ஜெயமோகன் தன்னுடைய கட்டுரையின் மூன்றாவது பகுதியை இப்படி முடித்திருக்கிறார். “இதை ஊகிக்கப் பெரிய கோட்பாட்டு வாசிப்போ அரசியல் ஞானமோ ஒன்றும் தேவையில்லை. கொஞ்சம் பொதுப்புத்தி இருந்தாலே போதும்” அதாவது அவர் எடுத்துவைத்திருக்கும் அந்தக் கோணத்தை புரிந்துகொள்வதற்கு உள்வாங்கிக் கொள்வதற்கு பரந்த படிப்பனுபவம் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை, மக்களிடம் படிந்திருக்கும் பொதுப்புத்தியே போதுமென்கிறார். சரிதான், பொதுப்புத்தியை தட்டியெழுப்பும் வகையில் ஆழ்ந்த ஆய்வு போன்ற தோற்றத்தில் குறிப்பிட்ட ஒரு உள்நோக்கோடு எழுதப்படுகையில், அந்த எழுத்தாளுமையின் மயக்கத்தோடு இணைந்துகொள்ள பொதுப்புத்தி போதுமானது தான்.
கம்யூனிசம் கோடிக்கணக்கான மக்களைக் கொன்றது எனும் அதரப்பழையதான அவதூறைக் கொண்டே தொடங்குகிறார். இந்த பலகோடி மனித உயிர்களை கண்டுபிடித்துச் சொன்னவர்களே தற்போது முதலில் கூறிய எண்ணிக்கையை பாதிக்கும் கீழாக குறைத்துக் கொண்டார்கள் தெரியுமா? நாங்கள் தான் பணம் கொடுத்து எழுதச் சொன்னோம் என்று பிரிட்டன் உளவுத்துறையே ஒப்புக்கொண்டது தெரியுமா? அல்லது இவைகளை மறுத்து புள்ளியியல் தரவுகளுடன் பல நூல்கள் வெளிவந்துள்ளனவே தெரியுமா? மீண்டும், மீண்டும் கோடிக்கணக்கான மக்கள் கொலை என்பவர்கள் குறைந்தபட்சம் இவைகளை இவர்கள் ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை எனும் விளக்கத்தையாவது தரலாமே, அவ்வாறன்றி மீண்டும் மீண்டும் அவதூறுகளை அள்ளிப் பூசிக்கொண்டிருப்பது என்ன நோக்கத்திற்காக? வெளிப்படையாக சொல்லாவிட்டாலும் கூட அவர் எழுதியிருப்பதே அவரின் எண்ணத்தை சுமந்து சொல்கிறது, “லெனினும் மாவோவும் அவர்களைக் கொலைகாரர்களாக ஆக்க முடிந்தது” ஆகவே, கம்யூனிச எதிர்ப்பு என்பதைத்தாண்டி அதில் உய்த்தறிய ஒன்றுமில்லை.
மாவோயிச பூதம் குறித்து அவர் வரைந்து காட்டும் ஓவியம் கவர்ச்சியாகவே இருக்கிறது. ஆனால் கவர்ச்சியாக இருப்பனவெல்லாம் மெய்யாக இருக்கும் என்று அறுதியிடமுடியாதல்லவா? 1947க்குப் பிறகு இந்தியாவின் பிற பகுதிகளில் ஏற்பட்ட முன்னேற்றம் இன்று மாவோயிசம் இருக்கும் பகுதிகளில் ஏற்படவில்லை. பிறபகுதிகளில் ஏற்பட்ட முதலாளித்துவ வளர்ச்சி மக்களின் மனதில் முதலாளித்துவத்திற்கு ஆதரவான பொருளியல் ரீதியில் முன்னேறும் உந்துதலை ஏற்படுத்தி அதுவே வளர்ச்சிக்கான காரணியாகியது. ஆனால் மாவோயிசம் இருக்கும் பகுதிகளில் மக்களின் மனதில் இந்த முன்னேறும் உந்துதல் இல்லாததால் அதாவது நிலப்பிரபுத்துவ மனோநிலையிலேயே இருப்பதால் அந்தப்பகுதிகளில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இது ஒரு மாதிரியான சுழற்சி போல் வறுமை இருப்பதால் மாவோயிசம்; மாவோயிசம் இருப்பதால் வறுமை. இப்படித்தான் புரிந்துகொள்ள வேண்டும் என்பது அவர் கூறியிருக்கும் சொல். இது அப்படியே இன்னும் விரிந்து கம்யூனிசம் மக்களின் முன்னேறத்திற்கு பயன்படாது. அது சிக்கலைத்தான் தீவிரப்படுத்தும், இருக்கும் முதலாளித்துவ அமைப்பையே கொஞ்சம் சீர்திருத்தி பயன்படுத்திக் கொண்டாலே போதுமானது என்பது அவர் கூற விரும்பும் பொருள். இதற்காகத்தான் சமூகத்தை மாற்றியமைக்கும் கம்யூனிச கூறுகளெல்லாம் குறியடையாளமாக முதலில் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.
நேரடி ஆங்கிலக் காலனியாக இந்தியா இருந்தபோது, இந்திய முன்னேற்றம் எந்த அடிப்படையில் இருந்தது? இன்றும் கூட சில பழம் பிண்டங்கள் “வெள்ளைக்காரன் இல்லையின்னா ஏது ஓய் ரயிலு, தபாலு?” என்று சிலாகிப்பது போல்; காலனிய நலன்களுக்கு தேவைப்பட்ட மாற்றங்களும் நுட்பங்களும் அவர்களுக்கு உகந்த இடங்களில் ஏற்படுத்தப்பட்டதே முன்னேற்றமாக இருந்தது. 47க்குப் பிறகும் அதுதான் நடந்தது இன்னும் சற்றே விரிவாக. முதலாளிகளுக்கு இருக்கும் சந்தை வாய்ப்புகள், உற்பத்திச் செலவை குறைப்பதற்குத் தேவையான மூலவளங்கள் செரிவாகக் கிடைப்பது இன்னும் பலவாறான காரணங்களால் குறிப்பிட்ட பகுதிகள் தனிக்கவனம் செலுத்தப்பட்டு அரசின் முனைப்பினால் முதலாளிகளுக்குத் தேவையான அளவில் வளர்ச்சி உண்டாக்கப்பட்டது. 47க்குப் பிறகு இந்தியாவில் பல பகுதிகள் அப்படியான் வாய்ப்புகளின்றி சீண்டுவாரற்று கிடந்தன என்றால் அதன் பொருள் முதலாளிகள் தங்கள் லாபங்களை அந்தப் பகுதியில் கண்டடையவில்லை என்பதாகத்தான் இருக்க முடியும். பெரிய பெரிய அணைத்திட்டங்கள் பாசன வசதிகளை பெருக்கி விவசாய முன்னேற்றத்தைக் கொண்டுவந்தன, அதேநேரம் அந்த திட்டங்களுக்காக தங்கள் நிலங்களை இழந்த வரிய மக்கள் தங்கள் இழப்பீடுகளுக்காக இன்னமும் போராடிக் கொண்டிருக்கிறார்களே. இதை எப்படி எடுத்துக்கொள்வது? ”இந்தியாவின் எந்தப் பகுதிக்கும் அப்படி திட்டமிட்ட முன்னேற்றம் வந்துவிடவில்லை, விதி விலக்குகளும் உண்டு” என்று போகும்போக்கில் குறுக்கிக் கொண்டுவிட முடியுமா? தெளிவாகச் சொன்னால் அன்றைய நிலையில் முதலாளிகள் தங்களுக்கு தேவையில்லை என ஒதுக்கிய நிலப்பகுதிகளே எந்த வாய்ப்புகளும் தரப்படாமல் நிலப்பிரத்துவத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்தன. அந்த மக்கள் வரிய நிலையில் இருத்தி வைக்கப்பட்டிருந்தார்களென்றால் அதன் முழுப் பொறுப்பும் அரசின் மீதல்லவா சுமத்தப்பட்டிருக்க வேண்டும்?
ஆனால் ஜெயமோகனோ இயல்பாக வந்தடையும் சாதாரண வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு மக்கள் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தார்கள் என்கிறார். அதாவது ஏனைய பகுதிகளில் நகர்ந்ததைப் போல பிந்தங்கிய பகுதிகளில் நகராதது மக்களின் தவறு என்கிறார். அதனால் தானே மாவோயிஸ்டுகள் அந்தப் பகுதிகளில் காலூன்றும்படி நேர்ந்துவிட்டது என அங்கலாய்க்கிறார். இந்த தேக்க மனோநிலையும் அதன் விளைவாக ஏற்பட்ட வறுமையும் இடதுசாரி தீவிரவாதத்திற்கு காரணமாகியது என்கிறார். இது அப்பட்டமாக அரசின் பார்வையா இல்லையா?
இன்றும் வடகிழக்கு மாநிலங்களில் கொட்டிக்கிடக்கும் கனிம வளங்களை கொள்ளையடிப்பதற்காகத்தானே அந்தப் பகுதி மக்களை வாழவைக்க திட்டம் தீட்டுவதாக அரசு பரப்புரை செய்கிறது. ஆனால் மக்கள் அந்த திட்டங்களை பசப்பு வார்த்தைகளை ஏற்க மறுக்கிறார்கள் என்பதால் தானே அவர்கள் மீது சல்வாஜுடும் குண்டர்படையை ஏவி விட்டது. அது தவிர்க்கவியலாமல் அம்பலப்பட்டுப் போனதால் தானே பசுமை வேட்டையை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. இவைகளை மறைத்துவிட்டு மக்கள் வாய்ப்பை பயன்படுத்தி முன்னேறவில்லை என்றும் மாவோயிஸ்டுகள் செயல்படும் பகுதிகளில் அந்த முன்னேற்றத்தை(!) வரவிடாமல் தடுத்தார்கள் என்பது போன்றும் எழுதுவது எந்த அடிப்படையில்? அல்லது யாருடைய விருப்பத்திற்காக?
ஜெயமோகனின் இந்த தொடர் கட்டுரையின் நோக்கம் மாவோயிஸ்டுகளை விமர்சிப்பது, அதனூடாக கம்யூனிசத்தை குற்றம் சாட்டுவது. தன்னை நேர்மையாளனாக (பின்நவீனத்துவவாதியாக) காட்டிக்கொள்வதற்காக முதலியத்தின் குணங்களை லேசாக கோடிட்டுக் காட்டும் ஜெயமோகன்; எதிரெதிர் நிலைகளான இரண்டின் குறை நிறைகளைகளையும் ஒப்பீட்டுக்கு எடுத்துக் கொண்டிருக்க வேண்டுமல்லவா? ஆனால் இந்தத் தொடர்கட்டுரை முழுவதும் அவர் மாவோயிஸ்டுகளின் குறைகளையும், முதலாளியத்தின் நிறைகளையுமே ஒப்பீட்டுக்கு எடுத்துக்கொண்டு பொருத்திக் காட்டுகிறார்.
கடந்த சில பத்தாண்டுகளில் மூன்று லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து மாண்டு போனது எதனுடைய விளைவு? மாவோயிஸ்டுகளின் போராட்டங்களினால் தானே அந்த மக்களுக்கு அரசின் வெகுசில சலுகைகளேனும் கிடைத்திருக்கிறது. தனக்குத் தேவையான பக்கங்களை மட்டும் புரட்டிப் பார்த்துவிட்டு விளம்புவது மதவாதிகளின் இலக்கணம். எழுத்தாளர்களுக்கும் அதுதான் போலும்.
1.மாவோயிச வன்முறையும், ஜெயமோகன் வன்முறையும் 1