இலங்கையின் தொடரும் இனரீதியான தேர்தல் முடிவுகள்

அரசும், கட்சிகளும் இனரீதியாக மக்களை பிரித்துவைத்துக் கொண்டு, நடத்தும் இனரீதியான அரசியல்தான் இலங்கையில் ஜனநாயகமாகின்றது. இனரீதியாக மக்களின் வாக்களிப்பு, இதை எதிர்மறையில் தீர்க்கக் கோருகின்றது. இலங்கையில் உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகள் கூறும் செய்திகள் என்ன?

1. இலங்கையில் இனரீதியான பிளவுகளும், முரண்பாடுகளும் நான்கு முனையில் காணப்படுகின்றது.

2. அனைத்து மக்களையும் பிரநிதித்துவப்படுத்தும் எந்தக் கட்சியும் இலங்கையில் கிடையாது. அதாவது இனவாதம் கடந்த எந்தக் கட்சியும், இலங்கையில் கிடையாது. மக்கள் சமூக பொருளாதார நலனை முன்னிறுத்திய எந்த கட்சிகளும் இலங்கையில் இல்லை என்பதே இதன் அர்த்தமாகும்.

 

 

3. தேர்தல் மூலமான ஜனநாயகம் என்பது, ஆளும் கட்சி தன்னைத்தான் வெல்லவைக்கும் வண்ணம் அதிகாரம், வன்முறை, பணத்தை அடிப்படையாக கொண்டதுதான் என்பதை இந்த தேர்தல் மறுபடியும் நிறுவியுள்ளது.

4. சிறுபான்மைப் பிரதேசத்தில் ஆளும் கட்சிக்கு கிடைத்த வாக்குகள் தான், அது தன்னைத்தான் வெல்ல வைக்கும் ஜனநாயகத்தின் உண்மை முகத்தினை இலங்கை தளுவிய முழுமையில் எடுத்துக் காட்டுகின்றது.

இப்படி இலங்கை அரசு இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு, சிங்களவர், இலங்கைத் தமிழர், இந்தியத் தமிழர், முஸ்லீம் மக்கள் என்று, நான்கு இனரீதியான இனப்பிளவை தொடர்ந்து தக்கவைத்திருக்கின்றது. இந்த வகையில் தான், இதற்குள் தான் அரசியல் கட்சிகள் அனைத்தும் இயங்குகின்றது. எந்தக் கட்சியும் இதற்கு வெளியில், இனம் கடந்து தன்னை ஒரு தேசியக் கட்சியாக முன்னிறுத்த முடியவில்லை. அதாவது இனரீதியான பிளவை முன்வைத்துத்தான், கட்சிகளின் கொள்கைகளும் கோட்பாடுகளும் இருப்பதை எடுத்துக் காட்டுகின்றது.

சிறுபான்மை இனக் கட்சிகள் கூட, மற்றயை சிறுபான்மை இன மக்களை பிரதிநித்துவப்படுத்தவில்லை. குறுகிய இனவாதம் தான், இவர்களின் அரசியல் அடிப்படை. இப்படி அரசும், கட்சிகளும் இலங்கையில் இனப்பிளவை தீர்க்கும் எந்த வேலைத்திட்டத்தையும் கொண்டு செயற்படவில்லை.

இனரீதியான மக்களின் வாக்களிப்பு சொல்லும் செய்தி, இந்த முரண்பாட்டை அரசியல் ரீதியாக தீர்க்கும்படிதான். இதைத்தான் மக்கள் விரும்புகின்றனர். அரசும், இலங்கையில் உள்ள கட்சிகளும் இதற்கு எதிர்மறையில்தான் அரசியல் நடத்துகின்றனர்.

மறுபக்கத்தில் ஓடுக்கப்பட்ட மக்களை கீழிருந்து ஒன்றிணைக்கும், எந்த அரசியல் வேலைத்திட்டத்தையும் கொண்ட புட்சிகரகட்சிகள் எதுவும் இன்றுவரை இலங்கையில் உருவாகவில்லை.

இது நாட்டை இனமுரண்பாட்டின் மூலம் மக்களை பிரித்து ஆளவும், சுரண்டவும், சமூக முரண்பாடுகளை கொண்ட பிளவுபட்ட சமூகத்தை தொடர்ந்து தக்கவைக்கின்றது.

இதை முறியடிக்க இன்று இலங்கையின் தேவைப்படுவது ஒடுக்கப்பட்ட மக்களின் ஐக்கியம். இதை முன்னெடுக்கும் கட்சியின் தேவையை இனம் கண்டு உருவாக்குவது தான், இன்று இலங்கையின் பிரதான மைய அரசியல் குறிக்கோளாக இருக்கவேண்டும். இதுதான் இன்று எம்முன்னுள்ள அரசியல் கடமையாகும்.

 

பி.இரயாகரன்

19.03.2011