இந்த பன்னிரண்டு வருட வெளிநாட்டு வாழ்க்கையில் இப்படி ஒரு நாளும் தினேஸ் சந்தோசமாக இருந்ததில்லை. இஞ்சை வந்த கொஞ்சக் காலம் அப்பிடி இப்படி என்று ஓடிவிட்டாலும் சினேகிதர்களுடன் சேர்ந்து முஸ்ப்பாத்தி சந்தோசம் என்று காலம் கழிந்தாலும் காசு விசையத்திலும் உழைப்பு விசையத்திலும் மிகக் கண்ணாகவே இருந்தான்.
இரண்டு தங்கைமாரின் திருமணம் என்றும் ஏற்கனவே திருமணமான அக்காவின் குடும்பம் என்றும் காணி பூமி வளவு என்று வாங்கிச் சேர்ப்பதற்கும் அக்கா பிள்ளைகளின் படிப்புச் செலவென்றும் ஒவ்வொரு தங்கைமாருக்கு ஒவ்வொரு வீடெனக் கட்டிக் கொடுக்க வேண்டுமென்ற அம்மாவின் ஆசைக்காகவும் இவன் பட்ட கஸ்ரங்கள் துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
இரவு பகல் என்றும் சனி ஞாயிறு என்றும் ஓய்வில்லாமல் ஓடி ஓடி உழைத்துக் கசங்கிப் போன தினேசுக்கு இங்கே நிலா வந்த போது ஏற்பட்ட ஆனந்தத்தின் மூலமே இந்த வாழ்க்கையின் உண்மையான தரிசனங்களைக் கண்டு கொண்டவன்.
இவனது அம்மா எப்போதோ இறந்து போன இவனது தந்தையை நினைத்தபடி தனியொருத்தியாகவே நின்று வாழ்க்கையில் ஏற்பட்ட அனைத்து சவால்களையும் எதிர் கொண்டும் இருந்ததை கிடந்தத விற்றுச் சுட்டு அவனைப் பிடித்து இவனைப் பிடித்து என்று ஒரு மாதிரி இவனை வெளிநாடு என்று அனுப்பியிருந்தார்.
இங்கே வெளிநாடு என வந்த வேளை இந்த ஜரோப்பிய வாழ்க்கை முறைகளும் ஒத்துவராத கால நிலைகளும் இவனை வெறுப்படையச் செய்த போதும், இங்கே சேர்ந்து கொண்ட சினேகிதர்களின் ஆதரவினாலும் அன்பினாலும் இங்கே ஒரு நிலையான வாழ்வை ஏற்படுத்த வேண்டியிருந்தது. தன்னோடிருந்தவர்கள் எல்லோரும் திருமணம் என்ற பந்தத்தில் புகுந்து ஒவ்வொருவராக கழரத் தொடங்கிய போது தனக்கும் ஒரு குடும்பம் வேண்டுமென்று நினைத்த வேளையில் நிலா இவனுக்கு மனைவியாக வந்து சேர்ந்தாள்.
அக்காவின் அத்தானின் வழியான சொந்தம் என்பதாலும் எமது குடும்பத்தோடு ஒத்துவரக் கூடிய பெண், வெளிநாடு சென்றாலும் ஒரளவுக்குச் சமாளிக்கக் கூடிய படிப்பறிவு இருந்ததாலும், இவள் இவனுக்கு இலகுவாகவே மனைவியாக்கப்பட்டாள்.
மனதிலே கனதிகள் அதிகம் இருந்தும், சொல்ல முடியாத ஏக்கமும் பயமும் இருந்த போதும், முள்ளிவாய்க்கால் அவலங்களோடு முடிந்து போன அல்லது அழிந்தே போன போராட்டங்களினாலும் ஒரு வித அமைதிச் சூழல் நிலவியது என எண்ணியதினாலும் அம்மாவை எப்படியும் ஒரு தரம் பார்த்து விட வேண்டும் என்ற அவாவினாலும் கொழும்பு சென்று நிலாவைக் கைபிடித்து அப்படியே உடன் அள்ளிக் கொண்டும் வந்து விட்டான்.
இப்ப இங்கே நிலா வந்து மூன்றே முன்று மாதங்கள் தான். திட்டமிட்டு குழந்தை ஒன்றை பெற வேண்டும் என எண்ணியிருந்த வேளையில் கடவுளின் செயலோ இன்று நிலா கருவுற்றிருக்கிறாள் என்ற செய்தி அறிந்தது தான், இவனின் இந்த இன்பத்திற்கு காரணம்.
தினேஸ் அடைந்திருக்கும் இந்த ஆனந்தத்தையும் பரவசத்தையும் சொல்லவோ எழுதவோ வார்த்தைகளே இல்லை. உலகத்திலே யாருக்கும் கிடைக்காத ஒரு பெரிய பேறும் பாக்கியமும் கிடைத்து விட்டதாகவே எண்ணிப் பூரித்து மகிழ்ந்தான்.
குழந்தையை தூக்குவது போலவும் அள்ளி அள்ளிக் கொஞ்சி முத்திமிட்டு அரவணைப்பது போலவும் என் குழந்தை எப்படியெல்லாம் நடக்கும் எப்படியெல்லாம் ஓடும் என்றும் இன்னும் எத்தனை எத்தனையோ நடக்கப் போகும் நிகழ்வுகளை நினைத்து தன் கற்பனைக் குதிரையில் சவாரி செய்தான்.
குழந்தை பிறக்கும் காலங்களில் அம்மாவையோ அல்லது அக்காவையோ பக்கத்தில் அழைத்து வைத்திருக்க வேண்டுமென்றும், அதற்கான நடவடிக்கைகளில் இப்பொழுதே இறங்கி விட வேண்டுமென்றும் மனதினலுள் திடசங்கற்பம் பூண்டு கொண்டான்.
நிலா நீ இனி மேல் கவனமாய் இருக்க வேண்டும். இனி நானே எல்லாவற்றையும் செய்து கொள்வேன். செய்தும் தரவேன் எனக் கூறியபடி நிலாவை மெல்ல அணைத்து அவள் நெற்றியிலே முத்தமிட்டான்.
வெட்கித் தலை குனிந்தவளாய்… என்னப்பா இந்தப் ட்டபகலில் என்றபடியே…. இல்லை இன்னும் ஏழோ எட்டோ மாதங்கள் இருக்கின்றது, அதற்கிடையில் ஏன் இந்தப் பறப்பு பறக்கின்றீர்கள் எனச் செல்லமாக அவனைத் தள்ளிக் கொண்டாள்.
முதலில் என்னுடைய வேலை நேரத்தையும் பிரத்தியேக வேலைகளையும் மாற்றிக் கொள்ளுவதோடு நான் தந்தையாகப் போகும் இந்த நற்செய்தியை என் முதலாளிக்கும் என் நண்பர்களுக்கும் சொல்லிவிட வேண்டுமென்ற படியே ரெலிபோன் எடுத்து ஊர் உறவுக்காரர் உட்பட வெளிநாட்டுச் சொந்தக்காரர்கள் என அனைத்து உறவுகளுக்கும் இந்த இன்பச் செய்தியை பகிர்ந்து கொண்டான்.
தினேஸ் வேலை முடிந்து வீடு வரும் வரை இன்ரநெற்ரென்றும், செய்திகள் என்றும் நிலாவின் பொழுது பனி போல் கரைந்து கொண்டிருந்தது. சினிமாவிலிருந்து கிசுகிசு செய்திகள் கொண்டு இலங்கையிலிருந்து உலக அரசியல் வரை நிலா அறியாத செய்திகளுமில்லை. பார்க்காத இணையத்தளங்களுமில்லை.
பார்த்த படித்த அனைத்து விசையங்களையும் தினேசோடும் பகிர்ந்தும் கொண்டாள். நாட்கள் கிழமைகளாகி, கிழமைகள் மாதங்களாகி காலம் மெல்லெனப் பனிபோல் கரைந்து கொண்டிருந்தது.
இஞ்சையப்பா என்னால் முடியாமலிருக்கிறது உடனடியாக வாருங்கள் என்ற நிலாவின் ரெலிபோன் செய்தி தினேஸை ஒரு கணம் நிலை குலையவே செய்து விட்டது.
ஐயோ.. என்ரை நிலா… கடவுளே…எனப்பதறியடித்துக் கொண்டு ஓடிவந்த தினேஸ் கொம்பியுட்டர் மேசையருகே வீழ்ந்து கிடந்த நிலாவின் நிலையைக் கண்டு நிலை குலைந்து போனான்.
அன்புலஞ்சை வரவழைத்து ஆஸ்ப்பத்திரியிலும் கொண்டு வந்து சேர்த்து விட்டான். கடவுளே நிலாவுக்கு ஒன்றும் நடக்கக் கூடாது. கடவுளே! கடவுளே! என்று தனக்குத் தெரிந்த அறிந்த தெய்வங்களையெல்லாம் மன்றாடி வேண்டிக் கொண்டான்.
தாதிகளும் உதவியாளகளும் அங்கும் இங்குமாக ஒடித் திரியத் திரிய தினேஸின் பயம் மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டது. எங்கேயோ தூரத்தில் இருந்து வரும் அன்புலன்ஞ் வாகனங்களின் இரைச்சல் ஒலியும் அலாரச் சத்தங்களும் ஆஸ்ப்பத்திரியை அண்மித்துக் கொண்டிருந்தது.
அறையினுள் இருந்து வெளியே வந்த டொக்டர் ஒருவர் தினேசுக்கு கை கொடுத்த படியே..
மன்னித்துக் கொள்ளவும, இதைச் சொல்வதற்கு, நாங்களும் மிகுந்த கவலையடைகின்றோம். வருத்தமடைகின்றோம் தங்கள் மனைவி கருச்சிதைவடைந்துள்ளாள். ஏன் நடந்தது என்று இப்பொழுது எங்களால் சொல்ல முடியாதுள்ளது. ஆள் இப்பொழுது கொஞ்சம் பராவாயில்லை நீங்கள் வந்து பார்ககலாம் என்று தினேஸை அழைத்து உள்ளே சென்றார்.
இடியே தலையில் வந்திறங்கியது போன்ற ஓர் உணர்வு. அவன் கட்டி வைத்த கோட்டைகள் அனைத்தும் ஒரு நொடியிலே சுக்கு நூறாக்கப்பட்டது. எங்கேயோ வந்த பிரளயம் இவனை மட்டும் அள்ளிக் கொண்டு போனது. இந்த உலகமே ஒரு கணம் உருளாமல் நின்று போனது.
தினேஸைக் கண்ட நிலா வெடித்து வெடித்து அழத் தொடங்கினாள்.
அவனின் கையைப் பிடித்த படியே மெய்யப்பா நான் அடிக்கடி சொல்லுவேனே.. மித்திரா..
சொல்ல முடியாதவளாய் அவளின் குரல் தளதளத்தது. நாவறண்டு தொண்டை அடைத்துக் கொண்டது.
என்னுடைய பள்ளித் தோழி, இயக்கத்துக்குப் போனாளே மித்திரா அவளுடைய படமும் இன்று போர்குற்றவியல் படங்களோடு வெளியாகிருக்கின்றது. எல்லோரைப் போலவும் சரணடைந்த இவளும் மற்றவர்களைப் போல் திரும்பி வருவாள் என்றும் எப்போதாது ஒரு நாள் அவளைச் சந்திப்பேன் என்றெல்லோ நினைத்துக் கொண்டிருந்தேன்.
உடைகள் களையப்பட்டு மார்பகம் அறுக்கப்பட்டு கொடுரமாகக் சித்திரவதை செய்யப்பட்டல்லவோ என்னரை மித்திரா கொலை செய்யப்பட்டிருக்கின்றாள்.
போரிலே தான் இறந்தாளோ..
அல்லது உயிருடன் தான் அந்த நாய்களிடம் பிடிபட்டிருப்பாளோ..,
நினைத்துப் பார்க்கவே என்னால் முடியாமலிருக்கின்றது.
அந்த வெறியர்கள்….
அரக்கர்கள் என்ரை மித்திராவை என்ன பாடுபடுத்தியிருப்பான்கள்.
அந்த ஓநாய்களின் வெறிக்கும் பசிக்கும் என்னுடைய மித்திராவும் மற்றச் சகோதரிகளுமா இரையாளார்கள்.
கடவுளே… என்ரை மித்திரா உயிருடன் பிடிபட்டிருக்கக் கூடாது…ஷ
எங்கள் மற்றச் சகோதரிகளும் உயிருடன் பிடிபட்டிருக்கவே கூடாது….
தொடர்ந்த வார்த்தைகள் வெளிவராதவளாய் விக்கி விக்கித் தேம்பினாள்.
தன்னுடைய ஒரு உயிரைப் பறி கொடுத்து விட்டேனே என்று தெரியாமல் நிலா புலம்பிக் கொண்டிருந்தாள்.
ஏன் தான் குழந்தை அழிந்தது போனது என்ற காரணம் டொக்ரருக்கு விளங்காவிட்டாலும்
தினேசுக்கு ஓரளவு புரிந்து கொண்டது.
நிலாதரன்
09/05/2011