அண்மையில் இலண்டனில் புலிகள் வன்முறை ஓன்றை அரங்கேற்றினர். இந்த வன்முறை, புலி அரசியல் நடத்திய வன்முறையல்ல என்பது தான், புலியை நம்பி திடீர் இடதுசாரிய அரசியல் செய்யும் கூட்டத்தின் அரசியல் விளக்கமாகும். நடந்த வன்முறையை "காடையர்கள்" வன்முறையாக. "புலி ஆதாரவாளர்கள் செயல்பாட்டாளர்களின்" வன்முறையாக, "புலி வால்களின்" வன்முறையாக சித்தரித்தனர். இதை மேலும் நுட்பமாக திரித்து "மீண்டும் வன்முறை" என்று கோயபல்சுகள் பாணியில் புளுகுகின்றனர்.

இது புலி அரசியல் சார்ந்த வன்முறை அல்ல, புலித் தலைமை இதற்கு எதிராக இருக்கின்றது என்ற பாணியில் இந்த அரசியல் வன்முறையை திரித்தனர். புலிகள் இந்த வன்முறையைக் கண்டிக்காத நிலையில், வன்முறைக்கு காரணமான தீபம் தொலைக்காட்சி உட்பட எதுவும் கருத்துச் சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு கண்டிக்காத நிலையில், இடதுசாரிய திடீர் கூட்டம் இதைத் திரித்து வக்கரிக்கின்றனர். அடிவாங்கியவனை குற்றவாளியாக்கியே, தங்கள் இணையப் பின்னோட்டத்தில் கடித்துக் குதறுகின்றனர்.

புலிக்கேற்ற இடதுசாரியம் புலித்தாக்குதலை திரித்ததுமல்லாமல், வன்முறைக்கு எதிரான போராட்டத்தை தமிழ்தேசியத்துக்கு எதிரானதாகவும் காட்டினர். இதன் அடிப்படையில் வன்முறையை திரித்து கருத்தை முடக்கியவர்கள், வன்முறைக்கு எதிராக போராடுவதை அரசு சார்பானது என்றனர். இனியொருவும் புதிய திசையும் இந்த அடிப்படையில் அங்குமிங்குமாக புலியின் வன்முறையை, புலி அல்லாதவர்களின் வன்முறையாக காட்டும் அரசியல் சதிகளில் ஈடுபட்டனர். புலித் தமிழ்த் தேசிய அரசியல் என்பது இந்த வன்முறையை உள்ளடக்கிய, அதன் அரசியல்; அடித்தளத்திலானது. இந்த வன்முறையின்றி புலியில்லை. இப்படியிருக்க இதை மறுத்து, அதைத் திரித்துக் கண்டித்தனர். இந்த வன்முறைக்கு எதிரான போராட்டத்தை, பொதுப் புலி உளவியலைச் சார்ந்து நின்று தமிழ்தேசியத்துக்கு எதிரானதாக, அரசு சார்பானதாக திரித்து முத்திரை குத்தி அறிக்கைகள் வெளியிட்டனர்.

இடதுசாரியத்தின் பெயரில் இப்படியும் புலி அரசியல் அரங்கேறுகின்றது. புலியைப் பயன்படுத்தி வியாபாரிகள், பிழைப்புவாதிகள், சமூக விரோதிகள் மட்டும் பிழைக்கவில்லை. திடீர் இடதுசாரியம் பேசிய, திடீர் தமிழ்தேசியம் பேசிய கூட்டம் கூட, புலியில் பின் பிழைக்கும் சந்தர்ப்பவாத அரசியலை இன்று செய்கின்றனர். பிரிந்து போவதை முன்வைத்து பேசுவதுதான் சிறுபான்மை இனத்தின் சுயநிர்ணயம் என்று, மார்க்சியத்தையே திரித்துக் காட்டும் இடதுசாரிய கூட்டமல்வா இந்த புலிக் கூட்டம். புலியின் தமிழ்தேசிய அரசியலை பாதுகாக்கும் அரசியலை செய்கின்றனர். புலியின் தமிழ்தேசிய அரசியல் தமிழ் மக்களுக்கு எதிரானது. அது தமிழ்மக்களின் சொந்த விடுதலைக்கு எதிராக, தன்னை முன்னிறுத்தி நிற்கின்றது. தான் அல்லாத எதையும் அது அனுமதிப்பதில்லை.

இந்த நிலையில் இதை எதிர்த்து இடதுசாரியம் போராட வேண்டுமே ஓழிய, அதை ஆதரித்து அதைப் பாதுகாப்பது என்பது மற்றொரு முள்ளிவாய்க்காலுக்கு வழிகாட்டுவதுதான். இதைத்தான் இடதுசாரியத்தின் பெயரில், தனிப்பட்ட நபர்கள் தங்கள் சொந்தப் பிழைப்பு சார்ந்து செய்கின்றனர்.

புலி அரசியல் ஒரு வர்க்கத்தின் அரசியல் என்பதை மறுத்து, அதை ஒரு இனத்தின் அரசியலாகக் காட்டி, பிழைக்கும் திடீர் இடதுசாரியத்தை முன்தள்ளுகின்றனர். இந்த புலியின் வன்முறை சார்ந்த அரசியல் நடத்தைகளை, தனிப்பட்ட நபர்களின் செயலாகக் காட்டுவது முதல் அதை உதிரி வர்க்கத்தின் செயல் சார்ந்த ஒன்றாக திரித்துக் காட்டிப் பிழைக்க முனைகின்றனர்.

நடந்தது தமிழ் தேசியத்தின் பெயரிலான புலி அரசியல் சார்ந்த அதன் வன்முறை. அதை திரித்து "புலி ஆதரவு காடையர்கள்" "புலி வால்கள்" "புலி ஆதரவாளரும் செயற்பாட்டாள"ரின் வன்முறையாகக் காட்ட முற்படுகின்றனர். புலி அரசியலின் அரசியல் சாரம் தான் இது என்பதை இது மறுக்கின்றது. அத்துடன் "மீண்டும் தொடரும் வன்முறை" என்பதன் மூலம், புலிகளின் தொடர்ச்சியான வன்முறையைத் திரித்து அதை பாதுகாத்து மறுக்கின்றனர். வன்முறை திடீரென புலி அல்லாத அரசியல் தளத்தில் மீண்டும் உருவானதாக, தங்கள் திடீர் இடதுசாரி பிழைப்புத்தனத்துக்கு ஏற்பக் கூறுகின்றனர்.

அண்மைக் காலத்தில் எமது அமைப்பு மூன்று முறை பகிரங்கமான வன்முறையை எதிர் கொண்டது ஒருபுறம் இருக்க, புலி குழுக்களுக்குள் பல நூறு வன்முறைகள் தொடர்ச்சியாக நடந்திருக்கின்றது. இதே போல் பொதுமக்கள் மிரட்டப்பட்டு இருக்கின்றனர். ஆக "மீண்டும் தொடரும் வன்முறை" என்று திடீர் இடதுசாரிய புரட்டு, புலியை அண்டிப் பிழைக்கும் அவர்களது திடீர் அரசியலுக்கு உட்பட்டது தான்.

இலண்டனில் புலிகள் நடத்திய வன்முறையை, இடதுசாரியம் மாற்றுக்கருத்தளார்கள் என்று கூறிய கூட்டம் அதை முதலில் திரித்துக் காட்டி அதைக் கண்டித்தது. புலியை அல்ல. புலியைப் பாதுகாத்தபடி வன்முறையில் ஈடுபட்டவர்களைக் குறிப்பாக தங்கள் அரசியல் அடைமொழிக்குள் அடக்கிக் கண்டித்தனர்.

இந்த வன்முறை தான் புலி அரசியல் அடிப்படையாக இருக்க, இதை புலியல்லாத அதன் ஆதாரவாளர்கள் நடத்தையாக காடையர்களின் செயற்பாடாக வால்களின் செயல்பாடாக அதைத் திரித்தனர். புலி, புலித் தலைமை அப்படியல்ல, அதாவது புலி அரசியல் இதுவல்ல என்ற எல்லைக்குள் நின்று கண்டனங்கள் அறிக்கைகள்.

மறுபக்கத்தில் இதற்கெதிரான ஓரு கண்டனக் கூட்டத்தை நடத்த முற்பட்ட போது, இதை நடத்தக் கூடாது என்று எதிர்த்தனர். அதற்கு அவர்கள் கூறிய காரணம் அரசுக்கு எதிரான போராட்டத்தை இது பலவீனப்படுத்தும் என்றனர். அதேநேரம் மற்றொரு தரப்பால் இந்த வன்முறையை எதிர்த்து, சம்பவம் நடந்த இடத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்திய முயற்சியை அரச ஆதரவாளர்கள் அரசுக்கு ஆதரவாக நடத்தவுள்ள ஆர்ப்பாட்டமாக, புலிக்கு ஆதரவாக புதிய திசை முத்திரை குத்திய முன்கூட்டிய ஒரு அறிக்கையை வெளியிட்டது.

ஆனால் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் வெளியிட்ட துண்டுப்பிரசுரம், அரசுக்கு ஆதரவாக இருக்கவில்லை. புதியதிசைகள் முதல் மே 18 வரை வெளியிட்ட கண்டனங்கள் மற்றும் துண்டுப்பிரசுரத்தைவிட, அரசியல் ரீதியாக முன்னேறிய வகையில் இந்த வன்முறை பற்றி அரசியல் ரீதியாக அணுகியிருக்கின்றது. இப்படி புலிப் பாணியில் அரசு சார்பானதாக கட்டமைத்துக் காட்டுகின்ற புலி அரசியல்.

புலியை பூனையாகக் காட்ட, புலி அரசியல் இந்த வன்முறை சார்ந்ததல்ல என்று கூற, நடந்ததை புலி அல்லாதவரின் செயலாகக் காட்டிப் பிழைக்கும் இடதுசாரியம் புலியை அதன் அரசியல் நெருக்கடிகளில் இருந்து பாதுகாக்கின்றது. இந்த திடீர் இடதுசாரிகள் கூறிய காடைத்தனத்தின் அடிப்படையில் கூட புலிகள் இந்த வன்முறையைக் கண்டிக்கவில்லை என்பதையும், இந்த இடதுசாரிகள் கூடி நிற்கும் புலிக் கூட்டம் கூட இதைக் கண்டிக்கவில்லை என்பதையும், இவர்கள் கருத்துக் கூறும் தீபம் தொலைக்காட்சி இதைக் கண்டிக்கவில்லை என்பதையும் வைத்து, இவர்களின் திரிபையும் திசைதிருப்பலையும், அரசியல் யோக்கியத்தையும் நாம் மதிப்பிட முடியும்

பி.இரயாகரன்

29.06.2011