09212023வி
Last updateபு, 02 மார் 2022 7pm

ஈழம் கேட்பது யாருக்காய் சொல்லுங்கள்?

விழித்துப்பார் புலத்தெம் சனமே
கண் முன்னே ஊரைச் சுருட்டிய கும்பல்
ஈழவிடுதலை பேசிய படியே மீள வருகிறது
இந்திய அரசை கெஞ்சிப் பார்ப்போமென
புலி எதிர்ப்பு புத்திமான்களும் புலிப்பினாமிகளும்
டெல்லி நோக்கிய நடையும் பறப்புமாய்
அடுத்த சதிக்கும் கூட்டு அமைக்கப்படுகிறது

 

வாண வேடிக்கைக்கு திரிமூட்டிய செம்மல்களிடம்

நாடு கடந்து ஈழம் மீளச் சாகடிக்கப்படுகிறது
ஊர்விட்டோடித் தசாப்தங்கள் கடந்தும்
ஆண்ட பரம்பரைக் கதைகளோடு தான்
புலுடாப் பாராளுமன்றம் உடைபாடுகழுடன் கடிபடுகிறது

முப்படையும் கட்டியும்
முள்ளி வாய்க்கால் வரையும்  துடித்து மடியென
கப்பலுக்காய் காக்க வைத்தவர்கள் யார்
உடலில் கட்டிய குண்டோடு கரும்புலிகளாய்
வெடித்துச் சிதறிய போராளிகள்
தியாகத்தை தின்று கொழுப்போர் யார்

எங்களிடமும்
உழைப்பைத் தின்னும் அட்டைகள் கிடக்கிறதென்பதை
புலத்துத் தமிழன் உணருதல் நிகழுமோ
எல்லாத் தேசத்திலும் ஏழையிருக்கிறான்
எம் விடுதலைக்கு உதவ  தோழமை கொள்வோம்

நந்திக் கடலில் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது
இந்தியாவை மீறி எதுவும் நடக்காதென்பதல்ல
சொந்த மக்கள் பலத்தோடு
சிங்கள முஸ்லீம் மலையக மக்களையும்
சேர்த்திணைத்தே வெல்லலாம் என்பதே

வாழ்ந்த கூடுகள் குஞ்சுகள் குதறப்பட்டடும்
ஈனத் தமிழனாய் புலத்திலிருந்து
ஈழம் கேட்பது யாருக்காய் சொல்லுங்கள்
வாழும் மக்கள் தீர்மானிக்கட்டும்
கூடி வாழ்தலும் பிரிந்து போதலும் அவர்கள் உரிமை!.

-கங்கா

10/04/2011கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்