08152022தி
Last updateபு, 02 மார் 2022 7pm

புலம்பெயர் மாபியாப் புலிகளும் போர்க்குற்றவாளிகள் தான்

ஐ.நா. அறிக்கை புலம்பெயர் தமிழர் மீது குற்றஞ் சாட்டியுள்ளது. இது முழுமையானதல்ல. சிலதை மூடிமறைத்து இருக்கின்றது. சிலதைத் திரித்தும் இருக்கின்றது.

1. இங்கு திரிபு என்னவெனில் புலம்பெயர் தமிழ் மக்கள் என்று கூறும் பொது வரையறுப்பு தவறாகும். இங்கு இந்தக் குற்றச் சாட்டுக்குரியவர்கள் புலத்து மாபியாப் புலிகள். சில மட்டும் தான், புலத்து தமிழ் மக்களைக் குறிக்கும்.

2.இங்கு மூடிமறைப்பு புலத்தில் அரசை சார்ந்து நின்று போர்க்குற்றத்துக்கு துணை போன புலியெதிர்ப்புப் பிரிவை குற்றஞ்சாட்டாமை.

இந்த வகையில் புலத்தில் போர்க்குற்றத்துக்கு துணை போன, இரண்டு பிரிவுகளை ஐ.நா அறிக்கை அடையாளம் காட்டத் தவறியுள்ளது.

 

1. தமிழ் மக்களைப் பலி கொடுத்த புலியின் செயலை, ஆதரித்து கொலையை ஊக்குவித்தவர்கள் புலத்துப் புலி மாபியாக்கள். புலியின் அனைத்து மனிதவிரோத செயலையும் ஆதரித்து நின்றதுடன், அதற்கு கருத்தியல் ஆதரவு முதல் பொருளாதார ஆதரவு வழங்கி மக்களுக்கு எதிராக செயல்பட்டமை.

2. புலியெதிர்ப்பு மூலம் மக்களைப் பலியெடுத்த அரசின் செயலை ஆதரித்து, கொலைகளை செய்ய துணைபோனமை. அந்த வகையில் கருத்தியல் தளத்தில் அதற்கு துணை போனமை.

இந்த இரு போர்க்குற்றங்களையும், ஐ.நா அறிக்கை புலம்பெயர் தமிழர் சார்ந்து முன்வைக்க தவறியுள்ளது. இலங்கை அரசு பாரிய யுத்தக்குற்றத்தை செய்த காலத்தில், அதற்கு ஆதரவாக செயல்பட்ட நாடுகளும், அதற்கு ஆயுதம் வழங்கிய நாடுகளும் கூட போர்க்குற்றத்துக்கு துணை போனவர்கள் தான். அதை எப்படி ஐ.நா அறிக்கை உள்ளடக்க வில்லையோ, அப்படியே புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் மனிதவிரோத கண்ணோட்டத்துடன் செயல்பட்ட அரசு மற்றும் புலிப் பிரிவினர் மீதான குற்றத்தை இந்த அறிக்கை உள்ளடக்கவில்லை.

மாறாக புலம்பெயர் தமிழர் மீதான பொதுக் குற்றச்சாட்டாக ஐ.நா அறிக்கை அவற்றை முன்வைக்கின்றது. பணம்கொடுத்தது, புலியை ஆதரித்தது, புலியின் குற்றங்களை கண்டிக்க மறுத்தது, கட்டாய பணச் சேகரிப்பு, மாபியாத்தனம், பணத்தை தனதாக்கிக் கொண்டது வரையான விடையங்களை அது சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் இனவாதத்தைத் தொடர்ந்து திணிப்பதையும், யுத்தத்தில் மக்கள் கொல்லப்பட்ட போது மக்களைப் பாதுகாக்க முனையாமையையும் குற்றஞ்சாட்டியுள்ளது. தனியார் சொத்தாகிவிட்ட புலத்தில் உள்ள புலிகளின் பணத்தை பறிமுதல் செய்து, யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்கவேண்டும் என்று பரிந்துரையும் செய்கின்றது. இப்படி குற்றச்சாட்டை பொதுமைப்படுத்தி, அதை குறிப்பாக்காமல் நழுவிவிடுகின்றது.

இது தொடர்பாக புலிகளின் பினாமி அமைப்பான உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இமானுவேல் அடிகள் பிபிசிக்கு வழங்கிய பேட்டியில், அரசு போல் தம்மீதான குற்றத்தை மறுக்கின்றார். புலம் பெயர் தமிழர் மீதான குற்றச்சாட்டையும், வன்னிப் புலிகள் மீதான குற்றச்சாட்டையும் மறுத்தார், ஐ.நா இலங்கை அரசு சார்ந்து பொய்யாக புனைவதாக கூறுகின்றார். வேடிக்கை என்னவென்றால் இதேபோல் தான் இலங்கை அரசு, புலியைச் சார்ந்து ஐ.நா பொய்யாக தமக்கு எதிராக புனைவதாக கூறுகின்றது. என்னே அரசியல் ஒற்றுமை!

இப்படி பரஸ்பரம் தங்கள் போர்க்குற்றங்களை மறுத்து பாதுகாத்தபடி, மறுதரப்பை குற்றஞ்சாட்டி அவர்களையும் சேர்த்துப் பாதுகாக்கின்றனர். இப்படி எவரும் இன்று வரை, மக்களுடன் நிற்கவில்லை. ஒரு சில உதிரிச் சம்பவங்களாக அவற்றைக் காட்டி திரிக்க முனைகின்றனர். இது அரசு மற்றும் புலியின் கொள்கையுமல்ல, நடைமுறையுமல்ல என்று இரு தரப்பும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டியபடி இட்டுக்கட்ட முனைகின்றனர்.

யுத்தம் நடந்த காலத்தில் நாம் மட்டும் மிகத் தெளிவாக இவற்றை அம்பலப்படுத்தினோம். இன்று அவைகளில் சில தான், ஐ.நாவின் அறிக்கையாக காலம்கடந்து மீளத் தொகுக்கப்பபட்டுள்ளது. அன்று எமக்கு வெளியில் இந்த உண்மையை யாரும் சொன்னது கிடையாது. இந்தப் போர்க்குற்றங்களுக்காக எதிர்க்குரல் கொடுத்தது கிடையாது. இன்றும் அதுதான் நிலை. உண்மைகள் எம்முடன் தான் இன்னமும் தொடருகின்றது. மக்கள் நலன் எம்முடன் தான் தொடர்ந்து பயணிக்கின்றது. இதுதான் இன்று வரையான வரலாறும் கூட.

பி.இரயாகரன்

28.04.2011


பி.இரயாகரன் - சமர்