08102022பு
Last updateபு, 02 மார் 2022 7pm

வன்னி மக்களின் இருண்டுபோன வாழ்க்கை ஏற்படுத்தும் பாலியல் பிறழ்சிகள்

வன்னியின் இறுக்கமான கண்காணிப்பும் சமூக பொருளாதார நெருக்கடியும், பாலியலில் தளர்ச்சியை உருவாக்குகின்றது. ஆண்கள் குறைந்த சமூகத்தில், ஆணாதிக்கம் பெண்களின் இயல்பான சுயத்தை அழிக்கின்றது. இதனால் ஏற்படும் பாலியல் சீர்கேடுகள், விபச்சாரத்தை வன்னியின் விளைபொருளாக்கப் போகின்றது. இதை மாற்றி அமைக்க முனையாத வரை, வன்னி மீண்டும் ஒரு அழிவை நோக்கியே செல்லும். இதுவொரு முன்கூட்டிய எச்சரிக்கை.

 

இன்று வன்னி நிலப்பரப்பின் பண்பாட்டு கலாச்சார சீரழிவு பற்றி, பல தரப்பாலும் பேசப்படும் அளவுக்கு வன்னி மக்கள் வாழ்க்கை சீரழிந்திருக்கின்றது. குறிப்பாக பெண்களின் பாலியல் சார்ந்த கடந்தகால வாழ்வு முறைமை, யுத்தத்தின் பின்னான இன்றைய சூழலில் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகின்றது. வீட்டுக் வீடு, எங்கும் பாலியல் சார்ந்த கடந்தகால ஒழுக்கம் சார்ந்த வாழ்க்கை முறைமை தகர்ந்து போகின்றது. இதுவும் கூட பெண்ணின் சுய தெரிவல்ல, சூழல் சார்ந்த பொது நிர்ப்பந்தம். கடந்த 30 வருடமாக புலியின் ஆட்சியால் பின்தங்கிப்போன, அறிவு சார்ந்த பகுத்தறிவை இழந்த ஒரு சமூகத்தின் அவலம்.

இந்த பாலியல் அதிர்வு, அந்த மக்களை பிற தமிழ் மக்களின் பொதுவாழ்வில் தனிமைப்படுத்துமளவுக்கு ஒரு குறியீட்டுப் பொருளாக மாறிவருகின்றது. வன்னிப் பெண் பற்றிய கண்ணோட்டம், ஆணாதிக்க சமூக அமைப்பில் அலங்கோலமாக மாறிவருகின்றது. தீண்டத்தகாத வன்னிப் பெண்களின் அத்தியாயத்தை, இந்த ஆணாதிக்க சமூக அமைப்பில் வன்னி நிலவரம் உருவாக்கி வருகின்றது.

பாலியல் ரீதியான பண்பாடு சார்ந்த வன்னி நடத்தைகள், சமூகத்தின் வளர்ச்சிப் போக்கில் இருந்து உருவாகவில்லை. மாறாக இது அந்த சமூக சிதைவில் இருந்து உருவாகின்றது. பொதுவாகவே அனைத்தும் தளுவிய அளவில் நடக்கும் பண்பாட்டுக் கலாச்சாரச் சிதைவின் மொத்த வெளிப்பாட்டின் ஒரு அம்சமாகத்தான், வன்னியில் பாலியல் சார்ந்த அத்துமீறல்கள் அரங்கேறுகின்றது. இங்கு பாலியல் அம்சம் முழிப்பாக எங்கும் முதன்மை பெற்று வெளிப்படுகின்றது.

வன்னியில் எந்தச் சுதந்திரமற்ற பொதுச்சூழலும், நபர்களுக்கு இடையிலான கண்காணிப்பும் ஒரு இறுக்கமான சூழலை உருவாக்கி இயல்பான சூழலை மறுக்கின்றது. இது பாலியலில் இறுக்கமற்ற நெகிழ்வுத் தன்மையைத் உருவாக்குகின்றது. அதை மட்டும் தான், கண்காணிக்க முடியாத நிலை. மற்ற அனைத்தையும் அரசு கண்காணிக்கின்றது. சமூகத்தின் பொதுக் கண்காணிப்பை இது மறுத்துவிடுவதால், பாலியல் கண்காணிப்பற்ற நெகிழ்வை உருவாக்குகின்றது. இதன் விளைவு சமூகத்திகன் பொதுச் சிதைவாக மாறுகின்றது. ஆண் பெண் பரஸ்பரம் சந்தேகங்கள், குடும்பச் சிதைவுகள், நம்பிக்கையீனங்கள் எங்கும் பரவலாகக் காணப்படுகின்றது. சமூகமாக இருத்;தலை மறுக்கும் அரசு, கும்பமாக இருத்தலையும் இல்லாதாக்குகின்றது. இதில் பாலியல் அத்துமீறல் முக்கிய முதன்மைப் புள்ளியாகின்றது.

யுத்தத்தின் பின் அதிகரித்த ஆண் துணையை இழந்த பெண்களின் எண்ணிக்கை, காணாமல் போனவர்களின் மனைவிமார், சிறையில் கணவனைக் கொண்ட பெண்கள், இதைச் சுற்றிப் பெண்கள் சந்திக்கின்ற இயல்பான இயற்கையான பாலியல் நெருக்கடிகள், அத்துமீறும் போது மற்றொரு குடும்பத்தையும் சிதைத்து விடுகின்றது. ஆணின் தொகை குறைந்த வன்னி நிலப்பரப்பில், ஆண்களின் இயல்பான ஆணாதிக்கக்கூறு பெண்களை தனது பாலியல் தேவைக்கு பயன்படுத்துகின்றது.

ஒரு ஆண் குடும்பத்தை சார்ந்து ஒழுக்கமாக வாழ வேண்டிய சமூகத் தேவை, இந்த நெருக்கடியால் சிதைக்கப்பட்டு இருக்கின்றது. ஆண்கள் குடும்பத்திற்காக உழைத்தலை, இது இல்லாதாக்கியும் வருகின்றது. பெண்ணின் சுமையை பல மடங்காக்குகின்றது. பாலியல் ரீதியாக வரைமுறையற்ற ஆண்களின் தெரிவுக்குரிய வகையில், பெண்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றனர். அந்த ஆண்களுக்காக பெண்கள் உழைக்க வேண்டிய நிலைக்கு பெண் தள்ளப்படுகின்றாள்.

பொதுவில் இயல்பான சூழல் அங்கு இல்லாமை, இறுக்கமான கண்காணிப்பு பாலியல் இறுக்கமற்ற சூழலை உருவாக்கின்றது.

இதற்கு ஏற்ற வகையில் ஏற்றத்தாழ்வான பொருளாதார இடைவெளி மிக வேகமாக அங்கு அதிகரிக்கின்றது. வசதியும் வசதி இன்மையும் ஓவ்வொரு கிராமத்தில் இன்று வெளிப்படையாக வெளிப்படுகின்றது. அரசின் மீள்கட்டுமான நிதி என்பது, இதைத் தான் வேகமாக உருவாக்குகின்றது. ஆரசின் நிதி வழங்கல் முறை என்பது, மீள்குடியேற்றத்தை அவர்களை சுயமாக செய்யக் கோருகின்றது. அதாவது மீள்குடியேற்றத்தினைச் சுயமாக செய்து முடிப்பவர்களுக்கு, அரசு தொடர்ந்து பணம் கொடுக்கின்றது. அதை செய்யாதவர்களுக்கு நிதி இல்லை. இந்த வகையில்

1. வெளிநாட்டில் இருந்து பணம் பெற்று, மீள் குடியேற்றத்தில் பல படிநிலை கடந்தவர்கள் அரசிடம் இருந்து தொடர்ச்சியாக அதிக பணத்தை பெற்று சுரண்டும் ஒரு வர்க்கமாக மாறிவிட்டனர்.

2. இதேபோல் சொந்த பணம் வைத்திருந்தவர்கள் இதே நிலையை அடைந்துள்ளனர்.

3. ஆண் துணையற்ற, விவசாயத்துக்கு அவசியமான குடும்ப எண்ணிக்கை இழந்த குடும்பங்கள் சுயமாக மீளக் குடியேற முடியவில்லை. இதனால் அரசு பணமும் கிடைக்கவில்லை. இவர்கள் முன்னைய இரு பகுதியினரிடமும் கூலிக்கு செல்லுகின்றனர். அதே போல் அரசின் மீள்கட்டுமானத்தின் பெயரில் இயங்கிய பல தன்னார்வ நிறுவனங்கள், இவர்களை கூலிக்கு அமர்த்துகின்றனர்.

4. மீள் குடியேற்றத்தின் திட்டமிடாத ஒன்றை மையப்படுத்திய போக்கு, வன்னி மக்களின் சுய உழைப்பை கைவிட வைக்கின்றது. உதாரணமாக ஒரு விதமான விதையை வன்னி நிலப்பரப்பு முழுக்க இலவசமாக வழங்கிய போக்கு, இது உற்பத்தியாகி சந்தைக்கு அந்த பொருள் வந்த போது கேட்பாரின்றி அழுகி நாறுகின்றது. இது சுய உழைப்பை அழித்துவருகின்றது. இதனால் கூலிக்குச் செல்வதை தவிர, வேறு வாழ்வுக்கு இவர்களை வழியற்றதாக்கியுள்ளது.

இப்படி பல்வேறு கூறுகள், விவசாயம் சார்ந்த மக்களின் வாழ்வாதாரத்தை சிதைப்பது தான் பண்பாட்டு கலாச்சாரத்தில் நடக்கும் மாற்றம். இங்கு பெருமெடுப்பில் வாழும் பெண்கள் தான், இதன் சுமையை எதிர்கொள்கின்றனர். சமூக விழிப்புணர்வற்ற பின்தங்கிய நிலையில் வாழும் பெண்கள், புலிகளின் 30 வருட ஒடுக்குமுறைக்குள் குருடாக்கப்பட்டு இருந்தனர்.

இந்தப் பெண்கள் ஆண் துணையை இழந்து சந்திக்கும் இயற்கையான பாலியல் நெருக்கடிகள், சுயமாக வாழமுடியாத வண்ணம் உள்ள பொது நெருக்கடி, பாலியல் ரீதியான ஆணாதிக்க அமைப்பில் பலியிடப்படுகின்றனர். இதன் மூலம் பெண் காணும் தீர்வுகள், பெண் சந்திக்கவுள்ள மற்றொரு பொது நெருக்கடியின் ஆரம்பம் தான். நாளை இந்தச் சமூகத்தில் வாழும் பெண்கள் பற்றிய ஒழுக்கம், தனிமைப்படுத்தப்பட்ட சமூகமாக மாற்றிவிடும்;

இலங்கையில் விபச்சாரத்தின் மையமாக, வன்னி மிகவிரைவில் மாறிவிடும் என்பதுதான் நாளை நிகழ்வுக்குரிய நிகழ்தகவாகும். இதை மாற்ற சமூகம் தன்னைத்தான் ஓருங்கிணைத்து விடை காணவேண்டும். காணாமல் போனவர்கள் குடும்பங்கள் ஓன்றிணைந்து போராடுவது போல், இதற்காகவும் சமூகம் தன்னை ஓன்றிணைத்து விடைகாண வேண்டும்.

பி.இரயாகரன்

08.06.2011


பி.இரயாகரன் - சமர்