போர்க்குற்றம் மீது சுதந்திரமான, சுயாதீனமான விசாரணையைக் கோருவோம்!!

 

ஏகாதிபத்திய நலனை முன்னிறுத்தியோ, ஏகாதிபத்திய எதிர் முகாமில் நின்றோ, போர்க்குற்றத்தை அரசியலாக்குவது மன்னிக்க முடியாத துரோகம். மக்களுக்கு எதிரான பாரிய போர்க்குற்றத்தை குற்றமற்றதாக்க, அதை அரசியல் நீக்கம் செய்வதும் மன்னிக்க முடியாத குற்றமாகும்.

இலங்கை அரசின் இன அழிப்பு யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில், மனிதகுலத்திற்கெதிரான பாதகச் செயல்களில் சிலவற்றை உள்ளடக்கிய அறிக்கை ஒன்றை,  ஐக்கிய நாடுகள் சபை காலம் கடந்து வெளியிட்டுள்ளது.

இவ்வறிக்கை எந்தவிதத்திலும் முற்று முழுதானதல்ல. இதன் அடிப்படையில் இலங்கை இனவாத அரசால் நடாத்தப்பட்ட பாலியல் பலாத்காரங்கள், கொலைகள் முதல் சிறுவர், வயோதிபர்கள், பெண்கள், நோயாளிகள், என அனைத்து மனித ஜீவன்கள் மீதும் நடாத்தப்பட்ட அரச பயங்கரவாதங்களை, அதனடிப்படையிலான மனிதவுரிமை மீறல்களின் ஒரு சதவீதத்தைக் கூட இந்த அறிக்கை தனக்குள் உள்ளடக்கவில்லை.

 

 

ஆனால் மனிதகுலத்திற்கெதிரான செயல்கள் பலவாறானவை, இறுதி யுத்தத்தின் போது இலங்கை அரசால் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டன என்பதை அறிக்கை உறுதிப்படுத்துகிறது. இதனாலேயே  இவ்வறிக்கை மேற்கொண்டு மேலதிக தகவல்களைத் திரட்டவும், சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் மனிதகுலத்திற்கெதிரான பாதகச் செயல்களில் ஈடுபட்டவர்களை இனம் காணவும் இது உதவுகின்றது. இதன் பின்தளத்தில் இயங்கியோருக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கவும், இது தொடர்பில் சுயாதீனமான சுதந்திரமான விசாரணைகளைக் கோருவது அவசியமானது. இருந்த போதும் இந்த ஜ.நா குழுவின் அறிக்கையானது தனது அறிக்கையின் பிரகாரம், இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் முன்மொழிகின்றது.

மேற்படி அறிக்கையின் முன் மொழிவை நடைமுறைப்படுத்துவது மேற்கத்திய மற்றும் ஆசிய வல்லாதிக்க நாடுகளின் கையிலேயே உள்ளது. இதன் மூலம் அவர்கள் தமது சொந்த நலனின் அடிப்படையில், இலங்கை அரசை தமது நலன்களுக்கு ஏற்ப பாவிப்பதற்கு  அமைவாக இவ்வறிக்கையை பயன்படுத்துகிறார்கள்.

இலங்கையில் சிங்கள மக்கள் மத்தியில் மே 18 பின் தணிந்து வந்த இனவாத உணர்வை இந்த அறிக்கையானது அதிகரிக்க வைத்துள்ளது. கூர்மையடைந்து வந்த சமூக சீரழிவுகளுக்கெதிரான எதிர்ப்புகளும், பாசிச அரசுக்கெதிரான மனோநிலையும், வர்க்கரீதியான விழிப்புணர்வையும் மழுங்கடையச் செய்யும் வண்ணம், பாசிச அரசாலும், இனவாத கட்சிகளாலும் இவ்வறிக்கை எதிர்நிலையில் முன்னிறுத்தி பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் தமிழினம் எந்தவொரு சரியான மக்கள் நலம் சார்ந்த தலைமையையும் கொண்டிராத நிலையில், ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக சொல்பவர்கள், மக்கள் அழிவுக்கு வழிவகுத்த புலிகளின் ஏகாதிபத்திய சார்பு குறுந்தேசிய அரசியலையே தொடர்ந்தும்  பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். இது போல் பலரும் மேற்கத்தைய மற்றும் இந்திய நலன்களுக்காகவும், இலங்கைப் பாசிச அரசின் நலன்கள் சார்ந்தும் அரசியல் செய்பவர்களாகவே தொடர்ந்து இருக்கின்றனர்.

இந்நிலையில் : மக்களையும், மக்கள் நலன் சார்ந்த அனைத்து சக்திகளையும் பின்வரும் கோசங்களின் அடிப்படையில் போராட அழைக்கின்றோம் !

சர்வதேச சமூகமே!

 

தமிழ் மக்கள்  மீது நடாத்தப்பட்ட அனைத்து யுத்த மீறல்களையும் விசாரிக்க  சுதந்திரமான சுயாதீனமான சர்வதேச விசாரணையை நடாத்த வழிசெய்யுங்கள்!

சிங்கள மக்களே!!

பேரினவாத சக்திகளின் சதியில் வீழாது, தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடுமைகெதிராகவும், அவர்களுக்கு நியாயம் கிடைக்கும் வண்ணமும் போராட முன் வாருங்கள்!

 

தமிழ் மக்களே!!!

குறுந்தேசியத்தை நிராகரித்து, சர்வதேச மற்றும் உள்நாட்டு மக்கள் நலன் சார்ந்த சக்திகளுடனும் இணைந்து போராட முன்வாருங்கள்!

 

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

(துண்டுப்பிரசுரம் 26.04.2011)

www.ndpfront.com www.tamilarangam.net www.ndpfront.net

www.tamilcircle.net http://kalaiy.blogspot.com/