யுத்தத்தில் காயமடைந்தவர்கள், சந்திக்கும் தொடர் அவலங்களோ எல்லையற்றது. எதையும் கண்டுகொள்ளாத சமூகத்தில், தொடர்ந்து நாம் வாழ்கின்றோம். இங்கு தனிமனிதர்களோ சிதைந்து போகின்றார்கள். சமூக ஆதாரமின்றி, அரவணைப்பின்றி, வெளிறிப்போன உலகத்தில் நின்று, இலக்கற்று வெறித்துப் பார்க்கின்றனர். வெற்றுவேட்டாக போன மனிதாபிமானம், குறுகிப்போன அரசியல் இலக்குகள், இவைகளைக் கொண்டு பிழைத்து வாழ சமூகம் பற்றிய புலம்பல்கள், இப்படி மக்கள் பெயரில் எத்தனையோ பித்தலாட்டங்கள்.

 

இவற்றைக் கடந்து எதார்த்தம் எம்மை அதிரவைக்கின்றது. அண்மையில் எமது தோழர் ஒருவர் தன் தங்கை சந்திக்கின்ற துயரத்தையும், தங்கள் இயலாமையையும் வெளிப்படுத்திய போது, அவர் அன்றே இறந்திருக்கலாம் என்றார். இன்று இறந்தாலும் கூட பரவாயில்லை என்றார். நோயாளி மட்டுமல்ல, அவர்களின் குடும்ப உறுப்பினர்களே இந்த மனநிலையில் தான் தொடர்ந்து வாழ்கின்றனர். வாழ, வாழவைக்க எடுக்கும் முயற்சிகளுக்கு, இந்தச் சமூகமும், புலியும், அரசும் கைகொடுக்கவிலலை. சமூக ஆதாரம் தான், இதை உணர்வுபூர்வமாக தாங்கிக் கொள்ள முடியும். ஆனால் அதுவோ மலடாக்கப்பட்டு இருக்கின்றது. இந்த வெற்றிடத்தில் எம்மால் கூட வழிகாட்ட முடியவில்லை.

சமூகத்தின் பின்தங்கிய கண்ணோட்டம், இதை மேலும் கூர்மையாக்கி சுமையாக்குகின்றது. பண்பாடு, கலாச்சாரம், சடங்குகள், பணம் சார்ந்த லும்பன்தனமானதான உலகக் கண்ணோட்டம், குடும்பத்தை விரக்தியின் எல்லையில் முடிவுகளை காணத் தூண்டுகின்றது. களைத்துப் போகின்றனர்.

உண்மையில் உடற் காயம் மனக் காயம் இரண்டும் ஒருங்கே இணைந்து நோயாளிகளை கொல்லாமல் கொல்லுகின்றது. தனித்துவிடப்பட்ட குடும்பத்தினர் கூட, இந்த மனநிலையில் தான் வாழ்கின்றனர். என்னதான் செய்ய முடியும் என்ற விரக்தி.

யுத்தத்தை நடத்திய அரசு, பாரியளவில் உடல் மனக் காயங்களை ஏற்படுத்திய அரசு, அதற்கென்று சிறப்புச் சிகிச்சைகளைக் கூட வழங்கவில்லை. எப்படி தமிழ் மக்களின் இனப் பிரச்சனைக்கு தீர்வை வழங்கவில்லையோ, அப்படித்தான் யுத்த அவலங்களுக்கு பொறுப்பெடுத்து அதை தீர்க்க முனையவில்லை.

தன் போர்க்குற்றத்தை மூடிமறைக்க, அரசு அல்லாத தன்னார்வ நிறுவனங்களின் உதவியைக் கூட தடுத்த நிறுத்திய அரசு, போரின் விளைவுகள் அந்த மக்கள்விரோத போக்கில் கைவிட்டனர். இதுதான் யுத்தத்திற்கு பிந்தைய நிலை. மீளவும், மீட்சியும் சொந்த வளம் சார்ந்தாக தனிமனிதர்களுக்குள் குறுகிப் போனது. இது பாரிய சுமையாக, துயரங்கள் நிறைந்ததாக, சொல்லி அழக் கூட முடியாத கண்காணிப்பில் ஊமையாகி ஊனமாகின்றனர்.

தனிமனிதனைச் சுற்றி, குடும்பம் குடும்ப உறுப்பினர்களைச் சுற்றிப் பாரமாகிப் போய்விட்ட நிரந்தரமான யுத்த நோயாளிகளின் கதைகள் பற்பல. வெளிநாட்டில் குடும்ப உறுப்;பினரைக் கொண்டவர்கள் கூட, இந்தச் சுமையை தாங்க முடியாத அளவுக்கு அவை தொடர்ந்து சுமையாகின்றது. மருத்துவ ரீதியான செலவுகள், எல்லையற்றனவாக இலக்கற்றதாக மாறி வருகின்றது. குடும்ப பாசம், சுமை நிறைந்த குடும்ப முரண்பாடுகளை உருவாக்கி வருகின்றது.

மருத்துவ ரீதியாக தேவையற்ற பிரயோசனமற்ற வகையில் வழிகாட்டி பணம் சம்பாதிப்பது முதல் இலக்கற்ற மருத்துவமும் இந்த யுத்த நோயாளிகள் மேல் திணிக்கப்படுகின்றது. அந்த குடும்பம் வற்றிப் போகும் வரை, நோயாளியை கைவிடும் வரை, மருத்துவ உலகம் வக்கிரத்துடன் அணுகுகின்றது.

இதைச் சுற்றி வாழும் குடும்பம், நோயாளி சந்திக்கின்ற வலியையும் துயரத்தையும் கண்டு மரத்துப் போகின்றனர். அரசின் திட்டமிட்ட புறக்கணிப்பும், மீட்சியைக் கண்காணிக்கும் அதன் வக்கிரமும் இதனுடன் சேர்ந்து விடும் நிலையில், யுத்த நோயாளிகள் இறந்தாலும் பரவாயில்லை என்று கூறுகின்ற நிலைக்குள் விரக்தி அடைந்து புலம்புகின்ற அளவுக்கு இதன் பின்னான கொடுமைகளோ கொடூரமானவை.

அன்றே இவர்கள் இறந்திருந்தால் எந்தளவுக்கு நன்றாக இருந்திருக்கும் என்று கூறுகின்ற மனப்பாங்குடன், எமது அமைப்புத் தோழர் ஒருவர் தன் தங்கையின் நிலையையிட்டு கூறுகின்ற கூற்று தான் இங்கு பொதுவானது. இதுவே எங்கும் நிறைந்த மனநிலையுமாகும். இந்தப் பெண்ணின் சகோதரி தான்,

கண்மணி என்ற பெயரில் சில கவிதைகளை எமக்கு முன்பு எழுதியிருந்தார்.

அந்தப் பெண் தன் கண் ஒன்றை இழந்தது மட்டுமல்ல, தலைக்குள் செல் துண்டுகளால் வெட்டப்பட்ட நிலையில், பலவிதமான உபாதைகளுடன் கண் ஊடாக சீழ் வழிய, இறுதியாக இந்திய மருத்துவமனையில் இன்று அல்லற்படுகின்றார். பராமரிப்பற்று போகும் சிறு குழந்தைகள், கோபம் விரத்தி… என்ற ஆயிரம் விதமான உபாதைகள். யுத்தத்தை நடத்தியவர்கள் அல்ல, அப்பாவி மக்கள் சந்திக்கின்ற துயரங்கள்.

தலையிடித்தாலே அமெரிக்கா, சிங்கப்பூர் என்று சென்று மருத்துவம் செய்யுமளவிலான அரச தலைவர்கள் நாட்டை இன்று ஆளும் நிலையில், மக்கள் தம்மை குணப்படுத்த முடியாத நிலையில் தாம் இறந்து போவது பற்றியும், இறந்தால் பரவாயில்லை என்று குடும்ப உறுப்பினர்களை எண்ண வைக்கின்ற அளவுக்கு இலங்கையில் மக்கள் வாழ்கின்றனர்.

யுத்தத்தை நடத்தியும், பலிகொடுத்தும் பலியெடுத்த அரசும் புலியும், இதன் விளைவுகளுக்கு பரிகாரம் காணவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணர்வுபூர்வமான எந்தவிதத்திலும் உதவவில்லை. இதற்காக மனம் வருந்தக்கூட இpல்லை.

மாறாக பரஸ்பரம் குற்றஞ்சாட்டிக் கொண்டு, தாங்கள் மக்களின் நலனுக்காகவே ஐ.நா வை எதிர்ப்பதாகவும் ஆதரிப்பதாகவும் பரஸ்பரம் கூறிக்கொண்டு, அந்த மக்களுக்கு தொடர்ந்து துயரத்தை திணிப்பது பற்றி சதா எண்ணுகின்றனர், அதை நோக்கியே செயல்படுகின்றனர். இதுதான் எம்மைச் சுற்றிய இன்றைய எதார்த்தம். உண்மை இப்படித்தான் உறைக்கின்றது.

பி.இரயாகரன்

29.04.2011