மே 18 அன்று பிரிட்டிஸ் பொலிசார் புலிக்காடையர்களிடம் இருந்து எம்மை பாதுகாக்க முற்படாது விட்டிருந்தால், முள்ளிவாய்க்காலில் எது நடந்ததோ அது லண்டன் வீதியிலும் அரங்கேறியிருக்கும். முள்ளிவாய்க்காலில் பேரினவாதம் எதைச் செய்ததோ, அதை லண்டன் வீதியில் புலிகள் மே 18 அன்று எமக்கு எதராக அரங்கேற்ற முனைந்தனர். இரண்டு வெவ்வேறு இடத்தில் பிரிட்டிஸ் பொலிசார், எம் தோழர்களை இநதக் புலிக் காடையர் கும்பலிடம் இருந்து பாதுகாத்தனர்.
தமிழ் மக்களை மந்தையாக வைத்திருக்கும் புலி ஜனநாயகம் இப்படித்தான், மேற்கிலும் கொடி கட்டிப் பறக்கின்றது. வன்னியில் இந்த புலித்தனம் தான், அவர்களுக்கு புதை குழியானது.
மே 18 யை புலிக் குழுக்கள் "துக்க நாள்", "போர்க் குற்ற நாள்", "இனவழிப்பு நாள்" என்று ஆளுக்காள் கூறியவர்கள் தான், எம்மீது வன்முறையை ஏவமுனைந்தனர். பேரினவாதம் செய்த குற்றங்களை ஒத்த அதே செயல்களைச் செய்ய முனைகின்றவர்களுக்கு, இந்த நாளை "துக்க நாள்" "போர்க் குற்ற நாள்" "இனவழிப்பு நாள்" என்ற கூறுவதற்கு எந்த அருகதையும் கிடையாது. என்ன நடந்தது, என்ன நடக்கின்றது என்பதை மக்கள் தெரிந்து கொள்ளக் கூடாது என்பது தான் புலியின் இருப்பாக உள்ளது.
புலிகளின் அழிவின் பின் புலித் தவறுகள் பற்றியும், புலிகள் ஜனநாயகத்தை கடைப்பிடிப்பது பற்றியும், வெளிவரும் புலம்பல்கள் முதல் புலியுடனான இணக்க அரசியல் வரை அனைத்தும், அரசியல் பித்தலாட்டம் என்பதை மாற்றுக்கருத்தை அவர்கள் எதிர்கொள்கின்ற விதம் எடுத்துக் காட்டுகின்றது. புலத்துப் புலிகள் வன்முறை மூலம் தான் தொடர்ந்து அரசியல் செய்கின்றனர் என்பதை, நாம் தொடர்ச்சியாக கூறிவருகின்றோம். நோர்வே, பாரிஸ், லண்டன் என்று எங்கும், எம் தோழர்கள் சுதந்திரமாக கருத்தைக் கொண்டு செல்ல முடியாத வண்ணம், நேரடியான வன்முறைக்கு முகம் கொடுத்தனர். மக்களிடம் எம் கருத்தை எடுத்துச்செல்வது என்பது, புலி வன்முறையை எதிர்பார்த்தபடிதான், சுதந்திரமற்ற சூழலில்தான் என்பது வெளிப்படையான உண்மை.
லண்டனில் வன்முறையை புலிகள் நடத்த முனைந்த சந்தர்ப்பதில், எம் தோழர்கள் "போர்க்குற்றம் மீது சுதந்திரமான, சுயாதீனமான விசாரணையைக் கோருவோம்" (பார்க்க) என்ற துண்டுப்பிரசுரத்தை விநியோகித்துக் கொண்டு இருந்தனர். துண்டுப்பிரசுரத்தை பறித்ததுடன், வன்முறையை ஏவ முற்பட்ட போது நூற்றுக்கணக்கான மக்கள் இருந்தனர். மிக அருகில் புதிய திசைகள் அமைப்பினரும் இருந்தனர். அவர்கள் வெளியிட்ட துண்டுப்பிரசுரத்தை யார் கொடுத்தது என்று கேட்டு, அவர்களை அடையாளம் காட்டக் கோரியது. இவ்வாறு மாற்றுக் கருத்துக்கள் எங்கு தென்பட்டாலும் அவற்றை அழிக்கும் முயற்சியை இந்த புலிகள் தொடர்ந்தும் செய்கின்றனர் என்பதற்கு இது ஒரு உதாரணமே.
இந்தச் சம்பவம் போல் தான் பாரில் மற்றும் நோர்வேயிலும் அரங்கேறியது. இவை உதிரிச் சம்பவங்கள் அல்லது அடிமட்ட புலிக் காடையர்களை அடிப்படையாகக் கொண்ட தன்னியல்பான சம்பவங்களல்ல. வலதுசாரிய புலி அரசியல் இப்படித்தான் மேலிருந்து கீழ்வரை அரங்கேறுகின்றது.
இங்கு புலிகளின் கடந்தகால நடத்தைகளை விமர்சனம் சுயவிமர்சனம் செய்யாத அதன் தொடர்ச்சி தான் இந்த நிகழ்வு . முள்ளிவாய்க்கால்களை காட்டி அதேயொத்த வன்முறையை தமிழ்மக்கள் மேல் புலிகள் ஏவுகின்றனர்.
ஒரு மாற்றுக் கருத்தைக் கூட ஜீரணிக்க முடியாத புலிப்பாசிசத்தின் அதே தொடர்ச்சியில் தான், புலத்துப் புலிகள் வன்முறை மூலம் தமிழ்மக்களை மந்தையாக தம் பின்னால் வைத்திருக்க முனைகின்றனர். நாம் 450 துண்டுப்பிரசுத்தை விநியோகித்த நிலையில், அதை மக்கள் ஆர்வமாக படிக்க முடிந்த நிலையில், அதைத் தடுக்க, எஞ்சிய துண்டுப்பிரசுரங்களைப் பறித்ததுடன் தாக்கவுவும் முற்பட்டனர். மே 1 ம் திகதி பாரிசிலும் இதேபோல் தான் அரங்கேற்ற முனைந்தனர். மக்கள் படிப்பதையும், தெளிவு பெறுவதையும் தடுப்பதுதான், புலியின் நோக்கமாக உள்ளது. கடந்தகால புலி வரலாறு எவ்வாறோ அதையே போல், நிகழ்காலத்திலும் அவ்வாறே தொடருகின்றனர்.
இது தான் உண்மை. இணக்க அரசியல், ஜனநாயக அரசியல் அனைத்தும், புலிக்கேற்ற நிகழ்ச்சிநிரலுக்குள் நாம் எம்மை ஏமாற்றிக் கொள்வதை அடிப்படையாகக் கொண்டது. நாம் சுயதணிக்கை செய்து கொள்வதன் மூலம், மக்களை மந்தையாக மேய்க்க புலிக்கு உதவுவது தான் புலி வழங்கும் பன்முக ”ஜனநாயக” மாகும்.
மே18 அன்று பிரித்தானிய தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பில் நடந்த இந்த ஒன்றுகூடலில் இவ்வாறு நடைபெற்றது என்பது, புலிகள் இன்னமும் தமது பாசிசப்போக்கைக் கைவிடவில்லை என்பதை அடித்துரைக்கின்றது. இவ்வாறு மாற்றுக்கருத்துக்களை மறுக்கும் இந்தக் கூட்டம், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை ஒருபோதும் வெற்றியை நோக்கி முன்நகர்த்தப் போவதில்லை.
போராட்டம் மக்களுக்கானதே. மக்கள் தலைமையில் போராட்டம் உருவாகவேண்டும். மாறாக மக்களை மந்தைகளாகவும், பணயக்கைதிகளாகவும் நடத்தும் இந்தக் கூட்டத்திடம் போராட்டம் மீண்டும் கையளிக்கப்படுமாயின் தமிழ் மக்களின் வாழ்வியலே கேள்விக்குள்ளாகும் நிலை ஏற்படும்.
மாற்றுக்கருத்துக்களை ஏற்க மறுக்கும் இந்தக் கூட்டம், இலங்கை அரச பாசிசத்தை உலகிற்கு எடுத்து சொல்வதாக கூறுகின்றது. ஐநா அறிக்கையில் புலிகளைப் பற்றிய போர்க்குற்ற மீறல்களை கண்டும் அதைப்பற்றி கலங்காது இந்தப் புலம் பெயர் புலிகள், மீண்டும் அதே குற்றங்களை செய்யத் துடிக்கின்றனர். தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக சொல்பவர்கள், மக்கள் அழிவுக்கு வழிவகுத்த புலிகளின் ஏகாதிபத்திய சார்பு குறுந்தேசிய அரசியலையே தொடர்ந்தும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். அதை வன்முறை மூலம் தக்க வைக்கவே முனைகின்றனர்.
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
20.05.2011