”நோர்வே, உயர் நீதிமன்றத்தில் புலிகளுக்கு நிதி சேகரித்தமை தொடர்பான வழக்கொன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

ஜரோப்பிய ஒன்றியத்தின் பல நாடுகளில் விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பாகக் கருதித் தடை செய்யபட்டுள்ளனர். அவ்வாறான நிலையில் ஹொலண்ட் நாட்டில் புலிகளின் நிதி சேகரிப்பாளர்கள் எனச் சந்தேகிக்கப்பட்டோர் சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

 

 

அவர்களுக்கெதிரான வழக்கு விசாரணைகளின் போது அவர்கள் தமக்கும் நோர்வேயில் உள்ள புலிகளுக்கும் நிதி சேகரிப்பில் தொடர்பு இருப்பதாக தெரிவித்ததைத் தொடர்ந்து நோர்வேயில் புலிகளுக்கு எதிரான விசாரணை நடைபெற்று வருகிறது.

நோர்வேயில் தலைமறைவாக இருக்கும் புலிகளின் பல தலைவர்கள் தொடர்பாகவும் விசாரணை நடைபெறுகின்றது. புலிகளுக்கு ஹொலண்ட் நாட்டில் உதவி செய்வது தண்டனைக்குரிய குற்றம் என ஹொலண்ட் நாட்டு சட்டத்துறையினர் நோர்வே நீதிமன்றில் வாதாடி வருகின்றனர்.

புலிகளுக்கு எதிராக ஒரு பயங்கரவாத வழக்கு நோர்வே நாட்டில் ஹொலண்ட் அரசாங்கத் தரப்பால் தொடுக்கப்பட்டுள்ளது என்பதனையும் அந்த வழக்கு கடந்த வருடம் ஹொலண்ட் நாட்டில் கைது செய்யபட்ட புலி செயற்பாட்டாளர்களுடனும் சம்மந்தப்பட்டது என்பதனையும் நோர்வே வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.”

மக்கள் பணத்தில் வாழும் பஞ்சமாபாதகர்கள்

மேற்கண்ட இந்தச் செய்தி பினாமி புலிகளின் நெடியவன் குழுவுக்கு எதிரான நாடுகடந்த தமிழ் ஈழ அரசுக்கு சார்பான இணயத்தளங்களில் முதலில் பிரசுரிக்கப்பட்டது. இந்தச் செய்தியின் உள்ளடக்கம் உண்மையானதென்றாலும், நோர்வே வாழ் பினாமி புலிகளுக்கு இடையிலான சொத்து முரண்பாடே இந்த செய்தி வெளிவரக் காரணம் .

இன்று நெடியவனை மறைமுக தலைவனாகக் கொண்டும், பஞ்சகுலசிங்கம் கந்தையாவை பகிரங்க தலைவராக கொண்டும் இயங்கும் நோர்வேயில் உள்ள பினாமி புலிகளின் அமைப்பான NCET தான் நோர்வேயில் உள்ள 150 மில்லியன் குரோணர் பெறுமதியான சொத்துகளைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

இந்தச் சொத்துக்கள் நிலங்கள், வீடுகள், வியாபார ஸ்தாபனங்கள், வாகனங்கள், அன்னை பூபதி பள்ளிக்கூட வளாகங்கள் என நீளுகிறது. ஒஸ்லோ, பேர்கன், ஸ்தவங்கர், திரோன்ஹெம் போன்ற நகரங்களில் புலிகளுக்கு கிட்டத்தட்ட 66 மில்லியன் குரோணர் பெறுமதியான 22 அடுக்குமாடி குடியிருப்புக்களும், ஒஸ்லோவில் மூன்று தனி வீடுகளும் இருக்கிறது. இந்த வீடுகளும் பினாமிகள் பெயரிலேயே உள்ளது. இந்தச் சொத்துக்களை அனுபவிப்பவர்கள் யார் என ஆராய்ந்தால், கிடைக்கும் தகவல்கள் ஆச்சரியப்படத்தக்கனவல்ல. உதாரணமாக புலிகளின் தமிழ்நெட் இன் ஊடகப் பிரமுகர் கோபிநாத் ஜெயச்சந்திரன், புலிப்பினாமிகளின் தலைவர் பேரின்பநாயகம் சிவபரன் என்கின்ற நெடியவன் போன்றவர்கள்.

இன்றுவரையும் ஒரு குரோணர் கூட சுய உழைப்பு வருமானமில்லாமலே நோர்வேயில் சீவிக்கின்றனர். ஆனால் இவர்கள் பாவிக்கும் கார்களும், சீவிக்கும் வீடுகளும் பல மில்லியன் பெறுமதியானவை. இவர்கள் இருவரையும் பலர் அறிந்திருப்பதலாலேயே இவர்கள் இருவரும் இங்கு உதாரணமாக சொல்லப்பட்டுள்ளனர். ஒஸ்லோவில் மட்டும் புலிகளின் வருமானத்தில் 23 பேர் வாழ்வதாக தகவல்கள் கூறுகின்றன.

இப்பிரச்சனை ஒரு புறமிருக்க பினாமிப் புலிகளுக்கு பினாமிகளாக வியாபாரா ஸ்தாபனங்கள் நடாத்துவோர் இருவர் புலிகளுக்கு வழங்கவேண்டிய மாத வருவாயை கொடுக்க மறுத்துள்ளனர். இதில் ஒருவர் நோர்வே போலீசில் தம்மை சிலர் மிரட்டுவதாக முறைப்பாடு கொடுத்துள்ளார். மற்றவர் ஒஸ்லோவில் PLOTE இன் கட்டப்பஞ்சாயத்துக்கு தலைமை தாங்கும் சிலரிடம் தஞ்சம் கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாதிவெறியும் பினாமிகளின் உள்ள வீட்டு முரண்பாடும்

இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் கூறியது போல சொத்துக்கான உள்வீட்டுக் குத்து வெட்டினாலேயே பல தகவல்கள் வெளிவந்த வண்ணமுள்ளன. நோர்வேயைப் பொறுத்தமட்டில் பிரபாகரனின் சாதியைச் சேர்ந்தவர்கள் மே 18 வரையான காலகட்டத்தில் புலிகள் அமைப்பில் ஆளுமை செலுத்தினர். அதேவேளை புலிகளுக்கு பாரிய நிதியை வழங்கியவர்களும், கடைசிவரை தெருவில் நின்று போராடியவர்களும் அவர்கள் தான். ஆனால் இன்று அவர்கள் பலர் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், அனைத்து நிதிகளுக்குமான பொறுப்பு தம்மைப் படித்தவர்கள் எனக் காட்டிக்கொள்ளும் ஆதிக்கவாதிகளிடமே உள்ளது. நெடியவனின் குடும்பவழி பிரபாகரனின் சமுதாயத்தை சேர்ந்திருந்தாலும், நெடியவனுக்கு நேரடியாகச் சொத்து மீது எந்த அதிகாரமும் கிடையாது. ஆனால் பஞ்சகுலசிங்கம் கந்தையாவுக்கு நேரடியாகச் சொத்துக்கள் மீது கட்டுப்பாடு இருந்து வருகிறது.

மேற்படி நோர்வேயில் நடத்து வரும் வழக்கில் குற்றவாளிகளாக இணைக்கப்பட்டுள்ளோரும் சாட்சிகளும் மேற்படி பிரபாகரனின் சமூகத்தைச் சேர்ந்தவர்களே. இன்று சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்பட்டு தன்டனை அனுபவிக்கப் போகும் நிலையில், பஞ்சகுலசிங்கம் கந்தையா தலைமை தாங்கும் NCET இவர்களுக்கு எந்த உதவியும் செய்யாமல் தமக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்றவாறு மௌனம் காக்கிறது. பஞ்சகுலசிங்கம் கந்தையாவுக்கும் நோர்வே அரசுக்கும் இன்று ஆலோசனை வழங்கும் முன்னாள் இடதுசாரி முனைவர் ஒருவர், புலிகளுக்குப் பணம் சேர்த்த விடயத்தையும், இலங்கையின் அரசியல் பிரச்சனையையும் கலக்காமல் தடுப்பதற்காக, NCET அமைப்பை மேற்படி வழக்கில் தலையிட வேண்டாமென ஆலோசனை கூறியுள்ளார்.

தமிழீழ வைப்பகமும் புலிகளின் சர்வதேச பொருளாதார கிரிமினல் நடவடிக்கையும்

மேற்படி வழக்குடன் சம்பந்தப்பட்ட சிலரே மேற்படி தகவல்களை வழங்கினர். அத்துடன் புலிகள் இருந்த காலத்தில் அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழீழ வங்கிக்கு எப்படி நோர்வே மற்றும் புலம்பெயர் நாடுகளில் இருந்து பணம் வைப்பில் இடுவதென்ற விபரமடங்கிய ஆவணத்தை தந்துள்ளனர்.

ஆவணத்தின்படி இலங்கையில் கொழும்பு புறநகரில் அமைந்துள்ள மலேசியா, இந்தோனேசியாவை தலைமையகமாகக் கொண்ட, சிங்கப்பூரிலும் இலங்கையிலும் கிளைகளைக் கொண்ட உணவு பதனிடுதல், மற்றும் சர்வதேச உணவு வர்த்தகத்தில் ஈடுபடும் சர்வதேச நிறுவனமான FONTERRA BRAND LANKA (Pvt.) LTD என்ற நிறுவனத்தின் வங்கிக்கணக்கிற்கு புலத்தில் இருந்து பணம் அனுப்பும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிறுவனம் நோர்வே தலைமை தாங்கிய சமாதான ஒப்பந்தம் நடந்த காலத்தில் இலங்கையில் இருந்து பால் பொருட்களை இறக்குமதி செய்யும் New Zealand Milk Lanka (Pvt) Ltd என்ற நிறுவனத்தை விலைக்கு வாங்கி அதன் அனுமதிப்பத்திரத்தை அடிப்படையாகக் வைத்து FONTERRA BRAND LANKA (Pvt.) LTD என்ற பெயரில் இயங்க ஆரம்பித்தது. ஆரம்பித்த சிலமாதங்களிலேயே இறக்குமதியை மட்டும் செய்துவந்த இந்த நிறுவனம் சிங்களப் பிரதேசத்தில் பால் உற்பத்தியாளர்கள் மத்தியில் பல திட்டங்களை அறிவித்து, அப்பிரதேசங்களில் பால் கொள்வனவிலும் ஈடுபட்டது. பால் பண்ணை முதலாளிகளுக்கும், சிறு பண்ணை விவசாயிகளுக்கும் வட்டியில்லாக் கடன் வழங்கி பால் வளத்தையும் கால்நடை அபிவிருத்தியையும் இலங்கையில் முன்னெடுப்பதாக காட்டிக் கொண்டது. கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி கால்நடை மற்றும் பால் வள அபிவிருத்தி அமைச்சராக இருந்தவர்களுடன் இந்த நிறுவனம் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தது. இந்த உறவைப் பாவித்து பால் அபிவிருத்தி மற்றும் கால்நடை வளர்ப்பிற்கு உபயோகிக்கும் பல நவீன கருவிகள் ஒஸ்திரேலியா, நியூசிலாந்து, அயர்லாந்து போன்ற நாடுகளில் இருந்து இந்த நிறுவனம் இறக்குமதி செய்து பால் பண்ணைகளுக்கு வழங்கியுள்ளது. இந்த நிறுவனத்தின் செயற்பாடு கிழக்கில் சில எல்லைக் கிராமங்கள் அடங்கலாக அனுராதபுர கிராமப் பிரதேசங்கள் வரை விரிவுபடுத்தப்பட்டது.

இதேவேளை இலங்கை அரசியலைக் அவதானிப்பவர்களுக்குத் தெரிந்திருக்கும், வரவேண்டியது வராததனால் (அதாவது இலஞ்சம்) தேசிய விடுதலை முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச 2009 ம் ஆண்டீன் ஆரம்பத்தில் இந்த நிறுவனத்தை விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென போராட்டம் நடத்தியது.

இவ்வாறு இலங்கையில் உணவுச் சந்தையில் பாரிய வர்த்தக நிறுவனமான FONTERRA BRAND LANKA (Pvt.) LTD உடன் தொடர்புடைய, அந்த நிறுவனத்தின் இலங்கைக்கு வெளியில் வேறு நாடொன்றில் உள்ள வங்கிக் கணக்கிற்கே புலம் பெயர்ந்தவர்களை தமிழ் ஈழ வங்கியில் வைப்பு செய்வதானால் பணம் அனுப்பும்படி எமக்குக் கிடைத்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் பணம் அனுப்பியபின் அனுப்பியவர் வன்னியில் உள்ள தொலைநகல் இலக்கத்துக்கு "

"Address, முழுப்பெயர், passport number  அனைத்தையும் குறிப்பிட்டு நான் தமிழீழ வைப்பகத்தில் கணக்கொன்றை ஆரம்பிக்க விரும்புகின்றேன் என கடிதம் எழுதி 02122 xxxxx.... என்ற number இற்கு fax பண்ணவும்"

அவ்வாறு FONTERRA BRAND LANKA (Pvt.) LTD உடன் தொடர்புடைய, அந்த நிறுவனத்தின் வெளிநாடொன்றில் உள்ள வங்கிக்கணக்கிற்கு அனுப்ப முடியாத நிலையில் இலங்கையில் சிங்கள பிரதேசத்தில் வாழும், தமிழ் பெயருடைய ஒருவரின் ஹட்டன் நேஷனல் வங்கி இலக்கத்துக்கு பணத்தை அனுப்புமாறு அவ் ஆவணம் வலியுறுத்துகிற அதேவேளை கூடுமான அளவுக்கு FONTERRA BRAND LANKA (Pvt.) LTD உடன் தொடர்புடைய, அந்த வங்கி இலக்கத்துக்கு பணத்தை அனுப்புமாறு அவ் ஆவணம் வேண்டுகோள் விடுகிறது.

இந்த ஆவணம் இன்று எந்தப் பெறுமதியும் இல்லாத வெற்றுக் காகிதம் என்றாலும் இது எவ்வாறெல்லாம் புலிகள் மக்களை ஏமாற்றி பணம் பெற்றார்கள் என்பதற்கான ஆதாரமாக விளங்குகிறது.

இறுதியாக பொருளாதார கிரிமினல் நடவடிக்கைகள், மற்றும் இனவாதம், குடும்பஅரசியல், சாதிவெறி, பிரதேசவாதம், போன்ற கீழ்த்தரமான உணர்வுகளை வைத்து, மீண்டும் மீண்டும், புதிய மொந்தையில் பழைய கள்ளை விற்க முனையும் அரசியலை மக்கள் முறியடிக்காத வரையில் தேச விடுதலை கானல் நீரே, என்பதை வரலாறு மீண்டும் மீண்டும் நமக்கு கற்பிக்கிறது. !!

பிற்குறிப்பு:

எமக்கு கிடைத்த ஆவணம் இன்று எந்த பெறுமதியும் இல்லாத வெற்று காகிதம் என்றாலும், அதில் உள்ள விடயங்கள் இன்றும் இலங்கை அரசுக்கு பெறுமதி வாய்ந்த தகவல்களே. அதில் உள்ள விடயங்கள் பெரும்பாலும் இலங்கையில் உள்ள மற்றும் புலத்தில் உள்ள தமிழர்களை பாதிக்கும் என்ற அடிப்படையிலும், அதை பகிரங்கபடுத்துவதனால் நாம் கொண்ட மக்கள் சார் அரசியலுக்கு எந்த விதத்திலும் நன்மை பயக்காது என்பதனாலும் மேலதிக விபரங்களை இங்கு தவிர்த்துள்ளோம்.

 

சே. சித்தானந்தன்