அம்மாவின் வாய்வழி ஈழச்சொல் விழுமென
காவடியாட காத்துக் கிடக்கிறாங்கள்
இருப்பாய் புழைப்புவாதிகளே
முதல்வர் அம்மாவின் செருப்பாய்
நெருப்பாய் நிமிரும்
தமிழக உணர்வை அணைப்பாய்
சட்டசபை சரித்திரம் படைத்ததாய்
மக்கள் எழுச்சியைத் தடுப்பாய்…..
வீரவசனம் உரைப்பாய்
வெறிகொண்டாடி
இளைஞரை தீக்குளிக்க வைப்பாய்
ஈழத்தமிழர் இன்னலே உரமாய்
ஜெயலலிதா காலடியில் கிடப்பாய் போ..
மானுடப்பேரழிவு
வாக்குப்பொறுக்கிகளிற்கும்
ஏய்த்துப்புழைப்போருக்கும் வாய்ப்பாய்ப்போச்சு
அம்மாவின் வாய்வழி ஈழச்சொல் விழுமென
காவடியாட காத்துக் கிடக்கிறாங்கள்
வாழ்த்துரையும் விழாவென
துடித்துச் செத்தசனத்தை நித்தம் வதைக்கிறாங்கள்
சோத்துப்பருக்கைக்கு ஏழைகள் குளறுது
சொந்த நிலத்தையே
கம்பனிகள் விழுங்குது–அட
எந்தச் சீமானும் போராடக்காணோம்
அம்மாவின் வாய்வழி ஈழச்சொல் விழுமென
காவடியாட காத்துக் கிடக்கிறாங்கள்……..
கடலில் மீனவர் கண்ணீர் தொடர் கதை
விழைச்சல் நிலமெலாம்
வெடித்துப் பாளமாய்க் கிடக்குது
குடிக்கும் தண்ணீரை
கொக்ககோலா அடியோட உறிஞ்சி இழுக்குது-அட
எந்தச் சீமானும் போராடக்காணோம்
அம்மாவின் வாய்வழி ஈழச்சொல் விழுமென
காவடியாட காத்துக் கிடக்கிறாங்கள்………………
இந்திய மாநிலத்து எல்லாத்தெருக்களிலும்
உழைப்பவர் உரிமைக்காய்
இரத்தம் சிந்திய வண்ணம்தான்
ஓவ்வொரு பொழுதும் செந்தணலாய் விடிகிறது
இந்தச் சீமான்கள் போராடக்காணோம்………….
கங்கா
13/06/2011