08142022ஞா
Last updateபு, 02 மார் 2022 7pm

தமிழகத் தேர்தலில் இலவசங்களை அறிவித்தது போல், ஈழத் தமிழருக்கு இலவசத் தீர்வுகளை வைக்கின்றனர்

இலவசமாக கோமணத்தைக் கொடுத்து, நிர்வாணமாக்குவதுதான் இலவசத்தின் மகிமை. ஈழத் தமிழனுக்கு இதைத் தருவோம், அதைப் பெற்று தருவோம் என்பது, ஈழத்தமிழனாக அவர்கள் தொடர்ந்து வாழும் உரிமையை இல்லாமலாக்குவது தான்.

1983 முதல் இவர்கள் செய்தது இதையே தான். இவர்கள் முதலில் செய்தது, ஈழ மக்களின் விடிவை குழிதோண்டிப் புதைத்ததுதான். எம்.ஜிஆர் கொடுத்த கோடிக்கணக்கான பணம் முதல் சீமானின் இன்றைய சினிமா வேசம் வரை, தமிழ்மக்களின் குரல்வளையைதான் அறுத்தது. அந்த மக்களின் சொந்த விடுதலை குழிதோண்டிப் புதைத்த அரசியல்தான், அன்று முதல் இன்று வரை இவர்கள் இட்ட நஞ்சு வித்தாகும்.

இன்று ஆளும் கட்சியான திமுக முதல் தமிழினவாதிகள் வரை, இலங்கைத் தமிழரை சொல்லி வாக்கு கேட்டும் பகிஸ்கரித்தும் பிழைக்கின்றனர். ஒருபுறம் இலங்கைப் பிரச்சனைகளுக்கு தீர்வுகள் தருவதாக கூறுவதும் மறுபக்கம் தமிழினத்தின் எதிரிகளை புறக்கணியுங்கள் என்றும் கூறி வாக்குப:பலம் மீது நம்பிக்கை வைத்து நகர்வது வரை, பற்பல வேசங்களின் பின் பலர். சோனியா முதல் சீமான் வரை ஈழத் தமிழன் பெயரில் குரைக்கின்றனர்.

1980, 1983 களில் தொடங்கி ஈழத் தமிழன், தமிழனின் உரிமை என்று கூறிக்கொண்டு, ஈழத் தமிழ் மக்களின் முதுகில் குத்திக்கொண்டு சொத்துகளைக் குவித்தனர். இதற்காக அதிகாரத்தை பெற்றுக் கொள்வது தான், கடந்த 30 வருடமாக நடந்து வருகின்றது. ஈழத் தமிழனோ இன்று அனைத்தையும் இழந்து விட்டான். ஈழத் தமிழனுக்கு விடுதலையும் தீர்வும் பெற்றுத்தருவதாக கூறியவர்கள் தங்கள் பின்னால் சொத்தை அதன் மூலம் சேர்த்துக் குவித்து வைத்திருகின்றனர். பெரிய கட்சி வைத்திருக்கின்றவர்களில் இருந்து ஈழ தமிழினவாதம் பேசும் தமிழ் தேசியவாதிகள் வரை இதற்கு விதிவிலக்கு கிடையாது. தமிழக மக்களை தமிழன் பெயரால் மொட்டை அடித்த கூட்டம் தான், இன்று இலங்கைத் தமிழன் பெயராலும் அதை தொடர்ந்து செய்கின்றது. அனைத்து வாக்குறுதியும் இலவசங்கள் தான். ஈழத்தமிழனுக்கு 30 வருடமாக இலவசமாக அள்ளிவீசி, அவர்களின் போராட்டத்தையே ஆரம்பம் முதல் குழி தோண்டிப் புதைத்தனர்.

சொந்த நாட்டு மக்களுக்கு இலவசமாக கோமணம் தருவதாக கூறிக்கொண்டு இருப்பதை புடுங்கும் இந்தத் திருடர் கூட்டம் தான், இலங்கை மக்களுக்கு இலவசமாக தீர்வு பெற்றுத் தருவதாக கூறுகின்றது. என்ன மோசடி.!

ஜனநாயகம், தேர்தல், மக்கள் வாக்குப் போடும் உரிமை, மக்களின் தேர்வு என்று கூறிக்கொண்டு, உலக மகா திருடர்கள் தான் தேர்தலில் நிற்கின்றனர். தங்களை மகா உத்தமர்களாகவும், நாட்டை மீட்க வந்த மீட்சியாளர்களாகவும் காட்டிக் கொள்ளவும், எத்தனை வேசங்களைப் போடுகின்றனர்.

சிங்கள பேரினவாதம் கொன்று குவித்த ஈழத்தமிழினத்தின் பெயரிலும் தொடர்ந்து பிழைத்துக்கொள்ள முனைகின்றனர். இந்தியாவின் துணையுடன் சிங்கள பேரினவாதம் தமிழனைக் கொன்று குவித்தது, புலியின் இறுதிக்காலத்தில் மட்டும் நடக்கவில்லை. 1980 கள் முதல் மாறிமாறி கூட்டணி அமைத்த அனைத்து கட்சிகளின் துணையுடன் தான் தொடர்ந்து இது அரங்கேறி வந்தது.

ஈழ தமிழ் மக்களின் போராட்டத்தை நசுக்க, உதவியின் பெயரால் ஈழப் போராளிகளை கூலிப்படையாக வளர்த்த காலம் முதல் ஈழ மக்களுக்கு புதைகுழி வெட்டப்பட்டு வந்தது. தமிழ் மக்களுக்கு தீர்வைப் பெற்று தருவதாக மகுடி ஊதி கூறும் சோனியாவின் இன்றைய கூத்து வரை, அனைத்தும் இலங்கை தமிழ் மக்களுக்கு எதிரானது தான். தமிழகத்து ஈழ தமிழினவாதிகள் இதன் பின் நடத்துகின்ற அரசியல், இதை விட்டால் அவர்களுக்கு வேறு அரசியல் தெரிவு இல்லை என்ற அளவுக்கு, ஈழத் தமிழ் மக்களை சொல்லி பிழைக்கின்ற பக்கா மோசடிக்காரர்கள் அவர்கள்.

இந்திய மக்களின் விடுதலைக்காக அந்த மக்களை அணி திரட்டிப் போராடாத, தேர்தல் பாதை திருடர் பாதை என்பதை அறிவித்து கிளர்ச்சி செய்யாத எந்த அரசியலும், மக்களை ஏய்த்துப் பிழைக்கும் பித்தலாட்டமாகும். இதில் ஈழ மக்களை சொல்லிப் பிழைப்பது, கேடுகெட்ட பொறுக்கித்தனமாகும்.

ஈழத் தமிழ் மக்கள் தான், தமக்காக தமது உரிமைக்காக போராடும் உரிமை பெற்றவர்கள். இதை ஏற்றுக் கொள்ளாத அனைத்தும், ஈழத் தமிழ் மக்களுக்கு எதிரானது. இதை முன்வைத்து போராடாத எந்த அரசியலும், ஈழத்தமிழ் மக்களுக்கு எதிரானது. தேர்தலில் நிற்கும் திருடர்கள் முதல் இந்த திருட்டில் பங்கு கொள்ளாத ஈழத் தமிழினவாதம் பேசும் அனைவரும் ஒரே அச்சில்தான் ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராகப் பயணிக்கின்றனர்.

 

பி.இரயாகரன்

06.04.2011


பி.இரயாகரன் - சமர்