த இடம்? இது ஒன்றும் மறைத்து வைத்திருந்து வெளிப்படுத்தக்கூடிய பொருளில்லையே, உலகில் இப்படி ஒரு இடம் இல்லை என்பது ஒன்றே குரான் இறைவன் தந்ததல்ல, முகம்மது தனது தேவைகளுக்காக உருவாக்கிக்கொண்டதுதான் அல்லாவும் குரானும் என்பதை நிரூபிக்கப் போதுமானது.
வாய்ப்புள்ள இடங்களை நீட்டி முழக்குவதும், அல்லாதவற்றை இருட்டடிப்பு செய்வதும் மதவாதிகளின் வழக்கம். இந்த வழக்கச் சகதிக்குள்தான் மதங்களின் வேதங்களின் புனிதங்கள் பிறபெடுக்கின்றன. அதற்கு இது இன்னுமொரு சான்று.
குரான் குறிப்பிடும் பேசும் உயிரினங்கள் இருப்பது சாத்தியமா?
குரான் பலவகையான உயிரினங்களைப் பற்றி குறிப்பிடுகிறது. அவைகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம் ௧) கழுதை, தேனீ போன்ற எல்லோருக்கும் அறிமுகமான பூமியில் இருப்பவைகள், ௨) எதிர்காலத்தில் தோன்றவிருப்பதாகவும், பூமியில் இருப்பதாகவும் ஆனால் மனிதர்களுக்கு அறிமுகமில்லாத இரண்டு உயிரினங்கள். இதில் முதல்வகை உயிரினங்கள் குறித்து அனைவரும் அறிந்திருப்பதால் விளக்கங்கள் எதுவும் தேவையில்லை. ஆனால் இரண்டாவதுவகை உயிரினங்கள் இஸ்லாமியர்கள் கேள்வியாக மட்டுமே அறிந்தது என்பதால் அவற்றை விவரிப்பது அவசியமாகிறது. பூமியில் மனிதன் வாழத்தொடங்கியது முதல், மனிதர்கள் கடவுளால் அழிக்கப்படும் நாள் வரை பூமியில் மனிதர்களூடே வாழ்ந்துகொண்டிருக்கும் ‘ஜின்’ எனும் உயிரினமும், யுகமுடிவு நாளின் அடையாளமாக பூமியிலிருந்து வெளிப்படுத்தப்படும் ‘தப்பாத்’ எனும் ஒருவகை மிருகமுமே அந்த உயிரினங்கள். இதில் தப்பாத் ஒரே ஒரு மிருகம் தான் ஜோடியோ இனப்பெருக்கமோ கிடையாது. ஆனால் ஜின்கள் அப்படியல்ல, மனிதர்களைப்போலவே உண்டு உறங்கி இனப்பெருக்கம் செய்து வாழ்ந்து கொண்டிருப்பவைகள். மனிதனைவிட சில வகைகளில் மிகைத்த ஆற்றலுடைத்தவை, பறவைகளைப் போல் பறக்க முடிந்தவை. மனிதர்களை நல்வழிப்படுத்த(!) தூதர்களை அனுப்பியது போலவே ஜின்களுக்கும் தூதர்கள் உண்டு. குரானில் அனேக இடங்களில் ஜின்களை குறிப்பிட்டிருந்தாலும் தப்பாத் குறித்து ஒரு வசனம் தான். இந்த இரண்டு உயிரினங்களுமே பேசும் ஆற்றல் கொண்டவை என்பதும் ஷைத்தான் என பரவலாக அறியப்படுவதும் ஜின் வகையைச் சேர்ந்ததுதான் என்பதும் தனித்தன்மையானது.
இது குறித்த குரான் வசனங்கள்,
“மேலும் நாம் உம்மிடம் இந்த குர் ஆனை செவியுறும் பொருட்டு ஜின்களில் சிலரைத் திருப்பியதும், அவர்கள் அங்கு வந்தபோது ‘மௌனமாக இருங்கள்’ என்று சொன்னார்கள். முடிந்ததும் தம் இனத்தாரிடம் சென்று அவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்தனர்” குரான் 46:29
“அவர்கள் மீது வாக்கு நெருங்கும்போது, அவர்களுக்காக ஒரு பிராணியை பூமியிலிருந்து நாம் வெளியாக்குவோம். அது நிச்சயமாக, மனிதர்கள் நம் வசனங்கள் மீது உறுதி கொள்ளவில்லை என்று அவர்களுக்குச் சொல்லிக் காண்பிக்கும்” குரான் 27:82
ஜின்கள் குறித்து ஏராளமான ஹதீஸ்கள் இருக்கின்றன. அவைகள் எங்கு தங்குகின்றன? எவற்றை உண்கின்றன? என்பன தொடங்கி ஜின்களுடன் மனிதனுக்குள்ள தொடர்புவரை விரிவாக பேசுகின்றன ஹதீஸ்கள்.ஜோதிடர்கள் கூறுபவைகள் சில வேளை உண்மையாக நடந்துவிடுகிறதே அது எப்படி எனும் கேள்விக்கு, முகம்மது ‘வானவர்கள் பேசுவதை ஜின்கள் ஒட்டுக்கேட்டு தங்கள் நண்பர்களான ஜோதிடர்களிடம் கூறிவிடுகின்றன. அவர்கள் அந்த ஒன்றில் நூறு பொய்யைக் கலந்து ஜோதிடமாக கூறிவிடுகிறார்கள்’என்கிறார். முகம்மதின் மனைவி ஆயிஷா கூறியதாக புஹாரி 6213 ல் இந்த ஹதீஸ் இருக்கிறது.
“நான் தொழுவதை ஒரு ஜின் தடை செய்ய நினைத்தது, அதை பள்ளிவாசல் தூணில் கட்டிவைத்து உங்களுக்கு காட்டலாம் என நினைத்தேன். ஆனால் ” பின்னாளில் எவருமே அடையமுடியாத ஆளுமையை எனக்கு வழங்குவாயாக” என சுலைமான் கேட்டுக்கொண்டதற்கு மாறாக அமைந்துவிடும் என்பதால் விட்டுவிட்டேன்” என முகம்மது ஓரிடத்தில் கூறியிருக்கிறார். இதுவும் ஹதீஸ்தான்
“நச்சுப்பாம்புகளை கொல்லுங்கள் ஆனால் நச்சில்லாமல் வீடுகளில் உலவும் பாம்பைக் கொல்லாதீர்கள், ஏனென்றால் ஜின்கள் பாம்புகளின் உருவத்தில் இருக்கின்றன. போய்விடு என மூன்றுமுறை கூறுங்கள், அதன்பிறகும் அவை போகவில்லையென்றால் பின்னர் அடியுங்கள்” என முகம்மது கூறுகிறார் இதுவும் ஹதீஸ் தான்.
மக்கள் வசிக்கும் நகரங்களில், குப்பை கொட்டும் இடங்கள், கழிப்பிடங்கள், ஒட்டகத் தொழுவங்கள், மண்ணறைகள், அடர்ந்த காடுகள், பாலைவெளிகள், குகைகள் இன்னும் பல இடங்களிலும் வசித்து எலும்புகளையும் காய்ந்த மலத்தையும் உணவாக உண்ணும், ஆண்களாகவும் பெண்களாகவும் இருந்து இனப்பெருக்கம் செய்யும் நெருப்பினால் படைக்கப்பட்ட இந்த ஜின் எனும் உயிரினங்கள், உலகில் எங்கும் அகப்படவில்லை. இவ்வாறான உயிரினங்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றன என்பதற்கான சின்னஞ்சிறு தடயங்கள் கூட உலகில் தட்டுப்பட்டதில்லை. மனிதர்களைப் போல பல்கிப் பெருகிக்கொண்டிருக்கும் இந்த உயிரினங்களின் இருப்பினால் பூமியில் நிகழ்ந்த விளைவுகள் என்று எதுவும் அறுதியிடப்படவில்லை. ஆனாலும் இப்படி ஒரு உயிரினம் உலகில் வாழ்ந்துகொண்டிருக்கிறது என்றால் எப்படி? நாங்கள் ஏனைய மதத்தவர்களைப் போலல்ல குரான் எங்களை சிந்திக்கச் சொல்லியிருக்கிறது எனும் முஸ்லீம்கள் எந்த அடிப்படையில் ஜின்களை ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதைக் கூற முடியுமா?
கடைசிக்கால ஒற்றை விலங்கான தப்பாத் எனும் உயிரினம் குறித்து ஜின்னைப்போன்ற விரிவான விபரங்கள் எதுவும் இல்லை. பூமியில் மனிதர்கள் வாழ்ந்தது போதும் என கடவுள் முடிவெடுத்தபின்னர் இந்த விலங்கு பூமியைப் பிளந்து கொண்டு வெளிவரும். வெளிவந்து மனிதர்களைப் பார்த்து இவர் இறை வேதத்தை உண்மையாகப் பின்பற்றினார், இவர் பின்பற்றவில்லை, இவர் பின்பற்றுவது போல நடித்தார் என்று அவரவர்களின் நிலைக்கேற்ப அவர்களிடம் பேசி சான்றிதழ்கள் வழங்கும்.
புமியிலிருந்து தாவரங்கள் தானே முளைக்கும்? புழு பூச்சிகள் பொந்துகளில் வாழும், ஆனால் பூமியிலிருந்து திடீரென ஒரு உயிரினம் வெளிப்பட முடியுமா? அப்படி வெளிப்படும் ஒரு உயிரினம் உடனே பேச முடியுமா? எந்தப் பகுதியில் என்ன மொழியில் பேசும்? பேச்சு என்றால் என்ன? ஒரு உயிரினம் சமூக வயப்பட்டிருப்பதன் அடையாளம். தன் இனத்தைச் சார்ந்த இன்னொரு உயிரினத்துடன் தன்னுடைய கருத்தைப் பரிமாறுவதற்குறிய ஒரு வளர்ச்சி. ஆனால் இதை இன்னொரு உயிரினம் இல்லாத ஒற்றை விலங்காக பூமியிலிருந்து திடீரென வெளிப்படும் விலங்கு செய்யமுடியுமா? அதுவும் மனிதர்கள் இன்னொரு மனிதருக்கு தெரியாமல் மறைத்துவைத்திருக்கும் ரகசியத்தை கண்டுணர்ந்து கூறுவது என்றால், எந்த அடிப்படையில் அது சாத்தியப்படும்?
அல்லாவுக்கு இவைகளெல்லாம் சாத்தியப்படக்கூடிய ஒன்றுதான், ஆண்டவனின் மகிமை இது என்பவர்களுக்கு அறிவியல் குறித்துப் பேச எந்த அறுகதையும் இல்லை. இன்று கண்டுபிடிக்கப்படும் அறிவியல் நுணுக்கங்கள் கூட குரானில் 1400 ஆண்டுகளுக்கு முன்பே கூறப்பட்டுவிட்டது, என ஜல்லியடிப்பவர்கள் இந்த பேசும் உயிரிங்கள் குறித்து என்ன கூறுவார்கள்? தான் விரும்பும் ஒழுங்கை மக்களிடம் கட்டியமைப்பதற்காக முகம்மது 23 ஆண்டுகளாய் சிந்தித்து சிறுகச் சிறுக கோர்த்துத்தொகுத்தது தான் இஸ்லாமும் குரானும், இதில் மக்களை ஈர்ப்புடன் பயணப்படவைக்க சேர்த்தவைகள் தான் இதுபோன்ற கதைகளும். இதை புனிதம் என்பதும் எல்லா ஆற்றல்களையும் ஒருங்கே பெற்ற ஓரிறை என்பதும் உயர்வு நவிற்சி என்பதைத்தவிர வேறொன்றுமில்லை.
மீனின் வயிற்றில் மனிதனைப் பாதுகாத்த அல்லா
குரானில் சாதாரணமாக இடம்பெற்றிருக்கும் வசனங்களுக்குக் கூட அறிவியல் முலாம் பூசி, எங்கள் வேதம் 1400 ஆண்டுகளுக்கு முன்பே இன்றைய அறிவியல் வளர்ச்சி குறித்து குறிப்பிட்டிருக்கிறது பார்த்தீர்களா என வியப்பவர்கள், அறிவியலுக்கு எதிராக இருக்கும் கட்டுக்கதைகளை மறந்துவிடுகிறார்கள் என்பதோடு மட்டுமல்லாது, அவைகளை அதிகம் வெளியில் பேசுவதும் இல்லை. ஏனென்றால் அறிவியல் மதமாக இஸ்லாத்தை நிருவ முற்படுகிறவர்களுக்கு அவை இடையூறாகவே இருக்கும். கீழ்காணும் இரண்டு வசனங்களை கவனியுங்கள்.
ஆகவே, பழிப்புக்கிடமான நிலையில் எறியப்பட வேண்டியவரானார். ஒரு மீன் விழுங்கிற்று. ஆனால் அவர் இறைவனைத் துதி செய்து தஸ்பீஹு செய்து கொண்டிராவிட்டால், எழுப்பப்படும் நாள் வரை அதன் வயிற்றிலேயே தங்கியிருந்திருப்பார். குரான் 37: 142, 143, 144
உங்களிலிருந்து சனிக்கிழமையன்று வரம்பு மீறியவர்களைப் பற்றி நீங்கள் உறுதியாக அறிவீர்கள். அதனால் அவர்களை நோக்கி சிறுமையடைந்த குரங்குகளாகிவிடுங்கள் என்று கூறினோம். குரான் 2:65
இவற்றில் முதல் வசனம் யூனுஸ் எனும் தூதரைப் பற்றியது. அறிவிக்கப்பட்டிருக்கும் தூதர்களில் இவர் சற்றே மாறுபட்டவர். இவரைப்போல் நடந்து கொள்ளவேண்டாம் என்று அல்லா முகம்மதுவுக்கு அறிவுறுத்துகிறான். இதை சமன்படுத்தும் விதமாக யூனுஸை விட என்னை உயர்ந்தவனாக கூறவேண்டாம் என ஹதீஸ்களில் முகம்மது அறிவுறுத்துகிறார்.
எல்லா தூதர்களையும் போல யூனுஸும் அவர் வாழ்ந்த பகுதிக்கு தூதராக நியமிக்கப்பட்டு மதப் பரப்புரை செய்கிறார். வழக்கமாக ஏனைய தூதர்களின் மத முயற்சிகள் ஏற்கப்படாமல் மறுதலிக்கப்பட்டு அல்லா அந்தப் பகுதி மக்களை அழிப்பதுடன் முடியும். ஆனால் யூனுஸைப் பொருத்தவரை கதையில் ஒரு திருப்பம். தன்னுடைய பரப்புரை முயற்சிகள் பலனளிக்காதபோது அல்லாவிட்ம் முறையிடுகிறார், அல்லாவும் அந்த முறையீட்டை ஏற்று அழித்துவிடுகிறேன் என்கிறார். உடனே யூனுஸ் ஊரைவிட்டு கிளம்பிவிடுகிறார். அவர் கிளம்பிய பின்னர் ஊர் அழிக்கபடவிருக்கிறது என்பதை அறிகுறிகளைக் கொண்டு உணர்ந்த மக்கள் அல்லாவிடம் அழுது மன்னிப்பு கேட்கிறார்கள். அல்லாவும் அழிக்காமல் இரக்கப்பட்டு விட்டுவிடுகிறார். மறுபுறம் ஊரை விட்டு கிளம்பிய யூனுஸ் ஒரு கப்பலில் பயணப்படுகிறார். கப்பலில் ஏற்பட்ட ஏதோ ஒரு பிரச்சனையால், பயணிகளில் யாராவது ஒருவரை கடலில் வீசிவிட்டு பயணத்தை தொடரலாம் என முடிவெடுக்கப்படுகிறது. சீட்டு குலுக்கிப் பார்த்ததில் யூனுஸ் பெயர் வந்துவிட அவரை கடலில் தூக்கி வீசிவிட்டு கப்பல் சென்றுவிடுகிறது. கடலில் வீசப்பட்ட யூனுஸை ஒரு மீன் தின்றுவிடுகிறது. மீனின் வயிற்றுக்குள் சென்ற பிறகு தான் யூனுஸுக்கு நினைவு வருகிறது, தாம் அல்லாவிடம் அனுமதி பெறாமலேயே ஊரைவிட்டுவிட்டு வந்துவிட்டோம் என்பது, அதனால் தான் இவ்வளவு துன்பங்களும் தமக்கு நேர்ந்திருக்கிறது என உணர்ந்து(!)கொண்ட யூனுஸ் மீனின் வயிற்றுக்குள் இருந்தே அல்லாவிடம் மன்னிப்பு கோருகிறார். அதை ஏற்று அல்லாவும் அவரை மீன் சிறைச்சாலையிலிருந்து விடுவிப்பு ஆணை பிறப்பிக்க அந்த மீன் அவரை கரையில் உமிழ்ந்துவிட்டு சென்று விடுகிறது. கரையில் அவர் அசைவற்றுக் கிடக்க ஒரு சுரைக்கொடி முளைத்து அவருக்கு நிழல் கொடுக்கிறது பின் அதிலிருந்த சுரைக்காய்களை உண்டு தெம்புபெற்று ஊர் திரும்பி மீண்டும் மதப் பரப்புரையில் ஈடுபடுகிறார்.
பாட்டிகள் கூறும் மந்திரவாதக் கதைகளை நினைவுபடுத்தும் இந்தக்கதை அப்படியே குரானில் இடம்பெற்றிருக்கவில்லை என்றாலும், இந்தக் கதையை உறுதிப்படுத்தும் அளவுக்கு அதன் வசனங்களில் குறிப்பிருக்கிறது. எவ்வளவு நாள் அவர் மீனின் வயிற்றுக்குள் இருந்தார் என்பது குரானில் கூறப்படவில்லை என்றாலும் நான்கு நாளிலிருந்து நாற்பது நாட்கள் வரை இருந்தார் என பல்வேறு கருத்துகள் உலவுகின்றன. எத்தனை நாள் என்பது ஒருபுறமிருக்கட்டும் மீனின் வயிற்றுக்குள் சென்ற ஒருவர் எப்படி உயிருடன் வெளியில் வந்தார்? அதுவும் மீனின் வயிற்றுக்குள்ளிருந்து நடந்தவைகளை அசைபோட்டு சிந்தித்து அல்லாவை வேண்டித் தொழுது பின்னர் வெளியேற முடிந்திருக்கிறது என்றால்….. சிறு குழந்தைகள் கூட கேட்டால் சிரித்து விடக்கூடிய தன்மையில் இருக்கும் இந்தக் கதையை தங்கள் வேதத்தில் வைத்திருப்பவர்கள் தான் தங்கள் மதம் அறிவியல் மதம் என்றும் நாளை கண்டுபிடிக்கப்படவிருக்கும் அறிவியல் உண்மைகள் கூட தங்கள் வேதத்தை மீறி இருக்க முடியது என்றும் அளந்து விடுகிறார்கள்.
குரங்கின மூததைகளிடமிருந்துதான் மனிதன் கிளைத்தான் என்பது அறிவியல், ஆனால் குரான் தலைகீழ் பரிணாமத்தைக் கூறுகிறது. அதாவது, மனிதன் குரங்காக மாறினான் என்று. இதுதான் இரண்டாவது வசனத்தின் கதை. இப்ராஹிம் என்றொரு தூதர், மதப் பிரச்சாரத்தில் ஒழிச்சலின்றி ஈடுபட்டிருந்தபோதும் இடைவேளையில் மக்கள் ஒரு காளை உருவத்தை கடவுளாக ஏற்றுக்கொள்கிறார்கள். இதனால் கோபமடைந்த அல்லா, சனிக்கிழமை மீன்பிடிக்கக் கூடாது என்று தண்டனை விதிக்கிறார். ஆனால் மக்கள் அதையும் மீறி சனிக்கிழமையும் மீன் பிடித்துவிடுகிறார்கள். அப்படி மீன்பிடித்தவர்களுக்குத்தான் குரங்குகளாக மாறிவிடுங்கள் என்று சாபம் கொடுக்கிறார். மட்டுமல்லாது,
நாம் இதனை அக்காலத்தில் உள்ளவர்களுக்கும், அதற்குப் பின் வரக் கூடியவர்களுக்கும் படிப்பினையாகவும், பயபக்தியுடைவர்களுக்கு நல்ல உபதேசமாகவும் ஆக்கினோம். குரான் 2:66
அதாவது, குரங்காக மாற்றப்பட்ட காலத்தவர்களுக்கு மட்டுமல்ல இன்றைய சமகாலத்தவர்களுக்கும் கூட அந்த குரங்குகளை படிப்பினையாக்கி வைத்திருப்பதாக அல்லா குரானில் கூறுகிறான். இதனால் இப்போது அந்த குரங்குகள் எங்கே என யாரும் கேட்டுவிடக்கூடது என்பதற்காக முகம்மது அவசரமாக அதை மறுக்கிறார். உருமாற்றப்பட்டவர்களுக்கு இனப்பெருக்கம் கிடையாது என்று அறிவித்து விடுகிறார்.
குரங்குகளின் மூததை விலங்கு ஒன்றிலிருந்து படிப்படியாக பல லட்சம் ஆண்டுகளில் உருமாறி வந்தவன் தான் மனிதன் என பரிணாமம் கூறினால் அதற்கு எதிராக ஆயிரம் கேள்விகளை எழுப்பும் மதவாதிகள், இங்கே ஒரே நொடியில் மனிதனை குரங்காக மாற்றிய இந்த கதைக்கு எதிராக ஒற்றை ஒரு கேள்வியையேனும் எழுப்ப முன்வருவார்களா?
ஒவ்வொரு உயிரினமும் உட்கொள்ளும் உணவை செரிப்பதற்காக பல்வேறு அமிலங்களை தங்கள் செரிமான உறுப்புகளில் சுரக்கின்றன. வெளிப்புற தோல்களில் பட்டால் அரித்துவிடக்கூடிய அளவில் நொதித் தன்மையுடன் இருக்கின்றன. ஆனால் ஒரு மீனின் வயிற்றில் ஒரு மனிதன் சில நாட்கள் வசதியாக வாழ்ந்துவிட்டு வெளியில் வந்ததாக கதை சொல்கிறது குரான்.
ஒரு விலங்கைவிட அறிவிலும், செயலிலும், நினைவிலும், பரிமாற்றத்திலும், கருவிகளை பயன்படுத்துவதிலும் மேம்பாடு கொண்டவன் மனிதன். ஆனால் மனிதனின் இந்த மேம்பாடுகளையெல்லாம் ஒரு அழிப்பான் கொண்டு அழித்து விடுவதைப்போல் குரங்காக மாறிவிட்டார்கள் என கதை சொல்கிறது குரான்.
ஒரு சொல்லின் எழுத்துகளுக்குக் கூட அசை பிரித்து அறிவியல் விளக்கம் சொல்பவர்கள் இந்த கட்டுக்கதைகளுக்கு என்ன சொல்ல முடியும்?
விண்வெளியைக் கடந்த முதல் மனிதர் முகம்மதின் மிஹ்ராஜ்
“விண்வெளியில் பயணம் செய்த முதல் மனிதன் யார்?” என்று படிக்கும் குழந்தைகள் யாரிடம் கேட்டாலும் சொல்லும் பதில் ‘யூரி காக்ரின்’ என்பதாகத்தான் இருக்கும். முஸ்லீகளிடம் கேட்டாலும் இதுதான் பதில், ஆனால் அவர்கள் நம்புவது வேறு. தோராயமாக 1400 ஆண்டுகளுக்கு முன் ஒரு நாளின் இரவில் முகம்மது விண்வெளியில் பயணம் செய்து தான் பிறப்பதற்கு முன்னரே இறந்துபோன மனிதர்களிடம் பேசி ஆலோசனை செய்து அல்லாவிடம் பேரம் நடத்தி ஐவேளைத் தொழுகையை வாங்கிவந்தார் என்பது அவர்களின் நம்பிக்கை. கல்விக்கு(மெய்யாக) ஒன்று, நம்பிக்கைக்கு(கற்பனையாக) வேறொன்று.
ஓரிரு ஆண்டுகளுக்கு முன் ‘விடுதலை’ இதழில் புஷ்பக விமானமும் புராக் விமானமும் ஒன்றுதான், இரண்டுக்கும் அறிவியல் நிரூபணங்கள் இல்லை என்று ஒரு கட்டுரை வெளிவந்தது.அதை எதிர்த்து ‘உணர்வு’ இதழ் தொடற்சியாக பத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை வரைந்து தள்ளியது, ஆனால் முகம்மது விண்ணில் பறந்ததற்கு என்ன நிரூபணம் என்பதை மட்டும் தொடவே இல்லை. இதன் தொடர்ச்சியாக சென்னையில் நாத்திகர்களுடன் நேரடி(!) விவாதமும் நடந்தது. என்ன காரணமோ தெரியவில்லை அவர்களும்கூட ஏதேதோ பேசினார்களே தவிர மிகக்கவனமாக அந்தக் கேள்வியை மட்டும் தவிர்த்து விட்டார்கள். பின்னர் தனியாக “முகம்மது பூமியில் மட்டுமே புராக்கில் பயணம் செய்தார், விண்வெளிக்கு புராக்கில் செல்லவில்லை” என்றொரு விளக்கம் வைத்தார்கள். அப்போதும் கூட விண்ணில் சென்றது எப்படி என்று விளக்கும் நோக்கில் எதையும் கூறவில்லை.
இந்த விண்வெளி பயணம் குறித்து குரான் இப்படி கூறுகிறது
மிகப் பரிசுத்தமானவன். அவன் தன் அடியாரை பைத்துல் ஹரமிலிருந்து மஸ்ஜிதுல் அக்ஸாவுக்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்…… குரான் 17:1
ஆனாலும் ஹதீஸ்களில் இன்னும் விரிவாக இந்தப்பயணம் பற்றிய செய்திகள் கூறப்பட்டிருக்கின்றன.
நான் இறையில்லத்தில் தூக்கமாகவும் விழிப்பாகவும் இருந்தபோது …. தங்கத்தட்டு கொண்டுவரப்பட்டது ….. என்னுடைய நெஞ்சில் காரையெலும்பிலிருந்து அடிவயிறு வரை பிளக்கப்பட்டது …. புராக் எனும் வாகனம் என்னிடம் கொண்டு வரப்பட்டது …. முதல் வானம் ஆதம் …. இரண்டாம் வானம் ஈசா, யஹ்யா …. மூன்றாம் வானம் யூஸுஃப் …. நான்காம் வானம் இத்ரீஸ் …. ஐந்தாம் வானம் ஹாரூன் …. ஆறாம் வானம் மூஸா …. ஏழாம் வானம் இப்ராஹிம் …. அதன் பின்னர் சித்ரத்துல் முந்தஹா …. வேர்ப்பகுதியில் நான்கு ஆறும் யானையில் காதளவு பெரிய இலைகளும் கொண்ட இலந்தை மரம் …. அல்லாவின் வஹீ, ஒரு நாளுக்கு ஐம்பது வேளைத் தொழுகை …. மூஸாவின் ஆட்சேபம் …. அல்லாவோடு பேரம் …. இதற்குமேலும் குறைக்கவா எனும் முகம்மதின் வெட்கமும் ஐவேளைத் தொழுகை இறுதியாதலும். புஹாரி 3207
குரான் இந்தப் பயணத்தை வெகுசுருக்கமாக முடித்துக்கொள்கிறது. ஆனால் ஹதீஸ்கள் தான் அந்தப் பயணத்தை பேரண்டங்களைக் கடந்து விரித்துச் செல்கிறது. அதுவும் கிரிக்கெட் விளையாட்டில் ‘ரன்’ எடுப்பது போல பேரண்டங்களைக் கடந்த ‘சித்ரத்துல் முந்தஹா’ எனும் இடத்திற்கும் மூசாவின் வானமாகிய ஆறாம் பேரண்டத்திற்கும் மாறி மாறி ஓடுகிறார். அதுமட்டுமா? விண்வெளிப் பயணத்திற்கு முகம்மதை ஆயத்தப்படுத்த செய்யப்படும் அறுவைச்சிகிச்சை, புராக்கின் உருவம், எந்தெந்த அண்டங்களில் யாவர் என திரைக்கதையையே அமைத்துக் காட்டுகிறது.
முதலில் வானம் என்பது என்ன? இங்கு ஏழு வானம் ஏழு கதவு என வருகிறது கதவு என்பதை குறியீடாகக் கொண்டாலும் ஒரு தடுப்பு அல்லது ஒவ்வொரு வானமும் தனித்தனி என பொருள் வருகிறது. ஆனால் வானம் என்பது தடுக்கப்பட்டதாகவோ தனித்தனியாகவோ இல்லை. எனவேதான் மதவாதிகள் வானம் என்பதற்கு பேரண்டம் என பொருள் தருகிறார்கள். அதாவது ஏழு தனித்தனியான பேரண்டங்கள். இந்த ஏழு பேரண்டங்களையும் கடந்து சென்றுவிட்டு ஒரிரவுக்குள் திரும்பியும் வந்திருக்கிறார் முகம்மது.
நாம் வாழும் இந்த பேரண்டம் எவ்வளவு பரந்து விரிந்தது என்பது துல்லியமாக இன்னும் மனிதர்களால் கண்டுபிடிக்கப்படவில்லை, மட்டுமல்லாது அது விரிந்து கொண்டும் இருக்கிறது. பூமி, சூரியக் குடும்பம், அதை உள்ளடக்கிய ஆகாய கங்கை எனும் பால்வீதி, இன்னும் இதுபோன்ற பல்லாயிரக்கணக்கான பால்வீதிகள், பலகோடிக்கணக்கான விண்மீன்கள், கருந்துளைகள், நெபுலாக்கள் இன்னும் பலவான விண்வெளி பருப்பொருட்களை உள்ளடக்கிய இந்தப் பேரண்டத்தின் அளவு தற்கால கணக்கீடுகளின்படி தோராயமாக 2500 கோடி ஒளியாண்டுகள். ஒரு ஒளியாண்டு என்பது ஒளித்துகளொன்று தடையாமல் தொடர்ந்து ஓராண்டுகாலம் பயணம் செய்தால் எவ்வளவு தூரத்தைக் கடந்திருக்குமோ அது தான் ஓர் ஒளியாண்டு தூரம். ஒளியின் வேகம் நொடிக்கு மூன்று லட்சம் கிலோ மீட்டர். அதாவது நொடிக்கு மூன்று லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்யக்கூடிய ஒரு பொருள் தொடர்ந்து நிற்காமல் பயணம் செய்தால் நாம் வாழும் இந்த பேரண்டத்தின் மறுஎல்லையைச் சென்றடைய 2500 கோடி ஆண்டுகள் தேவைப்படும். இது ஒரு பேரண்டத்தைக் கடப்பதற்கு தேவைப்படும் காலம், இதையும், இதுபோல் இன்னும் ஆறு பேரண்டங்களையும் கடந்து சென்று மீண்டு வந்திருக்கிறார் முகம்மது அதுவும் ஓர் இரவுக்குள்.
இந்த பேரண்டத்தின் உச்சகட்ட வேகம் ஒளியின் வேகம் தான். ஒளியைவிட மிகைத்த வேகத்திற்கு ஒரு பொருளை முடுக்கமுடியாது என்கிறது சார்பியல் கோட்பாடு. ஒரு வாதத்திற்காக இந்த உச்ச வேகத்தில் பயணம் நிகழ்ந்திருக்கிறது என்று கொண்டாலும், ஓர் இரவு என்பது அதிகபட்சமாக 12 மணி நேரம். இந்த நேரத்தில் உச்சகட்ட வேகத்தில் சென்றாலும் ஒருவரால் அதிகபட்சம் 1296 கோடி கிலோமீட்டர்கள் தான் பயணிக்க முடியும். அதாவது 648 கோடி கிமீ தூரத்திற்கு சென்று வரலாம். ஆனால் முகம்மது சென்று வந்திருக்கும் தூரமும், அப்படி செல்வதற்கு கைக்கொண்ட வேகமும் கற்பனைக்குக் கூட எட்டாததாயிருக்கிறது.
குரானின் சொற்களுக்கும், எழுத்துகளுக்கும் இடையில் இண்டு இடுக்களிலெல்லாம் புகுந்து அறிவியலை அள்ளிக்கொண்டுவரும் மதவாதிகள் இந்த விண்வெளிப் பயணத்திற்கு என்ன அறிவியலைக் கொண்டுவருவார்கள்? இதில் வெளிப்படையான சிக்கல் இருக்கிறது எனத் தெரிந்ததால் சில மதவாதிகள், மக்காவிலிருந்து ஜெருசலம் வரையில் தான் பயணம் அதன்பிறகு உள்ளதெல்லாம் கனவு போல ஒரு காட்சி வெளிப்பாடு என நூல் விட்டுப்பார்க்கிறார்கள். ஆனால் குரானின் அது மெய்யான பயணம் தான் என்பதை உறுதிப்படுத்துகிறது.
…..அவரைச் சந்தித்ததில் நீர் சந்தேகம் கொள்ளாதீர்……. குரான் 32:23.
ஆக நம்புவதற்குக் கூட துளியும் வாய்ப்பளிக்காத இதுபோன்ற கட்டுக் கதைகளைத்தான் எக்காலத்திற்கும் பொருந்தும் ஒரே வேதம் என முழம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
மனிதர்களால் முடியாததெல்லாம் கடவுளால் முடியும் என்றெல்லாம் இதை எளிதாக குறுக்கிவிட முடியாது. அறிவியலை திணிக்க எங்கெல்லாம் வாய்ப்பிருக்கிறதோ அங்கெல்லாம் குரான் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே இன்றைய அறிவியலை கூறிவிட்டது என ஜல்லியடிப்பதும், வெளிப்படையாக பல்லிளிக்கும் இடங்களில் அல்லாவின் அருள் என பதுங்குவதும் அப்பட்டமான மோசடி. என்ன மோசடியாக இருந்தாலும் எங்கள் மதம் என்பர்கள் விலகிச் செல்லுங்கள், சிந்திக்கும் திறனுள்ளவர்கள் சிந்திக்கலாம்.
ஸம் ஸம் நீரூற்றும் குரானும்
இஸ்லாத்தின் அற்புதங்களின் வரிசையில் ஸம் ஸம் நீரூற்றுக்கு சிறப்பான இடம் உண்டு. அற்புதங்களில் மட்டுமின்றி இஸ்லாமிய வரலாற்றிலும் அந்த நீரூற்றுக்கு தனியாசனம் உண்டு. இஸ்லாத்தின் இறுதிக் கடமையான ஹஜ்ஜை முடித்துச் செல்பவர்கள் தங்கள் கடவச் சீட்டைவிட பத்திரமாக எடுத்துச் செல்லும் ஒரு பொருள் உண்டென்றால் அது ஸ்ம்ஸம் நீராகத்தான் இருக்கும். சற்றேறக் குறைய 4000 ஆண்டுகளாக நீர் தந்துகொண்டிருக்கும் நீரூற்று, வற்றாத நீரூற்று, எவ்வளவு நீர் எடுத்தாலும் அளவு குறையாத நீரூற்று, நோய் தீர்க்கும் தன்மையுடைய நீரைத் தரும் நீரூற்று, இன்னும் பலவாறாக முஸ்லீம்களால் விதந்து போற்றப்படும் இந்த நீரூற்று மக்கா பள்ளியின் வளாகத்தினுள் காஅபா ஆலயத்தின் வெகு அருகில் இருக்கிறது.
இந்த ஊற்றின் தொடக்கம் பற்றிய கதை ஈர்ப்புக்கவர்ச்சி மிக்கது. கிமு 2000 வாக்கில் அன்றைய இறைத்தூதரான இப்ராஹிம் தன் மனைவி ஹாஜ்ர் ஐயும் பச்சிளங் குழந்தை இஸ்மாயிலையும் ஆளரவமற்ற அரபு பாலைவனத்தில் ஸபா, மர்வா எனும் இரண்டு குன்றுகளுக்கு அருகில் தனியே விட்டுவிட்டு திரும்பிப்பாராமல் வந்துவிடுகிறார். தாயையும் சேயையும் அப்படி பலைவன வெயிலில் விட்டுவிடும்படி அவருக்கு இறைக்கட்டளை வருகிறது, இறைத்தூதரல்லவா தட்டாமல் நிறைவேற்றிவிடுகிறார். இதே இப்ராஹிம் தான் பின்னாளில் இதே இஸ்மாயிலை இறைக்கட்டளை எனும் பெயரில் நரபலி கொடுக்க முயல்கிறார். இதன் நினைவாகத்தான் தியாகத்திருநாள் என்று உலக முஸ்லீம்கள் ஆட்டை அறுத்துப் பலியிடுகிறார்கள். கதைக்கு திரும்பலாம், பையில் வைத்திருந்த தண்ணீர் தீர்ந்ததும் பிரச்சனை தொடங்குகிறது. குழந்தை வீறிட்டு அழுகிறது. குழந்தையின் பசி தீர்க்க உதவி ஏதும் கிடைக்காதா என்று பக்கத்திலிருக்கும் குன்றுகளான ஸபா, மர்வா மீது ஏறி ஆட்கள் யாரும் தென்படுகிறார்களா என்று பார்க்கிறார். யாரும் தென்படுவதாக இல்லை. மீண்டும் குழந்தையிடம் ஓடி வருகிறார், குழந்தையின் அழுகையை நிறுத்த வழிதெரியாது மீண்டும் குன்றுகளின் மீதேறி உதவி ஏதும் கிடைக்காதா என தேடுகிறார். இப்படி ஏழு முறை இரண்டு குன்றுகளிலும் மாறிமாறி ஏறி உதவி கிடைக்காதா எனத் தேடுகிறார். இதன் நினைவாகத்தான் ஹஜ் செய்பவர்கள் ஸ்பா, மர்வா குன்றுகளுக்கிடையில் ஏழுமுறை தொங்கோட்டம் ஓடுகிறார்கள்.
இதன் பிறகு வானவர் ஒருவர் குழந்தையின் அருகே தோன்றி தன் கையிலிருக்கும் தடியினாலோ அல்லது தன்னுடைய சிறகினாலோ தரையை தட்டுகிறார். உடன் அந்த இடத்திலிருந்து நீர் குமிழியிட்டு வெளியேறுகிறது. இதையே குழந்தை காலால் அழுது உராய்த்த இடத்திலிருந்து நீர் பீறிட்டுக்கிளம்பியதாக கூறுவோரும் உண்டு. இதைக்கண்ட ஹாஜ்ர் ஓடி வந்து நீர் வெளியேறி வீணாகிவிடக்கூடாதே என்று ஸ்ம் ஸம் (நில் நில்) என்று கூறிக்கொண்டே மணலால் அணைகட்டுகிறார். அதனால் தான் அந்த ஊற்று இன்றும் ஸம் ஸம் நீருற்று என அழைக்கப்படுகிறது.
முதலில் இது 4000 ஆண்டுகளாக தொடர்ந்து நீர் வெளிப்பட்டுக்கொண்டிருக்கும் ஊற்று என்பதே தவறானது. மேற்குறிப்பிட்ட கதையில் ஊற்று வெளிப்படத் தொடங்கியதும் பிற பகுதியிலுள்ள மக்கள் அங்கு நீர் வளம் இருப்பதைக் கண்டு அந்த இடத்தில் குடியேற தொடங்குகிறார்கள், அதுவே பின்னர் மக்கா எனும் நகரமாகிறது. ஆனால் தொடர்ந்து அந்த ஊற்று எவ்வளவு நாட்கள் பயன்பாட்டில் இருந்தது என்பதற்கு குறிப்புகள் எதுவும் இல்லை, தூர்ந்துவிட்டது. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பல பாதைகளின் சந்திப்பாக இருந்த மக்கா எனும் நகரத்தைப்பற்றி பல நூல்களில் குறிப்புகள் இருந்தாலும் எதிலும் அந்த ஊற்றைப் பற்றிய குறிப்புகள் இல்லை. இப்போதிருக்கும் ஊற்று முகம்மதுவின் காலத்திற்கு சற்றுமுன் முகம்மதின் பெரிய தந்தையான அப்துல் முத்தலிப் என்பவர் குறைஷிகளின் நீர்த்தேவையை தீர்ப்பதற்காக தோண்டிய கிணறு. தன்னுடைய குலத்திற்காக பெரியதந்தை தோண்டிய கிணறு என்பதால் முகம்மது அதற்கு கொடுத்த முக்கியத்துவமே, இன்று இஸ்லாமியர்களின் புனிதமாகி இருக்கிறது.
1971ல் எகிப்திய மருத்துவர் ஒருவர் இந்தக் கிணறு குறித்து ஐயம் எழுப்பியதாகவும் அதைத் தீர்ப்பதற்கு மன்னர் பைசல் நீர் மற்றும் விவசாய அமைச்சரவையிடம் இது குறித்து விசாரிக்குமாறு பணித்ததாகவும், அவர்களால் இதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தாரிக் ஹுசைன் என்பவர் அந்தக் கிணற்றின் ஆழம் தோராயமாக ஐந்து அடி இருந்ததாக குறிப்பிடுகிறார். ஆனால் அந்தக் கிணற்றின் ஆழம் 30 மீட்டர் என்று சௌதி அரசின் இணைய தளங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இப்படித்தான் அந்த நீரின் புனிதம் குறித்து கதைகள் கட்டி பரப்பப்படுகிறது. அதுவே மதத்துடன் தொடர்புடையது என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் ஆகிவிடுகிறது.
இந்த நீரில் இருக்கும் தனிமங்களின் செரிவு குறித்தும், இது புனித நீராக இருப்பதால்தான் இவ்வாறு இருக்கிறது என்பதாகவும் பிரதாபிக்கின்றனர். ஆனால் இதை விட பழமையான ஊற்றுகளெல்லாம் இதுபோல தனிமங்களின் செரிவுற்றதாக இருந்திருக்கிறது. சீனாவில் லிசான் மலையில் கிமு மூன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வெப்ப நீரூற்று மருத்துவ தன்மை கொண்டதாக பயன்பாட்டில் இருக்கிறது.
இந்த கிணற்றிலிருந்து எவ்வளவு நீரை இறைத்தெடுத்தாலும் இதன் நீர்மட்டம் குறைவதில்லை என்றும் ஒரு கருத்து உலவுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது சௌதி அரசு ஏன் அந்த கிணற்றை யாரும் அணுக முடியாதபடி பாதுகாத்து வைத்திருக்கிறது என்பதில் இருக்கிறது. இந்த ஊற்றின் மகிமை குறித்து முகம்மது பலவாறாக புகழ்ந்து கூறியிருப்பதாக ஹதீஸ்களில் குறிப்பாக புஹாரி பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நீரை என்ன நோக்கத்திற்காக என்ன நினைத்து குடிக்கிறார்களோ அந்தப் பலனையே பெறுவார்கள். இந்த நீர் உணவாகவும், மருந்தாகவும் இருக்கிறது. காய்ச்சல் கண்டால் இந்த நீரைக் குடித்தால் சரியாகிவிடும். முகம்மதை விண்வெளிப் பயணத்திற்கு தயார்படுத்த இந்த நீரால் தான் அவரின் உள்உறுப்புகள் கழுவி சுத்தம் செய்யப்பட்டன என்று பலவாறாக கூறப்பட்டிருக்கிறது. மாறாக குரானில் ஒரு வசனம் கூட இந்த கிணறு குறித்து இல்லை.
குரானில் விரிவான விபரங்கள் கூறப்பட்டிருக்கும் இறைத்தூதர்களில் இப்ராஹீமும் ஒருவர். தன்னுடைய மகனை பலியிட முயன்றது, தன்னுடைய மனைவி மகனை பலைவனத்தில் தவிக்க விட்டது, தந்தையும் மகனும் காஅபா பள்ளியைக் கட்டியது என குரான் அந்த நீரூற்றோடு தொடர்புடைய பல தகவல்களைக் கூறியிருந்தாலும், நேரடியாக அது குறித்து எதுவும் கூறப்படவில்லை. அது போல ஹஜ் எப்படி செய்ய வேண்டும் என்பதும் குரானில் சொல்லப்படவில்லை. ஆனால் ஸபா, மர்வா குன்றுகளுக்கிடையில் தொங்கோட்டம் ஓடுவதையும் இணைத்தே முகம்மது ஹஜ் நிகழ்ச்சிகளை ஒழுங்கமைத்திருப்பதால் குரானின் வசனங்களுக்கும் முகம்மதின் தீர்மானங்களுக்குமிடையில் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை என்றாகிறது. பல வேதங்களை உள்ளடக்கிக் கொண்டிருக்கும் தாய் ஏட்டிலிருந்து அருளப்பெற்றதாக நம்பப்படும் குரான் முஸ்லீம்களின் நம்பிக்கையின்படியே முகம்மதுவின் சொற்களில்லை என்றால்; முகம்மதுவின் பெரியப்பா தோண்டிய கிணற்றுக்கும் அதனைச்சுற்றிய கதைக்கும் குரான் ஏன் முக்கியத்துவம் தந்திருக்கிறது என்பது மட்டும் முஸ்லீம்களின் சிந்தனைக்கு.
மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா?
மனிதன் இன்று உயர்வான வசதிகளைப் பெற்ற சிறந்த சமூக விலங்காக இருக்கிறான். பல்வேறு கண்டுபிடிப்புகள், சிந்தனைகளால் தன் வாழ்வையும் சூழலையும் மேம்படுத்தியிருக்கிறான். தன் ஆளுமையால் மண்ணையும் விண்ணையும் சாடி வியத்தகு சாதனைகள்களை செய்திருக்கிறான். சில லட்சம் ஆண்டுகளாக பூமியில் உலவும் மனிதன் எப்படி தோன்றினான் என்பதில் அறிவியலாளர்களின் கருத்தும் மதவாதிகளின் கருத்தும் ஒருபோதும் ஒன்றாக இருந்ததில்லை. ஏனென்றால் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்து தான் மனித வரலாறு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மதவாதிகளின் கருத்துகள் பரிசீலனைக்கோ, ஆய்வுக்கோ உட்பட்டதல்ல, அது நம்பிக்கையை மட்டுமே ஆதாரமாக கொண்டது என்பதால் அறிவியலாளர்கள் அதை ஏற்பதில்லை. தங்கள் நம்பிக்கைக்கு விரோதமாக இருக்கிறது என்பதால் அறிவியலாளர்களின் கருத்துகளை மதவாதிகள் ஏற்பதில்லை. ஆனால் உண்மை என்ன? கடவுள் படைத்த ஒரு மனிதன் அல்லது ஒரு தம்பதியினரிலிருந்து தான் பூமியில் மனித இனம் தோன்றியது எனும் மதவாதிகளின் கூற்றுக்கு எந்தவித ஆதரங்களோ அடிப்படைகளோ; நேரடியாகவோ மறைமுகமாகவோ இல்லை. அதே நேரம் மனிதன் பரிணாமத்தின் அடிப்படையில் தோன்றியவன் என்பதற்கு நேரடியான ஆதாரங்கள் எதுவும் இருக்க முடியாது என்றாலும் நேரடியாக இல்லாத ஏராளமான ஆதாரங்கள் எல்லாத்துறைகளிலும் இருக்கின்றன. மனிதனின் தோற்றம் குறித்து குரான் என்ன கூறுகிறது? அதற்கும் அறிவியலுக்கும் என்ன தொடர்பு? குரானின் கூற்றைக் கொண்டு பரிணாமவியலை மறுக்கமுடியுமா? போன்றவைகளுக்கு கடப்பதற்கு முன்னர் பரிணாமம் குறித்து மதவாதிகள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளித்துவிடுவது சிறப்பானதாக இருக்கும். எனவே அதுபோன்ற கேள்விகளுக்கான பதில்களின் பிறகு தொடரலாம்.
௧) பரிணாமவியல் என்பது நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மையல்ல, அது ஒரு யூகம் தான். கடவுட்கொள்கையை மறுப்பதற்காகத்தான் டார்வினை தூக்கிப்பிடிக்கின்றனரே தவிர அது வெறும் யூகம் தான்.
யூகம் என்பதற்கும் அறிவியல் யூகம் என்பதற்கும் வேறுபாடு இருக்கிறது. வெறுமனே விட்டத்தைப் பார்த்து கற்பனையில் கூறுவதல்ல அறிவியல் யூகம். அதற்கும் சான்றுகள் வேண்டும் அறிவியல் அடிப்படைகள் வேண்டும். அந்தவகையில் டார்வின் பீகிள் கப்பற்பயணத்தில் ஐந்தாண்டுகளாக மனிதன் காலடி படாத தீவுகளிலெல்லாம் சுற்றியலைந்து தொல்லுயிர் எச்சங்களைச் சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்தி அதன் விளைவாக மனிதனின் தொடக்கம் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என யூகித்தது தான் டார்வினின் பரிணாமவியல். இதை வெறுமனே யூகம் என ஒதுக்கிவிட முடியாது.
இன்னொரு விதத்தில், பரிணாமவியலை யூகம் என ஒதுக்கும் மதவாதிகள் அறிவியல் யூகங்களை ஒதுக்குகிறார்களா என்றால் இல்லை என்பது தான் பதில். பெருவெடிப்புக் கொள்கையும் அறிவியல் யூகம்தான் ஆனால் அதை மதவாதிகள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்றால் அதன் காரணம் என்ன? பெருவெடிப்புக்கொள்கையை குரான் மறுப்பதில்லை என்பதனால் ஏற்றுக்கொள்கிறார்கள். பரிணாமவியலோ குரானுடன், கடவுட் கொள்கையுடன் நேரடியாக மோதுகிறது. அதனால் அதை ஏற்க மறுக்கிறார்கள். குரான் ஏற்கிறதா மறுக்கிறதா என்பதுதான் ஒன்றை ஏற்பதா மறுப்பதா என்பதைத் தீர்மானிக்குமேயன்றி அது அறிவியலா யூகமா என்பதல்ல.
௨) குரங்குதான் மனிதனாக மாறியது என்றால் இப்போது ஏன் எந்த குரங்கும் மனிதனாக மாறுவதில்லை? இது அடிப்படையற்ற கேள்வி. குரங்கு திடீரென மனிதனாக உருமாற்றம் பெற்றது என நினைப்பது பரிணாமவியலை அறியாதவர்களின் நினைப்பு. உயிரினங்கள் பரிணமித்து வெவ்வேறு உயிர்களாக காலப்போக்கில் மாறுகின்றன. குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்பது எளிமை கருதி கூறப்படுவது, மனிதனும் குரங்கும் ஒரே மூதாதையிலிருந்து கிளைத்துவந்த இருவேறு உயிரினங்கள் என்பதே சரியானது. மனிதன் தன்னுடைய பரிணாமப் பாதையில் பல்வேறு நிலைகளை கடந்து வந்திருக்கிறான். விலங்கு நிலையிலிருந்து மனிதன் எனும் நிலைக்கு வருவதற்கு சற்றேறக்குறைய நான்கு கோடி ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றன. நான்கு கோடிக்கும் அதிகமாக ஒரு மனிதனின் வாழ்நாள் இருக்குமானால் ஒருவேளை பரிணாம மாற்றங்களை அவனால் நேரடியாக கண்டிருக்க முடியும். மட்டுமல்லாது பரிணாமம் என்பது யாரேனும் கட்டளையிட்டு நிகழ்வதல்ல, இயற்கைத் தேர்வு முறையில் சூழலுக்கு உட்பட்டு வினைபடுவது. அப்போது நடைபெற்றது இப்போது ஏன் நடைபெறவில்லை என யாரலும் கேள்வி எழுப்ப முடியாது.
௩) குரங்கிலிருந்து மாறிவந்தவன் மனிதன் என்பது உண்மையானால் பரிணாமவியல் தத்துவத்தின்படி மனிதன் ஏன் இப்போது வேறொரு உயிரினாமாக மாறவில்லை. பரிணாமத்தை தடுத்தது யார்?
யாரும் தடுக்கவில்லை, தடுக்கவும் முடியாது. பரிணாமத்தின் முக்கியமான காரணியே சூழலால் பாதிக்கப்படுவது. சூழலால் தாக்கப்பட்டு நிர்ப்பந்தத்திற்குள்ளாகும் உயிரினங்கள் விரைவாக பரிணமிக்கின்றன. மனிதனைப் பொருத்தவரை தனக்கு ஏற்ப சூழலை மாற்றியமைத்து கொள்ளும் திறனுடன் இருக்கும் உயிரினினம் என்பதால் பரிணாமம் மெதுவாகவே நிகழும். அதேநேரம் மனிதனும் பரிணமித்திருக்கிறான். மூளையைச் சுற்றியிருக்கும் மெல்லிய உறை கடந்த நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு உட்பட்ட காலத்தில் மனிதன் பெற்றிருக்கும் புதிய பரிணாமம். மட்டுமல்லாது மனிதன் தன் முடி, நகங்களை இழந்துவருகிறான்.
௪) களிமண்ணிலிருந்து படைக்கப்பட்டவன் மனிதன் எனும் குரனின் கூற்றை அறிவியல் உலகம் மெய்ப்பித்திருக்கும்போது உயிரினங்கள் ஒன்றிலிருந்து ஒன்று மாறிவந்தது அதிலிருந்து மனிதன் வந்தான் என டார்வின் தத்துவம் பேசுவது அறிவியலுக்கே முரணானதில்லையா?
பொய்களைவிட குறை உண்மைகள் ஆபத்தானவை. மனித உடலில் இருக்கும் தனிமங்கள் என 58 வகை தனிமங்களை வகைப்படுத்தியிருக்கிறார்கள் அறிவியலாளர்கள். இதை களிமண்ணிலிருந்து மனிதனை படைத்ததாக கூறும் குரானின் கூற்றை மெய்ப்படுத்துவதாக கூறமுடியாது. மென்டலீப் எனும் வேதியியலாளர் சுமார் 108 தனிமங்களை அட்டவணைப் படுத்தியுள்ளார். பூமியிலுள்ள எந்தப் பொருளானாலும் அவற்றுக்கு இந்த தனிமங்கள் தான் அடிப்படை. ஆனால் மனித உடலிலிருக்கும் தனிமங்களுக்கு மண்தான் அடிப்படை என மதவாதிகள் திரிக்கிறார்கள். மண் ஒரு பொருள் அந்தப் பொருளுக்கும் மேற்கண்ட தனிமங்களே அடிப்படை என்பது தான் உண்மை.
மனிதன் மட்டுமல்ல உலகின் அனைத்துப் பொருட்களும் மேற்கண்ட தனிமங்களினால் ஆனவையே. ஆனால் குரான் மனிதனை மட்டும் சிறப்பாக களிமண்ணினால் படைத்ததாக கூறுகிறது. மனிதன் உட்பட உலகின் அனைத்துப் பொருட்களுக்குமே மேற்கண்ட தனிமங்களினால் ஆக்கப்பட்டிருக்க குரான் மனிதனை மட்டும் களிமண்ணால் படைத்ததாக கூறுவதிலிருந்தே அதற்கும் அறிவியலுக்கும் உள்ள பொருத்தம் எளிதில் விளங்கும்.
மட்டுமல்லாது மனிதன் பூமியிலுள்ள களிமண்ணிலிருந்து படைக்கப்படவில்லை. சொர்க்கம் அல்லது வேற்று கிரகத்திலுள்ள ஒருவகை களிமண்ணிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறான். ஆனால் மனிதனின் உடலிலுள்ள தனிமங்கள் அனைத்தும் பூமியிலுள்ளவையே. பூமியில் இருக்கும் தனிமங்கள் வேற்று கிரகத்தில் இருப்பதற்கான வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை என்றாலும் பூமியில் இல்லாத ஒன்றிரண்டு தனிமங்களாவது மனிதனின் உடலில் இருந்தாக வேண்டுமல்லவா? அப்படி எந்த தனிமமும் இல்லை என்பதிலிருந்தே மனிதன் முழுக்க முழுக்க பூமியின் தயாரிப்பு என்பது உறுதியாகிறது.
௫) பலமான விலங்கே உயிர்வாழும் என்று பரிணாமவியல் கூறுகிறது. பலமான விலங்கான புலியை அரசு தனியாக நிதி ஒதுக்கி பாதுகாக்க வேண்டியுள்ளது, பலவீனமான ஆடு பல்லயிரம் கோடி எண்ணிக்கையில் இந்தியாவில் இருக்கிறது. இதிலிருந்தே தெரியவில்லையா டார்வின் தத்துவம் ஏற்கமுடியாத ஒன்று என்பது?
தகுதியான விலங்கு உயிர்வாழும் என்பதற்கும், பலமான விலங்கு உயிர்வாழும் என்பதற்கும் இடையில் பொருள் மாறுபாடு உண்டு. சூழ்நிலையின் வினைப்பாட்டை தாக்குப்பிடித்து நீடிக்கும் விலங்கே உயிர்வாழும் தகுதியைப் பெறும். டைனோசர்கள் வாழும் காலத்தில் அவற்றைவிட பலசாலியான வேறு விலங்குகள் எதுவும் பூமியில் இல்லை. ஆனால் ஒரு குறுங்கோள் பூமியை தாக்கியபோது அதை தாக்குப்பிடித்து வாழும் வலிமையை பலசாலியான அந்த விலங்குகள் பெற்றிருந்திருக்கவில்லை என்பதால் அவை அழிந்துபோயின. ஆடுகளுடன் ஒப்பிடுகையில் புலிகள் வலிமையானவை தான். ஆனால் மனிதனின் உணவுத்தேவையே ஆடுகளை கோடிகளில் வாழவைத்திருக்கிறது. புலிகளிடம் இவ்வாறான தேவை எதுவும் மனிதனுக்கில்லை. ஒருவேளை புலிகளை மனிதன் உணவுத் தேவைகளுக்காக பயன்படுத்தியிருந்தால் அதும் எண்ணிக்கையில் அதிகம் இருந்திருக்கக் கூடும். அதேநேரம் ஆடுகளில் அதிக எண்ணிக்கையில் இருப்பது வெள்ளாடு, செம்மறியாடு எனும் இரண்டு வகைதான். இந்த இரண்டும் மனிதனின் உணவுத்தேவையை பூர்த்தி செய்கின்றன. இதே ஆட்டினத்தில் வரையாடு என்றொரு வகை உண்டு. தமிழ்நாடு அரசின் விலங்காக அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த வரையாடுகள் அரசின் நிதி ஒதுகீட்டிற்கும், பராமரிப்புக்கும் பிறகும் கூட எண்ணிக்கையில் குறைந்துகொண்டே செல்கின்றன. இது ஏன் என சிந்திப்பவர்களுக்கு அந்தக் கேள்வியிலுள்ள பித்தலாட்டம் புரியவரும்.
மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 2
பரிணாமமா? படைப்பா? இதை அறிவியலுக்கு எதிரான மனநிலையில் இருந்துகொண்டு; அவ்வாறு இருப்பதையே சரியானதென்று மதப் பிடிப்போடு இருப்பவர்கள் தங்களின் புரிதல்களை மீளாய்வு செய்ய வேண்டும் எனும் நோக்கத்தில் தான் அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து விட்டு தொடர்வது என முடிவு செய்திருந்தேன். ஆனால் கடந்த கட்டுரையின் எதிர்வினைகளில் காத்திரமான கேள்விகள் எதுவும் எழுப்பப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது. ஆனாலும் தொடர்கிறேன்.
குரங்கிலிருந்து பரிணமித்தவன் மனிதன் என்றால் குரங்கு தான் மனிதனுக்கு நெருக்கமான விலங்காக இருக்க வேண்டும். ஆனால் பன்றி தானே மனிதனுக்கு நெருக்கமான விலங்காக கூறுகிறார்கள்.
ஒரு மூன்றாம் தர அரசியல் வியாபாரி தன்னுடைய நிலை தவறானது என தெரிந்த பின்னரும் வீம்புக்காகவும் வறட்டுத்தனமாகவும் வாதம் செய்வதைப் போன்றது இது. மற்றெந்த விலங்குகளையும் விட மனிதனுக்கு நெருக்கமாக இருப்பது சிம்பன்சிகள் தான். 97 விழுக்காடு மரபணு ஒற்றுமைகளைக் கொண்டதாக மனிதனும் சிம்பன்சியும் இருக்கின்றன. எளிமையாகச் சொன்னால் சற்றே மனநலம் பிறழ்ந்த ஒரு மனிதனைக்காட்டிலும் சிம்பன்சிகள் புத்திக் கூர்மை உடையவை. உருவத்தில், உள்ளுறுப்புகளில், செயலில், உள்வாங்கும் திறனில், சமூக குடும்ப அமைப்புகளில் மனிதனுக்கு சிம்பன்சியைப் போல நெருக்கமான விலங்கு வேறொன்று இல்லை. இவை அனைத்தும் ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் மனிதனின் இதய வால்வுகள் மாற்று அறுவைச் சிகிச்சையின் போது பன்றி இதயத்தின் வால்வுகள் பயன்படுத்தப்படுகின்றன. 99 விழுக்காடு ஒற்றுமை எங்கே? ஒரு விசயத்தில் இருக்கும் ஒற்றுமை எங்கே? இந்த ஒன்றைக் கொண்டு மனிதக்கு பன்றியே நெருக்கம் என்று கூறுவார்களாயின், அவர்கள் அறிவியல் பார்வை ஏதுமற்ற வறட்டுவாதிகள் என்பதைத்தவிர வேறு பொருளொன்றுமில்லை.
குரங்குக்கும் மனிதனுக்கும் இடைப்பட்ட பரிணாம உயிரிகள் இருக்கின்றனவா?
இப்போது வாழ்ந்து கொண்டிருக்கவில்லை, ஆனால் பூமியில் வாழ்ந்திருக்கின்றன என்பதற்கு ஆதாரமான தொல்லுயிர் எச்சங்கள் பலவுண்டு. ஆண்ட்ரோபிதஸின், ஹோமோ எரக்டஸ், ஹோமோ செபியன்ஸ், ஹோமோ செபியன் செபியன்ஸ், நியாண்டர்தாலிஸ்ட், க்ரோமாக்னன் இதுதான் மனிதர்கள் பரிணமித்து வந்த பாதை. இதில் க்ரோமாக்னன் என்பது தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் மனித இனம், அதாவது நாம். இன்றைக்கு 30000 ஆண்டுகளுக்கு முன்புவரை நியாண்டர்தால்கள் வாழ்ந்திருக்கிறார்கள். எல்லா மனித இனங்களின் எலும்புகளும் தொல்லுயிர் எச்சங்களாக பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.
தனிமம் ஒருசெல் பலசெல் என படிப்படியாக நடந்தேறியதா? அல்லது தனிமம் உயிரினம் அப்படியே வார்த்தெடுக்கப்பட்டதா? உயிரி பல்கிப் பெருகும்போது தனிமங்களின் இனப்பெருக்கம் சாத்தியமா?
பரிணாமம் என்பது ஒருவகை உயிர் இன்னொரு வகை உயிராக மாறிச் செல்வது குறித்து விளக்குவதாகும். முதல் உயிர் எப்படி தோன்றியது என்பது குறித்து பரிணாமம் விளக்குவதில்லை. ஆனால் சூழலின் தாக்கத்தால் தான் செல்கள் ஒன்றிணைந்திருக்க வேண்டும். ஒருங்கிணைந்த செல்களே எளிய உயிர்களாகவும், அதுவே சிக்காலான கட்டமைப்பு கொண்ட உயிர்களாகவும் மாறின. நேரடியாக தனிமத்திலிருந்து உயிரினங்கள் வந்துவிடவில்லை. தனிமங்கள் இனப்பெருக்கம் செய்வதில்லை. உயிர்களுக்கும் தனிமங்களுக்கும் உள்ள வித்தியாசமே அது தான். ஆனால் இனப்பெருக்கம் எனும் பண்பு உயிரிங்களுக்கு மட்டுமே சொந்தமானதல்ல. இனப்பெருக்கம் வேறு வடிவங்களில் தனிமங்களில் இருக்கிறது. ஒரு பண்புடைய தனிமங்கள் புற வினைப்பாடுகளுக்கு உள்ளாகி தங்கள் பண்புகளை மாற்றிக் கொள்கின்றன. தனியாக இருக்கும்போது ஆக்ஸிஜனுக்கு இருக்கும் பண்பு நீரில் இல்லை அதுவே ஓஸோனில் அதனிலும் வேறுபடுகிறது. இந்த புதிய பண்புகளை அத்தனிமங்கள் எங்கிருந்து பெற்றன? குளோரின், சோடியம் இரண்டின் பண்புகளும் இல்லாமல் புதிதாக இருக்கிறது உப்பு. இது ஒருவகையில் எளிமையான இனப்பெருக்கம் போன்றது தான். இது உயிர்களிடம் நீடித்து இருந்தாக வேண்டிய தேவையுடன் இணைந்து மேம்பட்டதாகவும் சிக்கல் நிறைந்ததாகவும் ஆகியிருக்கிறது.
குரங்குதான் மனிதனாக மாறியது என்றால் இப்போது ஏன் எந்த குரங்கும் மனிதனாக மாறுவதில்லை?
ஏற்கனவே இதற்கு சுருக்கமாக பதிலளித்திருந்தாலும், இன்னும் சற்று விரிவாகப் பார்ப்போம். ஒரு விலங்கு பரிணமித்து இன்னொரு விலங்காக மாறுகிறது என்றால் அதற்கு மிக நீண்ட கால அவகாசம் தேவைப்படும். எடுத்துக்காட்டாக ஒன்றைப் பார்க்கலாம். காலில் இரண்டு குளம்புகளுடைய எருது ஒன்று இருக்கிறது. இந்த எருதுக்குப் பிறந்த குட்டி ஒன்றுக்கு டி.என்.ஏ படிகளில் பிரதியெடுப்புப் பிழையால் குழப்புகள் பிளவு படாமல் ஒட்டி பிறக்கிறது. இப்படியான பிழைகளை உலகில் அனேகமனேகம் பார்க்கலாம். இரட்டைக் குழம்புகளுடன் விரைந்து ஓடுவதற்கு சிரமப்படும் எருதுக்கூட்டத்தில் பிழையாக ஒட்டிய குழம்புடன் பிறந்த எருது அதன் உயிர் வாழும் தன்மைக்கு பாதகமில்லதிருக்கும் பிழையுடன் தொடர்ந்து உயிர் வாழ்கிறது. இந்த எருதுக்கு பிறக்கும் குட்டிகளுக்கு ஒட்டிய குழம்புடன் எருது பிறக்கும் என உறுதியாக கூற முடியாது. ஆனால் அதன் சந்ததிகளில் மீண்டும் பிறப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால் முதலில் ஒட்டிய குழம்புடன் பிறந்தது பிழைச் செய்தியென்றால் மீண்டும் பிறப்பது டி.என்.ஏ ஏணிகளில் பதியப்பட்ட செய்தியாகும். ஆக பல தலைமுறை கடந்து மீண்டும் ஒட்டிய குழம்புடன் பிறக்கும் எருது பிற எருதுகளைவிட பரிணாமத்தில் ஒரு எட்டு முன்னேறியதாக இருக்கும். எப்படியென்றால் பிளவுபட்ட குழம்புள்ள எருதைவிட பிளவுபடாத குழம்புள்ள எருது விரைந்து ஓடும் தன்மை கொண்டதாக இருக்கும். இப்போது இந்த எருதின் குட்டிகள் குழம்பு பிளவுபடாமல் பிறக்கும் என உறுதி கூற முடியாது. பிளவுபடாத குழம்பின் தன்மை டி.என்.ஏ செய்திகளில் தெளிவாக பதிவாகிவிடுவதால் தலைமுறைகளினூடாக தொடர்ந்து பிறக்கும் குட்டிகள் பிளவுபடாதா குழம்புடன் பிறப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகரித்துக் கொண்டே செல்லும். இதன்படி கோடிக்கணக்கான ஆண்டுகள் கடந்து பார்த்தால் அந்த இடத்தில் காலில் இரட்டைக் குழம்புடன் இருக்கும் எருதுகளும், ஒற்றைக் குழம்புடன் இருக்கும் எருதுகளும் தனித்தனியே இருக்கும். மட்டுமல்லாது ஒற்றைக் குழம்பு எருது இரட்டைக் குழம்பு எருதைவிட தாக்குவதிலும் தாக்கப்படுவதிலிருந்து காத்துக் கொள்வதிலும் விரைந்து செயல்பட முடிவதால், அந்த விரைந்த தன்மை அதன் உருவ அமைப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தி மாறுதலுக்குத் தூண்டும். இறுதியில் இன்னொருவகை எருதாக தனித்த விலங்காக இருக்கும். இப்போது இரட்டைக் குழம்பு எருதிலிருந்து பரிணமித்து வந்தது தான் ஒற்றைக் குழம்பு எருது என்பதற்கு என்ன ஆதாரம்? தப்பித் தவறி தொடக்கத்தில் ஒட்டிய குழம்புடன் பிறந்த எருது எதோ வகையில் தொல்லியிர் எச்சமாக கண்டெடுக்கப்பட்டால், அதை இரட்டைக் குழம்பு எருதுகளின் எச்சங்களுடன் ஒப்பிட்டு உயிருடன் இருக்கும் எருதுகளுடன் ஒப்புநோக்கி ஆய்வுகள் செய்து இரட்டைக் குழம்பு எருதிலிருந்து கிளைத்து ஒற்றைக் குழம்பு எருது வந்தது என்று கூறினால் அதை யூகம் என்று ஒதுக்குபவர்களை என்ன சொல்வது? அவர்கள் தங்கள் வாதங்களை நிரூபிப்பதாய் நினைத்துக் கொண்டு இப்போது ஏன் இரட்டைக் குழம்பு எருதுகள் ஒற்றைக் குழம்பு எருதுகளாக மாறவில்லை? என்று கேட்டு புளகமடையவும் வைப்பார்கள்.
அடுத்து நண்பர் ஆஷிக் தன்னுடைய பதிவின் சுட்டிகள் இரண்டைக் கொடுத்து இதற்குப் பதிலென்ன என்று கேட்டிருந்தார். இதைவிட அவர் கேள்விகளாக கேட்பது சிறப்பாக இருக்கும். தங்கள் கேள்விகளாக கேட்பது கூர்மையாக பதில் கூறுவதற்கும் உதவியாக இருக்கும். அந்த இரண்டு சுட்டிகளிலுமே பரிணாம மரம் தவறு என்று சில அறிவியலாளர்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இதைக் கொண்டு பரிணாமக் கோட்பாடே தவறு உணர்த்தும் விதமாக தன்னுடைய கட்டுரையை நகர்த்திச் செல்கிறார். மட்டுமல்லாது படைப்புக்கொள்கையே சரியானது என்று மறைபொருளாக உள்ளாடியிருக்கிறார்.
பொதுவாக மத நம்பிக்கையுடையவர்கள் மனிதனின் தோற்றம் குறித்து பேசுகையில் பரிணாமக் கோட்பாட்டில் இருக்கும் சின்னஞ்சிறு பிழைகளையும் கூட விடாமல் துருவி பாருங்கள் அங்கே ஒரு தவறு இருக்கிறது எனவே பரிணாமமே தவறு என்று வாதிடுவார்கள். ஆனால் படைப்புக் கொள்கையைப் பற்றி எந்த ஒரு மீளாய்வோ சிந்தனையோ செய்வதில்லை. வேதத்தில் இருக்கிறது ஆகையினால் அதுதான் சரி என்பதைத்தாண்டி எதையும் செய்வதில்லை. நண்பர் ஆஷிக்கும் இதில் விலக்கில்லை.
இது என்றென்றைக்குமானது எனவே இதில் ஒரு எழுத்தோ காற்புள்ளியோ கூட மாறுவதில்லை எனும் வேத ஜம்பத்தைப் போலவே அறிவியலையும் கருதிக் கொள்கிறார்கள். அறிவியல் தொடர் ஆய்வுகளுக்கு உட்பட்டது. பரிணாம விசயத்தில் டார்வினே, “நான் அமைதியுறும் அளவிற்கு சான்றுகள் எனக்கு கிடைக்கவில்லை. தொடர்ந்து இதில் ஆய்வு செய்பவர்கள் முனைப்புடன் அவற்றை கண்டடையட்டும், தவறு களைந்து திருத்தட்டும்” என்கிறார். அந்த வகையில் பரிணாமவியலில் திருத்தங்கள் நிகழ்ந்திருக்கின்றன. புதிய சான்றுகள் கண்டடையப்பட்டிருக்கின்றன. விமர்சனங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. சில அறிவியலாளர்கள் பரிணாமவியலுக்கு எதிர்க் கருத்து கொண்டிருக்கிறார்கள். இவைகளெல்லாம் அறிவியலுக்கு உட்பட்டவை. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விசயம் பரிணாம்வியலை விமர்சிக்கும் எந்த அறிவியலாளராவது படைப்புக் கொள்கையை ஏற்றுக் கொண்டிருக்கிறார்களா? என்பது தான்.
இப்போது சொல்லப்பட்டிருக்கும் பரிணாம மரம் தவறு என்றால் சரியான தகவல் பெற்று திருத்தம் செய்து புதிய பரிணாம மரம் அமைக்கலாம் தவறில்லை. பரிணாமக் கொள்கையே தவறு என்று நாளை புதிய கொள்கை வரலாம், அது பரிணாமக் கொள்கையைவிட சிறப்பாக இருப்பில் அறிவியல் உலகம் அதை ஏற்றுக் கொள்ளும் அதிலும் தவறில்லை. ஆனால் இப்போது பரிணாமக் கொள்கையைவிட சிறப்பாக மனிதனின் தோற்றத்தை விளக்கும் வேறொரு கொள்கை உலகில் இல்லை. மட்டுமல்லாது இதுவரை செய்யப்பட்டிருக்கும் ஆய்வுகள் பரிணாமக் கொள்கை சரி என்பதையே நிரூபிக்கின்றன. அலோபதி மருத்துவ முறை பரிணாமவியலை அடிப்படையாக கொண்டது தான். மனித உடற்கூறியல் உள்ளிட்டு மருந்தாய்வு நிறுவனங்கள் வரை பரிணாமவியலை ஆதாரமாகக் கொண்டே செயல்படுகின்றன. ஜார்ஜ் நடால் தொடங்கி பல்வேறு உயிரியல் ஆய்வாளர்கள் பரிணாமவியல் சரிதான் என்பதை நிரூபித்திருக்கின்றனர். மரபணு செய்திப் பரிமாற்றப் பிழைகளால் ஊனத்துடனோ கூடுதல் உறுப்புடனோ பிறக்கும் குழந்தைகளும் விலங்குகளும் பரிணாமவியலின் சான்றுகளே. எளிமையாக சொல்வதென்றால் உழைக்காமல் இருப்பவன் கை மென்மையாய் இருப்பதும் உழைப்பாளியின் கைகளில் காய்ப்பேறிக் கிடப்பதும் கூட பரிணாமவியல் சரி என்பதற்கான எல்லோருக்கும் தெரிந்த சான்று.
இதற்கு நேர் எதிராக படைப்புக் கொள்கை சரிதான் என்று எந்த அறிவியலாளன் கூறியிருக்கிறான்? என்னென்ன ஆய்வுகள் செய்யப்பட்டிருக்கின்றன அந்தத்துறையில்? எதாவது நிரூபணம் உண்டா படைப்புக் கொள்கை சரிதான் என்பதற்கு? ஒன்றுமில்லை. மதவாதிகள் செய்வதெல்லாம் பரிணாமவியலில் நேரும் பிழைகளை சுட்டிக் காட்டுவதைத்தான். அதன் மூலமே படைப்புக்கொள்கையை தக்கவைத்துக் கொண்டதாய் ஒரு சுய ஆறுதல். வேறொன்றுமில்லை.