கடந்த டிசம்பர் 18ஆம் தேதியன்று கோவை என்.டி.சி. மில் தொழிற்சங்க அங்கீகாரத்துக்கான தேர்தலில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியுடன் இணைந்துள்ள கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம் பெருவெற்றி பெற்றது (பார்க்க: பு.ஜ. ஜனவரி 2011 இதழ்). இம்மகத்தான வெற்றியைப் பறைசாற்றியும், தொழிலாளர்களுக்கு நம்பிக்கையையும் போராட்ட உணர்வையும் ஊட்டும் வகையிலும் கடந்த ஜனவரி 9ஆம் நாளன்று கோவை பீளமேடு புதூர் சந்தை மைதானத்தில் இத்தொழிற்சங்கத்தின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
ஏறத்தாழ ஆயிரம் பேருக்கும் மேலான தொழிலாளர்கள் தமது குடும்பத்துடன் திரண்டிருந்த இக்கூட்டத்தைப் பார்த்து, கடந்த முப்பதாண்டுகளில் இதுபோல வர்க்க உணர்வுடன் தொழிலாளர்களின் கூட்டம் நடந்ததேயில்லை என்று மூத்த தலைமுறையைச் சேர்ந்த தொழிலாளர்கள் பேருற்சாகத்துடன் வாழ்த்தினர்.
செங்கொடிகள் பட்டொளி வீசப் பறக்க, மேடையில் என்.டி.சி. யின் ஏழு மில்களைச் சேர்ந்த சங்கத் தலைவர்கள் முன்னிலை வகிக்க, தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்திக் கூட்டம் தொடங்கியது. ஏழு மில்களின் சங்கப் பிரதிநிதிகளும், பு.ஜ.தொ.மு. மாவட்டச் செயலாளர்களும், மாநிலச் செயலர் தோழர் சுப.தங்கராசுவும், ம.க.இ.க. மாநிலச் செயலர் தோழர் மருதையனும் சிறப்புரையாற்றினர். தோழர் மருதையன் ஆற்றிய சிறப்புரை, துவண்டு கிடந்த கோவைத் தொழிலாளி வர்க்கத்துக்கு புதிய நம்பிக்கையை அளிப்பதாக அமைந்தது. போராட்ட உணர்வைத் தட்டியெழுப்பிய ம.க.இ.க. மையக் கலைக்குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சியால் உந்தப்பட்ட பல தொழிலாளிகள் அடுத்தடுத்து போட்டி போட்டுக் கொண்டு மேடையில் வந்து நன்கொடைகளை அளித்தனர்.
தொழிலாளி வர்க்கத்துக்கு அவநம்பிக்கைக்கு மாற்றாக நம்பிக்கையையும், துரோகத்துக்கு எதிராக தியாகத்தையும், கருங்காலித்தனத்துக்கு எதிராகப் போர்க்குணத்தையும் தனது பதாகையில் ஏந்தி நிற்கும் புரட்சிகர தொழிற்சங்கத்தின் இந்த வெற்றிவிழா பொதுக்கூட்டம், தொழிலாளி வர்க்கத்திடம் புதிய நம்பிக்கையை விதைத்துப் புதிய போராட்டப் பாதையைக் காட்டியுள்ளது. தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகளுக்காகப் போராடுபவர்கள் யாரோ, போராடக் கற்றுக் கொடுப்பவர்கள் யாரோ, இழப்புகளை முன்வந்து ஏற்பவர்கள் யாரோ, அவர்கள் மட்டும்தான் தொழிலாளி வர்க்கத்தின் நம்பிக்கையைப் பெற முடியும் என்பதை இப் பொதுக்கூட்டம் நிரூபித்துக் காட்டியது. தகவல்: பு.ஜ.தொ.மு., கோவை.