தனது தொடர்ச்சியான பாரிய குற்றங்களை மறைக்க முனையும் அரசு, உளறத் தொடங்கியுள்ளது. நடந்தவற்றை சுயாதீனமாக விசாரிக்க மறுக்கும் அரசு, உண்மையைப் புதைக்க புலம்புகின்றது. அனைத்தையும் பொய், புனைவு என்று இட்டுக்கட்டி மறுக்கும் அரசு, தன் குற்றத்தை மறைக்க தன்னைக் குறுக்கி வன்முறை கொண்ட இராணுவ வடிவமெடுத்து வருகின்றது.

நடந்ததை மறுக்க, மறைக்க முனைந்த நிலையில், புதிய இரண்டு சர்ச்சைக்குரிய தகவல்களை அரசு வெளியிட்டுள்ளது.

 

 

 

1. பிரபாகரன் குடும்பத்தை மகிந்த குடும்பம் பராமரிப்பதாக வெளியான செய்தியும், அதைத் தொடர்ந்து அதற்கான மறுப்பும் வெளியாகியது

2. பிரபாகரனையும், பிரபாகரன் குடும்பத்தையும் சித்திரவதை செய்து கொல்லும் வீடியோ ஆவணத்தை, புலிகள் தயாரிப்பதாக அரச வெளியிட்டுள்ள மற்றொரு செய்தி.

இந்த இரண்டு செய்திகளும் சொல்வது என்ன?

1. பிரபாகரன் கொல்லப்பட்ட வீடியோ காட்சி ஏற்கனவே (வெளியாகவில்லை) இருக்கின்றது என்பதும்

2. சரணடைந்த பிரபாகரனின் மனைவி மகளுக்கு என்ன நடந்தது என்ற விபரம் எதுவும் இதுவரை வெளியுலகுக்கு தெரியாது என்ற உண்மை சார்ந்து, அரசு இன்று உளறிக் கொட்டுகின்றது. அரசு நடத்திய தொடர்ச்சியான பாரிய போர்க்குற்றங்களில், இதுவும் உள்ளடங்கும்.

பிரபாகரன் மற்றும் அவரின் இரு மகன்களும் கொல்லப்பட்ட பின்னான காட்சிகள் உண்டு. சரணடைந்த மனைவி, மகள் பற்றிய மேலதிக விபரம் இன்று வரை கிடையாது. இதன் வீடியோ ஆவணம் இன்னும் வெளியாகவில்லை. அதை புலிகள் போலியாக தயாரிப்பதாக அரசு கூறுகின்றது.

பிரபாகரன் உட்பட அவரின் இரு மகன்களும் சரணடைந்தபின் தான் கொல்லப்பட்டனர் என்ற சாட்சிகளை மறுக்க, அதை உள்ளடக்கிய வீடியோ காட்சிகளை புலிகள் தயாரிப்பதாக கூறி அரசு அவசரமாக தப்பமுனைகின்றது. ஆக தான் நடத்திய கொலைவெறி காட்சியைக் கண்டு, அரசு அஞ்சுகின்றது. அதை முன்கூட்டியே புலிகள் தயாரிப்பதாக அரசு கூற முற்படுகின்றது.

பிரபாகரன் கொல்லப்பட்ட நிகழ்வையொட்டி, இராணுவத்துடனான சண்டையில் தான் அவர்கள் இறந்ததாக அரசு கூறிவருகின்றது. பிரபாகரன் இறந்ததாக கருதும் புலிகள் கூட, இதைத்தான் மீளவும் கிளிப்பிள்ளை போல் சொல்லுகின்றனர். இப்படி கூறி, அரசை தம் பங்குக்கு பாதுகாக்கின்றனர். புலிகளின் மற்றொரு தரப்பு, அரசு இந்தக் குற்றம் எதிலும் ஈடுபடவில்லை, ஏனென்றால் பிரபாகரன் இருப்பதாக கூறிவருகின்றது. ஆக பிரபாகரன் மற்றும் அவர் குடும்பமும் சரணடைந்த பின், சித்திரவதை செய்யப்படவில்லை அரசால் கொல்லப்பட்டவில்லை என்பதைத்தான் அரசும் புலிகளும் கூட்டாக சேர்ந்து மறுக்கின்றனர். இந்த வகையில் தான் இறுதியில் நடந்ததை புலிகள் மூடிமறைக்கின்றனர். அது சார்ந்த உரையாடல்கள் உள்ளடங்கிய ஓலிநாடாக்கள் உட்பட, அனைத்தையும் புலத்துப் புலிகள் புதைத்துவிட்டனர்.

இந்த நிலையில் பிரபாகரனையும் அவர் குடும்பத்தையும் அரசு கொல்லும் அதே காட்சியை, புலிகள் தயாரிப்பதாக கூறுகின்றனர். கோமாளித்தனமான அரசியலில் அரசு இறங்கியிருக்கின்றது.

தாங்கள் சித்திரவதை செய்து கொல்லும் காட்சி ஒன்றை புலிகள் தயாரிப்பதாக அரசு கூற முற்படுவது, பிரபாகரன் கொல்லப்பட்ட காட்சி அடங்கிய வீடியோ ஏற்கனவே இருப்பதுதான் காரணமாகும். இதனால் அதைப் புலிகள் தயாரிப்பதாக அரசு கூற முற்பட்டு இருக்கின்றது. அரசின் இந்தக் கூற்று மிகத்தெளிவாக பிரபாகரன் உள்ளிட்ட குடும்பம் தன்னிடம் சரணடைந்ததையும், தாங்கள் சித்திரவதை செய்து கொன்றதையும் ஏற்றுக்கொள்கின்றது. புலிகள் அதை மீளத் தயாரிப்பதாக பச்சையாக அதைக் கூற முற்பட்டிருகின்றது. புலிகளின் பம்மாத்தரசியல் இதன் மூலம் அம்பலமாகின்றது.

பிரபாகரன் நிர்வாணமாக்கப்பட்டு முல்லைக் கடற்கரையில் ஓட ஓட அடித்தும் சித்திரவதை செய்தும் கொன்ற காட்சி உட்பட அனைத்தும் பல தரப்பால் வீடியோ செய்யப்பட்டது. இந்த காட்சிகளையும், இந்த உண்மைகளையும் அரசுக்கு நிகராக புலிகள் தான் இன்று மூடிமறைக்கின்றனர். இது போல் புலிகள் சரணடைந்த பின்னான பற்பல நிகழ்வுகள், அது சார்ந்த காட்சிகள் புலிகளால் தான் மீளவும் திட்டமிட்டு அழிக்கப்பட்டது.

சனல் 4 இல் வெளியாகிய யுத்தத்தின் பின்னான காட்சிகள், சிங்கள அறிவுத்துறையால் தான் வெளிக்கொண்டுவரப்பட்டதே ஒழிய புலிகளால் அல்ல. இது போன்ற காட்சிகள் கொண்ட வீடியோக்கள், புலிகள் துதிபாடும் மேற்கத்தைய ஆளும் வர்க்கத்தின் கையிலுமுள்ளது. இதை இன்னுமொரு விக்கிலீக்ஸ் அம்பலமாக்கவேண்டும் அல்லது இலங்கை அரசுக்கு எதிரான மேற்கத்தைய நலன்சார்ந்து அதை அவர்கள் வெளிக்கொண்டுவர வேண்டும். இப்படித்தான் உண்மைகளும், அவலப்பட்ட மக்களின் கதைகளும் உள்ளது.

இப்படி உண்மைகள் இருக்க, சனல் 4 காட்சியை ஏதோ புலிகள்தான் கொண்டுவந்ததாக அரசு இட்டுக்கட்டிக் கூற, புலி அதில் குளிர்காய்கின்ற அரசியலைச் செய்கின்றனர். இதை நாம் அரசியல் ரீதியாக அம்பலப்படுத்திய நிலையில், திடீர் இடதுசாரிய சந்தர்ப்பவாதக் கூட்டம் தீபம் தொலைக்காட்சியில் புலிகளின் முன்முயற்சியால் இது நடந்ததாக புலிகளிடம் கூறியதுடன், அதில் சிங்கள அறிவுத்துறையின் பங்களிப்பை அங்கீகரிக்குமாறு புலிகளிடம் இரந்து கோருகின்றனர். இணக்க அரசியலின் மகிமை அப்படி.

போருக்கு பிந்தைய காட்சி சேகரித்தலில் புலிகளின் பங்களிப்பு கிடையாது. மாறாக அவர்களுக்கு கிடைத்ததை மூடிமறைத்தனர். சிங்கள அறிவுத்துறையினர் திரட்டியவை தான் சனல் 4இல் ஆவணமாகியது. இதில் போர்க்காலக் காட்சிகள் மக்களை பலிகொடுத்து புலிகள் நடத்திய பிரசாரக் காட்சிகளை அடிப்படையாகக் கொண்டது. சனல் 4 காட்சிகள் இதை அடிப்படையாகக் கொண்டது. இப்படித்தான் அரசின் போர்க்குற்றம் ஆவணமாகின்றது.

இந்த நிலையில் பிரபாகரன் உள்ளிட்ட அவரின் குடும்பம் கொல்லப்படும் காட்சி அடங்கிய வீடியோ வெளிவரலாம் என்பதை, அரசு முகர்ந்து பிடித்திருக்கின்றது. இதை புலிகள் தயாரி;ப்பாக முன்கூட்டியே இட்டுக்கட்டத் தொடங்கியுள்ளது. புலிகளின் கையில் பிரபாகரனை கொல்லும் காட்சி கிடைத்தால், அதை அவர்கள் ஒருபோதும் கொண்டுவரப் போவதில்லை என்ற உண்மையையும் மறுத்து, உண்மைகளைப் புதைக்க விரும்புகின்றது.

புலியெதிர்ப்புக் கூட்டத்திடம் சிக்கி இருந்த இது போன்ற காட்சிகளை, இலங்கை அரசு தேடி அழித்திருக்கின்றது. இதைத் தாண்டியும் வெளிவரும் காட்சிகளை இட்டுத்தான் அரசு இன்று அஞ்சுகின்றது. நடேசன், சூசை, பிரபாகரனின் முத்த மகன் சாள்ஸ் உள்ளிட்டவர்கள் சரணடைந்த பின் கொல்லப்பட்ட, அவர்கள் பிணக்குவியல் கொண்ட காட்சிகள் ஏற்கனவே உள்ளது. அவர்கள் சரணடைந்த காட்சிகள், அவர்கள் கொல்லப்பட்ட காட்சிகள் இன்னமும் வெளியாகவில்லை. இதுபோல் தான் பிரபாகரன் கொல்லப்பட்ட விதமும் இன்னும் வெளியாகவில்லை.

பிரபாகரனின் கடைசி மகன் சரணடைந்த பின் கொல்லப்பட்ட காட்சி ஏற்கனவே வெளியாகியிருக்கின்றது. மனைவி மற்றும் மகளின் காட்சிகள் வெளிவரவில்லை. இவை உள்ளடங்கிய வீடியோக்கள் வெளிவரவில்லை. வன்னியில் இராணுவத் தரப்பால் எடுக்கப்பட்ட பல பத்தாயிரம் வீடியோ காட்சிகள் எவையும் வெளிவரவில்லை. இதில் இவை குறிப்பானவை.

இந்த நிலையில் பிரபாகரன் குடும்பத்தை மகிந்த குடும்பம் பராமரிப்பதாக கூறிய அமைச்சர் ஒருவர், அவசரமாக அதை மறுக்கின்றார். முதலில் றோகன விஜவீராவின் மனைவியை அப்படிக் கூறியதாக கூறியவர், பின் தமிழ்ச்செல்வனின் மனைவியை பற்றி கூறியதாக கூறி உளறுகின்றார். அதேநேரம் அரசு அவர்கள் ஏற்கனவே சண்டையில் இறந்து விட்டதாக கூறும் அரசு, அதற்கான ஆதாரத்தை வைக்கவில்லை. இது போல் புலிகளின் முக்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு என்ன நடந்தது என்பதற்கும், அவர்களை கொன்ற அரசுக்கு பதில் சொல்ல முடியாதுள்ளது. குறிப்பாக முக்கிய புலி உறுப்பினர்கள் சரணடைந்த போது, அவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் சரணடையக் கோரினர். இதன் மூலம் அவர்களையும் அழித்தனர். இதன் மூலம் குடும்பங்கள் தம் உறவுகளை தேடும் படலத்தை இல்லாதாக்கினர். இதில் தப்பிப் பிழைத்தவர்கள் தான், இன்று அரசுககு; தலையிடியாக மாறியுள்ளனர்.

இதில் பெண்களை பாலியல் ரீதியாகவே குதறியிருப்பார்கள் என்பதும், பாலியல் அடிமையாக பெண்களை இராணுவ முகாங்களில் இராணுவம் தொடர்ச்சியாக பயன்படுத்தி இருக்கும் என்பதும், இன்று இதையெல்லாம் மூடிமறைக்க அவர்கள் கொன்று இருப்பார்கள் என்பதும் உண்மை. வெளியாகிய பாலியல் உள்ளடக்கம் கொண்ட காட்சிகள், அங்கு நடந்திருக்கக் கூடிய அரசியல் பின்னணியைக் கூறுகின்றது.

தாம் கைது செய்து தம் பாதுகாப்பில் இருப்போர் பற்றிய விபரத்தைக் கூட அரசால் வெளியிட முடியாதுள்ளது. அவ்வளவு கோரமான படுகொலைகளை அரசு திட்டமிட்டு நடத்தியிருக்கின்றது. இந்தப் பட்டியலை வெளியிடுவதாக அரசதரப்பு சார்பாக பேசுபவர்கள் அடிக்கடி கூறிவந்த போதும், இந்தப் படுகொலைகளை முன்னின்று செய்த மகிந்த குடும்பம் இதை வெளியிடுவதை மறுத்துவிடுகின்றது. குடும்ப உறுப்பினர்கள் மட்டும் இதை விசாரித்து அறிய முடியும் என்று இதை திட்டமிட்டு மூடிமறைக்க முற்பட்டுள்ளது. இப்படி நாள் தோறும் இதை விசாரித்து அறியச் சென்றவர்கள், தாம் தேடுபவர் பற்றிய விபரம் அங்கு இல்லாது இருப்பதைக் காண்கின்றனர். இது நாள் தோறும் நூற்றுக்கணக்கானவர்களின் அனுபவமாக, அவலமாக மாறுகின்றது.

அரசால் பிடித்துச் செல்லப்பட்ட ஆயிரக்கணக்கானவர்கள் பற்றியும், தம் கண் முன் சரணடைந்தவர்கள் பற்றியும், தாமே முன்னின்று அரசிடம் ஓப்படைத்தவர்களை எங்கே என்று தேடுகின்றவர்களுக்கு, இந்தக் கொலைகார அரசால் என்றும் பதில் சொல்ல முடியாது. இதுதான் பிரபாகரன் உள்ளிட்ட குடும்பத்தினது கதையும். ஆக ஆதாரங்களை அழிக்க முனைகின்றது. வெளிவரும் ஆதாரங்களை புலி தயாரிப்பதாக இட்டுக் கட்ட முனைகின்றது.

நடந்ததை ஒட்டிய புதிய காட்சிகள் புலிகள் அல்லாதவர்களின் தொடர் முயற்சியில் வெளிவரும் என்பதும், புலிகளும் அரசும் அதை மூடிமறைக்கும் என்பதும் வெளிப்படையான உண்மை. அரசு தான் தப்பிப்பிழைக்க அதை புலி தயாரிப்பதாக கூறும். இதை மூடிமறைக்கும் புலி, அரசின் கூற்றை வைத்து ஏதோ தான் போராடுவதாக ஏய்த்துப் பிழைக்கும்.

இப்படித் தான் பிரபாகரனையும், பிரபாகரன் குடும்பத்தையும் சித்திரவதை செய்து கொன்ற காட்சியை புலிகள் தயாரிப்பதாக அரசு கூறுகின்றது. தான் செய்ததை புலிகளின் தயாரிப்பாக கூற, ஏதோ புலிகள் இதை தாங்கள் வெளிக்கொண்டு வந்ததாக பாசங்கு செய்ய, மக்களை ஏய்க்கின்ற புலுடா அரசியல் தான் அங்குமிங்குமாக அரங்கேறுகின்றது.

 

பி.இரயாகரன்

25.06.2011