புளொட்டின் மக்களமைப்பை பலமாகக் கட்டியெழுப்பும் முகமாக தொடர்ச்சியாக கிராமங்கள் தோறும் அரசியல் கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. யாழ் மாவட்டத்தில் செயற்பட்ட அனைத்து உதவி அரசாங்க அதிபர் பிரிவு அமைப்பாளர்களுமே இதற்காக கடுமையாக உழைத்து வந்தனர். புதிய அங்கத்தவர்களை அமைப்புடன் இணைத்தல், கிராமங்கள் தோறும் அமைப்பு கமிட்டிகளை உருவாக்குதல் என்று தொடர்ச்சியாக செயல்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. இத்தகைய அமைப்புக்களை உருவாக்குவதென்பது அவ்வளவு இலகுவாக நடைபெற்றிருக்கவில்லை. அரச படைகளின் தேடுதல் வேட்டைகளும், கெடுபிடிகளும், அன்றாட நிகழ்வாக இருந்த காலகட்டம் அது. அத்துடன் ஏனைய விடுதலை போராட்ட அமைப்புகளின் எதிர்ப்புகளும், சவால்களும் நாம் செல்லும் கிராமங்கள் தோறும் இருந்து வந்தது. இவற்றுக்கெல்லாம் முகம் கொடுத்த அதேவேளை, இத்தகைய எதிர்ப்புக்களையும், சவால்களையும் முறியடித்தே மக்கள் அமைப்பை உருவாக்க முடிந்தது.
தோழர் தங்கராஜா 1984 ஆம் ஆண்டு ஆரம்பப்பகுதிகளிலேயே இந்தியாவுக்கு அழைக்கப்பட்டிருந்தார். இந்தியாவில் இராணுவப்பயிற்சி பெறுபவர்களுக்கு அரசியல் வகுப்புக்களை நடத்துவதற்காகவே அவரை இந்தியா அழைத்திருந்தனர். இதனால் கிராமங்கள் தோறும் அரசியல் கருத்தரங்குகளை தோழர் தங்கராஜாவின் பாசறைகளில் பங்கேற்றவர்களே மேற்கொண்டு வந்தனர். இதில் ரகு(நிசாந்தன்), பிரசாத், பாசறை ரவி(முத்து) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். திருகோணமலை அமைப்பாளர் செல்வன் (கிருபாகரன்), முல்லைத்தீவு அமைப்பாளர் வரதன் போன்றோர் யாழ்ப்பாணம் வந்து தங்கி நிற்கும் போதெல்லாம் இத்தகைய அரசியல் கருத்தரங்குகளை நிகழ்த்தி வந்தனர். ஏனைய விடுதலைப் போராட்ட அமைப்புகளுடன் ஒப்பிடும்போது, புளொட்டினது மக்களமைப்பு பலம் பெற்று வளர்ந்து வந்தது. இந்த வளர்ச்சி யாழ் மாவட்டத்தில் மட்டுமல்லாது வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களின் வளர்ச்சி நிலையாகவும் இருந்தது.
இதற்கு புளொட்டினுடைய மக்களமைப்பில் செயற்பட்ட அங்கத்தவர்களின் கடின உழைப்பும், அவர்களால் மேற்கொள்ளப்பட்ட அரசியல் கருத்தரங்குகளும், "புதியபாதை" பத்திரிகை, மற்றும் "தமிழீழத்தின் குரல்" வானொலிச் சேவையின் மூலம் வெளிக்கொண்டுவந்த கருத்துக்களும் காரணமாக அமைந்தது என்று சொல்லலாம். சிறிலங்கா அரசபடைகளின் கெடுபிடிகளுக்கும், வேட்டையாடல்களுக்கும், புளொட்டின் முன்னணி அங்கத்தவர்களின் இழப்புக்களுக்கும், மரணங்களுக்கு மத்தியிலும், ஏனைய விடுதலைப் போராட்ட அமைப்புக்களின் எதிர்ப்புக்களுக்கும் சவால்களுக்கும் மத்தியிலேயே இது சாத்தியமானது.
யாழ் மாவட்டத்தைப் பொறுத்தவரை சுந்தரம் படைப்பிரிவினர் புளொட்டுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் செயல்களை தொடர்ந்தவண்ணமிருந்தனர். இதில் சுழிபுரத்தைச் சேர்ந்தவர்கள் சிலரும், சிவநேசன்(சுண்ணாகம்), வசந்தன் (சுண்ணாகம்), நித்தி(உடுவில்) போன்றோரும் ஈடுபட்டு வந்தனர். யாழ் மாவட்டத்தில் செயற்பட்ட அமைப்பாளர்களிடத்திலிருந்து தொடர்ச்சியாக சுந்தரம் படைப்பிரிவினர் குறித்த முறைப்பாடுகள் வந்தவண்ணமிருந்தன. மக்கள் மத்தியிலிருந்து சுந்தரம் படைப்பிரிவினரின் அடாவடித்தனங்கள் குறித்து கேள்விகள் எம்மை நோக்கி எழுப்பப்பட்டன.
இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொருட்டு சுந்தரம் படைப்பிரிவினர் என்று செயற்படுபவர்களை விசாரணை செய்வதென்று முடிவாகியது. இதற்கு நானும், மல்லாவிச் சந்திரனும், தர்மலிங்கமும் சென்றிருந்தோம். சுண்ணாகத்தைச் சேர்ந்த சிவநேசன் என்பவரை உடுவிலில் வைத்து விசாரணை செய்தோம். புளொட்டுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் செயற்படுவதை உடனடியாக நிறுத்தும்படி கேட்டுக்கொண்டோம். இதையறிந்து அவ்விடத்துக்கு வந்த சுந்தரம்படைப்பிரிவைச் சேர்ந்த சிலர் எம்முடன் வாக்குவாதத்தில் இறங்கினர். சிவநேசனை (சுண்ணாகம்) உடனடியாக விடுவிக்கும்படியும், அப்படிச் செய்யாவிடின் பாரதூரமான விளைவுகளைச் சந்திக்க நேரும் என்றும் எமக்கு எச்சரிக்கை விடுத்தனர். சுந்தரம் படைப்பிரிவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நாம் அவர்கள் விடயத்தில் எந்தவித முன்னேற்றமும் காணாமலேயே திரும்ப வேண்டியிருந்தது.
புளொட் மக்களமைப்பைக் கட்டியெழுப்பி மக்கள் மத்தியில் பலம் பெற்று, மக்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்றுக்கொண்டிருந்த அதேநேரம் புளொட்டுக்கு களங்கம் ஏற்படுத்தும் செயற்பாடுகளை சுந்தரம் படைப்பிரிவினர் என்று தம்மை அழைத்துக் கொண்டவர்கள் எவருடைய கட்டுப்பாட்டுக்கும் அடங்காமல் செய்து வந்தனர். இவர்களது நடவடிக்கைகள் அனைத்துமே ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பின் உறுப்பினர்களின் நடவடிக்கை போலல்லாமல் தெருச் சண்டியர்களின் நடவடிக்கைகளுக்கு ஒத்ததாகவே காணப்பட்டது. யாழ் மாவட்டக் கமிட்டியால் சுந்தரம் படைப்பிரிவினரின் தன்னிச்சையான செயற்பாடுகள் குறித்து உமாமகேஸ்வரனுக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்திற்கு எந்தவித உருப்படியான நடவடிக்கையும் எடுக்கப்படாமலே நாட்கள் நகர்ந்துகொண்டிருந்தன. சுந்தரம் படைப்பிரிவினரின் அடாவடித்தனங்களும் தெருச் சண்டித்தனங்களும் தொடர்ந்தவண்ணமாக இருந்தன.
புளொட்டுடன் ஒன்றிணைந்த சிங்கள முற்போக்குச் சக்திகள்
தோழர் தங்கராஜா தனது அரசியல் பாசறைகளிலும் அரசியல் கருத்தரங்குகளிலும் ஆணித்தரமாக எடுத்துக் கூறியது போல் புளொட் ஈழவிடுதலைப் போராட்டத்தில் சிங்கள முற்போக்கு சக்திகளுடனான ஜக்கியம், சிங்கள உழைக்கும் மக்களுடனான ஜக்கியம் என்பனவற்றை தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தது. "புதிய பாதை" பத்திரிகையில் இது குறித்து தொடர்ச்சியாக கட்டுரைகள் வெளிவந்து கொண்டிருந்தன. புளொட்டினால் நடாத்தப்பட்ட "தமிழீழத்தின் குரல்" வானொலிச் சேவை (இதுவே விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்ட வானொலிச்சேவை) யில் இதற்கென " சிங்கள மொழிச் சேவை" பிரிவொன்று ஆரம்பிக்கப்பட்டு அதற்கூடாக தொடர்ச்சியாக புளொட்டினுடைய கொள்கைகள் பற்றி சிங்கள மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
இத்தகையதொரு காலத்தின் தேவையால் அமைந்த முற்போக்கான செயற்பாட்டை புளொட் மட்டுமே பெருமளவுக்கு நடைமுறையில் செயற்படுத்தி வந்தது. ஈழ விடுதலைப் போராட்டம் சிங்கள மக்களுக்கு எதிரானதல்ல என்பதையும், சிறீலங்கா இனவாத அரசுக்கு மட்டுமே எதிரானது என்பதையும் புளொட் சிங்கள மக்களுக்கு தெளிவுபடுத்தி அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தது. இனவாதத்திற்கெதிரான தமிழ்மக்களின் போராட்டத்தில் சிங்கள முற்போக்கு சக்திகளினதும், சிங்கள உழைக்கும் மக்களின் ஜக்கியத்தை வலியுறுத்தி வந்தது. இத்தகைய பிரசாரம் பெருமளவுக்கு வெற்றியைத் தந்ததோடு மட்டுமல்லாமல் தமிழ்மக்கள் பேரினவாதத்தால் எதிர்நோக்கும் பிரச்சனைகளை சிங்கள மக்களும் தெளிவாக புரிந்து கொள்ள வழிவகுத்தது.
உடுவரகே ஹென்றி பெரேரா
பல்வேறு சிங்கள முற்போக்கு அமைப்புகள் புளொட்டுடன் தொடர்புகளை ஏற்படுத்தி தொடர்ச்சியான கருத்துப் பரிமாற்றங்களைச் செய்து வந்தன. ஜனதா விப்லவீய பெரமுனையைச் சேர்ந்த உடுவரகே ஹென்றி பெரேரா, ரோகன விஜேவீரவின் மைத்துனரும் ஜே.வி.பியின் ஆரம்ப கால உறுப்பினருமான இலங்கை ஆசிரியர் சங்கத் தலைவர் எச்.என்.பெர்னாண்டோ, நவஜேவிபியைச் சேர்ந்த சுனிமெல், அஜித், சுதா போன்றவர்கள் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவர்கள். இதில் ஜனதா விப்லவீய பெரமுனையைச் சேர்ந்த உடுவரகே ஹென்றி பெரேரா 1983 மார்கழி மாதம் இந்தியா சென்று உமாமகேஸ்வரனை சந்தித்துவிட்டு இலங்கை திரும்பியிருந்தார். அதன்பின் தொடர்ச்சியாக யாழ்ப்பாணம் வந்து கருத்துப்பரிமாற்றங்களில் ஈடுபட்ட உடுவரகே ஹென்றி புளொடடுடன் மிகவும் நெருக்கமான உறவை வைத்து செயற்பட்டு வந்தார். இராணுவப் பொறுப்பாளர் பார்த்தனின் மறைவுக்குப் பின் உமாமகேஸ்வரனின் வேண்டுகோளின் பேரில் உடுவரகே ஹென்றி பெரேராவுக்கு ஆயுதங்களும், கைக்குண்டுகளும், பணமும் கொடுக்கப்பட்டது.
அவற்றுடன் உடுவரகே ஹென்றி பெரேரா யாழ்ப்பாணத்திலிருந்து மலையகம் புறப்பட்டுச் சென்றார். சிங்கள இளைஞர்களுக்கு பயிற்சி வழங்குவதும் மலையகத்தில் தாக்குதல்களை நிகழ்த்துவதுமே இதன் நோக்கமாக இருந்தது. கண்டி பஸ் நிலையத்தை சென்றடைந்த உடுவரகே ஹென்றி பெரேராவை சந்தேகித்த பொலிசார் அவரிடம் இருந்த பார்சலை சோதனையிட்டனர். அதற்குள் ஆயுதங்களும் பணமும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடுவரகே ஹென்றி பெரேரா கண்டிப் பொலிசாரால் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட உடுவரகே ஹென்றி பெரேராவை யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவந்திருந்த இராணுவத்தினர் அவர் யாழ்ப்பாணம் வரும்போது தங்கியிருக்கும் வீட்டுக்கு கொண்டு வந்து சோதனையிட்டனர். அதன் பின்னர் தான் உடுவரகே ஹென்றி பெரேரா கைது செய்யப்பட்ட விடயம் எமக்குத் தெரியவந்தது.
ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, தமிழ் மக்களுடன் கைகோர்த்துப் போராடப் புறப்பட்ட உடுவரகே ஹென்றி பெரேரா வெலிக்கடைச் சிறையில் ஏனைய ஈழவிடுதலைப் போராளிகளுடன் சிறையிலிடப்பட்டார். சிறிலங்கா பேரினவாத அரசால் உடுவரகே ஹென்றி பெரேராவை மட்டும் தான் சிறையிட முடிந்ததே தவிர அதன்பின் தொடர்ந்து புளொட்டை நோக்கி வந்த பல முற்போக்கு சக்திகளை தடுத்து நிறுத்த முடியவில்லை. 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் பின் சிறீலங்கா அரசு அனைத்து அரசியல் கைதிகளுக்கும் பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்தது. அதில் விடுதலையான உடுவரகே ஹென்றி பெரேரா, தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்துடன் தன்னை இணைத்துக்கொண்டதால் தான் வாழ்வதற்கான இடமாக வவுனியா செட்டிகுளத்தை தெரிவு செய்திருந்தார்.
செட்டிகுளத்தில் தமிழ்பெண் ஒருவரை மணந்து வாழ்ந்து வந்த உடுவரகே ஹென்றி பெரேராவை இந்திய இராணுவம் இலங்கையை விட்டு வெளியேறிக் கொண்டிருந்த வேளை தமிழீழ விடுதலைப் புலிகள் சிங்களவர் என்ற ஒரே காரணத்துக்காக சுட்டுக்கொன்றனர். சிறீலங்கா அரசினதும், ஜே.வி.பியினதும் இனவாதத்திற்கெதிராகவும், தமிழ்மக்களின் நீதியான போராட்டத்துக்கு ஆதரவாகவும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துப் போராடிய, அதற்காகவே சிறீலங்கா அரசினால் சிறையிலடைக்கப்பட்ட, தமிழ்மக்களுடனேயே வாழ்ந்துவந்த ஒரு சிங்கள இடதுசாரி, ஒரு முற்போக்காளன் அரசியலில் அரிச்சுவடி தெரியாதவர்களால் தமிழ் மண்ணிலேயே அழிக்கப்பட்ட சம்பவம் ஈழ விடுதலைப் போராட்டம் அதன் இருண்ட திசைவழியை நோக்கிச் சென்று கொண்டிருந்ததையே எமக்கு காட்டி நின்றது.
(தொடரும்).
1. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 1
2. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 2
3. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 3
4. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 4
5. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 5
6. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 6
7. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 7
8. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 8
9. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 9