உலகத்தை ஏமாற்றிய நவீன மோசடிக்காரர்களின், பணக்காரக் "கடவுள்" தான் சத்யசாய்பாபா. படித்த முட்டாள்களின், மனித உழைப்பிலான செல்வத்தை இந்த உலகில் திருடிய புத்திசாலிகளின் "கடவுள்" தான், இந்த சத்யசாய்பாபா. இதனால் இந்தக் "கடவுளும்", பல ஆயிரம் கோடிகளுக்கு சொந்தக்காரனான்.

இப்படி இன்றைய பொருள் உலகின் புத்திசாலிகளாக கருதும் முட்டாள்களின் ஒழுக்க கேடான வாழ்வுக்கு ஏற்ற ஆன்மீகம் மூலம், சத்யசாய்பாபா நவீன பொருள் நுகர்வு உலகுக்கு ஏற்ப "கடவுள்" அவதாரமானான். இந்தக் கடவுள் ஒரு குற்றவாளி. ஏய்க்கும் மோசடிகள், பாலியல் வன்முறைகள், கொலைகள் ஈறாக, இந்த நவீன உலகில் முறைகேடாக பணம் சம்பாதிக்கும் பொறுக்கிகள் போல் அனைத்தையும் செய்துதான், தன்னைத்தான் கடவுளின் அவதாரமாக்கினான். இந்தக் குற்றங்களில் இருந்தும் தன்னை பாதுகாக்கும் வண்ணம் கோடி கோடியாக செல்வத்தை தனதாக்கி வைத்திருந்தான். சாதியை அடிப்படையாகக் கொண்ட பார்ப்பனியம் உருவாக்கிய இந்து மதத்தைக் கொண்டு, தன்னை தற்காத்துக் கொண்டான்.

 

 

தன்னைத் தான் கடவுள், கடவுளின் அவதாரம் என்று கூறிய இந்த மோசடிக்கார பேர்வழி, இந்த உலகில் எல்லா மனிதர்களைப்போல் தான், அதன் இயற்கை விதிக்குள் தான் மரணம் அடைந்திருக்கின்றது. மனிதர்களுக்கு வரும் நோய்களுக்கு உள்ளாகித்தான், நவீன மருத்துவத்தின் இயலாமைக்குள் தான் இயற்கையின் ஒரு உயிராகத்தான் மரணித்திருக்கின்றது. மனிதர்களை நாடும் நவீன மருத்துவமனையில் மருந்தின்றி, தன் இறுதி ஆயுள் நாள் வரை கூட நீடித்திருக்க முடியவில்லை.

தன்னைச் சுற்றிய உலகில் மனித உழைப்பைக் கடந்து எந்தப் பொருளையும் கற்பனையில் கூட உருவாக்க முடியவில்லை. மனித உழைப்பில் உருவான பொருட்கள் முதல் அதன் அறிவியல் சார்ந்த உலகில் தான், இந்த மோசடிக்காரன் ஒரு கோடீஸ்வரனாக வாழ்ந்தான்.

நவீன தொழில் நுட்ப உதவியுடனான பிரச்சாரத்தில் தன்னைத்தான் மிதப்பாக்கினான். தன் ஆன்மீக மோசடிகள் மூலம் கோடிகோடியாக பணம் சம்பாதிக்கும் அசிங்கத்தையும், அந்த நுகர்வையும் உலகின் முன் மூடிமறைக்க, அதில் ஒருபகுதியை மக்களுக்கு செலவு செய்வதாக நடிக்க வேண்டியிருந்தது. அதற்கு ஏற்ப கட்டமைத்த விம்பங்கள், விளம்பரமாகின. அரசியல்வாதிகள் போல், நவீன செல்வந்தன் போல், தன் ஆன்மீக பணக்காரத்தன விளம்பரத்துக்கு ஏற்ப ஏழை மக்களுக்கான சேவை தான், இந்த மோசடியிலும் கைதேர்ந்த கிரிமனல்தனமாகும். இது தாங்கள் உழையாது எப்படி ஒழுக்கங்கெட்ட முறையில் பணத்தை சம்பாதித்து வாழ்கின்றோம் என்பதை, அன்றாடம் உழைத்து வாழும் மக்கள் முன் மூடிமறைக்கும் விளம்பர செயலாகும்.

மக்களை ஏய்க்க, இந்த நவீன வே~ம். இன்றைய உலமயமாக்கலில் இப்படித்தான் மக்களை மந்தையாக்கும், மக்களை ஏய்க்கும் விளம்பரம் தான் இன்று மக்கள் சேவையாகின்றது. இதற்கமைய நவீன முதலாளிகள் போல், இன்றைய அரசியல்வாதிகள் போல் தான் நவீன கடவுள்களும்.

கடவுள்களும் அந்தந்த வர்க்கத்தின் ஒழுக்கநெறிக்கு ஏற்பத்தான் உருவாகின்றது. இந்திய ஆளும் வர்க்கமும், இந்துத்துவமும், செல்வந்தர்களும் இணைந்து, எதை இந்த உலக ஓழுங்காக உன்னதமான மனித வாழ்வாக கருதுகின்றனரோ, அதன் பிரதிநிதிதான் மோசடிக்கார சத்யசாய்பாபா. அவர்கள் இன்றி இவனில்லை. இவன் இன்றி அவர்களில்லை. இதுதான் இதன் பின்னுள்ள அறம். எதிர்மறையான ஒழுக்கக்கேடுகள் தான், சத்யசாய்பாபாவை நேராக்கி வைக்கின்றது. நேராக்கிக் காட்டுபவன், இந்த ஒழுக்கக்கேட்டின் எல்லைக்குள் வாழ்பவர்கள் தான்.

இந்த மோசடிக்கார கடவுள் எங்கிருந்து, கோடி கோடியாக செல்வத்தை திரட்ட முடிந்தது? மக்களைச் சுரண்டியும், தேச வளங்களைச் சூறையாடிய கூட்டமும், அவர்களின் எடுடிபிடிகளும் கொடுத்த ஆன்மீக கொடை தான், இப்படி திரண்டு மீண்டும் மக்களை ஒடுக்கும் நவீன கடவுள் அவதாரமாகியுள்ளது.

இன்று இது இந்திய ஆளும் வர்க்கத்தின் ஒரு உறுப்பாக மாறி நிற்கின்றது. சத்யசாய்பாபா மரணம் விட்டுச் செல்லும் செய்தி, பணக்காரத் தனத்தை கொண்டு எப்படியெல்லாம் மோசடி செய்து வாழமுடியும் என்பதையும், திரண்ட செல்வத்தை கொண்டு எப்படி நுகரலாம் என்பதையும்தான். அவன் மோசடி செய்து திரட்டிய செல்வத்;தை, மரணத்தின் பின் யார் எப்படி நுகர்ந்து தின்னலாம் என்ற ஆன்மீக கடவுள் சண்டைகள், இனித்தான் அரங்கேற உள்ளது. இந்த அருள் காட்சிகளையும், செய்திகளையும் இனி எந்தக் கடவுளாலும் காப்பாற்ற முடியாது. அதுதான் சத்யசாய்பாபா என்ற "கடவுள்" திரட்டி சேர்த்த, மூலதனத்தின் சொந்த அருள் வாக்கு.

 

பி.இரயாகரன்

24.04.2011