05172022செ
Last updateபு, 02 மார் 2022 7pm

எதைச் செய்யவேண்டுமோ அதை மறுப்பது தான், தேசத்தின் அரசியல்

சமகால அரசியல் தளத்தில் என்ன செய்யவேண்டும் என்பது, சமூக அக்கறையுள்ள அனைவரின் முன்பும் தெளிவானது. மக்களின் சொந்த செயலுக்குரிய அரசியலை உயர்த்துவதும், அதையொட்டிய செயற்பாடுகளை பாதுகாப்பதும் தான், எம்முன்னுள்ள உடனடி அரசியல் பணி. இதை மறுத்து ஒரு காலில் புலியையும், மறு காலில் புலியெதிர்ப்பையும் மாட்டிக்கொண்டு, லாவணி அரசியல் செய்கின்றது தேசம்.

 அதற்கு ஏற்ப எமக்கு மனநோய்ப் பட்டம் கட்டி, தமது தொலைபேசி எண்ணும் தந்து தமது அரசியலை செய்ய எம்மை அழைக்கின்றது.

 

இந்தப் போக்கிரி அரசியலுக்கு மாறாக, நாம் ஒவ்வொருவரும் சமகாலப் போக்கின் மீது சில முடிவுகளை எடுத்தேயாக வேண்டும்.

 

1. பேரினவாதத்தையும், இதைச் சார்ந்து இயங்கும் இந்தியாவையும் ஆதரித்து நிற்பதா? அல்லது எதிர்த்து நிற்பதா? என்ற முடிவை நாம் எடுத்தேயாக வேண்டும். இதனுடன் சேர்ந்து இயங்கும் அனைத்து தமிழ் கூலிக் குழுக்களையும் இனம் காணவேண்டும். இந்தக் குழுக்களை எதிர்த்து செயல்படாத, ஒரு அரசியல் முறிவை இவர்களுடன் கொண்டிராத அனைத்து செயல்பாடுகளையும், தெளிவாக இனம் காண வேண்டும். இப்படி அனைத்து வெள்ளைவேட்டிப் பொறுக்கிகளையும், போலிகளையும் இனம் கண்டேயாக வேண்டும். புலியெதிர்ப்பின் பின், முற்போக்கு வேஷம் கட்டிச் சலசலக்கும் இந்த தவளைகளை இனம் கண்டேயாக வேண்டும்.

 

2. புலித் தேசியத்தை ஆதரிக்க முடியுமா? இல்லையா என்பதையும், தமிழ் தேசியத்தை உயர்த்துவதா இல்லையா என்பதையும் தீர்மானித்தேயாகவேண்டும்.

 

3. மக்களைச் சார்ந்து நிற்பதா? அல்லது மக்கள் விரோதிகளுடன் சேர்ந்து நிற்பதா என்பதை ஒவ்வொருவரும் தீர்மானித்தேயாக வேண்டும்.

 

கிட்லரின் பிரச்சார மந்திரி கோயபல்ஸ் பாணியில், இதை மனநோய் என்பார்கள். இதை தனிநபர் தாக்குதல் என்பார்கள். ஆனால் அரசியல் என்பது தெளிவான நிலையைக் கோருகின்றது. தேசம் இதில் மிதந்தபடி, மக்கள் நலன் கருத்துகளை வெட்டியெறிய விரும்புகின்றது. இதையே அவர்கள் கூறுகின்றனர். 'ஒரு குறிப்பிட்ட அரசியல் குழுவினதோ அல்லது ஒரு குறிப்பிட்ட அரசியல் தத்துவத்தினையோ தாங்கிச் செல்லும் சஞ்சிகையோ அல்ல" என்கின்றனர். இதுவே இதன் மொத்த வேஷம். தத்துவங்கள் வர்க்க சார்பு கொண்டவை. தமிழ் அரசியல் குழுக்கள் பக்காக் கிரிமினல்கள். எல்லா கிரிமினல்களுடன், இதன் தத்துவங்களுடன் எதற்காக தேசம் உறவு கொண்டு, அதில் தன்னை ஒட்டுகின்றது. இந்த கிரிமினல்கள் பற்றி முடிவெடுக்காமல், அவர்களை எதிர்த்து போராடாமல், மக்களுக்கு ஏதாவது யாரும் சொல்ல முடியுமா? வழிகாட்டத் தான் முடியுமா? இதை செய்யும் எம்மிடம், இந்த கிரிமினல் நடத்தைகளுக்கு ஆதாரம் கேட்பது என்பது, அவர்களைப் பாதுகாக்கும் கிரிமினல் தனம் தான்.

 

இப்படி தேசம் ஆசிரியர் எல்லா பிற்போக்கு முற்போக்கு எங்கும், முகம் காட்டுகின்ற அரசியல் வித்தை காட்ட முனைகின்றார். மனிதத்தை பாதுகாப்பதும், மனித துயரத்தை இல்லாது ஒழிப்பது என்பதும், இந்த வித்தைகாட்டல் மூலம் செய்ய முடியாது.

 

சமூகங்கள் வர்க்க ரீதியாக பிளவுபட்டு, சமூக முரண்பாடுகளால் சிதிலமாக்கப்பட்டுள்ளது. இதற்குள் தமது நிலையை தெளிவுபடுத்தி அதற்குள் இயங்க மறுக்கின்ற ஓட்டுண்ணி அரசியல், அரசியல் பிழைப்புத்தனத்தைக் கொண்டது. மக்களுக்கு இதனால் எதுவும் கிடைக்கப் போவதில்லை.

 

தமது இந்த புல்லுருவித்தனத்தை நியாப்படுத்த 'மேலும் பல்வேறுபட்ட கருத்தியல் முரண்பாடுகளைக் கொண்டவர்களும் மக்கள் நலன் சார்ந்த விடயங்களை பரந்துபட்ட மக்களுக்கு எடுத்துச் செல்வதற்கான பொது ஊடகமாக தேசம் - தேசம்நெற் அமைந்து உள்ளது." என்கின்றனர். முரண்பட்டகருத்துக்களின் கலவையான மக்கள் நலன் கொண்ட அந்த கருத்தியல் என்ன? அந்த அரசியல் கோட்பாடு தான் என்ன? இதை தேசம், தனது வரையறையாக எங்கே வைத்துள்ளது. மக்கள் நலன் என்று எதை நீங்கள் கருதுகின்றீர்கள். 'ஒரு குறிப்பிட்ட அரசியல் குழுவினதோ அல்லது ஒரு குறிப்பிட்ட அரசியல் தத்துவத்தினை தாங்கிச் செல்லும் சஞ்சிகையோ அல்ல" என்கின்றீர்கள். எப்படி இதற்கு மக்கள் நலன் வரும். அந்தக் கிரிமினல் குழுக்கள், அதன் தத்துவங்கள், அதற்கு பின்னால் சலசலக்கும் வெள்ளைவேட்டி தெருப் பொறுக்கிகள், இதில் முரண்பட்ட வர்க்க அரசியல் தத்துவங்கள், இதைக்கொண்டு எதைத்தான் படைக்க முடியும்.

 

புலியும் தான், மக்கள் நலன் என்று கூறுகின்றது. புலியெதிர்ப்பு அரசியலும் தான் அதைக் கூறுகின்றது. இந்திய இலங்கை அரசும் தான் கூறுகின்றது. இந்திய இலங்கை அரசுகளின் கீழ் இயங்கும் கூலிக் குழுக்களும் தான், மக்கள் நலன் என்று கூறுகின்றது. இதில் இருந்து எந்த வகையில், உங்கள் மக்கள் நலன் வேறுபடுகின்றது? எந்த வகையில், இந்த மக்கள் நலன் என்ற பெயரில் முகமூடி கொண்டவர்களின் மக்கள் விரோதத்தை எதிர்க்கின்றீர்கள். மக்கள் என்றால் யார்? எந்த வர்க்கம்? எந்த ஒடுக்கப்பட்ட மக்கள்? ஒடுக்குபவன் யார்?

 

மூடிமறைக்கப்பட்ட சந்தர்ப்பவாதம் இது. இதை அம்பலப்படுத்தும் எம்மையும், நீங்கள் தப்பிப் பிழைக்க எமது எழுத்தையும் கிண்டலடிக்கலாம். அது நீங்கள் செய்து கொண்டிருக்கின்ற அந்த அரசியலுக்கு அவசியம். இதனால் தான் நீங்கள் 'பிரான்ஸ் நாட்டின் தலைநகரில் உள்ள ஒரு வீட்டில் இருந்து இன்ரநெற்றில் வர்க்கப் போராட்டமா நடத்துகிறார்?" என்கின்றீர்கள். அத்துடன் 'பிரான்ஸ் நாட்டில் முதலாளித்துவ ஜனநாயகத்தின் சகல பாதுகாப்புகளையும் அனுபவித்துக் கொண்டு இரயாகரன் சொல்வது வேடிக்கையாக உள்ளது" என்ற கூறுகின்றீர்கள். நல்லது, இதை நாம் செய்யக் கூடாது என்ற உங்கள் ஆவல் புரிகின்றது. இதையே புலி மற்றும் புலி எதிர்ப்பு கும்பலும் சொல்லுகின்றது? இந்த விடையம் எமக்கு புரிய மாட்டேன் என்கின்றது.

 

புலிகள் மண்ணில் வந்து போராடச் சொல்லி இங்கு உள்ளவன் சொல்லுகின்றான். நீங்களும் இங்கிருந்தபடி, இதை கோருவது சொல்வது ஏன்? எல்லாம் ஒரே அரசியல் வேடிக்கை தான். இவை போட்டுத் தள்ளும் அதே அரசியல். எமது எழுத்தை நிறுத்து என்ற வக்கிரம் தான், இவை. பல விதமாக, பல முகத்துடன், இது அரங்குக்கு வருகின்றது. எல்லாம் ஒரே குரல் தான்.

 

எம்மைப் பொறுத்தவரையில் தனித்து தனியாக நின்றாலும் சரி, பலரை நாம் அணுக முடிந்தாலும் சரி, எது மக்களுக்கு அவசியமோ, எது நடைமுறையில் சாத்தியமோ, அதை செவ்வனே செய்ய முனைகின்றோம். இதை விட்டுவிட்டு மக்களுக்கு எதிரான அரசியலை அறிமுகப்படுத்தி, அந்த மக்களை கொச்சைப்படுத்தும் உங்களைப் போல், நாம் துரோக அரசியல் செய்யமுடியாது.

 

பி.இரயாகரன்
21.01.2008


பி.இரயாகரன் - சமர்