மக்களுக்கு உண்மைகளைச் சொல்லாத ஊடகம் மற்றும் ஊடகவியலாளனின் உரிமை பற்றி பேசும் அரசியல் மக்கள் விரோதமானது. இது மக்களுக்கான உரிமையை மறுப்பதை, ஊடகவியலாளனின் உரிமையாக சித்தரிப்பதாகும். இங்கு ஆளும் வர்க்கங்களுக்கு இடையிலான மோதலில் சிக்கும் ஊடகம் மற்றும் ஊடகவியலாளனின் சார்பு நிலைப்பாடு, மக்களைச் சார்ந்து நின்றதால் ஏற்பட்ட உரிமைப் பிரச்சனையல்ல. இதை அரசியல் ரீதியாக மதிப்பிடுவதன் மூலம் தான், இதை அரசியல் ரீதியாக அம்பலப்படுத்தவேண்டும்.

 

 

 

புலிக்கொடியைப் பிடித்தல் சரியா பிழையா என்று புலிக்குள்ளான இழுபறியில் நடக்கின்ற குத்துவெட்டுகளை, ஊடக சுதந்திரம் பற்றிய விவாதமாக இனியொரு திசைதிருப்புகின்றது இனியொரு. புலியுடன் கூடி கூட்டம் போட்ட போது புலிகொடியைப் பிடிக்கக் கூடாது என்ற இனியொருவின் அரசியல் தகிடுதத்தங்களை நியாயப்படுத்த, இங்கு ஊடக தர்மம் பற்றி பேசுகின்றனர்.

தீபம், அதிர்வு போன்ற புலி ஊடகங்கள் கடந்தகாலத்தில் எதைச் செய்தனவோ, அதை இன்று தமக்குள் செய்கின்றனர். புலிகளின் இரு கோஸ்டிகளுக்குள்ளான மோதல், புலி மிதவாதிகளுக்கும், தீவிரவாதிகளுக்குமான மோதல், மற்றும் வியாபாரத்தை எதைச் சார்ந்து இனிச் செய்வது என்ற மோதலை, ஊடக சுதந்திரம் சார்ந்ததாக இனியொரு திரித்துக் காட்டுகின்றது.

புலிக்கொடியைப் பிடித்தல் பற்றிய விவாதம் நடத்த முடியுமென்றால், அதை பிடித்தல் சரி என்ற தரப்பின் கருத்தை தீபம் முடக்க முடியும் என்றால், அதிர்வு அதைத்தான் செய்கின்றது. தீபம் கடந்தகாலத்தில் மற்றவர்களுக்கு செய்ததை இன்று அவர்களுக்குள் செய்கின்ற போது, நடக்கின்ற மோதலை ஊடக சுதந்திரத்துக்கு விடப்பட்ட சவால் என்கின்றது இனியொரு. மக்களுக்கு உண்மை சொல்லாத ஊடகங்களின், சுதந்திரம் பற்றிய கவலை இனியொருவுக்கு.

மக்களுக்கு வெளியில், மக்கள் நலனைச் சாராத கூட்டத்துக்கு இடையிலான மோதலை, மக்கள் நலன் சார்ந்ததாகக் காட்டுவதன் மூலம் தான், தங்களைச் சமூகத்தில் தக்கவைக்கின்றனர். இந்த வகையில் இனியொரு இணையம், அந்த வேலையைச் செய்கின்றது.

மகிந்த அரசு சிவராமைக் கொன்ற போது அதை கண்டிக்கின்றோம் என்றால், அரச பாசிசத்தைத்தான். சிவராம் போன்றவர்கள் புலியின் சம்பளப்பட்டியலில் இருந்து அரச பாசிசத்தை எதிர்க்க, புலியின் பாசிசத்தை தூக்கி நிறுத்திய மக்கள் விரோத அடிப்படையை அம்பலப்படுத்தியபடிதான், அரச பாசிசத்தை சிவராம் கொலையில் நாம் அம்பலப்படுத்துகின்றோம்.

கண்டனங்கள் என்பது, மக்களைச் சார்ந்ததாக அதன் முழுமையான பக்கத்தை உள்ளடக்கியதாக அமைய வேண்டும்;. இதுவல்லாத கண்டனங்கள், சந்தர்ப்பவாதத்தை அடிப்படையாகக் கொண்டு மக்களை பிழையாக வழிகாட்டி இட்டுச் செல்வதாகும். மக்கள் விரோதிகளுக்கு இடையிலான மோதலையும், அதன் வெளிப்பாடுகளையும் அதற்கு எதிராக முன்னிறுத்த வேண்டும். ஒன்றை புரட்சியின் அங்கமாக ஊடக சுதந்திரத்துக்கு சவாலாகக் காட்டுவது அதைத் திரிப்பதாகும்.

புலிகளும் அரசும் நடத்திய மக்கள் விரோத யுத்தத்தை விடுதலைப் போராட்டம் என்று கூறியது போல், அதிர்வு தீபத்துக்கு இடையிலான விடையத்தை ஊடக சுதந்திரம் மீதான தாக்குதலாக இனியொரு திரிக்கின்றனர். அரசும் புலியும் மக்கள் நலனை முன்வைத்துத் தான் போராடி தியாகம் செய்ததாக கூறியது போல் தான், தீபம் அதிர்வுக்குள் ஏதோ மக்கள் நலன்சார்ந்த கூறு இருப்பதாக காட்டிவிட இனியொரு முற்படுகின்றது.

இங்கு பேசப்பட்ட விடையமே புலிக்கொடி பற்றியது. புலி அரசியல் பற்றியதல்ல. புலிக்கொடியை பிடிப்பதுதான், புலத்தில் போராட்டங்களின் பின்னடைவுக்கு காரணம் என்று கூறுகின்ற புரட்டை அடிப்படையாகக் கொண்டது. இதை விவாதம் செய்தவர்கள் புலியும், மறுபக்கத்தில் அரசின் பின்செயல்படுகின்றவர்கள் உள்ளடங்கிய மாற்று அரசியல்காரர்கள். சாராம்சத்தில் புலி, புலியெதிர்ப்பு அடிப்படையில் புலிகொடியைப் பற்றி புலிக்குள் நின்று பேசுகின்றனர்.

இங்கு கொடிதான் இன்றைய போராட்டத்தை குறுக்குவதான அரசியல் விம்பத்தை ஏற்படுத்தி, புலி அரசியல் பின் மக்களை நிலைநிறுத்த புலியின் ஒரு பகுதி பாசாங்கு செய்கின்றது. இதன் மூலம் புலிக்கொடி இல்லாவிட்டால், தங்களும் புலியுடன் ஒன்று கலந்துவிடலாம் என்ற அதே புலித் தேசிய அரசியலை அரசியலாகக் கொண்டவர்கள். இதற்குள் அரசு தன்னை நுழைக்கின்றது.

புலிகளின் இருகுழுக்கள் இடையிலான மோதல், புலிக்கொடி தொடர்பான விவாதமாக மாற்றுகின்றது. இதில் தேசம்நெற்றைச் சேர்ந்தவரும் அரசுடன் இயங்குபவர்களும் கூட, புலிக்கொடியை தூக்குவதை எதிர்க்கின்றனர். மகிந்த அரசு புலிக்கொடியை தூக்குவதை எதிர்ப்பது போல், நாடுகடந்த தமிழீழக்காரரும் இதே நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். இந்த அடிப்படையைக் கொண்ட மிதவாதிகள். இதைவிட மார்க்சியத்தை பேசும் உள்ளீடுகள். இதனால் இதை விவாதத்துக்கு கொண்டு வருகின்றனர்.

இப்படிப்பட்ட அரசியல் பின்னணியில், இந்த விவாதத்தை வழிநடத்தும் தனிப்பட்ட நபர்களின் மேலான காழ்ப்பாக மாற்றும் போது, அதைக் கண்டிப்பதாக பாசாங்கு செய்து இந்த மக்கள் விரோத அரசியலை இனியொரு திரிக்கினற்து.

புலிக்கொடியை உயர்த்தக் கூடாது என்பதான இனியொருவின் அரசியல் நிலைப்பாடு இங்கு மையமாகின்றது. அதனால் இனியொரு இதை ஊடகத்துக்கு விடுக்கும் சவாலாக காட்ட முனைகின்றது. இங்கு இனியொருவின் பிரச்சனை என்ன? புலிக்கொடிதான். புலியுடன் சேர்ந்து தாங்கள் கூட்டம் போடும் போது, அங்கு புலிக்கொடியை பிடிப்பது தாங்கள் சேர்ந்து நடத்தியதாக காட்டுகின்ற காட்சி விம்பத்தை தகர்த்து விடுகின்றது என்ற தீராத கவலை. இந்த ஊடக சுதந்திரத்தை மறுக்கின்ற புலியுடன் சேர்ந்து இனியொரு அரசியல் நடத்திய போது, ஊடக தர்மத்தை மீறாத சுயதணிக்கை மூலம் ஊடக சுதந்திரத்தை தமக்குத்தாம் மறுத்தவர்கள் தான் இந்த இனியொரு. இதனால் இதை மறுப்பதற்கு துணைநின்றவர்கள். இன்று புலி அரசியலுடனான இணக்கப்பாடு கசக்கின்ற போது, ஊடகதர்மம் பற்றி மூக்கால் அழுகின்றனர்.

புலிகளின் இருகோஸ்டி சார்ந்த புலிக்கொடி பிடிப்;பது சரியா பிழையா என்ற விவாதத்தை தீபம் நடத்தியவுடன், அதற்கு எதிரான புலிகளின் வழமையான தொடர்ச்சியான பாணியை திடீரென இனியொரு ஊடக சுதந்திரம் மீதான மிரட்டலாக காட்ட முற்பட்டது. ஆனால் இவை அன்றாடம் நடப்பவைதான். அவர்கள் புலியுடன் கூடி அரசியல் நடத்திய போது, அங்கு அதுவும் இணைந்து தான் பயணித்தது.

புலிக்கொடி பிடிப்பது சரியா பிழையா என்று விவாதிப்பது ஊடக சுதந்திரம் என்றால், இந்த நிகழ்ச்சியை நடத்துவது சரியா பிழையா என்று மறுதரப்பால் விவாதிக்க முடியும். இங்கு ஒன்றாக இருந்த, அண்ணன் தம்பிக்கு இடையிலான முறுகல். புலிக்கொடியால் இதற்குள் புகுந்து அரசியல் நடத்த முடியாத அல்லலுறும் இனியொரு, இதற்குள் ஊடக அறம் பற்றிப் பேசுகின்றது.

கடந்த ஒரு வருடத்தில் எமது புதிய ஜனநாயக மக்கள் முன்னணி, நோர்வே பாரிஸ் லண்டன் போன்ற இடங்களில் துண்டுப்பிரசுரத்தை மக்கள் மத்தியில் விநியோகித்த போது புலிகள் அதைப் பறி;த்தனர், அச்சுறுத்தினர். இதன் போதெல்லாம் இனியொரு கண்டு கொள்ளாத ஊடக தர்மம், புலியுடன் ஓன்றாகக் கூட்டம், சந்திப்புகள், விவாதங்கள் நடத்திக்கொண்டு புலியைப் பகைக்காத இணக்க அரசியல் செய்துகொண்டு இருந்தனர்.

புலிகள் தாமல்லாத அனைத்தையும் மறுத்து, அதை மற்றவனுக்கு அனுமதிப்பதில்லை. இதுதான் பொது நடைமுறை. வன்னித் தலைமையின் அழிவின் பின், இது ஆங்காங்கே மீறப்படும்போது, அதை தூக்கி நிறுத்திவிட முற்போக்கு முதல் ஊடக சுதந்திரம் வரை தமக்கு சாதகமாக பயன்படுத்துகின்றனர். தன் போர்க்குற்றத்தை மறுத்து, அரசின் போர்க்;குற்றத்தை மட்டும் பேசும் புலி ஜனநாயகம் போன்றது தான், இங்கு இதுவும்;. அரசு, புலியின் ஜனநாயக மறுப்பைப் பயன்படுத்தி ஜனநாயக மீட்பாளராக தன்னை காட்டிக்கொண்டது போல் தான், இன்று பலரும் திடீர் திடீரென வெளிவருகின்றனர்.

திடீர் மார்க்சியம், திடீர் ஜனநாயகம் பேசி தம்மை வெளிப்படுத்தி வந்த இனியொரு, தான் பிழைக்க ஒளிவட்டம் கட்டுகின்றனர். இந்த வகையில் புலியை அண்டி வாழ்ந்த கூட்டம் இனி அதைக்கொண்டு மட்டும் வாழமுடியாது போடும் புது வேஷத்தைச் சுற்றி ஒளிவட்டம் கட்டிக் காட்டுகின்றனர்.

ஆளும் வர்க்கங்கள், மக்களைப் பித்தலாட்டங்கள் மூலம் அடக்கியாண்ட ஊடகங்கள், தமக்குள் மோதிக் கொள்வதை கண்டுகொள்ளாத அரசியல். தீபம் புலிகளுடன் அண்மைக்காலமாக நடத்திய தேன்நிலவு கசந்து போக, அதிர்வு இணையத்தின் ஜனநாயக மறுப்பைப் பற்றி திடீரென இனியொரு பேசுகின்றனர். அதிர்வுக்காரர்கள் தீபத்துக்கு மறுத்த ஜனநாயகம் பற்றிப் பேசுகின்றது.

தீபம் தொலைக்காட்சியின் கடந்தகால வரலாறு என்ன? இது புலிக்கு வக்காலத்து வாங்கிய, புலிக்கு எதிரான அனைத்தையும் அதிர்வுக்காரருடன் சேர்ந்து முடக்கி வந்தனர். அதைத்தான் அதிர்வு சார்ந்த புலிக்காரருக்கு, தீபம் இன்று செய்துள்ளது. இந்த தீபம் முன்பு புலத்தில் அதிகாரம் செலுத்திய புலியுடன் கூடி, அனைத்து மாற்றுக்களையும் மறுத்து வர்த்தகம் செய்தது. மக்களுக்கு உண்மைகளை மறுத்து, ஊடக தர்மத்தைப் புதைத்தது. அதைத்தான் இன்றும் தொடர்ந்து செய்கின்றது. அதை செய்யும் தனிநபர்கள் அச்சுறுத்தப்படும்போது, ஊடக தர்மம் பற்றி பேசுகின்ற அரசியல், வங்குரோத்து அரசியலாகும்.

வன்னித்தலைமையின் அழிவின் பின் சூழலின் மாற்றமும், அதைத் தொடர்ந்து புலி இனி தங்கள் வியாபாரத்தை செய்ய உதவாது என்பதால் ஊடகங்கள் இடம் மாறுகின்றன. இதனால் தங்கள் அதிகாரம் ஆட்டம் காணும் நிலையில், புலத்து சருகுப் புலிகள் சீறிப்பாய்கின்றனர்.

கடந்தகாலத்தில் தாங்கள் அனுசரித்து போன கூட்டம், இன்று முரண்பட்டு செல்லுகின்ற போது எதிர்ப்படும் உரசல்களை, இனியொரு, ஊடகத்துக்கு விடப்படும் அச்சுறுத்தலாகத் திரித்துக் காட்டுகின்றது. இந்த ஊடகங்கள் தொடர்ந்து மக்களுக்கு உண்மைகளை கூறாது மறுக்கும் ஊடகத்தனம் பற்றிப் பேசாத கண்டனங்கள், சந்தர்ப்பவாதத்தை அடிப்படையாகக் கொண்டது. மக்களுக்கு உண்மையைப் பேசாத போலித்தனமான ஊடகங்களின் உரிமை பற்றிய பிரமைகளை விதைக்கும் அரசியலை அடிப்படையாகக் கொண்டது.

 

பி.இரயாகரன்

15.06.2011