05302023செ
Last updateபு, 02 மார் 2022 7pm

உ.பி.உணவு ஊழல்: ஏழைகளின் பெயரால் நடந்த பகற்கொள்ளை!

""அரசின் உணவு தானியக் கிடங்குகளில் புழுத்துப் போய்க் கிடக்கும் ஒரு தானியத்தைக்கூட ஏழை மக்களுக்கு இலவசமாகத் தர மாட்டேன்'' என அடித்துப் பேசி வருகிறார், மன்மோகன் சிங். இன்னொருபுறமோ, உ.பி. மாநிலத்தில் ரேஷன் கடைகளின் மூலமும் சமூக நலத் திட்டங்களின் மூலமும் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் ஏழைகளுக்கு விநியோகித்திருக்க வேண்டிய இரண்டு இலட்சம் கோடி ரூபாய் பெறுமான உணவு தானியங்களைக் கடத்திக் கொண்டு போய், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விற்றுள்ள ஊழல் நடந்திருப்பது தற்பொழுது அம்பலமாகியுள்ளது. அலைக்கற்றை ஊழல் பிரபலமான அளவிற்கு, உ.பி. மாநிலத்தில் நடந்துள்ள இந்த உணவு ஊழல் ஊடகங்கள் மத்தியில்கூட விரிவாகப் பேசப்படவில்லை.

 

அலைக்கற்றை ஊழலை நடத்திய குற்றவாளிகள், அவ்வூழலை ""இது அரசின் கொள்கை'' எனக் கூறித் தப்பித்துக் கொள்ள முயலுகிறார்கள். இந்த உணவு ஊழலோ அப்படிபட்ட "கொள்கை'ப் பூச்சுகள் எதுவுமின்றிப் பட்டப்பகல் வழிப்பறிக் கொள்ளையைப் போல நடந்துள்ளது. சம்பூர்ண கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டம், மதிய உணவுத் திட்டம், அந்த்யோதயா உணவு விநியோகத் திட்டம் ஆகியவற்றின் மூலம் ஏழை மக்களுக்கு வழங்க வேண்டிய உணவுப் பொருட்களை, அவர்களுக்கு விநியோகித்துவிட்டதாகப் பொய்க் கணக்கு எழுதியும்; ரேஷன் உணவுப் பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகளைக் கடத்தியும்; கடத்தப்பட்ட உணவுப் பொருட்களை உள்நாட்டில் மட்டுமின்றி, போலியான ஏற்றுமதி ஆவணங்களைத் தயாரித்து, வங்க தேசம், பூடான், நேபாளம் ஆகிய நாடுகளுக்கு "ஏற்றுமதி' செய்து விற்றும் இந்தக் கொள்ளை நடந்திருக்கிறது.

 

இந்த ஊழலில் ஈடுபட்ட வர்கள் தண்டிக்கப்பட்டால், அவர்களை அடைப்பதற்குப் புதிதாக ஓரிரு சிறைச்சாலைகளைக் கட்ட வேண்டும். அந்தளவிற்கு இந்தக் கொள்ளையர்களின் வலைப்பின்னல் பரந்து விரிந்ததாக உள்ளது. உ.பி.அரசைச் சேர்ந்த 450 உயர் அதிகாரிகள், 800 இடைநிலை அதிகாரிகள், உள்நாட்டையும் வெளிநாடுகளையும் சேர்ந்த 10,000 க்கும் மேற்பட்ட பதுக்கல் வியாபாரிகள், அரசியல்வாதிகள், கடத்தல் பேர்வழிகள் எனவொரு பெரிய கும்பல் இணைந்துதான் இந்தப் பகற்கொள்ளையை நடத்தி வந்திருக்கிறது.

 

2004இல் முலயம் சிங் ஆட்சி நடைபெற்றபொழுது, இந்த ஊழலின் நுனி தெரிய வந்தது. 2007இல் மாயாவதி ஆட்சியில் இந்த ஊழல் உ.பி மாநிலத்தில் 54 மாவட்டங் களில் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஊழல் குறித்த விசாரணை 2008இல் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டாலும், சி.பி.ஐ., வெறும் மூன்று மாவட்டங் களில் நடந்த ஊழலை மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. 2010ஆம் ஆண்டு இறுதியில் அலகாபாத் உயர்நீதி மன்றம் உத்தரவு இட்ட பிறகுதான் இந்த ஊழல் பற்றி சி.பி.ஐ., முழுமையான விசாரணை நடத்தத் தொடங்கியிருக்கிறது. இந்த வேகத்தில் இந்த ஊழல் விசாரணை நடந்தால், உ.பி. அரசிற்கு இந்த ஊழல் குற்றவாளிகளுக்காகப் புதிதாகச் சிறைச்சாலை கட்ட வேண்டிய தேவையே எழாது.

 

ரேஷன் அரிசியையும், கோதுமையையும் கடத்திக் கொள்ளையடிப்பது உ.பி. மாநிலத்தில் மட்டும் நடந்துவரும் விசயமல்ல. உ.பி. மாநிலத்தில் அம்பலமாகியுள்ள இந்த இரண்டு இலட்சம் கோடி ரூபாய் பெறுமான ஊழலோடு, பிற மாநிலங்களில் ரேஷன் பொருட்கள் வெளிச்சந்தைக்குக் கடத்தப்படுவதையும் சேர்த்துக் கணக்கிட்டால், இந்த உணவு தானிய ஊழலின் முன்னே அலைக்கற்றை ஊழல் வெறும் சுண்டைக்காய்தான்.

 

இந்தக் கடத்தலை ஒழிப்பது பற்றி நாம் பேசினால், ஆளும் கும்பலோ பட்ஜெட் பற்றாக்குறையைக் காட்டி, சமூக நலத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதைக் குறைப்பதைப் பற்றித்தான் பேசுகிறார்கள்; ரேஷன் கடைகளை ஒழித்துவிடத் திட்டம் போடுகிறார்கள். ரேஷன் அட்டைகளுக்குப் பதிலாக உணவுக் கூப்பன்கள்; ரேஷன் கடைகளுக்குப் பதிலாக வெளிச் சந்தை இதுதான் இந்தக் கொள்ளையைத் தடுக்க ஆளும் கும்பல் முன்வைக்கும் மாற்று வழி. கடத்தல்காரர்கள் தற்பொழுது சட்டவிரோதமாக அனுபவித்து வரும் உணவு மானியத்தை, பெரிய வியாபாரிகளிடம் அரசே சட்டபூர்வமாகக் கொடுக்கும் ஏற்பாடுதான் இது. · குப்பன்