மாவோயிசம் பற்றி பேசுவதற்கு முன்னால் அதுகுறித்தான எங்கள் நிலைப்பாடு என்ன என அறிந்து கொள்வது தேவையானதாகவும், சரியான புரிதலுக்கு உதவுவ‌தாகவும் இருக்கும். மாவோயிஸ்டுகள் பற்றிய இந்த வெளியீட்டை படித்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், மாவோயிஸ்டுகளின் நிலைப்பாடு, அவர்களின் செயல் திட்டம், உத்திகள் குறித்த எங்களின் நிலைக்கும், மாவோயிஸ்டுகள் குறித்த ஜெயமோகனின் புரிதலுக்கும் இடையில் பாரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. மாறாக அவரின் நோக்கம், மாவோயிஸ்டுகளின் மீதான அவரது விமர்சனம் எந்த தளத்திலிருந்து வைக்கப்படுகிறது, எதனுடன் பொருத்தப்படுகிறது, என்னவிதமான வினையாள்கிறது என்பதில் தான் இருக்கிறது.

 

இரண்டாவது கட்டுரையில், மக்கள் யுத்தக் குழுவினர் செயல்படும் பகுதிகளில் அவர் பயணம் செய்து பெற்ற நேரடி அனுபவங்களை பகிர்ந்து கொள்வதனூடாக வாசகர்களையும் அழைத்துச் செல்கிறார். அதை அப்படியே வரிக்குவரி மறுக்க வேண்டுமென்பது அவசியமில்லை. ஏனென்றால் அதில் உண்மைகளும் கலந்திருக்கின்றன. ஆனால் அதிலிருந்து அவர் உருவாக்கும் சித்திரத்தை மறுக்க வேண்டியதிருக்கிறது. ஏனென்றால் அதில் பொய்களும் கலந்திருக்கின்றன.

முதலில், இந்தியாவில் காங்கிரஸ் தலைமையில் நடத்த சுதந்திரப் போராட்டங்கள் அன்றைய அமைப்பான நிலப்பிரபுத்துவ முறையை எதிர்ப்பதினூடாக அமைந்ததாகவும், அதன் வீரியத்தன்மையின் போதாமையால் இடதுசாரிகள் அவர்களிடமிருந்து வேறுபட்டதாகவும் காட்சிகளை நகர்த்துகிறார். ஆனால் அது உண்மையல்ல. காங்கிரஸ் நிலப்பிரபுத்துவ முறையை எதிர்க்கவுமில்லை, அது கூறிய சுதந்திரத்தின் பொருளில் மக்கள் அடங்கவுமில்லை என்பதே உண்மை. பர்தோலியில் கூடிய காங்கிரசின் செயற்குழு தீர்மானங்கள் இதை வெளிப்படையாகவே தெரிவிக்கின்றன.

ஜமீன்தார்களுக்கு நிலவரியை கொடுக்காமல் விவசாயிகள் நிறுத்தி வைத்திருப்பதானது தீர்மானத்திற்கு எதிரானது என்றும், நாட்டின் நல்ல நலன்களுக்கு ஊறு விளைவிப்பதாகும் என்றும் விவசாயிகளுக்கு அறிவிக்குமாறு காங்கிரஸ் செயற்குழு காங்கிரஸ் ஊழியர்களுக்கும், அமைப்புகளுக்கும் ஆலோசனை கூறுகிறது.

ஜமீன்தார்களுடைய சட்டபூர்வ உரிமைகளை தாக்குவதை காங்கிரஸ் இயக்கம் எந்த விதத்திலும் தனது நோக்கமாக கொள்ளவில்லை என்று ஜமீன்தார்களுக்கு உறுதியளிக்கிறது.

இந்த இரண்டு தீர்மானங்கள் மட்டுமல்ல, 1934 ஆம் ஆண்டு காந்தி நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியிலும் இதை மிகத்தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

வர்க்க யுத்தத்தை தடுப்பதற்கு எனது செல்வாக்கின் முழுப்பலத்தையும் பயன்படுத்துவேன் என்பதைப் பற்றி நீங்கள் உறுதியாக இருக்கலாம். உங்களிடமிருந்து சொத்துக்களைப் பறிக்க அநீதியான ஒரு முயற்சி நடந்தால், அப்போது உங்கள் பக்கம் சேர்ந்துகொண்டு இந்த காந்தி போராட்டம் நடத்துவதை நீங்கள் காண‌லாம்.

மட்டுமல்லது, காங்கிரஸை வெள்ளையர்கள் தோற்றுவித்ததன் நோக்கம் இந்தியர்களின் கைகளில் இம்மியளவும் மாறவில்லை என்பதை கல்கத்தாவில் கூடிய இரண்டாவது காங்கிரஸ் மாநாட்டின் முதல் தீர்மானம் வெளிப்படையாகவும், மிகத்தெளிவாகவும் எடுத்து வைக்கிறது.

மகாராணியின் அனுகூலமான,என்றும் மறப்பரிய, கீர்த்திமிக்க ஆட்சியில் ஐம்பது வருடம் முடிவு பெற்றதைக் குறித்து சக்கரவர்த்தினியிடம் கடமைப்படி உண்மையான மகிழ்ச்சிகள் தெரிவிப்பதுடன், பாரத தேசத்தின் எல்லாப் பகுதிகளினின்றும் பிரதிநிதிகள் வந்து கூடிய இந்த ஜனசபை பிரிட்டீஷ் ராஜ்ஜியத்தின் மீது அம்மகாராணி இன்னும் பல வருஷம் ஆளவேண்டுமென்று வாழ்த்துகிறது.

ஆக, காங்கிரஸின் சுதந்திரப்போராட்டம் என்பதும், நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு என்பதும் உள்ளீடற்றவை. சுருங்கச் சொன்னால், காங்கிரஸ் சுதந்திரத்திற்காகப் போராடியது, விடுதலையைப்(!) பெற்றுத்தந்தது என்பதெல்லாம் பாமரத் தனமான பார்வை. அதேநேரம் மக்களின் எதிர்ப்புணர்விலிருந்து கிளம்பிய எழுச்சியை பயன்படுத்திக்கொண்ட, ஜெயமோகன் அவர்களால் இடதுசாரிகள் எனக் குறிப்பிடப்பட்டவர்கள் எப்படி ஓட்டுக் கட்சியாக எதிர்பரிணாமம் அடைந்தனர் என்பது தனிக்கதை.

தெலுங்கானாவில் நிலப்பிரபுத்துவமுறைக்கு எதிராகவும் நிஜாம், ஜமீந்தார்கள் சுரண்டலுக்கு எதிராகவும் தொடங்கிய தெலுங்கானா போராட்டத்தை இராணுவ பலத்துடன் நேரு அரசு முறியடித்தது. அதன் தொடர்ச்சியைப் போல் பின்னர் எழுந்த மக்கள் யுத்தக் குழுவுக்கு அந்தப் பகுதியின் மக்கள் ஆதரவு கிடைத்திருக்கிறது என்பது, வீரம் செரிந்த தெலுங்கானா போராட்டத்திற்கும் மக்கள் யுத்தக் குழுக்களுக்குமான இடைவெளியில் என்ன நிலை நிலவியிருந்திருக்கும் என்பதை எடுத்துக்காட்டாதா? தெலுங்கானா போராட்டம் குவித்து வைக்கப்பட்டிருந்த நில உடமைகளையும், ‘வெட்டிச் சாக்கிரி’ போன்ற கொத்தடிமை முறைகளையும் முடிந்தவரை ஒழித்து நிலப்பங்கீட்டு முறையை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் 80களில் ஜெயமோகன் அந்தப் பகுதிகளில் சுற்றுப்பயணம் செல்லும் போது ஒழிக்கப்பட்ட நிலப்பிரபுத்துவ முறை அங்கு கோலோச்சிக் கொண்டிருந்ததென்றால் அதன் அடிப்படை என்னவாக இருந்திருக்கும்? இந்தியாவின் பிற பகுதிகளைப் போல் அங்கு அரசு ஏற்படுத்திய மாற்றங்கள் மக்கள் யுத்தக் குழுவினரால் பின்னோக்கி இழுக்கப்பட்டதென்றால் கொள்கை ரீதியாக இல்லாமல் பொருளியல் ரீதியில் மக்கள் மக்கள் யுத்தக் குழுவை அங்கீகரித்ததும் ஆதரித்ததும் எப்படி? ஒரு போராட்டத்தை மக்கள் ஆதரிக்க வேண்டுமென்றால், எழுச்சி ஏற்படவேண்டுமென்றால் அதற்கான தேவை சமூகத்தில் இருந்தாக வேண்டும். அதன்படி நிலப்பிரபுத்துவமுறையும் பட்டினியும், சாதிய கொடுமைகளும் எண்பதுகள் வரை நீண்டிருக்கிறது என்றால் அதற்கான காரணத்தை மக்கள் யுத்தக் குழு மட்டும் தங்கள் தோளில் சுமக்க வேண்டுமா?

அவர்களின் ஆளுமையில் இருந்த பகுதிகளில் எனும் சொல்லாடலின் வேதியல் வினைப்பாடுகள் வாசிப்பவர்களை எந்த இடத்தில் தைக்க வேண்டும் எனும் திட்டமிடல் கவனிக்க வேண்டிய ஒன்றாகும். தினமும் போலீஸ் என்கவுன்டர் கொலைகள். நக்ஸலைட் தாக்குதல்கள். போலீஸின் பழிவாங்குதல்கள் என்று அவர் விவரிக்கும் காலம் எந்த இடத்தில் அவர்களின் ஆளுமை என்று முகமூடி தரிக்கிறது என்பதை தனிப்படுத்த வேண்டியது அவசியமல்லவா? குட்டி முதலாளிய ஆயுதக் குழுக்களாக அவர்கள் நடத்திய ஆயுதப் போராட்டங்கள் இந்திய நிர்வாகத்தை மீறிய தனித்த ஆளுமைப் பிரதேசங்களாக ஆகியிருந்ததில்லை. ஜெயமோகன் கூறுவது போல் பொருளியல் காரணங்களுக்காக அவர்கள் செல்வாக்குடன் இருந்த பகுதிகளில், இராணுவவாத எதிர் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பகுதிகளில்; நிர்வாகம் உள்ளிட்டவைகளை கவனிக்கும் அளவுக்கு அவர்களுக்கு தனித்தன்மையான மக்கள் ஆதரவோ, அந்த அடிப்படையிலான பலமோ இருந்ததில்லை. முந்திய‌ தெலுங்கானா போராட்டத்தைப் போன்ற மக்கள் பங்களிப்பு இல்லாத குழு ஆயுத நடவடிக்கை பகுதிகளை அவர்களின் ஆளுமையில் இருந்த பகுதிகளில் எனக் குறிப்பிட வேண்டிய தேவை என்ன? நான் பயணம் செய்தபோது கண்டது இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் அப்போது அழிந்துவிட்டிருந்த அதே நிலப்பிரபுத்துவ முறையைத்தான் எனும் பதிலை ஏற்றி வைப்பதையன்றி வேறென்னவாக இருக்க முடியும்?

மேலாக‌ பாசன வசதி, வறுமை ஒழிப்பு என்று கூறிக்கொண்டாலும், எந்த நூற்றாண்டானாலும் போர்நிகழும் சூழலில் எந்த வளர்ச்சியும் இருக்க முடியாது என்பது தான் உண்மை. உலகின் பெரிய ஜனநாயக நாடாக கூறப்படும் இந்தியாவின் நிர்வாகம் குழுவாத எதிர் இராணுவ நடவடிக்கையை காரணம் காட்டி அந்தப்பகுதியில் ஏற்படுத்த வேண்டிய வசதி வாய்ப்புகளை புறக்கணிக்க முடியுமென்றால்; மோதல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதனாலேயே நிர்வாக ரீதியான புறக்கணிப்பின் தார்மீகத்தை மக்கள் யுத்தக் குழுவின் மீது திணிக்கும் இரசவாதத்தில் என்ன நியாயம் இருக்க முடியும்? அவர் வரையும் சித்திரத்தில் போர் நிகழும் சூழல் எனும் கோடு நுணுக்கமாக இருவேறு பொருளைக் கொண்டு நிற்கிறது என்பது வெளிப்படை. சாதகங்களை தன்னிடம் தக்கவைத்துக் கொண்டு பாதகங்களை எதிரியிடம் தள்ளிவிடும் முதலாளித்துவ பாடம் தான் ஜெயமோகன் அவர்களின் ஊடுநூலாக இருக்கிறது.

கடைமட்டம் வரை திருட வாய்ப்பளிக்கும் முதலாளித்துவ ஊழல் தான் இராணுவவாத நடவடிக்கைகளின் மீதான மக்கள் ஆதரவை பலமிழக்கச் செய்து யுத்தக் குழுவை முற்றுப்புள்ளியை நோக்கி தள்ளியது என்பது மெய்தான். ஆனால் இதை வயிறாற சாப்பிட முடிந்தது என்பதாக குறுக்குவது ஏற்புடையது தானா? என்கவுண்டர், சித்திரவதைக் கொலைகள், வன்புணர்ச்சிகள் மக்கள் யுத்தக் குழுவின் மேல் ஏவிவிடப்பட்டபோது மக்களுக்கு ஏற்பட்டிருக்க வேண்டிய நியாய உணர்ச்சி ‘திருட வாய்ப்பளிக்கும்’ முதலாளித்துவத்தால் பட்டினி மறைந்து உணவு கிடைத்தது என்பதான காரிய வாதத்தில் எதிர்கொள்ள‌ப்பட்டது. உணவைக் கொடுத்து வயிற்றைத் திருடிக் கொள்ளும் அயோக்கியத்தனத்தை ஜோடனைகளால் புனிதமாக்கிவிட முடியுமா? பட்டினி மறைந்ததாக விதந்தோதப்படுவதுதான் மக்களை ஒட்டச் சுரண்டி நிர்க்கதியாய் அலைய விட்டிருப்பதை இந்தியாவெங்கும் காணலாம். தண்டகாரண்ய பழங்குடியினரின் மாவோயிச ஆதரவு, சாப்பாட்டைக் கொடுத்து வாழ்வாதரத்தை பிடுங்கியெடுத்த பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிரானதாகவல்லவா திரண்டிருக்கிறது.

ஆக, மக்கள் பங்களிப்பை புறந்தள்ளி இராணுவவாதத்தை கைக்கொண்ட குழுக்களின் காயங்களை உருப்பெருக்கியும், காரியவாத பெருநோய்களை அடையாளங்களாக சுருக்கியும் சித்திரம் எழுதிக்காட்டும் எழுத்தாளனின் வானவில் கூட்டணி வண்ண‌க் கண்ணாடிகளையே ஆடையாய் உடுத்தி வந்திருப்பது கண்ணுள்ளவர்கள் காணக் கூடுவது.

மாவோயிச வன்முறையும் ஜெயமோகன் வன்முறையும் 1

http://senkodi.wordpress.com/