08142022ஞா
Last updateபு, 02 மார் 2022 7pm

விடுதலைப் புலித் தளபதி ரமேஸ் சண்டையில் தான் இறந்தார் என்கின்றது அரசு. யாரும் சரணடையவில்லை வீரமரணமடைந்தனர் என்கின்றது புலி

இப்படியும் அப்படியும் கூறுகின்ற புரட்டுகள், நடந்த உண்மைகளைப் புதைப்பதில்லை. ரமேஸ் உள்ளிட்ட புலித்தலைவர்கள் இராணுவத்திடம் சரணடைந்த உண்மையையும், இலங்கை அரசு அவர்களைக் கொன்றதையும் இந்த வீடியோ அம்பலம் செய்கின்றது.

பேரினவாத அரசு மீண்டும் மீண்டும் பொய்யை உரைக்கின்றது. விடுதலை புலிகளின் தலைவர்கள் எம்மிடம் சரணடையவில்லை. நாங்கள் யாரையும் கைது செய்யவில்லை. நாங்கள் யாரையும் கொல்லவில்லை. இதையே தான் இந்தக் கொலைகார அரசு தொடர்ந்தும் சொல்லுகின்றது. காட்சிகள், படங்கள், ஆதாரங்கள் அனைத்தும் பொய்யானது, அவை அனைத்தும் திட்டமிட்ட புனைவுகள் என்கின்றது அரசு

 

 

 

புலிகள் தளபதி ரமேஸ் வீடியோவையும் இப்படித்தான் என்று மீண்டும் கூறிவிடுவதன் மூலம், உண்மைகள் எல்லாம் பொய்யாகிவிடும் என்று கனவு கண்டபடி சொல்லமுற்படுகின்றது. அரசு யாரையும் கொல்லவில்லை என்றால், ஒரு பகிரங்க விசாரணைக்கு அவர்களாகவே வர முடியும்.

இப்படியிருக்க புலிகளின் தலைவர்கள் அனைவரும் யுத்தத்தில் தான் இறந்தனர் என்று அரசு கூறுகின்றது. புலிகள் தங்கள் தலைவர்கள் சரணடையவில்லை வீரமரணம் தான் அடைந்ததாக கூறுகின்றது. தேவைப்படும் போது அரசியல் பிரிவு சரணடைந்ததாக வேறு புலுடா விடுகின்றது.

வெளிவந்துள்ள வீடியோ அரசை மட்டுமல்ல புலிகளின் பித்தலாட்டத்தையும், அதன் மூடிமறைப்புகளையும் கூடத்தான் அம்பலமாக்குகின்றது. பார்க்க வீடியோவை.

 

சகோதரனே உன் மனதுக்குள் இருந்த கனதியை

எந்தக் கொடுமையாளனும்

உன் கண்களில் வாசித்தறிய மாட்டானாயின்

அவன் மனிதனேயல்ல.

 

நீ நேசித்ததாய் நினைத்துக் கொண்ட

தேசத்துக்காக அவமானப்பட்டு துடிக்கிறாய்

உன் உதடுகள் உச்சரித்த வார்த்தைகள் அர்த்தமற்றவை.

ஆனால் இடையிலான மவுனக் கணங்களில்

உன் தொண்டைக்குழிக்குள்

சிக்கிகொண்டு வெளிவராத வார்த்தைகள்

அவலத்தில் தோய்த்து இரத்தத்தில் பிழியப்பட்டு

காலடி மண்ணையே பெயர்க்கிற கனதியானவை.

புரிகிறது.

திரும்பிப் பார்க்க இனியில்லை அவகாசம் உனக்கு.

கழுத்தை நெரிக்க காலம் அவர்கள் குறித்தாயிற்று.

 

நீதிவழுவாத நெறியான போர் என்று சதிராடி

சிதைத்து வதைத்து உன் கதையை முடித்தவர்கள்

கைவிரித்து கதையளக்கிறார்கள்.

 

உன்னைத் தோளில் சுமந்த சோதரரோ

வீர மலர் வளையங்கள் விருதாயிற்று உனக்கு என

கண்ணில் மண் தூவி

காப்பது யாரெவரை?

 

 

 

 

பி.இரயாகரன் / சிறி

08.04.2011


பி.இரயாகரன் - சமர்