பின்லாடன் போலவே, விக்கிலீக்ஸ் எனும் தகவல் ஊடக நிறுவனத்தின் நிறுவனரான ஜூலியன் அசாங்கேவும் அமெரிக்க வல்லரசால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். அவர் கைது செய்யப்படவேண்டும், கொல்லப்பட வேண்டும் என்று அமெரிக்கக் குடியரசுக் கட்சியின் பிரமுகரான சாரா பாலின் கொக்கரிக்கிறார். அமெரிக்க உள்துறைச் செயலரான ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஹிலாரி கிளிண்டன், அமெரிக்கத் தேச நலனுக்கு எதிராக இராணுவ இரகசியங்களை வெளிப்படுத்திய குற்றத்தை இழைத்துள்ளதாகக் கூறி, அசாங்கேவுக்கு எதிராக அமெரிக்கத் தேசிய வெறியைக் கிளறிவிட முயற்சிக்கிறார்.

 

அசாங்கேவின் சொந்த நாடான ஆஸ்திரேலியாவின் பிரதமர், அவரது கடவுச்சீட்டு திரும்பப் பெறப்படும் என்று அறிவித்துள்ளார். அசாங்கே ஸ்விட்சர்லாந்து நாட்டில் அரசியல் தஞ்சம் கோரியதும், கடும் விளைவுகளை ஸ்விட்சர்லாந்து எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கிறார், அந்நாட்டிலுள்ள அமெரிக்கத் தூதர். தனது நாட்டின் இரு பெண்களிடம் அசாங்கே பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டார் என்று குற்றம் சாட்டி அவரைத் தேடுகிறது ஸ்வீடன். பிரிட்டனில் அவர் கைது செய்யப்பட்டு தினசரி போலீசு நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையில் அவரை வீட்டுக் காவலில் வைத்திருக்கிறது பிரிட்டிஷ் அரசு. அவரை அமெரிக்காவுக்குக் கொண்டுவந்து, அமெரிக்கச் சட்டப்படி தண்டிக்க வேண்டும் என்கிறது, அமெரிக்கா.

 

விக்கிலீக்ஸ் எனும் தகவல் ஊடக நிறுவனத்தின் நிறுவனரான அசாங்கே செய்த மாபெரும் குற்றம் தான் என்ன? ஏகாதிபத்திய உலகம் ஏன் அவரைப் பயங்கரவாதியாகக் கருதித் தண்டிக்கத் துடிக்கிறது? ஊடகங்கள் சித்தரிப்பதைப் போல உலகம் இயங்கிக் கொண்டிருக்கவில்லை என்ற உண்மையை வெளிப்படையாக்கிவிட்டது, விக்கிலீக்ஸ். எவற்றையெல்லாம் இரகசியம் என்று அறிவித்து ஏகாதிபத்திய உலகம் மூடிமறைக்கிறதோ, அவற்றையெல்லாம் பகிரங்கப்படுத்தியுள்ளார் அசாங்கே. ஏகாதிபத்திய நாடுகளின் கணினிகளுக்குள் ஊடுருவல் (ஹாக்கிங்) செய்து, தகவல்களைச் சேகரித்து வெளியிட்டதுதான் அவர் செய்த "குற்றம்'. அமெரிக்கா மற்றும் மேற்கத்திய ஏகாதிப த்தியங்கள் நடத்திவரும் ஆக்கிரமிப்புப் படுகொலைகளையும், அப்பட்டமான மனித உரிமை மீறல்களையும், போர்க்குற்றங்களையும் அவர்களின் இரகசிய ஆவணங்கள், வாக்குமூலங்கள், ஒளிநாடாக்களிலிருந்து உலகுக்கு அம்பலப்படுத்தியதுதான் அவர் செய்த "குற்றம்'. எனவேதான், தனது அரசின் ஆவணங்களை இரகசியமாகத் திருடி உளவு வேலைகளில் ஈடுபட்டார் என்று குற்றம் சாட்டி அவரைத் தேடுகிறது அமெரிக்கா. பாலியல் வன்முறைக் குற்றம் சாட்டி தண்டிக்கத் துடிக்கிறது, அமெரிக்க ஆதரவு நாடான ஸ்வீடன்.

 

2006ஆம் ஆண்டில் ஆசிய, ஆப்பிரிக்க, மத்தியக் கிழக்கு நாடுகளின் அரசுகள் பற்றியும், அவற்றின் மனித உரிமை மீறல்கள் பற்றியும் விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தி வந்தது. கென்யாவின் படுகொலைகளை அம்பலப்படுத்தியதற்காக 2008ஆம் ஆண்டில் அனைத்துலக பொது மன்னிப்புக் கழகத்தின் (ஆம்னஸ்டி) விருது அசாங்கேவுக்கு வழங்கப்பட்டது. இதர நாடுகளின் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்துவது பற்றி அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளுக்கும் கவலையில்லை. இத்தகைய மனித உரிமை மீறல்களைக் காட்டி தலையீடு செய்வதற்கு அவர்களுக்குச் சாதகமான விசயம்தான் இது. ஆனால், பின்னர் வந்த காலத்தில் அசாங்கே அமெரிக்கப் பயங்கரவாதத்தை அம்பலப்படுத்தும் அதன் இரகசிய ஆவணங்களை வெளியிடத் தொடங்கியதால், இப்போது அவர் ஏகாதிபத்திய உலகத்துக்குப் பயங்கரவாதியாகிவிட்டார். இந்த ஆவணங்கள் வெளிவராமல் தடுக்க அமெரிக்கா எடுத்த முயற்சிகளும் தோல்வியில் முடிந்து விட்டன.

 

அமெரிக்கா மற்றும் மேற்கத்திய ஏகாதிபத்தியவாதிகளின் கரங்களில் ஏழைநாட்டு மக்களின் இரத்தம் படிந்திருப்பதை அவர்களது வாக்குமூலங்களிலிருந்தே இந்த ஆவணங்கள் அம்பலப்படுத்திக் காட்டுகின்றன. பயங்கரவாதத்துக்கு எதிரான போர், மனித உரிமை ஜனநா யகத்தை நிலைநாட்டுவது என்று கூறிக் கொண்டு ஆக்கிரமிப்புப் போர்களை நடத்திவரும் அமெரிக்காவின் பயங்கரவாத கோரமுகத்தை இந்த ஆவணங்கள் திரைகிழித்துக் காட்டுகின்றன. அமெரிக்கா என்பது மிகக் கொடூரமான வக்கிரமான வெறிபிடித்த மனிதத் தன்மையற்ற உலக மேலாதிக்க வல்லரசு என்று இப்போது கிழிபடுவதால், ஏகாதிபத்தியவாதிகள் அசாங்கேயைத் தண்டித்து உண்மைகள் வெளிவராமல் வாயடைக்கக் கீழ்த்தரமாக முயற்சிக்கின்றனர். இப்போது விக்கிலீக்ஸ், ஏகாதிபத்திய நாடுகளது வங்கிகளின் இரகசிய ஆவணங்களை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளதால், ஏகாதிபத்தியவாதிகள் மேலும் ஆத்திரமடைந்து இந்த உண்மைகளை அழிக்கத் துடிக்கின்றனர்.

 

தென் அமெரிக்க நாடுகளில் மக்களால் ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளைத் தூக்கியெறியவும், ஈரானுக்கு எதிராகப் போர் தொடுக்கவும் அமெரிக்கா மேற்கொண்டுள்ள சதிகளையும், ராஜபக்சேவின் போர்க்குற்றங்களையும் விக்கி லீக்ஸ் அம்பலப்படுத்திக் காட்டியுள்ளது. போர்க்குற்ற விசாரணையைச் செயல்படுத்தி ராஜபக்சே கும்பலைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்ற அமெரிக்காவும் மேற்கத்திய ஏகாதிபத்தியங்களும் தயாராக இல்லை என்பதை அமெரிக்கத் தூதர் அனுப்பியுள்ள கேபிள் செய்தி தெளிவாக்கிக் காட்டுகிறது. அரசுதந்திர இரகசியம் என்ற பெயரில் மூடிமறைக்கப்பட்டுத் தனிச்சுற்றுக்கு விடப்பட்ட இத்தகவல்கள் இன்று அனைவரும் பார்க்கும் வண்ணம் இணையத்திலும் ஊடகங்களிலும் கொட்டப்படுகின்றன. அமெரிக்காவின் உலக மேலாதிக்கப் போர்த்திட்டங்களும் அதற்கேற்ப அது மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்த விவரங்களும் அடுத்தடுத்து அம்பலப்படுத்தப் படுவதாலேயே, அமெரிக்கா ஆத்திரம் கொண்டு அசாங் கேயை முடமாக்கத் துடிக்கிறது.

 

அராஜகவாத சித்தாந்தத்தைக் கொண்டவராக அசாங்கே இருந்தபோதிலும், அவரது இந்த அம்பலப்படுத்தல்கள் சாமானிய மக்களிடம் அமெரிக்கா மற்றும் ஏகாதிபத்திய உலகைப் பற்றிய மாயைகளைத் தகர்க்கும். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் நாஜிப் படைகளின் போர்க்குற்றங்களை நூரம்பர்க்கில் விசாரித்து தண்டித்ததைப் போல, உலகப் பொது எதிரி அமெரிக்காவின் போர்க்குற்றங்களும் மேலாதிக்கச் சதிகளும் பகிரங்கமாக விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டுமென பொதுக்கருத்தை உருவாக்குவதும், அசாங்கேயை முடக்கத் துடிக்கும் ஏகாதிபத்திய மேலாதிக்கவாதிகளின் சதிகளை அம்பலப்படுத்தி, ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங் களை முன்னெடுத்துச் செல்வதும் புரட்சிகர ஜனநாயக இயக்கங்களின் அவசியமான கடமை. நம் கடமை. • சேகர்