""இரானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இனி பழைய முறையில் பணப் பட்டுவாடா செய்வதற்கு உதவ முடியாது '' என இந்திய ரிசர்வ் வங்கி கடந்த டிசம்பர் மாத இறுதியில் அறிவித்தது. ""இரானுடனான ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிப்பது கச்சா எண்ணெய் இறக்குமதிதான். எனவே, பணப் பட்டுவாடா செய்வதற்கு மாற்று வழியை உடனடியாக ஏற்பாடு செய்யாவிட்டால், அடுத்த ஓரிரு மாதங்களுக்குள்ளாகவே உள்நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடும்'' எனக் குறிப்பிட்டு, உள்நாட்டு முதலாளித்துவப் பத்திரிகைகள்கூட ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பை ஏற்றுக் கொள்ள முடியாமல் முணுமுணுத்துக் கொண்டிருக்கும்பொழுது, அமெரிக்கா, ""இது குறிப்பிடத்தக்க நடவடிக்கை'' எனக் கூறி, இந்தியாவைப் பாராட்டியிருக்கிறது.
இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய்த் தேவையில் ஏறத்தாழ 12 சதவீதம் இரானில் இருந்து இறக்குமதி செய்வதன் மூலம்தான் பெறப்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் வரை இரானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கான நிலுவையை ஆசியன் கணக்குத்தீர்வு ஒன்றியம் (Asian Clearing Union) என்ற அமைப்பு மூலம்தான் இந்திய ரிசர்வ் வங்கி பட்டுவாடா செய்து வந்தது. 1974ஆம் ஆண்டு ஐ.நா. மன்றத்தால் உருவாக்கப்பட்ட இந்த ஒன்றியத்தில், இரான், இந்தியா மட்டுமின்றி, பிற தெற்காசிய நாடுகளும், மியான்மரும் உறுப்புகளாக உள்ளன. இந்த நாடுகளுக்கு இடையே நடைபெறும் ஏற்றுமதிஇறக்குமதி வர்த்தகத்துக்கான பணப் பட்டுவாடா அனைத்தும் இந்த ஒன்றியத்தின் மூலம்தான் நடைபெற்று வருகிறது.
இரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை ஐ.நா. மூலம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அமெரிக்கா எடுத்துவரும் முயற்சிகள் இன்னும் வெற்றி பெறவில்லை. எனினும், அவ்வர்த்தகத்தைச் சீர்குலைக்கும் நோக்கத்தோடு, இரானுடனான ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் அமெரிக்க டாலர் செலாவணியாகப் பயன்படுத்தப்படுவதை அமெரிக்கா 2008ஆம் ஆண்டில் தன்னிச்சையாகத் தடை செய்தது. அதுவரை, இந்த ஒன்றியத்திற்குள் அமெரிக்க டாலரில் நடைபெற்று வந்த இரானுடனான ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம், அதன் பின்னர் யூரோவுக்கு மாற்றப்பட்டது.
இதனையும் தடுக்க முடிவு செய்த அமெரிக்கா, இந்த ஒன்றியத்தைச் சேர்ந்த நாடுகளின் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தின் பணப் பட்டுவாடாவிற்கு உதவி வருவதோடு, ஜெர்மனியில் உள்ள ஹாம்பர்க் நகரில் செயல்பட்டு வருவதுமான இரான் ஐரோப்பிய வர்த்தக வங்கி யான ""ஏ.ஜி. (இ.ஐ.எச்)'' என்ற இரானுக்குச் சொந்தமான வங்கி மீது பொருளாதாரத் தடை உத்தரவைப் பிறப்பித்தது. இதனையடுத்து ஐரோப்பிய ஒன்றியத்துக்கு நெருக்கடி கொடுத்து, ""இரானுடனான ஏற்றுமதிஇறக்குமதி வர்த்தகத்தில் யூரோவைச் செலாவணியாகப் பயன்படுத்தும் நாடுகள், தாங்கள் பட்டுவாடா செய்யும் யூரோ, பொருளாதாரத் தடையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள பொருட்களை இரானில் இருந்து இறக்குமதி செய்வதற்குப் பயன்படுத்தப்படவில்லை '' எனச் சான்றளிக்க வேண்டும் என உத்தரவிட வைத்தது.
இரானில் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து கொள்வது இன்னும் தடை செய்யப்படாத நிலையில், இந்திய ரிசர்வ் வங்கிக்கு இப்படிபட்ட சான்றிதழ் அளிப்பது மிகவும் எளிதான வேலைதான். ஆனால், இந்திய ரிசர்வ் வங்கியோ இந்தச் சான்றிதழ் வழங்க வேண்டிய "தொல்லையை'க் காரணமாகக் காட்டி, ஆசியன் கணக்குத்தீர்வு ஒன்றியத்தில் இருந்தே விலகிக் கொண்டுவிட்டது. இந்த அமைப்பிற்குப் பதிலாக ஒரு புதிய பணப் பட்டுவாடா முறையை ஏற்பாடு செய்யப் போவதாக அறிவித்திருக்கிறது, இந்திய ரிசர்வ் வங்கி. இதன் மூலம் ஆசியன் கணக்குத்தீர்வு ஒன்றியத்தை ஒழித்துக்கட்டிவிடத் துடித்துக் கொண்டிருந்த அமெரிக்காவின் ஆசையை நிறைவேற்றி வைத்திருக்கிறது, இந்தியா.
இரானுக்கு எதிரான இக்கூட்டுச் சதியைத் தனிப்பட்ட தவறான பொருளாதார நடவடிக்கையாகப் பார்க்க முடியாது. மேற்காசியாவில் இராக்கிற்கு அடுத்து இரானைக் குறிவைத்திருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம், அந்நாட்டின் அரசியல் பொருளாதார பலத்தைச் சீர்குலைக்க கடந்த மூன்றாண்டுகளாகப் பல்வேறு சதிகளை வெளிப்படையாகவே செய்து வருகிறது. அந் நாட்டின் மீது தன்னிச்சையாகப் பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள அமெரிக்கா, கடந்த ஆண்டில் இரானில், முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளில் நடத்தியதைப் போல, தனது ஆதரவாளர்களைப் பயன்படுத்திக் கொண்டு ஒரு ""வண்ணப் புரட்சி''யை நடத்த முயன்று தோற்றுப் போனது.
இதனையடுத்து, கடந்த ஆண்டு ஜூனில் ஐ.நா.வின் மூலம் அந்நாட்டின் 40க்கும் மேற்பட்ட பொருளாதார வர்த்தக நிறுவனங்களின் மீதும் முக்கிய வங்கிகளின் மீதும் பொருளாதாரத் தடையை விதிக்கச் செய்தது, அமெரிக்கா. அந்நாட்டின் கச்சா எண்ணெய் தொழிலில் எந்தவொரு நாடும் முதலீடு செய்யக்கூடாது; இரானுக்கு எந்தவொரு நாடும் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களை ஏற்றுமதி செய்யக் கூடாது; இரானின் கப்பல்கள் இரானின் அணு ஆராய்ச்சிக்குத் தேவையான பொருட்களை ஏற்றிக் கொண்டு செல்வதாகச் சந்தேகித்தால், அக்கப்பல்களை சர்வதேச கடல் எல்லைக்குள்ளேயே நிறுத்திச் சோதனை செய்யும் அதிகாரம் — எனப் பல்வேறுவிதமான மேலாதிக்க நடவடிக்கைகளை இரானின் மீது ஏவிவிட்டு வருகிறது,
அமெரிக்கா. சதாம் உசேன் பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருப்பதாகப் பிரச்சாரம் செய்து இராக் மீதான ஆக்கிரமிப்புப் போரை நடத்தியதைப் போல, இரான் அணு ஆயுதங்களை இரகசியமாகத் தயாரித்து வருவதாக ஒரு புளுகுணிப் பிரச்சாரத்தை அவிழ்த்துவிட்டு, இரானின் மீது ஒரு ஆக்கிரமிப்புப் போரை நடத்துவதற்கான முகாந்திரத்தை உருவாக்கி வருகிறது, அமெரிக்கா.
அந்நாட்டின் பொருளாதாரத்தையும், அணு ஆற்றலையும் சீர்குலைப்பதன் மூலம், தனது எதிரியைத் தாக்குதலுக்கு முன்பாகவே பலவீனப்படுத்தும் முகமாகத்தான் இப்பொருளாதாரத் தடையுத்தரவுகளைத் திணித்து வருகிறது.
அணுகுண்டு தயாரிப்பதா, வேண்டாமா எனத் தீர்மானிக்கும் இரானின் சுயாதிபத்திய உரிமையை அமெரிக்க ஏகாதிபத்தியம் மட்டுமல்ல, இந்தியாவும் ஏற்றுக் கொள்ள மறுத்து வருகிறது. அணுகுண்டு தயாரிக்கும் அளவிற்கு யுரேனியத்தைச் செறிவூட்டும் தொழில்நுட்பம் தற்சமயம் இரானிடம் கிடையாது என்ற உண்ø மயையும் அமெரிக்கா போலவே இந்தியாவும் ஒப்புக்கொள்ள மறுத்து வருகிறது.
குறிப்பாக, அமெரிக்காவின் நிர்பந்தப்படி சர்வதேச அணுசக்தி முகமையில் இரானுக்கு எதிராக வாக்களித்தது, இந்தியா. இரான் பாகிஸ்தான் இந்தியா இடையே பேசி முடிக்கப்பட்ட குழாய் வழியாக இயற்கை எரிவாயுவைக் கொண்டுவரும் திட்டத்தையும் கிடப்பில் போட்டது. அமெரிக்கா தன்னிச்சையாக இரானின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தவுடனேயே, ரிலையன்ஸ் நிறுவனம் இரானில் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்துவந்ததைக் கைவிட்டது. இந்தியாவில் இருந்து அந்நாட்டிற்கு கிரானைட் கற்கள் ஏற்றுமதி செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டது. இரானுக்குப் பதிலாக அமெரிக்காவுக்கு நெருக்கமான சௌதி அரேபியாவில் இருந்து தனக்குத் தேவைப்படும் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து கொள்ளும் திட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது, இந்திய அரசு. இவை அனைத்திற்கு மேலாக, இரானின் அதிபர் அகமதிநிஜாத் தனது சுற்றுப்பயணத்தின் இடையே இந்தியாவில் இறங்கிச் சென்றதற்குக்கூட அமெரிக்காவிற்கு விளக்கும் கொடுக்கும் அளவிற்கு மன்மோகன் சிங் அரசு அமெரிக்க அடிவருடியாகச் செயல்பட்டு வருகிறது.
இந்தியா தற்பொழுது ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் தற்காலிக உறுப்பினராகத் தேர்வாகியுள்ளது. இந்தக் காலக் கட்டத்தில் இந்தியா அமெரிக்காவின் குரலை எதிரொலித்தால், இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க அமெரிக்கா உதவும் என அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியாவிற்கு வந்தபொழுது எலும்புத் துண்டை வீசிவிட்டுப் போனார். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அக்கட்டளைக்கு ஏற்ப இந்தியா வாலாட்டி வருகிறது என்பதைத்தான் ஆசியன் கணக்குத்தீர்வு ஒன்றியத்தில் இருந்து இந்தியா விலகியது எடுத்துக் காட்டுகிறது. ·
செல்வம்