Language Selection

தனக்கு நடந்ததை உள்ளபடி எதையும் சாராது சொல்லுதல் அல்லது மக்களைச் சார்ந்து நின்று சொல்லுதல் வரலாற்றுக்கு அவசியமானது. இதுவல்லாத வரலாறு, மக்களுக்கு எதிரானதான, உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. இலங்கையில் இரண்டு வகையான வதை அனுபவத்தை பெற்றவர்கள் உள்ளனர். அரசு - இயக்கம் என்று இரண்டு தளத்தில் அல்லது இரண்டையும் அனுபவமாகக் கொண்டவர்கள் வாழ்கின்றனர். இங்கு இதை பொதுத்தளத்தில், மக்களைச் சார்ந்து சொல்லாத சார்புத்தனம், ஒருபக்க உண்மையை மூடிமறைத்து அதன் அரசியல் நோக்கத்துக்கு உதவுதலாகும்;. இதைத்தான் மணியம், அதாவது மணியண்ணை செய்கின்றார்.

 

 

இந்தவகையில் புலி தன் மீது நிகழ்த்திய வதையை வரலாறாக சொல்ல முற்படும் மணியத்தின் அரசியல் வரையறை, அவரின் "பாசிசப் புலிகளை அழித்தொழிப்பதற்கான பொதுப் போராட்டத்தை" அடிப்படையாக கொண்டது. இந்த பொதுப் போராட்டத்தில் இவருடன் யாரெல்லாம் இருந்தார்கள்? இலங்கை அரசு, இந்தியா, ஏகாதிபத்தியம் என அனைத்தும் தான். இதுதான் இவர்களின் பொதுப்போராட்டத்தின் அரசியல் வரையறை. யார் இந்த இடதுசாரிகளுடன் இருக்கவில்லை என்றால் மக்கள் தான். மக்கள் இல்லாத பொதுப்போராட்டம்.

இதன் பின்னணியில் இருந்த அரசியல் பேரினவாதம், பிராந்திய நலன், உலகமயமாதலை அடிப்படையாகக் கொண்ட சித்தாந்தத்தால் உருவாக்கப்பட்ட பொது அரசியல், புலியழிப்பு அரசியல். இங்கு மார்க்சியம் இருக்கவில்லை, புலியெதிர்ப்பு அரசியல் இருந்தது.

இதற்கு மார்க்சியம் மூலம் பாசிய ஒழிப்பாக விளக்கம் கொடுத்து நியாயப்படுத்தினர். பேரினவாத பாசிசத்தை சார்ந்து, பாசிசப் புலிகளை அழித்தல். இந்த அரசியல் பின்னணியில் தன் வதை சார்ந்த அனுபவத்தை, பேரினவாத அரசியலாக இன்று சொல்ல முற்படுகின்றார்.

புலிகள் தாமல்லாத பத்தாயிரம் பேரைக் கொன்ற அதே நேரம், சில ஆயிரம் பேரை தங்கள் வதைமுகாங்களில் வைத்து சித்திரவதை செய்தனர். இப்படித்தான் மணி அண்ணையையும் தங்கள் வதைமுகாமுக்கு புலிகள் இழுத்துச் சென்றனர். 18 மாதங்கள் (அவரின் தொடரில் இந்த கால அளவீடு தவறாக அதாவது 91 மார்கழி முதல் 1994 ஆனி வரை என்று உள்ளது) தங்கள் வதை முகாமில் வைத்து வதைத்தவர்கள், இறுதியில் நிர்ப்பந்தம் காரணமாக விடுவித்தனர்.

எம்மால் மணி அண்ணை என்று அன்பாக அழைக்கப்பட்ட காலத்தில், அவர் பேரினவாதத்தை எதிர்த்த அதேநேரம், குறுந்தேசியத்தை எதிர்த்ததன் மூலம் எமக்கு அரசியல் ரீதியாக அறிமுகமானார். அவரின் கடந்கால இடதுசாரிய பாரம்பரியத்துடன், பேரினவாத பாசிசத்தையும் தமிழ் பாசிசத்தையும் எதிர்த்ததன் மூலம் தான், அவர் மக்களின் பக்கத்தில் நின்றார். இப்படித்தான் மணியண்ணை மீது மதிப்பும், அவரைப் புலிகள் பிடித்த போது அவருக்கான குரலையும் உரத்துக் கொடுத்தோம். எம்மைப்போல் தான் பலரும் இதைத்தான் செய்தனர்.

அவர் விடுவிக்கபட்ட பின், இறுதியில் கொழும்புக்கு தப்பிவந்த நிலையில், நாம் அவருடன் தொடர்பு கொண்டது மட்டுமின்றி அவருக்கு உதவ முற்பட்டோம். அவர் கொழும்பில் ஒரு புத்தகக்கடையை திறப்பதற்கான நிதி உதவியை செய்யும் முயற்சியில் ஈடுபட்டோம். அதேநேரம் அரசியல் விவாதத்தை ஒருங்கே நடத்தினோம். நாம் சில நண்பர்களுடன் சேர்ந்து ஆரம்ப நிதி உதவியை செய்த நிலையில், அவர் பேரினவாதத்தை ஆதரித்த திடீர் அரசியல் காரணமாக அவருடனான அரசியல் உறவை நிறுத்தினோம். இந்த விவாதத்தில் அவர் பேரினவாதத்தை நியாயப்படுத்தி எழுதிய பல கடிதங்கள் (தேவைப்பட்டால் வெளியிடப்படும்) எம்மிடம் இன்று உள்ளது.

இதன் பின் தன் கடந்தகால அரசியலைத் துறந்து பேரினவாத ஊடகங்களில் இணைந்து, புலியெதிர்ப்பு பிரச்சாரத்தைச் செய்தவர். இதற்காக அவரை அரசு தன் ஊடகங்களி;ல் கூலிக்கு அமர்த்தியது. இதன் பின் கனடா வந்தவர், மார்க்சிய லெனினியத்தின் பெயரில் பேரினவாதத்தை நியாயப்பபடுத்திய கூட்டத்தில் ஒருவரானார். இதன் பின்னணியில் நின்றுதான், தன் வதையைப்பற்றி புலியெதிர்ப்பு இணையமான தேனீயில் எழுதமுனைகின்றார்.

புலிப் பாசிசமும், அதன் வதைiயும் சார்ந்த உண்மையை, புலியெதிர்ப்பு அரசியல் அடிப்படையில் அரசு சார்புடன் இன்று கூற முற்படுகின்றார். ஒரு இடதுசாரியாக மக்களை சார்ந்து பேரினவாதத்தை எதிர்த்தல்ல.

இதை புலியெதிர்ப்பு பேரினவாத ஆதரவு ஊடகமான தேனீயில் ஏன் எழுதுகின்றேன் என்ற தன் குறிப்பில்,

1."தேனீயைத் தேர்ந்தெடுத்ததிற்குக் காரணம், அது எந்தவொரு கட்சியையோ, இயக்கத்தையோ அல்லது குழுவையோ சாராத சுதந்திரமான ஒர் ஊடகம் என்பதனாலாகும்." அதாவது புலியழிப்பு பேரினவாதத்தை சார்ந்து நின்றாகும்.

2."பெரும்பாலான தமிழ் ஊடகங்கள் பின்பற்றும் தமிழ் தேசியவாத சேற்றுக்குள் அமிழ்ந்துவிடாமல், தேனீ தமிழ் மக்கள் பயணிக்க வேண்டிய திசைமார்க்கமான ஏகாதிபத்திய எதிர்ப்பு, பிற்போக்கு எதிர்ப்பு, இனவாத எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டில் மிக உறுதியுடன் ஊன்றி நின்றதுமாகும்." பேரினவாத எதிர்ப்பில்லை என்பதில் ஊன்றி நின்றது.

3"பாசிசப் .புலிகளை அழித்தொழிப்பதற்கான பொதுப் போராட்டத்தில் தேனீ ஆரம்பம் முதல் இறுதிவரை எவ்வித ஊசலாட்டமுமின்றி நிலை தழும்பாது நின்று வந்துள்ளதுமாகும்." பேரினவாதம் புலி அழிப்பின் பெயரில் இனவழிப்பு செய்ததை, தளும்பாது ஊசலாட்டமின்றி அதை ஆதரித்த பெருமையைப் பற்றி இங்கு பீற்றுகின்றார்.

மேற்கண்டவாறு கூறுகின்றார் மணியண்ணை. முதலில் மணியத்தின் இன்றைய அரசியல் என்ன? இலங்கையில் பேரினவாதத்தை எதிர்த்து போராடுவதில் உள்ள, அவரின் சுயாதீனமாக அரசியல் நிலை என்ன?

"பாசிசப் புலிகளை அழித்தொழிப்பதற்கான பொதுப் போராட்டத்தில்", தேனீ மட்டுமல்ல நீங்களும் பேரினவாதத்துடன் கூடி நின்றீர்கள், நிற்கின்றீர்கள். இதற்கு வெளியில் வேறு மக்கள் அரசியல் எதுவும் சுயாதீனமாக கிடையாது. இன்று பேரினவாதத்துக்கு உங்கள் வரலாறு தேவைப்படுகின்றது.

நீங்கள் பேரினவாதத்தை சார்ந்து நின்று மற்றவர்கள் பற்றி கூறுவது போல் "இடதுசாரித்துவம் பேசியவர்கள் சிலரும், மாற்றுக்கருத்துக் கதைத்தவர்களும், மனித உரிமைக் கோசம் போட்டவர்களும் சந்தர்ப்பவாதிகளாகவும், பதவி வேட்டைக்காரர்களாகவும், ஓடுகாலிகளாகவும் மாறிப் புலிகளின் காலடியில் சரணாகதி அடைந்துவிட்ட" தாக கூறுகின்ற அதே அரசியல் பாத்திரத்தை, நீங்கள் பேரினவாதத்தைச் சார்ந்து செய்துள்ளீர்கள். ஒரு ஓடுகாலியாக மாறியது மட்டுமின்றி, "பாசிசப் புலிகளை அழித்தொழிப்பதற்கான பொதுப் போராட்ட" மாக காட்டி மார்க்சியத்தை திரித்துப் பிழைத்த பிழைப்புவாதியாகினீர்கள்.

"சந்தர்ப்பவாதிகளும், பதவி வேட்டைக்காரர்களும், ஓடுகாலிகளும்" புலியுடன் மட்டும் இருக்கவில்லை. பேரிவானத்துடன் கூட இந்த மாதிரியான ஓட்டுண்ணிக் கூட்டம் கூடி வாழ்ந்தது. சிங்களத்தில் இடதுசாரியம் பேசிய கூட்டம் மட்டுமல்ல, தமிழில் இடதுசாரியம் பேசிய உங்களைக் போன்றவர்களும் கூட, பேரினவாதத்தை தொழுதீர்கள். இதற்கு நீங்கள் கொடுத்த விளக்கம் "பாசிசப் புலிகளை அழித்தொழிப்பதற்கான பொதுப் போராட்டம்" என்று நீங்கள் கூற, உங்களைப்போல் புலியுடன் நின்றவர்கள் பேரினவாதத்தை ஒழிக்கும் பொதுப் போராட்டம் என்கின்றனர்.

இப்படி இடதுசாரியத்தின் பெயரில் நீங்கள் நடத்திய ஓடுகாலித்தன அரசியல், மக்களை அணிதிரட்டி சொந்தக் காலில் நின்று போராடுவதை அரசியல் ரீதியாக மறுத்தது. மாறாக "பொதுப்போராட்டத்தின்" பெயரில் அரசும் புலியும் மக்களை ஒடுக்கியது. இதன் தொடர்ச்சியில் மணியண்ணை பேரினவாதத்துடன் நின்று, புலியின் வதைபற்றி இன்று கூறு முற்படுகின்றார். இதனடிப்படையில் நின்று இதை பார்த்து அணுக வேண்டியுள்ளது.

 

பி.இரயாகரன்

18.06.2011