"இன்று எங்கும் எதிலும் இலஞ்சஊழல் நிரம்பியுள்ளது. அது அரசியல் அல்லது அதிகார வர்க்க வரம்போடு நின்று விடவில்லை. இலஞ்ச ஊழலுக்கு அப்பாற்பட்டதென்று ஒரே ஒரு நிறுவனத்தைக் கூட என்னால் சொல்ல முடியாது. சில சமீபகாலச் செய்திகளைப் பார்க்கும்போது செய்தி ஊடகமும் கூட இலஞ்சஊழல் சாக்கடையில் இருந்து விடுபட்டதாக இல்லை. எனக்கு எதிராக உட்கார்ந்திருக்கும் செய்தி ஊடகத் துறையைச் சேர்ந்த உங்களில் யாரும், முன்வினைப் பயன் காரணமாக, இலஞ்ச ஊழலை விசாரிக்கும் லோகாயுத அமைப்பின் விசாரணை வரம்புக்குள் வராததால் தப்பிவிட்டீர்கள்'' என்று செய்தி ஊடகத்தாரின் முகத்துக்கு நேராகக் காறி உமிழ்ந்தார், கர்நாடகா லோகயுதா தலைவர் சந்தோஷ் ஹெக்டே.

 

அதிகார நாயகர்களுடன் நெருக்கமான உறவைப் பயன்படுத்தி, வழிமுறைகளுக்கு மாறாகச் சலுகைகள் பெறுவது, கார்ப்பரேட் தரகர்கள் செய்தி ஊடகத்தார் இரகசிய உறவு, கார்ப்போரேட் சம்பளப் பட்டியலில் அவர்கள் இருப்பது மற்றும் பணத்துக்குச் செய்தி ஆகியவை பற்றி ஏராளமான புகார்கள் அம்பலமாகி வருகின்றன. உள்ளூர் செய்தியாளர்கள் முதல் தலைமை ஆசிரியர்கள் வரை கையூட்டு வாங்கிக் கொண்டுதான் செய்தி போடுகிறார்கள். செய்தி ஊடகம் என்பது நடுநிலையானதோ, மக்களுக்கு உண்மைச் செய்திகளைக் கொடுக்கும் சமூகசேவை அமைப்போ அல்ல. கார்ப்பரேட் மற்றும் அரசு விளம்பரங்களையே முக்கிய வருவாயாகக் கொண்டு நடத்தப்படும் செய்தி ஊடகமே ஒருசில ஏகபோக கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும் அரசுக்கும் சொந்தமாக உள்ளது. ஆகவே, அரசியல் கட்சிகளும் அரசும் மட்டுமல்ல, கார்ப்பரேட் முதலாளிகளும் முக்கியமாகத் தமக்குச் சாதகமான வகையில் செய்தி ஊடகம் மூலம் உண்மைகளைத் திரித்தும் புரட்டியும் முன்னுரிமைகளை மாற்றியும் மூடிமறைத்தும் கண் பட்டை கட்டப்பட்ட குதிரையைப் போல சமூகத்தை வழிநடத்துகின்றனர்.

 

 

கடந்த ஆண்டு நவம்பரில் மட்டும் பல்வேறு இலஞ்ச ஊழல், அதிகார முறைகேடுகள், மோசடி விவகாரங்கள் வெளிவந்திருக்கின்றன. இந்த விவகாரங்களில் எல்லாம் முழுமையான உண்மைகளை முன்வைப்பதற்குப் பதில், செய்தி ஊடகமும், அரசியல் கட்சிகளும், அரசும், கார்ப்பரேட் முதலாளிகளும் ஒரு தந்திரத்தை மேற்கொள்கிறார்கள். ""மரத்தைப் பார்த்துவிட்டு தோப்பைக் கவனிக்கத் தவறுவது'' பார்வைக் கோளாறை ஏற்படுத்தும். நாட்டு மக்களிடையே அத்தகையதொரு பார்வைக் கோளாறை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிந்தே திட்டமிட்டுச் செயல்படுகிறார்கள்.

நாளும் வெளிவரும் இலஞ்சஊழல், அதிகார முறைகேடுகள், மோசடிகளை முழுமையாகவும் தொகுப்பாகவும் பார்க்கும்போது, அவற்றின் ஆழத்திலும் அளவிலும் பரப்பிலும் பார்க்கும்போது நாட்டின் ஒட்டுமொத்த அரசியல், பொருளாதார அமைப்பே மீளமுடியாத நெருக்கடியில் சிக்கியுள்ளது என்ற முடிவுக்குத்தான் யாரும் வர முடியும். ஆனால், ஒவ்வொரு விவகாரம் வெளிவரும் போதும், அது ஏதோ தனிப்பட்ட, தற்செயலாக நேரும் விவகாரம், பொதுத் தன்மையாகவோ பொதுவிதியாகவோ மாறிவிடவில்லை என்கிற கருத்து பரப்பப்பட்டு நியாயப்படுத்தப்படுகிறது; அல்லது அது அந்தத் துறைசார்ந்த விவகாரமாகச் சுருக்கி அமுக்கப்படுகிறது; அல்லது சமூகத்தில், மக்களிடையே நிலவும் போக்கைத்தான் அந்த விவகாரம் பிரதிபலிக்கிறது என்று குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மீதே பழி சுமத்தப்படுகிறது.

 

இலஞ்சஊழல், அதிகார முறைகேடுகள், மோசடிகள் என்பது எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்துவிட்டதை மூடிமறைத்து, விதிவிலக்கான தனியொரு விவகாரமாகச் சித்தரித்து, தற்போதைய அரசியல் பொருளாதார மற்றும் நீதிநிர்வாக அமைப்பின் மீது நம்பிக்கை இழந்துவிட்ட மக்களிடம் அவற்றின் மீதே மீண்டும் நம்பிக்கை ஏற்படுத்தும் முயற்சியாக, ""தோப்பைப் பார்க்காதீர்கள்; மரத்தை மட்டும் கவனியுங்கள்'' என்று காட்டப்படுகிறது.

புற்றீசலாக வெளிவரும் பல இலஞ்சஊழல், அதிகார முறைகேடுகள், மோசடி விவகாரங்களில் ஒன்றுதான் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம். மற்ற விவகாரங்களை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தின் மீது மட்டும்தான் கவனம் குவிக்கப்படுகிறது. அதிலும் கூட, இந்த ஒதுக்கீடு மோசடியால் பல ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையிட்ட கார்ப்பரேட் முதலாளிகள் பற்றிய விசயங்கள் புறந்தள்ளப்பட்டு, ராஜாவும் ராடியாவும் மட்டும்தான் எல்லாவற்றுக்கும் காரணமான குற்றவாளிகளாகச் சித்தரிக்கப்படுகிறார்கள். அவர்களைப் பற்றிக்கூட நாலாந்தர மஞ்சள் பத்திரிக்கைகள் தரத்துக்கு வதந்திகள், கிசுகிசுக்கள், பரபரப்பும், கிளுகிளுப்பும் ஊட்டும் வகையில் மக்களிடையே பரப்பப்படுகிறது.

 

கருணாநிதியின் குடும்ப ஆதிக்க அரசியலுக்கு எதிராக சுப்பிரமணிய சாமி, ஜெயலலிதா, தா.பாண்டியன், துக்ளக் ""சோ'' போன்றவர்களின் கூட்டணி நடத்தும் தேர்தல் அரசியல் பிரச்சாரத்தின் முக்கிய உள்ளடக்கமாக 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல்மோசடி விவகாரம் முன்னிறுத்தப்படுகிறது. இதைத் தாண்டி ஒரு முழுமையான பார்வையை மக்கள் பெற்றாக வேண்டியிருக்கிறது.

 

இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்துள்ள ஊழல் மோசடி நாடு இதுவரை காணாத அளவு பெரியது, பிரம்மாண்டமானது; இதனால் அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பீடு ரூ.1.76 லட்சம் கோடி அளவிலானது என்பதனால் முக்கியத்துவமளிக்கப்படுகிறது என்று கூறி செய்தி ஊடகம் பிரமிக்க வைக்கிறது. அடுத்து வெளிவந்த ஊழல்மோசடி உத்திரப்பிரதேசத்தில் மட்டும் வேலைக்கு உணவுத் திட்டத்தின் கீழ், ஏழைக்கும் ஏழைகளான மக்களுக்கு வழங்க வேண்டிய 2 இலட்சம் கோடி ரூபாய் மதிப்புடைய உணவுப் பொருட்கள் வெளிநாடுகளுக்குக் கடத்தி விற்கப்பட்டிருக்கிறது. ஒரு மாநிலத்தில் மட்டும் இந்த அளவு கடத்தல் ஊழல் மோசடி நடந்திருக்கிறது என்றால் நாடு முழுவதும் எத்தனை இலட்சம் கோடி ரூபாய் மதிப்புடையவை நடந்திருக்கும். இது குறித்து இன்னமும் முழுமையான விசாரணையும் விவாதமும் தணிக்கை அறிக்கையும் வெளிவரவில்லை.

 

இதைத் தொடர்ந்து, பிரபலமான வீடுவீட்டு மனை கார்ப்பரேட் கம்பெனிகள் போலி ஆவணங்கள் தயாரித்து, கையூட்டுக் கொடுத்து ஆயுள் காப்பீடுக் கழகம் மற்றும் பொதுத்துறை வங்கிகளிடமிருந்து கோடிகோடியாகக் கடன் வாங்கி, பங்குச் சந்தையில் போட்டுச் சூதாடியிருப்பதும் வெளிவந்துள்ளது. பல உயரதிகாரிகள் கையும் களவுமாகப் பிடிபட்டுக் கைதாகியுள்ள இந்த விவகாரத்தில் இலஞ்சஊழல், மோசடியின் அளவும் பிரம்மாண்டமும் இன்னமும் வெளிவரவில்லை.

 

சமீபத்திய இலஞ்சஊழல், அதிகார முறைகேடுகள், மோசடிகள் மிகப் பிரம்மாண்டமாய் அளவிலும் தன்மையிலும் உயர்ந்திருப்பதற்கான காரணத்தையும் குற்றவாளிகளையும் வேறெங்கும் தேடத் தேவையில்லை. இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீடு மோசடியில் அரசுக்கு 1.76 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது என்கிறபோது, அந்தத் தொகை முழுவதையும் ராஜா ராடியா சுருட்டிக் கொண்டார்கள் என்று யாரும் சொல்ல வில்லை. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்ற கார்ப்ப ரேட் கம்பெனிகள் தான் ஆதாயம் அடைந்தார்கள்; அந்தக் கம்பெனிகள் குறைந்த தொகை செலுத்தி ஒதுக்கீடுகள் பெற்று, அவற்றைக் கூடுதலான தொகைக்கு விற்று ஆதாயம் அடைந்தார்கள். அது எவ்வளவு கோடிகள் என்று யாரும் கணக்கிட்டுச் சொல்லவில்லை. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை ஏலத்தில் விட்டிருந்தால் எவ்வளவு கிடைத்திருக்கும் என்று மதிப்பிட்டு, அவ்வாறு செய்யாமல் முதலில் வந்தவருக்கு முதலில் ஒதுக்கீடு என்றும், அதிலும் பல மோசடிகள் செய்ததாலும் ரூ.1.76 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டது என்றுதான் பொதுத் தணிக்கைக் குழு கணக்கிட்டு ராஜா மற்றும் அவரது அதிகாரிகள், பினாமிகள் மீது குற்றஞ் சாட்டுகிறது.

 

ஆனால், ராஜா மூலம் முறைகேடாகவும், மோசடி செய்தும் ஒதுக்கீடு பெற்று நேரடி ஆதாயம் அடைந்தது தனியார் கார்ப்பரேட் முதலாளிகள்தாம். (இவ்வாறுதான் டாடாகள், மிட்டல்கள், அம்பானிகள் செல்வம் குவித்து உலகப் பணக்காரர்கள் வரிசையில் இடம் பிடிக்கிறார்கள்) இப்படி அவர்கள் ஆதாயம் அடைவதற்காக ஒரு பெருந்தொகையை ராடியாவுக்கு ஊதியமாகவும், அதைவிடப் பெருந்தொகையை ராஜாவுக்கும் அவரது அதிகாரிகளுக்கும் இலஞ்சமாகக் கொடுத்தார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. ராஜாவும், ராடியாவும் பெற்ற தொகை எவ்வளவு, அதை அவர்கள் எங்கே பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்பதற்குத்தான் சி.பி.ஐ. விசாரணையும் ""அதிரடி'' சோதனை அல்லது சோதனை நாடகமும் நடக்கிறது.

 

இப்படியான இலஞ்ச ஊழல், அதிகார முறைகேடுகள் மோசடிகள், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் மட்டுமல்ல, பொதுத்துறை எனப்படும் அரசுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்பது, அரசுக்கும் நாட்டுக்கும், மக்களுக்கும் சொந்தமான நீர், நிலம், காடுகள், மலைகள் அவற்றில் புதைந்திருக்கும் கனிம வளங்கள், நாட்டின் அடிப்படைக் கட்டுமானப் பணிகள், மக்களின் உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் அணுசக்தி மற்றும் இரசாயனத் தொழிற்சாலைகள் அமைப்பது முதலிய பலவற்றிலும் கார்ப்பரேட் முதலாளிகள் இவ்வாறுதான் ஆதாயம் அடைகிறார்கள்.

 

ஒரு லிட்டர் 15 ரூபாய் வரை விற்கப்படும் குடிதண் ணீர் 11 பைசாவுக்கு அந்நிய ஏகபோக கம்பெனிகளான கோகோகோலா, பெப்சிக்கு ""ஒதுக்கீடு'' செய்யப்பட்டுள்ளது.

 

ஒரு டன் இரும்புக் கனிமம் 26 ரூபாய் என்ற விலையில் பல கோடி டன்கள் அளவுக்குப் புதைந்துள்ள மலைகள் அந்தத் தொழிலுக்கே சம்பந்தம் இல்லாத பல தனியார் முதலாளிகளுக்கு கர்நாடகா, ஆந்திராவில் ""ஒதுக்கீடு'' செய்யப்பட்டது. அவற்றை அவர்கள் கர்நாடகா ரெட்டி சகோதரர்களுக்கு விற்று ஆதாயம் அடைந்தார்கள். (ரெட்டி சகோதரர்கள் கிரிமினல் ரெளடித்தனம் செய்து அடாவடியாகக் கைப்பற்றிக் கொண்ட சுரங்கங்களும் உண்டு) ரெட்டி சகோதரர்களோ ஒரு டன் இரும்புக் கனிமத்தை 7000 ரூபாய்க்கு ஏற்றுமதி செய்து ஆதாயம் அடைந்தார்கள்.

ரெட்டி சகோதரர்களுக்கு மட்டுமல்ல, டாடா, மிட்டல், எஸ்.ஆர். வேதாந்தா, போஸ்கோ போன்ற உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட் முதலாளித்துவக் கம்பெனிகளுடன் இரும்பு, அலுமினியம் பாக்சைடு, செம்பு முதலிய கனிமத் தாதுக்களை மிகவும் அற்பமான குத்தகை விலைக்குத் தோண்டி எடுத்துக் கொள்ளும் இரகசியப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. ஒப்பந்தப்படியான எல்லைக்குள் மட்டுமின்றி, சுற்றியுள்ள பல ஆயிரம் ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்துச் சுரங்கங்கள் தோண்டி, கனிமப் பொருட்களை எடுத்து அந்தக் கார்ப்பரேட் கம்பெனிகள் கொள்ளையிட்டு வருகின்றன. இந்தக் கொள்ளைக்குப் பாதுகாப்பாக துணை இராணுவத்தையே ஏவி உள்நாட்டுப் போரை நடத்துவதோடு, நாட்டின் இயற்கை வளங்களும் சுற்றுச்சூழலும் நாசமாக்கப்படுவதை வேடிக்கை பார்க்கிறது, அரசு.

 

அம்பானியின் ரிலையன்சு நிறுவனம் அரபிக் கடலிலும், கோதாவரிப் படுகையிலும், ஆழ்துளைக் கிணறுகள் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் புனே நகருக்கு அருகே லாவாஸா நிறுவனம் அமைத்து வரும் தனியார் நகரம். மேட்டுக்குடி கும்பலின் ஆடம்பர வாழ்விற்காக மலைசார்ந்த வனப்பகுதி சூறையாடப்படும் கொடுமை! தோண்டி, பலகோடி டன்கள் பெட்ரோலிய எண்ணெய், எரிவாயு உறிஞ்சிக் கொள்ள அவ்வயல்கள் சில ஆயிரம் கோடி ரூபாய்க்கு, குத்தகைக்கு விட்டிருக்கின்றன, காங்கிரசு, பா.ஜ.க. அரசுகள். இது போதாதென்று, கொள்ளை இலாபம் அடிக்க பெட்ரோலியப் பொருட்களின் விலை பலமுறை ஏற்றிக் கொடுக்கப்படுகிறது. இதுவும் போதாதென்று, கோதாவரிப் படுகையில் எடுக்கப்பட்ட எரிவாயுக்கு 91,000 கோடி ரூபாய் வரிவிலக்குக் கொடுப்பதற்கு ஆளும் கட்சிகளும் எதிர்க்கட்சி களும் கைகோர்த்துக் கொண்டன. இதுவும் ராடியா டேப்பில் உள்ளது, ஆனால், இதுபற்றி அந்தக் கட்சிகளும் செய்தி ஊடகமும் வாய் பொத்திக் கிடக்கின்றன.

 

வேதாந்தா கார்ப்பரேட் கம்பெனி ஒரிசாவில் வேதாந்தா பல்கலைக்கழகம் அமைத்துக் கொள்வதற்கு, 18 கிராமங்களின் எதிர்ப்பையும் மீறி 8000 ஏக்கர் நிலத்தைத் தாரை வார்த்தது, ஒரிசா அரசு. விவசாயிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி விவசாய விளைநிலங்களைக் கட்டாயமாகக் கையகப்படுத்தி கார்ப்பரேட் கம்பெனிகளுக்குத் தாரை வார்க்கின்றன, மாநில அரசுகள்.விவசாயிகளை வெளியேற்றி, 500க்கும் மேற்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைப்பதற்காக ஒவ்வொன்றிலும் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்குத் தாரை வார்க்கப்படுகின்றன. —

 

இவை எதுவும் திறந்த சந்தையிலோ, ஏலத்திலோ நடக்கவில்லை. இவை பற்றிய விவரங்கள், இரகசியங்கள் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டாலும் மறுக்கப்படுகின்றன. இவற்றுக்குச் சந்தை அல்லது ஏல மதிப்பீடு செய்து கணக்கீடு போட்டு இவற்றால் அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு அல்லது கார்ப்பரேட் கம்பெனிகள் அடித்த கொள்ளை எத்தனை கோடி என்று எந்தத் தணிக்கை அறிக்கையுமில்லை; எந்தப் புலன் விசாரணையும் இல்லை, எந்த உச்சநீதி மன்றமும் சவடால் சாட்டையடியோடு மேற்பார்வை விசாரணையும், தண்ட னையும் விதிக்கவில்லை. இந்த விவகாரங்களில் நடந்த இலஞ்சஊழல், அதிகார முறைகேடுகள், மோசடிகள் பற்றி சு.சாமியும், ரா.சாமியும், ஆ.சாமியும் பொது நலக் கூச்சலும் போடவில்லை.

 

ராசாவோ, ராடியாவோகூட அரசு சட்டநியதிப்படியும், அது அறிவித்துப் பின்பற்றி வரும் கொள்கைப்படியும், தர்க்க நியாயப்படியும் தண்டிக்கப்பட முடியாது. தனக்கு முன்பிருந்த தொலைத்தொடர்புத் துறை அமைச்சர்கள் பின்பற்றிய அடிப்படையில்தான், தான் செயல்பட்டதாக ராசா கூறிய விளக்கத்துக்கு இப்போது ஊழல் ஒழிப்பு நாடக நாயகர்கள் எவரும் பதில் சொல்லவில்லை; அதையும் மீறி வேண்டுமென்றே ""அரசியல் பழிவாங்கலுக்குத்தான்'' தண்டிக்க முடியும்.

 

அரசுக் கிட்டங்கிகளில் அழுகிப் புழுத்து நாறும் உணவு தானியங்களை ஏழை மக்களுக்கு விநியோகிக்கும்படி உச்சநீதி மன்றம் சொன்னபோது, அரசின் கொள்கைகளில் தலையிட வேண்டாமென்று பதிலடி கொடுத்தார், மன்மோகன் சிங். வாய்மூடிக் கொண்டார்கள், உச்ச நீதிமன்றப் பிரபுக்கள். அதையே ராசா சொன்னால் ஏற்க மறுக்கிறார்கள். உணவு தானிய ஏகபோக மொத்த வியாபாரிகளின் ஏற்றுமதி இறக்குமதிக்கும், ஏகாதிபத்தியக் கொள்ளைக்கும் ஊக வணிகத்துக்கும் வசதியாகத்தான் அரசின் கொள்கை அப்படி இருக்கிறது. உணவு தானியம் அழுகி நாசமானால் பல ஆயிரம் கோடி அரசுக்கு இழப்பு இல்லையா?

 

ஆனால், இப்போது, ஒன்று அல்லது இரண்டு இலட்சம் கோடிகள் மட்டுமல்ல; எவ்வளவு இலட்சம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு நேரிட்டாலும் உள் நாட்டு, வெளிநாட்டுத் தரகு அதிகார வர்க்க முதலாளிகளின் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அள்ளிக் கொடுப்பதுதான் அரசின் கொள்கையாக உள்ளது. இதுதான் புதிய பொருளாதார, தனியார்மய, தாராளமயக் கொள்கை. இந்த நிறுவனங்கள் திவாலாகி மூடப்படும் நிலையில், மேலும் பல இலட்சம் கோடி அரசுப் பணம் கொடுத்து, பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்கவேண்டும்; நமது நாட்டில் மட்டுமல்ல, டாலருடன் நமது பொருளாதாரம் பிணைக்கப்பட்டுள்ளதால், அமெரிக்காவில் நெருக்கடி ஏற்பட்டு, நிறுவனங்கள் திவாலானால் கூட நமது நாடும் பல லட்சம் கோடி கொடுத்து மீட்கவேண்டும். இதுதான் சிதம்பரம் அலுவாலியா மன்மோகன் மட்டுமல்ல, அத்வானி ஜெட்லி ஜஸ்வந்த் சிங்கின் பொருளாதாரக் கொள்கை.

 

""இலஞ்சஊழல் தொடர்ந்து பெருகி, பிரம்மாண்ட மாவதற்கு அடிப்படைக் காரணம் தாராளமயப் பொருளாதா ரத்துக்குப் பிந்தைய காலத்தில் சந்தை (முதலாளிகள்) அரசாங்கத்துக்குள் நுழைந்துவிட்டது. அரசாங்கத்தின் பொருளாதார நடவடிக்கைகளில் கொள்கைகளையும் விலையையும் கார்ப்பரேட் குடும்பங்கள் தீர்மானிக்கத் தொடங்கிவிட்டார்கள். தனிப்பட்ட அதிகாரிகள் அல்லது அரசியல்வாதிகள் மட்டுமல்ல; அரசியல் கட் சிகள் மற்றும் கட்டமைப்பு முழுவதிலுமாக அவர்கள் கூட்டுறவாடுவதும் தலையீடு செய்வதுமாகி விட்டார்கள். பொருளாதாரத் தாராளமயமாக்கம்தான் ஊழல்மயமான லைசென்சு மற்றும் பர்மிட் ராஜ்ஜியத்திலிருந்து நாட்டை விடுவிக்கும் என்று கார்ப்பரேட் குடும்பங்களும் பெரும் செய்தி ஊடகமும் போற்றின. ஆனால், அது இலஞ்சஊழலின் பாதையை மாற்றி விட்டதோடு, அளவிலும் வீச்சிலும்கூட மேலே எகிறிவிட்டது. முன்பு ஊழல் பேரங்கள் மேசைக்கு அடியில் நடந்தன. அவற்றோடு அவமானம் ஒட்டிக் கொண்டிருந்தன. ஆனால், தாராளமயம் வந்ததும், கொள்கை உருவாக்கும் இடத்திலேயே ஊழல் நுழைந்து விட்டது. ஊழலோடு ஒட்டிக் கொண்டிருந்த திரைமறைவு பேரம் மற்றும் அவமானம் ஆகிய தன்மைகள் மறைந்துவிட்டன. உண்மையில் ஊழல் சட்டபூர்வமாக்கப்படுவது ஒன்றுதான் பாக்கி என்பதைத் தவிர ஏற்றுக் கொள்ளப்பட்டதாக ஆகிவிட்டது'' என்கிறார் திட்டக் கமிசன் உறுப்பினர் எஸ்.பி.சுக்லா.

 

ஒரு உற்பத்தித் தொழில் செய்து இலாபமீட்டுவதைவிட, பங்கு சந்தை மற்றும் ஊகவணிகத்தில் ஈடுபடுவதும், அதைவிட அரசின் சொத்துக்களைக் கொள்ளையடிப்பதும் விரைவாக மூலதனம் மற்றும் செல்வத்தைக் குவிக்கும் வழிகள் என்று ஆகிவிட்டது; இப்போது கொள்கை முடிவில் செல்வாக்குச் செலுத்தி நேரடியாக அரசாங்க அமைப்புகளில் பங்கேற்பது அல்லது அதிகாரத் தரகர்களை அமர்த்திக் கொள்வது என்று கார்ப்பரேட் முதலாளிகள் செயல்படுகிறார்கள். அரசே தனியார், கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளைக்கு வசதி செய்து தரும் வகையில் கொள்கை வகுப்பதுதான் நடைமுறை என்றாகி விட்டது; எனவே, கொள்கை முடிவெடுப்பதிலேயே பங்கேற்பது அல்லது செல்வாக்கு செலுத்தும் வேலையில் கார்ப்பரேட் முதலாளிகள் இறங்கிவிட்டார்கள்.

 

""கடந்த இருபது ஆண்டுகளில் இலஞ்சஊழல், வரி ஏய்ப்பு மற்றும் தொழில் வர்த்தக விலை தில்லு முல்லுகளால் பல இலட்சம் கோடி டாலர்களை இந்தியா இழந்துள்ளது. 2002 முதல் 2006 வரை ஆண்டுக்கு 16 மில்லியன் அமெரிக்க டாலர் பணம் கருப்புப் பணமாக வெளிநாடுகளில் குவிக்கப்பட்டது'' என்கிறது உலக நிதி ஒழுக்கம் (GFI) நடத்திய ஆய்வு. இவ்வளவு நிதி குவியும்போது, அதைக் கொள்கை உருவாக்கம் செய்யும் அரசியல்வாதிகள், அதிகாரிகளோடு ஒரு சிறிய அளவு பகிர்ந்து கொள்கிறார்கள். இந்தியப் பொருளாதாரத்தில் வழமையாகிப்போன இதை இலஞ்சஊழல், மோசடி என்பதாக கார்ப்பரேட் மற்றும் அரசியல் போட்டி காரணமாகக் ""கூச்சல்'' போடுகிறார்கள்.

 

இந்தக் கூச்சலும் கொஞ்ச நாளில் அடங்கிவிடும். கோடிகோடியாகப் பொதுச் சொத்தைக் கொள்ளையடிக்கும் இத்தகைய வெள்ளுடைக் குற்றவாளிகளை சி.பி.ஐ., உச்சநீதி மன்றம், நாடாளுமன்றக் கூட்டுக்குழு ஆகிய எந்த அதிகார அமைப்புகளும் விசாரித்து, தண்டித் ததாக வரலாறே கிடையாது. விதிவிலக்காக ஒரு சிலர் தண்டிக்கப்பட்டாலும், சிறையையே அவர்கள் ""சொர்க்கலோகமாக'' மாற்றிக் கொள்கிறார்கள்.

 

தற்செயலாகக் கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் விரைவு நீதிமன்றங்களில் தண்டிக்கப்படுகிறார்கள். தொழில்முறைக் கிரிமினல்களைச் சட்டப்படி தண்டிக்க முடியாது என்கிறபோது, ""என்கவுண்டர்'' செய்து கொன்று விடுகிறார்கள். வெள்ளுடைக் குற்றவாளிகளான கார்ப்பரேட் முதலாளிகளை, அரசுச் சொத்துக்களைக் கொள்ளையடிப்பதற்காகத் தண்டிப்பதில்லை என்பது அரசின் கொள்கை முடிவாகவும் சட்டமாகவும் ஆகிவிட்டது. தற்போதைய அதிகார அமைப்பும் அவர்களைத் தண்டிக்காது என்கிறபோது, மக்களே எழுச்சியுற்று ஏன் ""என்கவுண்டர்'' செய்யக்கூடாது என்ற ஆத்திரம்தான் எழுகிறது.

 

ஆனால், அன்றாட வாழ்வில் கீழ்நிலை அதிகாரிகளின் இலஞ்சஊழலை மட்டுமே காணும் சாமானிய மக்கள், இந்தக் கார்ப்பரேட் வெள்ளுடைக் குற்றவாளிகளின் தவறுகளை ஏதோ அறம்சார்ந்த பெரும் குற்றம் என்பதாகத்தான் பார்க்கிறார்கள். ""என்கவுண்டர்'' செய்ய வேண்டிய அளவுக்குக் குற்றங்கள் செய்கிறார்கள் என்பதையும் குற்றங்களின் பரிமாணமும் ஆழமும் தெரியாததால் அவர்களால் புரிந்து கொள்ள இயலவில்லை. இந்த வெள்ளுடைக் குற்றவாளிகளால்தான் நகரங்களின் குடிசைகளிலிருந்துகூட சாமானியர்கள் விரட்டப்படுகிறார்கள்; கல்வி, மருத்துவ வசதிகள் பிடுங்கப்படுகின்றன. கிராமங்களில் விவசாயிகள் ஆயிரக்கணக்கில் தற்கொலைக்குத் தள்ளப்படுகிறார்கள்; பழங்குடிகள், மீனவர்கள், விவசாயிகளின் வாழ்வாதாரங்கள் பிடுங்கப்படுகின்றன. தொழிலாளர்கள் (""ரோபோ'') எந்திரமயமாக்கப்பட்டு, கொத்தடிமைகளாக்கப்படுகிறார்கள்.

 

அவர்களெல்லாம் இந்த உண்மையை உணரும் போது கார்ப்பரேட் வெள்ளுடைக் குற்றவாளிகள் ""என்கவுண்டர்'' மரண தண்டனைக்குத் தகுதியானவர் தாம் என ஏற்றுக்கொண்டு அதற்குத் தயாராகி விடுவார்கள். ஆர்.கே.