அரசு மட்டும் தாமல்லாதவரை கொல்லவில்லை, தாக்கவில்லை. புலியும் அதைத் தான் செய்தது, செய்கின்றது. முள்ளிவாய்க்கால் முடிந்தபின் ஐயோ என்று சொல்லிப் புலம்பிய புலிகள், இனி தாங்கள் அப்படிச் செய்ய மாட்டோம் என்று வேஷம் போட முனைய, இடதுசாரி வேஷம் போட்டவர்களும் கூடி ஆமாம் போட்டனர்.

 

வலதும் இடதுமற்ற தமிழ் தேசிய அரசியல் அனுசரணையுடன் தான், 23.06.2011 அன்று இலண்டன் வீதியில் கொலைவெறி ஆட்டம் போட்டது புலிக் கூட்டம். இரும்புக் கம்பியும், போத்தலுமாக, கொலைவெறியுடன் அவர்கள் பாய்ந்தனர். முள்ளிவாய்க்கால் வன்னியில் மட்டுமல்ல, இலண்டன் வீதியிலும் தான் நிகழ்ந்தது . எமது அமைப்பு (புதிய ஜனநாய மக்கள் முன்னியின் தோழர்களுக்கு) இதற்கு முன்பாகவே, நோர்வே – பாரிஸ் – இலண்டன் வீதிகளில், இது போன்ற வேறுபட்ட வன்முறையை எதிர்கொண்டிருந்தது.

ஆம் மேற்கில் கூட,தமிழர்களாகிய எமது கருத்துக்கு இன்னும் சுதந்திரம் கிடையாது. இப்படியிருக்க மகிந்த குடும்பம் தலைமைதாங்கி நடத்திய போர்க்குற்றம் பற்றிப் பேசுகின்ற வெட்கக்கேடான அரசியலுக்கு மட்டும், இங்கு குறைச்சல் கிடையாது. 07.06.2011 தீபம் தொலைக்காட்சியில் புலிக்கொடி பிடிப்பது சரியா? பிழையா? என்ற விவாதம் நடந்தது. இந்த விவாதம் முடிந்த பின், புலிகள் சார்பாக கதைத்தவர், ராஜ் என்பவரை அதே விவாத அரங்கில் வைத்து துரோகி என்றார். இப்படி துரோகியாக்கிய ராஜ்சைத்தான் 23.06.2011 திட்டமிட்ட வகையில் புலிகள் தாக்கினர். இதற்காக வீதியில் முன்கூட்டியே கொலை வெறியுடன் காத்திருந்தார்கள்.

இந்த நிகழ்ச்சியோ புலியைப் பாதுகாக்க, புலிகளின் வேறுபட்ட கோஸ்டிகளின் அரசியல் விருப்பு வெறுப்புகளை உள்ளடக்கிய தலையங்கத்திற்குள் தான் தீபம் நடத்தியது. அத்துடன் இந்த நிகழ்ச்சி தயாரிப்பு முறைமையே, வன்முறையை அடிப்படையாக கொண்டது. புலி அல்லாத ஆனால் அரசு உட்பட்ட அனைவரையும் ஓரே எதிரணியாக அமர வைத்து, அவர்கள் அனைவரையும் புலியின் துரோகியாக முத்திரை குத்திக் காட்டுவதில் இருந்து இந்த வன்முறை கருதரங்கம் தொடங்குகின்றது.

இந்தச் சம்பவத்தின் பின், இது பற்றி எதுவும் பேசாத தீபம் தொலைக்கட்சியின் ஊடக தர்மம் மௌனம் சாதிக்கின்றது. தீபம் தொலைக்காட்சியின் ஊடக உரிமைக்காக குரல் கொடுத்தவர்கள், இந்த மௌனத்தைக் கண்டிக்காது கள்ள மௌனம் சாதிக்கின்றனர். இப்படியெல்லாம் சந்தர்ப்பவாத அரசியல் எங்கும் தாராளமாக நடைபெறுகின்றது.

இந்தத் தாக்குதல் அரங்கேறிய பின், இதைக் கண்டிப்பதாகக் கூறிக் கொண்டு திசைதிருப்ப நடத்தும் தாக்குதல், நடந்த தாக்குதலைவிடக் கொடுமையானது, கொடூரமானது.

1. மகிந்த அரசு தான் இதை கம்சா மூலம் செய்தார் செய்வித்தார் என்றும், ஏன் இதை அவர்கள் செய்து இருக்கக் கூடாது என்றும் ஒரு கூட்டம் வக்கரிக்கின்றது. இப்படி இதற்குள் முகம் தெரியாத மூஞ்சைகள் கதைகளை கட்டவிழ்க்கின்றார்கள்.  இப்படி கூறி புலிகள் இதைப் போன்றவற்றை செய்யாத, அப்பளுக்கற்ற அப்பாவிகள் என்று கதை சொல்ல முற்படுகின்றனர்.

2. இது போல் மற்றொரு தரப்பு தாக்கியவரை புலிகளின் ஆதரவாளர், அது சார்ந்த செயற்பாட்டாளர் என்று கூறி இதை திசை திருப்ப முற்படுகின்றனர். இது புலியின் அரசியலல்ல என்று, இதன் மூலம் கதை சொல்ல முற்படுகின்றனர். இந்த எல்லைக்குள் இதை பூசி மெழுகுகின்றனர். உணர்ச்சி வசப்பட்ட புலி ஆதரவு நடத்தையாக, அது சார்ந்த செயற்பாட்டாளர்களின் உதிரி நடவடிக்கை என்றும் சொல்லாமல் சொல்லும் அரசியல் கேவலத்தை அரங்கேற்றுகின்றனர். ஆக தாம் கூட்டு அரசியல் நடத்தும் புலித் தலைமை அப்படியல்ல, அதன் ஆதரவாளர்கள் தான் அல்லது அதன் மாற்றுக் குழுதான் இதை செய்ததாக புனைந்து காட்ட முனைகின்றனர். இப்படி புலத்துப் புலித் தலைமையுடன் கூடி சந்தர்ப்பவாத அரசியல் நடத்தும் இடதுசாரிகள் என்று கூறிக் கொள்ளும் கூட்டம், இப்படி இதைக் கட்டவிழ்த்துக்  கண்டிக்கின்றது. யார் புலி, யார் ஆதரவாளன் என்பதை கருத்து தளத்தில் இருந்து வன்முறை வரை, அரசியல் நீக்கம் செய்த அரசியல் அடித்தளத்தில் இருந்து புலி அரசியலை நியாயப்படுத்தப்படுகின்றனர். புலி அரசியலை மறுக்க புலி ஆதரவாளனின் கருத்து, நடத்தை என்பதே, இதன் பின்னுள்ள இவர்களது மைய அரசியல் சாரமாகும்.

இப்படிக் கண்டிப்பதில் கூட வன்முறைக்கு ஆதரவான அரசியல் அரங்கேறுவதுடன், வலதுசாரிய தேசியத்துக்கு குடை பிடிப்பு. வலது இடதுமற்ற சூனியத்தை கொண்டு அரசியல் சந்தர்ப்பவாதம். புலி அரசியலை மறுத்து நிராகரிக்க வேண்டிய தருணத்தில், அதை அனுசரித்து அதன் தயவில் அரசியல் நடத்தும் அரசியல் தான் மீண்டும் மீண்டும் அரங்கேறுகின்றது. கருத்தாடல் என்ற பெயரில்,  தமிழ் மக்களின் அரசியலுக்கு புதை குழி தோண்டுகின்றனர்.

தமிழ் மக்களின் உண்மையான விடுதலைப் போராட்டத்தை 80 களின் ஆரம்பத்தில் இருந்து அழிக்கத் தொடங்கியவர்கள், 2009 முள்ளிவாய்க்காலுடன் தங்கள் கதையையே முடித்தனர். இது மட்டுமல்லாது தமிழ்மக்களின் சுயநிர்ணயத்தை அடகு வைத்தவர்கள், தாம் தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடுபவர்கள் என்று கூறிக் கொண்டு அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களிடம்  அதைக் காட்டிக் கொடுத்தனர், கொடுக்கின்றனர். பிரிவினை தான் சுயநிர்ணயம் என்று கூறிக் கொண்டு, சிங்கள மக்களை தமிழ் மக்களின் எதிரியாக்கினர். மொத்தத்தில் மனிதத்தைப் புதைத்தனர்.

இப்படி மக்களுக்கு துரோகம் செய்த, செய்கின்ற கூட்டம் தான், இன்று தங்கள் வன்முறை மூலம் அதைத் தொடருகின்றனர். 80களில் இருந்து இன்று வரை தமிழ் புத்திஜீவிகளையும், மாற்றுக் கருத்துக் கொண்டோரையும் அழித்தொழித்தவர்கள், சுயநிர்ணயம் என்றால் பிரிவினை என்று கூறி சிங்கள மக்களையும் துரோகி என்ற அரசியல் வரையறைக்குள் எதிரியாக்கினர். சுயநிர்ணயம் என்றால் பிரிவினை என்ற அரசியல் வரையறைதான், குறுந்தேசியத்துக்கான பாசிச அரசியல் அடிப்படையாகும்.

இதன் பின்னணியில் தான் எமது மக்களை பணயக் கைதிகளாக்கி யுத்தமுனையில் நிறுத்தினர். எந்த மக்களுக்காக போராட புறப்பட்டதாக  கூறினரோ, அந்த மக்களை தாமே பலி கொடுத்து கொன்றொழிக்க  உதவினர். இப்படி தாங்கள் தமிழினத்துக்கு செய்த துரோகத்தை மூடி மறைப்பதற்காக, புலத்தில் இயங்கும் புலிகள் மீண்டும் தியாகிகள், துரோகிகள் என்ற தங்கள் அரசியலைத் தொடர்ந்து முன்னெடுக்கின்றனர்.

மாற்றுக் கருத்தை ஒரு போதும் அங்கீகரிக்காத இந்தக் கூட்டம், வீதியில் வைத்து தாக்குகின்றது. 2009ம் ஆண்டிற்கு பிற்பாடு புதிய ஜனநாயக மக்கள் முன்னணியை மூன்று தடவைகள் தாக்க முற்பட்டனர். டென்மார்க்கில் ஒரு பல்கலைக்கழக மாணவியின் ஆய்வுக்கட்டுரையை கூட மாற்றி எழுதும்படி மிரட்டினர்.  தீபம் தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் அனசை மிரட்டுகின்றனர். இப்படி பற்பல சம்பவங்கள்.

அவர்கள் இதன் மூலம் கூறுவது, மக்களைத் தொடர்ந்து பார்வையாளர்களாக இருக்கும்படி தான். மந்தையாக தலையாட்டும்படி. இதைத்தான் இந்தக் கூட்டம் தன் வன்முறை மூலமும் கோருகின்றது. இதை ஒரு கணம் நீங்கள் சிந்தித்துப் பாருங்கள்.

எமக்கு சுதந்திரம் தேவை என்றால் நாம் தான் போராடிப் பெறவேண்டும். இதனால் உண்மைகளை தெரிந்து கொள்ளவேண்டி உள்ளது. மாறாக ஒரு சிலர் போராடி எமக்கு சுதந்திரம் வாங்கித் தருவதற்கு, இது கடையோ அல்லது சந்தியில் விற்கும் ஒரு பொருளோவல்ல. மக்களாகிய நாம் எமது விடுதலையை நாமே வென்றெடுக்க வேண்டும். மந்தைகளாக நாங்கள்  வாழ, மற்றவன் இதைப் பெற்றுதர முடியாது. முதலில் எமது போராட்டத்தில் உண்மையான பங்காளர்களாக மாற வேண்டும்.

இதைத் தடுக்கவே தொடரும் வன்முறையும், மிரட்டல்களும். இது எந்தவிதத்தில் இன்று வெளிப்பட்டாலும் அதைக் கண்டிக்க முன்வாருங்கள். இதைத் தொடர்ந்து அனுமதிக்காதீர்கள். பார்வையாளர்களாக இருப்பதை விடுத்து பங்காளியாக மாறுங்கள்.

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

(துண்டுப்பிரசுரம் 24.06.2011)


www.ndpfront.com www.tamilarangam.net www.ndpfront.net

www.tamilcircle.net http://kalaiy.blogspot.com/