12072022பு
Last updateபு, 02 மார் 2022 7pm

சூதாட்டக்களத்தில் தமிழர் விடுதலை அரசியல்- போராடியவர்கள் சிறையில் – பினாமிகளோ உல்லாசபுரியில் - மறுஆய்வு

சமீபத்தில் பணக் கொடுக்கல் வாங்கல்களினால் புலிகளின் தலைமை தாங்களே என்று கூறிக் கொள்ளும் கூட்டத்தைச் சேர்ந்த நெடியவன் நோர்வேயில் நெதர்லாந்து பொலிசாரின் கோரிக்கையின் பேரில் கைது செய்யப்பட்ட செய்தி நம் அனைவரும் அறிந்ததே!

 

கொள்கைக்காக எல்லாவற்றையயும் இழந்து நின்ற காலம் போய் இப்போது யார் எவ்வளவு பணத்தைச் சுருட்டிக் கொள்வது என்பதாக நமது அரசியல் சுயநலக் கூட்டமொன்றிற்குள் அகப்பட்டுச் சின்னாபின்னப்பட்டுக் கொண்டிருகிறது.

சொந்தங்களையே வேட்டையாடும் இந்த தேசிய வல்லூறுகளிடம் இருந்து நமது மக்களை காப்பாற்றப் போகும் அந்த மீட்பர் யார் என்று தெரியாத சூழலில் எந்தவொரு மீட்பர் வாதத்திலும் நம்பிக்கையற்ற நாம் கடந்த காலங்களில் இவ்வாறான பினாமிகள் தேசியத்தின் பேரில் போட்ட திருகு தாளங்கள் சிலவற்றை உங்கள் முன் சமர்ப்பிக்கின்றோம்.

சமாதான ஒப்பந்த காலத்தில் தலைமையின் மேற்பார்வையில் எமது போராளிகளின் சாதனைகள் பலவற்றை நூல்களாக வெளியிட்ட அனுபவம் எமக்குண்டு. அப்போது நாம் இவ்வாறு கூறிக் கொண்டோம் – இதுவரை எதிரி மட்டுமே அறிந்ததை இனி எல்லோரும் அறியட்டும். நமது மக்கள் மத்தியில் ஒருவகை பிரம்மிப்புக் கலந்த உளவியலை உருவாக்கும் நோக்கிலேயே இதனைச் செய்தோம். இப்போது தோல்வியடைந்து விட்ட சூழலில் மக்களை விடுதலையின் பேராலும் தேசிய அரசியலின் பேராலும் கொள்ளையிட முயலும் ஒரு நயவஞ்சகக் கூட்டத்தை மக்களுக்கு அடையாளம் காட்டும் நோக்கில் எங்களுக்கு மட்டுமே தெரிந்த சில இரகசியங்களை மக்கள்மயப்படுத்த முயல்கிறோம். இது ஒரு சிறிய முயற்சி. நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய இரகசியங்கள் இன்னும் ஏராளம் ஏராளம் உண்டு. தக்க தருணத்தில் அவற்றுடன் அவ்வப்போது உங்களைச் சந்திப்போம்.

எமது தேசிய விடுதலைப் போராட்டம் பல்லாயிரக்கணக்கான தன்னலமற்ற இளைஞர் யுவதிகளின் தியாகங்களால் பரிணமித்த ஒன்று என்பதை நாம் அனைவரும் அறிவோம். இவர்களில் தொண்ணுாறு வீதமானோர் இழப்பதற்கு எதுவுமற்ற வறிய குடும்பங்களில் இருந்து பல்வேறு அக-புறக் காரணங்களால் நமது போராட்டத்தில் இணைந்து இறுதிவரை அதன் சுமைகளை தாங்கியவர்கள். வீழ்ந்தவர்கள் போக எஞ்சியவர்கள் கடந்த மே17-2009 அன்று சிறிலங்கா படைகளிடம் சரணடைந்தனர்.  இதுவரை அவ்வாறு சரணடைந்தவர்களில் 6000 இற்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர்.

இதுபோக போராட்ட காலத்தில் பிடிபட்ட நூற்றுக் கணக்கானோர் மகசினிலும், பூசாவிலும், வெலிக்கடையிலும் தங்கள் வாழ்நாளைக் கழிக்கின்றனர்.

அண்மையில் வந்த செய்தியொன்றை இதனுடன் இணைத்துள்ளோம்.
5000 ரூபாய் இல்லாததால் முன்னாள் போராளியின் பரிதாப நிலை!

மேற்குலக நாடுகளில் தாங்கள் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என்றும் சிலர் தாங்களே விடுதலைப்புலிகளின் தூண்கள் என்றும் வீரவசனம் பேசித்திரிகின்ற போதிலும் வடக்கு கிழக்கில்விடுதலைப்போராட்டத்திற்காக தங்களின் முழுக்குடும்பங்களையே தியாகம் செய்த பலர் மிகப்பெரிய பரிதாப நிலையிலேயே உள்ளனர்.

வெறும் 5ஆயிரம் ரூபா பணம் இல்லாததால் தொடர்ந்து சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலைக்கு மட்டக்களப்பில் உள்ள முன்னாள் போராளி தள்ளப்பட்டிருக்கிறார். 2004ஆம் ஆண்டு வந்தாறுமூலையில் கைது செய்யப்பட்ட மூதூர் கிளிவெட்டியைச்சேர்ந்த கந்தசாமி கரன் என்பவர் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது வந்தாறுமூலையில் வைத்து படையினரால் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிறை வைக்கப்பட்டிருந்தார்.

இவர் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஆயுதங்களை வைத்திருந்ததாகவும் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் ஆயுதப்பயிற்சி பெற்றதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி சிவபாதசுந்தரம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இவர் கடந்த 7 ஆண்டுகளாக தடுத்து வைத்துள்ளதை கவனத்தில் கொண்டு 5ஆயிரம் ரூபா காசுப்பிணையிலும் இரண்டு சரீரப்பிணையிலும் செல்வதற்கு அனுமதித்தார்.

இந்த இளைஞரின் பெற்றோர் உறவினர்கள் அனைவரும் வன்னி போரில் கொல்லப்பட்டு விட்டதால் அவரை பிணையில் எடுப்பதற்கு உறவினர்கள் யாரும் வரவில்லை. இவரின் மனைவியும் இவர் கைது செய்யப்பட்ட பின் வேறு ஒருவரை திருமணம் முடித்து சென்று விட்டார். இந்நிலையில் இவரை பிணை எடுப்பதற்கு யாரும் முன்வராத நிலையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

ஒரு போராளியை 5ஆயிரம் ரூபா செலுத்தி பிணையில் எடுப்பதற்கு யாரும் அற்ற நிலையிலேயே இன்று பல முன்னாள் போராளிகளின் வாழ்க்கை இருப்பதாக நமது கிழக்கு மாகாண செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.விடுதலைப்புலிகள் இயக்கம் என கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பல இளைஞர்களுக்கு நீதிமன்றத்தில் அவர்களுக்காக வாதாடுவதற்கோ அல்லது அவர்களை பிணையில் எடுப்பதற்கோ யாரும் அற்ற நிலையே இன்று காணப்படுகிறது.
…………………………………………………………………………………..

ஆனால் இவர்களை மீட்பது குறித்து எந்தவிதமான அக்கறையும் இல்லாது புலத்தில் சிறைப்பட்டு இருப்போரை மீட்பதற்கான வழக்குச் செலவுக்கென்றும், போர்க் குற்றவாளிகளை தண்டிப்பதற்கெனவும் கூறி காசு சேர்க்கும் பணியில் ஒரு கூட்டத்தினர் ஈடுபட்டுவருகின்றனர். இவர்கள் தங்களைத் தாங்களே மனிதநேயப் பணியாளர்கள் என்றும் கூறிக் கொள்கின்றனர். நமது போராட்டம் ஈழத்தில் அழிக்கப்பட்ட பின்புலத்தில் அதன் இயங்கு சக்திகளாக இருந்த எஞ்சிய போராளிகள் தங்களுக்கு நமது புலம்பெயர் உறவுகள் உதவுவார்கள் என்ற நம்பிக்கையுடன் சிறைகளில் காத்துக்கிடக்கின்றனர். ஆனால் புலம்பெயர் சூழலில் நடைபெற்றுக் கொண்டிருப்பதோ வேறு. இந்த பின்புலத்தில் புலம்பெயர் சூழலில் தமிழ்த் தேசியத்தின் பேரால் நிகழ்ந்து கொண்டிருக்கும் அரசியல் சூதாட்டம் குறித்தும் அதில் ஈடுபடும் குழுவினரின் பின்னணிகள் குறித்தும் சில விடயங்களை மக்கள் மயப்படுத்துவதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். இந்தக் கட்டுரை பின்வரும் இரண்டு விடயங்களை முன்னிறுத்த முயல்கிறது.

1.  புலம்பெயர் சூழலில் தமிழ்த் தேசியத்தின் பேரால் நிகழ்ந்து கொண்டிருக்கும் போலித்தனங்களின் முகத்திரையை கிழித்து அவற்றை மக்கள் முன்வைப்பது.

2.  புலிகளின் பேரில் ஒரு குறிப்பிட்ட புலம்பெயர் குழுவினர் எவ்வாறு தங்களின் நலன்களை பேணிக் கொள்வதில் தங்களுக்குள் இணைந்து கொள்கின்றனர். இதில்; அவர்களுக்கும் தமிழ் புலம்பெயர் உயர்குழாமிற்கும் இடையில் எத்தகையதொரு ஒருமித்த உடன்பாடு நிலவுகிறது.

3.  புலம்பெயர் மக்கள் இவ்வாறான பல்வேறு சக்திகள் குறித்த சுயஅறிதலுடன் அரசியல் செயற்பாடுகளில் சிந்தித்துப் பங்குபற்ற வேண்டியதன் அவசியத்தை உணரச் செய்தல். யார் இந்தப் புலத்து மனித நேயப் போராளிகள் இவர்கள் கைது செய்யப்பட்ட பின்னனிகள் என்ன?

பாரிசும் பரிதியும் – மேதகு மேதாவும்-
இவ்வாறானவர்கள் பல நாடுகளில் பிடிபட்டவர்கள். இதில் சிலர் வெளியில் வந்து மறுபடியும் தேசிய வியாபாரத்தைத் தொடருகின்றனர். சிலர் வெளியில் வர முடியாதவர்களாக இருக்கின்றனர். இதில் ஒன்றுதான் பிரான்சில் பிடிபட்ட பரிதி (றீகன்) குழுவினர்.

கிடைத்த தகல்களின் படி பரிதி உட்பட அனைவருமே தற்போது வெளியில் வந்துவிட்டனர். இவர்கள் பகிரங்கமாக நடமாடியும் திரிகின்றனர். இவர்கள் எவ்வாறு ஈழத்தில் 85 – 87களில் இயக்கம் நடந்து கொண்டதோ அதே போன்றே பிரான்சிலும் அடியாட்களை வைத்து விரட்டி அடித்து மக்களிடம் பணம் வசூலிக்கும் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர். இதுவே தற்போது பிரான்சில் புலிகளின் செயற்பாடுகள் பிரச்சனைக்குள்ளாவதற்கு ஏதுவான காரணமாகியது. பரிதியின் இந்தவகைச் காசு திரட்டும் பாணியை காஸ்ரோவும் ஆரம்பத்தில் மெச்சி ஊக்குவித்தார். இவர்களது மொழியின் படி மனிதத்தை நசித்து காசு திரட்டுவதே மனிதநேயச் செயற்பாடு. இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறைக்கு முறைப்பாடு செய்ததன் காரணத்தினாலேயே இவர்கள் பிடிபட நேர்ந்தது. பரிதியின் குழுவினர் சிறையில் இருந்த காலத்தில் காஸ்ரோவின் அனைத்துலகப் பிரிவு இவர்களை முழுமையாகக் கைவிட்டிருந்தது. பரிதி கைது செய்யப்படுவதற்கு சிறிது காலத்திற்கு முன்னரேயே காஸ்ரோவுக்கும் பரிதிக்கும் இடையிலான முரண்பாடு முற்றிவிட்டது. இந்த பின்னனியிலேயே காஸ்ரோவின் அனைத்துலகப் பிரிவு இவரை முழுமையாகக் கைவிட்டிருந்தது. இதனால் வழக்கை எதிர்கொள்வதில் உதவியற்று கஸ்ரப்பட்டபோது முன்னர் பரிதியுடன் ஒன்றாக இருந்த‌ முன்னாள் போராளிகளில் சிலரே தங்கள் சொந்தப் பணத்தைக் கொடுத்து உதவியது பற்றி  நன்கு அறிவோம்.

ஆனால் பிணையில் வந்திருக்கும் பரிதி மீண்டும் பழைய குருடி கதவைத் திறடி என்பது போல முன்னர் பிரான்சில் முக்காப்புலா ரவுடி குழுவில் இயங்கிய ஒரு சிலருடன்  இணைத்துக் கொண்டு திரிவதாகவே அறிய முடிகிறது. இதுவும் ஒரு ஏனையோரை மிரட்டும் கீறோயிச நோக்கம் தான். இவர்கள் ஒருபோதுமே அமைப்புச் செயற்பாடுகளில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள் அல்ல தவிர இவர்கள் அனைவரும் சமூக விரோதிகளாகப் பார்க்கப்பட்டவர்கள். முன்னர் அடியாட்கள் குழுவாகத் தொழிற்பட்ட மேற்படி குழுவில் பிரான்ஸ் உளவுத்துறையின் ஊடுருவலும் இருப்பதாக நம்பப்படுகிறது.

தற்போது பரிதி மீண்டும் தன்னை கைவிட்டவர்களான காஸ்ரோவின் அனைத்துலகப் பிரிவுடன் சேர்ந்து இயங்கி வருகின்றார். தலைவர் இருக்கிறார். அவருக்கு ஏதும் தெரிவிக்க விரும்பின் கடிதங்களை தரும்படியும் கேட்கிறாராம். அவர் தீவுப்பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு இந்த வியாபார வித்தை நன்றாகவே தெரிந்திருக்கிறது. மன்னிக்கவும் ஒரு பிரதேசத்தை இதில் இழுத்தற்குவிசாரணை இன்னும் முடிவடையாத நிலையில் இவரே பிரான்சின் TCC இன் பொறுப்பாளராக மீண்டும் செயலாற்றத் தொடங்கியுள்ளார் மேலும் பிரான்சில் முன்பு இயங்கிய கட்டமைப்புக்கள் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான அடாவடித்தனங்களிலும் இறங்கியிருக்கிறார். பிரான்சில் இயங்கிய விளையாட்டுக் கழகங்களுக்குள் முரண்பாடுகளை ஏற்படுத்தி அவற்றின் நிர்வாகத்தை குழப்பியுள்ளார். இவரது குழுவினர் பிரான்ஸ் பொபினியில் இயங்கிய அனைத்து விளையாட்டுக் கழகங்களின் பொறுப்பில் இருந்த உபகரணங்களை அபகரித்துச் சென்றிருக்கின்றனர். தற்போது பிரான்ஸ் தமிழ்ச் சோலையின் நிர்வாகம் மாற்றப்பட்டுள்ளது. இதன் கணக்கில் இருந்த 24ஆயிரம் யூரோக்கள் இத்தாலியில் கைதான மனிதநேயச் செயற்பாட்டாள‌ர்களின் வழக்கிற்கென கூறி அபகரிக்கப்பட்டுள்ளது. கல்விச்செயற்பாட்டில் இருக்கும் தமிழ்ச்சோலையின் மக்கள் பணம் நேரடியாக  பரிதியால் கையாடப்பட்டுள்ளது.

இந்த மனிதநேயச் செயற்பாட்டார்களின் வழக்குச் செலவுகளுக்கென்று கூறி 27.2.2011 அன்று‘கரம்கொடுப்போம்’ என்னும் நிகழ்வு காலை-மாலை என்ற அடிப்படையில் 10 யூரோ பிரவேசக் கட்டணத்துடன் நடாத்துவதற்கான அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்ததை நீங்கள் அறிவீர்கள்.


மெல்பேர்ண் யாதவன்- ஆரூரன் கூட்டு மோசடி

 

 

 

 

அடுத்த குழுவினர் – யாதவன் மற்றும் ஆருரன். ஆரம்பகாலத்தில் காஸ்ரோவின் தொண்டரடி விசுவாசிகளாக இருந்த இவ்விருவரும் அவுஸ்ரேலியாவில் பிடிபட்டு விடுதலையானவர்கள். இதில் யாதவன் இயக்கப் பணத்தில் ஆரம்பித்த கட்டிட ஒப்பந்த வியாபாரம் Construction Company ஒன்றை தனது சொந்த வியாபாரம் என்று கூறி அபகரித்தார். ஆருரன் கைது செய்யப்பட்டபோது இவரது வங்கிக் கணக்கில் இருந்த பல கோடிகள் (பலலட்சம் அவுஸ்ரேலிய டொலர்கள்) வங்கியால் இரத்தாக்கப்பட்டது. இப்படித்தான் நமது மக்கள் போராட்டத்திற்காக கொடுத்த பணம் எல்லாம் இந்த போலித் தேசியவாதிகளின் அற்ப நலன்களால் கரைந்து போனது. இவர்கள் இருவரும் தங்கள் மேதாவிலாசத்தால்தான் பிடிபட நேர்ந்தது.

மே2009 இற்கு முன்னர் இந்த இருவரதும் வழக்குச் செலவுக்கென இவர்களது ஆதரவாளர்களால் அவுஸ்ரேலியாவில் பணம் சேகரிக்கப்பட்ட போது காஸ்ரோ ஒரு காட்டமான வீடியோவை பதிவு செய்து இருவரையும் மற்றும் நிதிசேகரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இவர்களின் ஆதரவாளர்களையும் கடுமையாக எச்சரித்திருந்தார். இதனால் இவர்களும் இவர்களது ஆதரவாளர்களும் காஸ்ரோ மீது வெறுப்புக் கொண்டனர். பின்னர் மே2009 இல் எல்லாம் முடிந்தவுடன் உடனடியாக இவர்களது பொருளாதார ஆலோசகர் ஜோய் மகேஸ்வரனுடன் சேர்ந்து இயக்கத்தின் பேரில் மாமனிதர் ஜெயக்குமாரால் மக்கள் பணத்தில் வாங்கப்பட்டிருந்த இயக்கச் சொத்தான வீடொன்றை தன்னிச்சையாக விற்றுக் கொண்டனர். இது குறித்து அவுஸ்ரேலிய புலித்தேசியவாதிகள் எவரும் வாய் திறக்கவில்லை. இறுதியில் யாதவன் மற்றும் கஸ்ரோவின் பணிப்பில் சேறடித்தவர்களென எல்லோருமாகச் சேர்ந்து மனித நேயச்செயற்பாட்டாளர்களின்  வழக்கு வெற்றியை வெற்றி விழாவாக‌ கொண்டாடினர்.

அமெரிக்க ஆயுத கொள்வனவாளர்கள் கைதும் – ஸ்ரிபன் கைதும்

இன்று எங்கட இயக்கம் இருக்கிறது அது எங்களை கைவிடாதென்ற நம்பிக்கையில் இருந்த பலர் உதவியற்று சிறையில் வாடுகின்றனர். 2006 இல் அமெரிக்காவில் ஆயுதம் வாங்கப் போனவர்கள் பொட்டரின் ஆட்கள் என்ற காரணத்தினால் அவர்களது வழக்கு விடயத்தில் மேதகு பிரபாகரன் எந்த உதவியும் செய்யாது பாராமுகமாகச் செயற்பட்டார் என்பது வெளியில் தெரியாத செய்தி.

எங்களை எங்களது குடும்பங்களை தலைவர் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கையின் பேரில்தான் புலம்பெயர் நாடுகளில் பலர் தங்களை பணயம் வைத்து செயற்பட்டனர். ஆனால் இன்று எந்த உதவியுமற்று 25 வருடங்களைச் சிறையில் கழிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகியிருக்கின்றனர். காகம் இருக்கப் பனம்பழம் விழுந்தது போல் அமெரிக்க சம்பவத்தின் பின்புலத்தில் ஏற்கனவே அவதானிக்கப்பட்டுக் கொண்டிருந்த பலர் கடனாவில் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு அண்மையில் கைது செய்யப்பட்ட சுரேஸ் சிறிஸ்கந்தராஜா தனக்கு நிதியுதவி கோரி இணையத்தளங்களில் செய்தி வெளியானதும் பின்னர் அவர் அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்படுவதான செய்திகள் வெளியாகியது. இறுதியில் அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்.

 

புலிகளின் கப்பல்களின் நகர்வை காட்டிக்கொடுத்த ஸ்ரிபன்


2006 இல் இந்தோனேசிய‌ யகார்த்தா விமானநிலையத்தில் இரண்டு லப்டப்புக்களுடன் பிரதீபன் இயக்க பெயர்: ஸ்ரிபன் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் பிரித்தானியாவில் இலத்திரனியல் படித்துவிட்டு நாடுதிரும்பிய போது தலைவர் தனது பிரத்தியேக இலத்திரனியல் கொள்வனவுக்கென மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா எனச் சில நாடுகளுக்கு அனுப்பிவிவைத்தார். போதிய அனுபவமில்லாத இவர் இரகசிய ஆவணங்கள் அடங்கிய இரண்டு லப்டப்புக்களுடன் யகார்த்தா விமான நிலையத்தில் பிடிபட்டதுடன் உடடியாகவே அமெரிக்காவிற்கு கொண்டு செல்லப்பட்டார்.

எமக்கு கிடைத்த தகவல்களின்படி மேதகு இவரது வழக்கு விசாரணைகளுக்கென ஒரு வழக்கறிஞரை ஏற்பாடு செய்திருந்தார். முன்னர் அமெரிக்காவில் பிடிப்பட்டவர்களின் தகல்வகளின் படி பிரதீபன் சகல இரகசியங்களையும் வெளியிட்டிருக்கிறார் என்பது தெரியவருகிறது. இதனைச் சொல்லுபவர்கள் கூடவே இவருக்கு வழக்கறிஞர் வைக்க முடியுமென்றால் ஏன் எங்களுக்கு தலைவர் ஒன்றும் செய்யவில்லை நாங்களும் அதே இலட்சியத்திற்காகத்தானே இந்தச் சிறையில் கிடக்கிறோம்.

இந்தப் பிரதீபன் என்பவருக்கு மேதகுவால் பொருட்கள் பரிமாற்றத்திற்கான கப்பல்களை ஒழுங்கபடுத்துபவர்களுடனான தொடர்புகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தது. அண்மையில் விக்லீக்ஸ் வெளியிட்டுள்ள செய்தியொன்றின் படி புலிகளின் கப்பல்கள் தாக்கப்பட்டதன் பின்னனியில் அமெரிக்கா செயற்பட்டதாக அறிய முடிகிறது. ஆனால் இவ்வாறானதொரு கருத்து ஏற்கனவே  இருந்தது. ஆனால் மக்குகளின் கூட்டணி கே.பிதான் அனைத்து கப்பல்களையும் காட்டிக் கொடுத்தவர் என்று பிரச்சாரம் செய்தது. இந்தச் செய்தி அதனை புஸ்வாண‌மாக்கப் போகிறது.

அவுஸ்ரேலியாவில் கைது செய்யப்பட்ட பாலபத்த பென்டியின் பின் கதவு தொடர்பாளர்:

இதே போன்றுதான் 2006 இறுதியில் அல்லது 2007 இல் அவுஸ்திரேலியாவில் தனியார் கல்லூரி ஒன்றை நடாத்தி வந்தவர் கைது செய்யப்பட்டார். இவர் தமிழ்ச் செல்வனால் அனுப்பி நிலைப்படுத்தப்பட்ட உறுப்பினர். இவரது கைதும் மலேசியா ஊடாக செய்யப்பட்ட பணப்பரிமாற்றம் ஒன்று கண்காணிக்கப்பட்டு அமெரிக்க பெடரல் உளவுத் துறையின் மேற்பார்வையில்தான் நிகழ்ந்தது.

இவரது வழக்குச் செலவுகள் இவரின் மனைவியின் (அவுஸ்ரேலியா வந்த பின்னர்தான் காதலித்து திருமணம் செய்து கொண்டார்) சகோதரியின் வழியால் கவனிக்கப்படுகிறது. இவரையும் விரைவில் மேலதிக விசாரணைகளுக்காக அமெரிக்கா கொண்டு செல்லப்படவுள்ளதாக அறிய முடிகிறது.

ஜேர்மனி வாகீசனும் காட்டிக்கொடுக்கப்பட்ட அகிலனும்:

ஜேர்மனியில் கைது செய்யப்பட்ட வாகீசன் மற்றும் குழுவினர் இவர்களின் கைதும் பிரான்ஸ் போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட மிரட்டிப் பணம் பறிக்கும் செயற்பாடுகள் கண்காணிக்கப்பட்டு ஏலவே இவர்கள் தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாடுகளினால் நிகழ்ந்தது. கொலண்டில் நிகழ்ந்த கைதுகளும் இவ்வாறான ஒரு நடவடிக்கையின் விளைவே!
வாகீசன் ஜேர்மனியில் கைது செய்யப்பட்டு ஜேர்மனிய உளவுத்துறையின் விசாரணையில் வாகீசனின் காட்டிக்கொடுப்பில் வாகீசனின் பினாமியான பல இலட்சம் யூரோ மக்கள் பணத்துடன் மடகஸ்காரில் மறைந்திருந்த அகிலன் மடகஸ்காரில் இருந்து நாடு கடத்தப்பட்டு கைதுசெய்யப்பட்டதும் அறிந்ததே.

மலேசியாவில் கைது செய்யப்பட்ட கம்சா:

மக்குகளின் மலேசிய பினாமி ராஜன் கைது பற்றியும் இந்த இடத்தில் சிறிது பார்ப்போம். பொதுவாக புலத்துப் பணம் மலேசியாவுக்கே கைமாற்றப்படுவதுண்டு. எம‌க்கு கிடைத்த நம்பகமான தகவல்களின்படி ராஜன் தனது மலேசிய பினாமிகளுடன் தொடர்பு கொண்டு எல்லாப் பணத்தையும் சிறிலங்காவிற்கு எடுத்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. ராஜன் தனது பாதுகாப்பிற்காக ஏற்பாடு செய்திருந்த மலேசிய சட்டத்தரணி பசுபதி ஊடாகவே இந்த விடயங்களைச் செய்து கொண்டிருக்கிறார். இது பற்றி பசுபதியிடம் கேட்டால் முன்னரும் ராஜன் சொன்னதைத்தான் செய்தனான் இப்போதும் ராஜன் சொல்லுவதைத்தான் செய்து கொண்டிக்கிறன் என்று பதில் சொல்லுகிறாராம்.

இவ்வாறு நமது தேசிய விடுதலைப் போராட்டத்தை காசு மரமாகப் பயன்படுத்திக் கொள்ளுபவர்களுக்கும் புலத்தில் இயங்கிவரும் உயர் குழாத்தினருக்கும் இடையில் எழுதப்படாத உடன்பாடொன்றுண்டு. ஒருவரை ஒருவர் எக்காரணம் கொண்டும் குறை சொல்லாது தங்களுக்குள் நல்ல பிள்ளையாக நடந்து கொள்வது என்பதுதான் அந்த உடன்பாடு. பனிக் குளிர் என்றும் பாராது மக்களை வீதிக்கு அழைத்து இந்தப் படை போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா என்றெல்லாம் இயங்குவதற்கு மேற்குறிப்பிட்ட புலம்பெயர் உயர் குழாத்தினருக்கு இவ்வாறு கலண்டர் விற்கும் லும்பன்களின் தயவு தேவை.

இதன் காரணமாகவே ஒருவருக்கு ஒருவர் பக்கபலமாக செயற்பட்டு வருகின்றனர். சமீபகாலமாக புலம்பெயர் சூழலில் காளான்கள் போன்று இணையத்தளங்கள் பெருகி வருவதும் இதன் விளைவே! ஏனென்றால் தமிழ் நெற்றிலோ அல்லது தமிழ் கார்டியனிலோ தேசியம் தலைவர் இருக்கிறார், போர்க்குற்றம் என்றெல்லாம் எழுதுவதன் மூலம் மக்களை உசுப்பேத்த முடியாது எனவேதான் இவ்வாறான அனாமதேய இணையத்தளங்கள் குறிப்பிட்ட உயர் குழாத்தினருக்குத் தேவைப்படுகிறது.

 

மக்களை ஏமாற்றி தேசியத்தின் பேரால் காசு பண்ணும் இவ்வாறான லும்பன் கூட்டத்தினரை அம்பலப்படுத்துபவர்களை தாக்குவதற்கும் சமூகத்தின் மத்தியில் இருந்து அன்னியப்படுத்துவதுமே இவ்வாறான அனாமதேய இணையத்தளங்களின் பிரதான நோக்கம் ஆகும். ஏனெனில் தமிழர்கள் மட்டுமல்லாது சிறிலங்காவின் நிலைமைகள் தொடர்பில் கவனம் செலுத்திவரும் ஏனைய நாடுகளின் அரசியல் அவதானிகளும் தமிழ்நெற் மற்றும் தமிழ் கார்டியன் போன்றவற்றை படிப்பதாலாயே தங்களது கோமாளித் தனங்களையும் போக்கிரித்தனங்களையும் அதில் காட்டிக் கொள்ளாது இவ்வாறான அனாமதேய இணையத்தளங்கள் மூலம் மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று சிறிலங்காவின் சிறைகளில் பல நூறு வெடிகுண்டுப் போராளிகளும் அதனைச் சுமந்து சென்ற ஆண் பெண் வேறுபாடற்ற குடும்பஸ்தர்களான ஆதரவாளர்களும் பலர் சிறையில் பல வருடங்களாகவும் சிலர் தசாப்தகாலமாகவும் தங்கள் எதிர்காலம் பற்றி எதுவுமறியாது கிடக்கின்றனர். இவர்கள் அனைவரும் 2009 மே மாதத்திற்கு முன்னர் பல்வேறு நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டவர்கள். மத்திய வங்கி குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்டவர்கள் ஒரு தசாப்த காலத்தை சிறையில் கடந்து விட்டனர். புலிகள் இருந்தவரை இவ்வாறனவர்களுக்கு மாதாந்தம் மணி ஓடரில் பணம் அனுப்பிக் கொண்டிருந்தனர். ஆனால் அதுவும் 2009 மே மாதத்துடன் நின்று விட்டது. வழமையாக கைதிகளைப் பார்வையிடும் ஜ.சி.ஆர்.சியும் அந்தச் சேவையை இரண்டு வருடங்களுக்கும் மேலாக நிறுத்தி விட்டது. இது குறித்தெல்லாம் எந்தக் கரிசனையும் இல்லாமல்தான் இப்போது புலத்தில் இருக்கும் மனித நேயப் பணியாளர்களை மீட்கப் போவதான கதையளப்புக்கள் நடக்கின்றன.

இதுவா நாம் தமிழ்த் தேசியத்திற்காக தங்களது வாழ்வைத் துறந்து குடும்பங்களைத் துறந்து வந்தவர்களுக்கு கொடுக்கும் உயரிய விருது? உண்மையில் இதுதான் நாம் செய்யும் துரோகம். இதே போன்று இந்தியாவில் போள்ஸ் கடத்தியவர்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் கடத்திய மனித நேயப் பணியாளர்கள் பலரும் எவரும் கவனிப்பாரற்று சிறையில் வாழ்நாளைக் கழித்து வருகின்றனர். அவர்களது விடுதலைக்காக வெல்லாம் குரல் கொடுப்பதற்கு எவரும் இலலை.

இன்று ஒரு புறம் புலத்தில் சிறையில் கிடப்போரை மீட்பதற்காக சிலர் ‘கலை மாலை’ என்றெல்லாம் கழியாட்ட நிகழ்வுகள் நடாத்தி காசு பிடுங்கிக் கொண்டிருக்கும் போதே மறுபுறம் நீண்ட காலமாக அமெரிக்க மற்றும் அவுஸ்ரேலியா,கனடா போன்ற நாடுகளில் சிறையில் கிடக்கும் தங்கள் உறவுகளை மீட்டுத் தருமாறு தங்கள் பூர்வீக நாடான இலங்கைக்குச் சென்று பாதுகாப்புச் செயலர் கோத்தபாயவிடமும் ஹெந்த விதாரணவிடமும் சிலர் மன்றாடிக் கொண்டிருக்கின்றனர். சண்டைக்காரன் காலில் விழுவதன் மூலம் எந்த நியாயமும் கிடைக்கப் போவதில்லை என்று தெரிந்தும் அவர்களை அவ்வாறு போகத் தூண்டியது எது?

புலத்தில் இருக்கும் தேசியவாதிகள் என்போர் அவர்களை கைவிடாது இருந்திருந்தால் அவர்கள் இவ்வாறு போக நேர்ந்திருக்குமா? எங்கள் இயக்கம் இருக்கின்றது. அது எங்களை கைவிடாது என்று நம்பியவர்களை கொழும்பு நோக்கி தள்ளிவிடுபவர்களாக இருப்பவர்கள் யார்? சலுகை அரசியல் எங்கிருந்து தொடங்குகின்றது என்று பார்த்தீர்களா!

இவை குறித்தெல்லாம் சிந்திக்க வேண்டிய பொறுப்பு யாருக்கு உரியது? தொடர்ந்தும் நாம் இவர்களின் போக்கிரித்தனங்களை அமைதியாக அங்கீகரித்துக் கொண்டிருக்கப் போகின்றோமா? சில உண்மைகளை உங்கள் முன் கொண்டுவருவது மட்டுமே எம‌து பணி. சிந்திக்க வேண்டிவர்களும் தீர்மானிக்க வேண்டியவர்களும் நீங்களே!

பின்குறிப்பு:
அடிப்படையான அரசியல் அறிவே இல்லாத ஒரு கூட்டம் சர்வதேசப் பணி என்ற பெயரில் வெளிநாடுகளில் காசு திரட்டுவதையே ஒரேயொரு பணியாகக் கொண்டிருந்தது. பிற்காலங்களில் சர்வதேச உறவு என்றாலே என்வென்று தெரியாத மடையர் கூட்டமொன்று சர்வதேசப் பணிகளை பொறுப்பெடுத்துக் கொண்டதும் நமது விடுதலைப் போராட்டம் இவ்வாறு சின்னாபின்னப்பட்டுப் போனதற்கு ஒரு காரணமாகும். புலத்தில் பணம் சேர்ப்பதையே தேசியத் தொழிலாகக் கொண்டிருக்கும் அனைத்துலகப் பிரிவு 2010இல் சேகரித்த நிதியை நாம் அண்ணளவாக மதிப்பிட்டுள்ளோம்.

இதில் எல்லா வெளியீடுகளின் வருவாயையும் சேர்க்கவில்லை. வட்டுக் கோட்டை வாக்கெடுப்பில் பங்கு கொண்டோரின் எண்ணிக்கையை வைத்துக் கொண்டே இந்தக் கணிப்பைச் செய்துள்ளோம். இவற்றை இப்போது சொல்வதற்குக் காரணம் இருக்கிறது. இனி வருங்காலத்தில் பிராந்திய மற்றும் உலகளாவிய அரசியலில் ஏற்படும் மாற்றங்களால் பல்வேறு விடயங்கள் நிகழலாம். புதிய அணிகள் அரங்கிற்கு வரலாம். அவ்வாறான சந்தர்ப்பத்தில் கடந்த காலத்தில் நிகழ்ந்தது போன்று பணம் இருந்தால் எல்லாவற்றையும் பெற்றுவிடலாம் என்று கூறிக் கொண்டு ஒரு பினாமிக் கூட்டமும் உங்களை நோக்கி மீண்டும் வரலாம். அவ்வாறான சந்தர்ப்பத்தில் நீங்கள் விழிப்பாக இருப்பதற்கு இந்தத் தகவல்கள் உறுதுணையாக இருக்கக் கூடும்.

2010 ம் ஆண்டு அனைத்துலக பிரிவின் வெளியீட்டு பிரிவின் குறைந்த பட்ச வருமான‌ மதிப்பீடு:

குடும்ப எண்ணிக்கையின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது

இங்கு நாம் சுட்டியுள்ள வருமான மதிப்பீடு அனைத்துலக பிரிவினரின் வெளியீட்டு பிரிவினரது மட்டுமே.
சுட்டி: http://www.eelamstore.com/

இதன் அடிப்படையில் கீழ் வரும் வருமானங்களை குறிப்பிட்ட நபர்கள் அல்லது குழுக்கள் பெற்றிருக்கலாம்.

2025210 யூரோக்கள்

999440 பவுன்ஸ்கள்

1614360 டொலர்கள்

இங்கு  ஜரோப்பிய  நாடுகளில்  திரட்டப்பட்ட  வருவாய்  தொடர்பாகவே மதிப்பிட்டுள்ளோம்.  ஏனைய  ஆசிய  நாடுகளில்  திரட்டப்பட்ட  வருவாய்கள்  இதில் உள்ளடக்கப்படவில்லை. எமது   மதீப்பிட்டின்  படி  மேற்குறிப்பிட்ட  தொகை அரைவாசியாக இருப்பினும்  கூட எவ்வளவு  பெரிய  தொகை  நமதுபோராட்டத்தின்  பேரால்  யார்  யாரினதோ  பொக்கற்றுகளுக்குச்  சென்று  கொண்டிருக்கிறது  என்பதை  நீங்கள்  விளங்கிக்  கொள்ளமுடியும்.

 

http://www.maruaaivu.com/?p=5208


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்