மக்களை பலியிட்டு தங்களை காப்பாற்றிக் கொள்ள முயன்ற புலிகள், இறுதியில் மே 17 சரணடைந்தனர். இதைத்தான் எல்லா ஆவணங்களும், வெளிவரும் சாட்சியங்களும் உறுதி செய்கின்றது. இப்படியிருக்க மே 18 யை புலிகள் எதனடிப்படையில் முன்னிறுத்துகின்றனர்? தங்கள் சொந்த மக்கள் விரோதத்தை அடிப்படையாக கொண்டு தான், தங்கள் மக்கள் விரோத அரசியலை மூடிமறைக்கத்தான், புலிகளை மட்டும் முன்னிறுத்தி மே 18 ஜ புலிகள் தெரிவு செய்தனர்.

 

 

உண்மையில் மே 18 ம் திகதி மக்கள் விரோத யுத்தம் முடிவுற்று ஓய்ந்த நாள். இதனாலும் இது புலிக்குத் துக்க தினம். மே16 - மே 17 இரவு ஆயுதத்தை கீழே வைப்பதாக அறிவித்து புலிகள் சரணடைந்ததைத் தொடர்ந்து, யுத்தம் முடிவுக்கு வந்தது. மே 16 க்கு முன்னமே பலிகொடுத்த புலி அரசியல் மூலம், பல பத்தாயிரம் மக்கள் கொல்லப்பட்டு விட்டனர். இந்த அரசியல் மூலம் தங்களை காப்பாற்ற முடியாது போன புலிகள், மே 17 இல் சரணடைந்தனர். இப்படி தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முயன்றவர்களையும், அவர்களின் முக்கிய குடும்ப உறுப்பினர்களையும் கொல்வது தொடர்ந்து அரங்கேறியது. மே 18 அன்று முள்ளிவாய்க்காலில் நடந்த பாரிய வெடிப்புகள், புலிகள் தாம் பாதுகாப்பாக வெளியேறிய பின் வெடிக்கும் வண்ணம் தமது எஞ்சிய சொத்துக்கள் மீது முன்கூட்டியே திட்டமிட்டு வைத்த வெடிகுண்டு தாக்குதல் தான்.

இப்படி மே 18 யுத்தமற்ற அமைதியான நாள். மே 17 புலிகள் சரணடைந்த போது, புலிகளை மூன்றாம் தரப்பு ஒன்றின் மூலம் நாட்டைவிட்டு வெளியேற்றும் நாடகமும் ஒருங்கிணைந்த வகையில்தான் அரங்கேறியது. புலிகள் தாம் பாதுகாப்பாக வெளியேறும் வண்ணம், உருவான பல தரப்பு உறுதி மொழியின் அடிப்படையில் தான், சரணடைவு நாடகமும் மே 17 அரங்கேறியது. புலிகள் தம்முடன் பெருந்தொகையான பணத்தை, பாரிய பெட்டிகளாக கட்டி அதையும் எடுத்துக் கொண்டு சென்றனர். இக் காட்சிகளில் சில அன்று வெளியாகியது. மே 15, 16 திகதி கூட 250 ரூபாவுக்கு மக்களின் கையறு நிலையை பயன்படுத்தி புலிகள் வாங்கிய பெருமளவு தங்கம் முதல் இயக்க ஆவணங்கள் அனைத்தும் சி.டி CD வடிவில் புலிகளால் எடுத்துச் செல்லப்பட்டது. இப்படி புலிகள் பாதுகாப்பானதாக கருதிய மக்கள் விரோத வழிகளில் நடத்திய சரணடைவு, தங்கள் புதைகுழிகள் என்பதை அறிந்திருக்கவில்லை. இப்படித்தான் மே 17 புலியின் முடிவாக மாறியது.

புலிகள் பாணியிலான ஒரு கூட்டுச்சதிக்குள், புலிகளை மே 17 சரணடைய வைத்தனர். இதன் பின் கொல்லப்பட்டனர். பல நாடுகளின் தொடர்பாளர்கள் முதல் புலம்பெயர் புலி கொள்கை வகுப்பாளர்கள் வரை, இதில் சம்மந்தப்பட்டு இருந்தனர். அவர்களின் மூடிமறைப்பைக் கடந்து வெளிவரும் தகவல்கள் இதை உறுதி செய்கின்றது.

இது ஒரு திட்டமிட்ட கூட்டுச் சதியாக இருந்தது. இந்தச் சதியை தொடர்ச்சியாக மூடிமறைக்க முற்பட்டபோது, இதனுடன் தொடர்புடைய அனைவரும் சதியாளராக மாறிவிடுகின்றனர். அங்கு என்ன நடந்த என்பதும், யார் யார் சம்மந்தப்பபட்டனர் என்பதும், புலத்துப் புலி கொள்கை வகுப்பாளர்களுக்கு தெரியும்;. மே 17 சரணடைவு மூலம் பாதுகாப்பாக புலிகளை வெளியேற்றும் பொறுப்பை, யார் யார் எடுத்தனர் என்பது ஈறாக அனைத்தும் இவர்களுக்கு தெரியும். இதை மூடிமறைத்து நிற்கும் புலிகள், அவர்களை தொடர்ந்து மீட்பாளராக காட்டுகின்றனர்.

கூட்டுச் சதியை இப்படித்தான் புலிகள் மூடிமறைக்கின்றனர். மே 17 உடன் முடிந்து போன புலிக் கதையை, மே 18க்கு நீடித்து காட்டுவதன் நோக்கம் தங்கள் கூட்டுச் சதியை மூடி மறைப்பதற்காகத்தான். போர்க்குற்ற விசாரணையை மையமாக வைத்து நடக்கும் இன்றைய புலி அரசியல், மே 17 க்குள் முடிந்து போன கூட்டுச்சதியை மெதுவாக வெளிக்கொண்டு வருகின்றது.

மே 18 வரை புலிகளை உயிருடன் வைத்திருக்கவே, புலிகள் இன்று வரை அரசியல் பிரிவுதான் சரணடைந்ததாக கூறி வந்தது, வருகின்றது. இராணுவப் பிரிவு மே 18, மே 19 தொடர்ந்து சண்டையிட்டு, வீரமரணமடைந்ததாக கூறிவந்தது. ஆனால் அதை மீறி வெளிவந்த படங்கள் அக்கூற்றுக்களை போட்டு உடைக்கின்றது. அண்மையில் புலிகளின் முன்னணி இராணுவப் பிரிவினர் கைதியாக இருக்கும் காட்சியும், பின் அவர்கள் கொல்லப்பட்ட படங்களும் வெளியாகியது. இவற்றில் முக்கிய இராணுவத் தளபதிகள் கைதான படங்களும், அவர்கள் கொல்லப்பட்ட காட்சிகளும் இதில் அடங்கும். பார்க்க படங்களை.

 

மே 18 போல், இது புலிகளின் பித்தலாட்டத்தை மீண்டும் அம்பலமாக்குகின்றது. மிகத் தெளிவாக இராணுவப் பிரிவும் மே 17 சரணடைந்ததை எடுத்துக் காட்டுகின்றது. இதில் சூசையின் படம், பானுவின் படம், பிரபாகரனின் மூன்றாவது குழந்தையின் படம் அனைத்தும் என்ன நடந்தது என்பதை மேலும் உறுதி செய்கின்றது. புலிகள் தங்கள் அரசியல் பிரிவு தான் சரணடைந்ததாக கூறிவந்தது. ஆயுதமேந்தாத அரசியல் பிரிவு ஒன்று புலிகளிடம் கிடையாது.

இப்படியிருக்க புலிகள் மே 18 வரை சரணடையவில்லை என்று கூறி, வீரமரணமடைந்ததாக கூறுவதன் மூலம் மே 18 ஜ முன்னிறுத்தி முன்நகர்த்தும் அரசியலின் பின், மக்களை ஏமாற்றும் மக்கள் விரோத அரசியல்தான் காணப்படுகின்றது.

பிரபாகரனின் மூன்றாவது மகனாக பாலச்சந்திரனை பாலகன் என்று கூடப் பாராமல் சரணடைந்த குழந்தையைக் கூட போர்விதிகளை மிக மோசமாக மீறிக் கொலை செய்து மிருகத்தனமான யுத்தக்குற்றமிழைத்திருக்கிறது மகிந்தவின் பாசிச அரசு. இந்த மிக மோசமான கொலையைக் கூட அவர்கள் சரணடையவில்லை போராடி மாண்டனர் என்று கூறுவதன் மூலம் இந்த அரச பாசிசப் பிசாசுகளின் கொலைக்கரங்களில் அவர்கள் அகப்படவில்லை என்று கூறுகிறார்கள் இந்த போர்க்குற்றத் தடயங்களை பொத்தி மறைக்கும் மே 18 வாதிகள்.

1. இதன் மூலம் மே 18 ஜ மக்கள்விரோத புலிகளின் நினைவாக முன்னிறுத்தி, அதை துக்க தினமாக்குகின்றனர். இங்கு தாம் பலிகொடுத்ததால் கொல்லப்பட்ட மக்களை முன்னிறுத்தவில்லை. மக்களைப் பலிகொடுத்தவர்களை போற்றுகின்றனரே ஒழிய, கொல்லப்பட்ட மக்களை இட்டு துக்கதினத்தைக் கடைப்பிடிக்கவில்லை.

2. இதன் மூலம் மே 17 தாம் நடத்திய தமது கூட்டுச் சதியையும், தம்முடன் சம்மந்தப்பட்ட சதியாளர்களையும் பாதுகாத்து மே 18 மூலம் அதை மூடிமறைக்கின்றனர்.

இப்படி மே 18 ஜ மக்களுக்கு எதிரான தங்கள் சொந்த நாட்களாக புலிகள் முன்னிறுத்தி நிற்கின்றனர்.

இந்த கூட்டுச் சதியை ஒட்டி அன்று இன்றும் வெளியாகிய தகவல்களைப் பார்ப்போம்

மே 17 என்ன நடந்தது என்பது தொடர்பாக அண்மையில் வெளியாகிய செய்தியொன்று, மிகத் தெளிவாக மே 17 இல் என்ன நடத்தது என்பதை போட்டுடைக்கின்றது. "ஆஸ்திரிலேயாவில் இருந்து வெளியாகும் தி ஏஜ் என்ற பத்திரிக்கையில் வெளியான செய்தியில் மே 17 ஆம் தேதி காலை 9 மணியளிவில் அப்போதைய வெளியுறவுத்துறை செயலராக இருந்த பாலித கோஹன்னா – வேறொருவர் வழியாக புலிகளுக்கு அனுப்பிய செய்தியில் – படையினர் இருக்கும் திசை நோக்கி வெள்ளைக் கொடியோடு மெதுவாக நடந்து வாருங்கள் என்று கூறப்பட்டதாகவும்." என செய்தியை கசியவிட்டுள்ளது. இந்த தகவல் போட்டுடைக்கும் பல உண்மைகளில் ஒன்று, புலிகளின் மே 18 இல் அல்ல மே 17 இல் தான் இது நடந்தது என்பதாகும்.

இதை உறுதி செய்யும் வகையில்தான் 16-17.05.2009 அன்று ஜனாதிபதி சர்வதேச நாடொன்றில் வைத்து ஆற்றிய உரையில், நாட்டில் பயங்கரவாத பிரச்சனை முடிந்துவிட்டதாக மகிழ்ச்சியுடன் அறிவித்தார். அத்துடன் தன் பயணத்தை திடீரென நிறுத்தி நாடு திரும்பினார். 17.05.2009 அன்று எல்லாக் கொலைகாரர்களும் புடை சூழ, மகிழ்ச்சியாக தன் பாசிச பயங்கரவாத மகிழ்வில் மண்ணை முத்தமிட்டார்.

மே 17 புலிகள் கதை முடிந்து விட்டது. இங்கு மே 18 எங்கிருந்து வருகின்றது? புலிகளின் மக்கள் விரோதம் தான், மே 18யை முன்னிறுத்துகின்றது. மே 17 என்ன நடந்தது என்பதை மேலும் பார்ப்போம்.

மே 17 அன்று புலிகளை வழிநடத்திய கே.பி பத்மநாதன் வழங்கிய பேட்டியில் ".. நாம் எமது ஆயுதங்களை அமைதியாக்கி சமாதானப் பேச்சுவார்த்தைக்கு வருகிறோம்… விடுதலைப் புலிகளின் அச்சமற்ற தன்மையையும், தங்கள் கொள்கை மீதுள்ள முடிவில்லாத கடமையுணர்ச்சியையும், அதன் மீது எம்மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையையும் எவரும் சந்தேகப்படமுடியாது. ……. எமது அழைப்பை எமது பிள்ளைகள் எந்தவொரு கேள்வியுமில்லாமல் மரணத்துக்கு பயமற்று எடுத்துள்ளார்கள். எமது போராட்டம் எம்மக்களுக்காகவே என்பதை நாம் மறந்துவிடவில்லை என்றும் இப்போதைய நிலமையில், இந்த யுத்தத்தை சிறிலங்கா இராணுவம் எம்மக்களைக் கொன்றுகுவிப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாகப் பாவிக்க நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்….. மிகத் துணிச்சலோடு நாங்கள் எழுந்து நின்று எமது ஆயுதங்களை அமைதியாக்குகிறோம், எமது மக்களைக் காப்பாற்றுமாறு தொடர்ந்து சர்வதேசச் சமுதாயத்துடன் கேட்டுக்கொள்வதை விட வேறு தெரிவு எங்களுக்கு இல்லை" என்று அறிவிக்கின்றார். இப்படி ஆயுதத்தை கீழே போட்டு, சரணடைய எடுத்த முடிவை அறிவிக்கின்றார். இங்கு அரசியல் பிரிவு மட்டும் ஆயுதத்தை துறந்ததாக கூறுவதும், இராணுவப் பிரிவு அதைச் செய்யவில்லை என்று கூறி, நடந்த உண்மையை மூடிமறைத்துப் புரட்டுவதன் மூலம் மே 18 ஜ முன்னிறுத்துவது மக்களை ஏய்ப்பதாகும்;.

17.05.2009 மக்கள் முழுமையாக வெளியேற்றியதாக அரசு அறிவித்தது. புலிகள் தம் சரணடைவுக்கு அமைவாக, பலிகொடுப்பதை நிறுத்தி மக்களை விடுவித்தனர். இந்த நிகழ்வுக்கு முன் மக்கள் உயிரிழப்பை தவிர்க்க, ஆயுதத்தை கைவிட்டுவிட்டதான கே.பி பத்மநாதனின் கூற்று வெளிவருகின்றது.

அதே நாள் மே 17 சூசையின் பேட்டி "மக்கள் பாதுகாப்பு வலயத்தினுள் இருக்கும் அனைத்து மக்களையும் ஜெனீவாவில் உள்ள அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்துடன் நேரடியாக செல்வராஜா பத்மநாதனூடாகத் தொடர்பு கொண்டு வெளியேற்றுமாறு கேட்டிருந்தோம்." என்கின்றார். இப்படி புலிகள் மே 17 உடன் தங்கள் வரலாற்றை முடித்து வைத்ததைப் பற்றி கூறுகின்றனர். இப்பயிருக்க மே 18 எங்கிருந்து வருகின்றது.

எரிக் சொல்கைம் இந்த நாடகத்தின் மற்றொரு சதிகாரனாக இருந்து வெளியிட்ட தகவல் இதை மேலும் உறுதிசெய்கின்றது. 17.05.2009 பல தரம் (வெளிநாட்டு - உள்நாட்டு) புலியுடன் தான் தொடர்பில் இருந்ததாக கூறியுள்ளார். இப்படி மோசடி செய்து கொல்ல உதவிய பின், நடந்ததை "இது மிகவும் கோரமானது" என்கின்றார். இப்படி அரங்கேறிய நாடகத்துக்கு முன், புலிகளை நம்பவைக்கும் அமெரிக்கா-இந்திய கூட்டு நாடகம் ஒன்று அரங்கேறுகின்றது.

அமெ. பசுபிக் பிராந்திய கட்டளைத் தளபதி அட்மிரல் திமேத்தி ஜே கீட்டிங், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் மற்றும் வெளிவிவகார செயலாளர் சிவ்சங்கர் மேனன் ஆகியோரை சந்தித்த பின், 15.05.2009 இல் வெளியிட்ட அறிக்கை இந்த சதி நாடகத்தின் வெளிப்படையான ஒரு அங்கமாகும்.

"இலங்கையில் போர்ப் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அமெரிக்கக் கடற்படை கப்பல்கள் தயார் நிலையில் உள்ளது." என்று அவர் 15.05.2009 அறிவிக்கின்றார். அத்துடன் "போர் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கான வழிகளை கண்டறிய அமெரிக்க குழு இலங்கை சென்றது. எவ்வகையில் உதவி செய்ய முடியும் என்ற அறிக்கையையும் இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் வழியாக வெளியுறவுத்துறைக்கு வழங்கியுள்ளது. அதில் போர்ப்பகுதியில் தமிழர்களுக்கு அமெரிக்கக் கடற்படை வழியாக உதவுவதற்கான பல்வேறு வழிமுறைகளை தெரிவித்துள்ளோம்." என்கின்றது. இப்படி 15ம் திகதி வெளிப்படையாக தொடங்கிய இந்தச் சதி. இந்த 16-17.05.2009 சதிக்கு சமாந்தரமாகவே, பத்மநாதன் அறிக்கைகள் வெளிவந்துள்ளது.

இதையே புலிகளின் கொள்கை வகுப்பாளராக இருந்த ”வழுதி கூட்டம்” உறுதி செய்கின்றது. தாங்கள் நடத்திய அந்தச் சதியை "அப்போது என்னைத் தொலைபேசியில் அழைத்த நடேசன் அண்ணை - ஆயுதங்களைக் கைவிடத் தாம் தயாராக இருப்பதாகவும், சம்மந்தப்பட்டவர்களை வந்து இறங்கி மீட்பு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு சொல்லும்படியும், தலைவர் அவர்கள் முழு ஒத்துழைப்பு வழங்குவார் என்றும் என்னிடம் சொன்னார்; எனது பங்கு நடவடிக்கைகளை நான் எடுத்தேன்" என்கின்றார். ஆக மூன்றாம் தரப்பு அங்கு "இறங்கி மீட்பு நடவடிக்கையை" செய்யும் சதியும் ஒருங்கிணைந்து இங்கு காணப்படுகின்றது.

வழுதியின் அதே கட்டுரையில் இந்த கூட்டுச் சதிக்கு பதில் உண்டு. "போரை இடைநிறுத்தி, ஆயுதங்களை "மௌனிக்கச் செய்வதற்கு" மே 15, வெள்ளிக்கிழமை, இலங்கை நேரம் பிற்பகல் அளவிலேயே விடுதலைப் புலிகளின் தலைமை முன்வந்தது." என்கின்றார். "இதே தகவல் - பத்மநாதன் அண்ணனுக்கு சூசை அண்ணனால் சொல்லப்பட, அவரும் உருத்திரா அண்ணனும் தமது பங்கு நடவடிக்கைகளை எடுத்தனர்." என்கின்றார். "வேறும் சில நண்பர்கள் வேறு சில முனைகளால் தமது முயற்சிகளை எடுத்தனர்." என்கின்றார். யார் யார் இதில் எப்படி எந்த நிலையில் பங்கு கொண்டனர் என்பதும், இதை யார் மூடிமறைக்கின்றனர் என்பதும், இங்கு வெட்ட வெளிச்சமாக அம்பலமாகின்றது. இதனுடன் சம்பந்தபட்ட பலரின் கூற்றுகள் இதை மேலும் உறுதிசெய்கின்றது. மே 15 முதல் மே 17 க்குள் அரங்கேறி முடிந்த கூட்டுச்சதியையும் துரோகத்தையும் மூடிமறைக்கவே தான் மே 18 துக்க தினமாகின்றது.

 

பி.இரயாகரன்

17.05.2011