அயோத்தி தீர்ப்பு வெளியானதும், அலகாபாத் நீதிமன்றத்தின் பார்ப்பனப் புரட்டைத் திரைகிழித்தும் இந்துவெறி பாசிசத்துக்கு எதிராகப் போராட அறைகூவியும் துண்டுப்பிரசுரங்கள், சுவரொட்டிகள் மூலம் பிரச்சாரத்தை மேற்கொண்ட  ம.க.இ.க; வி.வி.மு; பு.மா.இ.மு; பு.ஜ.தொ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள், தாங்கள் செயல்படும் பகுதிகளில் தொடர்ந்து பிரச்சார இயக்கத்தை நடத்தி வருகின்றன. கடந்த 4.12.10 அன்று சிவகங்கை பேருந்து நிலையம் அருகே ஆர்.எம்.ஆர். திருமண மண்டபத்தில் ""அயோத்தி தீர்ப்பு முதல் இராமன் பாலம் வரை'' என்ற தலைப்பில் பார்ப்பன சதிகளை அம்பலப்படுத்தி ம.க.இ.க. சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

 

அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் பார்ப்பனத் தீர்ப்பை எதிர்த்தும், இந்துவெறி பயங்கரவாதிகளால் இடிக்கப்பட்ட மசூதியை மீண்டும் அதே இடத்தில் கட்டித்தரக் கோரியும், இந்துத்துவத்துடன் கள்ளக்கூட்டுச் சேர்ந்துள்ள காங்கிரசைத் தோலுரித்தும், கள்ள மவுனம் சாதிக்கும் திராவிட ஓட்டுக் கட்சிகளின் துரோகத்தை அம்பலப்படுத்தியும் பாபர் மசூதி இடிக்கப்பட்ட கருப்பு நாளான டிசம்பர் 6ஆம் தேதியன்று தடையை மீறி விழுப்புரம், தஞ்சை, திருச்சி, கோவை ஆகிய இடங்களில் இப்புரட்சிகர அமைப்புகள் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டங்களை நடத்தின.

 

"அயோத்தி தீர்ப்பு இந்து மதவெறிக்கு சட்ட அங்கீகாரம்'' என்ற தலைப்பில் கடந்த 19.12.10 அன்று மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் திருச்சி கிளை சார்பில் தேவர் ஹாலில் அரங்கக் கூட்டம் நடைபெற்றது.

ம.உ.பா.மையத்தின் திருச்சி கிளைத் தலைவர் காவிரிநாடன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தான் கடவுள் நம்பிக்கையுள்ள பிராமணனாக இருந்த போதிலும் அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பு அயோக்கியத்தனமானது என்று கூறிய திருச்சி வழக்குரைஞர் சங்கத் தலைவரான திரு.வி.சீனிவாசனும், தில்லையிலும் திருவரங்கத்திலும் பார்ப்பன ஆதிக்கத்தை வீழ்த்தப் போராடிய இவர்களுக்குத்தான் இந்தச் சட்டவிரோதத் தீர்ப்பை எதிர்த்துப் போராடும் ஆற்றல் உண்டு என்று கூறிய வழக்குரைஞர் சங்க முன்னாள் செயலாளர் கங்கைசெல்வனும், இத்தீர்ப்பை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யும் ம.உ.பா.மையத்தினரை வாழ்த்தினர்.

 

"நீதித்துறை பேசும் காவிமொழி'' என்ற தலைப்பில் பெங்களூரு உயர் நீதிமன்ற வழக்குரைஞர் தோழர் பாலனும், ""அயோத்தி தீர்ப்புக்கு எதிராகத் தீபரவட்டும்'' என்ற தலைப்பில் ம.உ.பா.மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் ராஜுவும் சிறப்புரையாற்றினர். இறுதியில் பார்வையாளர்களின் கேள்விகளுக்கு ம.உ.பா.மையத்தின் மதுரைக் கிளை துணைச் செயலர் வாஞ்சிநாதன் விளக்கங்கள் அளித்தார். ஏறத்தாழ 500 பேருக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இக்கூட்டம் அலகாபாத் நீதிமன்றத்தின் பார்ப்பனப் புரட்டை அம்பலப்படுத்தி, இந்துவெறி பாசிசத்துக்கு எதிராகப் போராட அறைகூவுவதாக அமைந்தது.  பு.ஜ.செய்தியாளர்கள்.