"சிக்கலான ஒன்றின் வளர்ச்சிப் போக்கில் பல முரண்பாடுகளைக் காணலாம். இவற்றில் ஒன்று கட்டாயம் முதன்மை முரண்பாடாகவே உள்ளது. இதன் வாழ்வும் வளர்ச்சியும் இதர முரண்பாடுகளின் வாழ்வையும்; வளர்ச்சியையும் தீர்மானிக்கின்றது அல்லது அவைகளின் மீது செல்வாக்குச் செலுத்துகிற முதன்மை முரண்பாடாகவே உள்ளது." முரண்பாடு பற்றி மாவோவின் கூற்று இது.

இதை மறுப்பது மார்க்சியமல்ல. ஆம், இது சர்வதேசியத்துக்கு எதிரானது. மீனவர் படுகொலையை முன்னிறுத்தி, மற்றைய முரண்பாடுகள் வாழமுற்படுவதையும், தீர்வு காண முற்படுவதையும் மூடிமறைப்பது சந்தர்ப்பவாதமாகும்.

இந்திய மீனவர்கள் படுகொலைக்கு எதிராக போராடுவதை இலங்கை மீனவர்களோ, இலங்கை மார்க்சியவாதிகளோ என்றும் எதிர்த்ததில்லை. அதை ஆதரிக்கின்றனர், தம்மாலான எல்லையில், அதற்காக குரல் கொடுக்கின்றனர், போராடுகின்றனர். மீனவர் படுகொலையில் இலங்கை மீனவர்கள் தான் முதலில் கொல்லப்பட்டனர். இப்படியிருக்க இதை மட்டும் நாம் எப்படி வேறுபடுத்தி அணுகியிருக்கமுடியும்! சொல்லுங்கள். ம.க.இ.க இலங்கை மார்க்சியவாதிகளைக் பார்த்துக் கூறுகின்றது "நடந்த அநீதி, கொடூரம் குறித்து பாராமுகமாக இருப்பதினால் வந்து விடும் என்று நினைத்தால் அது பேதமை, கண்டித்தக்கத்து" என்கின்றனர். இப்படி கூறி இதை திசைதிருப்புவது தான், இங்கு கண்டிக்கத்தக்கது.

இலங்கை மார்க்சியவாதிகள் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை ஆதரிப்பதாக காட்டுகின்ற குறுகிய இட்டுக்கட்டிய தர்க்கத்தைக் கொண்டு, சந்தர்ப்பவாத அரசியல் ம.க.இ.க நடத்த முனைகின்றது. வினவு பின்னோட்டங்களில் இலங்கை மார்க்சியவாதிகள், தாங்கள் இந்தப் படுகொலைகளைக் கண்டிப்பதாக அடிக்கடி கூறிக்கொண்டு தான், அவர்களுக்கு விளக்க முற்படுகின்றனர். இப்படி சர்வதேசிய அரசியலோ, கேவலமாக்கப்பட்டு இருக்கின்றது. ஏதோ ம.க.இ.க மட்டும் தான் இந்தப் படுகொலைகளை எதிர்த்துப் போராடுவதாகவும், இலங்கை மார்க்சியவாதிகள் கொலையை ஆதரிப்பதாகவும் இட்டுக்கட்ட முனைகின்றனர். இது இலங்கை மார்க்சியவாதிகள் மேலான, பேதமையுடன் கூடிய அவதூறாகும்.

 

ம.க.இ.கவும், இந்திய மீனவர்களும் மீனவ படுகொலைக்கு எதிராக போராடுவதால், இலங்கை மீனவர்களுக்கும் இலங்கை மார்க்சியவாதிகளுக்கும் ஏதாவது பாதிப்பு தான் உண்டா!? இல்லை. அந்தப் போராட்டத்தை அவர்கள் ஆதரிக்கின்றனர். அப்படியிருக்க இங்கு முரண்பாடு எங்கு இருக்கின்றது? படுகொலைக்கு எதிரான போராட்டத்தை முன்னிறுத்தி, எல்லை கடந்து மீன்பிடிக்கும் உரிமையாக அதை முன்வைத்தும், அதிலும் றோலர் (Trawler) மற்றும் தடைசெய்யப்;பட்ட வலையைக் கொண்டு மீன்பிடிக்கும் எல்லை வரை இதை விரிவாக்கும் போதுதான் இதில் முரண்பாடு வருகின்றது. படுகொலைக்கு எதிரான முதன்மை முரண்பாடு மேல், எல்லை கடந்து செயற்படும் முரண்பாடு தீர்வு காண முற்படுகின்றது. இலங்கையில் தடைசெய்யப்பட்ட றோலர் மற்றும் வலையை இலங்கைக் கடலில் பயன்படுத்தும் முரண்பாடும் தீர்வு காண முற்படுகின்றது. இப்படியிருக்க எல்லையைக் கடந்து மீன்பிடிப்பதில்லை என்ற இட்டுக்கட்டிய புரட்டை ம.க.இ.க தன் கையில் எடுக்கின்றது.

யுத்தத்தின் பின் எல்லை கடந்த இந்திய மீன்பிடி சார்ந்த சில முரண்பாடு தான், இலங்கை மீனவர்களின் முதன்மை முரண்பாடாக மாறி இருக்கின்றது. றோலர் மற்றும் தடைசெய்யப்பட்ட வலை மூலம் எல்லை கடந்து மீன்பிடிப்பதைத்தான், இலங்கை மீனவர்களும் இலங்கை மார்க்சியவாதிகளும் குறிப்பாக எதிர்க்கின்றனர். றோலர் மற்றும் தடைசெய்யப்பட்ட வலை மூலம் இந்திய மீனவர்கள் எல்லை கடந்து இலங்கைக் கடலில் மீன்பிடிப்பதில்லை என்று ம.க.இ.கவும் ஈழத் தமிழினவாதிகளும் கூறுகின்ற கூற்றின் பின்னணியில் தான், நாங்கள் எதிர்வினையாற்றுகின்றோம். இதைத் திரித்து கொல்லப்படுவதை நாம் ஆதரிப்பதாகவும், மகிந்த கைக்கூலிகளாகவும் எம்மைக் காட்டித் திரிக்கின்ற புரட்டையும் அம்பலமாக்குகின்றோம்.

இலங்கை மீனவர்களின் இன்றைய முதன்மை முரண்பாட்டை மீனவர் படுகொலையின் பின்னணியில் மறுக்கின்றனர். ம.க.இ.கவின் மூடிமறைத்த சந்தர்ப்பவாதம் இதை அங்குமிங்குமாக புரட்டி போட்டு திரிக்கின்றது. இலங்கைக் கடலில் மீன்பிடிக்காத வரை, இதில் முரண்பாடும் கிடையாது, பிரச்சனையும் கிடையாது. இப்படியிருக்க மீன்பிடிப்பது தான் இதில் உள்ள பிரச்சனை. இலங்கைக் கடலில் மீன்பிடிக்கும் போது, எப்படி, யார், எங்கு மீன்பிடிப்பது என்பதைத் தீர்மானிப்பது இலங்கை மீனவர்களின் அடிப்படை உரிமையாகும். இதை மறுத்தும், திரித்தும், இந்திய அரசுக்கு எதிராக எதையும் முன்னிறுத்த முடியாது.

அதேநேரம் இந்திய மீனவர்களை இலங்கை அரசு படுகொலை செய்வதற்கு எதிரான போராட்டம் மிகமிகச் சரியானது. நாம் இதற்கு எதிரானவர்களல்ல. அதேநேரம் இலங்கையின் இனப்பிரச்சனைக்குள் இதைப் புகுத்தி, அதாவது மற்றொரு முரண்பாட்டுக்குள் இதை புகுத்தும் போது அதனுடன் நாம் முரண்படுகின்றோம். இந்த வகையில் இதை, போராட்டம் படுகொலையை கடந்து முன்நகர்த்தும் பல்வேறு அரசியல் உள்ளடக்கத்தை, இலங்கை மார்க்சியவாதிகள் அம்பலம் செய்கின்றனர். பல முரண்பாடுகள், பல வர்க்கம் சார்ந்து, படுகொலைகளை முன்னிறுத்தி செயல்படுவதை மறுப்பது மார்க்சியமல்ல. இதைத்தான் ம.க.இ.க மறுக்கின்றது. "ஒரு குறிப்பிட்ட பிரச்சினை குறித்து, அதன் கொடூரம் குறித்து குறிப்பாக பேசும் போது போது நீங்கள் மற்றதைப்பற்றி பேசவில்லையே, மற்றதை விட்டுவிட்டீர்களே என்று விமர்சிப்பது சரியல்ல என்று கருதுகிறோம்." என்று கூறி, முரண்பாட்டின் மற்றைய பக்கங்கள் செயற்படுவதை மூடிமறைக்கின்றனர். மற்றைய வர்க்கங்களும், மற்றயை முரண்பாடுகளும் இந்தப் படுகொலைகளின் பின்னணியில் தீர்வு காண்பதை "அதன் கொடூரம் குறித்து குறிப்பாக பேசும் போது" கண்டுகொள்ளக் கூடாது என்கின்றனர். இலங்கை மார்க்சியவாதிகள் இதற்கு முரணாக, மற்றைய வர்க்கங்களும், மற்றைய முரண்பாடுகளும் இந்தப் படுகொலைகளின் பின்னணியில் செயல்படுவதை அம்பலப்படுத்துகின்றனர். இதை ம.க.இ.க தன் சந்தர்ப்பவாத எல்லைக்குள் முன்னிறுத்தி முடிமறைத்து அணுகுகின்றது.

இலங்கை இந்தியக் கடல் எல்லையில், இலங்கைக் கடற்படை நடத்திய படுகொலைகள் எண்ணில் அடங்காதவை. இதில் தமிழக மீனவர்கள் படுகொலையும் அடங்கும். இப்படி இது இன்னொரு நாட்டு மீனவர்கள் பிரச்சனை என்ற வகையில், குறிப்பாக இதைச் சந்திக்கும் மீனவர்களின் முதன்மை முரண்பாடாகி குவியமாகி நிற்பது மிகச் சரியானது. இந்த வகையில் இலங்கை மார்க்சியவாதிகள் நிபந்தனை இன்றி அதை ஆதரிப்பது மட்டுமின்றி இலங்கை மீனவர்களும் கூட தங்கள் ஆதரவைத் தெரிவிக்கின்றனர்.

அதேநேரம் இலங்கை வட மற்றும் வடமேற்கு மீனவர்களின் முதன்மை முரண்பாடு, இந்திய றோலர் மற்றும் தடைசெய்யப்பட்ட இழுவை வலைப் பிரச்சனைகளே முதன்மையாகியுள்ளது. முன்பு இந்த முரண்பாடு கடலில் மீன்பிடிக்கும் உரிமை முதல் தம் மீதான படுகொலை ஈறாக இருந்தது. இப்படி முதன்மை முரண்பாடுகள் காலத்துக் காலம் மாறிவந்திருகின்றது, மாறிச் செல்லுகின்றது.

இப்படி இருநாட்டு மீனவர்களும், இருவேறு பிரதான முரண்பாடுகளைச் சந்திக்கின்றனர். ஒரு நாட்டு மீனவர்கள் தங்கள் பிரதான முரண்பாட்டுக்குள், மற்றைய நாட்டு மீனவர்களின் பிரதான முரண்பாட்டை மறுத்து தீர்வு காணமுனைவதோ, அதை அரசியல் ரீதியாக நீர்த்து போகச்செய்து கண்டுகொள்ளாது இருப்பதோ சந்தர்ப்பவாதமாகும். இது மீனவர்கள் கொள்கையுமல்ல, மார்க்சியமுமல்ல. இந்தக் கடலில் மீனவர்களுக்கு எதிராக நடக்கின்ற அனைத்து அநீதிகளுக்கு எதிராக ஒன்றுபட்டு குரல்கொடுப்பதன் மூலம்தான், சரியான கொள்கையையும் போராட்டத்தையும் வழிநடத்த முடியும். இதை முன்னெடுக்க வேண்டியது சர்வதேசியவாதிகளின் கடமை. சர்வதேசியவாதிகள் வால் பிடிப்பவர்கள் அல்ல. மீனவர்கள் கூறுகின்றார்கள், செய்திகள் கூறுகின்றன என்று கூறி, உண்மைகளை திரிப்பது மார்க்சியமல்ல.

இருநாட்டு மீனவர்கள் முரண்பாட்டையும் சர்வதேசியக் கண்ணோட்டத்தில் அணுகி முன்னெடுக்காத போதுதான், இந்த முரண்பாட்டை இந்திய ஆளும் வர்க்கங்களும், இலங்கை ஆளும் வர்க்கங்களும் தமக்கு ஏற்ப கையாளுகின்றன. மீனவர் படுகொலைகள் எல்லை கடப்பதால் ஏற்படுவதாகவும், அதிகம் மீன்பிடிக்கும் ஆசையால் ஏற்படுவதாகவும் … கூறி, இதை திசைதிருப்பி குற்றம் சாட்டுகின்றது. இலங்கை அரசும், டக்கிளஸ் கும்பலும், ரோலர்(Trawler) மற்றும் தடை செய்யப்பட்ட மீன்பிடியை முன்னிறுத்தி காய் நகர்த்துகின்றன. மீனவர்கள் முரண்பாட்டை தங்கள் கையில் எடுத்து கையாள்வதன் மூலம், அவர்கள் இலாபம் அடைய முனைகின்றனர்.

அவர்கள் இல்லாத ஒரு முரண்பாட்டை அவர்கள் கற்பனையில் உருவாக்கவில்லை. இப்படி உண்மையிருக்க, இலங்கை மீனவர்களின் முரண்பாட்டை மறுக்க, டக்கிளஸ்சின் ஆட்கள் என்று முத்திரை குத்திவிடுவது அரசியலற்ற வெற்று அரட்டை. இப்படி அரசியலைத் துறந்து விடும் போது "சமீபத்தில் இலங்கை தமிழ் மீனவர்கள் தமிழக மீனவர்களை பிடித்து ஒப்படைத்த நிகழ்வு குறித்து அது டக்ளசின் செல்வாக்கில் இருக்கும் மீனவர் சங்கத்தின் வேலை என்றும் கூறுகிறார்கள்" என்று கூறி, இவர்கள் கூறுகின்றனர். ஆக இலங்கைக் கடலில் மீன்பிடிக்க இந்திய மீனவர்கள் செல்வதில்லை என்று கூறியவர்கள், இப்படிக் கூறாமல் எப்படித்தான் கூறமுடியும்;! இது இலங்கை மீனவர்களிள் முரண்பாடு இல்லையா!? முரண்பாடே இல்லை என்கின்ற போது, அதை கண்டுகொள்ளாத போது, இருக்கின்ற முரண்பாட்டை டக்கிளஸ் போன்றவர்கள் பயன்படுத்துகின்றனர். இதுதான் எங்கும் தளுவிய அரசியல் உண்மை.

ஆக மீனவர் முரண்பாடுகளையும், பிரச்சனைகளையும் வைத்து ஆளும் வர்க்கங்கள் முதல் பல வர்க்கங்களும் அரசியல் செய்கின்றன. இதை எதிர்கொண்டு போராடுவது அவசியமல்லவா? அதைப்பற்றியெல்லாம் இப்ப பேசமாட்டோம் அப்புறம் என்று கூறிவிடுவது சந்தர்ப்பவாதம். "ஒரு குறிப்பிட்ட பிரச்சினை குறித்து, அதன் கொடூரம் குறித்து குறிப்பாக பேசும் போது" என்று கூறி அதை பேசாது நழுவிவிடுவது தான் இதில் உள்ள சந்தர்ப்பவாதமாகும்.

பிரதான முரண்பாட்டை சுற்றி மற்றைய முரண்பாடுகள் இயங்கும் அதேநேரம், மற்றைய முரண்பாடுகள் பிரதான முரண்பாடாக மாற முற்படுவதும், பிரதான முரண்பாட்டை முன்னிறுத்தி மற்றைய முரண்பாடுகள் தீர்வு காண முற்படுவதும் தான் எங்கும் நிறைந்ததாகும்.

மாவோ முரண்பாடு பற்றிய தன் நூலில் கூறியது போல் "முரண்பாட்டின் குறித்த தன்மையைப் பற்றி ஆராயும் போது நாம் இந்த இரு பக்கங்களையும் ஆராய வேண்டும். அதாவது வளர்ச்சிப் போக்கில் உள்ள முதன்மை முரண்பாட்டையும், முதன்மையற்ற முரண்பாடுகளையும்; மற்றும் ஒரு முரண்பாட்டின் முதன்மைக் கூறையும் முதன்மையற்ற கூறையும் ஆராய வேண்டும். இது போன்று, முரண்பாட்டின் இவ்விரு பக்கங்களுடைய வேறுபட்ட இயல்புகளையும் ஆராயாவிட்டால் நாம் சாரமற்ற ஆய்வில் மூழ்கி…" விடும் அபாயத்தைத் தான், இந்த மீனவர் படுகொலை விவகாரத்தில் தொடர்ந்து ம.க.இ.க அரங்கேற்றுகின்றது.

முரண்பாட்டின் அனைத்துக் கூறுகளையும் (முதன்மை முதன்மையல்லாத) தன் கையில் எடுத்து பாட்டாளி வர்க்கம் அணுகாத போது, விளைவு ஆளும் வர்க்கக் கருத்தியல் மற்றும் நடைமுறைகள் தீர்வாக மாறுகின்றது. இன்று இலங்கை அரசும் டக்கிளஸ் கும்பலும் மீனவர் கொல்லப்படுவது றோலர் மற்றும் தடைசெய்யப்பட்ட வலைதான் காரணம் என்று கணக்கு காட்டி, தாங்கள் மீனவர்களின் நண்பர்களெனக் காட்டிக்கொள்ள முனைகின்றனர். மீனவர்களின் முரண்பாடு மீது, தங்களது இனவாத அரசியல் முரண்பாடுகளை மூடிமறைக்க முனைகின்றனர்.

இந்திய ஆளும் வர்க்கம் இலங்கை மீனவர்களின் முரண்பாட்டை முன்னிறுத்தித்தான், இந்த படுகொலைக்கான காரணத்தை அதற்குள் முன்வைப்பதுடன், தன் கூட்டு சதியையும் மூடிமறைக்கின்றது.

இப்படிப்பட்ட நிலையில் பாட்டாளிவர்க்கம் இந்த முரண்பாட்டை, ஆளும் வர்க்கங்கள் பயன்படுத்தாத வண்ணம் கோசங்களையும், பிரச்சாரங்களையும், கிளர்ச்சியையும் முன்வைக்கவேண்டும். பல வர்க்கங்களின் கோசத்தையும், பல முரண்பாட்டின் மாறும் தன்மையையும் கையில் எடுத்து, தன் சொந்த வர்க்கத்தின் கோசத்தை அதன் மேல் முன்வைக்கவேண்டும். இதை இந்திய மார்க்சியவாதிகள் செய்யாது, வர்க்கம் கடந்த பொதுத்தளத்தில் ஆளும் வர்க்கத்துக்கு ஏற்ற கொள்கைகளுக்குள் இதை முடக்கிவிடுகின்றனர்.

இந்திய ஆளும் வர்க்கம் எல்லை கடத்தல்தான் இந்த படுகொலைக்கு காரணம் என்று கூறும் போது, ம.க.இ.க என்ன சொல்லுகின்றது? மீனவர்கள் எல்லை தெரியாது போகின்றனர், நீர் ஓட்டம் தான் வலையை இழுத்துச் செல்லுகின்றது, கச்சதீவு உரிமை, எல்லை கடத்தல் எங்கும் நடப்பது தான், மோதல் எங்கும் நடப்பது தான் .. என்று இதற்குள்ளேயே எல்லை கடத்தலை திரித்துக் கருத்துக் கூறுவதன் மூலம், இதை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாது. இங்கு ஒரு உண்மை இருக்கின்றது. எல்லை கடந்து மீன்பிடிக்கின்றனர் என்ற உண்மையும், எல்லை கடப்பதால் மீனவர்கள் கொல்லப்படவில்லை என்ற உண்மையும் இங்கு உள்ளது.

இங்கு எல்லை கடந்து இலங்கையில் மீன்பிடித்தல் என்பது, தொடர்ச்சியான செயற்பாடு. யுத்தத்தின் பின் அவை அட்டகாசமாக அத்துமீறுகின்றது. இதை மறுப்பது அரசியல் அபத்தம். இது சந்தர்ப்பவாதத்தின் அரசியல் வெளிப்பாடு. எல்லை கடந்து றோலர் மற்றும் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலையைக் கொண்டு மீன்பிடித்தல், எல்லை கடந்து மீன் பிடிக்கும் முறைமையில் முதன்மை பெறுகின்றது. இதை மறுத்துக் கொண்டு, பாரம்பரிய மீன்பிடி முறைமையை இதற்குள் புகுத்திக்கொண்டு, எல்லைகடத்தல் தான் இதில் உள்ள பிரச்சனை என்று ஆளும் வர்க்க கருத்தியலை தவறானதாக காட்டிவிட முடியாது. அது மற்றொரு முரண்பாட்டின் பின் தன்னை நிலைப்படுத்தி நிற்கின்றது. அப்படியொரு முரண்பாடே இலங்கை மீனவர்களுக்கு இல்லையென்று கூறிக்கொண்டு, அது டக்கிளஸ்சின் பித்தலாட்டம் என்று கூறிக்கொண்டு, நேர்மையான அரசியலை யாரும் முன்வைக்க முடியாது.

"எல்லைதாண்டுவது தான் பிரச்சினையா?" என்று சரியாக கேட்டவர்கள், எல்லைதாண்டி மீன்பிடிப்பதை மறுக்கின்றனர். அதேநேரம் எல்லைதாண்டி மீன்பிடிப்பது பிரச்சனை இல்லை என்கின்றனர். இது எப்படி எந்த அடிப்படையில் பிரச்னை இல்லாமல் இருக்கின்றது!? படுகொலைக்கு எதிரான சரியான கருத்து, இலங்கை மீனவர்களின் வாழ்வுக்கு எதிரான கருத்தாக மாறுகின்றது. இதைத்தான் ஆளும் வர்க்கம் தனதாக்கியுள்ளது.

இந்திய ஆளும் வர்க்கம் எல்லைகளை கடந்து ஆதிக்கம் செலுத்துவது மட்டுமின்றி, அழிவுகார மூலதனத்தை கொண்ட விரிவாக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டது. இங்கு விதிவிலக்காக எதிர்மறையில் குறிப்பாக்கி முன்னிறுத்துவது, இங்கு அதன் பொதுக் குணாம்சத்துக்கு முரணானது. இதை புரிந்து கொள்ளாது, அதன் அரசியல் சூழ்ச்சியை அடிப்படையாக கொண்டு இனம் காண்பது, இதை எதிர்மறையில் முன்னிறுத்தி அணுகமுடியாது. இதை புரிந்துகொள்ள இந்திய ஆளும் வர்க்கத்தின் எதிர்மறை வரலாறுகள் பலவுண்டு. ஈழப்போராட்டத்தை அழிக்க, ஈழப் போராட்டத்தை ஆதரித்து பயிற்சியும் ஆயுதமும் வழங்கியது. இதன் மூலம்தான் ஈழப்போராட்டத்தை இலகுவாக அழித்தது. இங்கு எல்லை பற்றிப் பேசுவது, எல்லையைக் கடந்து செல்லும் சூழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. எல்லையை கடந்து மீன்பிடிக்கும் நிலைமையை உருவாக்கத்தான், படுகொலைக்கு எதிரான போராட்டத்தின் மூலமான கருத்தினை உருவாக்குகின்றனர். இந்திய ஆளும் வர்க்கம் சீக்கியப் போராட்டத்தை, வங்கப் போராட்டத்தை, ஈழப் போராட்டத்தைக் கையாண்ட அதே உத்தியைத்தான், இங்கு இதிலும் கையாண்டு வருகின்றது. ஆம் முரண்பாட்டின் இரு முனைகளையும் கையாண்டு அதை அழிக்கின்றது.

மாவோ முரண்பாடுகள் பற்றி கூறும் போது "முரண்பட்டக் கூறுகளில் ஒன்று மற்றொன்றின் வாழ்விற்கான முன்நிபந்தனையாகின்றது. அவற்றுக்கிடையே ஒத்த இயல்புண்டு. அதனால் அவை ஓரே பொருளுக்குள்ளேயே சக வாழ்வு நடத்த முடியும். ஆக இவைகளை மட்டும் நாம் கூறினால் போதுமா? இல்லை…..அவை ஒன்று மற்றொன்றாக மாறுவது என்பதாகும்…. ஓவ்வொன்றும் தன்னை தன்னுடைய எதிரானதாக மாற்றிக் கொள்கின்றது. தனது நிலையைத் தன்னுடைய எதிரானதின் நிலைக்குள் மாற்றுகின்றது. தனது பண்பை தன் எதிரானதின் பண்பாக மாற்றிக் கொள்கின்றது." என்கின்றார். இங்கு தான் இந்திய ஆளும் வர்க்கம் தன் எல்லை கடந்த அரசியல் பண்பை, எல்லைக்குள் சுருக்கிக் கொள்கின்றது. இலங்கை மீனவர்களின் முரண்பாட்டை அடிப்படையாகக் கொண்ட கோரிக்கைக்குள் நின்று, தன் எல்லை கடந்த பண்பை தான் ஒடுக்கும் வர்க்கத்தின் பண்பாக கோரிக்கையாக இடம்மாற்றுகின்றது. ஈழப் போராட்டத்துக்கு ஆயுதம் வழங்கிய இந்தியா, பின் அதை ஒடுக்கியது எப்படியோ அப்படித்தான் இதுவும்.

இங்கு றோலர் மற்றும் தடைசெய்யப்பட்ட வலை கொண்டு மீன்பிடிக்கும் சுரண்டும் வர்க்கம், தன் ஒத்த இயல்பு சார்ந்து படுகொலை பின்னால் சகவாழ்வு நடத்த முடிகின்றது. தன்னை தனது எதிரியான பாரம்பரிய மீன்பிடி சமூகமாக மாற்றிக்கொள்கின்றது. இப்படித்தான் இந்த விவகாரம் மற்றொன்றாக மாறி அதற்குள் சகவாழ்வு நடத்துகின்றது. இதுபோல் தான் ஈழ ஆதரவு தமிழக தமிழினவாதிகள் இதற்குள் புகுந்து கொள்கின்றனர். இப்படி இருக்க, இதன் மேல் மூடிமறைத்த சந்தர்ப்பவாதத்தை ம.க.இ.க முன்தள்ளுகின்றது.

மீனவர் படுகொலைக்கு வெளியில் எல்லாவற்றையும் பேசக் கோருவது அபத்தம் என்கின்றனர் ம.க.இ.க. இது புலியை அழித்தபின்தான், தமிழ் மக்களின் தீர்வைப்பற்றிப் பேச முடியும் என்று ஜே.வி.பி கூறியது போன்றது. ஆயுதத்தை கீழே வைத்தபின் தான் மாவோயிஸ்ட்டுகளுடன் பேச முடியும் என்று இந்தியா கூறுவது போன்றது.

இந்த மீனவர் படுகொலையின் பின்னணியில் மார்க்சியவாதிகளின் கோசங்கள் போராட்டங்களுக்கு அப்பால், சில தீர்வுகளும் முடிவுகளும் பலதரப்பால் முன்வைக்கப்பட்டு ஒன்று அமுலுக்கு வரமுனைகின்றது. இது மீனவர் படுகொலை பற்றி மட்டும் குறுக்கி, அதற்குள் தீர்வு காண்பதில்லை. இப்படி இருக்க அவை பற்றி கருத்;தின்றி இருப்பதாக பாசாங்கு செய்வது கூட மூடிமறைத்த சந்தர்ப்பவாதம்தான். தமிழக மீனவர் படுகொலையை ஒட்டி மீனவர்கள் நடத்தும் பேச்சுவார்த்தையில், றோலர் மற்றும் இழுவை வலைப் பயன்பாட்டை அனுமதிக்கக் கோரும் கோரிக்கைகள் தான் முதன்மை (இது இலங்கை சட்டத்தின்படி தடைசெய்யப்பட்டது கூட) பெறுகின்றது. இதனால் இந்தப் பேச்சுவார்த்தைகள் முறிகின்றது.

இப்படியிருக்க அண்மையில் தமிழக மீனவர்கள் படுகொலைகளை கண்டிக்கின்றீர்களா, கொல்வது சரியென்று வாதிடுகிறீர்களா? என்று திசைதிருப்பி அதை விவாதிக்கின்றனர். "கொலை செய்வதை ஆதரிக்கவில்லை என்றால் ஏன் கொல்கிறார்கள் என்பதற்கு நீங்கள்தான் விளக்கம் அளிக்க வேண்டும்." என்று கேட்கின்றனர். "தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை எதிர்க்காமல் இருநாட்டு மீனவர் ஒற்றுமையும் சாத்தியமில்லை." என்று வேறு தர்க்கம் செய்கின்றனர். இலங்கை மார்க்சியவாதிகளுடனான தர்க்கங்களை மிகக் கேவலமாகவே, திசைதிரும்பும் விவாதங்கள் இவை. "ஈழத் தமிழினத்தின் மத்தியிலிருந்தே சில வீடணர்களை உருவாக்க முடிந்திருப்பது, நிச்சயமாக ராஜபக்சே அரசின் வெற்றிதான்" இப்படி இலங்கை மார்க்சியவாதிகளை கேவலமாக மறைமுகமாக குறுக்கி தர்க்கம் மூலம் இட்டுக்கட்டி, ம.க.இ.க முன்தள்ளும் அரசியல் தான் சர்வதேசியமா!?

ம.க.இ.க இலங்கை மார்க்சியவாதிகளை தமிழினத்தின் எதிரியாக முன்னிறுத்திதான், தமிழினவாதிகளுடன் சந்தர்ப்பவாத கூட்டு அமைக்கின்றனர். சர்வதேசியத்தின் அடிப்படைகளையும், கடமைகளையும் குழிதோண்டி புதைத்தபடிதான், இலங்கை மார்க்சியவாதிகளை பேரினவாதத்தின் பக்கத்தில் நிற்பதாக இட்டுக்கட்ட முனைகின்றனர். இதை இலங்கை மார்க்சியவாதிகள் எதிர்த்துப் போராட வேண்டியுள்ளது.

"தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை எதிர்க்காமல் இருநாட்டு மீனவர் ஒற்றுமையும் சாத்தியமில்லை" என்ற இந்த உண்மை போல்தான், றோலர் மற்றும் இழுவை வலை கொண்டு மீன்பிடிப்பதை எதிர்க்காமல் இரு நாட்டு மீனவர் ஓற்றுமையும் சாத்தியமில்லை. இதுதான் எதார்த்தம். றோலர் மற்றும் இழுவைவலை கொண்டு மீன்பிடிக்கும் மீனவர்களைச் சார்ந்து பரிந்து நின்று மீனவர் படுகொலையை எதிர்ப்பதா அல்லது றோலர் மற்றும் இழுவை வலை கொண்டு மீன்பிடிக்கும் மீனவர்களைச் சாராது இலங்கை மீனவர்களுடன் ஒன்றுபட்டு எதிர்ப்பதா என்பதை தீர்மானிக்க கோருகின்றது வர்க்க அரசியல். சர்வதேசியத்தை தேர்ந்தெடுப்பதா, அல்லது தேசியத்தை தேர்ந்தெடுப்பதா என்பதுதான் இங்கு மூடிமறைத்த சந்தர்ப்பவாதத்தின் பின்னான அரசியல் விவாதமாகும்.

படுகொலைக்கு காரணம் எல்லை தாண்டுவதல்ல. தடைசெய்யப்பட்ட றோலர் (Trawler) மற்றும் தடைசெய்யப்பட்ட வலையையும் பயன்படுத்துவது கூட காரணமல்ல. இலங்கையின் இறையாண்மை சார்ந்ததுமல்ல. இந்திய தமிழன் என்பது கூட காரணமல்ல.

படுகொலைக்கு காரணம் இலங்கை இந்திய பிராந்திய நலன்களும், சுரண்டும் வர்க்க நலன்களும், பெரு மூலதனத்தின் நலன்களும் பின்னிப்பிணைந்த ஒன்றுதான் இந்தப் படுகொலை. யுத்தத்தின் பின்னணியில், இதைச் சுற்றிய காரண காரியங்களின் அடிப்படையில் தான், இது அரங்கேறியது, அரங்கேற்றப்படுகின்றது. பெருமளவில் இலங்கைக் கடற்படையும், சிறியளவில் புலிகளும் இந்த படுகொலைகளைச் செய்த போதும், இந்தியா மற்றும் வேறு சக்திகளின் பின்னணியில் மூன்றாவது தரப்பும் இதை செய்திருக்கின்ற வாய்ப்புகளும் கூட இங்கு நிராகரிக்கப்பட முடியாது.

இங்கு இலங்கைக் கடற்படை தமிழக மீனவர்களை மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான இலங்கை (தமிழ்) மீனவர்களையும், அகதிகளையும் கொன்று குவித்துள்ளது. கடலில் இறங்கினதாலேயே, அவர்களை கொன்று குவித்துள்ளது. இந்த இலங்கை படை தமிழன் என்பதால் மட்டும் கொல்லவில்லை. 1970 மற்றும் 1989 இல், பல பத்தாயிரம் சிங்கள மக்களையும் கொன்று குவித்துள்ளது. இப்படி இதன்பின் மற்றொரு பரிணாமம் உள்ளது.

இப்படியிருக்க ம.க.இ.க மீனவர் படுகொலையைக் கண்டிப்பது போல் தான், மற்றவர்களும் கண்டிக்கின்றார்களா!? இல்லையெனின் அதன்பின் வேறுபட்ட அரசியலும், அரசியல் நோக்கங்களும், வர்க்க நோக்கங்களும் உண்டு அல்லவா? அந்த நோக்கங்கள் இந்திய மீனவர்களைக் கடந்து இலங்கை மீனவர்களையும் பாதிக்கும் போது, ம.க.இ.க என்ன செய்கின்றது? அதை எதிர்த்துப் போராடவில்லை. தன் சந்தர்ப்பவாதம் மூலம் அதை மூடிமறைத்து பாதுகாக்கின்றது.

ம.க.இ.க காட்ட முனைவது போல், இந்த விடையத்தை படுகொலைக்குள் மட்டும் மற்றைய தரப்பு (தமிழினவாதிகள், றோலர் மற்றும் தடைசெய்யப்பட்ட வலை சார்ந்த சுரண்டல் வாதிகள்…) அணுகவில்லை. இதைக் கடந்து தீர்வுகளையும் காரணங்களையும் கூட மற்றவர்கள் முன்வைக்கின்றனர். இதன் மேல் ம.க.இ.க எதிர்வினையாற்றாது முன்தள்ளும் சந்தர்ப்பவாத அரசியல் மேல் தான், இலங்கை மார்க்சியவாதிகள் எதிர்வினையாற்றுகின்றனர்.

தமிழக மீனவர்கள் படுகொலையை ம.க.இ.க கண்டிப்பது போல்தான், இலங்கை மார்க்சியவாதிகளும் கண்டிக்கின்றனர், போராடுகின்றனர். ஆனால் ம.க.இ.கவுக்கு இலங்கை மார்க்சியவாதிகள் கண்டிப்பதில்லை என்று அடிக்கடி சந்தேகம் வருகின்றது. மீனவர் படுகொலைதான் முதன்மை பிரச்சனை (முதன்மை முரண்பாடு) என்கின்றனர். கண்டனமும், இதற்கு எதிரான போராட்டமும் தான் முதன்மையானது என்கின்றனர். ஆம் மிகச் சரியானது. சரியானதாக இது இருக்க, இதுவல்லாத விடையத்தை பேசும் ஈழ தமிழினவாதத்தையும் அதன் பின்னுள்ள சுரண்டும் வர்க்க மீனவர் நலன்களை எதிர்த்து போராடும் போதுதான், இதில் வர்க்க ஒருமைப்பாடு உருவாகின்றது. இதைச் செய்யாத ம.க.இ.க, சந்தர்ப்பவாதத்துடன் அணுகியபடி அதை அம்பலப்படுத்தும் இலங்கை மார்க்சியவாதிகளை எதிரியாக்குகின்றது. கடலில் இலங்கை மீனவர்கள் சந்திக்கும் முதன்மை முரண்பாடு, றோலர் மற்றும் தடைசெய்யப்பட்ட வலை சார்ந்த தமிழக சுரண்டல்வாதிகளுடன் நடக்கும் போராட்டம் தான். இதைக் கண்டுகொள்ளாது இருப்பது, அப்படி எதுவும் அங்கு நடப்பதில்லை என்று கூறுவதும், அங்கு இந்திய றோலர்கள் மீன் பிடிப்பதில்லை என்று கூறுவதும், அரசியல் சந்தர்ப்பவாதத்தின் வெட்டுமுகமாகும். இதை அம்பலப்படுத்தும் போது, இலங்கை மார்க்சியவாதிகளை இலங்கை அரசின் கைக்கூலிகளாக காட்டமுனைகின்றனர்.

ம.க.இ.க அல்லாத மற்றவர்கள் படுகொலையை முன்னிறுத்தி அதுவல்லாத மற்றையவற்றை பேசும் போது, அதை அம்பலப்படுத்தி நாம் பேசுவதை தவறு என்று கூறுவது, அரசியல் சந்தர்ப்பவாதத்தை அடிப்படையாகக் கொண்டது. அவர்களும் அதைச் செய்வதில்லை. மீனவர் படுகொலையை மையப்படுத்தி அதுவல்லாத மற்றையவற்றை முன்தள்ளும் தமிழினவாத மற்றும் சுரண்டல் போக்குடனும் இணைந்து செல்லும் ம.க.இ.கவின் சந்தர்ப்பவாதத்தை, இலங்கை மார்க்சியவாதிகள் குறிப்பாக இதில் எதிர்த்து நிற்கின்றனர்.

வினவு தனது தளத்தில் இலங்கை மார்க்சியவாதிகள் இதன் மேல் விவாதத்தைத் தொடங்கும் போது, தனது நாட்டாமையுடன் அதை தடுக்க வினவு உடன் தலையிடுகின்றது. இப்படி கருத்து விவாதமில்லாத நிலையில்தான், சந்தர்ப்பவாதத்தை தொடர்ந்து அது முன்நகர்த்துகின்றது. மீனவர் படுகொலையே முதன்மைப் பிரச்சனை, மற்றையவற்றை இதற்குள் பேசக் கூடாது என்பது, இதில் நிலவும் மற்றைய முரண்பாடுகளை மறுத்தலாகும். அதை இப்போது இதற்குள் பேசக் கூடாது என்பது, இதற்குள் சகவாழ்வு நடத்தும் முரண்பாட்டை மறுத்தலாகும். இதன் மூலம் அது தீர்வு காண்பதை ஆதரித்தலாகும். இதன் அரசியல் அடிப்படை, முரண்பாட்டின் எங்கும் நிறைந்த தன்மையை மறுத்தலாகும். முதன்மை முரண்பாட்டை மட்டும் பேசு என்பது, புலிகள் தேசிய போராட்டம் தான் இன்று முதன்மையானது என்று சொல்லி மற்றையவற்றை ஓடுக்கிய அதே கருதுகோள் போலானது. சாதி, வர்க்கம், பால், பிரதேச வேறுபாடு, புலி ஒடுக்குமுறை, ஏகாதிபத்தியத்தனம்…. என்று எதையும், முதன்மையான தேசிய இனப்பிரச்சனைக்குள் பேசக் கூடாது என்று கூறி ஒடுக்கியதுக்கு ஒப்பானதுதான், ம.க.இ.கவின் சந்தர்ப்பவாத நாட்டாமை அரசியல்.

இதில் உள்ள முரண் இங்கு மற்றையவற்றை இதற்குள் பேசக் கூடாது என்பதை, தமிழினவாதிகளிடம் சொல்வது கிடையாது. ஏன் அதை விமர்சனம் செய்வது கூட கிடையாது. இதில் இரண்டு சந்தர்ப்பவாதங்கள்.

1.இதைத்தாண்டி பேச கூடாது என்பது

2. பேசியதை விமர்சனம் செய்யாத போக்கு.

இது எப்படி இருக்கின்றது என்றால், லிபிய மக்களை லிபியா சர்வாதிகாரர்கள் கொல்வதை மட்டும் பேசு. இதற்கு வெளியில் பேசக் கூடாது என்பதாகும். அதாவது கிளர்ச்சியை ஊக்குவித்து ஆயுதம் வழங்கிய ஏகாதிபத்தியம் பற்றியோ, எண்ணைவளத்தை கைப்பற்றத் துடிக்கும் மூலதனத்தைப் பற்றியோ, முஸ்லீம் மக்கள் மேலான மேற்கத்தைய இனவாத சித்தாந்தம் பற்றியோ, இஸ்ரேலிய பிராந்திய நலன் பற்றியோ, லிபியா மீதான ஏகாதிபத்திய ஆக்கரமிப்பு பற்றியோ… இங்கு எதுவும் பேசக்கூடாது என்கின்றது இந்த சந்தர்ப்பவாத அரசியல்.

மேலும் இது எப்படி இருக்கிறது என்றால், குஜராத் கோத்ரா புகைவண்டி எரிப்பை பற்றி மட்டும் பேசு. குஜாராத்தில் முஸ்லீம் மக்கள் மேலான திட்டமிட்ட இந்துத்துவ வன்முறையை பேசக் கூடாது என்ற ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதிய ஜனதாக் கட்சி கோரிக்கை போன்றது இது. "எல்லைதாண்டுவது தான் பிரச்சினையா?" என்று கேட்பது, குஜராத் வன்முறைக்கு காரணம் இந்துத்துவமா? என்று ஆர்.எஸ்.எஸ். காரன் கேட்பது போன்று இருக்கின்றது. ஒரு பிரச்சனையை முழுமையில் வைத்து ஆராய வேண்டும். பகுதியை முன்னிறுத்தி முழுமையை மறுப்பது மார்க்சியமல்ல.

முரண்பாடு பற்றி மாவோ "மேலோட்டமான போக்கு என்பது முரண்பாட்டின் முழுமையான பண்புகளையோ, அல்லது முரண்பாட்டின் ஒவ்வொரு கூறுக்குமுரிய பண்புகளையோ ஆராயத் தவறுவதாகும். ஒரு பொருளை ஆழமாகத் துருவிப் பார்த்து அதிலுள்ள முரண்பாட்டின் பண்புகளை நுணுக்கமாக ஆராயும் தேவையை மறுப்பதும், இதற்கு மாறாக அதைத் தொலைவிலிருந்து நோக்கி, முரண்பாட்டின் மேலோட்டமான தோற்றத்தை மட்டும் ஓரளவு பார்த்துவிட்டு அதற்கு உடனடியாகத் தீர்வு காண முயல்வதாகும்." இதைத்தான் ம.க.இ.க இதில் முன்தள்ளுகின்றது. இந்திய மீனவர்கள் தம்மைப் பாதுகாக்க ஆயுதம் வழங்கு என்றால், இந்திய றோலர் இலங்கை மீனவர்களை ஒடுக்க ஆயுதம் வழங்கு என்ற எல்லை வரை சென்று விடுகின்றது. முரண்பாட்டின் முழுமையான பண்பை மறுத்து, ஒரு குறித்த பண்பை மட்டும் கொண்டதாகும். இந்திய றோலர்கள் (Trawler)அத்துமீறி மீன் பிடிப்பதில்லை என்ற பொய் மூலம், இலங்கை மீனவர்களை றோலர் கொண்டு ஒடுக்க உதவுவதாகும். இதற்கு ஆயுதம் வழங்கினால் என்னதான் நடக்கும்? இலங்கை மீனவர்களின் வலைகளை இந்திய றோலர்கள் அழிக்கவில்லையா!? கடல்வளத்தை அழிக்கவில்லையா!? அழிப்பது மீனவர் சமூகத்தில் அன்றாடம் நடப்பவை தான் என்று அரசியல் விளக்கங்கள் வேறு. வெட்கக்கேடானது. வலைகளை அழிப்பதால் அவர்கள் கொல்லப்படவில்லை என்று தெரிந்து கொண்டே, வலைகளை அழிப்பதை நியாயப்படுத்தும் வர்க்கம் கடந்த இனவாத அரசியல்.

மறுபக்கத்தில் பன்நாட்டு றோலர்கள் அழித்தால் தான் பிரச்சனை, இந்திய றோலர்கள் அழித்தால் பிரச்சனையில்லை என்று காட்ட முற்படுகின்றனர். எல்லை தாண்டுவதில்லை என்பதும், எல்லை இல்லாததால் அதை தெரியாது தாண்டுவதாக கூறியும், நீர் ஓட்டம் தான் வலையை இழுத்துச் செல்வதாக கூறும் இவர்கள், இலங்கை மீனவர்கள் மேலான இந்திய றோலர்களின் (பெரிய விசைப்படகு) அட்டகாசத்தை "ஏழை மீனவர்களின்" வர்க்க கொண்டாட்டமாக காட்டிவிடுகின்றனர்.

இவர்களுக்கு ஆயுதம் வேறு வழங்கு என்கின்றனர். ஆம் நிச்சயமாக இலங்கைக் கடற்படைக்கு எதிராகத்தான். இப்படி வழங்கினால், இலங்கைக் கடலில் இலங்கை மீனவர்கள் மீன்பிடிக்கவே முடியாது.

றோலர்கள் நடத்தும் படுகொலைகள் உலகளாவியது. கடலில் மீனவர்கள் கொல்லப்படுவதில்லை என்று ம.க.இ.கவின் கூற்றுக்கள் அபத்தமானவை, மட்டுமல்ல, அது சந்தர்ப்பவாத பொய்யாகும். றோலர்கள் ஆயிரக்கணக்கில் மீனவர்களை கொன்று குவித்திருக்கின்றது. அதுவும் துப்பாக்கி மூலமும் கூட அரங்கேறியிருக்கின்றது, அரங்கேறி வருகின்றது. அத்துமீறி மீன்பிடிக்கும் றோலருக்கும் சேர்த்து (வர்க்கம் கடந்து) ஆயுதம் கொடு என்ற ம.க.இ.கவின் கோசம், முழுமையான முரண்பாட்டின் பண்பை மறுத்துக் கோருகின்றது. ஆயிரக்கணக்கில் மீனவர்களை எங்கு யார் எப்படி கொன்று குவித்தனர் என்பதை பின்னால் பார்க்கவுள்ளோம்.

இங்கு முதன்மைப் பிரச்சனையை மட்டும் பேசு என்பது, அபத்தமானது. அதற்குள் தீர்வை வைப்பது அதைவிட அபத்தமாகும். முழுமையில்தான் குறிப்பானதை அணுக வேண்டும். குறிப்பானதை முழுமையாகப் பார்க்கவோ, காட்டவோ கூடாது. மாவோ முரண்பாட்டை பற்றி கூறும் போது "ஒருதலைப் பட்ச போக்கும், மேலோட்டப் போக்கும் கூட அகநிலை நோக்குதான். காரணம் புறநிலையில் உள்ளவை அனைத்தும் உண்மையில் ஓன்றுக்கொன்று தொடர்புடையவை. அக விதிகளின் நியதிக்குட்பட்டவை." என்றார். தொடர்ந்து "ஒரு பொருளின் வளர்ச்சிப் போக்கில் உள்ள பல படித்தான கட்டங்களில் கவனம் செலுத்த முடியாதவர்களால் அம் முரண்பாடுகளைச் சரியாக கையாள முடியாது." என்றார். இந்திய இலங்கைக் கடலில் மீனவர் படுகொலை என்ற பிரதான முரண்பாடு, இலங்கை மீனவர்களின் பிரதான முரண்பாடல்ல. ம.க.இ.கவும், ஈழ தமிழினவாதிகளும் மறுக்கின்ற அத்துமீறிய மீன்பிடிதான், இலங்கை மீனவர்களின் முதன்மை முரண்பாடு. இப்படிப் பொருளை முழுமையில் புரிந்து கொள்ளாது திரித்து, முழுமையை மறுத்து முன்தள்ளும் தீர்வுகள் முற்றிலும் அபத்தமானவை. பல விடையத்தில் கருத்து இன்றி மௌனம் சாதித்தும், சிலவற்றில் கருத்துக் கூறி முன்தள்ளும் அரசியல், மூடிமறைத்த சந்தர்ப்பவாதமாகும்.

ம.க.இ.க வின் இந்த மூடிமறைத்த சந்தர்ப்பவாதத்தை இலங்கை மார்க்சியவாதிகள் கேள்வி கேட்பதால் தான், இலங்கை மார்க்சியவாதிகள் படுகொலையைக் கண்டிப்பதில்லை என்று அவதூறாக இட்டுக் கட்டித் திரிக்கின்றனர். இப்படிக் காட்டித்தான், தங்களைத் தாங்கள் முடிமறைக்க முனைகின்றனர்.

இதற்கு அமைவாக எல்லை கடத்தலுக்கும், தடை செய்யப்பட்ட மீன்பிடிக்கும், இலங்கை மார்க்சியவாதிகள் கொலையைத் தீர்வாக கருதி ஆதரிப்பதாக வேறு இட்டுக் கட்டுகின்றனர். இப்படி கேவலமாக அரசியலைத் துறந்து முன்வைக்கும் அவதூறாகும் இது. சர்வதேசியவாதிகள் இப்படித்தான் இலங்கை மார்க்சியவாதிகள் மேல் சேறடித்து, இலங்கை அரசியலை ம.க.இ.க நடத்துகின்றனர். ம.க.இ.க விவாதத்தை திசைதிருப்ப இலங்கை மார்க்சியவாதிகள் கொலையைக் கண்டிப்பதில்லை என்றும், தீர்வாக கொலையை ஆதரிப்பதாக கூறுகின்ற தர்க்கம் விடையத்தை மூடிமறைக்கத்தான் உதவுகின்றது. இப்படி இதற்கு இலங்கை மார்க்சியவாதிகளை முத்திரை குத்தி முடக்கி, மீண்டும் மீண்டும் அதற்கு பதிலளிக்க வைக்கின்றனர். அதேநேரம் கருத்தை வைப்பவர்களை தனிநபராக மாற்றி, மீண்டும் மீண்டும் அதை குதர்க்கமாக்கி எழுப்புகின்றனர்.

இலங்கை அரசின் கடற்படுகொலையை எதிர்த்தும், கடலில் நடக்கும் சுரண்டலையும், இயற்கை வளத்தை அழிப்பதை எதிர்த்தும், இதனுடனான இனவாதத்தை திணிப்பதை எதிர்த்தும் போராடும் இலங்கை மார்க்சியவாதிகளை, பேரினவாதத்தின் எடுபிடிகளாக காட்டுவது அபத்தம். இப்படி இலங்கை மார்க்சியவாதிகளை, மார்க்சியவாதிகளா என்று சந்தேகம் ம.க.இ.கவுக்கு வருகின்றது.

மீனவர் படுகொலையில் முதலில் கொன்றது இலங்கை மீனவர்கள் என்பதையும், அது தொடர்ந்தும் இலங்கை மீனவர்களை ஒடுக்கியும் வருகின்றது. இந்தப் பொது உண்மை மேல்தான் தமிழக மீனவர்களைத் தாக்குவதுடன், அவர்களைக் கொல்லுகின்றனர். இந்தப் பரிணாமங்கள் காலத்துக்காலம், இடத்துக்கு இடம் மாறி வந்திருக்கின்றது. இதை எதிர்த்து நின்ற இலங்கை மார்க்சியவாதிகளைப் பார்த்து, இதை ஆதரிப்பதாக கூறுவது அபத்தம். இப்படி கூறுவதும், காட்டுவதும் கூட அரசியல்ரீதியாக தவறான அரசியல் போக்கில் இருந்தான வெளிப்பாடாகும்.

புலிகளும் அரசும் பேச்சுவார்த்தையை முறித்து யுத்தம் தொடங்கிய காலத்தில், ம.க.இ.க இலங்கையில் நடந்த சம்பவங்களை திரிக்கத் தொடங்கியது. புலியின் செய்தியை அடிப்படையாகக் கொண்டும், ஈழத்து இனவாதிகள் சார்ந்தும் உண்மைகளைத் திரித்தனர். இன்று மீனவர்கள் கூறுகின்றனர் என்று கூறுவது போல், செய்திகள் கூறுவதாக கூறினர். தங்கள் சந்தர்ப்பவாதத்தை மூடிமறைக்க, வால்பிடித்து அதை வழிகாட்டினர். அன்றைய சம்பவங்களை திரித்து புலிகளை விமர்சிக்காத அதேநேரம், சந்தர்ப்பவாத அரசியல் நிலையெடுத்து ஒருதலைப்பட்சமாக தமிழினவாதிகளுக்கு பின்னால் மார்க்சியத்தைப் புதைத்தனர்.

யுத்தத்தின் பின் தமிழினவாதிகளை சார்ந்து நின்று, சர்வதேச எழுத்தாளர் மாநாட்டைக் கூட பேரினவாதிகளிடம் பணம்பெற்று நடத்துவதாக புதியஜனநாயகம் அவதூறாக எழுதியது. இப்படி தொடர்சியாக பல சம்பவங்கள். ஒரு இந்திய மார்க்சிய லெனினிய இயக்கம் ஈழ தமிழினவாதம் சார்ந்து நின்று அணுகித் திரிப்பதன் மூலம், இலங்கை மார்க்சியவாதிகளை பேரினவாதத்தின் எடுபிடிகளாகக் காட்டி தமிழினவாதத்தை தம்முடன் தக்கவைக்க முனைகின்றனர்.

இந்த வகையில்தான் தமிழக மீனவர் படுகொலையை ஒட்டிய பிரச்சனையில் மூடிமறைத்த சந்தர்ப்பவாதத்துடன் நழுவிச் செல்வதும், திசைதிருப்ப முனைவதன் மூலமும் இலங்கை மார்க்சியவாதிகளை தமிழக மீனவர்களின் எதிரியாக காட்ட முனைகின்றனர்.

தமிழக மீனவர் படுகொலையை வைத்து அரசியல் செய்யும் தமிழக இனவாதிகளை பற்றியும், றோலர் (Trawler) மற்றும் இழுவை வலை மூலமான சுரண்டலையும் பற்றிப் பேசக் கூடாது என்கின்றனர். ஆக இங்கு

1.தமிழக மீனவர்களின் நண்பன் இலங்கை மீனவர்களா? அல்லது

2. இனவாதிகளும், றோலர் மற்றும் இழுவை வலை பயன்படுத்தும் சுரண்டல்வாதிகளா?

என்ற கேள்வி இங்கு அடிப்படையானதாகி விடுகின்றது. ம.க.இ.கவின் மூடிமறைத்த சந்தர்ப்பவாதம் இரண்டாவதை தெரிவு செய்கின்றது. முதலாவதை நிராகரிக்கின்றது. தமிழக இலங்கை மீனவர்களின் ஒருமித்த குரல் என்பது, கடல்வளத்தையும் யார் எப்படி பயன்படுத்துவது என்பதும், கடலின் இயற்கைச் சூழலை பாதுகாக்கும் பொதுக் கொள்கைக்கு உட்பட்டது. பன்நாட்டு மீன்பிடியை எதிரியாக மிகச் சரியாக சுட்டிக்காட்டி பேசுபவர்கள், றோலர் மற்றும் இயற்கையை அழிக்கும் வலையை பயன்படுத்தி மீன்பிடிக்கும் சுரண்டல் வர்க்கத்தை எதிரியாக காட்டுவது கிடையாது. பாரம்பரிய மீன்பிடிக்கும் மீனவர்களுக்குள், அதை புதைக்கின்றனர்.

இப்படி நாகை மீனவர்களின் வாழ்வு பற்றிய உண்மைக்குள், ம.க.இ.க வின் வினவு தளம் திட்டமிட்டு புதைத்த உண்மைகள் பல.

1. சிறிய (300) பெரிய (750 - இதன் பெறுமதி 35 லட்சம்) விசைப்படகு (Trawler) என்று கூறி, றோலர் வகை மீன்பிடி முறையை மூடிமறைத்தனர். "ஏழை மீனவர்கள்" என்று கூறி, வர்க்கங் கடந்த நாகை மீனவர்கள் தான் அனைவரும் என்ற விம்பத்தை உருவாக்கினர்.

2. பெரிய "விசைப் படகுகள்" (Trawler) எந்த வகையான வலையை வீசி, எங்கே, எப்படி மீன்பிடிக்கின்றனர் என்பதை மூடிமறைத்தனர்.

3. நாகை மீனவர்கள் எல்லை கடந்து இலங்கைக் கடலில் சென்று மீன்பிடிப்பதை நிறுத்தும் தீர்மானத்தை பற்றி, மௌளமாக மூடிமறைத்தனர்.

4. "இலங்கை கடற்படையின் முக்கிய நோக்கம் தமிழ் மீனவர்களை தொடர்ந்து அச்சுறுத்தி, மிரட்டி பாக் நீரிணை மீன்வளத்தை சிங்கள மீனவருக்காக பாதுகாப்பதுதான் என்று நாகை மீனவர்கள் கூறுகிறார்கள்." சிங்கள மீனவர்கள் இலங்கை வடகடலில் மீன் பிடிப்பதாக தமிழக மீனவர்கள் கூறுவதாக கூறி, மீனவர்களிள் பெயரில் அரசியல் செய்வது கேடுகெட்ட வங்குரோத்து அரசியலாகும். "இதற்கு மேல் இதன் அரசியல் பரிமாணத்தை அவர்கள் உணர்ந்திருக்கவில்லை" என்று கூறும் வினவு, இதற்கு மேல் அதை உணர்த்தியது கிடையாது என்ற உண்மைதான், இங்கு இதன் மீதான அரசியல் பரிணாமம்.

5."முள்ளிவாய்க்கால் போருக்கு பிறகு இப்போது சிங்கள மீனவர்கள் அதிகம் வருகிறார்களாம். இவ்வளவு நாட்கள் புலி பயத்தில் இருந்தவர்கள் இப்போது அடிக்கடி வருகிறார்கள்.” இவ்வளவு நாட்கள் நீங்க சம்பாதிச்சிட்டீங்க, இனி நாங்க சம்பாதிக்கிறோம், இங்கு வராதே” என்றுதான் அவர்கள் சொல்வார்களாம். இலங்கையை சேர்ந்த தமிழ் மீனவர்கள் எப்போதாவதுதான் வருவதாக நாகை மீனவர்கள் சொல்கிறார்கள்." என்று ஏழை மீனவர்கள் பெயரால், பெரிய விசைப்படகு (35 லட்சம் பெறுமதி) காரர்கள் கூறுவதாகக் கூறுகின்ற பொய் சில உண்மைகளை பொய்யால் மூடிக்கொண்டுள்ளது. சிங்கள மீனவர்கள் வருகின்றனர் என்பது, இலங்கை வரைபடத்தை தலைகீழாக்கி, ஈழத் தமிழினவாதிகள் இட்டுக்கட்டிச் சொல்லும் அதே பொய்தான். எந்தக் கரையோர சிங்கள மீனவர்கள் இங்கு வருகின்றனர்? தெற்கு மற்றும் தென் கிழக்கு சிங்கள மீனவர்கள், இலங்கையை சுற்றி வடக்கு மற்றும் வட மேற்கு கரைக்கு வருகின்றார்களா!? இந்தக் கடலில் வடக்கு தமிழர் அல்லாதவராக வரக் கூடியவர்கள் புத்தளம் மற்றும் நீர்கொழும்பைச் சேர்ந்தவர்கள் தான். அவர்களில் தமிழர், முஸ்லீம் சிங்களவர் என்று பல இனக் கலப்பு கொண்டவர்கள். அவர்களின் முன் மிகப்பெரிய கடல் உள்ள போது, அவர்கள் இங்கு ஏன் வர வேண்டும்!? "முள்ளிவாய்க்கால் போருக்கு பிறகு இப்போது சிங்கள மீனவர்கள் அதிகம் (அடிக்கடி) வருகின்றார்"கள் என்றால் எங்கே? அதாவது எந்தக் கடலில்? வலையை நீர் ஓட்டம் இழுத்துச் செல்லுகிறது, எல்லை தெரியாது,.. இதெல்லாம் இதற்குள் தானா!? அதிகம் சிங்களவர் வருகின்ற அந்த இடத்திலா?

6."கடலில் எல்லை என்று எதுவுமில்லை என்பதே அனைத்து மீனவர்களின் ஒருமித்த குரலாக இருக்கிறது. ஒரு வேளை அப்படி ஒரு எல்லை போட்டாலும் அதை அமல்படுத்துவது சாத்தியமே இல்லை. எல்லை தாண்டி பிடிக்கிறார்கள் என்று சொல்லும் கொழுப்பெடுத்தவர்களை ஒரு படகில் ஏற்றி எல்லையை காட்ட சொன்னால் எந்த காலத்திலும் காட்ட முடியாது…. ஆனால், எப்போதும் பிடித்த மீன்களை அபகரிப்பது, வலை, டீசல், ஐஸ் பாக்ஸ், மீன் இருப்பதைக் காட்டும் கருவி, எக்கோ கருவி, திசை காட்டும் ஜி.பி.எஸ். ஆகியவற்றை பிடுங்கிக் கொள்வது, சமையல் பொருட்களை கைப்பற்றுவது, அடுப்பையும் மருந்து மாத்திரைகளையும் எடுத்து கடலில் வீசுவது.." எல்லையில்லை என்ற உண்மை, எல்லை தெரியாது என்ற அர்த்தமாகுமா? மீனவர் சமூகத்தை பார்த்து மேற்கண்டவாறு கேட்பது கேலி செய்வதாகும். அவர்களுக்கு எல்லை தெரியாது என்று கூறுவது, சந்தர்ப்பவாத அரசியலுக்கு ஏற்ற புரட்டு. கடலே வாழ்வாக கொண்ட மீனவனுக்கு தான் எங்கு நிற்கின்றேன், எந்த இடத்தில் எந்த மீன் இருக்கும் என்ற வாழ்வுசார் அறிவுதான் அவனின் உழைப்பு. இதை சந்தர்ப்பவாதத்துக்கு ஏற்ப கொச்சைப்படுத்தக் கூடாது. "மீன் இருப்பதைக் காட்டும் கருவி, எக்கோ கருவி, திசை காட்டும் ஜி.பி.எஸ்." கருவிகள் கூடவா எல்லையை வரையறுக்கவில்லை? எல்லையைக் காட்டவில்லை? இதை என்னத்துக்கு தான் கொண்டு செல்லுகின்றனர் என்பதை, கொழுப்பேறியவர்கள் தான் கூற வேண்டும். "எல்லை போட்டாலும் அதை அமுல்படுத்துவது சாத்தியமே இல்லை" என்ற கூற்று "கொழுப்பெடுத்தவர்"களின் கூற்று. ஆம் சுரண்டும் மூலதனத்துக்கு எல்லை கிடையாது. கடலைச் சூறையாடி, இலங்கை மீனவர்களை ஒடுக்கும் கொழுப்புதான் இங்கு வெளிப்படுகின்றது. இதற்கும் மீனவர் படுகொலைக்கும் எந்த சம்மந்தமுமே கிடையாது.

மீனவர் படுகொலையை வர்க்கமற்ற இனவாதத்துக்குள் இட்டுக்கட்ட முன்வைக்கும் மற்றொரு வாதமான "ஏழை மீனவர்கள் யாரும் எல்லை தாண்டி பிடிப்பதினாலோ, இல்லை தடை செய்யப்பட்ட வலைகளை வைத்து மற்ற மீனவரது வளத்தை கைப்பற்றுவதானாலோ யாரும் கொல்லப்பட்டதாக தகவல் இல்லை. உலகிலேயே தமிழக மீனவர்கள் மட்டும்தான் அப்படி கொல்லப்படுகிறார்கள். இது ஒரு தனித்த பிரச்சினை." என்கின்றனர். இங்கு இலங்கை மீனவர்களை முதலில் கொன்றது என்ற உண்மையின் ஒரு தொடர்ச்சிதான் தமிழக மீனவர்கள் படுகொலை. ஒன்றில் இருந்து ஒன்றை பிரித்துப் பார்க்க முடியாது. அதுபோல் யுத்தம், அதை சுற்றிய பல கூறுகளுடன் பின்னிப்பிணைந்ததாக இது இருந்தது. யுத்தம் முடிந்துள்ள நிலையில், அதன் எச்சங்கள் அங்குமிங்குமாக இன்றும் தொடருகின்றது. இப்படி இதன் பின்னான பல பரிணாமங்கள் கொண்டது தான் மீனவர் படுகொலை.

மறுபக்கம் உலகளவில் தமிழக மீனவர்கள் மட்டும் தான் கொல்லப்படுகின்றனரா? இ;ல்லை. இலங்கை மீனவர்களும் கூட தான் கொல்லப்பட்டனர். இதே பிரதேசத்தில் சீன மீனவர்களும் தான் கொல்லப்பட்டனர்.

சரி ஆபிரிக்க கரையோரங்களில் ஆயிரக்கணக்கில் மீனவர்களை கொன்றவர்கள், கொன்று வருபவர்கள் பற்றி விபரங்களைப்பற்றிய சிறிய குறிப்புகள் தருவது இங்கு அவசியமாகின்றது.

ஆப்ரிக்க மேற்குக் கரையோர பகுதிகளில் ஐரோப்பிய நாடுகளின் ரோலர் படகுகளாலும், அதில் வரும் மீனவர்களின் துவக்குகளாலும் (குறித்துக் கொள்ளுங்கள் ம.க.இ.க றோலருக்கும் துப்பாக்கி வழங்கக் கோருகின்றது) 1980 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை பல ஆயிரம் ஆபிரிக்க மீனவர்கள் கொலை செய்யப்பட்டனர். குறிப்பாக இந்த அவலத்தை உலகறியச் செய்தது Selling the Future - Mauritania என்ற ஆங்கில ஆவணப்படம் இதன் ஒரு பக்கத்தை எடுத்துக்காட்டுகின்றது.

 

<p>

</p>

 

இதற்கெதிரான போராட்டம் இன்றும் ஆப்ரிக்க நாடுகளிலும், ஐரோப்பிய இடதுசாரிகள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களால் முன்னெடுக்கப்படுகிறது. இப் படுகொலைகளுக்கு எதிரான போராட்டம், ஐரோப்பிய யூனியனின் முற்றுமுழுதான மீன்பிடி மேலாதிக்க அரசியலையும், குறிப்பாக ரோலர் மீன்பிடியையும் எதிர்ப்பதுடன், இயற்கை சார்ந்த சிறு மீன்பிடியையும், ஆபிரிக்க மீனவர்களின் வாழ்க்கை நிலையை அபிவிருத்தி செய்வதை வேலைத்திட்டமாகக் கொண்டுள்ளது. இப்படி பாதிக்கப்பட்ட ஆப்ரிக்க மீனவர்களுக்கு உதவுபவர்களில் பெருமளவினர் ஐரோப்பா சிறு மீன்பிடி அல்லது கரையோர மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களின் மீனவர் சமாசங்களாகும். இவ் அமைப்புகள் அல்லது மீனவர் சமாசங்கள் பல இடதுசாரிகள் சரர்ந்த அமைப்புகள் அல்ல. ஆனால் இந்த சமாசங்களின் அங்கத்தவர்களான ஐரோப்பிய சிறுமீனவர்கள், இன்று ஆபிரிக்க கரையோரத்தில் நாசகார மீன்பிடியில் ஈடுபடும் பெரும்மூலதன நிறுவனங்களின் ரோலர்களால் பாதிக்கப்பட்டவர்களாவர். (இது சம்பந்தமாக சிறு மீனவர்கள், ரோலர்களால் பாதிக்கப்பட்டது பற்றி ஸ்பானிய உதாரணம் மணலை மைந்தனால் எழுதப்படுள்ளது பார்க்க) இதனால் தான் தமக்கு நேர்ந்த கதி தமது ஆபிரிக்க சகோதர தொழிலாளிகளுக்கு நடக்கக் கூடாதென்ற வாஞ்சையினால் ஐரோப்பிய சிறு மீனவர் சமுதாயம் ஆப்ரிக்காவில் ஐரோப்பிய பெரும் மூலதனம் நடத்தும் நாசகார மீன்பிடிக்கெதிராகவும், கொலைகளுக்கு எதிராகவும் போராடுகின்றனர்.

மேலதிக விபரங்களுக்கு

1. Selling the Future - Mauritania என்ற ஆங்கில ஆவணப்படம்

2.http://www.neitileu.no/aktuelt/medieklipp/eu_fiskeri_koloniserer_vest_afrika

3.http://www.xmag.no/id/125.0

4..http://www.bistandsaktuelt.no/Nyheter+og+reportasjer/Arkiv+nyheter+og+reportasjer/Fiskepirater+robber+Afrikas+fattige+fiskere.150589.cms

5. http://www.climatechange.ie/features_articles17.html

இதில் சில நோர்வேஜியன் கட்டுரை. இதை கூகுள் மொழி பெயர்பாக்கியில் மொழி பெயர்த்து ஆங்கிலத்தில் அல்லது மற்றைய ஐரோப்பிய மொழியில் வாசிக்கலாம். இதுபோன்று பல நூறு கட்டுரைகள் மீனவர்கொலைகள் பற்றியும், அதை எதிர்த்த போராட்டம் பற்றியும் பல ஐரோப்பிய மொழியில் வெளிவந்துள்ளது.

இப்படி அங்கும் இங்கும் ம.க.இ.க திசைதிரும்பும் விவாதத்தின் பின் உள்ள உண்மைகள் பற்பல. மூடிமறைத்த சந்தர்ப்பவாத அரசியல், ஒடுக்கப்பட்ட மீனவர்களின் வாழ்வுக்கு எதிரானது.

 

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

30.03.2011