07062022பு
Last updateபு, 02 மார் 2022 7pm

தொடரும் இனவொடுக்குமுறை தான், போர்க்குற்றத்தின் அரசியல் சாரம்

இனவொடுக்குமுறையின் ஒரு அங்கம் தான் போர்க்குற்றம். நீண்ட பத்தாண்டுகாலமாக நீடித்த இனவொடுக்குமுறையும், தீர்வைக் காணமறுக்கும் பேரினவாதத்தின் நீண்ட இனவழிப்பு நிகழ்ச்சி நிரலில் நடந்தேறியதுதான் இந்தப் போர்க்குற்றம். யுத்தத்தின் பின்பும் அரசியல் தீர்வை மறுத்து, இனவழிப்பு தொடருகின்றது. தமிழ் இனம் தன்னைத்தான் அடையாளப்படுத்த முடியாத வகையில், திட்டமிட்ட வகையில் அதன் சமூக பொருளாதார பண்பாட்டு அரசியல் தளம் தொடர்ந்து அழிக்கப்படுகின்றது.

இதற்கேற்ற வகையில் புலியெதிர்ப்பு அரசு ஆதரவு கோட்பாடுகள் முதல் இராணுவ நிர்வாகம் வரை முடுக்கிவிடப்பட்டு இருக்கின்றது. புலத்தில் இலங்கை அரசு ஆதரவு கருத்தோட்டத்தை திட்டமிட்டு கொண்டு செல்லும் தேனீ முதல் தேசம் வரையான இணையங்கள், புலி எதிர்ப்பின் உள்ளடக்கத்தில் போர்க்குற்றத்தை அரசியல் நீக்கம் செய்ய முனைகின்றனர். இந்த வகையில் முன்பு (சண் காலத்தில்) மார்க்சியம் பேசிய பழசுகள், கனடா முதல் இலங்கை வரை புலியெதிர்ப்பில் நின்று அரசுக்கு குடைபிடிக்கின்றனர். இதை நாம் தனியாக ஆராய உள்ளோம்.

 

 


 

இலங்கை அரசின் இனவாதம்தான், இனப்பிரச்சனையின் ஆயுதமேந்திய போராட்டம் உருவாக காரணமாகும். புலிகள் போன்ற அமைப்புகள் இப்படித்தான் தோன்றின. அது வெறும் ஆயுதமேந்திய பயங்கரவாத லும்பன் குழுவாக மாறியதற்;கு, அன்னிய வழி காட்டுதல்கள் முதல் நிலப்பிரபுத்துவ சமூகக் கட்டமைப்பு சார்ந்த கண்ணோட்டமும் குறிப்பான காரணமாக இருந்தது.

இலங்கையில் இனப்பிரச்சனை என்பது பல பத்தாண்டுகளாக தொடர்ந்து நீடிக்கின்றது. யுத்தத்தின் பின்னும் இதுதான் நிலைமை. இதை அரசியல் ரீதியாக தீர்க்கும் வண்ணம், இலங்கை அரசு இன்று வரை ஒரு தீர்வை முன்வைக்கவில்லை. இந்த வகையில் இனவாதத்தையே தொடர்ந்து தனது கொள்கையாக கொண்டு செயல்படுத்துகின்றது. இதற்கு அமைவாக காலத்துக்காலம் காலத்தை கடத்துவதற்காக விசாரணைக் குழுக்களையும், பல்வேறு காரணத்தை சொல்லியும் இனவாதத்தையும் தொடர்ந்து தன் அரசியலாகியது.

இதன் விளைவால், இதற்கு எதிராக ஆயுதமேந்திய குழுக்கள் உருவாகியது. இறுதியில் புலிப் பாசிசம், தன்னைத்தான் அதன் பிரதிநிதியாக்கியது. இதன் பின் இனப்பிரச்சனை தீர்வுக்கு தடையாக இருப்பது புலிப் "பயங்கரவாதம்" தான் என்றது அரசு. இப்படி கூறித்தான் தீர்வை முன்வைக்காதது மட்டுமின்றி, யுத்தத்தையும் நடத்தி முடித்தது.

இன்று யுத்தம் முடிந்து இ;ரண்டு வருடங்களாகிவிட்டது. இந்த நிலையிலும் இனப்பிரச்சனைக்கு ஒரு தீர்வை இந்த அரசு முன் வைக்கவில்லை. இதுவரை காலமும் தமிழ் மக்களை தொடர்ந்து ஏமாற்றி வந்த அரசு, உலக நாடுகளையும் அதேபோல் ஏமாற்றியது. காலத்தை இழுத்தடிப்பதன் மூலம், தன்னைச் சுற்றிய ஏகாதிபத்திய முரண்பாடுகளை தீவிரமாக்குகின்றது. இப்படி ஏகாதிபத்திய முகாங்களுக்குள் நிலவும் முரண்பாடுகள் மூலம், இனவழிப்பை தொடர அரசு முனைகின்றது. இலங்கை இனப்பிரச்சனை சர்வதேசிய விவகாரமாக, அதற்குள்ளான முரண்பாடாக மாறி வருகின்றது.

இலங்கை அரசும், மகிந்தாவும் இதன் பின்னணியில் பித்தலாட்டம் செய்ய முனைகின்றனர். தொடர்ச்சியான பொய்கள் மற்றும் வாக்குறுதி மூலம் உலகத்தையே ஏமாற்ற முனைகின்றனர். இதன் மூலம் அரசு அமுல்படுத்தும் கொள்கைகள் அனைத்தும், இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டது.

பல பத்தாண்டுகளாக இலங்கையில் இனவொடுக்குமறை இருப்பதை ஏற்று, அதை தீர்வு காண முனைவதாக கூறி இனத்தை அழிப்பதுதான் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கின்றது. இந்த வகையில் இனத்தை ஓடுக்கி அழித்த இதன் வரலாற்று நீட்சியில்தான், இனவழிப்பு போரும் நடந்தது. இங்கு புலியின் பெயரில் இனவழிப்பு போரைத்தான், இலங்கை அரசு நடத்தியது. யுத்தத்தின் முன், பின் என்று இரண்டு காலகட்டத்திலும், இலங்கை அரசு இனப்பிரச்சனையை தீர்க்க மறுத்து இனத்தை ஒடுக்கி நிற்பது என்பது தொடருகின்றது. இது யுத்தத்தில் தமிழ் மக்களையும் திட்டமிட்டு கொன்றது என்பதை, மிகத் தெளிவாக எமக்கு எடுத்துக் காட்டுகின்றது.

இங்கு போர்க்குற்றங்கள் என்பது யுத்தத்தின் நெறிமுறையை கடைப்பிடிக்கத் தவறியதன் அடிப்படையில் இருந்தல்ல. மாறாக திட்டமிட்ட இனவழிப்பு நோக்கில் இருந்துதான், இந்த போர்க்குற்றம் செய்யப்பட்டு இருக்கின்றது. பல பத்து வருடமாக இலங்கை அரசின் தொடர்ச்சியான இனவொடுக்குமுறையின் ஒரு அங்கமாகவே, இந்த போர்க்குற்றமும் திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து யுத்தத்தின் பின்னான இரண்டு வருடங்கள், இந்த அரசு தமிழ் மக்களை நடத்துகின்ற முறைமையும், அவர்கள் பிரதேசத்தினை அழிக்க ஊடுருவும் முறைமையும் இன ஒடுக்குமுறையில் தொடர்ச்சியாகவேயுள்ளது.

இந்த வகையில் இனப் பிரச்சனைக்கான தீர்வை முன்வைக்காது, இனவழிப்பை தொடர்ச்சியாக முன்தள்ளுகின்றது. சர்வதேசத்தை ஏமாற்றியும், முரண்பாடுகளை உருவாக்கியும், ஏகாதிபத்திய எதிர்முகாமை சார்ந்து நடத்தும் இனவொடுக்குமுறை, மீண்டும் அன்னிய சக்திகளின் துணையுடன் ஆயுதப் போராட்டத்துக்கான அரசியல் நிகழ்தகவை உருவாக்கி வருகின்றது. இந்த வகையில் ஐ.நாவின் அறிக்கை மேலும் இதற்கு வலுச் சேர்க்கின்றது.

உண்மையில் இலங்கை அரசு புலிகளின் அதே தவறான அரசியல் பாதையில் பயணிக்கின்றது. சர்வதேச ஏகாதிபத்திய முரண்பாட்டுக்குள் தன்னைத்தான் வலிந்து தள்ளி, தனக்குத்தானே மண்ணை அள்ளிப் போடத் தொடங்கியுள்ளது. இதனால் ஆட்சிக் கவிழ்ப்பு உட்பட மீண்டும் ஒரு கூலிக்குழுவுடனான ஆயுதம் ஏந்திய தாக்குதலுக்கான அரசியல் நிகழ் தகவை உருவாக்கி வருகின்றது.

மக்கள் தங்கள் சொந்த விடுதலைக்காக போராடாத வரை, குறுகிய உணர்வுகளில் மக்களை பிரித்து ஒடுக்கும் ஓடுக்குமுறை என்பது பலமுனையில் நீடிப்பது தொடர்ந்து தவிர்க்க முடியாதுள்ளது. இதுதான் இன்றைய இலங்கை நிலை.

 

பி.இரயாகரன்

26.04.2011

 

 


பி.இரயாகரன் - சமர்