08102022பு
Last updateபு, 02 மார் 2022 7pm

ஒடுக்குவதன் மூலம் தான், மகிந்த சிந்தனை வாழமுடியும்

"தீயசக்திகள்" தான் கூட்டணி மீதான வன்முறைகளை நடத்தின என்கின்றார், வடக்கு வன்முறைகளுக்கு தலைமை தாங்கும் இராணுவத் தளபதி. இலங்கையில் தாம் அல்லாத அனைத்தையும், அனுமதிக்கக் கூடாது என்பதுதான் மகிந்த சிந்தனை. வடக்கில் கூட்டமைப்பின் கூத்தாடும் குறுந்தேசியக் கூட்டமாக இருக்கட்டும், கட்டுநாயக்காவில் மக்கள் தம் உரிமைக்கான போராட்டமாக இருக்கட்டும், எதையும் அனுமதிக்கக் கூடாது. இதைத்தான் இராணுவம் மற்றும் பொலிசுக்கு மகிந்த குடும்பம் இட்டுள்ள கட்டளை.

 

 

 

இதை மீறினால் பதவி பறிக்கப்படும். அவர்கள் இந்தக் கட்டளைகளையே ஏற்று அமுல்படுத்தும் போது அரசு அம்பலமானால், அதை முன்னின்று செய்தவர்கள் தலை உருட்டப்படுகின்றது. இந்த எல்லைக்குள் தான், இலங்கையில் இராணுவம் - பொலிசைக் கொண்டு அரசு மக்களை ஒடுக்கியாளுகின்றது.

தாம் அல்லாதவர்களை ஒடுக்க, ஒடுக்குவதை நியாயப்படுத்த, கிட்லரின் மந்திரி கோயபல்சை மிஞ்சிய பரப்புரைகள். எச்சில் சோற்றை நக்கும் கூட்டமோ, இதைச் சொல்லி வயிற்றை நிரப்புகின்றது. வடக்கு முதல் கொழும்பு வரை, தமிழன் முதல் சிங்களவன் வரை, இதுதான் பொதுமையான கூறாக உள்ளது.

கட்டுநாயக்காத் தாக்குதலை அடுத்து வடக்கில் கூட்டமைப்பின் கூத்தாடும் கூட்டம் தாக்கப்படுகின்றது. கட்டுநாயக்காவில் தொழிலாளர்களைத் தாக்கியவர்கள், வடக்கில் தமிழ் குறுந்தேசியவாதிகளைத் தாக்குகின்றனர். இங்கு இதில் பண்புரீதியான வேறுபாடு கிடையாது. இதை நியாயப்படுத்த, கோமாளி;த்தனமான ஆயிரம் விளக்கங்கள்.

கூட்டமைப்பின் கூட்டத்தை அடித்து நொருக்கிய செயலை, தீயசக்தியின் செயலாக கூறுகின்றார் வடமாகாண இராணுவத்தளபதி. இப்படி "தீயசக்தி" பற்றி 1987 ஆண்டு புலிகள் கூட, எதிர்மறையில் பயன்படுத்தினர். 1987ம் ஆண்டு யாழ் பல்கலைக்கழக மாணவன் விஜிதரனைக் கடந்திய புலிகள், அவர் தானாக காணாமல் போனாரா அல்லது கடத்தப்பட்டாரா என்று குதர்க்கமாக வினவி குதறினர். இந்தப் புலிக் கடத்தலுக்கு எதிராக போராடிய மாணவர்களை, "தீயசக்திகள்" வழிகாட்டும் போராட்டம் என்று அவதூறு பரப்பி ஒடுக்கினர். இப்படித்தான் அன்று புலிகளின் ஆட்சியிலும் பலர் காணாமல் போனார்கள். இனந்தெரியாத படுகொலைகள் பல. இப்படி ஆயிரக்கணக்கில் புலிகளும் அன்று அரங்கேற்றினர். அரசு உதிரியாக செய்த வக்கிரத்தை புலிகள் சில மடங்காக்கி ஆட்டம் போட்டனர். இதை பின்னால் அரசு பல மடங்காகச் செய்தது.

அன்று புலிகள் தமக்கு ஏதிராக போராடிய மாணவர்களின் போராட்டத்தை தீயசக்திகளின் செயல் என்றனர். இன்று இராணுவம் தன் சொந்தப் பாசிசத்தால் அம்பலமாகும் போது, இதை தனக்குள் உள்ள தீயசக்திகளின் செயல் என்கின்றது. புலிகள் அன்று பாவித்த அதே மொழியையே இன்று இராணுவம் பயன்படுத்தி, அதே பாசிச வழிமுறைகள் மூலம் நியாயப்படுத்தி மக்களை ஒடுக்க விரும்புகின்றனர்.

வரலாற்றில் பாசிட்டுகள் ஓரே மாதிரித்தான், மீண்டும் மீண்டும் அணுகுகின்றனர். வடக்கில் "தீய சக்திகள்" என்றும், இராணுவத்தினுள் "தீய சக்திகள்", என்றும், பாசிட்டுக்களுக்குரிய புனைவு மொழியில் நடந்ததைப் புரட்டுகின்றனர். தங்கள் குற்றங்களை மூடிமறைக்க, அதை திசைதிருப்ப, செய்ததை நியாயப்படுத்த பற்பல புனைவுகள். "தீய சக்தி" பற்றியும், கூட்டணி சம்மந்தனுக்கு எதிரான கூட்டமைப்பு பற்றி எல்லாம் கூறுகின்ற, பாசிச மாபியா விளக்கங்கள். புலி வக்கிரங்களை வக்கரித்து சொன்ன தமிழ்ச்செல்வன் தோற்றுப் போகும் வண்ணம், கோத்தபாயவின் அரசியல் விளக்கங்கள். பொய், பித்தலாட்டம், திரிபுடன் கூடிய அதிகாரம் சார்ந்த வக்கிரம் கொப்பளிக்க, கோமாளித்தனமாக பாசிட்டுகள் உளறுகின்றனர்.

கூட்டமைப்பின் கூட்டத்தை அடித்து நொருக்கிய சம்பவத்தின் பின்னும் கூட, அதை மறுத்தல் முதல் நியாயம் கற்பித்தல் வரை பற்பல பாசிச வக்கிரங்கள். முன்பு கம்யூனிசம் பேசி இன்று பேரினவாதம் பேசும் மணியம் கண்ட பொதுப்போராட்ட வழியில், அதாவது "பாசிசப் புலிகளை அழித்தொழிப்பதற்கான பொதுப் போராட்டத்தை" நடத்தியதாக சிபார்சு செய்த தேனீயில், பொது அரசியலாக இதுவும் கொப்பளிக்கின்றது. ஊடகவியலாளராகவும், டான் தொலைக்காட்சி நிறுவன உரிமையாளருமான குகநாதன், சம்பவம் கண்டிக்கத்தக்கது தான் என கூறியபடிதான் இதை நியாயப்படுத்துகின்றார். இனப்பிரச்சனைக்கு தீர்வு பற்றி பேசுகின்றோம் என்று கூறிக்கொண்டு, இனவொடுக்குமுறை செய்கின்ற அரசின் அதே பாசிச வழிமுறைகளையே குகநாதன் கையாளுகின்றார். "தீயசக்தி"யின் செயல், விசாரணை, தண்டனை என்று கூறிக்கொண்டு, அரசு இதை எப்படி செய்கின்றதோ அதையே குகநாதன் கூட்டம் "பொதுப் போராட்டமாக" செய்கின்றது. கூட்டம் நடத்த கூட்டணி அனுமதி பெற்றதா என்று கேட்டு, இராணுவக் குண்டர்களுக்கு நிகராக இந்தத் தாக்குதலை குகநாதன் நியாயப்படுத்துகின்றார். முன் அனுமதி இருந்திருந்தால் நடந்திராது என்று, மக்கள் விரோத இராணுவத்துக்கு வக்காளத்து வாங்குகின்றார்.

கட்டுநாயக்காவில் அடித்து நொருக்கியது, பல்கலைக்கழகங்களில் புகுந்து தாக்குவது… எல்லாம் எதனால்? சரத் பொன்சேகா மேலான வழக்கு எதற்காக? இலங்கையில் சட்டத்தின் ஆட்சியை மறுக்கின்ற அரச பாசிட்டுகளுக்கு, வக்காளத்து வாங்க சட்டத்தின் படி நடந்தீர்களா என்று கேட்டு அதைத் துணைக்கழைக்கின்றனர் பொதுப் போராட்டக்காரர். உன் சட்டப்படி பார்த்தால், பொலிஸ் அல்லவா இதில் தலையிட்டு இருக்க வேண்டும். அதுவும் வழக்குத்தானே போட்டு இருக்க முடியும்? உன் சட்டவாதம் கேலியாகின்றது. இலங்கையில் அரசால் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்கள் முதல் ஊடக சுதந்திரம் மறுக்கப்பட்ட நாட்டின் சட்டத்தைப் பற்றி, அண்டிப் பிழைக்கும் கூட்டம் மட்டும் தான் விசுவாசமாக நிற்பதைக் காட்ட கோமாளி வேஷம் போடுகின்றனர். இதைப் "பொதுப் போராட்டமாக" தேனீயில் நடத்துகின்றனர்.

கிட்லரின் மந்திரி கோயபல்ஸ் போல், கோத்தபாய தன் வழிகாட்டலில் நடத்திய தாக்குதலை மூடிமறைக்க அங்குமிங்குமாக புலம்புகின்றார். முதலில் இது அமெரிக்க தூதரகத்துக்கு தெரியவருவதாக கூறுகின்றார். இதைச் செய்த உன்னிடமா முறையிட முடியும்? சரி உன்னால் நீதி வழங்கிய ஒன்றைக் காட்டத்தான் முடியுமா? காணாமல் போனவர்கள் பற்றியும், இராணுவம் பிடித்துச் சென்ற தங்கள் உறவுகள் பற்றிய விபரத்தையும் அறிய, எத்தனை வருடங்கள் இந்த நாட்டில் மக்கள் அலைகின்றனர். அமெரிக்க தூதரகத்துக்கு முதலில் தெரிவதாக கூறுவதும், சட்டத்தைப் பற்றிப் பேசுவதும் நகைப்புக்குரியது.

உங்களைப்போல்தான் குறுந்தேசியக் கூத்தாடிகள், அமெரிக்காவிடம் தஞ்சம் புகுகின்ற கோமாளிகள் தான். நீங்கள் ரூசியா-சீனா இந்தியா என்று நாட்டை விற்பது போல்தான், அவர்கள் தேசியத்தை விற்கின்றனர்.

 

பி.இரயாகரன்

22.06.2011

 

 

 


பி.இரயாகரன் - சமர்