08152022தி
Last updateபு, 02 மார் 2022 7pm

புலிகளின் ஒரு பேப்பர் எதைச் சொல்லுகின்றதோ, அதைத்தான் மகிந்த செய்தார் செய்கின்றார்

மனித படுகொலைகளுக்கும், மக்கள் மேலான வன்முறைக்கும், புலிகளா இலங்கை அரசா வழிகாட்டி என்று கேட்டு பட்டிமன்றம் நடத்தலாம். ஒன்றையொன்று மிஞ்சிய, மிஞ்சுகின்ற மனிதவிரோதிகள்தான் இவர்கள். புலிகளின் வன்னித் தலைமையின் அழிவின்பின், புலத்துப் புலிகள் அதை நிறுத்திவிடவில்லை. வன்முறையை ஏவுகின்றனர். அதை நியாயப்படுத்தியும், வன்முறையை தொடரும்படியும் புலிகளின் "ஒரு பேப்பர்" எழுதுகின்றது. பார்க்க "ஒரு பேப்பர்"ரை.

 

 

ஆக மகிந்தா அரசு மட்டும் எம் மக்களின் எதிரியல்ல. மக்களின் சுதந்திரத்தை நசுக்கக் கோரும், ஒடுக்கக் கோரும் புலியும் தான், தமிழ் மக்களின் சுதந்திர மூச்சைக் கொன்று வருகின்றது. தமிழ்மக்களின் அவலம் தொடர, அவர்கள் சுதந்திரமாக போராட முடியாதவாறு புலிப் பாசிசக் கும்பலும் தான் மகிந்தவுக்கு நிகராக ஆட்டம் போடுகின்றது.

தமிழ் மக்களை பலியெடுத்து, பலி கொடுத்து தப்பிப் பிழைக்க முனைந்த கூட்டம் தனது சொந்தப் புதைகுழியில் தானே பலியானது. எஞ்சிய கூட்டம் மக்கள் பணத்தைச் சுருட்டிக் கொண்டு கொலைவெறியுடன் ஆட்டம் போட்டு அடிக்கின்றது, மிரட்டுகின்றது. மகிந்த குடும்பம் எதை இலங்கையில் செய்கின்றதோ, அதை புலத்தில் செய்யக் கனவு காண்கின்றது.

மகிந்தவோ இலங்கையில் சிங்கக்கொடி மட்டும் தான் இருக்க முடியும் என்கின்றார். புலத்தில் புலிகள் புலிக்கொடி மட்டும் தான் இருக்க முடியும் என்கின்றனர். இதுவல்லாத அனைத்தையும் அடித்து நொருக்கு, கொன்று குவி என்கின்றனர்.

இந்த அடிப்படையில் அண்மையில் லண்டனில் தாக்கிய புலிகள், இந்த வன்முறை சரியானது என்று தங்கள் 'ஒரு பேப்பர்" பத்திரிகை மூலம் மிரட்டியுள்ளனர். இது போல் தொடர்ந்து தாக்குவதன் மூலம், தாமல்லாத அனைவரினதும் வாயை மூடிவிட முடியும் என்று பிரகடனம் செய்துள்ளனர். இதுதான் புலி. இதுதான் அந்த வர்க்கத்தின் அரசியல் வரம்பு.

இதைத் தானே இலங்கையில் மகிந்த குடும்பம் செய்கின்றது. புலத்தில் புலிக் கும்பல் செய்கின்றது. வன்னியில் புலித்தலைமை இருந்த காலம் வரை, இன்று மகிந்த அரசு எதைச் செய்கின்றதோ அதைத்தான் புலியும் செய்தது. முள்ளிவாய்காலுக்குப் பிந்தைய அரச படுகொலைகள் போல் புலியும் பலவற்றை நடத்தி முடித்திருக்கின்றது. முல்லைத்தீவு இராணுவ முகாமை புலிகள் 1995 களில் கைப்பற்றிய போது, 1500 முதல் 2000 இராணுவ வீரர்களில் ஒருவரைக் கூட உயிருடன் தாம் பிடிக்கவில்லை என்று கூறி அவர்களை படுகொலை செய்தனர். அதே மண்ணில்தான் இன்று அரசு அதையே செய்தது.

முள்ளிவாய்க்காலில் புலிக்கொடியைக் கீழே போட்டுவிட்டு, தங்கள் புனித சயனட்டையும் எறிந்து விட்டு, வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த புலித்தலைமைக்கு எது நடந்ததோ அதைத்தான் புலிகள் தம் வாழ்நாள் முழுக்கச் செய்தனர். அரசு இதுவரை யார் தம்மிடம் கைதியாக இருக்கின்றனர் என்ற விபரத்தை, புலிகள் போல் தான் வெளியிடவில்லை. கொலை வெறியுடன் கொன்று குவித்த கூட்டம் இது.

இப்படி இந்தக் கொலைகாரக் கூட்டம் தான், அரசு – புலி என்ற அடையாளங்களுடன், கொலை வெறிபிடித்து கொக்கரிக்கின்றனர். தங்கள் தலைமையையும், மக்களையும் கொன்று குவித்த அரசின் செயல் போல், புலிகள் அல்லாதவர்களை ஒடுக்கக் கோருகின்றது "ஒரு பேப்பர்".

இந்த நிலையில் புலிகளுடன் தேன்நிலவை நடத்துகின்றனர் திடீர் இடதுசாரியப் பன்னாடைகள். புலிகள் திருந்திவிட்டார்கள் என்றும், புலித் தலைமையின் ஒரு பகுதி இது போன்றவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், புலிக்கு உள்ளே சென்றுதான் புலியைத் திருத்தி தமிழ் மக்களை வழிக்கு கொண்டு வரமுடியும் என்றும் கூறிக்கொண்டு, நாயாக அவர்களை நக்கிக் கொண்டு அதன் பின்னால் வரும்படி அழைக்கின்றனர்.

புலி என்பது ஒரு வர்க்கத்தின் அரசியல் என்பதையும், அந்த வர்க்கத்தின் வன்முறை தான் புலியின் நடத்தை என்பதையும் மறுத்து, ஏதோ வர்க்கம் கடந்த தவறு என்று கூறுகின்ற பிழைப்புவாத புரட்டைச் செய்கின்றனர். வர்க்கமற்ற தேசியத்தையும், புலிக்கேற்ற பிரிந்துபோகும் சுயநிர்ணயம் என்று சுயநிர்ணயத்தையும் திரித்துக் கொண்டு இடதுசாரி வேஷம் போட்டுக்கொண்டு புலியுடன் கூடிக் குலாவுகின்றனர்.

புலிக்குள் வர்க்கம் கடந்த நல்லவர்கள், வல்லவர்கள், நேர்மையானவர்கள், தேசியவாதிகள் இருப்பதாக கூறிக்கொண்டும், காட்டிக்கொண்டும் நடத்துகின்ற பித்தலாட்டம் அரசியலாகின்றது. இந்த இனியொரு-புதியதிசை கூட்டம் தாங்கள் கூடிக்குலாவும் புலியுடன் சேர்ந்து, நடந்த வன்முறையைக் கூட்டாகக் கூடக் கண்டிக்கவில்லை. புலியின் "ஒரு பேப்பரின்;" வன்முறையை தொடர்ந்து நடத்தக் கோரும் நிலையில், அந்த அடாவடித்தனத்தை புலிக்குள் உள்ளவர்களோ, இனியொரு-புதியதிசை கூட்டமோ தனியாகக் கண்டிக்கவில்லை. புலியின் "ஒரு பேப்பரின்;" மிரட்டலை, செய்தியாகக் கூட இனியொரு வெளியிடவில்லை.

இதற்குள் ஊடக தர்மம் பற்றியும், ஊடக சுதந்திரம் பற்றியும் ஊருக்;கு வகுப்பு எடுக்கின்றனர் தீபம் நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு நடத்திய தாக்குதலை, தீபம் தொலைக்காட்சி கண்டிக்கவில்லை. இந்த விவாதங்களில் இனியொரு-புதியதிசை யுடன் தேன்நிலவு நடத்தும் புலிகள் கூட கண்டிக்கவில்லை.

இப்படி புலிக்கு மாற்றுகளற்ற அரசியல் தளத்தில், வன்முறையைத் தொடரும்படி புலிகளின் "ஒரு பேப்பர்" அறை கூவல் விடுத்துள்ளது. புலத்தின் எதார்த்தம் இதுதான். இதை எதிர்த்து போராடாது, புலியுடன் நடத்தும் வர்க்க இணக்க அரசியல் புலி வன்முறை அரசியலுக்கு உட்பட்டதுதான்.

 

பி.இரயாகரன்

03.07.2011


பி.இரயாகரன் - சமர்