01242022தி
Last updateஞா, 16 ஜன 2022 1pm

மகிந்த எதைக் கண்டு அஞ்சுவதால், தன் கையில் நூல்களைக் கட்டுகின்றார்?

அச்சம் சார்ந்த நேர்த்திக்கடன் தான், மகிந்த கையில் உள்ள நூல்கள். தன்னை தற்காத்துக்கொள்ள, கடவுளிடம் வேண்டுதல்கள் வைப்பதன் மூலமான பாசிசம் நம்பிக்கையாக வெளிப்படுகின்றது. இப்படி பாசிசம் கடவுள் மூலமும் தற்காப்பு பெற்றுச் செழிக்க விழைகின்றது. இதுவும் மகிந்த சிந்தனை தான். மக்களுக்கு எதிராகக் குற்றங்களை இழைத்தபடி, கடவுளிடம் தற்காப்புக் கோரிக்கை வைப்பதுமாக, ஒரே நேர்கோட்டில் பாசிசம் தன் கோழைத்தனத்தை மூடிமறைத்தபடி பயணிக்கின்றது.

 

கோழைத்தனத்தின் வெளிப்பாடுதான் பாசிசம். அச்சம் தான் தலைகால் தெரியாத ஒடுக்குமுறையைத் திணிக்கின்றது. இந்தவகையில் மகிந்த பாசிசம் கோமாளித்தனமாகவே மாறி, அங்குமிங்குமாக அலுக்கோசு வேலை செய்கின்றது. வடக்கு கிழக்கு தமிழ்மக்களிடம் தாங்கள் அவர்களைக் கொல்லவில்லை என்று கூறி, இராணுவமும், இராணுவத்தின் துணையுடனும் கையெழுத்து வேட்டை நடத்துகின்றனர்.

ஒரு சிவில் சமூகம் சுதந்திரமாக எந்த முடிவையும் எடுக்கமுடியாத இராணுவ கண்காணிப்பின் கீழான ஒடுக்குமுறைதான் இதுவும்;. தன் குற்றங்களை இப்படி அச்சுறுத்தி மூடிமறைக்க முனையும் பாசிசக் கூத்தும், இதை சுற்றிய வக்கிரங்களும் இதற்கு எதிரான அரசியல் வன்முறைக்கு தொடர்ந்து வழிகாட்டுகின்றது. வெளிப்படையான சுதந்திரமான தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க முடியாத இடைவெளியில், தங்கள் சுதந்திரமான எதிர்வினையை பிரயோகிக்க முடியாத நிலையில், தனிநபர் பயங்கரவாதம் மூலம் அதை வெளிப்படுத்தக் கோருகின்றது அரச பாசிசம்.

மகிந்த குடும்ப சர்வாதிகாரம் நிறுவியுள்ள பாசிசத்துக்கு ஏற்ப கோமாளிகளாக வடக்கு இராணுவத் தளபதி முதல் கோயபல்ஸ் டக்கிளஸ் வரை மகிந்தாவின் கடவுள் நம்பிக்கை போல் விதவிதமாக அறிக்கைகள் விடுகின்றனர். சுதந்திரமற்ற மக்களிடம் கையெழுத்து வேட்டையை இராணுவத்தின் துணையுடன் நடத்திய அதேநாள், யாழ்.மாவட்டப் படைகளின் கட்டளைத்தளபதி மகிந்த ஹத்துருசிங்க "எமது இராணுவத்திலும் சில தவறானவர்கள் இருந்திருக்கிறார்கள் தான். ஆனால் இன்று அவ்வாறானவர்கள் இல்லை. என்னுடைய பொறுப்பின் கீழ் எந்த இராணுவத்தினரும் தவறிழைக்க கூடாது. அப்படி ஏதாவது சம்பவங்கள் நடந்தால் எனக்கு எந்த நேரத்திலும் தெரியப்படுத்தலாம்." என்கின்றார். கையெழுத்து வேட்டையை இராணுவத்தின் துணையுடன் நடத்தும் இந்த பாசிசக் கோமாளியின், மேற்கூறிய கூற்று பாசிசத்தை ஜனநாயகமாக காட்டமுனைகின்றது. இந்த பாசிச கோமாளிகள் தங்களின் ஒட்டுமொத்த ஒடுக்குமுறையை, சில தனிநபர்கள் மேல் பழிபோட்டு குற்றஞ்சாட்டியபடி ஒட்டு மொத்தமாக மக்களை மிரட்டி அடிபணிய வைக்கின்றனர்.

இராணுவம் குற்றம் இழைக்கவில்லை என்று இராணுவ கண்காணிப்பின் கீழான அச்சத்தை பயன்படுத்தியபடி கையெழுத்து வேட்டை நடத்தும் நிலையில், யாழ்.மாவட்டப் படைகளின் கட்டளைத்தளபதி மகிந்த ஹத்துருசிங்க பாசிச உபதேசம் செய்கின்றார். இதே போல் தான் இந்த 25 வருடமாக பேரினவாதத்துடன் கூடிக் கூத்தாடும் கொள்கையை மட்டும் அடிப்படையாக கொண்ட டக்கிளஸ் "இன்று அனேகமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது" என்கின்றார். இப்படி கையெழுத்து வாங்குவது தான், ஜனநாயகம் என்பது தான் அவரின் 25 வருட அனுபவம்;.

போர்க்குற்றச்சாட்டு எதிலும் தாமும், தமது அரசும் ஈடுபடவில்லை என்று கோயபல்ஸ் பாணியில் டக்கிளஸ் புளுகிய இரு நாட்களில், கையெழுத்து வாங்குகின்ற பாசிசக் கூத்தை அரங்கேற்றுகின்றனர். இப்படி "இன்று அனேகமான பிரச்சினைகளுக்குத் தீர்வு" காண்கின்ற இவர்களின் ஜனநாயகத்திற்கு ஏற்ற அலுக்கோசு மந்திரி தான் இந்த டக்கிளஸ். இவர்களின் பாசிச "ஜனநாயகத்தில்" சிவில் சமூக கட்டமைப்பு என அனைத்தும், அடக்குமுறைக்கு கீழ் வாழ்வதில் தான் இவர்கள் கோரும் தீர்வுகள். இக்காலத்தில் தான் வடக்கு கிழக்கை சொந்த இடமாக கொண்ட, ஆனால் வெளிநாட்டு பிரஜாவுரிமை பெற்றவர்கள் வடக்கு கிழக்கு செல்வதாயின் சிறப்பு அனுமதி பெறவேண்டும் என்று திடீரென அறிவிக்கப்படுகின்றது.

இப்படித்தான் வடக்கு கிழக்கில் சிவில் கட்டமைப்பு என்ற பெயரால், தனிப் பிரதேசமாக இலங்கையில் பிரிந்து போன ஒரு தனிநாடாக வடக்குகிழக்கை மாற்றி அரசு இயங்குகின்றது. யுத்தத்தின் பின் வடக்கு கிழக்கில் நிலவும் அசாதாரணமான சூழல், மிகத் தெளிவாக அரசின் ஒடுக்குமுறையின் கீழ் வாழத் தயாரற்ற மக்கள் அங்கு வாழ்வதை இது பறைசாற்றுகின்றது.

இந்த அரசு எதைக் கண்டு பயப்படுகின்றது? இதற்கு தலைமை தாங்கும் மகிந்த, எதைக் கண்டு அஞ்சி தன் கையில் நூல்களைக் கட்டுகின்றார். தமிழ்ச்செல்வன் காட்டிய பாசிசப் பல்லுப் போலே, மகிந்தாவின் கையில் நூல்கள் அனைத்தும் பாசிசத்தின் மொத்த வெளிப்பாட்டால் வெளிப்படும் தற்பாதுகாப்பு மீதான நம்பிக்கைக் காப்புகளாகும்.

தங்கள் பாசிசத்துக்கு எதிரான எதிர்வினைகள், தங்கள் குற்றங்களை மூடிமறைக்க இராணுவ கண்காணிப்பின் கீழான சிவில் சமூக கட்டமைப்பு, படிப்படியாக அங்கு செல்பவர்கள் மேலான கண்காணிப்பாக மாறுகின்றது. இது நாளை அங்கிருந்து வெளிச்செல்பவர்கள் மேலான கண்காணிப்பாக மாறினாலும் ஆச்சரியம் இல்லை. இன்று எந்த நிபந்தனையின் கீழ் வடக்கு கிழக்கு கண்காணிக்கப்படுகின்றதோ, அதே நிபந்தனையின் கீழ் அவர்கள் வெளிச்செல்வதும் கூட பாசிசத்தை அச்சமூட்டுகின்ற அளவுக்கு தமிழ்மக்கள் அங்கு ஒடுக்கப்படுகின்றனர். அதன் வெளிப்பாடு தான் வடக்கு கிழக்கு செல்பவர்கள் மேலான சிறப்பு கண்காணிப்பு முதல் மகிந்தா தன் கையில் கட்டும் நூல்கள் வரை சொல்லுகின்ற அரசியல் செய்தியாகும்;.

பி.இரயாகரன்

09.05.2011


பி.இரயாகரன் - சமர்