அண்மையில், Tamilnet இணையத் தளம் வெளியிட்டு, பின்னர் சில தமிழ் தளங்களாலும் அளவுக்கு அதிகமாக “மெருகூட்டப்பட்ட” ஒரு செய்தி தொடர்பாக மறுஆய்வு தனது கருத்தைப் பதிவு செய்ய விரும்புகின்றது.

‘அமெரிக்கப் படை வந்துஇறங்கி  எல்லோரையும் மீட்டுச் செல்லும் என்ற ஒரு நம்பிக்கையை நடேசனுக்கு முன்னாள் புலி ஒருவர் அமெரிக்காவிலிருந்து கொடுத்தார்’ என்பதுவே TamilNet-இன்அந்தச் செய்தியாகும்.

 

யாரோ ஒர் “ஊடகவியலாளர்” சொன்னார் என்று சொல்லிக்கொண்டு Tamilnet வெளியிட்ட இந்தக் கற்பனைச் செய்திக்கு, உண்மையிலேயே Tamilnet-இடம் என்ன ஆதாரங்கள் உள்ளன?

பின்னர் – இந்தச் செய்தியை இன்னும் மெருகூட்டி, அதில் வழுதியின் பெயரையும் இணைத்த தமிழ் தளம், வழுதி இதில் சம்மந்தப்பட்டிருந்தார் என்பதற்கோ, அல்லது என்னவிதமாகச் சம்மந்தப்பட்டிருந்தார் என்பதற்கோ ஏதேனும் ஆதாரங்களை வைத்துள்ளதா?

உண்மை என்னவென்றால் – விடயங்களை ஆழமாக அறிந்த ஒரு சிலரைத் தவிர, வெளிநாடுகளில் இருந்த, இப்போதும் இருக்கின்ற எல்லோருமே, “அவர் சொன்னார்,” “இவர் சொன்னார்,” என்று செவிவழிக் கதைகளைக் கேட்டுத் தான் கதைக்கிறார்கள், எழுதுகின்றார்களே அல்லாமல், உண்மை எவருக்குமே தெரியாது.

திரு. நடேசனுடன் தொடர்பில் இருந்தார் என்று சொல்லப்படும் இந்த “ஊடகவியலார்” யார்?

…அப்படி ஒருவர் உண்மையிலேயே இருக்கிறாரா?

…அல்லது, அப்படி ஒருவர் இருப்பதான மாயை ஒன்றை Tamilnet உருவாக்கி விட்டுள்ளதா?

…அப்படி ஒருவர் இருந்தாலும் அவருக்குக் கூட எந்த அளவுக்கு உண்மை தெரியும்?…

அவர் பேசுவது எந்த அளவுக்கு உண்மை என்பது பற்றி Tamilnet-ற்கு என்ன தெரியும்?…

நடேசனுடன் தொடர்பில் இருந்தார் என்பதற்காக, அவருக்கு எல்லாம் தெரியம் என்று எப்படி எடுத்துக்கொள்ள முடியும்?…

அதற்கும் மேலாக, அவர் நேர்மையுடனும் மனசாட்சியுடனும் தகவல்களைச் சொல்லுகிறார் என்பதற்கு என்ன ஆதாரம் உண்டு?…

எல்லாவற்றுக்கும் மேலாக, Tamilnet-இன் நேர்மையும் இங்கே கேள்விக்கு உள்ளாகின்றது.

இத்தகைய சர்ச்சைக்குரிய இந்தச் செய்தியை வெளியிட முன்னதாக, அவர்கள் குறிப்பிடும் அந்த “முன்னாள் புலி”யைத் தொடர்பு கொண்டு, அப்படி ஒருவர் உண்மையாகவே இருந்தால், அவரிடம் இது பற்றி ஏதேனும் கருத்து கேட்டார்களா?… அவரது கருத்தை அறிய முயன்றார்களா?…

Tamilnet-இன் ஒரு ஆசிரியரும், இந்தச் செய்தியை உருவாக்கிய முக்கிய நபருமான, முத்துத்தம்பி சிறீதரன் அமெரிக்காவிலேயே வாழ்வதால், இந்த “முன்னாள் புலி”யுடன் நிச்சயமாக அவருக்குத் தொடர்பு இருக்கும். அப்படி இருந்தும், அவருடன் தொடர்புகொண்டு சிறீதரன் பேசாமல்விட்டது ஏன்?…

நடேசன் இப்போது உயிரோடு இல்லாத சூழலில், யாரோ ஒரு “ஊடகவியலாளர்” சொன்னார் என்பதை மட்டும் அடிப்படையாக வைத்து ஒரு செய்தியை எழுதும் முன்னதாக, அதன் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தும் பொருட்டு, அதில் சம்மந்தப்பட்டதாகச் சொல்லப்படும் உயிரோடு இருக்கும் நபரிடம் அது பற்றி கேட்க வேண்டும் என்ற ஒரு அடிப்படை ஊடக-தர்மம் கூட TamilNet-ற்கு இல்லாமல் போனது ஏன்?… அல்லது, அவரிடம் அப்படி கேட்க விரும்பாதது ஏன்?…

இவை எதையுமே செய்யாமல் விட்டது, Tamilnet-இன் நேர்மை, நம்பகத்தன்மை மற்றும் உள்நோக்கம் தொடர்பான பல கேள்விகளையே எழுப்புகின்றது.

இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட திரு. நடேசன் இப்போது உயிரோடு இல்லை என்பதால், இவ்வாறான புனை கதைகளை உண்மைக் கதைகளாக ஆக்கிச் சொல்லுபவர்களுக்கு அது வாய்ப்பாகவும் ஆகிவிட்டது.

நடேசன் இப்போது உயிரோடு இல்லை; அவர் தொடர்புபட்ட இந்த கதை பழைய கதை; அவர் இப்போது உயிரோடு வந்து கருத்துச் சொல்ல முடியாது; அதனால், அவருக்கு மரியாதை கொடுத்து அவர் சம்மந்தப்பட்ட விடயத்தை இப்போதைக்கு ஒரு ஓரமாக வைப்போம்.

அதே போல – “அமெரிக்கா வரும்” கதையை Tamilnet-ற்கு சொன்ன “ஊடகவியலாளரின்” உயிருக்கும் ஆபத்தாம், யாராவது பாதுகாப்புக்கு உத்தரவாதம் தந்தாலே வெளியில் வருவாராம். சரி, அவரின் “பாதுகாப்பு பிரச்சனைக்கு”ம் மரியாதை கொடுத்து, அவர் சம்மந்தப்பட்ட கதையையும் ஒரு ஓரமாக வைப்போம்.

ஆனால், Tamilnet வெளியிட்ட ஒரு புதுக்கதை உண்டு. குறிப்பிட்ட அந்த “முன்னாள் புலி” இந்தியாவுக்குச் சென்ற “இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசர்களுடன் புதிய அரசியல் கட்சி ஒன்றை உருவாக்குவது தொடர்பாக உரையாடினார்” என்பதே அந்தப் புதுக் கதையாகும்.

இந்தக் கதைக்கு Tamilnet-இடம் என்ன ஆதாரங்கள் இருக்கின்றன?… அவற்றை அது பகிரங்கமாக வெளியிடுமா?… “அவர் சொன்னார்”, “இவர் சொன்னார்” என்று மேலும் கதை அளக்காமல், உருப்படியான, ஆணித்தரமான ஆதாரங்களை Tamilnet முன்வைக்குமா?…

உண்மை என்னவென்றால் – Tamilnet-இடம் எந்த அதாரங்களுமே இல்லை. எழுதப்பட்டவை எல்லாமே சுத்தமான கட்டுக் கதைகள்.

Tamilnet குறிப்பிடும் இந்த “ஊடகவியலாள”ருக்குப் பல உண்மைகள் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை.

தெரிந்த சிலதுகளை வைத்துக் கொண்டு தெரியாத விடயங்களைப் பற்றியும், தெரியாத ஆட்களைப் பற்றியும் இப்படியானவர்கள் கதைகள் சொல்லித் திரிவதோ, அல்லது அவற்றைக் கேட்டுவிட்டு, தமது ஏதோ ஒரு உள்நோக்கத்திற்காக, இன்னும் கற்பனைகளை இணைத்து, Tamilnet போன்றவர்கள் கண்டபடி எழுதுவதோ ஆழகல்ல; பண்பல்ல. அது ஒரு மிகவும் கீழ்த்தரமான செயல்.

இதில் இன்னொரு விடயத்தையும் பாருங்கள்:எல்லா விடயங்களும் தெரிந்த, எல்லா விடயங்களையும் செய்து முடித்த வெளிச் சக்திகள், ஒன்றுமே செய்திருக்காத நாமே, எல்லாவற்றையும் செய்தது போல, எமக்குள் சேறு வாரி எறியும் இத்தகைய செயற்பாடுகளைப் பார்த்து தமக்குள் ஏளனமாகச் சிரிப்பார்களா இல்லையா?… அமெரிக்கா, இந்தியா, நோர்வே மட்டும் அல்லாமல், சிறிலங்கா அரசாங்கமே எம்மை பார்த்து சிரிக்குமா இல்லையா?

இங்கே ஆகப் பெரிய கவலை என்னவென்றால் – ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றத்திற்கு இடமே இல்லாமல் போய்விட்டது. எவராவது, ஏதாவது உண்மையைச் சொல்ல முற்பட்டால் உடனடியாகச் சூட்டப்படும் “துரோகி” பட்டமும், அந்தப் பட்டத்திற்கு ஆதாரமாகக் கொடுக்கப்படும், முற்றிலும் பொய்யான, முற்றாகச் சோடிக்கப்பட்ட, கற்பனைக் கதைகளும், தேசபக்தி மிக்க பல நல்லவர்களைத் தொடர்ந்தும் ஒதுக்கிவருகின்றது.

“கெட்ட பெயர் எடுத்து விடுவோமோ” என்ற பயத்தையும், “கறை படிந்து விடுமோ” என்ற கவலையையும் நல்ல உள்ளங்களில் ஊட்டி அவர்களது வாய்களை மூட வைப்பது தான் உண்மையான “இனத் துரோகம்” என்பதை மக்கள் புரிந்து அடையாளம் காண வேண்டும்.

உண்மை என்ன?

இதுவரை வெளிவராத ஒரு தகவலை, காலத்தின் தேவை கருதியும், TamilNet.com மற்றும் அவர்களை அடியொற்றும் தமிழ் தளங்கள் வரலாற்றைத் தவறாகப் பதிவு செய்வதைத் தடுக்கும் முகமாகவும் மறு ஆய்வு இங்கே பதிவு செய்கின்றது.

அமெரிக்க படைகள் வன்னியில் இறங்கி விடுதலைப் புலிகளைக் காப்பாற்றும் என்று சொல்லப்பட்டதான தகவலுக்கும் “விடுதலைப் புலிகள்” ஆசிரியர் ரவி மற்றும் வழுதி ஆகியோருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றே மறுஆய்விடம் இருக்கும் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. அவர்கள் இருவருக்கும் இந்த விடயத்தில் தொடர்பு இருப்பதாகச் சொல்லப்படும் கதை எவ்வித ஆதாரமும் அடிப்படையும் அற்ற கற்பனையாகும்.

நடந்த விடயம் இது தான் –

கடைசிப் போர் காலத்தில், ஆரம்பத்தில், அமெரிக்க அரசுடன் விடுதலைப் புலிகள் சார்பில் தொடர்பில் இருந்தவர், அங்கேயே வாழ்ந்துவரும் திரு. உருத்திரகுமாரன் தான்.அவர் கூட, வன்னியிலிருந்த விடுதலைப் புலிகளின் தலைமையின வேண்டுகோளுக்கு அமைவாகவே இந்த விவகாரத்தில் தொடர்புபட்டிருந்தார்.

விடுதலைப் புலிகளைக் காப்பாற்ற அமெரிக்கா படைகளை அனுப்ப ஆயத்தமாக உள்ளதான தகவல், திரு. உருத்திரகுமாரன் மூலமாகவே வன்னிக்கு அப்போது சொல்லப்பட்டது.

இந்தத் தகவலை உறுதிப்படுத்துவதற்காக திரு. நடேசன் அவர்களது வேண்டுகோளுக்கு இணங்க, அப்போது விடுதலைப் புலிகளின் அனைத்துலக விவகாரப் பொறுப்பாளராக இருந்த திரு. செல்வராசா பத்மநாதனும் (கே. பி) அமெரிக்க வெளிவிவகார அமைச்சு (State Department) அதிகாரிகளுடன் தொலைபேசி மூலம் பேசினார்.

அந்த உரையாடலின் விபரத்தைத் திரு. பத்மநாதன் வன்னிக்கு வழங்கியதைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமை சார்பாக, வன்னியிலிருந்து, திரு. புலித்தேவன் அவர்களும் இது தொடர்பாக அமெரிக்க அதிகாரிகளுடன் நேரடியாகப் பேசி இந்த விடயத்தை உறுதிப்படுத்தினார்.

இந்த விவகாரத்தில் அமெரிக்க அரசின் சார்பில் சிறீலங்காவுக்கான அதன் தூதராகவும், தென்னாசியப் பிராந்தியத்திற்கான அதன் வெளிவிகாரத் துணை அமைச்சராகப் பொறுப்பேற்க இருந்தவருமான திரு. றொபேட் பிளேக் அவர்கள் சம்மந்தப்பட்டிருந்தார்.

TamilNet மற்றும் அதனை அடியொற்றும் தமிழ் தளங்கள் எழுதுவது போல, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சு (Defense Department) இந்த விவகாரத்தில் தொடர்புபட்டிருக்கவே இல்லை. குறிப்பாக, TamilNet குறிப்பிட்ட திரு. ஜேம்ஸ் கிளாட் என்பவர் இதில் தொடர்பு பட்டிருக்கவேயில்லை.

அதிலும் முக்கியமாக, TamilNet எழுதாமல் தவிர்த்த விடயம் என்னவெனில், 2009 ஜனவரி 20 ஆம் திகதி ஒபாமா அரசாங்கம் பதவி ஏற்ற பின்னர் – திரு. ஜேம்ஸ் கிளாட், தெற்காசிய மற்றும் தென்கிழக்காசிய பிராந்திய துணை பாதுகாப்பு அமைச்சர் பதவியில் இருந்தே விலக்கப்பட்டுவிட்டார். அவர், முன்னாள் அமெரிக்க அதிபர் புஷ் ஆட்சியின் போதே அந்தப் பொறுப்பில் இருந்தார். அதாவது – வன்னியில் இறுதிப் போர் நடந்த கடைசி ஐந்து மாதங்களாக ஜேம்ஸ் கிளாட் அமெரிக்க அரசாங்கத்தில் எந்தப் பொறுப்பிலுமே இருக்கவில்லை.

அமெரிக்காவின் சார்பில் உண்மையில் இந்த விவகாரத்தில் தொடர்புபட்டிருந்தது அதன் வெளிவிவகார அமைச்சு (State Department) மட்டுமே ஆகும்.

முள்ளிவாய்க்காலில் தரையிறங்குவது தொடர்பில் அமெரிக்கா இரண்டு வேண்டுகோள்களை விடுத்தது. இந்த வேண்டுகோள்கள், நேரடியாக, புலித்தேவன் ஊடாகவே விடுதலைப் புலிகளின் தலைமையிடமே முன்வைக்கப்பட்டன. இதில் திரு. உருத்திரகுமாரனோ, அல்லது திரு. பத்மநாதனோ கூட தொடர்புபட்டிருக்கவில்லை.

1. தம்மால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மூன்றரை இலட்சம் மக்களையும் விடுதலைப் புலிகள் முதலில், உடனடியாக விடுவிக்க வேண்டும்.

2. அமெரிக்க படைகள் தரையிறங்கும் பட்சத்தில், விடுதலைப் புலிகள் தமது ஆயுதங்கள் அனைத்தையும் போட்டுவிட்டு அவர்களிடம் சரணடைய வேண்டும்.இவை தான் அந்த வேண்டுகோள்கள்.

இந்த விவகாரத்தில் – நோர்வேயின் திரு. எரிக் சொல்கெய்ம் அவர்களும் ஒரு கட்டத்தில் தொடர்புபட்டு, சம்மந்தப்பட்ட இதே இரண்டு கோரிக்கைகளையும்திரு. நடேசன் அவர்களிடம் நேரடியாகத் தொலைபேசி ஊடாக முன்வைத்தார்.

ஆனால் – இந்த வேண்டுகோள்களை எல்லாம் விடுதலைப் புலிகளின் தலைவர் திரு. வே. பிரபாகரன் உடனடியாகவே நிராகரித்துவிட்டார் என்பது வேறு விடயம். திரு. பிரபாகரன் இதற்கு உடன்படாதவிடத்து, தன்னால் வேற எதுவுமே செய்ய முடியாது என திரு. எரிக் சொல்கைம் ஊடனடியாகவே திரு. நடேசனிடம் தெரிவித்திருந்தார்.

அது மட்டுமல்லாமல் – “இந்த இரண்டு வேண்டுகோள்களையும் ஏற்று நீங்கள் சரணடையத் தவறுமிடத்து, உலகின் பெரிய சக்திகள் உங்களை அழிக்காமல் விடாது” என்றும் எரிக் சொல்கைம் அந்த நேரத்தில் திரு. நடேசனிடம் சொன்னார்.

இதே நேரத்தில் – போரை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்த ஒரு தரப்பிற்கு திரு. றொபேட் பிளெக் பின்வருமாறு எழுதியிருந்தார்.

From: Blake, Robert O இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Date: Mar 24, 2009 6:41 PM

Thank you.  The United States, from Secretary Clinton, to Ambassador Rice, to myself and many others, is working hard to stop the shelling, assure sufficient food and medicine reach the IDPs in the safe zone; while at the same time doing our best to encourage efforts to persuade the LTTE to allow the civilians to leave.  Bob Blake

இதே நேரத்தில் – இவ்வாறான ஒரு சரணடைவு அல்லது காப்பாற்றும் முயற்சி தொடர்பில் இந்தியத் தரப்பிலிருந்தும் சில ஆட்கள் புலிகளுடன் பேசினர். புதுடில்லியிலிருந்தும், லண்டன் இந்தியத் தூதரகத்திலிருந்தும் இருவர் தொடர்ந்தும் வன்னியுடன் பேசினர்.

அவர்களும், அதே இரண்டு கோரிக்கைகளையே புலிகளிடம் முன்வைத்தனர்.இந்த விவகாரத்தில் ரவி மற்றும் வழுதி ஆகியோரின் பங்கு உண்மையில் வேறு விதமானதாக இருந்ததாகவே மறுஆய்விடம் இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரம் தொடர்பில் – தலைவர் அவர்கள் நேரடியாகவே ரவியிடமும், நடேசன் மூலமாக வழுதியிடமும் ஆலோசனை கேட்ட போது அவர்கள் வேறு கருத்துக்களையே கூறியிருந்தனர்.

வழுதி இந்த விடயத்தை இந்தியாவின் கோணத்திலிருந்து பார்த்ததாகவே மறுஆய்விடம் உள்ள தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

‘விடுதலைப் புலிகள் விவகாரத்தில் இந்தியாவை மீறி அமெரிக்கா எதுவுமே செய்யாது; அவ்வாறு அமெரிக்கா செய்யவும் முடியாது; தலைவர் பிரபாகரனைக் கொல்ல வேண்டும் என்பது தான் இந்தியாவின் நோக்கம் எனில், அதற்குக் குறுக்காக அமெரிக்கா நிற்காது. விடுதலைப் புலிகளைக் காப்பாற்ற வேண்டும் என இந்தியா விரும்பினால், இந்தியா தானாகவே அதைச் செய்யும். அந்தத் தேவை இந்தியாவுக்கு இல்லை எனில், வேறு யாரையுமே கூட அதைச் செய்ய இந்தியா விடாது,’ என்ற விதமாக நடேசனிடம் வழுதி அப்போது கூறியிருந்தார்.

ரவி இந்த விடயத்தை வேறு விதமாகப் பார்த்து, அவ்வாறே தலைவரிடமும் கூறியிருந்தார்:‘உண்மையில் விடுதலைப் புலிகளைக் காப்பாற்ற யாருமே வரப்போவதில்லை. விடுதலைப் புலிகளைக் காக்க வேண்டிய தேவையும் எவருக்கும் இப்போது இல்லை.

உண்மையில் – இவ்வாறாக, காப்பாற்ற வருகிறோம் எனப் போர் நடக்கும் போதே தொலைபேசியல் சொல்வதெல்லாம், அந்த உரையாடல்களின் ஊடாக விடுதலைப் புலிகளின் மனநிலையையும், அவர்களது தாங்குசக்தியையும் அளவிட்டு, அதற்கு ஏற்ற விதமாகப் போரை முனைப்புப் படுத்துவதற்குத் தான்,’ என்ற விதமாகவே ரவி தலைவரிடம் அப்போது கூறியிருந்தார்.

ஆனாலும், ரவியினதும், வழுதியினதும் கருத்துக்களை உதாசீனம் செய்துவிட்டு, அமெரிக்கா மற்றும் இந்தியாவுடன் தொடர்ந்தும் தொடர்பில் இருந்தனர் விடுதலைப் புலிகள்.

அது மட்டும் அல்லாமல் – போரின் கடைசி நேரத்தில், அழிவின் விளிம்பில் இருந்த போது, அவல விரக்தியில், உதவி கோரி எவர் எவரையோ எல்லாம் தொடர்புகொள்ள ஆரம்பித்துவிட்டது விடுதலைப் புலிகளின் தலைமை.

அந்தப் பட்டியல் – இராஜதந்திரிகள், உலக புலனாய்வு நிறுவனங்கள், அனைத்தலக ஊடகவியலாளர்கள்,அடுத்ததாக ஆட்சிக்கு வரும் என அப்போது “நம்பப்பட்ட” அ. தி. மு. க-வின் சசிகலாவின் கணவர்  நடராஜன், அதன் பாராளுமன்ற குழுத் தலைவர் மைத்திரேயன்,தி. மு. க. வின் கனிமொழி, திரு. சந்திரநேரு மற்றும் திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகிய தமிழ் தேசிய கூட்டமைப்பினர் என நீண்டு, கடைசியாக, பசில் இராஜபக்ச வரை சென்றது.

2009 மே மாதம் அளவில், முடிவு தெளிவாகத் தெரிய ஆரம்பித்த போது – திரு. சந்திரநெரு, திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்த விடுதலைப் புலிகளின் தலைமை, தமது சரணடைவு தொடர்பில் பசில் இராஜபக்சவுடன் பேசுமாறும் கேட்டுக்கொண்டனர்.பசில் இராஜபக்சவுடன் அது பற்றிய பேச்சுக்களும் நடத்தப்பட்டன.

அந்த வகையிலேயே – வேறு தரப்பு ஒன்றின் ஊடாகத் தனக்குக் கிடைத்த திரு. ஜேம்ஸ் கிளாட் அவர்களின் தொடர்பை வழுதியிடம் கொடுத்து, அவருடனும் பேசும்படி திரு. நடேசன் அவர்களே வழுதியிடம் கேட்டிருந்தார்.

ஆனால், திரு. நடேசன் அவ்வாறு கேட்டக்கொண்ட போதும், திரு. ஜேம்ஸ் கிளாட்டுடன் வழுதி அந்த நேரத்தில் பேசவோ, அல்லது எந்தவித தொடர்புகளையும் ஏற்படுத்தவே இல்லை என்பதே எம்மிடம் உள்ள தகவல்.அது மட்டும் அல்லாமல் – “ஒபாமா அரசாங்கத்தில் இப்போது ஜேம்ஸ் கிளாட் இல்லை. அதனால் அவருடன் பேசுவதால் எந்தப் பயனும் கிடைக்காது.” என்ற தகவலையே வழுதி அப்போது திரு. நடேசனிடம் தெரிவித்திருந்தார்.

அதன் பின்னர் – திரு. நடேசன் மற்றும் திரு. புலித்தேவன் ஆகியோர் ஜேம்ஸ் கிளாட்டுடன் தாமே நேரடியாகத் தொலைபேசி ஊடகப் பேசினர். ஆனால், ‘தன்னால் இப்போது எதுவும் செய்ய முடியாது என்றும்; சிறிலங்கா விவகாரத்தில் முடிவு எடுக்கும் சகல அதிகாரங்களும் திரு. றொபேட் பிளேக் அவர்களிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது’ என்றும் ஜேம்ஸ் கிளாட் அப்போதே திரு. நடேசனிடம் நேரடியாகத் தெரிவித்துவிட்டார்.

இது இவ்வாறு இருக்க – கடைசிப் போர்க் காலத்தில், தலைமையின் வழிநடத்தல் தொடர்பில் இயக்கத்திற்குள் எழுந்த சலசலப்புக்களை அடக்குவதற்காக, போராளிகளுக்கும், தளபதிகளுக்கும், பொறுப்பாளர்களுக்கும், “கல்விமான்கள்” சிலருக்கும், “அமெரிக்க படை இறங்கும்” என்றவிதமான கற்பனைக் கதை தலைமையால் அப்போது சொல்லப்பட்டது.இந்த விடயத்தில் – போராளிகளும், தளபதிகளும், “கல்விமான்க”ளும் அதனை நம்ப வேண்டும் என்பதற்காக, அவர்களுக்கு நன்கு தெரிந்த வழுதியின் பெயரை இந்தக் கதையோடு சேர்த்து, தலைமை அப்போது சொல்லியிருந்தது.

கடைசியாக, மே மாதம் 16 ஆம் திகதி அளவில் – தாம் முல்லைத்தீவில் தரையிறங்குவதற்கான அனுசரணையை இந்தியாவிடம் கேட்ட போது, ‘நாம் விரும்பிய விதமாகவே போர் நடந்துகொண்டிருக்கின்றது; நாம் அதைப் பார்த்துக்கொள்கிறோம்; நீங்கள் விலகி இருங்கள்’ என்று தம்மிடம் இந்தியாவால் சொல்லப்பட்டதாக அமெரிக்கத் தரப்பால் திரு. உருத்திரகுமாரனிடமும் திரு. பத்மநாதனிடமும் சொல்லப்பட்டது.

அமெரிக்காவுடன் மட்டும் அல்லாது, திரு. பத்மநாதன் அவர்கள் வேறும் பல வெளிநாடுகளுடனும் அந்த நேரத்தில் தொடர்பில் இருந்து, போரை நிறுத்தி, விடுதலைப் புலிகளையும் மக்களையும் காப்பாற்றுவதற்கு முயற்சிகளைச் செய்தார். திரு. பத்மநாதனுடன் சேர்ந்து இந்த முயற்சியல் ஈடுபட்ட பலரது விபரங்களும், அவை தொடர்பான ஆதார ஆவணங்களும் மறு ஆய்விடம் உள்ளன.

முள்ளிவாய்க்காலுக்கு வெளியிலேயே இருந்த Tamilnet ஆசிரியர்கள் இருவருமே, புலிகளின் அழிவுக்கான காரணத்தை முள்ளிவாய்க்காலிலேயே தேடி, அந்த அழிவுக்கான காரணத்தைப் புலிகளைத் தவிர்த்துவிட்டு வேறு ஆட்கள் மீது போடப் பார்க்கின்றார்கள்.

இதன் மூலம், புலிகளின் அழிவு என்பது முள்ளிவாய்க்காலுக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி விட்டது என்பதை மறைத்துவிடப் பார்க்கின்றார்கள்.

இந்த இடத்தில் – வழுதியோ, அல்லது ரவியோ, அல்லது பத்மநாதனோ, அல்லது உருத்திரகுமாரனோ விடுதலைப் புலிகளின் தலைமையை நம்ப வைத்து ஏமாற்றினார்கள் என்ற ஆதாரமற்ற கதைக்கு மேலாகப் பார்க்கப்பட வேண்டிய விடயம் என்னவெனில், அழிவின் விளிம்பில் தாம் நின்ற போது, அந்த அழிவிலிருந்து தம்மைக் காப்பாற்றுவதற்காக, அமெரிக்கர், இந்தியர் என தமது வரலாற்று எதிரிகளையே நம்பும் அளவுக்கு விடுதலைப் புலிகளின் தலைமை போயிருந்தது என்பதாகும்.

http://maruaaivu.wordpress.com/2011/03/24/tamilnet-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D-180-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E2%80%93-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81/