Language Selection

பி.இரயாகரன் -2008
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கிரிமினல் ஊடகவியல் என்பது, நிலவும் அரசியல் சூழலையும், அதன் எதார்த்தத்தையும் மறுப்பதாகும். தன்னை நியாயப்படுத்திக் கொள்ளவே 'ஒரு ஊடகவியலாளன் ஒரு தகவலை சேகரிக்கும் போது, யார்? யாரால்? ஏன்? எதற்கு? எப்படி? எப்போது?

 போன்ற கேள்விகளைக் கேட்டு தகவலை உறுதிப்படுத்த வேண்டும்." என்கின்றது. ஆனால் அதை எமக்கும், சமூக அவலங்களுக்கும் விதிவிலக்காக்குகின்றனர். யாரெல்லாம் இதைச் செய்கின்றனரோ, எந்த அரசியல் இதை செய்கின்றதோ, அவர்களின் அரசியல் நடத்தைகள் மீது இதை எழுப்புவதில்லை. மாறாக அவர்களுக்கு ஏற்றவாறாய் ஊடகவியலையே திரிக்கின்றனர். சமூகத்துக்கு எதிராக தாம் இருப்பதை மறைத்து நியாயப்படுத்தவே இப்படி முனைகின்றனர். மற்றும்படி மக்களை இதனூடாக கேனயனாக்குகின்றனர்.

 

நான் முன்பு எழுதியது போல், தமிழ் மக்கள் தம்மைத் தாம் சுட்டுக் கொன்றனரா? தம்மை தாம் கழுத்தை அறுத்து கொன்றனரா? தம்மைத் தாம் கடத்திச் சென்றனரா? யார் இதை செய்தனர்? செய்கின்றனர்? ஏன், எதற்கு இப்படி செய்தனர்? செய்கின்றனர்? தேசத்தில் கருத்தெழுதும் பெரும்பான்மை, இதற்கு துணையாக இருக்கவில்லையா? விவாதம் என்ற பெயரில், நடப்பது இதுவல்லவா! இதைப் பாதுகாக்கும் தேசம், இதற்கு துணை போகவில்லையா?

 

உங்கள் கருத்து தளத்தில் யார், எதற்கு, ஏன், எப்படி, எதை எழுதுகின்றனர் என்பதைக் கூட கேட்காத தேசம், எதை ஏன், எதற்கு, அனுமதிக்கின்றனர் என்பது தெளிவானது. இதில் எந்த சமூக அக்கறையும் கிடையாது என்பதும் தெளிவானது. இன்றைய இணையங்கள் ஊடகங்கள் மொத்தத்தில், இப்படி இதற்கு துணை போகின்றவை தான்.

 

மொத்தத்தில் தமிழ் மக்கள் மேல் எந்த அக்கறையும் இவர்களிடம் இருப்பதில்லை. விளைவு இவர்களால், இவர்களின் அரசியல் துணையுடன் தமிழ் மக்கள் கொல்லப்படுகின்றனர். கடத்தப்பட்டு காணமல் போகின்றனர். மொத்தத்தில் தமிழ் மக்களின் வாழ்வே சிதைக்கப்படுகின்றது.

 

இதைச் செய்பவர்கள், இதற்கு துணையாக நிற்பவர்கள், இந்த அரசியலை ஆதரிப்பவர்கள் தான், பெரும்பான்மையான இன்றைய கருத்தாளர்கள். தேசமும் அப்படித்தான். இதற்குள் தான் மூழ்கி இயங்குகின்றனர். இதை எதிர்த்து எந்த அரசியலும் செய்யவில்லை.

 

மொத்தத்தில் தமிழ் மக்களின் தற்கொலைக்கு உரிய அரசியல் சதிகள், சூழ்ச்சிகள், பேரங்கள், காட்டிக் கொடுப்புகள், அன்றாடம் இவர்களின் பின்னால் அரங்கேறுகின்றது. இதையே அவர்கள் அனைவரும், தமது சொந்த அரசியலாக செய்கின்றனர். இதற்கு தேசியம், ஜனநாயகம், புதிதாக ஊடகவியல் என்ற மூகமுடிகளை போட்டுவிடுகின்றனர். இதற்கு வெளியில், வேறு எந்த மக்கள் அரசியலும், சமூக நோக்கமும் இவர்களிடம் கிடையவே கிடையாது.

 

மொத்தத்தில் இதையும், தன்னையும் மூடி மறைத்து பாதுகாப்பதன் மூலம், தேசம் பிழைக்க முனைகின்றது. இந்தக் கொலைகார நடத்தைகளுக்கு, செயல்களுக்கு ஆதாரம் கேட்கின்றது. மக்களுக்கு எதிராக மூடிமறைக்கப்பட்ட அரசியல் சதிகளுக்கும் சூழச்சிகளுக்கும், ஆதாரம் வழங்கிவிட்டுத் தான், செய்வார்களோ!. இப்படி சமூகத்தை வேடிக்கையாக்கி கேலி செய்கின்றனர். கவுண்டமணி நானும் ரவுடி தான் என்று கூறுவது போல், இந்த கொலைகாரர்கள் நான் தான் கொன்றேன் என்று கூறுவார்கள் என்று, தேசம் ஊர் உலகத்துக்கு சொல்ல முனைகின்றது. தாம் சுயவிசாரணை செய்ய மாட்டோம் என்பதே அற்பத்தனம். எந்த அரசியல் இதை செய்கின்றதோ, அதை ஆதரித்து நிற்பவன் தன் தோலுக்கு ஏற்ப 'தனக்கென ஒரு அரசியல் கருத்துநிலையை எடுக்காது" என்று கூறி, இதற்குள் தப்பித்து பிழைக்க முனைகின்றான்.

 

இப்படி பிழைப்பை நடத்தவே, தான் ஒரு ஊடகவியலாளன் என்று கூறிக்கொண்டு, மற்றவனிடம் இதைக் கேட்பது அவர்களின் கோட்பாட்டுக்கு முரணாக இருப்பதில்லை. சமூகத்தையே கேனய சமூகமாக கருதி, இழிவாடுவதையே இதன் மூலம் காணமுடிகின்றது. ஏன் நீங்கள் வரையறுத்த ஊடகவியலாளன் என்ற சட்டவாக்கத்துக்குள், நீங்கள் நிற்க வேண்டியது தானே.

 

ஏன் உன் நலன் சார்ந்து மட்டும், சுயவிசாரணை தேவைப்படுகின்றது. அதைச் செய்தால், பொதுச் சமூகப்போக்கின் மேல் செய். இந்திய அடிவருடிகளான ஈ.என்.டி.எல்.எவ் என்ற கொலைகார சதிக் கும்பலுக்கு ஆதரவாக ஆதாரம் கேட்டு, உன் நலன் சார்ந்த உன் ஊடக வரையறையையே மீறுகின்றாய். எமக்கு எதிராக, ஏன் உன்னால் சுயவிசாரணை செய்யமுடியவிலலை. யாரை ஏமாற்றி, என்ன அரசியலை செய்ய முனைகின்றீர்கள் என்பது வெளிப்படையானது. இதற்குள் தொழில் செய்கின்றவன், சுத்தமான பிழைப்புவாதி தான். மனித அறங்கள் கடந்து, அதை பேச மறுத்து நிற்க 'தனக்கென ஒரு அரசியல் கருத்துநிலையை எடுக்காது" என்று கூறி எதைப் பாதுகாக்க முனைகின்றது என்பது வெளிப்படையானது. இது கிரிமினல் மயமான அரசியலுக்கு, அப்பட்டமாக துணைபோவது தான்.

 

பொதுவான இன்றைய கிரிமினல் மயமாகிவிட்ட அரசியல் சூழலை எது, எந்த சூழல் எப்படி இதை மதிப்பிடுகின்றது. காலம், இடம், சந்தர்ப்பம், வரலாறு, அரசியல் தொடர்புகள், அரசியல் நிகழ்ச்சிப் போக்குகள், கட்சிகள் அல்லது அமைப்புகளின் அரசியல், அவர்களின் கடந்தகாலம், நிகழ்காலம், மக்கள் பற்றி அவை கொண்டுள்ள நிலைப்பாடுகள், மக்களின் துயரம் தரும் மௌனம், வெளிப்படையற்ற பொதுத் தன்மைகள், அன்னியனுடன் இயங்கும் கூலித்தனம், காட்டிக்கொடுப்பு, படுகொலை அரசியல் என்று இது போன்றவற்றை அடிப்படையாக கொண்டு, நிகழ்ச்சிகளை சம்பவங்களை ஆராயாத ஊடகவியல் செத்த சவம் தான். அதாவது அப்பட்டமாக அரசியல் கிரிமினலுக்கு துணை போவது தான்.

 

ஒரு சம்பவத்தில் வெளிப்படும் ஊகங்கள், சந்தர்ப்ப சூழல் நிலைகள், சந்தேகங்களைக் கூட ஊடகவியல் எழுதத் தவறுமென்றால், அது பொலிஸ்கார வேiலையை மட்டும் செய்கின்ற பக்காக் கிரிமினல் மயமாகி விடுகின்றது. மொத்த சமூக இயக்கம் மீதான அனைத்தும், கிரிமினல் மயமாகிவிட்ட பின், அந்த அரசியல் செயல்களை அம்பலப்படுத்த எந்த ஆதாரமும் அவசியமில்ல.

 

நாசிகள் யூத படுகொலையை நடத்திய காலத்தில், அதற்கு ஆதாரம் கேட்டால் அவர்கள் யார்? புலிகளின் பங்கர் படுகொலைகளுக்கும், பொதுப் படுகொலைகளுக்கும் ஆதாரம் கேட்டால் அவர்கள் யார்? இப்படித்தான், இதைத்தான் தேசம் எம்மிடம் கோருகின்றது.

 

ரஜனி திரணகமவைக் கொன்றது யார்? புளட்டில் உட்படுகொலைகளை செய்தது யார்? காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலைகளைச் செய்தது யார்? 1985 அனுராதரபுரப் படுகொலைகளை செய்தது யார்? விஜிதரனைக் கடத்தியது யார்? என்னை 1987 இல் கடத்தியது யார்? இப்படியெல்லாம், இதற்கு ஆதாரம் கேட்பவன் யார்? இவர்களின் அரசியல் உள் நோக்கம் தான் என்ன?

 

இப்படி இவர்களின் உள்நோக்கம் கொண்ட முரண்பாடுகளே, இவர்களின் திடட்மிட்ட அரசியல் செயல்பாடாக உள்ளது. 'ஆதாரமற்ற இரயாகரனின் ஊகத்தை பொதுத் தளத்தில் இருந்து நீக்கியதற்காக இவர்கள்" என்று தேசம் ஆசிரியர் எமக்கு எதிராக மட்டும் அரசியல் செய்கின்றார். மற்றவர்களின் ஆதாரமற்ற அவதூறு ஊகத்தை அனுமதிக்கும் போது 'ஆனால் தேசம்நெற்றில் அதன் வாசகர்களால் பதியப்படும் கருத்துக்கள் தேசம் சஞ்சிகையினதோ அல்லது தேசம்நெற்றினதோ விதிமுறைகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டது அல்ல." இதனால் 'தேசம்நெற் நிர்வாகம் இறுக்கமான கட்டுப்பாட்டை கொண்டிருக்கவில்லை." என்கிறார். நாம் வாசகர்களாக எழுதியதை 'ஆதாரமற்ற இரயாகரனின் ஊக"ம் என்கின்றார். வசதி கருதி சொல்வது இவை. எம் மீது எழுதியதை ஆதாரமானது என்கின்றார். அதனால் தான், அதை பொதுத் தளத்தில் இருந்து அவர் நீக்கவில்லை. இப்படித் தான், தேசம் சூழ்ச்சியான பக்காக் கிரிமினல் அரசியல் செய்கின்றனர். 'தேசம்நெற்றினதோ விதிமுறைகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டது அல்ல." என்பது ஒரு சாராருக்கு இருக்க, மறுபக்கம் எனது கருத்து 'தேசம்நெற்றினதோ விதிமுறைகளுக்கும் கட்டுப்பா ட்டுக்கு " உட்பட்டுவிடுகின்றது. அது தேசத்துக்கு ஊகமாகிவிடுகின்றது. எமக்கு எதிரான எதுவும் ஊகமல்ல மாறாக தேசத்திற்கு அவை ஆதாரங்களோடு நிறுவப்பட்டதாகி விடுகின்றது.

 

எனக்கு எதிராக தேசத்தின் ஆதரவுடன் கருத்திட்டவர்கள் யார். ஏன், எதற்கு, எப்படி, என்ன ஆதாரத்துடன், என்ன நோக்கத்துடன், என்ன அரசியல் நிலையில் இதை செய்கின்றனர். அவர்களின் அரசியல் நிலை தான் என்ன?

 

இப்படி கருத்திடுபவர்கள் தேசியம், ஜனநாயகம் என்ற பெயரில், ஒன்றை ஒன்றுக்கு எதிராக நிறுத்தி, கொலைகளையே அரசியலாக செய்கின்றவர்கள் தான் இவர்கள். இவர்களிடம் வேறு மாற்று அரசியல் எதுவும் கிடையாது. ஒன்றில் இவர்கள் இலங்கை இந்தியாவின் அடிவருடிகள், அல்லது தேசியத்தின் பெயரில் உள்ள பாசிட்டுக்கள்.

 

வேறு யார் தான் இவர்கள். வேறு என்ன அரசியல் நோக்கம் தான் உண்டு. இதை செய்கின்ற தேசத்துக்கு, இதைவிட என்ன சமூக நோக்கம் தான் உண்டு?

 

பி.இரயாகரன்
28.01.2008