குழந்தைத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்களா, சுற்றுச்சூழல் விதிகள் பின்பற்றப்பட்டுள்ளனவா என்று ஏழை நாடுகளிலிருந்து ஏற்றுமதியாகும் பொருட்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கும் ஏகாதிபத்தியவாதிகள், ஏழை நாடுகளில் இத்தகைய விதிகளை மீறிப் பன்னாட்டு நிறுவனங்கள் தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக்கிக் கொடூரமாகச் சுரண்டுவதைப் பற்றி வாய் திறப்பதில்லை. அழகழகான லிவைஸ் ஜீன்ஸ்களாகட்டும், ஆயத்த ஆடைகளை அள்ளிச் செல்ல அழைக்கும் வால்மார்ட், டெஸ்கோ முதலான பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களாகட்டும், இவற்றின் அழகுக்கும், நேர்த்திக்கும் பின்னே உறைந்திருப்பது, ஏழை நாடான வங்கதேசத் தொழிலாளர்களின் ரத்தம்.

 

வங்கதேசத் தலைநகர் டாக்காவில் உள்ளது, சிட்டா காங் ஏற்றுமதி தயாரிப்பு மண்டலம் (CEPZ). அங்கு கடந்த டிசம்பர் மாதம் கூலி உயர்வு கேட்டுப் போராடிய ஆயத்த ஆடைத் தொழிலாளர்கள் மீது துணை ராணுவப் படை மற்றும் போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நால்வர் பலியாகினர். கடந்த நான்கைந்து வருடங்களாகவே ஆயத்த ஆடைத் தொழிலாளர்களின், குறிப்பாக பெண் தொழிலாளர்களின் இத்தகைய போர்க்குண மிக்க போராட்டங்கள் வங்கதேசத்தை உலுக்கி வருகின்றன.

 

வங்கதேசம், உலகிலேயே மிகக் குறைவான கூலிக்குச் சுரண்டப்படும் ஆயத்த ஆடைத் தொழிலாளர்களின் கொத்தடிமைத் தேசமாகும். இங்கு தொழிலாளர்களுக்கு மாதம் 24 டாலர் (1660 டாக்கா ஏறத்தாழ ரூ.1200) மட்டுமே சம்பளமாகக் கொடுக்கப்படுகிறது. பல தொழிற்சாலைகள் இதைக்கூட கொடுக்காமல் ஏய்த்து வருகின்றன. வங்கதேசத்தின் ஒட்டுமொத்த ஏற்றுமதி வருவாயில் 80% ஆயுத்த ஆடை ஏற்றுமதியிலிருந்துதான் வருகிறது. விவசாயத்திற்கு அடுத்ததாக பெரியளவில் வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ள இத்துறை, நாட்டின் மொத்தத் தொழிலாளர்களில் 40% (35 லட்சம் தொழிலாளர்கள்) பேரைக் கொண்டுள்ளது. இத்தகைய பிரமாண்டமான தொழிற்துறையில் பணியாற்றும் தொழிலாளர் நிலையோ படுமோசமானது. ஒரே இடத்தில் அடைத்து வைத்து, உரிய கூலி கொடுக்காமல், பாதுகாப்பற்ற சூழலில் வேலை வாங்குவதன் காரணமாக, 2005லிருந்து 2010 வரை நடந்த பல கொடூர விபத்துக்களில் நூற்றுக்கணக்கில் தொழிலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் நடந்த ஒரு தீ விபத்தில் தொழிற்சாலைக் கதவுகளை நிர்வாகம் பூட்டியிருந்ததால் 25 பேர் கொல்லப்பட்டனர்.

 

இந்த அநீதிகளை எதிர்த்தும், கூலியை 75 டாலராக (5000 டாக்கா ஏறத்தாழ ரூ.3750) உயர்த்தக் கோரியும் பாதுகாப்பான வேலைச்சூழலைக் கோரியும் 2007 லிருந்தே தொழிலாளர்கள் போராடி வருகிறார்கள். துப்பாக்கிச் சூடுகள், கைது, சித்திரவதை எனப் பல்வேறு ஒடுக்குமுறைகளை மீறிப் போராட்டம் தொடர்ந்தது. இதுவரை 50,000க்கும் மேலான தொழிலாளர்கள் மீது  பொய்வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வேறு வழியின்றி கடந்த ஜூன் 2010இல் கூலியை 43 டால ராக (3000 டாக்கா ஏறத்தாழ ரூ.2150) உயர்த்துவதற்கு ஒத்துக் கொண்டது, அரசு. விலைவாசி உயர்வுடன் ஒப்பிட்டால் இது மிக அற்பமானதும், மனிதாபிமானமற்றதுமாகும் . ஆனால், இதைக் கூடத் தராமலும், போனஸ், உணவுக் கூப்பன் உள்ளிட்டவற்றை இனி கொடுக்க முடியாது என்றும் கொக்கரிக்கிறார்கள், ஆயத்த ஆடை முதலாளிகள். பன்னாட்டு முதலாளிகளின் இந்த மோசடியையும் திமிரையும் எதிர்த்து வீதிகளில் இறங்கிப் போர்க்குணத்துடன் போராடி வருகிறது, வங்கதேசத் தொழிலாளி வர்க்கம்.

 

இத்தகைய கொடூரச் சுரண்டலும் அடக்குமுறையும், அன்னியச் செலாவணியின் பெயராலும் வேலைவாய்ப்பின் பெயராலும் வக்கிரமான முறையில் நியாயப்படுத்தப்படுகின்றன. கூலியைக் குறைத்துக் கொள்ளாவிட்டால் ஏற்றுமதி ஒப்பந்தங்கள் வங்கதேசம், சீனாவுக்குப் போய்விடும் என்று பயமுறுத்தும் திருப்பூர் முதலாளிகளின் தந்திரத்தைத்தான் வங்கதேச முதலாளிகளும் பின்பற்றுகிறார்கள். வங்கதேசத் தொழிலாளிக்கும், குர்கானில் போராடும் ஹோண்டா தொழிலாளிக்கும், திருப்பூர் தொழிலாளிக்கும் பொது எதிரி ஏகாதிபத்திய மூலதனமே. வங்கதேச ஆயத்த ஆடைத் தொழில்துறைச் சுரண்டலின் இந்திய வடிவம்தான் திருப்பூர். நாடாளு மன்ற போலி ஜனநாயக மூடுதிரையின் பின்னே, இந்தியாவிலும் வங்கதேசத்திலும் ஆட்சி செய்வது பன்னாட்டுக் குழும முதலாளிகளும் அவர்களின் கூட்டாளிகளான தரகுப் பெருமுதலாளிகளும்தான். இந்நாடுகளில் போராடும் தொழிலாளி வர்க்கம், தமது பொது எதிரிகளை எதிர்த்து ஒன்றுபட்டுப் போராட வேண்டியுள்ளதையும், அதற்குத் தெற்காசிய அளவிலான தொழிலாளர்களின் ஒற்றுமையைக் கட்டியமைக்க வேண்டிய அவசியம் உருவாகியுள்ளதையுமே வங்கதேசத் தொழிலாளர் போராட்டம் உணர்த்துகிறது. · அன்பு