அனைவருக்குமான ஓய்வூதியத்தை மறுத்தும், ஆயுள் பூராவுமான ஓய்வூதியத்தை மறுத்தும், இறந்தால் குடும்ப உறுப்பினர் ஓய்வூதியத்தை தொடர்ந்து பெற முடியாதவாறு மறுத்தும் ஒரு ஓய்வூதியம். இப்படி தனியார் ஓய்வூதிய திட்டத்தின் பெயரில் அவர்கள் கொடுக்க முனைவது, பிச்சைக்காசுதான். இந்தப் பிச்சைக் காசைக் கொடுக்க, அரசு தன் நிதி எதையும் கொண்டு முன்னெடுக்கவில்லை. மாறாக ஓய்வூதியம் பெற தகுதியானவர்கள் சிறுக சிறுக சேர்த்த பணத்தை, அரசு தனதாக்கி அதைக்கொண்டு பிச்சை போடும் திட்டத்தைத்தான் ஓய்வூதியமாக அரசு அறிவிக்கின்றது. உலக வங்கியின் உத்தரவுக்கு அமைவாகத்தான், இதையும் கூட முன்னெடுக்கின்றது.

 

தேசம், தேசியம், நாட்டின் இறைமை பற்றிப் பேசும் இலங்கை அரசு, தேசத்தினதும் மக்களினதும் நலனுக்கு எதிரான ஒன்றை திணிக்கின்றது. இலங்கையில் தனியார்துறையில் ஓய்வூதியமில்லாத இன்றைய நிலையில், தமக்கு எதிரான இந்தத் திட்டத்தை உழைத்து வாழும் மக்கள் எதிர்க்கின்றனர். மக்கள் ஓய்வூதியத்தைப் பெற விருப்பமின்மையால் இதை எதிர்க்கவில்லை, மாறாக தமக்கு எதிரான அரசின் மக்கள் விரோத சதியை எதிர்க்கின்றனர்.

மே 1 யை அரசுக்கு எதிரான ஜ.நாவின் போர்க்குற்ற ஆவணத்துக்கு எதிரான தினமாக அரசு அறிவித்த போது, அன்றைய தினத்தை அரசின் ஓய்வூதிய திட்டத்துக்கு எதிரான நாளாக தொழிலாளர் அமைப்புகள் பிரகடனம் செய்திருந்தது. இப்படி இலங்கை மக்கள் இரண்டாக இருக்கின்ற நிலையில், உழைக்கும் வர்க்கத்தின் தொடர் ஆர்ப்பாட்டங்கள் பாரிய வன்முறையாக மாறியுள்ளது. பேரினவாதத்தின் இனவழிப்பின் இரண்டாம் ஆண்டு போர் வெற்றி தின கொண்டாட்டங்கள் ஒருபுறம் நடக்க, உழைக்கும் வர்க்கம் அரசுக்கு எதிராக வீதியில் இறங்கி போராடியது. இந்தத் தொடர் போராட்டத்தில் பலர் காயமடைய, அவர்கள் மேல் துப்பாக்கி சூடுகள் நடத்துகின்றது இந்த அரசு. தொடர் மோதல்களை அடுத்து தொழிலாளர்களைக் கட்டுப்படுத்த விசேட விடுமுறைகளை அறிவிக்கின்றது. போராட்டத்தை முறியடிக்கவும், திசைதிருப்பவும் ஓய்வூதிய திட்டத்தை ஆளும் கட்சி தற்காலிகமாக இடை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. ஆனால் அரச இதை அறிவிக்கவில்லை. இப்படியும் மக்களை ஏய்க்கும் சதி.

இப்படிப்பட்ட மக்கள் விரோத அரசு, இன முரண்பாட்டை முன்தள்ளியும் இராணுவ மயமாக்கியும், மக்களை அடக்கியாளவே முனைகின்றது.

மக்கள் விரோதமான இந்த ஓய்வூதிய திட்டத்துக்கான சதியை, 19.07.2010 அன்று உலக வங்கியின் அனுசரணையுடன் கையெழுத்திட்டது. நாட்டினதும், மக்களினதும் இறையாண்மைக்கு எதிராக, பெருமூலதனத்தை மக்கள் பணத்தில் இருந்து திரட்டி அன்னியருக்கு தாரைவார்க்கவும், அதைக் கொண்டு தனியார், அரசு சொத்துகளைக் கைப்பற்ற உதவுவதும் தான் ஓய்வூதியத் திட்டதின் உள்ளடக்கமாகும். அன்னிய முதலீடுகள், மற்றும் தனியார்மயமாக்கலுக்கான மூலதனத்தை அவர்கள் கொண்டு வருவதில்லை, மாறாக மக்கள் பணத்தைக் கொடுத்துத் தான் எப்பொழுதும் நடக்கின்றது. இந்தச் சதித் திட்டம்தான், இங்கு ஓய்வூதியமாகின்றது.

இலங்கையில் மக்களை இனரீதியாக தமிழ், சிங்கள மக்களாக பிரிந்தாள முனையும் அரசும், அரசுக்கு எதிரான குறுந்தேசிய அரசியலையும் கடந்து, சிங்கள தமிழ் தொழிலாளர்கள், ஊழியர்கள் ஒன்றிணைந்து அரசுக்கு எதிரான போராட்டத்தை நடத்துகின்றனர். அரசு திணிக்கும் ஓய்வூதியத் திட்டம் என்பது, உலக வங்கியுடன் சேர்ந்து அவர்களின் உழைப்பைத் திருடும் கொள்ளையாகும். எப்படி எனப் பார்ப்போம்.

1. இந்த ஓய்வூதிய திட்டத்துக்கான எந்த நிதியையும், அரசு வழங்கவில்லை.

2. இந்த ஒய்வூதியத் திட்டம் அனைவருக்குமானதல்ல. இதில் ஒரே தொழிலில், ஒரே தொழிற்சாலையில் உள்ளவருக்குக் கூட இது கிடையாது.

3. ஆயுள் வரையான ஓய்வூதியமுமல்ல. குடும்ப உறுப்பினருக்கான ஓய்வூதியத்தையும் இது மறுக்கின்றது.

4. ஓய்வுக்கான வயதை 5 முதல் 10 வருடத்தால் அதிகரிக்க வைக்கின்றது.

5. அவர்களிடம் திருடி ஓய்வூதியமாக மீளக் கொடுக்கவுள்ளது வெறும் பிச்சைக் காசு.

இப்படி இதில் பல மோசடிகள். இலங்கையின் உழைக்கும் மக்களின் உழைப்பை உறிஞ்சும் அட்டையாக, உலகவங்கியும் இலங்கை அரசு சேர்ந்து இந்த ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த முனைகின்றன.

இந்த ஓய்வூதிய திட்டத்துக்கான முதலீடு என்பது, ஓய்வூதியம் பெறுபவர்களை கொள்ளையிடுதலாகும். இந்த வகையில் அரசு கைவைத்திருப்பது, சிறுக சிறுக உழைத்துச் சேமித்த ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதியம், ஊழியர் சேவைக்கால கொடுப்பனவு ஆகியவற்றை அபகரித்து, அதைக்கொண்டு ஒய்வூதியமாக பிச்சை போடுவதாகும். அரசு இதற்கென்று எந்த நிதியையும் வழங்காது. இதனால் அனைவருக்குமான ஒய்வூதியம், ஆயுள் வரையான ஓய்வூதியம் என அனைத்தும் மறுக்கப்படுகின்றது. மொத்தத்தில் ஏமாற்று வேலை. அவர்கள் பணத்தை கொண்டு அவர்களுக்கு ஒய்வூதியம் என்பது, அதை பல முனையில் திருடுவதுதான்.

இந்தப் பணத்தை பற்றி முடிவெடுக்கும் உரிமை கூட அரசுக்கு கிடையாது. இந்தப் பணம் சிறுகச் சிறுக உழைத்துச் சேகரித்த மக்களுடைய பணம். 70 வயதுக்கு மேற்பட்ட, ஆனால் உரிமை கோராத இந்தச் சேமிப்பு நிதி மீதான உரிமையை அவர்களும், அவர்கள் குடும்பமும் இழந்து விடுவதாக இந்த ஓய்வூதிய சட்டம் மூலம் அரசு அறிவித்து அதையும் திருடுகின்றது.

இன்று ஊழியர் சேமலாப நிதி மூலமான வருடாந்த இலாபம் மட்டும் 190 கோடி ரூபாவாகும். அதை திருடுவது மட்டுமல்ல, இந்த ஓய்வூதிய நிதிக்கு மாதம் மாதம் தங்கள் சம்பளத்தில் 2 சதவீதத்தை செலுத்தவும் சட்டம் கோருகின்றது.

சேவைக்கால கொடுப்பனவு கொடுக்கும் போது 10 சதவீதத்தையும், ஊழியர் சேமலாப நிதி கொடுக்கும் போது 2 சதவீதத்தையும் அரசு தனதாக்க சட்டம் கோருகின்றது. ஆனால் அரசு இதற்காக ஒரு சதத்தையும் வழங்கவில்லை.

இப்படிப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் கணக்கு இல்லாத, அதற்குரிய பணமில்லாதவர்கள் ஓய்வூதியத்தை பெற முடியாது அல்லது அதைத் தொடர்ந்து பெறமுடியாது. இந்த ஓய்வூதியக் கணக்கு என்பது 10க்கு குறையாமல் 19 ஆண்டுக்கு மேலாகவும் இந்த ஓய்வூதிய நிதியத்தில் அங்கத்தவராக இருந்து பணம் செலுத்தியிருக்க வேண்டும். இதன் மூலம் அவர் கடைசியாக பெற்ற வருமானத்தில் 15 முதல் 20 சதவீதத்தை ஓய்வூதியமாக, அதாவது பிச்சையாக பெற முடியும். 29 வருடம் இந்த ஓய்வூதிய நிதியத்தில் அங்கத்தவராக இருந்தால், கடைசியாக பெற்ற வருமானத்தில் 30 சதவீதத்தை ஓய்வூதியமாக அதாவது பிச்சையாக பெற முடியும். அரசு அறிவித்துள்ள இந்த ஓய்வூதிய பிச்சையில், பிச்சைக்காரன் கூட இலங்கையில் வாழமுடியாது. இங்கு பணவீக்கம் முதல் விலையேற்றம் வரை, இந்த பிச்சையை மேலும் மோசடியானதாக்குகின்றது. இந்தப் பிச்சை பெறும் நிபந்தனை, 10 வருடத்துக்கு குறைவாக நிதியை செலுத்தியவருக்கு கிடையாது. அத்துடன் முதுமையில் பெறும் குறைந்த கூலியை அடிப்படையாகக் கொண்டு, குறைந்தளவு பிச்சைதான் ஓய்வூதியம் என்பதே அரசின் கொள்கையாகும்.

இதில் உள்ள அடுத்த மோசடி ஓய்வூதியம் பெறுபவர் இறந்தால், அவரின் துணையோ குழந்தைகளோ அதை தொடர்ந்து பெற முடியாது. மாறாக மனைவி மற்றும் 18 வயதுக்கு குறைந்த குழந்தை இருந்தால், எஞ்சிய நிதியத்தில் 60 சதவீததை மொத்தமாகப் பெறுவர். மிகுதி 40 சதவீதம் அரசின் சொத்தாக்கப்படும். அவர்கள் உழைத்துப் பெற்ற பணத்தை அவர்கள் இழப்பர்.

இந்த மக்கள் விரோத சட்டம், ஊழியர் நம்பிக்கை நிதியத்தை மீளப் பெறும் பெண்ணின் வயதான 50யும், ஆணின் வயதான 55யும் இல்லாதாக்குகின்றது. புதிய ஓய்வூதிய பிச்சைத் திட்டத்தின் கீழ், இருபாலாருக்குமான வயதை 60 வயதாக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெறும் பெண்ணின் வயது 10 வருடமாக அதிகரிக்க, ஆணின் வயது 5 வருடங்களால் அதிகரித்துள்ளது.

இப்படி ஒட்டுமொத்தமாக உழைத்து வாழ்ந்த மக்களின் உழைப்பை மேலும் சுரண்டவும், ஓய்வின் பின் பிச்சைக்காரராய் பிச்சைக் காசில் வாழக் கோருவது தான் இந்த ஓய்வூதியத் திட்டமாகும். உலகவங்கியின் அடியாளாகவே, அரசு செயற்படுகின்றது. இவர்கள் பேசும் தேசம், தேசியம், நாட்டின் இறைமை எல்லாம், இந்த அடியாள் தனத்தின் இருப்பு சார்ந்த மோசடித்தன அரசியல் வெளிப்பாடுதான். இதை அரசியல் ரீதியாக உணர்ந்து கொள்வதன் மூலம்தான், மக்களுக்கான உண்மையான அரசையும் அவர்களின் நலன்களையும் அடையும் போராட்டத்தை நடத்த முடியும்.

பி.இரயாகரன்

03.06.2011