Language Selection

பி.இரயாகரன் -2008
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பரா தனக்கு சரியென்றுபட்ட கருத்தை தனது வாழ்வின் இறுதிவரை முன் வைத்தவர். போராடுவதில் தனது முதுமையை எட்டி உதைத்தவர். பொது அரசியல் சூழல் அவரை அங்குமிங்குமாக அரசியலில் ஆட வைத்தது. ஆனால் பொதுவான அரசியல் சீரழிவுக்குள் மூழ்காது, தன்னையும் தனது கருத்தையும் காப்பாற்றியவர்.

 நடைமுறை ரீதியாக சூழலுக்குள் இழுபட்டு இயங்கிய போதும், தனது கருத்தை அதற்குளளாக ஒருநாளும் விட்டுக் கொடுத்தவர் அல்ல.

 

 பராவை அரசியல் மதிப்பீடு செய்வது என்பது, விமர்சனங்களுடன் உள்ளடங்கியது தான். அவரின் திரோஸ்க்கிய அரசியல் நிலைப்பாடும், தொழிற்சங்க வாதமும், அவரின் இலக்கிய சந்திப்பு தொடர்பான நிலைப்பாடுகளும், இதில் அவரின் சந்தர்ப்பவாதமும் விமர்சனத்துக்குரியதாகவே எப்போதும் இருந்துள்ளது.

 

இவற்றைக் கடந்தும் அவரின் சில சரியான நிலைப்பாடுகளை மதிப்பிட வேண்டியுள்ளது.

 

1. சமகாலத்தில் மார்க்சியம் மீதான பொதுவான தாக்குதல், இழிவாடல்களை எல்லாவற்றையும் மீறி, மார்க்சியம் தான் மக்களின் விடுதலைக்கான ஓரே தத்துவம் என்று மீண்டும் மீண்டும் உரக்கச் சொன்னவர். தனது கருத்துகளை அதற்குள் நின்று முன்வைத்தவர்.

 

2. ஜனநாயகம் என்பது புலியெதிர்ப்பு என்று வரைவிலக்கணம் பெற்ற நிலையில், அதை அவர் எதிர்த்து நின்றவர். இலக்கியச் சந்திப்பை வெறும் புலியெதிர்ப்பு சந்திப்பாக்க எடுத்த முயற்சிகளை எதிர்த்துப் போராடியவர்.

 

3. திரோஸ்க்கிய வாதியாக அவர் இருந்தபோதும், ஸ்ராலினிய காழ்ப்புடன் சமூக இயக்கத்தை ஆராயாது, அதன் இயங்கியல் தன்மையுடன் இணங்கிப் பார்த்தவர். இப்படி முற்றாக ஸ்hரலினை எதிர்த்து தூற்றியவரல்ல.

 

4. சமகால அரசியல் செயற்பாட்டை தனது சுயநலத்துக்காக பயன்படுத்தியவரல்ல. பலர் அப்படிச் செய்த போதும், அவர் தன்னளவில் நேர்மையாக இருக்க முனைந்தவர்.

 

அரசியல் சூழல் சார்ந்த தனிமனித எல்லையும், பொது அரசியல் போக்கும், அவர் கொண்டிருந்த திரோஸ்கியப் பாரம்பரிய அரசியலும் தான், அவரின் தவறுகளுக்கு காரணமாக இருந்தது. சாதகமான போராட்ட சூழல் ஒன்று நிலவியிருப்பின், மக்களுக்காக அர்ப்பணித்து போராடக் கூடிய உள ஆற்றலையும், தனிமனித நேர்மையையும் அவர் தன்னளவில் கொண்டிருந்தவர்.

 

தன் வாழ்வின் இறுதிவரை, வர்க்க போராட்டம் பற்றியே கனவு கண்டவர். இலங்கையின் முழு மக்களும் ஜனநாயகத்தைப் பெறுவதை உணர்வு பூர்வமாக உள்வாங்கி, அதற்காக ஏங்கியவர். வளவளவென்றில்லாமல் கருத்தைச் சொல்வதில் உள்ள திடம் அசாதாரணமானது. இந்த வகையில் தனது முழுக் குடும்பத்தையும், தனது அரசியல் அரங்கில் இட்டுச்சென்றவர். அவர் விடாமுயற்சி உடன் கூடிய உற்சாகம் கொண்ட உழைப்பு, கருத்துப் பிரச்சாரம் செய்வதில் உள்ள திடமான உறுதியான நம்பிக்கை, முதுமையைக் கடந்தும் அவரை இளமையுடன் போராட வைத்தது.

 

பி.இரயாகரன்
18.12.2007