01242022தி
Last updateஞா, 16 ஜன 2022 1pm

ஓசாமா பின்லாடன் மரணம், அமெரிக்காவின் கையாலாகாத்தனத்தின் வெளிப்பாடு

இங்கு ஓசாமா பின்லாடன் வேட்டை, அமெரிக்காவின் மற்றொரு தோல்வி தான். 10 வருடங்கள் அமெரிக்காவின் அதியுச்ச பலத்தையும், அதன் உலக மேலாதிக்கத்தையும் எள்ளிநகையாடி வந்தது. அன்று அமெரிக்கா மீதான தாக்குதல் எப்படியோ, அப்படித்தான் 10 வருடங்களாக அமெரிக்கா ஏகாதிபத்தியம் மண் கவ்வி வந்தது.

 

அமெரிக்காவின் மூக்கில் தடியை ஓட்டி ஓசாமா பின்லாடன் ஆடிய ஆட்டம், அமெரிக்கா பட்ட வேதனையும், ஏகாதிபத்திய நுகத்தடியிலான உலக ஒழுங்கிலான போலித்தனத்தை தோலுரித்து வந்தது. தன் மூக்கு உடைந்ததை மூடிமறைத்துக் கொண்டு, பின்லாடனைக் கொன்ற நிகழ்வை தன் வெற்றியாக அமெரிக்கா பீற்றிக் கொள்கின்றது. ஆம் 10 வருடம் கடந்த நிலையில், கொல்லப்பட்டுள்ள ஓசாமா பின்லாடன் யார்?

ருசிய ஏகாதியத்திய முகாமுக்கு எதிராக, அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய முகாம் தன் வளர்ப்புப்பிள்ளையாக தத்தெடுத்து வளர்க்கப்பட்டவன் தான் பின்லாடன்;;. ஏகாதிபத்திய முகாங்களுக்கு இடையிலான முரண்பாடை தீர்க்கவும், கம்யூனிசத்தை தழுவி போராடும் மக்களைக் கருவறுக்கவும், பின்லாடன்; மூலம் இஸ்லாமிய அடிப்படைக் கோட்பாட்டை அமெரிக்கா தான் அன்று உற்பத்தியாக்கியது. இதன் மூலம் தனிநபர் இஸ்லாமிய பயங்கரவாதத்தை, அமெரிக்கா தன் உலக ஒழுங்குக்கு ஏற்ப நிறுவியது. அப்போது தான் பின்லாடன்; என்ற பணக்காரன் தத்தெடுக்கப்பட்டான். இதன் பின்னணியில் தான், உருவான இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் கொள்கைக்கு அமைய, ஓசாமா பின்லாடன்; அமெரிக்காவின் இதயத்தில் ஆழமாகக் குத்தினான். தங்களால் வளர்க்கப்பட்டு தங்களையே குத்திய இந்த பின்லாடனைத் தேடி 10 வருடங்களாக, அமெரிக்கா உலகெங்கும் உள்ள மக்களை வேட்டையாடியது.

ஒன்று இரண்டல்ல, பல இலட்சம் மக்களை அமெரிக்கா கொன்று குவித்துள்ளது. இதன் பெயரில் உலகெங்கும் பல ஆக்கிரமிப்புகளையும், அத்துமீறல்களையும் அது செய்துள்ளது. புதிய உலக ஒழுங்கையும், தனக்குக் கட்டுப்படாத நாடுகள் மீதான அமெரிக்கப் பயங்கரவாதத்தையும், உலகெங்கும் அது தொடர்ந்து ஏவி வருகின்றது. இதுதான் ஓசாமா பின்லாடன்; கதையின் பின்னுள்ள மற்றொரு பக்கம்.

உலகின் எண்ணை வளங்கள், கனிம வளங்கள் இதன் பெயரில் சூறையாடப்பட்டது. இதன் மூலம் உலகில் மிகப்பெரிய பணக்காரக் கும்பல் அமெரிக்காவை மையப்படுத்தி உலகெங்கும் உருவானது. மக்கள் போராட்டங்களுக்குப் பதில், தனிநபர் பயங்கரவாதம் உசுப்பி விடப்பட்டது.

இதன் மூலம் தனிநபர் பயங்கரவாதம் மீதான அமெரிக்கப் பயங்கரவாதமே, உலக ஒழுங்கின் மையமான அச்சாகியுள்ளது. அமெரிக்கப் பயங்கரவாதத்திற்கு எதிரான தனிநபர் பயங்கரவாதம் சிறியளவில் மக்களை பலியிடும் போது, அமெரிக்கப் பயங்கரவாதமோ பல ஆயிரம் மடங்காக மக்களைக் கொன்று குவிக்கின்றது. இன்றைய ஏகாதிபத்திய உலக ஒழுங்கு இப்படித்தான் எதிரியை உருவாக்கி, அதைக்கொண்டு தன்னை தக்க வைத்து ஒருங்கிணைக்கின்;றது.

உலகில் எந்த நீதிக்கும் உட்படாத ஏகாதிபத்தியத் தனம், தங்கள் பொருளாதார நலன் சார்ந்த உலக ஒழுங்கைக் கட்டிப் பாதுகாக்க லட்சக்கணக்கான மக்களைத் தொடர்ந்து கொன்று குவித்து வருகின்றது.

இதன் பின்னணியில் தனிநபர் பயங்கரவாதம் விரிவாகி வருகின்றது. ஓசாமா பின்லாடன் கொல்லப்பட்டதால் இது முடிவுக்கு வந்துவிடாது. முடிவுக்கு வரக்கூடிய எல்லையில் ஏகாதிபத்திய உலக ஒழுங்கு இல்லை. ஓசாமா பின்லாடன்; மரணம், அமெரிக்காவில் ஆளும் வர்க்கத்துக்கு தலைமை தாங்கும் கறுப்பு ஆக்கிரமிப்பாளனின், தேர்தல் வெற்றிக்கு மட்டும் தான் உதவும்.

உலகளவில் தனிநபர் பயங்கரவாதம் ஓசாமா பின்லாடன்;; மரணத்தால் இன்னும் கூர்மையடைகின்ற தன்மையும், பல புதிய குழுக்களையும் உருவாக்கும். தனிநபர் பயங்கரவாதத்தின் ஊற்று மூலம், தொடர்ந்தும் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய பயங்கரவாதத்தின் மீது தான் அடிப்படையாக உள்ளது. இது பல ஓசாமா பின்லாடன்;களை தொடர்ந்தும் உற்பத்தி செய்கின்றது. இதன் மூலம் உலக மக்களை அடக்கியாளவும், குறுகிய தேசிய வெறியை உற்பத்தி செய்யவும் தான், தனிநபர் பயங்கரவாதத்துக்கு எதிரான அமெரிக்கப் பயங்கரவாதப் போர் உதவுகின்றது. உலகளாவிய மூலதனத்தின் கொள்ளை தான், இதன் பின்னுள்ள உண்மையான அமெரிக்க நலனாகும்.

பி.இரயாகரன்

02.05.2011


பி.இரயாகரன் - சமர்