இயற்கையின் சீற்றமும், செயற்கையில் மூலதனம் உருவாக்கும் பாரிய அழிவுகளும்

யப்பான் நிலநடுக்கமும், அதைத் தொடர்ந்து வந்த சுனாமியும், இறுதியில் அணுவுலையில் வெடிப்புகளும் ஏற்படுத்தியுள்ள விளைவுகளுக்கும் மொத்தமாக இயற்கை மீது யாரும் குற்றஞ்சாட்டி விட முடியாது. அந்த உரிமை உனக்குக் கிடையாது. ஏனென்றால் நீ இயற்கையுடன் இ;ணங்கி, அதன் போக்கில் வாழ மறுப்பவன். செயற்கை அழிவுகள், இயற்கை அழிவை மீஞ்சியது. இயற்கை இயற்கையாகத்தான் இயங்குகின்றது. இதற்கு இணங்கி அதன் போக்கில்தான் மனிதன் வாழ முடியும். இதை மறுத்துத்தான், உன் உணர்வை ஆட்டிப்படைக்கும் மூலதனம் இயங்குகின்றது. இதற்கு ஏற்பவே மனிதர்கள் உருவாக்கப்படுகின்றனர். இயற்கையின் போக்கை மீறிய இயற்கை அழிப்பை, மனிதன் இயற்கை மேல் செய்கின்றான். ஒவ்வொரு இயற்கை அழிவிலும், மனிதன் ஒரு சமூக உயிரி என்ற அடிப்படையை, மூலதனம் மறுத்துத்தான் மனிதர்களின் வாழ்வை நரகமாக்குகின்றனர்.

அறிவு, விஞ்ஞானம் தொழில் நுட்பம் சார்ந்த இயற்கை மீதான எந்த மனிதமுயற்சியிலும் அதன் பின்விளைவை அல்லது அதன் இயல்பில் இருந்து அதைக் கட்டுப்படுத்த முடியாத பயன்பாடு என்பது, மூலதனத்தின் இலாப வெறிதான். இது அறிவல்ல, நாசகார அழிவுசார் அறிவு. மனிதனின் வாழ்வை இலகுபடுத்துகின்ற இயற்கை மீதான எந்த அறிவும், இயற்கைக்கு உட்பட்டதாக கட்டுப்பட்டதாக இருக்கவேண்டும்;. மனிதனின் வாழ்வை நாசமாக்காத, அவன் வாழ்வை மேம்படுத்தும் வண்ணமாக இருக்கவேண்டும். இல்லாதவரை அவை மூலதனத்தின் இலாப வெறிக்கு உட்பட்ட, மனிதகுலத்துக்கு எதிரான ஒன்றாகவே இருக்கின்றது.

யப்பானிய அணுவுலை வெடிப்பையும் இதன் கதிர்வீச்சையும் கட்டுப்படுத்த முடியாத அறிவும், தொழில்நுட்பமும் ஒரு அறிவா!? அது மனிதகுலத்துக்கும், இயற்கையில் சார்ந்து வாழும் உயிர்களுக்கும், இயற்கைக்கும் எதிராகவே உள்ளது. உண்மையில் அதன் விளைவை இயற்கையில் விடுவது என்பது பாரிய குற்றமாகும். ஆம் மூலதனத்தின் இலாபவெறியுடன், விளைவுகளை தெரிந்தே நடத்துகின்ற குற்றமாகும்.

இப்படி விஞ்ஞானமும், அறிவும் இயற்கை சார்ந்ததாக இல்லாதவரை, அவை மனித குலத்துக்கு எதிராகவே எப்போதும் பயணிக்கின்றது. இதில் இருந்து மக்கள் சுயாதீனமாக மீளுமாறு தான், மூலதனத்தின் கொள்கைகள் வழிநடத்துகின்றன. இப்படித்தான் இயற்கை அழிவை மேலும் மூலதனம் கோருகின்றது. மனிதன் ஒரு சமூக உயிரி என்பதை மறுக்கும் மூலதனம் தான், மக்கள் மீளவும் தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ள தடையாகவும் இருக்கின்றது. இயற்கை அழிவின் பின் கூட அந்த மக்களை தொடர்ந்து சுரண்டுவதைத்தான், மூலதனம் தொடர்ந்தும் செய்கின்றது. சுயாதீனத்தை இழந்த அந்த மக்களின் பரிதாப நிலையை தனதாக்கி, மேலும் அடாவடித்தனமாக சுரண்டுகின்றது. ஒவ்வொரு இயற்கை அழிவும், மூலதனத்தின் முன் மனிதனின் சுயாதீனத்தை அழித்துவிடுகின்றது. இதை மீட்டுக் கொடுப்பதல்ல, மூலதனத்தின் கொள்கை. இப்படி இயற்கை அழிவு மூலதனத்துக்கு பொன் முட்டைகளாகின்றது. மனிதன் மூலதனத்தின் இலாப வெறிக்கு ஏற்ற மந்தையாகி அடிமையாகின்றான். இப்படி இயற்கையை சுரண்டி மனிதனை சுரண்டும் பொருளாதாரம் தான், இயற்கை அழிவை செயற்கையில் வலுவுள்ளதாக்குகின்றது.

யப்பான் நிலநடுக்கமும் அதைத்தொடர்ந்து சுனாமி ஏற்படுத்திய அழிவும், அதன் மேல் அணுவுலை ஏற்படுத்தி வரும் அழிவும், மனிதகுலத்தின் மேலான இயற்கையின் சீற்றமல்ல. மாறாக இது மூலதனத்தின் கொட்டம் தான். மனிதகுலத்தை இது படுகுழியில் தள்ளுகின்றது. ஹெத்தியில் நடந்த நிலநடுக்கம் ஏற்படுத்திய இயற்கை அழிவு, அதைத் தொடர்ந்து அந்த மக்களுக்கு மீட்சியின்றிக் கிடைக்கும் தொடர் நரக வாழ்க்கை, மூலதனத்தின் வெறியுடன் கூடிய கொட்டமாகும்.

நாட்டையும், மக்களையும் கொள்ளை அடித்தவன், செல்வத்தை குவித்து வைத்துக் கொண்டு, மேலும் குவித்துக்கொண்டு இருப்பவன், எப்படித்தான் இயற்கையின் அழிவுக்கான மீட்சியை அனுமதிப்பான்? இயற்கையின் அழிவை சந்திக்கும் மக்களை, மறுபடியும் அழிக்கின்ற வேலையைத்தான் இந்த உலகை ஆளும் மூலதனச் சித்தாந்தம் செய்கின்றது. இயற்கை அழிப்பதை, செயற்கையிலும் தன் பங்கு செய்கின்றது. மனிதனின் சுயாதீனத்தை மட்டுமல்ல, இயற்கையின் போக்கையும் கூட அது அழிக்கின்றது. இதுதான் உலகை வழிநடத்தும் உலகளாவிய கொள்கையும் கோட்பாடுகளுமாகும்.

இலங்கையில் யுத்தம், சுனாமி அதைத் தொடர்ந்து வெள்ளம் ஏற்படுத்திய பாரிய அழிவு, அதைச் சந்தித்த மக்களுக்கு எந்த நிவாரணமும் கிடையாது. கிடைக்கின்ற சோற்றுப் பருக்கைளை தட்டிப்பறித்து தின்கின்ற கும்பல்கள் தான் நாட்டை ஆளுகின்றது. இப்படி அழிவுகளைச் சந்தித்த மக்கள் எப்படி பிச்சையெடுத்தும், தங்கள் மானத்தை இழந்து எப்படி வாழ்கின்றனர் என்பதையும், ஆளும் கூட்டம் எப்படி அதை வழிகாட்டுகின்றனர் என்பதையும் மூடி மறைக்க, அனைத்தையும் இரும்புக்கரம் கொண்டு அடக்குகின்றனர். இப்படி இயற்கை அழிவைத் தொடர்ந்து ஏற்படும் செயற்கை அழிவோ படுபயங்கரமானது. இது இலங்கை முதல் யப்பான் வரை, ஒரே பாதையில் தான் பயணிக்கின்றது.

யப்பானின் நில அதிர்வும், சுனாமியும் ஏற்படுத்திய அழிவை மிஞ்கியது, அணுவுலை ஏற்படுத்தியுள்ள அழிவு. அணு மின் பயன்பாடும், அணு ஆயுதமும் ஏற்படுத்தும் விளைவுகள் என்ன என்பதை, யப்பானின் அணுவுலை வெடிப்பு மிகத் தெளிவாக பறைசாற்றியுள்ளது.

சக்தியின் பயன்பாடு என்பது இயற்கையை அனுசரிக்காத வரை, மனிதகுலத்துக்கு எதிராகத்தான் பயணிக்கின்றது. மூலதனத்தின் குவிப்பை மையமாக கொண்ட சக்திப்பயன்பாடு என்ற கொள்கை தான், அணுவுலையாக தீர்வு காண்கின்றது. இதன் விளைவை இயற்கையில் விடுவது என்பது தான், இந்த உலகின் அறிவுசார் மூலதனக் கொள்கையாகி விடுகின்றது.

வரைமுறையற்ற நுகர்வு தான், நுகர முடியாத மக்கள் கூட்டத்தை உருவாக்கின்றது. வரைமுறையற்ற நுகர்வு, தான் அல்லாத மக்களை மேலும் மேலும் அதிகமாக சுரண்டுவதைக் கோருகின்றது. இப்படித்தான் சக்தியின் பயன்படும். மின்சாரம் முதற்கொண்டு மின்சாரம் கொண்டு பயன்படுத்தும் பொருட்கள் வரை, ஓடும் வாகனம் முதல் அனைத்தையும் நுகரும் உயர் மனப்பாங்கு வரை, உருவாக்கியதுதான் இந்த அணுவுலைகள்.

ஒரு ஆடம்பரமான நுகர்வுக்குரிய உலகில், இயற்கை சார்ந்த எந்த சமூக உயிரியல் அறமும் கிடையாது. மனிதம் சார்ந்த, சமூக உணர்வு கிடையாது. ஆக இயற்கையின் அழிவில், இருந்து மனிதனை மீட்பதற்கு பதில், புதைகுழிகளைத்தான் மூலதனம் இயற்கையின் மேல் வெட்டுகின்றது. மனிதனின் குறுகிய அற்பமான தனிமனித உணர்வுகளைத் தூண்டி, அதற்குள் மனிதனை புதைக்கின்றது மூலதனம்;.

அணுவுலை வெடிப்பு இன்றைய உலகில் சக்திப் (மின்சாரம், பெற்றோல்…) பயன்பாடு சரியாகத்தான் மனிதனால் பயன்படுத்தப்படுகின்றதா என்ற கேள்வியை எழுப்புகின்றது. இயற்கையை அனுசரிக்காத, அதை சரியாகப் பயன்படுத்தத் தெரியாத மூலதனக் கொள்கை இயற்கையை அழித்து கொள்ளையடிக்க மட்டும் தான் வழிகாட்டுகின்றது. இயற்கையை பாதுகாத்து மனிதனை வாழவைக்கவல்ல. இதைத்தான் இன்று யப்பானின் தொடர் நிகழ்வுகள், மறுபடியும் மனித அறிவை மட்டுமல்ல உலகளாவிய மூலதனத்தின் கொள்கைகளையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. நீ இயற்கையை சார்ந்த, சமூக உயிரியாக மனிதனாக வாழப் போகின்றாயா இல்லையா என்பதைதான் உன் முகத்தில் அறைந்து கேட்டுள்ளது.

பி.இரயாகரன்

18.03.2011