புளொட்டின் வளர்ச்சியில் தோழர் தங்கராசாவின் பாத்திரம் 83 ஆகஸ்ட்

புளொட்டினது மக்கள் அமைப்பினை கட்டியெழுப்பும் முகமாக உறுப்பினர்களை அரசியல் ரீதியில் வளர்த்தல், பயிற்சியளித்தல் என்பன ஆரம்பமாயின. இதற்காக தோழர் தங்கராசா வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் அனுப்பி வைக்கப்பட்டார். தோழர் தங்கராசா மலையகத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். இடதுசாரித் தத்துவத்தில் நன்கு பரிச்சயமான ஒருவர். மலையகத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த தோழர் தங்கராசா ஜே.வி.பியின் ஆரம்ப காலகட்டங்களில் அவர்களுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தவர்.

 

 

 

(ஜே.வி.பி Rohana Wijewera)

மலையகத்தில் தொடர்ச்சியாக ஏற்பட்ட இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்ட இவர் பின்பு வவுனியாவில் குடியேறினார். தோழர் தங்கராசாவின் யாழ்ப்பாண வருகையை தொடர்ந்து அரசியல் பாசறைகளை நடத்துதல், கிராமங்கள் தோறும் கருத்தரங்குகளை நடத்துதல் என்பன ஆரம்பமாயின. தொடர்ச்சியாக நடைபெற்ற அரசியல் பாசறைகளுக்கூடாக அதில் பயிற்சி பெற்றவர்கள் தத்தமது பிரதேசங்களுக்குச் சென்று மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தல், அவர்களை அரசியல் மயப்படுத்தல், அமைப்புகளாக்குதல், புதிய அங்கத்தவர்களை இணைத்தல் போன்ற செயற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டனர். மக்கள் மத்தியில் சென்று எவ்வாறு பிரச்சாரம் செய்வது, மக்களை எப்படி அவர்கள் முகம் கொடுக்கும் பிரச்சனைகளுக்கூடாக அணுகுவது, அவர்களை எப்படி வென்றெடுத்து எமது பக்கம் அணிதிரட்டுவது, என்றெல்லாம் தோழர் தங்கராசா தனது பாசறைகளில் தெளிவுபடுத்துவார். அத்துடன் மகளிர் அமைப்பு, மாணவர் அமைப்பு, தொழிற்சங்க அமைப்பு (கடற் தொழிலாளர் அமைப்பு, நகர சுத்தித் தொழிலாளர் அமைப்பு, கூலித் தொழிலாளர் அமைப்பு, சுருட்டுத் தொழிலாளர் அமைப்பு, ஆட்டோ நடத்துனர் அமைப்பு), விவசாயிகள் அமைப்பு போன்றவற்றை உருவாக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதோடு மட்டுமல்லாமல் அவற்றை நடைமுறைப்படுத்தும் செயற்பாட்டிலும் தோழர் தங்கராசா ஈடுபட்டார். மகளிருக்கு அரசியல் பயிற்சியளித்து அவர்களை தனித்துவமாக செயற்படுமாறு உற்சாகமளித்தார். ஆரம்பகாலங்களில் மகளிர் அமைப்புக்குப் பொறுப்பாக செல்வி நியமிக்கப்பட்டு அதன் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்து வந்தார்.

 

(சேமமடு செல்வநிதி தியாகராசா – புலிகளால் ஆகஸ்ட் 30, 1991 கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர்)

செல்வியுடன் இணைந்து நந்தா, வனிதா ,யசோ (தேவிகா தயாபரன்) கலா, செல்வம் போன்றோர் செயற்பட்டு வந்தனர்.

யசோ (தேவிகா தயாபரன்) (மட்டக்களப்பு உழைக்கும் மகளிர் அபிவிருத்தி நிறுவனம் நிறைவேற்றுப் பணிப்பாளர் Feb  2010 இல் இருதய நோயினால் காலமானார்)

 

 

மாணவர் அமைப்புக்குப் பொறுப்பாக அசோக் செயற்பட்ட அதேவேளை அவருடன் இணைந்து தீபநேசன், ஹப்பி,

(விமலேஸ்வரன்)

விமலேஸ்வரன், அர்ச்சுனா என்போர் செயற்பட்டு வந்தனர். தொழிற்சங்க அமைப்புக்கு பொறுப்பாக நீர்வேலி ராஜன் செயற்பட்டு வந்தார். சுரேன், கண்ணாடி நாதன், சிறி (கோவிந்தன்) என்போர் தொழிற்சங்க நடவடிக்கைகளில் பின்னர் ராஜனுடன் இணைந்து செயற்பட்டு வந்தனர். புளொட், தளத்தில் பல்வேறுபட்ட அமைப்பு வடிவங்களில் பலம்பெற்று விளங்கியதற்கு தோழர் தங்கராசாவின் அரசியற்பயிற்சியும் வேலைத்திட்டங்களும் தான் பிரதான பங்கை வகித்தது எனலாம். வெறுமனே ஆயுதங்களையும் இராணுவ நடவடிக்கைகளையும் வைத்துக் கொண்டு ஈழவிடுதலைப் போராட்டம் நடத்தலாம் என்று புளொட்டுக்குள் இருந்த நிலையை மாற்றி இத்தகைய அமைப்புக்களையெல்லாம் உருவாக்குவதற்கு மூலகர்த்தாவாக இருந்தது மட்டுமல்லாது அவற்றை வளர்ப்பதற்கு நடைமுறையில் சரியாக வழிகாட்டிய ஒரே நபரும் தோழர் தங்கராசாவே.

நான் புளொட்டில் இணையும் போது புளொட்டின் கொள்கை என்னவென்றெல்லாம் கேட்டது கிடையாது. அப்படி அறிந்து கொண்டுதான் செயற்பட வேண்டும் என்று நான் நினைக்கவும் இல்லை. தோழர் தங்கராசாவின் அரசியல் பாசறைகள், கருத்தரங்குகளில் பங்குபற்றியதன் மூலமே குறைந்தபட்சம் புளொட்டினது கொள்கை என்ன என்பதை அறிய முடிந்தது. (இது நடைமுறையில் எந்தளவிற்கு பின்பற்றப்பட்டது என்பது வேறு விடயம். இது பற்றிப் பின்னால் பார்ப்போம்).

இன ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டத்தில் சிங்கள-தமிழ் முற்போக்கு சக்திகளின், உழைக்கும் மக்களின் ஒற்றுமை, சிங்கள முற்போக்கு சக்திகளுடனும் உழைக்கும் மக்களுடனும் இணைந்து பேரினவாத அரசுக்கெதிராக போராடுதல், சர்வதேச ரீதியில் ஒடுக்கப்பட்ட, உழைக்கும் மக்களின் போராட்டத்துடன் கைகோர்த்தல், சிங்கள – தமிழ் உழைக்கும் மக்களுக்கிடையேயான ஜக்கியப்பட்ட போராட்டமில்லையேல் தமிழ்மக்களின் விடுதலைப் போராட்டம் வெற்றியடையப் போவதில்லை என்ற நிலைப்பாடு அனைத்துமே முற்போக்கானதும் சரியானதுமாகும். இதையே தோழர் தங்கராசா தனது அரசியல் பாசறைகள், கருத்தரங்குகளில் மிகவும் எளிமையாகவும், தெளிவாகவும் எடுத்துச் சொல்வதோடு மட்டுமல்லாமல், இன்று இருக்கின்ற பழைய (தோழரின் சொல்லில் சொல்வதானால் "உழுத்துப் போன" பெருமளவுக்கு நிலப்பிரபுத்துவ எச்சசொச்சங்களுடன் கூடிய) சமூக அமைப்பைப் பற்றிய ஆழமான, விஞ்ஞானரீதியான விளக்கங்களுடன் எடுத்துச் சொல்வதுடன், அமையப்போகும் புதிய சமுதாய அமைப்பைப்பற்றியும் தெளிவாகக் குறிப்பிடுவார். இவரது பேச்சுத்திறன், அதன் மூலம் எவரையும் தன்பக்கம் கவர்ந்திழுக்கும் பண்பு, சமூக அமைப்பைப்பற்றியும், சமுதாயப் பிரச்சனைகளைப்பற்றியும் எளிமையாக எடுத்துரைக்கும் இயல்பு என்பன எவரையும் கவர்ந்தது போலவே என்னையும் கவர்ந்தது. தோழர் தங்கராசா ஒரு சிறந்த அரசியல்வாதி, ஒரு சிறந்த பேச்சாளன், ஒரு சிறந்த கிளர்ச்சியாளன் என்று கூடச் சொல்லலாம். (புளொட்டின் சிதைவுக்குப் பின்னர் தோழர் தங்கராசா இந்தியாவில் இருந்து இலங்கை திரும்பி மலையகத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்தார். 2010 ம் ஆண்டு மாரடைப்பால் காலமானார்).

(தோழர் தங்கராசா)

சுந்தரம் படுகொலை: " புதியபாதை" யின் முடிவல்ல.

1982 ஜனவரி 02ம் திகதி யாழ்ப்பாணம் சித்திரா அச்சகத்தில் "புதியபாதை" பத்திரிகையின் அச்சுவேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் "புதியபாதையின்" ஆசிரியர் சுந்தரம்(வலிகாமம் மேற்கு, சுழிபுரத்தை பிறப்பிடமாகக் கொண்ட சதாசிவம் சிவசண்முகமூர்த்தி) தமிழீழ விடுதலைப் புலிகளால் கோழைத்தனமாக பின்னாலிருந்து சுட்டுக் கொல்லப்பட்டார். சுந்தரத்தின் கொலையின் பின்னரே தமிழீழ தேசிய விடுதலைக்காக போராடுவதாக கூறிய தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழ தேசிய விடுதலைக்காக போராடும் ஏனைய குழுக்களை "எதிரிகளாக" பகிங்கரமாக பிரகடனப்படுத்தி அரசியல் படுகொலைகளை நடத்திய "புதிய அத்தியாயம்" ஒன்று ஆரம்பித்தது.. சுந்தரத்தின் படுகொலையின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் இரண்டு விடயங்களைத் தெளிவுபடுத்தியிருந்தனர்.

("புதியபாதையின்" ஆசிரியர் சுந்தரம்)

(1) தமிழ்மக்களின் போராட்டத்தை முழுமையாக குத்தகைக்கு எடுத்திருப்பது தமிழீழ விடுதலைப் புலிகள் தான்.

(2) ஒரு மனிதனுடைய எந்தவிதமான அடிப்படை ஜனநாயக உரிமைகளையும் (பேச்சுச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம்) தமிழீழ விடுதலைப் புலிகள் மதிக்கப் போவதில்லை.

சுந்தரத்தின் படுகொலையின் பின் "புதியபாதை" யை தொடர்ந்து வெளிக்கொணர்வதில் புளொட் பல்வேறு நெருக்கடிகளையும் முகம் கொடுக்க நேர்ந்தது. சுந்தரத்தினுடைய பணியை யார் தொடர்வது என்பது ஒரு கேள்வியாக எழுந்தது. அரசபடைகளின் அச்சகங்கள் மீதான கண்காணிப்பு, அச்சகங்களை சுற்றிவளைத்து சோதனையிடுதல் ஒருபுறமும், தமிழீழ விடுதலைப் புலிகளின் கொலை மிரட்டல் மறுபுறமுமாக இருந்ததால் அன்றைய நிலையில் "புதியபாதை" யின் தொடர்ச்சியான வருகை தடைப்பட்டிருந்தது. 1983 யூலை இன அழிப்பைத் தொடர்ந்து " புதியபாதை" யின் தேவை உணரப்பட்டதால் மீண்டும் " புதியபாதை" யாழ்ப்பாணத்தில் அச்சேறியது. தமிழீழ விடுதலைப் புலிகள் சுந்தரத்தை கொலை செய்வதன் மூலம் எதைச் சாதிக்க நினைத்தார்களோ அது நடைபெறவில்லை. 1983 யூலைக்கு பின் பல்வேறு நெருக்கடிகளுக்கும் முகம் கொடுத்து

" புதியபாதை" யை வெளிக்கொண்டு வருவதில் முன்னின்று உழைத்தவர்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழக சத்தியமூர்த்தி, கண்ணாடிச் சந்திரன், திருகோணமலை பார்த்தன், யாழ்ப்பாண பல்கலைக்கழக திருமலை கேதீஸ்வரன், கொக்குவில் கிருபா ஆகியோர் ஆவர்.

(கேதீஸ்வரனும் கொக்குவில் கிருபாகரனும் 1984 ஏப்ரல் ஆரியகுளத்தருகே இராணுவத்தால் சுடப்பட்டு அவ்விடத்திலேயே எரியூட்டப்பட்டார்கள்),

திருகோணமலை பார்த்தன் (ஜெயச்சந்திரன் ) மட்டக்களப்பு போலிஸ் நிலையத்தில் துப்பாக்கியினால் தற்கொலை செய்தவர்),

திருகோணமலை செல்வன்(கிருபா- புளொட்டினால் மூதூரில் படுகொலை செய்யப்பட்டவர் - இடது பக்கத்தில்)

 

மத்தியகுழு உறுப்பினரான ராமதாஸ், புளொட்டின் நீண்டகால உறுப்பினரான உரும்பராய் ராசா, குரு(கல்லுவம்) போன்றோரும் "புதியபாதை" வெளிவர பல்வேறு உதவிகளைச் செய்தவர்களாவர். இந்தக் காலப்பகுதியில் காந்தன் (ரகுமான் ஜான்) தள அரசியலுக்கு பொறுப்பாகவும் பார்த்தன் (ஜெயச்சந்திரன்) இராணுவத்துக்கு பொறுப்பாகவும் செயல்பட்டனர். அன்றைய காலகட்டத்தில் அரசபடைகளின் அச்சகங்கள் மீதான தேடுதல் நடவடிக்கைகள், தமிழீழ விடுதலைப் புலிகளின் கொலை மிரட்டல்கள் தொடர்ந்து கொண்டிருந்ததால் பிற்பட்ட காலங்களில் வீடுகளில் வைத்தே "புதியபாதை" அச்சாகிக் கொண்டிருந்தது. 1984 மே வரை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த "புதியபாதை" நெருக்கடிகள் காரணமாக (முன்னணித் தோழர்களின் கைதுகள், மரணங்கள்) பின்பு சென்னையில் அச்சடிக்கப்பட்டது.

 

06/05/2011

(தொடரும்)

 

1. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 1

2. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 2