உலகளவில் தன மூலதனக் கொள்ளைக்கு தலைமை தாங்கிய மேட்டுக்குடிக் கும்பலைச் சேர்ந்த ஐ.எம்.எஃப் தலைவர் ஸ்ட்ரௌஸ் கான், திட்டமிட்டு பலியிடப்பட்டாரா! அல்லது கையும் மெய்யுமாக பிடிபட்ட ஆணாதிக்கப் பொறுக்கியா! இங்கு தான் பெண்ணியம், சட்டம் நீதி பற்றிய பிரiமைகள், பணம் சார்ந்த நடத்தை நெறிகள், மூலதனத்தின் கவிழ்ப்புகள், மேட்டுக்குடிக் குழிபறிப்புகள், ஏகாதிபத்திய சதிகள் என்று எல்லாம் பின்னிப்பிணைந்து ஒன்றையொன்று மூடிமறைத்தபடி அரங்குக்கு வருகின்றது.

 

பெண்கள் பணக்காரருக்கும், அதிகாரிகளுக்கும், அதிகார வர்க்கத்துக்கும் இணங்கிச் செல்லும் பாலியல் வன்முறைக்குள் தான், பெண்கள் பலர் வன்முறைக்குள்ளாகியபடி வாழ்கின்றனர். இந்த வன்முறைக்குள் இணங்கி வாழ்தல் மூலம் தான், அவர்கள் வாழமுடியும் என்ற நிலையில் உலகம் உள்ளது. இந்தப் பெண்களுக்கு நீதி கிடைப்பதில்லை. இப்படி உண்மைகள் இருக்க, இதிலிருந்து விதிவிலக்காக ஐ.எம்.எஃப் தலைவர் ஸ்ட்ரௌஸ் கான் சர்ச்சை வெளிவருகின்றது.

உலக அதிகார வர்க்கம் ஊரையே கொள்ளையிட்டு பொறுக்கித் தின்னும் கூட்டம் தான். இதற்கு வன்முறை புதிதல்ல. அதன் இருப்பிலும், அதன் இயல்பிலும் அது வன்முறை கொண்டது. சமூகம் மீதான வன்முறை மூலம் தான், அது பணத்தைக் குவிக்கின்றது. அது மற்றவர்களின் அடிப்படை உரிமைகளை மறுப்பதுடன், அதை விலைக்கு வாங்குகின்றது. முடியாத போது வன்முறை மூலம் அடைகின்றது. அதன் பின் பணத்தைக் காட்டி, பேரம் பேசுகின்றது. இந்தக் கூட்டம் தங்களுக்குள் மோதும் போது, திட்டமிட்ட சதிகள் மூலம் ஆளையாள் காலை வாரி வீழ்த்துகின்றது. இங்கு இவை எல்லாம் ஒருங்கே அரங்கேறுகின்றது.

பணத்தை அடிப்படையாக கொண்ட அதிகார வர்க்கத்திற்கேயுரிய அதன் ஒழுக்கக்கேடான வாழ்வில், அதை அடையும் நோக்கில் ஆளையாள் கவிழ்த்துப் போடுவதும், திட்டமிட்டு சதிகளைப் பின்னுவதும் தான், அதன் அறமாகும்;. அது பணத்தைக் கொண்டு நுகரும் "சுதந்திரமான" தனிமனித வக்கிரத்துக்குள், தனிமனித ஒழுக்கம் என்று எந்த வரையறையும் அதற்கு இருப்பதில்லை. இப்படி அரங்கேறியது தான், ஐ.எம்.எஃப் தலைவர் ஸ்ட்ரௌஸ் கான் பற்றிய பாலியல் வன்முறை பற்றிய சர்ச்சை.

 

இந்தச் சர்ச்சையை மூலதனமாக்கவே, ஊடகங்கள் முழு மூச்சில் இறங்கின. இப்படி இந்த விவகாரத்தை உலகளாவில் வியாபாரமாக மாற்றிய ஊடகங்கள், அதன் மூலம் மக்களை ஆக்கிரமித்து நிற்கின்றது. பிரஞ்சு சோசலிசக் கட்சியால் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டவரும், அடுத்த பிரஞ்சு ஜனாதிபதியாக எதிர்பார்க்கப்பட்ட நிலையிலும், அவரைச் சுற்றிய பாலியல் சர்ச்சையுடனான ஏகாதிபத்திய அரசியலும், ஊடக வியாபாரமும் முதன்மை பெற்று உலகச் செய்தியாக மாறியிருக்கின்றது.

இங்கு இந்த பாலியல் சர்ச்சையை சுற்றிப் பல கேள்விகளை இது எழுப்பியிருக்கின்றது.

1. உண்மையில் இச்சம்பவம் அப்பாவிப் பெண் மீது பாலியல் வன்முறையை ஏவிய, மேட்டுக்குடி பொறுக்கியா? பெண் சார்ந்த, பெண் உரிமை சார்ந்த நியாயமான ஒன்றாக இது வெளிப்படுகின்றதா!?

2. பெரும் பணக்காரருக்கு எதிராக, பணத்துக்காக திட்டமிட்டு நடத்திய நாடகமா?

3. ஏகாதிபத்திய முரண்பாடுகளை கையாள திட்டமிட்டு உளவுப்பிரிவுகள் நடத்திய நாடகமா?

4. அமெரிக்காவின் சட்ட ஒழுங்கின், அப்பளுக்கற்ற நீதியின்பாலானதா?

5. மூலதனத்தை மனித ஒழுக்கமாக கொண்ட அதிகாரிகளும், அதிகார வர்க்கமும், ஏன் இதை மூடிமறைக்க முனையவில்லை?

இங்கு பலத்த சந்தேகங்கள், இதன் பின்னணியில் நிலவுகின்றது. இன்று ஐ.எம்.எஃப் அடுத்த தலைவர் யார் என்று கேட்டு, ஏகாதிபத்தியத்துக்கு இடையில் வாதப்பிரதிவாதங்கள் தொடங்கியுள்ளது. ஜரோப்பிய, அமெரிக்க அரசுகள் இந்தப் பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் முரணிலையாக கருத்துக் கூறுகின்றனர்.

பயங்கரவாதம் என்று கூறி உலகின் எந்த மூலையிலும் எதையும் செய்யும் ஏகாதிபத்தியத்தனம் போல், பாலியல் குற்றஞ் சாட்டி சட்டம் நீதி பெயரில் ஏகாதிபத்திய முரண்பாடுகள் தீர்க்கப்படுகின்றவா?

ஐ.எம்.எஃப் உலகளாவில் நடத்துகின்ற வன்முறையால், பாதிக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்கள் எந்த நீதியையும் பெற்றது கிடையாது. இதற்கு எதிராக போராடும் மக்களை பயங்கரவாதிகளாகக் காட்டி, ஜனநாயகத்தின் விரோதிகளாகக் காட்டி, உலகமே ஒருகரமாக இன்று ஒடுக்குகின்றது. இப்படிப்பட்ட அரசுகளுக்கு தலைமை தாங்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம், மேட்டுக்குடிகளுக்கும் அதிகாரவர்க்கத்துக்கும் பணிப் பெண்ணாக இருக்கும் ஒரு அபலைப் பெண்ணின் நலன் சார்ந்து, இந்த விவகாரத்தில் சட்டம் ஒழுங்கையம் நீதியையும் முன்னிறுத்துகின்றதா! இங்கு தான் இதன் பின்னணி கேள்விக்குள்ளாகின்றது.

அமெரிக்க இராணுவ அதிகாரிகள் தங்கள் படையில் உள்ள பெண் சிப்பாய்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி வரும் அதன் அதிகார வெறிக்கு எதிராக, அமெரிக்க சட்டம் நீதி எங்கே எப்போது தண்டித்தது? பாதிரிமாரின் பாலியல் வன்முறைக்குப் பலியான குழந்தைகளுக்கு எங்கே எப்போது நீதி கிடைத்தது!? யப்பானில் உள்ள அமெரிக்காவின் இராணுவத்தின் குற்றங்களை யப்பானிய சட்டத்தின் கீழ் தண்டிக்க மறுக்கும் அமெரிக்கத்தனத்தை இங்கு ஒப்பிட்டுப்பாருங்கள். அண்மையில் பாகிஸ்தானில் அமெரிக்க அதிகாரியால் அப்பாவிகள் சுட்டுக் கொல்லப்பட்ட போது, பாகிஸ்;தான் சட்டத்தையும் நீதியையும் அமெரிக்க ஏகாதிபத்தியம் மிரட்டி அடிபணிய வைத்ததை ஒப்பிட்டுப் பாருங்கள். ஐ.நா பாதுகாப்பு சபையின் முன் அமெரிக்காவின் முன்னாள் வெளிநாட்டு அமைச்சர், கையில் ஒரு சிறு போத்தலை வைத்து ஈராக்கின் அணு என்று கூறி உலகையே ஏமாற்றிய போது, அமெரிக்காவின் சட்டம் நீதி எல்லாம் எங்கே போனது? இப்படிக் கூறி ஈராக்கை ஆக்கிரமித்த அமெரிக்கா, பல இலட்சம் மக்களைக் கொன்று குவித்தது. ஈராக், ஆப்கானிஸ்தான் எங்கும் வதைமுகாம்களை திட்டமிட்டு நிறுவி சித்திரவதை செய்வது முதல் மக்களைக் கொல்வது வரை எத்தனை வகையான அமெரிக்கக் குற்றங்கள். உலகளவில் அமெரிக்கா செய்த எத்தனை ஆயிரம் குற்றங்கள். உள்நாட்டில் கறுப்பின மக்களுக்கு எதிராக எத்தனை இனவெறிக் குற்றங்கள். சட்டம், ஒழுங்கு நீதி, எங்கே தான் இந்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தை தண்டித்திருக்கின்றது.

இங்கு ஐ.எம்.எஃப் தலைவர் ஸ்ட்ரௌஸ் கான் மீது மிக குறுகிய நேரத்தில், சட்டம் பாய்ந்திருக்கின்றது. இதுவும் அந்த விடுதியின் அதிகாரியின் துணையுடன், அமெரிக்க நாட்டை ஆளும் அதிகார வர்க்கத்தின் வேகமாக செயல்பாட்டுடன், அமெரிக்க ஆளும் அரசியல்வாதிகள் திட்டமிட்டு கண்டு கொள்ளாத இடைவெளியில், தான் ஐ.எம்.எஃப் தலைவர் மேலான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு இருக்கின்றது. இங்கு இது சந்தேகத்துக்குரியதாக மாறுகின்றது.

ஸ்ட்ரௌஸ் கான் முன்னமே இது போன்ற குற்றங்கள் இழைத்து மூடிமறைத்ததாக கூறுகின்ற பின்னணியில், இதுவும் ஒன்றா? இதன் மேல் தற்செயலாக சட்டம் மிக வேகமாக நீதியின் முன் இதைக் கொண்டு வந்ததா? அல்லது ஸ்ட்ரௌஸ் கானின் இந்தப் பலவீனத்தை பயன்படுத்தி சிக்க வைக்கப்பட்டாரா? இதன் பின்னணியில் சட்டம் திட்டமிட்ட வகையில் பாயத் தயாராக இருந்ததா? ஒரு அபலைப் பெண்ணுக்கு நடந்ததாக மட்டும் இதை குறுக்கிப் பார்க்க முடியாதளவுக்கு, அமெரிக்க ஏகாதிபத்திய சதிகளும் அதன் பித்தலாட்டங்களும் உலகளாவியது.

பி.இரயாகரன்

19.05.2011