திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டம் முத்தூரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில், கடந்த ஆண்டு டிசம்பர் 6 ஆம் நாளன்று தாழ்த்தப்பட்ட அருந்ததி பிரிவைச் சேர்ந்த இளம் பொறியாளர் சாமிதுரை மீது உள்ளூர் வேளாளக் கவுண்ட ஆதிக்க சாதிவெறியர்கள் சாதியைச் சொல்லி இழிவுபடுத்திக் கொலைவெறித் தாக்குதலை நடத்தியுள்ளனர். இத்தாக்குதலுக்கு மின்வாரிய அதிகாரிகள் ஆதரவாக நின்றுள்ளனர். தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் சாமிநாதனின் தூண்டுதலால், போலீசார் சாமிதுரை மீது பிணையில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் பொய்வழக்குப் பதிவு செய்துள்ளனர். மின்வாரியமும் சாமிதுரையைத் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்து பழிவாங்கியுள்ளது.

 

அமைச்சர் சாமிநாதனின் ஊர் என்பதால், முத்தூரில் அவரும் அவரது உறவினர்களும் மின்திருட்டில் ஈடுபட்டு வருவதற்கும், அதிகாரிகள் இலஞ்ச ஊழலில் ஈடுபடுவதற்கும் உடந்தையாக இருக்க சாமிதுரை மறுத்துவிட்டார். இதனால், சாதிவெறிபிடித்த அதிகாரிகள் அவரைப் புறக்கணித்துத் தொல்லைப்படுத்தி வந்தனர். அமைச்சர் நிர்ப்பந்தித்ததால், மின்வாரிய அதிகாரிகளால் மனநலம் பாதிக்கப்பட்டவராகச் சித்தரிக்கப்பட்டு அவர் நீலகிரிக்கு மாற்றப்பட்டார். பு.ஜ.தொ.மு., உதவியுடன் மேற்படி உத்தரவுக்கு உயர் நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை பெறப்பட்டது. இதனால் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் எழுந்ததால், மின்வாரிய நிர்வாகம் அதிர்ச்சியடைந்து, அவருக்குத் தொடர்ந்து தொல்லைகள் கொடுத்தது. அவரது கோப்புகளும் பதிவேடுகளும் களவாடப்பட்டன.

 

இதற்கெதிராக அனைத்து அதிகாரிகள் மீதும் வழக்குத் தொடர அனுமதி கேட்டு சாமிதுரை முறையிட்டதும், இவர் நக்சல்பாரி இயக்கத்தைச் சேர்ந்தவர் என்றும் அரசின் திட்டங்களை முடக்கிவைத்துச் சதி செய்வதாகவும் அதிகாரிகள் அவதூறு செய்தனர். அவரை அச்சுறுத்திப் பணிய வைக்கவே சாதிவெறியர்களைக் கொண்டு கடந்த டிசம்பர் 6ஆம் தேதியன்று கொலைவெறித் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

 

இந்த அநீதியை எதிர்த்து, பெரியார் தி.க., ஆதித் தமிழர் பேரவை, தலித் விடுதலைக் கட்சி உள்ளிட்டுப் பல்வேறுஅரசியல் கட்சிகள் தாழ்த்தப்பட்டோர் இயக்கங்களோடு பு.ஜ.தொ.மு., மக.இ.க., ஆகிய அமைப்புகளும் இணைந்து ""ஆதிக்க சாதிவெறி எதிர்ப்புக் கூட்டியக்கம்'' உருவாக்கப்பட்டது. இக்கூட்டியக்கத்தின் சார்பில், ""காங்கயம் முத்தூர் மின்வாரிய அலுவலகமா? ஆதிக்க சாதிவெறியர்களின் கூடாரமா?'' என்ற தலைப்பில் 31.12.2010 அன்று முத்தூர் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் பெரியார் தி.க. தலைவர் தோழர் கொளத்தூர் மணி, ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் தோழர் அதியமான், மூத்த வழக்குரைஞர் ப.பா.மோகன், பு.ஜ.தொ.மு.வைச் சேர்ந்த தோழர் இராமசாமி மற்றும் பிற முன்னணியாளர்கள் தீண்டாமைக் கொடுமைக்கு எதிராகக் கண்டன உரையாற்றினர். தாக்குதலை நடத்திய சாதிவெறியர்களையும் துணை நின்ற அதிகாரிகளையும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து தண்டிக்க வேண்டும்; சாமிதுரை மீது போடப்பட்டுள்ள பொய்வழக்குகளை உடனே திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையோடு இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்திய இக்கூட்டியக்கத்தினர், அடுத்த கட்ட போராட்டத்துக்கு ஆயத்தமாகி வருகின்றனர். தகவல்: பு.ஜ.தொ.மு., காங்கயம்.