கம்பர்மலையில் துரைசாமி – தங்கமுத்து என்ற விவசாய குடும்பத்தில் பிறந்த பஞ்சலிங்கம் என்ற மனோ மாஸ்டர் வல்வெட்டித்துறை சிதம்பராக் கல்லுரியில் கல்வி பயின்ற காலங்களில் ஈழப் போராட்டத்தின் முன்னோடிகளான தங்கத்துரை, குட்டிமணி போன்றோருடன் தொடர்வுகளைக் கொண்டிருந்தார். அக் காலகட்டத்தில் வடமராட்சியில் கூலி விவசாயிகளிடமும், தாழ்த்தப்பட்ட மக்களிடமும் களப் பணிகளை செய்து வந்த சீன சார்பு கம்யுனிஸ்ட் கட்சியினரின் தொடர்புகளால் மார்க்சிய சிந்தனைகளை கற்றுக் கொண்டார். கம்யுனிஸ்டு கட்சியின் தலைவரான சண்முகதாசனை அழைத்து வந்து வடமராட்சி எங்கும் கூட்டங்களை நடாத்தி வந்தார்.
இலங்கையில் உக்கிரமடைந்து வந்த இனப் பிரச்சினைக்கு ஜக்கிய இலங்கைக்குள் தேசிய இனங்களிற்கு சமவுரிமை என்பது கம்யுனிஸ்டு கட்சியின் தீர்வாக இருந்தது. தேசிய இனப் பிரச்சினையை பிரதான முரண்பாடாக பார்த்த மனோ மாஸ்டர் பிரிந்து சென்று ஈழதேசத்தினை நிறுவுவதன் ழூலமே இலங்கையின் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்பதை வலியுறுத்தினார். இந்த முரண்பாடு காரணமாக கம்யுனிஸ்டு கட்சியிலிருந்து விலகி 1979ம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டார்.
அவர் புலிகள் அமைப்பில் சேர்ந்த போது, தமிழ் மக்களின் மீதான இன ஒடுக்கு முறைகளிற்கு எதிராக திரண்ட ஒரு இளைஞர் அமைப்பாகவே புலிகள் இயக்கம் இருந்தது. தமிழரசுக் கட்சியினரின் வலதுசாரி அரசியலே அவர்களின் அரசியலாக இருந்தது. மனோ மாஸ்டரே புலிகள் அமைப்புக்குள் மாக்சிய சிந்தனைகளை கொண்டு வந்தார். உறுப்பினர்களை மாக்சிய கல்வியையும், பிறநாட்டு போராட்டங்களையும் படிக்கத் தொடங்கினர். மாக்சிய கல்வி புலிகளின் உறுப்பினர்களிற்குள் பாரிய மாற்றங்களை கொண்டு வந்தது. அது வரையிலும் வெறும் ராணுவ நடவடிக்கைகள் ழூலம் ஈழத்தினை பெற்றுவிடலாம் என்று நம்பிக் கொண்டிருந்தவர்கள் புரட்சிகர அரசியல், மக்கள் அமைப்புக்கள் என்பனவற்றின் ழூலமே போராட்டங்கள் வெற்றி பெற்றன என்பதை உணர்ந்து கொண்டார்கள். புலிகள் அமைப்புக்குள் ஜனநாயகத் தன்மை கொண்ட மத்திய குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என குரல்கள் எழுந்தன.
பிரபாகரன், பேபி சுப்பிரமணியம் போன்றவர்கள் இராணுவ நடவடிக்கை தான் தேவை என்ற பழைய வலதுசாரிப் போக்கினை வலியுறுத்தினார்கள். அய்யர், நாகராஜா, நந்தன், சுந்தரம் போன்றவர்கள் இடதுசாரி அரசியலை முன் வைத்தார்கள். புலிகள் இயக்கம் பிளவுபட்டது. ஆனால் புலிகளிற்குள் மாக்சிய சித்தாந்தத்தினை அறிமுகம் செய்த வைத்த மனோ மாஸ்டர், பிரபாகரன் பக்கம் நின்றார். இயக்கம் பிளவுபடக் கூடாது என்பதற்காகவே தான் பிரபாகரனின் பக்கம் நின்றதாக பிற்காலங்களில் மனோ மாஸ்டர் சுய விமர்சனம் செய்து இருந்தார்.
புலிகள் இயக்கத்தில் தொடர்ந்து ஏற்பட்ட பிளவுகளால் இயக்கம் செயலிழந்து போனது. பிரபாகரன் குழுவினர் தங்கத்துரை, குட்டிமணி தலைமையிலான தழிழீழ விடுதலை இயக்கத்தில் இணைந்து கொண்டனர். குரும்பசிட்டி அடைவுக் கடை நகைக் கொள்ளை, நீர்வேலி வங்கி கொள்ளை என்பன இக்காலப் பகுதியில் இவர்களால் மேற்கொள்ளப்பட்டன. மனோ மாஸ்டர் இவர்களுடன் இணையாமல் விலகியிருந்தார். அவரிற்கு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பிரிவிற்கு அனுமதி கிடைத்தும், புலிகள் இயக்கத்தில் முழு நேர உறுப்பினராக இருந்தமையால் பல்கலைக்கழகத்தில் தன்னை பதிவு செய்யாது விட்டு விட்டார். அவரது அரசியல் செயற்பாடுகள் அனைத்திற்கும் என்றும் ஆதரவாக இருந்த அவரது சகோதரி, அவரை பல்கலைக்கழக கல்வியினை தொடரும் படி கேட்ட போது, படித்து முடித்தவுடன் கிடைக்கும் ஒரு காகிதத் துண்டிற்காக (Certificate) ழூன்று வருடங்களை வீணாக்குவதா என்பது அவரது மறு மொழியாக இருந்தது. இக் காலகட்டத்தில் இனக் கலவரம் காரணமாக மலையகத்திலிருந்து கிளிநொச்சி மற்றும் வன்னியின் ஏனைய பிரதேசங்களிற்கு இடம் பெயர்ந்து வந்த மலையக தோட்ட தொழிலாளர்களின் புனர்வாழ்வு பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்.
1983 ஆடிக் கலவரத்தின் பின்பு TELO இயக்கத்தில் அவர் தன்னை இணைத்துக் கொண்டார். TELO இன் முக்கிய பொறுப்புகளில் இருந்த அவரின் சில நண்பர்கள் அங்கு மக்களின் அரசியலையும் ஜனநாயகத்தையும் கொண்டுவரக் கூடிய சூழல் இருப்பதாகவும், அவரைப் போன்றவர்கள் உள்ளே வருவதன் மூலம் TELO வை ஒரு உண்மையான விடுதலை இயக்கமாக மாற்ற முடியும் என கேட்டுக் கொண்டனர். தேசியம் என்பது எப்போதும் ஒரு முதலாளித்துவக் கோரிக்கையே என்பதனால் அதன் பிற்போக்கு அம்சங்களுடனேயே அதற்கான போராட்டங்களை கொண்டு செல்ல முடியும் என்பதனாலும், கலவரங்களின் காரணமாக கனன்று எழுந்த எழுச்சியை ஒரு வரையறைக்குள் கொண்டு வர வேண்டும் என்பதனாலும் அவர் TELO இல் இணைந்து கொண்டதாக பிற்காலங்களில் கூறியுள்ளார்.
TELO இயக்கம் இன்னொரு புலியாகவும், சிறிசபாரத்தினம் மற்றுமொரு பிரபாகரனுமாகவே இருந்தனர். எனினும் மனோ மாஸ்டர் அங்கும் மாக்சிய சிந்தனைகளை விதைத்தார். பெண்களும், ஆண்களுமாக நாற்பது பேர் வரையிலான ஒரு குழுவினரை தமிழ் நாட்டிற்கு அனுப்பி வைத்து மாக்சிய வகுப்பு ஒன்றை தொடங்கி வைத்தார். வி. பொன்னம்பலம் போன்ற பொதுவுடமைவாதிகள் அங்கு வகுப்புகளை நடத்தினர். அவரின் முயற்சியால் TELOவிற்குள்ளும் மத்திய குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. RAWவின் செல்லப் பிள்ளையான சிறிசபாரத்தினம் அதனை மறுத்தார். ராணுவப் பொறுப்பாளராக இருந்த ரமேசும், சபாரத்தினத்திற்கு அடுத்த நிலையிலிருந்த சுதனும் புலிகளின் உதவியுடன் சபாரத்தினத்தை கொலை செய்ய முயன்றதாக TELOவினரால் கைது செய்யப்பட்டனர். இதன் காரணமாக TELO இயக்கம் பிளவுபட்டது.
மனோ மாஸ்ரருடன் ஈழத்திலே வேலை செய்தவர்களும், அரசியல் வகுப்புகளிற்கு சென்றவர்களும் விலகி ஒரு அரசியல் அமைப்பினை கட்ட முயன்றனர். அதற்கான வேலைகளிற்காக 1984ம் ஆண்டு இலங்கை வந்தார். அவருடைய குழுவிலிருந்த பெண் தோழி ஒருவர் கொடுத்திருந்த கடிதத்தினை அவரின் பெற்றோரிடம் கொடுப்பதற்காக பருத்தித்துறை சென்ற போது, பாசிச கொலை வெறியர்களான கிட்டு (புலிகளின் யாழ் மாவட்ட பொறுப்பாளர்), ரவி (பருத்தித்துறை பொறுப்பாளர்) ஆகியோரால் வழி மறிக்கப்பட்டு, அவரும் அவருடன் TELO விலிருந்து வெளியேறியவர்களும் புலிகளுடன் சேர வேண்டும் என பேரம் பேசினர். மரணத்தின் கரிய நிழல்கள் சூழ்ந்து நின்ற அந்த இறுதி வேளையிலும், மனம் தளராமல் மறுத்து நின்றார். போராட்டம் என்பதனை கொலைகள் என்றாக்கிய, அந்த மக்கள் விரோத பாசிஸ்ட்டுக்களினால் படு கொலை செய்யப்பட்டார். ஓங்கி வளர்ந்திருந்த பனை மரங்களின் கீழே வாழ்நாள் முழுவதும் மக்களின் விடுதலைக்காக தன்னை முற்று முழுதாக அர்ப்பணித்த மாமனிதனின் உடல் வீழ்த்தப்பட்டிருந்தது. இனி வரும் காலங்களில் ஈழமக்களின் வாழ்வும் இக் கொலைகாரர்களால் அழியப் போகின்றது என்பதன் குறியீடாக அவனது உடல் கடற்காற்று தின்ற அந்த மண்ணிலே வீழ்ந்து கிடந்தது.
போராட்டத் தலைவர்கள் என்றும், தளபதிகள் என்றும் தமக்கு தாமே பட்டம் சூட்டிக் கொண்ட இந்தக் கோழைகள், அவனது மரணத்திற்கு உரிமை கோரவேயில்லை. துரோகிகள், கள்ளர்கள் என எல்லோரையும் கொலை செய்த இந்த ழூடர்களால் அவனை நோக்கி ஒரு குற்றச்சாட்டைத் தானும் வைக்க முடியவில்லை. அரசியல் என்பதன் ஆரம்ப எழுத்துக் கூட தெரியாமல் ஈழமக்களின் போராட்டத்தினை முள்ளிவாய்க்காலில் மூழ்கடித்த இக் கொலையாளிகள், இன்று விடுதலையின் பேரால் அப்பாவி சாதாரண மக்களை மிரட்டி சேர்த்த சொத்துகளிற்காக தமக்குள் மோதுகின்றனர். இனவெறி பாசிச அரசுடன் இணைந்து தமிழ் மக்களிற்காக உழைக்கப் போவதாக கதை விடுகின்றனர்.
ஆனால் இட்ட காட்டின் இடையே செங்கழனிப் பூக்கள் சிலிர்த்து எழுவதனைப் போன்று இன்றைய அராஜயகச் சூழலிலும் மனோ மாஸ்டரினால் ஈழப் போராட்டத்தில் விதைக்கப் பட்ட மாக்சிய சிந்தனைகள் மீளவும் எழுகின்றன.
விஜயகுமாரன்
28/11/2010