01242022தி
Last updateஞா, 16 ஜன 2022 1pm

கருணாநிதியின் ஆட்சிக்குப் பதில், மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சி. உனக்கு தரப்போவது என்ன?

இதுதான் கிடைக்கும் என்று உன்னால் சொல்ல முடியுமா? மக்களுக்கு இந்த ஆட்சியால் என்ன நன்மை என்றாவது சொல்ல முடியுமா? தெரிவு செய்த உன்னால் அதைச் சொல்ல முடியாது. ஆனால் இது தொடர்ந்து மக்களுக்கு அடக்குமுறையுடன் கூடிய ஆட்சியையே தரும் என்று, எம்மால் நிச்சயமாக அறுதியிட்டுச் சொல்ல முடியும். இங்கு ஆட்சி மாற்றம் என்பது, உனது அறியாமை சார்ந்த அதிருப்தியின் வெளிப்பாடே ஒழிய, நீ விரும்பும் ஆட்சியை உனக்குத் தரப்போதில்லை. ஆம், உன் மீதான அடக்குமுறை தொடரும். இந்த சூக்குமத்தை நீ புரிந்து கொள்ளாத வரை, மீண்டும் உன் அதிருப்தியை தெரிவிக்க நீ இன்று தோற்கடித்த பழைய அதே ஆட்சியை மீண்டும் தெரிவு செய்வாய். இதுதான் உனது அறியாமை. அதற்குள் உன்னை தக்கவைப்பதற்காக, இதைச் சுற்றிய தர்க்கங்கள் விளக்கங்கள், வாதங்கள். இதற்காக எத்தனை அறிவுசார் மோசடிகள். நீ விழிப்புறக் கூடாது என்பது தான், இந்த அறிவுசார் மேதமை. உன் அறியாமை தான், அறிவு மீதான மேலாதிக்கம்.

 

 

 

ஜெயலலிதாவோ தன் வெற்றி ஜனநாயகத்தின் வெற்றி என்கின்றார். ஈழ ஆதரவு தமிழ் தேசிய வலதுகள் எல்லாம், இதைத் தமிழனின் வெற்றி என்கின்றனர். இப்படிக் கூறித்தான் ஜனநாயகம் முதல் தமிழின உணர்வு வரை நலமடிக்கப்படுகின்றது. அதுமட்டுமல்ல உனது தெரிவின் அடிப்படையையும் கூட மறுத்து, வென்ற அடுத்த கணமே ஆளுக்காள் புது விளக்கம் கொடுக்கின்றனர்.

உன் அதிருப்தியால் உருவாகும் ஆட்சி மாற்றத்தால் எதுவும் மாறுவதில்லை. சுரண்டல் முதல் அடக்குமுறை வரை, எதுவும் மாற்றப்படுவதில்லை. இதுதான் தேர்தல் மூலமான ஆட்சியாளர்களின் மாற்றங்கள் எடுத்தியம்பும் உண்மை.

இங்கு மாற்றம் எது? வித்தியாசம் எது?

1. பழைய ஆட்சியை சுற்றிப் பொறுக்கித் தின்ற கூட்டத்துக்கு பதில், புதிதாக அதை பொறுக்கித் தின்னும் கூட்டம் மட்டும் மாறுகின்றது. அதைத்தான் அது ஜனநாயகம் என்கின்றது.

2. இந்த ஆட்சியில் உள்ள வித்தியாசம் என்பது, கருணாநிதி ஆட்சி என்பது மூடிமறைத்த அடக்குமுறையை அடிப்படையாக கொண்டது. இதற்கு மாறாக ஜெயலலிதாவின் ஆட்சி வெளிப்படையான அடக்குமுறையை ஏவி ஆளும் ஆட்சியாக இருக்கும்.

இதற்கு வெளியில் இந்தச் சமூக அமைப்பில் எந்த மாற்றமும் இருக்காது. அப்படி ஏற்படும் என்று உன்னால் கூறவும் முடியாது. நாளைய வரலாற்றில் உன்னால் காட்டவும் முடியாது.

ஆக, பொறுக்கித்தின்ற கூட்டத்தின் வெளிப்படையான அடக்குமுறை ஆட்சியை மீண்டும் தமிழகம் சந்திக்கும். இதை நாம் எங்கும் எதிலும் பார்க்கலாம். பார்ப்பனியம், சாதியம் முதல் ஈழத்தமிழ் மக்கள் மேலான ஒடுக்குமுறை வரை, அனைத்துத் தளத்திலும் இந்த வேறுபட்ட பண்புடன் கூடிய ஒடுக்குமுறையை மீண்டும் தமிழகம் சந்திக்கும். இதற்கு வெளியில் மாற்றம் என்பது இருக்காது.

இப்படி யார்?, எப்படி?, எந்த வடிவில்? உன்னை ஒடுக்குவது என்பதைத்தான், தேர்தல் முடிவுகள் மாற்றி அமைக்கின்றது.

கடந்தகால மக்கள் விரோத ஆட்சி மீதான மக்களின் அதிருப்தி தான், மீண்டும் பழைய ஆட்சியை கொண்டு வருகின்றது. மீண்டும் மீண்டும் இதுதான் நடக்கின்றது. அரசியல் உணர்வு பெறாத நிலையில், வெறும் மந்தைகளாக வாழும் நிலையில், எவரும் மாற்றத்துக்கான சொந்த தெரிவை கொண்டு இருப்பதில்லை. மாற்றத்துக்கான தெரிவு என்பது, மக்கள் தீர்மானிக்க கூடிய மக்கள் அதிகாரத்துக்காக போராடுவதுதான்.

இதை விடுத்த எதுவும், எதையும் மாற்றுவதில்லை. மாற்றத்தை மறுப்பதுதான், வாக்கு போடும் ஜனநாயகம். உனது அதிருப்தியை வடியவைத்து உன்னை மலடாக்குவதுதான், ஜனநாயகத்தின் மகிமை. அதனால் தான் உன்னை ஒடுக்கும் கூட்டத்தால், அது போற்றப்படுகின்றது. உன் உரிமையாக அதைக் கூறி, அதை உன் காதில் செருகி விடுகின்றனர். உடனே நீ போடும் தோப்புக்கரணத்தை சுற்றி, அரோகரா போட்டு, உனக்கே அதை பூச் சுற்றி கட்டிவிடுகின்றனர்.

இந்த உண்மையை நீ உணர்ந்து கொள்ளாத வரை, எத்தனை ஆட்சி மாற்றம் வந்தாலும் யார் ஆண்டாலும், உன்னைச் சுரண்டி வாழ்வதும் உன் மீதான ஒடுக்குமுறையும் மாறாது. இதைத்தான் உன் அறியாமை மூலம், உன்னை நீயே இதற்கு அடிமையாக்குகின்றாய்.

 

பி.இரயாகரன்

14.05.2011

 

 

 

 


பி.இரயாகரன் - சமர்