புதிய ஜனநாயக மக்கள் முன்னணி அமைப்பு தனது முதலாவது சஞ்சிகையை வெளியிட்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளாக நடத்திய நீடித்த போராட்டத்தை, பரந்துபட்ட மக்களிடம் எடுத்துச் செல்லும் பணியில் முன்னணி தனது முதலாவது காலடியை எடுத்து வைக்கின்றது.

இதை பெற்றுக் கொள்ளவும், இதை விநியோகிக்கவும் முன்வாருங்கள். உங்கள் பங்களிப்பை சமூகப் பொறுப்புடன் வழங்குங்கள். இது உங்கள் முன்னணி. இதை மக்களிடம் எடுத்து செல்ல வேண்டிய பொறுப்பு உங்களுடையது. அந்த வகையில் இதனைப் பெற்று, அதை விரிவாக்குங்கள். விமர்சனங்களை முன்வைத்து வளப்படுத்துங்கள். முன்னணிக்கான சந்தாக்களையும், நிதி உதவிகளையும் நீங்களாகவே முன்வந்து செய்யுங்கள். உங்களாலான அனைத்து உதவியையும், முன்னணி வளர்ச்சிக்கு வழங்குங்கள்.

கடுமையான இடைவிடாத போராட்டங்கள் மூலம் தான், முன்னணி உங்கள் கைகளுக்கு வந்தடைகின்றது. கண்மூடித்தனமான அறிவுபூர்வமற்ற வழிபாடும், தாம் அல்லாத அனைத்தையும் அச்சுறுத்தி அடிபணிய வைக்கும் வன்முறை சூழலில் அதை எதிர் கொண்டு போராடிய நாம், இன்று முன்னணி ஊடாகவும் உங்களுக்கு அறிமுகமாகிறோம்.

 

 

 

"முன்னணி"  முன்னுரை

உங்களுடன் முன்னணி

எம்மைச் சுற்றி வெளிவராத உண்மைகள் போல் எத்தனையோ மனித அவலங்கள். அதற்கு தீர்வில்லை. வழிகாட்டவும் யாருமில்லை. அநாதைகளாக மாற்றப்பட்டு வெறுமையில், எமக்குள் நாம் வெம்பிப்போகின்றோம். எமது நம்பிக்கைகளுக்கு என்ன நடந்தது என்பதை உணரக் கூட முடியாதவர்களாக நாம் சிதைக்கப்பட்டுவிட்டோம்.

இதில் இருந்து ஒரு தெளிவையும், அறிவையும் பெற்று வாழ்வது எப்படி? மந்தைகளாக அல்ல, மீண்டும் மனிதர்களாக மாறுவது எப்படி? அந்த வகையில் நாம் எடுத்து வைக்கும் ஒரு காலடிதான் உங்கள் கையில் உள்ள இந்தச் சஞ்சிகை.

நாங்கள் யார் என்ற உங்கள் முதல் கேள்விகூட நல்ல தொடக்கம்தான். 1980களில் தொடங்கிய இயக்கங்கள் ஆயுதம்தான் அனைத்தையும் தீர்க்கும் என்று கூறியும், அந்நிய கூலிப் பயிற்சியை பெற ஆயிரம் ஆயிரமாக ஓடியபோது, இது விடுதலைப் போராட்டத்தை அழிக்கும் பாதை என்று சொன்னவர்கள் நாங்கள். உங்களைச் (சொந்த மக்களை) சார்ந்து நின்று, உதிரியாகவும் அமைப்பாகவும் போராட முற்பட்டவர்கள் நாங்கள். அந்நிய சக்திகள் போராட்டத்தை வீங்கவைத்து, வெதும்ப வைத்து அலை அலையாக எம்மைத் தாக்கிய போது, உங்களைச் (மக்களை) சார்ந்து முன்னேற முடியாது தோற்றுப்போனவர்கள். அன்றில் இருந்து இன்று வரை உங்களின் (மக்களின்) அவலங்களுடன், உங்கள் சிறுசிறு குரல்களுடன் ஒன்றித்து நின்று உதிரியாக போராடியவர்கள்தான் நாங்கள்.

நாம் என்றும் எவருடனும் மக்களுக்கு வெளியில் யாருக்கும் சோரம் போனவர்கள் அல்ல. அனைத்தையும் எம் குறைந்தபட்ச எல்லைக்குள் முன்வைத்துப் போராடியவர்கள். 1980களில் தொடங்கி, போராட்டத்தின் பிழையான பக்கத்தைச் சுட்டிக்காட்டி சரியான பக்கத்தைத் தொடர்ச்சியாக முள்ளிவாய்க்கால் வரை சொன்னவர்கள் நாங்கள்.

தமிழ் மக்களின் நியாயமான தேசிய விடுதலைப் போராட்டத்தை அழிப்பதில் மேற்கு நாடுகளும், இந்தியாவும், சீனாவும், இலங்கை அரசும் ஒரே நேர் கோட்டில் பயணித்தன. இவர்களை வெல்லக் கூடிய வகையில், எமது தேசியவிடுதலைப் போராட்டம் தலைமை தாங்கப்படவில்லை. இதுவோர் உண்மை.

ஒரு தவறான தலைமையால், ஒரு தவறான அரசியலால் வழிநடத்தப்பட்டு அது தோற்கடிக்கப்பட்டது. இந்தியா முதல் அமெரிக்கா வரை நண்பனாகக் கருதியது முதல் சிங்கள மக்களை எதிரியாக கருதியது வரை, எம்மைச் சுற்றிய ஆயிரமாயிரம் தவறுகளையும் நியாயப்படுத்தியபடிதான், நாம் எம் தலையில் மண்ணை அள்ளிப் போட்டோம். இதுதானே உண்மை.

எதிரி எம்மை தோற்கடித்தான் என்பது ஒரு பொது உண்மைதான். ஆனால் நாங்கள் எம்மை தோற்கடித்தோம் என்பது தான், மற்றோர் உண்மை. இதனால் எதிரி எம்மை இலகுவாக தோற்கடிக்க முடிந்தது. இதுவோர் உண்மையல்லவா?

யுத்தத்தின் பிந்தைய அவலம், வெள்ளம் ஏற்படுத்திய அவலம், எம் மக்களின் வாழ்வை தொடர்ந்து நாசமாக்கி வருகின்றது. பேரினவாதம் தன் பங்குக்கு அன்றாட வாழ்வின் மேல் கூட இராணுவ கண்காணிப்பைத் திணித்து, தொடர்ந்தும் அடக்கி வருகின்றது. இலங்கை அரசு தன்னை பாசிசமயமாக்கி சிங்கள மக்களை ஒடுக்குவதுடன், யுத்தத்தில் தன்னுடன் சேர்ந்து போர்க் குற்றத்தை செய்த சரத்பொன்சேகாவைக் கூட விட்டுவைக்கவில்லை. அவரைக் கூட சிறையில் தள்ளியுள்ளது. சிங்களப் பத்திரிகையாளர்கள் முதல் சுதந்திரத்தை நேசிக்கும் யாரும் இலங்கையில் மூச்சுவிட முடியாதுள்ளது. இப்படிப் பல உண்மைகள்.

இன்றைய இலங்கையில் தேர்தலைக்கூட வெல்வதற்கான மோசடிதான் ஜனநாயகமாகிவிட்டது. இலங்கை இந்தியக் கடலில் இந்திய மீனவர்களைக் கொல்வதை மறுப்பது மட்டுமின்றி, அதை இந்திய அரசுடன் சேர்ந்தும் செய்கின்றது. இலங்கைக் கடலில் றோலர் வகை வள்ளங்களையும், இழுவை வலையைக் கொண்டும் மீன்பிடிக்க இந்தியாவின் துணையுடன் அதை அனுமதிப்பதன் மூலம், மீனவர்களை மோதவிட்டுக் கடலை அந்நிய மூலதனத்தின் சொத்தாக்குகின்ற கூட்டுச் சதியிலும் இறங்கியுள்ளது.

இந்தியாவின் துணையுடன் இலங்கை தன் போர்க்குற்ற விசாரணைகளை முடக்கியும், மூடிமறைத்தும் வருகின்றது. இறுதி யுத்தத்தின் போது கூட்டாக நடத்திய அனைத்தையும் மூடிமறைக்கும் போக்குடன்தான் அவர்கள் ஒன்றுபட்டு நிற்கின்றனர். தமிழ் மக்களுக்கு தீர்வை முன்வைக்காது இந்தியாவின் துணையுடன் ஓர் இனவாத அரசாக, பாசிசத்தைத் தமிழ், சிங்கள, மலையக, முஸ்லிம்... என அனைத்து மக்கள் மேல் தொடர்ந்தும் ஏவிவருகின்றது.

இந்த நிலையில் போலி இடதுசாரியம், இடதுசாரியம் பேசும் இனவாதப் போலிகள், இனவாதம் பேசும் வியாபாரிகள் எம்மைச் சுற்றிப் புதுப்புது வேஷங்கள் போடுகின்றனர். இப்படிப் பற்பல வேஷங்களில் பலர். மக்களிடம் வசூலித்த புலிகளின் சொத்துக்கள், இன்று தனிப்பட்ட சொத்தாகிவிட்டது. எப்போதும் எதற்கும் யூத உதாரணத்தைக் காட்டும் தமிழன், அவனைப் போல் தமிழ் மக்கள் நிதியை பொது நிதியமாக்கவில்லை. இப்படிப்பட்டவர்களா தொடர்ந்து எம்மை வழிகாட்டமுடியும்!?

எம்மைச் சுற்றி இப்படி எவ்வளவோ நிகழ்வுகள். அரபுலக மக்களின் கிளர்ச்சி, மேற்கு ஆதரவுடன் இருந்த சர்வாதிகாரிகளுக்கு பதில் மறுபடியும் மேற்கு கைக்கூலிகளின் ஆட்சி, லிபியா சர்வாதிகாரிக்கு எதிராக மேற்கு நடத்தும் ஆக்கிரமிப்பு என்று எத்தனை மக்கள் விரோத நிகழ்வுகள். யப்பான் அணுவுலை வெடிப்பு உணர்த்துகின்றது உலகம் அணுக் கதிர்வீச்சின் எல்லைக்குள் சுருங்கி விட்டதை.

ஆம், ஒரு மனிதன் மனிதனாக வாழ இன்று எத்தனை தடைகள். இதை எல்லாம் நாங்கள் பேசியாக வேண்டும். இதை முன்னணியூடாக இங்கு பேச முனைகின்றோம். உங்கள் கரங்கள் எங்கள் கரங்களுடன் ஒன்றிணைந்து ஒரே திசையில் ஒன்றாகச் செல்வதற்கு முன்னணி என்றும் வழிகாட்டும்.

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

மாசி - பங்குனி, 2011